அவள் பௌர்ணமி 14

IMG-20200923-WA0000-5aa3e92b

அவள் பௌர்ணமி 14

 

நிழல் காதலன் – காட்சி

 

மாலையில் உடலும் மனமும் களைத்து போய் அறைக்குள் வந்திருந்தான் சந்துரு. தினமும் வாசலிலேயே தனக்காக காத்து நின்று, தன்னை அழைத்து வரும் பௌர்ணமியையும் இன்று காணோம். அதில் வேறு அவன் மனது சுணக்கம் கொண்டது.

 

‘நான் வந்தது கூட தெரியாம எங்க போய் தொலைஞ்சா இவ?’ அவனுக்குள் உரிமை கோபம் மூண்டது. அதே கோபத்தில், “யாரங்க?” என்று சத்தமிட, வேலையாள் ஓடிவந்து அவன்முன் நின்றான்.

 

“எனக்கு டீ எடுத்து வர சொல்லு போ” என்று விரட்டினான். சில நிமிடங்களில் தேநீர் கோப்பையோடு அவனிடம் வந்த பௌர்ணமி, டீபாய் மீது வைத்து விட்டு அவன் பார்வைக்காக நிமிர்ந்தாள். 

 

தன்னவளை பார்த்ததுமே அவன் கோபம்  நீர்த்து போவதை வியப்பாக உணர்ந்தவன், சக்கரநாற்காலியில் இருந்தபடியே அவளை நோக்கி கை நீட்ட, அவன் சேவை உணர்ந்தவளாக, அருகே வந்தவள் நீட்டிய அவன் கரம் பற்றி தன் தோளை சுற்றி இட்டு அவன் எழுந்து கொள்ள உதவினாள்.

 

ஒரு கையால் அவளை பற்றி, ஒற்றைக்கால் தாங்கி நடந்தவன், எதிர்பக்கமிருந்த சோஃபாவை கைக்காட்ட, அங்கே அழைத்துச் சென்று அமர வைத்து நகரந்தவளின், கையை விடாது தன்புறம் இழுத்து அவளை அருகே அமர்த்திக் கொண்டான்.

 

பௌர்ணமி உம்மென்று முகத்தை திருப்பி கொள்ள, அவளின் முகவாயை அழுத்த பற்றி தன்புறம் திருப்பியவன், புருவங்களை உயர்த்தி காட்டி, “என்னடி?” வினவ,

 

அவளின் பங்கய விழிகள் அகன்று வேக மூச்சுகள் எடுத்தவளின், கண்களும் இதழ்களும் கைகளும் போட்டி போட அவனிடம் குமுறலானாள்.

 

ஆள்காட்டி விரலால் அவனை சுட்டி கட்டை விரலை வாயில் வைத்து கா விட்டவள், கையை கீழே காட்டி மேலே வீசி, சூரியனை வரைந்து, நிலாவை வரைந்து, இருகைகளை சேர்த்து விரித்து புத்தகம் போல காட்டி, விரல்களை கூட்டி, கண்களால் முறைத்தாள்.

 

இப்போது முகம் இளக, அவன் நெஞ்சை தொட்டு, தன்னை சுட்டி இல்லை என்று கையசைத்து, மூக்குத்தியை சுட்டி ”ம்மா” என்று இதழசைத்து, மேலே காட்டி, தன் காது, வாயை தொட்டு காட்டி இல்லை என்று கைவிரித்து, அவனை சுட்டி இணைந்த கரங்களை பிரித்து விட்டு தேம்பினாள்.

 

‘உன் பேச்சு கா போ, இப்பெல்லாம் என்கூட நீ பேசவே மாட்டேங்கிற, காலைல போனா சாயந்திரம் தான் திரும்பி வர, அப்புறமும்  ஏதோ நோட்ட வச்சு கணக்கு பார்க்க ஆரம்பிச்சுற, 

 

உன்ன விட்டா என்கூட யாரு பேசுவா? யாரு விளையாடுவா? நான் ஏதாவது சொன்னாலும் யாருக்குமே புரியல, மத்தவங்க சொல்றது எனக்கு விளங்கல, என் அம்மாவுக்கு அப்புறம் என்கூட பேசறது நீ மட்டும் தான். அது தான் என்னைவிட்டு செத்து போச்சு. உனக்கும் என்னை பிடிக்கல. அதான் என்னை விட்டு விலகி போற’ என்று தேம்பினாள்.

 

அவளின் செய்கையை உன்னிப்பாக கவனித்து இருந்தவன் முகம் இளக, உதடுகள் கீற்றாய் விரிந்தன.

 

“ஏய் இதெல்லாம் உனக்காக தான் டி செய்றேன். இப்ப உனக்கு சொன்னாலும் புரியாது. ஒன்னு மட்டும் புரிஞ்சுக்கோ இனி எப்பவும் உனக்கு நான், எனக்கு நீ மட்டும் தான்” அவள் கையோடு தன் கை இணைத்து சமாதானம் சொல்லியும் அவள் ஏற்கவில்லை உதட்டை கோணிக் காட்டி விலக முயன்றாள்.

 

அவளை பிடித்து மறுபடி அமர வைத்தவன், “உன்னால தான் டி, நானும் என்னை முழு மனுசனா உணர்ந்து இருக்கேன். என்னாலையும் முடியும்ற நம்பிக்கைய கொடுத்தவளும் நீதான் டி, இப்ப நீயே இப்படி அடம்பிடிச்சா நான் என்ன செய்ய?” அவளுக்கு நிதானமாக தன் நிலையை எடுத்து உரைத்தான்.

 

பாரபட்சமின்றி எல்லாரிடமும் எரிந்து விழுபவன், பௌர்ணமியிடம் மட்டுமே தன் ஒட்டுமொத்த நிதானத்தையும் கையாள்கிறான். இந்த மாற்றம் அவனே உணராமல் அவள் அருகில் மட்டும் அவனுக்கு இயல்பாக வந்து அமைகிறது.

 

அவன் சொல்வதை பாதி புரிந்து கொண்டவள், ‘நீ செய்யறதுக்கு எல்லாம் காரணம் நானா? நான் என்ன செஞ்சேன் உன்ன?’ சுறுசுறுவென்ற கோபத்தில் கொப்பளிக்க சைகை செய்தாள்.

 

அதில் பெரிதாய் சிரித்து விட்டவன், “நீ என்னடி செய்யல என்னை!” என்று கேட்டு அவளின் மூக்கு நுனியை இருவிரலால் பிடித்து ஆட்ட, அவன் கையை தட்டிவிட்டு வலித்த தன் மூக்கை தேய்த்து விட்டு கொண்டாள்.

 

அவளின் முகம் சுருக்கலில் மயங்கியவன், அவளின் முன்னுச்சியில் இதழ் பதித்து, விலக மனமின்றி நெற்றியில் இறங்கி, மூக்கு நுனி மேடேறி, அவளிதழில் தேங்கி வழிந்து, கழுத்து வளைவில் முகம் புதைத்து அவளை தன்னுள் இறுக்கி அணைத்து கொண்டான்.

 

இதுவரை என்ன பேசினோம், என்ன செய்தோம் எல்லாம் மறந்து, அவன் தீண்டலில் உருகி, அவன் கைகளுக்குள் ஒடுங்கி கரைந்து போனாள் அவள்.

 

தன்னவள் அருகாமை சந்துருவிற்கு எத்தனை சுகம் தந்ததோ அத்தனை அவனின் கடமைகளையும் நினைவுபடுத்தியது.

 

சந்துரு, பௌர்ணமி பற்றி இங்கு யாரும் அறிந்திருக்கவில்லை. ஏன், அவர்கள் இருவரும் தனித்து பௌர்ணமி இரவுகளில் வெளியே சுற்றுவதை கூட ஒருவரும் இதுவரை கவனித்திருக்கவில்லை. 

 

அவர்களை ஆண், பெண்ணாக நினைத்து இருந்தால் அவர்களின் நெருக்கம் மற்றவர் கண்களை கவர்ந்திருக்கும், அங்கிருக்கும் குடும்பத்தார் முதல் வேலையாட்கள் வரைக்கும் சந்துரு நொண்டி, பௌர்ணமி ஊமை அவ்வளவு தான். அதனால் அவர்களின் புரிதலை யாருமே உணரவில்லை.

 

தன் அம்மா கூட கவனிக்கவில்லையே என்று சந்துரு மனம் வருத்தியது. தாய் அறியாத சூல் இல்லை என்பார்கள். தன் மகனின் மாற்றத்தை அவரும் அறியாமல் போனாரே என்று மனம் விட்டு போனது.

 

தங்கள் உறவை யாரிடமும் மறைக்கும் எண்ணமில்லை அவனுக்கு. தங்கள் உறவை உரிமையாக்க வேண்டும் என்ற உறுதிதான் அவனுக்குள். அதற்கான முயற்சிகள் தான் அவன் மேற்கொண்டிருப்பது.

 

சந்துரு அவனின் பொறுப்பையும் கடமையையும் விளக்கிச் சொன்னாலும் அதை விளங்கிக் கொள்ளும் பக்குவம் பௌர்ணமிக்கு இல்லையென்று அவனுக்கு புரிந்து இருந்தது. ஆனால் தங்கள் உறவை இப்படி களவு நிலையில் வைத்திருக்க விரும்பாமல், விரைவில் உரிமையாக அவளை மணந்துக்கொள்ள விரும்பினான்.

 

இதுநாள்வரை இந்த வீட்டில் சுமையாக இருப்பவனின் ஆசையை விருப்பத்தை யார் மதிப்பார்கள்? அவனுக்கான அங்கிகாரம் வேண்டும். தன்னாலும் தொழில் நிர்வாகத்தை வெற்றிகரமாக நடத்த முடியும் என்று அவன் அம்மா, அக்கா, மாமாவிற்கு நிருபித்து, பௌர்ணமி மீது தனக்கான விருப்பத்தை சொல்ல வேண்டும். 

 

முதலில் தயங்கினாலும் தன் பிடிவாதத்தில் மறுக்க முடியாமல் சம்மதித்து விடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது அவனுக்கு. தங்கள் எதிர்காலத்தை மேம்படுத்தும் திட்டங்களை அவன் நம்பிக்கையோடு வகுத்திருக்க, அவனின் எதிர்காலம் என்ற ஒன்றை இல்லாமல் ஆக்கும் திட்டங்கள் வேறுபுறம் வகுக்கப்பட்டு கொண்டிருந்தது.

 

அனைத்தையும் அறிந்து கொள்ளும் திறம் மனிதனுக்கு இல்லையே! அதுவும்  ஓரறையில் முடங்கி, காதலின் வலிமையில் சிறகு விரித்து பறக்க ஆசை கொண்டிருக்கும் இந்த இளநெஞ்சங்களால், இருள் நெஞ்சங்களின் சூழ்ச்சியை எவ்விதம் உணர முடிந்திருக்கும்?

 

நீளாத தங்களின் எதிர்காலத்திற்கு நீளும் கனவுகளை சேகரித்து வைத்தனர் இருவரும்.

 

தன் தோளில் மயங்கி கிடந்தவளின் தலை வருடி நிமிர்த்தியவன், “இங்க பாரு பௌர்ணமி, இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ, அப்புறம் நீயும் நானும் எப்பவும் பிரியாம சேர்ந்து இருக்கலாம்” அவள் நம்பாமல் விழி விரிக்கவும்,

 

“நம்புடி, இப்ப தான் எஸ்டேட் நிர்வாகத்தை கொஞ்ச கொஞ்சமா எடுத்து நடத்துறேன். தொழிலாளிகளுக்கும் என்மேல நம்பிக்கை வந்திருக்கு. சீக்கிரமே அம்மாகிட்ட நம்ம கல்யாணத்தை பத்தி பேசனும்னு இருக்கேன்”

 

அவள் விழிகளும் இதழ்களும் வியப்பில் விரிந்தன. ‘நிஜமாவா?’ இடது உள்ளங்கையில் வலது கையை மடக்கி வைத்து கேட்டாள்.

 

“நிஜமே நிஜம்” என்று மென்னகை விரிய உறுதி கூறியவன், “நாம கல்யாணம் செஞ்சுக்கலாம்” அவள் கழுத்தை சுற்றி மாங்கல்யம் சூட்டவது போல காட்டினான். பௌர்ணமி பூரித்து போனாள்.

 

“நமக்கு பாப்பா பிறக்கும்” என்று கைகளில் குழந்தை இருப்பது போல ஆட்டிக் காட்ட, இவள் வெட்கத்துடன் முகத்தை மூடிக் கொண்டாள். விடாமல் அவள் கைகளை விலக்கியவன், “நீயும் நானும் சேர்ந்து பாப்பாவ நல்லபடியா வளர்க்கனும், அப்புறம் நமக்கு வயசாகிடுமா, அப்பகூட நாம இது மாதிரியே சேர்ந்து சந்தோசமா இருப்போம் சரியா” சந்துரு அவளின் தோளணைத்து கேட்கவும் சந்தோச மிகுதியில் பௌர்ணமி கண்கள் கலங்கிட, மனம் நெகிழ்ந்த நிறைவோடு அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். அந்த நிமிடம் சந்துரு மனமும் நிறைந்து போனது.

 

***

 

“கட் கட்” மித்ராவதியின் குரல் ஒலிக்க, அதே வேகத்தில் அவரும் அமிர்தியிடம் வந்து இருந்தார்.

 

“வாட் ஹேபன்ட் அமிர்தி, ஷுட்டிங்ல இல்லாம உன்னோட மைன்ட்ட எங்க வச்சிருக்க?” மித்ராவதி காட்டமாக கடிந்து கொள்ள, “சாரி மேடம்” என்று சிறுகுரலாய் சொன்னவள், விதார்த்திடம் திரும்பி அவனை காட்டமாக முறைத்து வைத்தாள்.

 

சந்துரு, பௌர்ணமியை அணைக்கும் காட்சியில், நடிப்பினை மீறி விதார்த் கைகள் தன் மேனியில் ஊர, அமிர்தி சகிக்காமல்,”விதார்த் கையெடு, எனக்கு பிடிக்கல” என்று கடிந்து கொண்டிருந்தாள். அதனால் காட்சியிலும் தடங்கல் ஏற்பட்டு இருந்தது.

 

ஆனால் விதார்த் அவளின் முறைப்பை கண்டுகொள்ளாது வேறு விதமாக பேசினான். “வொய் பேபி, அங்க தொட்டா உனக்கு மூட் வருதா?” என்று ஹஸ்கி குரலில் உதடு சுழித்து சிரிக்க, அமிர்திக்கு பற்றி கொண்டு வந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டில் முகம் மாறாமல் முயன்று சமாளிக்க வேண்டியதானது.

 

செவ்வரி உதடுகளை நீட்டி இழுத்து சிரிப்பு பாவனை காட்டியவள், “மறுபடி உன் கை தப்பா பட்டுச்சு, மித்ரா மேம்கிட்ட சொல்லிடுவேன்” பற்களை கடித்தபடி மிரட்டினாள்.

 

“ச்சு ச்சு இன்னும் ஸ்கூல் பேபியாவே இருக்கியே பேபி, மிஸ் மிஸ் இவன் என் கன்னத்த கிள்ளிட்டான்” என்று சிறு குரலாக கேலியில் இறங்கிய விதார்த், “உன்ன டைட்டா ஹக் பண்ண சொன்னதே மித்ரா மேம் தான், அவங்க கிட்ட என்னனு சொல்லுவ, போய் சொல்லு போ போ” விதார்த் மசியாமல் வம்பு வளர்க்கலானான்.

 

பெண்ணாக அமிர்தியின் மனம் துவண்டு போனது. எத்தனை முயன்றும் முடியாமல் கண்களில் நீர் கட்டிக் கொண்டது. 

 

இதனால் மேலும் சில பல டேக்குகள் எடுக்க வேண்டியது வர, மித்ராவதி விதார்திடமும் சரமாரியாக காய்ந்து விட்டிருந்தார். அதில் அவனும் அடங்கி நடிப்பில் கவனம் செலுத்தலானான்.

 

நேற்றுவரை கண்ணியத்தோடு பழகிய விதார்த்தின் இந்த அத்துமீறல் அமிர்தியை அதிகம் சஞ்சலப்படுத்தியது.

அவன் செய்கையை மிகவும் கசப்பாக உணர்ந்தாள். 

 

அவள் மனம் கொதித்திருக்க, படப்பிடிப்பு முடியவும் தனியே ஒதுங்கி நின்று கொண்டாள். அவளருகில் வந்த விதார்த், “ஹேய் சில் பேபி” என்று அவளின் தோள்மீது கைபோட்டு கொள்ள, அவன் கையை விலக்கி தானும் விலகி அவனை கோபமாக முறைத்தாள் அமிர்தி.

 

“இப்ப எதுக்கு இவ்வளோ டென்ஷனாகுற அமிர்தி, நடிப்புக்கு ஹக் பண்ணா, கிஸ் பண்ணா உனக்கு அப்ஜக்ஷன் இல்ல. இப்ப மட்டும் கசக்குதா?”

 

“ச்சீ அசிங்கமா பேசாத விதார்த், நீ கூட தான் செத்து போய் ஆவியா நடிக்கிற, அதேமாதிரி நிஜத்திலயும் செத்து ஆவியா திரிய சம்மதமா உனக்கு” காட்டமாக கேட்க,

 

“நான் ரொமான்ஸ் பத்தி பேசுனா, நீ சாவ பத்தி பேசுற ஷிட்” அவன் சலித்து கொண்டான்.

 

“உன்கூட நடிக்க வந்ததால என்னை உனக்கு நேந்து விட்டுருக்காங்கன்ற நினைப்பா? இங்க நீயும் நடிக்க தான் வந்திருக்க விதார்த் மறந்துடாத” 

 

“ஏதோ கை தவறி பட்டிடுச்சு அதுக்கு என்னமோ மேட்டர முடிச்ச மாதிரி கொதிக்கிற! ஸ்பாட்ல கை அங்கங்க படறதெல்லாம் ரொம்ப சாதாரணம். இதுக்கெல்லாம் தயங்கிறவ இழுத்து போத்திட்டு வீட்டோட கிடக்கனும் என்னையும் பாரு என் அழகையும் பாருனு சினி ஃபீல்ட்க்கு வந்திருக்கக் கூடாது” இருவருக்கும் இடையே வாக்குவாதம் வேகம் பிடித்தது. சின்ன சீண்டலுக்கு அவளின் கோபமும் பேச்சும் இவனையும் கோபப்படுத்தியது. 

 

“மைன்ட் யுவர் வேர்ட்ஸ் விதார்த், பொண்ணு கண்ணியமா வாழனும்னா அவ ஒடுங்கி தான் இருக்கனுமா என்ன?” என்று வேகத்துடன் அவன் கழுத்தை தாக்கினாள்.

 

“ஸ் ஆ ஏய் அமிர்தி வலிக்கிது” அவளின் லாவகமான தாக்குதலில் வலித்த தன் கழுத்தை பிடித்து கொண்டான்.

 

“இதையே தான் நானும் சொல்றேன் விதார்த், என்மேல தப்பா கைப்பட்டா எனக்கும் வலிக்கும்! தவறி கைபடறதுக்கும் தப்பா கைபடறதுக்கும் எனக்கு வித்தியாசம் தெரியும். இனி என்கிட்ட இப்படி சீப்பா பிஹேவ் பண்ண ஷூட்டிங் ஸ்பாட்ல எல்லாருக்கும் முன்ன உன்ன கிழிச்சு தொங்க விட்டுருவேன்” அவள் ஆங்காரமாக மிரட்ட, அவளிடம் இத்தனை தைரியத்தை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. தன் சீண்டலுக்கு கலங்கிய அவளின் முகத்தை பார்த்து அவளை சுலபமாக நினைத்து விட்டிருந்தான்.

 

இப்போது அவளின் தாக்குதலும் மிரட்டலும் இவனை மூர்க்கம் கொள்ள செய்ய, “ஏய் என்னடி விட்டா ரொம்ப துள்ளற, எவ்வளவு திமிர் இருந்தா என் மேலயே கை வைப்ப, நான் உன்மேல கை வைக்கட்டுமா?” தாழ்ந்த குரலில் அவளிடம் சீறினான்.

 

“ரொம்ப சீப்பா பேசுற விதார்த்” அமிர்தி முகம் கசக்கினாள்.

 

“ரொம்ப சீன் போடாத, நடிப்பு சான்ஸ்காக நீயெல்லாம் எந்த லெவலுக்கு இறங்கி போவன்னு எனக்கும் தெரியும்” 

 

“உன் மனசுல, செய்கையில அழுக்க வச்சுகிட்டு என்னை குத்தம் சொல்லி நீ உத்தம வேஷம் போட்டுக்க பாக்காத, உன் கேவலமான புத்திய மறைக்க எவ்வளவு இறங்கி போற ச்சீ”

 

“ரொம்ப பேசற நீ, உன்ன எங்க அடிச்சா என் மடியில வந்து விழுவனு எனக்கு நல்லாவே தெரியும். விழ வைக்கவா” குரூரமாக சொல்லி விதார்த் நகர்ந்துவிட,

 

அவன் பேச்சில் அமிர்தியின் உடலெங்கும் தீயின் தகிப்பு பரவியது. மனம் கொதிக்க, மாறாக கண்கள் கலங்க தன் அறைக்குள் அடைந்து கொண்டாள்.

 

எத்தனை முயன்றும் மனம் ஆறவில்லை அவளுக்கு. தன்னை இத்தனை கேவலமாக விதார்த் பேசியதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

 

“இப்ப எதுக்காக இப்படி முகம் வாடி கிடக்குற அமுமா, அவனை எல்லாம் விட்டு தள்ளு” பாலி அமிர்தியை இயல்புக்கு கொண்டு வர முயல,

 

“இல்ல பாலி, இத்தனை நாள் விதார்தை நல்ல ஃபிரண்டா தான் நினச்சிருந்தேன். ஆனா அவன் என்னை இவ்வளவு சீப்பா நினச்சிட்டு இருந்து இருக்கான். என்னால தாங்க முடியல, ரொம்ப கஷ்டமா இருக்கு” அமிர்தி மனம் தளர்ந்து பேசினாள்.

 

“நீ நினச்ச மாதிரி அவனும் உன்ன நினைக்கனும்னு எந்த சட்டமும் இல்லயே அமுமா. அவன் சாக்கடை புத்தி தான் தெரிஞ்சிக்கிட்டல்ல, இனி ஜாக்கிரதையா இரு அவ்வளோதான். இதுக்கு போய் சும்மா உழப்பிகிட்டு” 

 

“நடிக்க வந்தா பொண்ணுங்க மானத்தோட வாழ முடியாதா பாலி. நடிப்பும் ஒரு தொழில் தானே. இன்னும் சொல்ல போனா அதுவொரு கலை. நடிப்பு மேல இருக்க ஆர்வத்துல இங்க வந்தேன். ஆனா” அவளால் மேலும் சொல்ல முடியாமல் மனம் கசந்தது.

 

“நடிப்பு துறைன்னு மட்டும் இல்ல அமுமா, பொண்ணுங்க எந்த துறையில காலடி எடுத்து வச்சாலும் இதுபோல சீண்டலும் அவமரியாதையும் கடந்து வந்து தான் ஆகனும். நீயும் கடக்க பழகிக்கோ, வெறிநாய பார்த்தா நாம ஒதுங்கி போறோமில்ல அப்படி, இங்க நிறைய இப்படி வெறிபிடிச்ச நாயிங்க இருக்க தான் செய்யுது. நாம தான் சூதானமா நடந்துக்கனும்” படபடவென பேசினாள்.

 

“மனசுல வக்கிரத்த வச்சிட்டு இருக்க இதுபோல இருக்கிறவங்களை எல்லாம் ஒன்னும் செய்ய முடியாதா? நாம ஒதுங்கி போனா மட்டும் போதுமா?” என்ற அமிர்தி மேலும் ஆவேசமாக பேசினாள்.

 

“மனசளவில பொண்ணுங்கள தப்பா நினைச்சா கூட அவனுங்களுக்கு தண்டனை கிடைக்கனும். அப்ப தான் தப்பு செய்ய பயம் வரும்”.

 

“அட போ அமுமா, கொலை செஞ்சவனே சுதந்திரமா சுத்துறான். இதுல மனசுல தப்பா நினச்சா தண்டனை கிடைக்கிறதெல்லாம் ஆகற வேலையா? விட்டு தள்ளு இப்ப தூங்கு” என்ற பாலி, 

 

“நீ எதுக்கும் ஜாக்கிரதையா இரு அமுமா, அந்த விதார்த் கிட்ட இருந்து விலகியே இரு, நானும் உன்கூடவே இருப்பேன், என்னைவிட்டு தனியா எங்கேயும் போகாத சரியா?” அவளின் நெற்றியை அழுத்தபிடித்து விட்டபடி சமாதானம் செய்து தூங்க வைத்தாள்.

 

மனதின் தகிப்புடனே அமிர்தியும் உறங்கி போனாள்.

 

***

அவள் வருவாள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!