அவள் பௌர்ணமி 13

IMG-20200921-WA0010-5b20e580

அவள் பௌர்ணமி 13

அவள் பௌர்ணமி 13

 

அந்த சிறிய அளவிலான வீட்டில் ஒற்றை நெகிழி இருக்கையில் உட்கார்ந்து இருந்தார் மித்ராவதி. அவர் அருகே விக்னேஷ் நின்றிருக்க, எதிரே அந்த பங்களாவின் வேலைக்கார பெரியவரும் அவரின் மனையாளும் தழைந்த பார்வையோடு நின்றிருந்தனர்.

 

“எப்போ இருந்து நீங்க இங்க வேலை செய்றீங்க?” மித்ராவதி கேட்க,

 

“எங்கப்பன் காலத்துல இருந்தே இங்கன தான் வேலை பாக்குறோம் மா, நான் பொறந்து வளந்ததெலாம் இங்கன தான்” என்றார் பெரியவர்.

 

“அப்போ உங்களுக்கு சந்துரு… ம்க்கும் சந்திரகாந்த் பத்தி நல்லாவே தெரிஞ்சு இருக்கும்”

 

“அவர பத்தியா!” சற்றே அதிர்ந்தவர், “எப்பவோ நடந்து முடிஞ்சது அது, இப்ப ஏன் கிளறீங்க” வேலைக்கார பெரியவர் தயக்கமாக தன் வழுக்கை தலையை சொரிந்து கொண்டார்..

 

“இந்த பங்களாவில நாங்க என்ன ஷூட்டிங் எடுக்கிறோம்னு உங்களுக்கு தெரியுமா?”

 

“தெரியாதுங்களே, இங்கன இருக்க வேலையே எங்களுக்கு சரியா போவுதுங்க, படம் புடிக்கிறத பாக்க அங்கன வர முடியறது இல்லீங்க”

 

“சந்திரகாந்த வாழ்க்கைய தான் படமா எடுத்துட்டு இருக்கோம்… அதால தான் அவர் வாழ்ந்த இடத்திலேயே ஷூட்டிங் வச்சு இருக்கோம்”

 

“ஐய, அற்ப ஆயுசுல போன அவர பத்தி என்னத்தன்னு படம் எடுப்பீங்க, அவரு நொண்டி வேறங்க, அவரால நடக்கவே முடியாது, இதுல எங்கன வில்லங்க கிட்ட சண்ட போடுறது? ஜோடி பொண்ணுகூட டூயட்டு பாடுறது, ஆடுறது எல்லாம்! நீங்க வேற யாராவது கையும் காலும் நல்லா இருக்குறவரா பார்த்து படம் புடிங்க” என்று அவர் இலவச ஆலோசனை வேறு வழங்கினார்.

 

சண்டை காட்சி, பாடல் காட்சி இருந்தால் மட்டுமே சினிமா என்று ஊறி போயிருப்பவருக்கு என்னவென்று விளக்கம் தர, மித்ராவதி சலிப்பாக தலையசைத்துக் கொண்டார்.

 

விக்னேஷ் முன் வந்து, “நீங்க சொன்னமாதிரியே வச்சுடலாம் பெரியவரே, அந்த சந்திரகாந்த நீங்க பார்த்து இருக்கீங்கல்ல, அவரை பத்தி உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்க” என்று கேட்டான்.

 

“அவரை பத்தி சொல்ல என்ன இருக்கு, பெரிய்யாவுக்கு ஒத்த புள்ள அவரு. ஆனா பாவம் ஊனமா போச்சு. எனக்கு தோட்டத்தில தாங்க வேல, எப்பவாவது தான் அவர பாப்பேன். ஆளு பாக்க உசரமா, ஒல்லியா,‌ அம்சமா தான் இருப்பாரு, என்ன இருந்து என்ன? அந்த சக்கரம் வண்டி தான் கதினு கிடப்பாரு. பெரியய்யா தவறினதுக்கு அப்புறம், அப்படி இப்படின்னு தோட்டத்து பக்கம் வர போக இருந்தாரு. என்னவோ திடீர்னு இதோ இந்த பங்களா மாடியில இருந்து கீழ குதிச்சு உசுர மாச்சுக்குவாரா! என்ன நேரமோ? என்ன பாவமோ? அதுக்கப்புறம் அந்த குடும்பமே உரு தெரியாம அழிஞ்சு போச்சு” என்று சொல்லி பெருமூச்செறிந்தார்.

 

“அவருக்கு தான் கால் ஊனமாச்சே, அப்புறம் எப்படி மாடி ஏறி போக முடிஞ்சது?” விக்னேஷ் கேள்வி சந்தேகமாக வந்தது.

 

“எப்படி ஏறி போனாரோ! எதுக்கு கீழ குதிச்சு உசுர மாச்சிகிட்டாரோ! நான் என்னத்த கண்டேன் பா”

 

“அப்போ இங்க வேலை செஞ்ச பௌர்ணமிய உங்களுக்கு ஞாபகம் இருக்கா?” மித்ராவதியின் கேள்வியில் இருவரின் முகங்களும் வெளுத்து போயின.

 

“எம்மாடியோ, அந்த பேர சத்தம் போட்டு சொல்லாத தாயீ, உசுருக்கு உத்தரவாதம் இல்ல” இதுவரை அமைதியாக இருந்த பெரியவரின் மனைவி பதறினாள்.

 

“ஏன், அந்த பேர்ல என்ன இருக்கு?” மித்ரா புருவம் சுருக்கி வினவ,

 

“அதெல்லாம் நாங்க சொல்ல கூடாது மா, நீங்க சட்டுபுட்டுனு படம் புடிச்சிட்டு கிளம்புற வழிய பாருங்க”

 

“ம்ம் சரிதான், உங்க வீடு தேடி வந்திருக்கோம், டீ, காஃபி எதுவும் தர மாட்டீங்களா?” மித்ரா கேட்டதும், “இதோ எடுத்துட்டு வாரேன்” என்று பின்புறம் தனித்து இருந்த சமையல் கட்டுக்கு வேகமாக நகர்ந்தார் அந்த மூத்த பெண்மணி.

 

“இப்ப நீங்க சொல்லுங்க பெரியவரே, பௌர்ணமிக்கு என்ன ஆச்சு?” மித்ராவதியின் கேள்வி பெரியவரிடம் திரும்பியது.

 

“அதுவந்துங்க… சின்ன புள்ளங்க அது, காதும் கேக்காது, வாயும் பேசாது. இங்க எடுபுடி வேலைக்கு இருந்துச்சு. நல்லா துறுதுறுன்னு ஓடி ஆடிட்டு இருக்கும்… சின்னய்யாக்கு எல்லா வேலையும் இந்த புள்ள தான் பாத்து செய்யும், அவரு தவறுன அன்னில இருந்து, பௌர்ணமி புள்ளய காணலங்க, நாங்களும் சுத்துபத்து எல்லாம் தேடி பாத்து விட்டுட்டோம்…!

 

அந்த பௌர்ணமி ராத்திரிய என்னால எப்பவும் மறக்க முடியாதுங்க, இந்த பங்களா கீழ் பக்கம் கிடங்கு அறையில பாதி எரிஞ்ச உடம்பா அந்த புள்ளய கண்டெடுத்தோம், பாவம் அநியாய சாவு மா” சொல்லும் போதே கடந்துவிட்ட வேதனையின் மிச்சத்தில் அந்த பெரியவரின் கைகள் நடுங்கின.

 

“இதே பங்களா அறைக்குள்ள இருந்த பௌர்ணமிய ஒருத்தர் கூடவா பார்க்கல?” விக்னேஷ் ஆதங்கமாக கேட்க,

 

“பாத்து இருந்தா இப்படி தீயில விட்டிருப்போமா! வயசு புள்ள வேற, அநியாய சாவு மா அதுக்கு” இன்னும் தீராத பழைய ஆதங்கத்தில் கலங்கினார்.

 

“அப்ப, சந்துரு, பௌர்ணமிய கொன்னது யாருன்ற விசயம் உங்களுக்கு தெரியாது?” விக்னேஷ் விடாமல் கேட்க,

 

“அதுவந்துங்க… இதெல்லாம் அந்த வூட்டு மாப்ள வேலை தானுங்க! சொத்துக்கு ஆசைப்பட்டு சின்னய்யாவ மாடியில இருந்து தள்ளி விட்டதா… பேசிக்கிட்டாங்க” என்று இழுத்து நிறுத்தினார்.

 

“யாரு பைரவநாத்தா?” மித்ராவதி கேட்க, “எப்படி சொல்றீங்க?” விக்னேஷ் கேள்வியும் கூடவே வந்தது.

 

“இல்லனா ஏனுங்க, சின்னய்யா மாதிரியே அவங்க அக்கா புருசனும் மாடில இருந்து விழுந்து சாகனும்? பாவத்துக்கு கூலி இல்லாம போகுமுங்களா? கொன்னவர பழி தீத்து சின்னய்யா ஆத்மா கரை சேர்ந்துடுச்சு, இந்த பாவபட்ட புள்ள ஆத்மா தான் கரையேறாம துடிச்சிட்டு கிடக்கு”

 

“பௌர்ணமி ஆத்மாவையா சொல்றீங்க?” மித்ராவதி கேட்கவும், அங்கே பாத்திரங்கள் கீழே விழுந்து சிதறின.

 

மூவரின் பார்வையும் அந்த பக்கம் திரும்பியது. பெரியவரின் மனைவி தேநீர் எடுத்து வந்த பாத்திரங்களை கீழே தவற விட்டு அதிர்ந்தவராக அங்கே நின்றிருந்தார்.

 

“அந்த பேர சொல்லாதீங்கனு சொன்னா கேக்கமாட்டீங்களா? நாங்க உசுரோட இருக்கிறது உங்களுக்கு பொறுக்கலையா? இப்பவே அந்த பங்களாவ விட்டு போயிடுங்க இல்ல, அது உங்க எல்லாரையும் காவு வாங்கிடும், வர முழுநிலவுக்கு உங்கள்ல ஒருத்தர் கூட உசுரோட இருக்க மாட்டீங்க தெரிஞ்சுகோங்க” என்று ஆங்காரமாக கத்தினார் அவர்.

 

பெரியவர் தன் மனைவியை தடுத்து பிடித்து சமாதானம் செய்ய முயல, அவருக்கும் அடங்காமல் கத்தினார் அந்த வயதான பெண்மணி.

 

“முழுநிலவு நாளுல அதோட அலறலும் கதறலும் இந்த இடத்தையே அதிர வைக்கும், கருகுன உடம்போட கரை சேர முடியாம ஆங்காரத்துல துடிச்சிட்டு இருக்கு அது. ஓடிடுங்க உங்க உசுரு உடம்புல தங்கனும்னா ஓடிடுங்க” என்று கத்தி அவர்களை விரட்டினார்.

 

இனியும் அங்கிருப்பது சரியில்லை என விக்னேஷ், மித்ராவதியை அழைத்து வந்து விட்டான்.

 

“விக்கி, அவங்களுக்கு ஏதோ பௌர்ணமி பத்தி தெரிஞ்சு இருக்கு அதான் இப்படி பிஹேவ் பண்றாங்க! நாம இன்னும் விசாரிச்சா, அவங்க சொல்லிடுவாங்க” பின்வாங்க மனமில்லாமல் மித்ராவதி அரற்ற,

 

“நோ மேடம், இனி அவங்க கிட்ட விசாரிச்சு எந்த யூஸ்ஸும் இல்ல. டைம் தான் வேஸ்ட்” என்றான்.

 

“ஏதாவது செய்யனும் விக்கி! அந்த சின்ன பொண்ணுக்கு” அவரின் தொண்டைக்குழி அடைத்தது.

 

“கண்டிப்பா நம்மால முடிஞ்சதை செய்யலாம் மேடம். அதுக்கு வேற வழி கிடைக்கும் பார்க்கலாம் வாங்க” என்று நம்பிக்கை சொல்ல,

 

“ஒன்னும் புரியலயே விக்கி, என்ன வழினு கண்டு பிடிக்கிறது?” அவரும் ஆற்றாமையாக கேட்டார்.

 

“மேடம், பௌர்ணமி இறந்து கிட்டத்தட்ட நாற்பது வருசமாச்சு, இவ்வளவு வருசமாவா அந்த ஆத்மா சாந்தி அடையாம இருக்கும்?” விக்கி சந்தேகம் தீராமல் கேட்கவும்,

 

“துர் மரணத்துக்கு உள்ளானவங்களோட இறுதி நேர சங்கல்பம் தீர்ற வரைக்கும் அந்த ஆத்மாவால சாத்தி அடைய முடியாதாம்! இந்த தகவல் படிச்சு தான் சந்துரு கேரக்டரை உருவாக்கினேன் விக்கி. அதுபடி பார்த்தா, பௌர்ணமி ஆத்மா, தன் கடைசி சங்கல்பம் தீராம, முக்தியும் கிடைக்காம வருச கணக்கா விடுதலைக்காக போராடிட்டு இருக்குனு நம்பலாம்” என்று விளக்கினார்.

 

“நீங்க சொல்ற மாதிரி இருந்தா கூட அந்த ஆத்மாவுக்கு என்ன சங்கல்பம் இருக்கும் மேடம்?” அவன் கேள்வியில் இவர் முகமும் யோசனை காட்டியது. 

 

திரைக்கதையின் சுவாரஸ்யத்திற்காக மட்டுமே பௌர்ணமி கரு கொண்டு இருப்பது போல கற்பனையாக தான் அதை வைத்து இருந்தார் அவர். கதையில் கூட பௌர்ணமியை இறந்தவளாக காட்ட இவருக்கு மனம் வரவில்லை. ஆனால், நிஜத்தில் பௌர்ணமிக்கு நேர்ந்த கொடூர மரணம் அவரை வெகுவாக கலங்கடித்து இருந்தது. அதுவும் அப்போது அவள் சிறுபெண் வேறு, நினைக்கும் போதே அவர் மனதின் வேதனை கூடியது. பல வருடங்களுக்கு முன்பு இறந்தவளுக்காக இவர் இப்போது வருத்தம் ஏந்தி உழன்றார்.

 

“தெரியலையே விக்கி” என்று அவன் கேள்விக்கு பதில் கூறி துன்ப பெருமூச்செறிந்தார்.

 

***

அவள் வருவாள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!