அவள் பௌர்ணமி 12

IMG-20200921-WA0010-49828270

அவள் பௌர்ணமி 12

 

நிழல் காதலன் – (பிளாஷ்பேக்) காட்சி

 

வண்ணம் தோய்த்தெடுத்த தூரிகை அவன் கைகளில் அசைந்தபடியே இருந்தது வெகு நேரமாய். வெகு லாவகமாய்.

 

உணவு தட்டோடு சந்துரு அறைக்குள் வந்த பௌர்ணமி, கையில் எடுத்து வந்த தட்டை சிறு மேசை மீது வைத்து விட்டு, அவனை தேடி உள்ளறைக்கு நடந்தாள்.

 

அங்கே, சக்கர நாற்காலியில் அமர்ந்த படி, சட்டத்தில் பிணைக்கப்பட்டு இருந்த ஓவிய தாளில், தீவிரமாக வரைந்துக் கொண்டிருந்தான் சந்துரு. அவனின் பக்கவாட்டு தோற்றத்தை உரிமையாய் ரசித்தபடி, அவனிடம் வந்தவள் பார்வை, அவன் வரைந்ததைப் பார்க்க, வியப்பும் வெட்கமும் ஒன்றாக அவளை திணறடித்தது.

 

மார்பு வரை சுற்றிய வெள்ளை துகிலை 

இருகைகளாலும் சேர்த்து பிடித்தப்படி,‌ உடல் முழுவதும் ஈரம் சொட்ட சொட்ட கரையேறி நடந்து வரும் பௌர்ணமியின் நாணம் தோய்ந்த தத்ரூப தோற்றத்தை ஓவியமாக தீட்டி கொண்டு இருந்தான் அவன். 

 

தன் பிம்பம் பார்த்து திணறி நின்றவளின் கைப்பற்றி இழுத்து தன்மடி அமர்த்திக் கொண்டவன், கண்சிமிட்டி புன்னகைக்க,  சங்கடத்திலும் வெட்கத்திலும் இரு கைகளால் முகத்தை பொத்திக் கொண்டு நெஞ்சம் தடதடத்தாள் பௌர்ணமி.

 

அவளின் பூமுகம் மறைத்த கைகளை இலகுவாக விலக்கியவன், அவளின் கவிழ்ந்திருந்த சிப்பி இமைகளில் இதழ் பதித்திட, அவள் முகமும் அகமும் மலர இமைகள் விரித்தாள். சந்துரு ஒற்றை புருவம் உயர்த்தி என்னவென்று கேட்க, அவள் இடவலமாக இல்லையென்று தலையசைத்து, அவன் வரைந்த ஓவியத்தை கண்களால் சுட்டினாள்.

 

“முடியாத ஓவியமும் முழுமையான நிஜமும் என் பக்கத்திலேயே இருக்கு, இதில் நான் எதைவிட? எதை தொடர?” அவள் மெல்லிடையோடு தன் பொன் விரல்கள் மேய விட்டு, காதல் பேசினான். அவன் வார்த்தைகள் முழுதாக புரியாத பாவைக்கு, அவன் காதல் அதிகமாகவே புரிந்தது. தன்னவன் கழுத்தோடு இருகைகளையும் கட்டிக்கொண்டு வாகாக அவன் தோளில் முகம் சாய்த்துக் கொண்டாள்.

 

குழைத்த வண்ண கலவையில் தன் நீள் விரல்களை தோய்த்தெடுத்தவன், அவள் கன்னங்களை காகிதமாக்கி, விரல் தூரிகையால் சரசம் தீட்டலானான். அவன் நுனிவிரல் தீண்டலில் குழைந்து உருகியது பெண்மை, அவளின் நெருக்கத்தில் கிறங்கி மயங்கியது ஆண்மை. அவள் வழவழ கன்னத்தில் கோலமிட்டு வழுக்கி, கழுத்தில் இறங்கிய அவன் தூரிகை விரல்கள்… படாரென கதவு திறக்கும் சத்தத்தில் அவளிடமிருந்து விலகி கொண்டது.

 

“யாரது?” உள்ளிருந்தே கடுமையாக ஒலித்தது சந்துரு குரல். காதல் வேளையில் ஏற்பட்ட இடையூறை வெறுத்து.

 

“சந்துரு நான் தான், எங்க இருக்க வெளியே வா” பைரவநாத்தின் அழுத்தமான குரல் கேட்க இவன் நெற்றி சுருக்கினான்.

 

விலகிய அவன் விரல் தீண்டலும், விறைத்து நிமிர்ந்த அவன் தேகமும் மின்தடை பட்ட மின்பொருள் போல, அவளையும் சுயநினைவுக்கு கொண்டுவர, அனிச்சையாக அவன் மேலிருந்து எழுந்து விலகி நின்றாள்.

 

சக்கர நாற்காலியை பின்புறமாக நகர்த்தி, உள்ளறை வாயிலில் இருந்தபடி பின்புறமாக தலையை மட்டும் எட்டி அவரை பார்த்தான் சந்துரு. சிடுசிடுப்போடு வெளி அறையில் நின்றிருந்தார் அவன் மாமா.

 

“அங்கேயே உக்காருங்க, நான் இதோ வரேன்” என்று உத்தரவு போலவே சொன்னவன், இவளிடம் திரும்பி இங்கேயே இருக்கும்படி கையசைத்து விட்டு, வெளியறை நோக்கி சக்கரங்களை திருப்பினான். பௌர்ணமி புரிந்தவளாக, தன் கன்னத்தில் ஒட்டி இருந்த வண்ணகலவையை மிச்சமிருந்த வெட்கத்தோடு அழுத்தி துடைக்கலானாள்.

 

அமர்த்தலான நேர் பார்வையோடு அவர்முன் வந்தான் சந்துரு. “என்ன நினைச்சிட்டு இருக்க சந்துரு? நான் அவ்வளோ சொல்லியும் ஏன் இந்த முந்திரி கொட்ட வேலை செய்ற?” அவர் சிறிதும் பொறுமையின்றி எடுத்தவுடன் கொந்தளிக்க, 

 

“இது என்னோட கடமை. உரிமையும் கூட. அப்பாவுக்கு அப்புறம் எஸ்டேட்ட எடுத்து நடத்தற பொறுப்பு என்னோடது. அதை தட்டிக் கழிக்க எனக்கு விருப்பமில்ல. இதுல உங்களுக்கு என்ன கஷ்டம்?” சந்துரு நிதானமாக வார்த்தைகளை உதிர்த்தான்.

 

“அதுக்காக என்கிட்ட ஒத்த வார்த்தை சொல்லாம எஸ்டேட் கணக்கு வழக்குல தலைய விடுவியா நீ?” 

 

“சின்ன திருத்தம், நான் இன்னும் தலையிடல. இப்ப வரைக்கும் கணக்கு வழக்குகளை சரிபார்த்துட்டு இருக்கேன் அவ்வளோதான், எல்லாத்தையும் ஒழுங்கா பார்த்து முடிச்சிட்டு மொத்தமா தலையிடலாம்னு இருக்கேன். உங்க வசதி எப்படி?” சந்துரு கேட்கவும், பைரவநாத் சத்தமாக சிரித்து வைத்தார்.

 

“இதையெல்லாம் விளையாட்டு விசயம்னு நினைச்சிட்ட போல சந்துரு. எஸ்டேட் மேனேஜர்கிட்ட இருந்து வருச கணக்கு வழக்கெல்லாம் வாங்கி பார்த்தா மட்டும் எஸ்டேட்ட உன்னால நிர்வகிக்க முடியும்னு கனவு காணாத, இதுல வெறும் ஏட்டறிவு மட்டும் போதாது. அனுபவ அறிவும் வேணும். தொழில் நேக்கு போக்கு தெரியனும், தொழிலாளர்களோட நம்பிக்கைய சம்பாதிக்கனும், இன்னும் நிறைய இருக்கு மச்சான்” அவர் இளக்காரமாக விவரித்து கொண்டு போனார்.

 

அவர் சொல்வதின் நிதர்சனம் இவனுக்கும் புரியாமலில்லை. அவரின் பக்க துணை மட்டும் இருந்தால் இத்தனையையும் இவனும் இலகுவாக கற்றுக் கொள்வான் தான். தொழிலில் தன் திறமையை நிருபிப்பான் தான். ஆனால், துணை நிற்க வேண்டியவரே எதிர்த்து நிற்கும்போது இவன் முயன்று தன் உரிமையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டான். முன்பு அவன் தந்தை அவனை அவமான சின்னமாய் எண்ணி ஒதுக்கி வைத்திருந்தார். இப்போதோ இவர் இவனை உப்புபெறாதவனாக எண்ணி முடக்கி போட நினைக்கிறார்.

 

எதற்காகவும் யாருக்காகவும்‌ தன் உரிமையை விட்டுக் கொடுக்கும் எண்ணமில்லை அவனுக்கு. அதையே தான் அவரிடமும் சொன்னான். “நானும் இதை எல்லாம் கத்துப்பேன் சீக்கிரமே. நிர்வாகத்தையும் தொழிலையும் வழி நடத்த எனக்கு உதவி செய்ய மாட்டீங்களா என்ன… மாமா?” அவன் சூசகமாக கேட்க,

 

“முன்ன சொன்னது தான் இப்பவும், தொழிலாளர்களோட ஒத்துழைப்பு, நம்பிக்கை இல்லாம உன்னால ஒன்னும் கிழிக்க முடியாது. ஏதோ எஸ்டேட் தொழிலாளர் குடும்பம் எல்லாத்துக்கும் கல்யாண விருந்து போட்டு வளைக்க போறதா சவால் விட்ட, முடிஞ்சா அதை செய் முதல்ல” அவர் கேலியாக அவனை கிளற,

 

“நடக்கும் மாமா, என் கல்யாணமும் நடக்கும், என் வேலையும் நடக்கும்” அவன் உறுதியாக பேச, இவர் குழம்பி நின்றார். தான் அவன் திருமணம் பற்றி குத்தி காட்டினால் அவமானத்தில் வாயடைத்து போவான் என்ற இவரின் எண்ணம் பலிக்காமல் போனது. மேலும் அடுத்தடுத்த இடியை நிதானமாக அவர் தலையில் இறக்கினான் சந்துரு.

 

“நாளைக்கு காலையில எஸ்டேட், பேக்டரிய நான் நேரடியா வந்து பார்க்கிறேன்” என்க.

 

“நீ எப்படி பா, அதுவும் இந்த காலோட” அவர் வெளிப்படையாகவே திணற, “என் குறைய நிறையாக்கற யுக்தி எனக்கு நல்லாவே தெரியும் மாமா, நான் சொன்னதுக்கு மட்டும் ஏற்பாடு பண்ணுங்க போதும்” என்று உத்தரவிட்டான்.

 

இவர் வேறேதும் மறுத்து பேச முடியாமல் பற்களை கடித்தபடி, தலையாட்டி நகர, “அப்பா தவறின அப்புறம் எஸ்டேட் கணக்குல நிறைய இடத்துல கை வச்சிருக்கீங்க போல” சந்துரு தன் கைவிரல் நகங்களை ஆராய்ந்தபடி கேட்க, இவர் முகம் வெளிர திரும்பினார்.

 

“டென்ஷனாகாதீங்க, முடிஞ்சதெல்லாம் தோண்டி துருவ மாட்டேன். ஆனா இனிமே உங்க கையும் சுத்தமா இருக்கனும் எஸ்டேட் கணக்கும் சுத்தமா இருக்கனும் பார்த்து நடந்துக்கோங்க” என்று வெளிப்படையாக எச்சரிக்கை தந்தே அவரை அனுப்பினான்.

 

பைரவநாத் நகரும்வரை காத்திருந்த பௌர்ணமி, வெளியே வந்து சந்துருவிற்கு உணவை எடுத்து வைத்தாள். எப்போதும் போல அவளை பார்த்ததும் இவன் முகம் இளகியது.

 

உணவு பரிமாறியவளை ஊட்டி விடும் படி ‘ஆ’காட்டியவனை அழகாய் சலித்துக் கொண்டு ஊட்டி விடலானாள்.

 

பௌர்ணமியின் நேசம் மிகும் முகபாவங்களை பார்த்தபடியே, அவள் மென் கையால் உணவை வாங்கிக் கொண்டான் சந்துரு. 

 

அவனின் பாதி அவள்!

இவன் உயிரின் மீதி அவள்!

அவன் அரைகுறை வாழ்வின் முழுமை அவள்!

அவன் நரக தனிமையின் சொர்க்க துணை அவள்!

அப்பழுக்கில்லா அன்பிலே தன் எல்லாமாகி நிற்பவள்!

அவள் அவனின் பௌர்ணமி!

 

சூழ்நிலையின் சாதகத்தில் காதலின் எல்லைக் கோட்டை கடந்து விட்டிருந்தான் தான். அதை பழியென, பாவமென எண்ணவில்லை. அவர்கள் உறவின் புனிதம் அது. நேசம் உணர்ந்த உள்ளங்களின் நிறைவான பந்தம்.

 

ஆனால் இந்த பந்தத்தை மறைத்து வைக்கலாகாது, தங்கள் உறவை உலகறிய செய்ய வேண்டும். முதலில் தங்களை இந்த குடும்பம் ஏற்க செய்ய வேண்டும். அதற்குமுன் இவனுக்கான அங்கிகாரத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பிறகே தன்னவளை உரிமையோடு கைசேர்க்க முடியும். அவனுக்குள் உறுதியாக எண்ணிக் கொண்டான். தன் வாழ்வின் மீதும் பலமான பிடிப்பு ஏற்பட்டிருந்தது. பௌர்ணமியின் வெள்ளந்தியான நேசம் அத்தனை பிடிப்பை ஏற்படுத்தி இருந்தது.

 

பௌர்ணமி அவனுக்கு உணவு ஊட்டி முடித்திருந்தாள்.‌ இன்னும் சிறிது உண்ணச் சொல்லி பாவனை செய்ய, அவளின் பாவனையில் இவனுக்கு சிரிப்பு தான் வந்தது. ‘இதுவே போதும், வயிறு மட்டுமில்ல, மனசும் நிறைஞ்சு போச்சு’ என்று இதமாக அவள் நெற்றி போட்டில் இதழ் பதித்து ‘போ’ என்று தலையசைக்க, அவளும் தலையசைத்து வெளியே சென்றாள்.

 

***

 

“மேம் நெக்ஸ்ட் ஸீன் எப்போ எங்க?” பிரியா வினவ, 

 

மித்ராவதி சோர்வோடு நெற்றியை தேய்த்தபடி, “நெக்ஸ்ட், எஸ்டேட், பேக்ரீல இருக்க பார்ட் ஃபுல்லா ஃபினிஷ் பண்ணிடலாம் ப்ரியா, பர்மிஷன் வாங்கியாச்சில்ல” மித்ராவதி கேட்க, பிரியா அவரை வித்தியாசமாக பார்த்தாள். 

 

எப்போதும் அவரிடம் ஒருவேகம் இருக்கும், அவரின் வேக உத்தரவுகளில் கேட்பவர்களுக்கும் அந்த வேகம் தொற்றிக்கொள்ளும். ஆனால் இப்போது, அவர் முகத்தில் இருந்த குழப்பமும் உடல்மொழியில் தெரிந்த சோர்வும், பேச்சில் தெரிந்த வேகமின்மையும் பிரியாவை நிதானிக்க வைத்தது.

 

“என்னாச்சு மேம் உங்களுக்கு? ரொம்ப டல்லா தெரியறீங்க” பிரியா பரிவாக கேட்க,

 

மறுப்பாக தலையசைத்தவர், “நத்திங் ப்ரியா, கொஞ்சம் டயர்டா இருக்கு அவ்வளோதான். நாளைக்கு மார்னிங் ஷூட்டிங் ஸ்பாட் எல்லாம் ரெடியா இருக்கனும். போய் கவனி” அவர் உத்தரவிட, அவர் வேகம் மீண்டதை கவனித்த பிரியா சிரித்தபடி, “ஓகே மேடம்” என்று நகர்ந்தாள்.

 

மித்ராவதியும் அங்கிருந்து நகர்ந்து பங்களாவின் பின்புறம் கீழ்புற அறையின் முன்னே வந்து நின்றார்.

 

‘என்னை விடுதலை செய்’ இப்போதும் அந்த எழுத்துகள் மனக்கண்ணில் தோன்ற, அவரின் உடல் சில்லிட்டு நடுங்கி அடங்கியது.

 

ஆழ்ந்த மூச்செடுத்தவர் கை நடுங்க அந்த கதவின் பூட்டை பற்றினார். இதய தடதடப்பின் வேகம் வேகமாக கூடியது. 

 

இதமான குளிர்ச்சி ஏந்தி நின்ற அந்தி மாலை வேளையிலும் அவர் முகம் வியர்த்து வழிய, உள்நாக்கு உலர்ந்து போன உணர்வு! மறுகையில் இருந்த சாவியை அந்த பூட்டில் நுழைக்க முயல, கை நடுக்கத்தில் அவரால் முடியவில்லை. கையை உதறிக் கொண்டார்.

 

“மேடம்…!” மூச்சு வாங்க அங்கே ஓடி வந்து நின்றான் விக்னேஷ். 

 

மித்ராவதி நிமிர, “என்ன மேடம் இதெல்லாம், நீங்க இப்படி ஏதாவது செய்வீங்களோனு தான் ஓடி வந்தேன்” என்றவன், “அவசரப்பட்டு ரிஸ்க் எடுக்க வேணாம் மேடம், பொறுமையா இருங்க” அவன் சொல்ல,

 

“இல்ல விக்கி, அப்படி என்னதான் இந்த ரூம்குள்ள இருக்குனு நான் பார்க்கனும், இன்னும் இருட்டல இல்ல, அதான் ஓப்பன் பண்ணலாம்னு” அவர் குரலிலும் நடுக்கம் தெரிந்தது.

 

“கண்டிப்பா ஓபன் பண்ணலாம் மேடம், ஆனா நீங்க தனியா செய்யறது சரியில்ல, வெறும் கதவை பூட்டி வச்செல்லாம் பேய், பிசாச கட்டி போட முடியாது. இதுல வேற ஏதோ இருக்கு” அவன் நம்பிக்கையற்று சொல்ல,

 

“எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு விக்கி, இதுவரைக்கும் நான் இவ்வளோ டிஸ்டர்ப் ஆனதில்ல. ஷூட்டிங்ல கூட என்னால முழுசா இன்வால்வ் ஆக‌ முடியல” அவர் வருத்தமாக தன் நிலையை உரைத்தார்.

 

 “கன்ட்ரோல் யுவர் செல்ஃப் மேம், நாம பொறுமையா யோசிக்கலாம் ஏதாவது வழி கிடைக்கும்” என்றான்.

 

“ம்ம் இந்த பங்களா வேலைக்கார பெரியவரை விசாரிக்க சொன்னேனே விக்கி” அவர் கேட்க,

 

“அவர் வீட்டில இல்ல மேடம், நாளைக்கு போய் விசாரிக்கலாம்” என்று அவரை அழைத்துக் கொண்டு நடந்தான்.

 

அந்த இரும்பு கதவில் இரு கருவிழிகள் திறந்து அவர்களை உறுத்து விழித்தது!

 

அன்றைய இரவை கலக்கத்துடனும் குழப்பத்துடனுமே கழித்திருந்தார் மித்ராவதி.

 

மறுநாள் காலையில் ஷூட்டிங் தொடங்க, அவரின் குழப்பமும் கலக்கமும் பின்னோக்கி நகர்ந்தது. தன்னை இயக்குனராக முன்னிருத்தி காட்சி அமைப்பில், படப்பிடிப்பில் கவனமானார்.

 

***

 

நிழல் காதலன் – பிளாஷ்பேக் காட்சி

 

சொன்னது போலவே, ஜீப்பில் முன் இருக்கையில் அமர்ந்து, சந்துரு எஸ்டேட் முழுவதும் பார்வையிட்ட படி சுற்றி வந்தான். அவனுடன் எஸ்டேட் மேலாளரும் வந்தார். அவன் ஓயாமல் வீசும் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் திணறாமல் பதில் தந்தார். தங்கள் சின்ன முதலாளியின் இத்தகைய பரிணாமத்தை மாறாத வியப்புடன் பார்த்து வந்தான் ஜீப் ஓட்டுனர்.

 

‘எஸ்டேட் வந்து இவன் பார்த்தால் மட்டும் என்ன செய்துவிட முடியும்? தொழிலாளர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் ஆதரவும் தனக்கு இருக்கும்போது’ என்று நினைத்து கொண்டார் பைரவநாத். ஆனால், அவருக்கு வந்த தகவல் வேறு மாதிரி இருந்தது. சந்துரு, வெறுமனே சுற்றி பார்ப்பதோடு, தன் பார்வையில் பட்ட தொழிலாளர்களிடம் நலம் விசாரித்து, குறை நிறைகளையும் கேட்டு, நிதானமாகவே பதில் தந்து வருகிறான் என்று. பைரவநாத் நிச்சயம் இந்த பக்குவப்பட்ட அணுகுமுறையை சந்துருவிடம் எதிர்பார்க்கவில்லை. அவனின் ஒவ்வொரு முன்னேற்றமும் இவரின் தலைவலியை கூட்டியது.

 

தேயிலை உலர்த்தி பதப்படுத்தி தூளாக அரைக்கும் பெரிய இயந்திரங்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் கவனித்து கொண்டு, சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே பார்வையிட்டு வந்தான் சந்துரு. அங்கிருந்த தொழிலாளர்களிடம் பேசி, பதில் உரைத்து, பொறுப்பு அதிகாரிகளிடம் தேவையான தகவல்களை பெற்று, அவன் வீடு திரும்பி வர மாலை வந்திருந்தது.

 

அடுத்தடுத்த நாட்கள் தினமும் எஸ்டேட், தொழில்சாலை நடவடிக்கைகளில் தன் பங்கெடுப்பை நிலையிருத்திக் கொண்டான் சந்துரு. உரிமை அவனிடம் இருக்க, மறுத்து பேசும் வாய்ப்பு யாருக்கும் அமையவில்லை.

 

தன் மகன் பொறுப்பெடுத்து செயல்படுவதில் காந்திமதி உள்ளம் மகிழ்ந்து போனார். சந்துரு நாள் முழுவதும் வெளியே சென்று விட்டு வர, பௌர்ணமி முகம் தான் சுணக்கம் காட்டியது. அவளுக்கு தன் கடமையை புரிய வைத்து சமாதானம் படுத்த வேண்டிய கடமை சந்துருவை சேர்ந்தது.

 

***

அவள் வருவாள்…