அவள் பௌர்ணமி 11
அவள் பௌர்ணமி 11
அவள் பௌர்ணமி 11
நடு இரவை தாண்டி படப்பிடிப்பு முடிய, அனைவரும் விடியற்காலையில் அந்த மாளிகைக்கு திரும்பி இருந்தனர். வந்த வேகத்திலேயே அனைவருக்கும் படுத்து உறங்கினால் போதுமென்ற நிலை.
“உங்களை ரொமேன்ஸ் ஸீன்ஸ்ல மட்டும் அடிச்சுக்கவே முடியாது மித்ரா மேம், எப்படி இப்படி எல்லாம், சும்மா பாத்துட்டு இருந்த எனக்கே வெட்க வெட்கமா வந்துடுச்சு” ஒற்றை கையால் பாதி முகத்தை மூடிக்கொண்டு உடல் சிலிர்க்க பாலி சிலாகிக்க, சோர்வோடு திரும்பிய மித்ராவதி அவளை ஆயாசமாக பார்த்தார்.
“காலையில எங்களை எல்லாம் குழப்பி பதற வச்சுட்டு, இப்ப மட்டும்” என்று பற்களை நறநறத்தவர், “இப்ப செம்ம டயர்ட்ல இருக்கேன். ரெஸ்ட் எடுத்துட்டு வந்து உன்ன பார்த்துக்கிறேன்” என்று எச்சரித்து விட்டு நகர, பாலி அசடு வழிய, அமிர்தி அறைக்குள் நழுவி வந்து விட்டாள். அதற்குள் அமிர்தி ஆழ்ந்த தூக்கத்திற்கு போயிருந்தாள். காலையில் இருந்து இடைவிடாத ஷூட்டிங், அடுத்தடுத்த காட்சிகள், டேக்குகள் என்று இன்று நொந்து போயிருந்தாள் அவள்.
பாலி அவளை ஆதுரமாக பார்த்துவிட்டு, தன் துப்பட்டாவை எடுத்து அவளின் கையை ஒரு முனையிலும் தன் கையை மறு முனையிலும் இறுக்க கட்டி விட்டு, “இந்த கட்டை மீறி இன்னைக்கு நைட் நீயும் தொலைய மாட்ட, நானும் தொலைய மாட்டேன் அமுமா” என்று தன்னையும் தைரியப்படுத்திக் கொண்டவள் படுத்ததும் உறங்கிப் போனாள்.
அந்த அதிகாலை வேளையில் அவரவர் களைப்பில் அப்படியே உறங்கி போயிருந்தனர்.
அடித்து போட்டது போன்ற உடல் களைப்பில் ஆழ்நிலை உறக்கத்தில் இருந்த மித்ராவதி சட்டென விழிப்பு வர எழுந்து அமர்ந்தார்.
அவர் படுத்திருந்த அறை முழுவதும் இருண்டு கிடக்க, “விக்கி விக்கி விக்கீ” விக்னேஷை உதவிக்கு அழைத்தும் எந்த பதிலும் வரவில்லை.
தன் ஒற்றை விளிப்புக்கு பறந்தோடி வருபவன் இப்போது வாராமல் போகவே, தான் தங்கி இருந்த அறையில் இருந்து தட்டுத்தடுமாறி வெளியே வந்தார்.
இரவின் அந்தகாரம் அந்த மாளிகையில் சூழ்ந்திருக்க, எங்கோ ஓரிடத்தில் வழிந்த சிறு விளக்கின் மெல்லிய ஒளி மிக மங்கலாக கசிந்து கொண்டிருந்தது.
‘என்ன அதுக்குள்ள இருட்டிடுச்சா? இப்ப தான ஷூட்டிங் முடிச்சிட்டு எல்லாரும் வந்து படுத்தோம். ஏன் நாள்பூரா என்னை யாரும் எழுப்பி விடல?’ அவருள் கேள்வி எழ, அந்த நிசப்த இரவில் திடீரென பெண்ணின் அலறல் குரல் மிக கனமாக கேட்டது. இவர் வெலவெலத்து நின்றார்.
உயிரை உலுக்கும் அந்த அலறல் குரல் விடாமல் கேட்டுக் கொண்டிருக்க, மித்ரவதியின் கை, கால்களோடு உடலும் உதற கதிகலங்கி நின்றிருந்தார்.
‘இந்த அலறல் சத்தம்? அச்சோ யாருக்கு என்னாச்சு? காலையிலயே இங்கியிருந்து கிளம்பி இருக்கனும், ஓய்வெடுத்துட்டு போலாம்னு தாமதிச்சது தப்பா போச்சே’ அவரின் மனமும் பிசைய கலக்கம் கொண்டார்.
அதேநேரம் அந்த மாளிகையின் ஒவ்வொரு இடத்திலும் மின் விளக்குகள் ஒளிரலாயின. அந்தந்த இடத்தில் இருந்தும் அறைகளில் இருந்தும் சிலர் இவரை போலவே பதறி எழுந்து வெளியே வந்திருந்தனர்.
அவர்களை பார்த்து மித்ரவதிக்கு குழப்பமே மிஞ்சியது. அங்கிருந்த யாருமே படக்குழுவை சேர்ந்தவர்கள் அல்ல. யாரிவர்கள்? இங்கே எப்படி வந்தார்கள்? அவரின் நொடி நேர யோசனை அடுத்த நொடி தகர்ந்தது. இந்த மாளிகையின் கருப்பு வெள்ளை குடும்ப புகைப்படத்தில் இவர் பார்த்திருந்த, சந்திரகாந்தின் உண்மையான அம்மா, அக்கா, அவரின் கணவர் பைரவநாத் உட்பட அங்கே நிஜமாக உலவிக் கொண்டிருந்தனர்.
மித்ராவதியின் நெஞ்சங்கூடு வெறுமையானதை பொன்ற உணர்வு. ஏதோ மாயைக்குள் தான் சிக்கியிருப்பது அவருக்கு புரிந்தது. எத்தனையோ வருடங்கள் முன்பு இறந்தவர்கள் எல்லாம் இப்போது அவர் கண்முன்னால் நிஜமாய் தெரிந்தனர்!
நழுவும் மன தைரியத்தை இழுத்து பிடித்து, சுற்றும் முற்றும் பார்வையை செலுத்தினார். அங்கே ஜன்னல் வழியே முழு பௌர்ணமி நிலவு சிவப்பு பந்தாக காய்ந்து கொண்டிருந்தது!
முதலில் ஓங்கி ஒலித்த அலறல் குரல் இப்போது தேய்ந்து ஒலித்தது! ஆனாலும் அந்த பெண்ணின் குலைநடுங்க வைக்கும் ஓலம் கேட்டுக் கொண்டே தான் இருக்கிறது!
அங்கிருந்தவர்கள் எல்லாம் அலறல் கேட்ட திசை நோக்கி ஓட, மித்ராவதியும் தன்னை திடப்படுத்திக் கொண்டு, அவர்கள் வழியே நடந்தார். அந்த இடத்தை பார்த்தவரின் கண்கள் தெறித்து விடுவன போலாகியது. அது… அதே இரும்பு கதவு அடைக்கப்பட்ட அறை!
இருளில் மூடி இருந்த அந்த கதவின் இடுக்குகளில் நெருப்பின் பேரொளி கசிவது நன்றாக தெரிந்தது. அங்கிருந்த ஆட்கள் அந்த கதவை இடித்து உடைத்து திறக்க, அங்கு முக்கால் சதவீதம் கருகிய நிலையில் எரியும் உடலில் உயிர் துடித்து கொண்டிருந்தாள் ஒரு சிறு பெண்.
“அய்யோ இது பௌர்ணமி…!” அங்கிருந்த யாரோ குரல் கொடுக்க, யாரோ தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். எரிந்து கரிக்கட்டையாகி கிடந்த அந்த உடல் தன் இறுதி மூச்சை போராடி நிறுத்தி கொண்டது.
எட்டவே நின்று அந்த கோரத்தை பார்த்திருந்த மித்ராவதியின் மனமும் கண்களும் கலங்க, கண்ணீர் அவரின் கன்னங்களில் வழிந்து மண்ணில் விழுந்து தெறித்தது.
அந்த சிறு பெண்ணின் கொடூர முடிவை கேள்விப்பட்டே உள்ளம் நொந்து இருந்தவர், அதை நேரில் கண்டு துடித்து துவண்டு போனார். ‘அய்யோ பௌர்ணமி…!’ அவரின் இளகிய மனம் அந்த பேதை பெண்ணிற்காக அரற்றியது.
“பௌர்ணமி… பௌர்ணமி நீ தானா? அய்யோ இப்படியா? என் கற்பனை கதையில கூட உன்ன கொல்ல எனக்கு மனசு வரலையே… நிஜத்தில நீ இப்படி” அவரும் ஒரு பெண்ணாய், ஒரு பெண்ணிற்கு தாயாய், கண்ணீர் திரள கலங்கி நின்றார்.
அங்கே, காட்சிகள் மாறின. அங்கிருந்த மனிதர்கள் எல்லாம் காணாமல் மறைந்து போயினர். அவரின் கண்ணீர் தேங்கி இருந்த கண்கள் தெறித்து விடுவன போல அதிர்ந்து விரிந்து நிமிர்ந்தன. அவர் பார்த்திருக்கும் போதே அந்த கருகிய உடல் மேலெழுந்து அவர்முன் நின்றது!
இந்த அமானுஷ்ய காட்சியில் அவரின் நெஞ்சம் கிடுகிடுக்க, உறைந்து நின்றார்.
“ஆ… ஆ… கா… கா…!” அடிக்குரலில் நெஞ்சை உலுக்கும் சத்தம் எழ, இவர் கதிகலங்கி போனார்.
அந்த உருவம் இவரிடம் ஏதோ சொல்ல முயன்றது. இவர் பயம் பாதி கலக்கம் மீதியுமாக நின்றிருந்தார்.
உச்சகட்ட பயத்தில் கத்த முயல, அவரின் தொண்டைக்குழி காய்ந்து போய் குரல் வர மறுத்தது. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க திணறி போனார்.
அந்த எரிந்த உடல் காற்றில் துகள் துகளாய் சிதைய, அதிலிருந்து கருப்பு சாம்பல் கீழே கொட்டியது. அந்த சாம்பலின் நடுவே மெல்ல எழுத்துக்கள் தெரியலாயின.
‘என்னை விடுதலை செய்!’ என்று.
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி இவருக்கு, “விடுதலையா? நான் என்ன செய்யனும்? எப்படி உன்ன விடுவிக்க? பௌர்ணமி… பௌர்ணமி!” அலறிக்கொண்டு வியர்த்து விறுவிறுத்து அவர் எழுந்து விட்டார்.
கண்விழித்து படுக்கையில் இருந்து எழுந்தமர்ந்த பின்னர் கூட, தான் கடந்து வந்த காட்சியில் அவரின் சுயநினைவு உறைந்து போயிருந்தது.
விக்னேஷ் அவரின் அலறல் கேட்டு கதவை திறந்து உள்ளே வந்தவன், அவரின் வெறித்த தோற்றம் கண்டு பதறி, “மேடம் என்னாச்சு? ஆர் யூ ஓகே மேடம்” என்று கேட்கவும், அவரின் பார்வை இயந்திரதனமாய் இவனிடம் திரும்பியது.
இவன் பின்னோடு வந்த பிரியாவும், அவரின் அதிர்ந்த கோலம் பார்த்து பதறி, “என்னாச்சு மேடம் உங்களுக்கு, எதையாவது பார்த்து பயந்திட்டிங்களா?” என்று அவரை பிடித்து உலுக்க, மித்ராவதி சுய உணர்வு வந்தது போல் மரமரத்து விழித்து பார்த்தார்.
விக்னேஷ் தண்ணீர் பாத்தலை எடுத்து கொடுக்க, பிரியா அவருக்கு தண்ணீரை புகட்டிட, கைகாட்டி தடுத்தவர், தானே தண்ணீரை வாங்கி பருகினார். இப்போது அவருக்கும் சற்று ஆசுவாமானது.
“உடம்புக்கு ஏதாவது பண்ணுதா மேடம்?” பிரியா அவரின் தளர்ந்த தோற்றம் கண்டு கேட்க,
“நத்திங் ப்ரியா, ஏதோ… ஏதோ கெட்ட கனவு அதான் கொஞ்சம் டென்ஷனாயிட்டேன்” மித்ராவதி திக்கலோடு சமாதானம் சொன்னார்.
“எவ்வளோ ஸ்ட்ராங் லேடி நீங்க, நீங்க போய் கனவுக்கெல்லாம் பயப்படலாமா?” பிரியா இயல்பாக கேட்க, அதை தவிர்த்தவர், “இப்ப டைம் என்னாச்சு?” என்று கேட்டார்.
“டென் ஓ கிளாக் மேம்” என்க.
“மார்னிங்கா?” மித்ராவதி குழப்பம் விலகாமல் மீண்டும் வினவினார்.
“எஸ் மேடம், இப்ப தான் நானும் எழுந்தேன். பிரேக்பாஸ்ட் ரெடியாகிட்டு இருக்கு. நீங்களும் ரெடியாகி வாங்க சாப்பிடலாம்” பிரியா சொல்ல, சரியென்று தலையசைத்தவர், “நீ போ. நான் வரேன்” என்க. அவளும் சென்று விட்டாள்.
விக்னேஷ் அவரின் தடுமாற்றத்தை கவனித்தபடி அங்கே தான் நின்றிருந்தான். “உங்க முகமே சரியில்ல மேடம், இன்னைக்கே நாம இங்க இருந்து கிளம்பிடறது நல்லது” அவன் அவர் நிலை உணர்ந்து சொல்ல, அவனை கவலையாக ஏறிட்டவர், சற்று முன் தனக்கு நேர்ந்ததை, தான் கண்டதை அவனிடம் மிரட்சியோடே சொல்லி முடித்தார். அவர் சொன்னதை கேட்டிருந்தவனுக்கும் உடல் சில்லிட்ட உணர்வு.
இருந்தும், “இது வெறும் கனவு தான மேடம்! பௌர்ணமி, சந்துரு பத்தியே நீங்க நினைச்சிட்டு இருக்கிறதோட தாக்கமா கூட இருக்கலாம், இதையெல்லாம் சீரியஸா எடுத்துக்காதீங்க மேடம்” அவன் ஆறுதல்படுத்திட,
“தெரியல விக்கி, இதை வெறும் கனவு தான்னு ஒதுக்கவும் முடியல, நிஜம்னு நம்பவும் முடியல, எதுவுமே புரியல, மனசெல்லாம் மரமரன்னு இருக்கு” என்றவரின் கண்களும் கலங்கின.
“உங்க கனவு படி பார்த்தா, இந்த பங்களாவில நம்ம அச்சுறுத்தற அமானுஷ்யம் பௌர்ணமி தான். இத்தனை வருசமா முக்தி அடையாம அந்த அறைக்குள்ளயே அந்த ஆன்மா அடைஞ்சிருக்கு, இப்ப விடுதலைக்காக உங்ககிட்ட கேட்டிருக்கு… அப்படித்தானே மேடம்?” விக்னேஷ் அவரிடம் விளக்கம் கேட்க, அவரிடம் பதிலில்லை. தன் மனநிலை தெளியாமல் அவனை ஏறிட்டார்.
“இப்ப போய் நீங்க பூட்டி இருக்க அந்த இரும்பு கதவை திறந்து விட்டா, அந்த ஆன்மா விடுதலையாகிடுமா? இதை முதல்ல நீங்க நம்பறீங்களா மேடம்?” அவன் மேலும் கேட்க, இவரால் உறுதியாக எதுவும் சொல்ல முடியவில்லை.
“இதுவரைக்கும் என் அனுபவத்தில நான் பேய், பிசாசுன்னு எதையும் நம்பினதில்ல. இங்க வந்த பிறகு ஏதேதோ புரியாம நடந்து இருந்தாலும் அதை என்னோட பகுத்தறிவு நம்பவிட்டதில்ல விக்கி, ஆனா?” மித்ராவதி தயங்கினார்.
“மேடம், ஒருவேளை இறந்தவங்க எல்லாம் பேயா, ஆத்மாவா உலவுவாங்கன்னா, இந்த உலகத்துல மனுசங்களை விட பேய்களோட எண்ணிக்கை தான் அதிகமா இருந்து இருக்கும்! ஏன்னா இந்த பூமியில வாழறவங்கள விட, இறந்தவங்களோட எண்ணிக்கை நம்மால ஊகிக்க முடியாத அளவுக்கு பல பல மடங்கு” விக்னேஷ் அவரின் தயக்கத்தை உடைக்க முயன்றான்.
“புரியுது விக்கி, பட், நான் கண்ட கனவு என்னை ரொம்பவே டிஸ்டர்ப் பண்ணுது. சந்திரகாந்த் இறந்ததுக்கு அப்புறம் பௌர்ணமிக்கு என்ன ஆச்சுனு தெரிஞ்சுக்கனும்! அத்தனை கொடுமையான முடிவு அவளுக்கு கிடைக்க என்ன காரணம்னு கண்டுபிடிச்சே ஆகனும்” மித்ராவதி ஒரு முடிவுடன் சொல்ல,
“நாப்பது வருசம் முன்ன இறந்தவங்க பத்தி இப்ப கண்டுபிடிக்கிறது அவ்வளவு சுலபம் இல்ல மேடம். நாம இப்ப அதை தேடி அலைஞ்சா, ஷூட்டிங் பாதியிலேயே நிக்கும் பரவாயில்லயா மேடம்?” அவன் நிதர்சனம் உணர்த்தி பேசினான்.
சற்றுநேரம் யோசித்தவரின் பார்வையில் சன்னல் வழியே தூர வீடு தெரிந்தது. “விக்கி அது, இந்த வீட்ட சுத்தப்படுத்தி தந்த வேலைகாரோட வீடு தான?” அதை காட்டி கேட்க, ஆமென்று தலையசைத்தவன், அவரின் யோசனை உணர்ந்தனாக, “நாம இங்க வந்தப்போ இந்த வீட்ட திறந்து விட்டதோட சரி, அதுக்கப்புறம் அவங்க ரெண்டு பேரும் இந்த பக்கம் எட்டி கூட பார்க்கல மேடம்” கூடுதல் தகவல் சொன்னான்.
“அவங்கள விசாரிச்சா ஏதாவது தெரிய வரும் விக்கி, பேசி பார்க்கலாம்” என்றார் முடிவெடுத்தவராய்.
“மேடம், இன்னைக்கு இங்கிருந்து கிளம்பறதா ப்ளான் பண்ணி இருந்தோம்?” விக்னேஷ் தயங்கியபடியே ஞாபகப்படுத்த, “நாம எங்கேயும் போக போறதில்ல. இங்கேயே தான் ஷூட்டிங் கன்டினியூ பண்றோம்” மித்ராவதி துணிந்து சொன்னார்.
விக்னேஷ் நெற்றி சுருங்க அவரை நேர் பார்வை பார்த்து நின்றான். அவன் பார்வையை எதிர் கொண்டவர், “உங்க எல்லாரையும் இங்க அழைச்சிட்டு வந்தது நான் தான். உங்க ஒவ்வொருத்தரோட பாதுகாப்புக்கும் பொறுப்பு நான் தான். இங்க யாருக்கும் எந்த அசம்பாவிதமும் நடக்காது எனக்கு நம்பிக்கை இருக்கு. உனக்கு என்மேல நம்பிக்கை இருக்கில்ல விக்கி?” மித்ராவதி கேட்க, “எஸ் மேடம், உங்க மேல, உங்க முடிவுகள் மேல எனக்கும், நம்ம டீம்கும் அசைக்க முடியாத அளவு நம்பிக்கை இருக்கு” என்று உறுதி தந்தான் அவரை தன் தாய் ஸ்தானத்தில் வைத்திருந்த அந்த இளைஞன்.
“ஓகே, டுடே எல்லாரும் ரெஸ்ட் எடுத்துக்கட்டும். ஈவினிங் கரெக்டா நெக்ஸ்ட் ஷுட்க்கு ரெடியா இருக்கனும்” அவர் இயக்குனராக உத்தரவிட, இவன் சிறு சிரிப்புடன், “ஷுவர் மேம்” என்று சொல்லி நகர்ந்தவன், தாமதித்து திரும்பி, “எதுக்கும் கேர்ஃபுல்லா இருங்க மேடம்” என்று அக்கறை சொல்லி சென்றான்.
ஏனோ மித்ராவதி ஒருவித குருட்டுதனமாக தைரியத்திலும் நம்பிக்கையிலும் துணிந்து இருந்தார்.
அவரின் தைரியம், நம்பிக்கை நிலைக்குமா?
***
அவள் வருவாள்…