அவள் பௌர்ணமி 15

IMG-20200921-WA0010-c2e740d2

அவள் பௌர்ணமி 15

 

இரவு, வழக்கமாய் எடுத்துக்கொள்ளும் அளவை விட இன்று சற்று‌ அதிகமாகவே மதுவை உள்ளிறக்கிக் கொண்டிருந்தான் விதார்த். 

 

அமிர்தியிடம் அடிவாங்கியது அவனை கொதிப்படைய செய்வதாய். தன் உள்ளக் கொதிப்பை மது ஊற்றி அணைக்க முயன்றிருந்தான்.

 

படப்பிடிப்பு வேளையில் முதலில் இவன் கரம் தவறுதாலாக தான் அவள் மேனியில் பட்டிருந்தது. அமிர்தியும் முதலில் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதில் அவனுக்கு தைரியம் வர பெற, தெரிந்தே தெரியாதது போல் மறுமுறையும் அவளை சீண்டலானான்.

 

அமிர்தி ஒன்றும் அத்தனை முட்டாளாக இருக்கவில்லை. தவறுதலாக கூட ஒரு முறை தான் கை படும் என்பதை கூட அறியாமல் இருக்க. மறுபடியும் அவன் அத்துமீறலை உணர்ந்தவள், அவனை நேராகவே முறைத்து தன் கண்டனத்தை வெளிப்படுத்தினாள்.

 

ஆனாலும் அவன் அடங்கவில்லை. அவனின் ஆணென்ற திமிர்தனம் அவனை அவளிடம் கொக்கரிக்க வைத்தது. அதனால் அவளிடம் அடியும் வாங்கிக் கொண்டான். 

 

இப்போதும் அவள் அடித்த தன் கழுத்தை அழுத்தி தேய்த்துக் கொண்டவன் வலியை விட அதிகம் அவமானமாக உணர்ந்தான். அமிர்தி இன்று பேசியவற்றை நினைந்து நினைந்து வெறியேறியவனாய் இன்னும் இன்னும் மது கோப்பைகளை உள் இறக்கினான். 

 

“என்ன திமிர் அவளுக்கு, அசந்த நேரத்தில என்மேல கை வச்சுட்டா ச்சே, அவன் அவன் என்னென்னமோ பண்றான் நான் சும்மா சீண்டினதுக்கு என்னமா எகிறா… எனக்கும் நேரம் வரும் அப்ப கவனிச்சுக்கிறேன்டீ உன்ன” விதார்த் புலம்பலை ஆரம்பிக்க, அறை கதவு தட்டப்பட்டது. 

 

”இந்த நேரத்தில யாரது?” என்று சற்று தள்ளாடியபடி கதவருகே வந்தவன் விதிர்த்து நின்று விட்டான்.

 

சாற்றிய கதவிற்கு முன், அறையின் உட்புறம் அமிர்தி நின்றிருந்தாள். அவளை மேலும் கீழுமாக பார்த்தவன், “ஏய்ய்ய் பூட்டி இருக்க ரூமுக்குள்ள நீ எப்படி வந்த?” விதார்த் சற்று அதிர்வாகவே கேட்க, அவள் நிர்சலனமாக அவனை வெறித்தபடி நின்றிருந்தாள்.

 

“ஓ நான் டோர் லாக் பண்ண மறந்துட்டேனா!” என்று தனக்கு தானே தெளிவற்று யோசித்து தன் நெற்றி பொட்டை வலது கையால் குத்திக் கொண்டவன், “அப்ப்ப்ப கூட ஒரு பேச்சுலர் ரூமுக்குள்ள நீ எப்டி வரலாம்? நான் உன் ரூமுக்குள்ள இப்டி நுழைஞ்சா, நீ சும்மா இருப்பியா ம்ம்?”

 

அதற்கும் அவள் அமைதியாகவே நிற்க, “நான் உன்ன சும்மா சீண்டினேன்னு அந்த பேச்சு பேசனல்ல, இப்ப ஏன் வாய மூடிட்டு நிக்கிற, பேசு, பேசுடீ” அவன் குழறலாக குரலுயர்த்த, அமிர்தியின் பார்வை அந்த அறையை ஒருமுறை சுற்றி வந்து இவனிடம் நின்றது. 

 

“புரிஞ்சு போச்சு, அப்ப என்னை அடிச்சதுக்கு இப்ப சாரி கேக்க வந்திருக்க அதான? ம்ம் சீக்கிரம் சாரி கேட்டு கிளம்பு” அவன் தோரணையாக சொல்லியும் இவள் அசைவதாக இல்லை.

 

எதிரில் நின்றிருப்பவளிடம் ஏதோ வித்தியாசமாக தெரிய, தன் கண்களை விரித்து அவளை சற்று உற்று நோக்கினான். இரவு உடையில், தூக்கி கட்டியும் பாதி வழிந்த கூத்தலோடு, அந்த அறையின் மங்கலான வெளிச்சத்திலும் மஞ்சள் முகம் பளபளக்க தெரிந்தாள்.

 

தலையை உலுக்கிக் கொண்டவன், “நடு ராத்திரில மோகினி பிசாசு மாதிரி வந்து நிக்கிற! இங்க பாரு நான் இப்ப நிதானத்தில இல்ல, நீ வேற அழகா இருந்து தொலைக்கிற, நான் அவ்ளோ நல்லவனெல்லாம் இல்ல, அதான் சொல்றேன் போயிடு” என்று நல்ல பிள்ளையாக விரட்டினான்.

 

அவளின் பார்வை அசையாமல் அவன் மீது ஆழ பதிந்திருந்தது.

 

“அய்யோ பேசாம பார்த்தே கொல்றாளே!” என்று தலைக்கேசத்தை விரல்களால் அழுத்திக் கோதிக் கொண்டவன், “இப்ப என்ன தான் வேணும் உனக்கு? முதல்லயே உன்மேல செம காண்டுல இருக்கேன். ரொம்ப நேரம் பேசிட்டு இருக்க மாட்டேன். உருப்படியா கிளம்பு” அவன் சலித்து சொல்லியும் அவள் அகலாமல் இருக்க, 

 

“சும்மா பளபளன்னு இப்படி கண்ணு முன்னாடி நின்னா…” முடிக்காமல் தன் பார்வையை அவள் உடலில் மேய விட்டான். அதற்கும் அவள் அமைதியாக நிற்க, “டேய் பொண்ணு அவளே தனியே உன்னதேடி வந்திருக்கானா உனக்கு எங்கேயோ மச்சம் இருக்குடா” என்று காலரை தூக்கி விட்டு சத்தமாக சிலாகித்து குதூகலமாக சொன்னவன், 

 

“வாடி செல்லம் வா வா… இனி உன்ன போ சொல்லுவேனா கமான் பேபே” என்று அவளை நெருங்கி அவள் தோள்பற்றி அணைக்க முயன்றவன் கைகள் தீயை பிடித்தது போல சுட்டெரிக்க, “ஆஆ…” கைகளை உதறி விரித்து பார்க்க, உள்ளங்கை தோல் வெந்து தகிக்க, மிரண்டு எரிச்சல் மிகுதியில் வலியில் கத்தி கதறி விட்டான். 

 

“ஆ… ஆ… ஆ… அய்யோ அமிர்தி” 

 

கத்தியபடி அச்சத்தோடு விதார்த் நிமிர்ந்து பார்க்க, அவளின் தேகம் மெல்ல மெல்ல செந்தனலாய் சிவப்பேறி தகித்து அனல் கக்கும் நெருப்பு குழம்பாக வழிந்து உரு திரிந்து அவனை நெருங்கியது அவள் நெருப்பு உருவம்!

 

இவன் பயத்தில் உடல் நடுங்க பதறி மிரண்டு ஓடினான். அவள் உருவம் அவனை தொடர்ந்து வந்தது!. 

 

“ஹெல்ப்… ஹெல்ப்ப்ப்… யாராவது வாங்க” கத்தி கதறி உதவி கேட்டு விதார்த் அந்த அறைக்குள்ளேயே சுற்றி சுற்றி மிரண்டோடி களைத்து போய் கீழே விழுந்து விட்டான்.

 

அவள் நெருப்புருவம் அவனை நெருங்கியது. இவன் பயந்து, “நோ நோ அமிர்தி, என்னை விட்டுடு, நான் தான் தப்பு. இனி யார்கிட்டேயும் தப்பா பிஹேவ் பண்ண மாட்டேன் மன்னிச்சு விட்டுடு” அலறி சுவரோடு ஒண்டிக் கொண்டான். 

 

அவள், அவனை நோக்கி குனிந்து, தன் நெருப்பு வழிந்த கரத்தை நீட்டி அவன் கழுத்தை நெறித்தாள். அவள் விரல் பட்ட கழுத்து பகுதி தோல் வெந்து எரிந்து பொசுங்க, அவன் உச்சக்கட்ட வலியில் மிரட்சியில் அலறி மூச்சு காற்று தடைபட துடிதுடித்து போனான்.

 

இருகைகளால் தன் கழுத்தை பிடித்தபடி அலறி கத்தி கதறி தரையில் உருண்டு  கிடந்தவன் சற்று நேரத்திற்கு பிறகே தெளிந்து கண்விழித்து பார்த்தான். அவனால் இப்போது வலியை உணர முடியவில்லை. சுற்றும் முற்றும் மிரண்டு பார்க்க, இவனை தவிர அந்த அறையில் யாரும் இருக்கவில்லை.

 

கதவு உட்புற தாள் போட்டபடியே இருந்தது. அவன் குடித்து வைத்திருந்த பாதி மது கோப்பையும் அப்படியே தான் இருந்தது. தைரித்தை வரவழைத்துக்கொண்டு விழுந்து கிடந்த தரையில் இருந்து எழுந்தவன் மின் விளக்குகளை எரிய விட்டான். அறைக்குள் வெளிச்சம் பரவிட, இவனுக்குள்ளும் சற்று தைரியம் மீண்டது.

 

‘அட ச்சே இதெல்லாம் கனவு தானா?’ என்று கை கால்களை உதறி திரும்பியவன் பிம்பம் எதிரில் இருந்த கண்ணாடியில் விழ, அதை பார்த்து மிரண்டு போனான். 

 

அவசரமாய் தன் கழுத்தை ஆராய்ந்திட, நெறிக்கப்பட்ட விரல் தடம் இன்னும் அவன் கழுத்தில் ஒட்டி இருந்தது! 

 

உச்சக்கட்ட அதிர்ச்சி தாளாமல், “ஆ…” என்று கத்தியவன் நினைவிழந்து விழுந்து விட்டான்.

 

***

 

மறுநாள் காலையில் அமிர்தி, விதார்த் பார்வையில் பட, அரண்டு நடுங்கி அடங்கி நின்று கொண்டான் விதார்த். அமிர்தி அவனை கண்டு கொள்ளாது அங்கே வந்து நின்றாள்.

 

விக்னேஷ், “விதார்த் டூடே ஷூட்டிங் ஃபுல்லா வெளியே தான், சீக்கிரம் கிளம்பனும்” என்றவன், “அமிர்தி இப்ப சந்துரு பார்ட் மட்டும் தான் எடுக்க போறோம். சோ உனக்கு ரெஸ்ட்” என்று இன்றைய அவர்கள் செய்யவேண்டியது பற்றி சொல்லிவிட்டு நகர்ந்து விட்டான்.

 

விதார்த்திற்கு அப்பாடா என்றிருந்தது. எப்படியும் இன்று அமிர்தியுடன் நடிக்க வேண்டியதில்லை என்ற நிம்மதி அவனுள். 

 

தனியே வந்து தன் கழுத்தை ஆராய்ந்து பார்த்தான். மறுபடி நிம்மதி. அவன் கழுத்தில் பதிந்து இருந்த விரல் தடம் இப்போது மறைந்து இருந்தது!

 

“என்ன பாஸ், ரெடி ஆகலாமா?” அவன் உதவியாளன் தீபக் அழைக்க, தலையசைத்து அவனோடு நடந்தான்.

 

தீபக் அவனை தயார்படுத்த, விதார்த் இரவு தனக்கு நேர்ந்ததை அவனிடம் கிலியோடு சொல்லி முடிக்க, இப்போது தீபக்கிற்கும் கிலி பிடித்துக் கொண்டது.

 

“அப்படீன்னா, அமிர்தி பேயா பாஸ்?” தீபக் அரண்டு கேட்க,

 

“ஏய் சத்தம் போடாதடா, மெதுவா பேசு, யார் காதுலயாவது விழுந்து தொலைக்க போகுது” விதார்த் எச்சரித்தான்.

 

“ஐயோ பாஸ், இதை உடனே டைரக்டர் கிட்ட சொல்லியாகனும், நீங்க என்ன யாருக்கும் தெரிய கூடாதுன்னு சொல்றீங்க” தீபக் மேலும் பதற,

 

“டேய்… இதை யார்கிட்டேயும் உளறி வைக்காத… இந்த விசயம் மட்டும் டைரக்டருக்கு தெரிஞ்சா மொத்தமா ஷூட்டிங் நின்னு போயிடும்… அமிர்தியாலயும் தொடர்ந்து நடிக்க முடியாது… படத்தை மொத்தமா கிளோஷ் பண்ணிடுவாங்க, நான் இத்தனை நாள் கொடுத்த எஃபெக்ட் எல்லாமே வீணா போயிடும், என் கனவு மொத்தமா சிதைஞ்சு போயிடும்” விதார்த் பதட்டமும் படபடப்பாகவும் சொல்ல,

 

“அதுக்காக பேய் கூட நடிக்க போறீங்களா பாஸ்?” அவன் பதறி கேட்டான்.

 

“என்னோட கனவு ஜெயிக்கனும்னா நான் எதுக்கும் தயாரா இருக்கேன், பேய் கூட நடிக்கவும்!” விதார்த் தீவிர உறுதியோடு சொன்னான்.

 

தீபக் வாய்பிளந்து நின்றான்.

 

***

 

நிழல் காதலன் – பிளாஷ்பேக் காட்சி

 

மாலை வழக்கம் போல எஸ்டேட்டில் இருந்து திரும்பி கொண்டிருந்தது அந்த அம்பாஸிடர் கார். மலை பகுதிகளில் மேடு பள்ளங்களில் அசைந்து ஆடி ஊர்ந்து வந்தது.

 

பாதையை கவனித்த சந்துரு, “டிரைவர், ஏன் வேற ரூட்ல போறீங்க, தினமும் நாம வர ரூட் இதில்லையே” சந்தேகமாக கேட்க,

 

“அது வந்துங்க எசமான், அந்த பாதையில மரம் முறிஞ்சி கிடக்கு. அந்த பக்கம் போக முடியாது” ஓட்டுனர் காரணம் சொல்ல,

 

“காலையில வரும்போது நல்லா தானே இருந்தது?” அவன் கேள்வி சந்தேகமாக வந்தது.

 

“நாம வந்ததுக்கு அப்புறம் விழுந்து இருக்கும் போல எசமான்” என்றவன் கைகளில் இப்போது கார் வேகம் பிடித்தது.

 

ஏதோ சரியில்லை என்று சந்துருவின் உள்ளுணர்வு எச்சரிக்க, சுற்றும் முற்றும் பாதையை ஊன்றி கவனித்தான். இதுவரை அவன் வராத பாதையாக இருந்தது.

 

சட்டென கார் நின்றுவிட, “என்னாச்சு டிரைவர்?” சந்துருவின் கேள்வியில் பதற்றமும் தொற்றி வர, “இதோ என்னானு பாக்கிறேன் எசமான்” என்று இறங்கிக் கொண்டான்.

 

தானும் காரை விட்டு இறங்கினால் நன்றாயிருக்கும் என்று தோன்ற, கார் கதவை திறக்க முயன்றான். திறக்க முடியவில்லை.

 

“டிரைவர், டோர் ஓபன் பண்ணுபா” சந்துருவின் உத்தரவிற்கு பதில் கிடைக்கவில்லை.

 

“டிரைவர்… எங்கயா போன?” இவன் சத்தமிட்டும் பலனில்லை. மூடி இருந்த கண்ணாடியை இறக்க முயன்றான் முடியவில்லை. ஏதோ தவறென்று அறிவு அடித்து சொன்னது. முழு பலம் கொண்டு கதவை முட்டி திறக்க முயன்றான்.

 

“இப்ப எதுக்கு அந்த கதவ உடைக்கிற? வீண் முயற்சி” என்ற ஏளன குரலில் திரும்ப, அங்கே பைரவநாத் நின்றிருந்தார். முன்பக்கம் சற்றே இறங்கி இருந்த கண்ணாடி வழி குனிந்து இவனை பார்த்தார்.

 

“மாமா?” சந்துருவின் யோசனைகள் ஒற்றை வார்த்தையில் தேங்கி நின்றன.

 

“உன் மாமனே தான் மச்சான். இப்ப தான் என்னை அடையாளம் தெரியுதா? உன் நொண்டி காலை வச்சுட்டு எப்பவும் போல அறைக்குள்ள முடங்கி கிடக்கறதை விட்டு உனக்கெதுக்கடா தேவையில்லாத வேல?”

 

“வார்த்தைய அளந்து பேசுங்க, இப்ப எதுக்காக என்னை இங்க கொண்டு வந்திருக்கீங்க?”

 

“ஆங் உன்ன மொத்தமா பரலோகம் அனுப்பறத்துக்கு”

 

சந்துரு முகத்தில் அதிர்ச்சியும் ஆத்திரமும் ஒன்றாய் போட்டியிட்டது.

 

“தப்பு செய்றீங்க மாமா, என்னை கொலை பண்ற அளவுக்கா கீழ இறங்கிட்டீங்க நீங்க?”

 

“ஏதோ மச்சான்ற பேருக்கு வீட்டுல ஓரமா விட்டு வச்சு சோறு போடலாம்னு நினச்சிருந்தேன். ஆனா நீ என்னவோ உரிமை, கடமைன்னு என்னையே ஓரங்கட்ட பார்த்தா சும்மா இருப்பேன்னு நினச்சிட்டியா?” அவர் முகம் குரோதமாக இருண்டது.

 

சந்துருவின் தீர்க்க பார்வை அசையாமல் அவரிடமே படிந்திருந்தது.

 

கொலைக்கும் அஞ்சாத பாதகரை கண்முன்னே கண்டு கொண்டிருந்தான் அவன். தன் கால் மட்டும் ஊனமில்லாமல் இருந்தால்…! சந்துரு தன் வளர்ச்சியற்ற காலை அசூசையாக பார்த்துவிட்டு நிமிர்ந்தான்.

 

எப்படியும் தப்பித்தாக வேண்டும் என்ற வேகம் அவனுள் எழ, ஒற்றைகாலூன்றி எழுந்து முன்பக்க கதவை திறக்க முயல, அந்த கார் அசைந்து நகர்ந்தது. காரின் பின்புறமிருந்து ஆட்கள் அதை தள்ளி கொண்டிருந்தனர்.

 

“இனி நீ தப்பிக்க முடியாது மச்சான்” கோணல் சிரிப்போடு பைரவநாத் தள்ளி நின்று விட்டார்.

 

சந்துரு முன்பக்கம் பார்க்க, அவன் கண்முன்னே அதலபாதாளம் ஆழம் காட்டியது. இறுதிகட்ட உயிர் பயத்தில் அவன் முகம் வெளிரி போனது.

 

இனி தன்னால் தப்பிக்க முடியாது என்ற இயலாமை அவனை சுடுவதாய். தன் முடிவு இதுவே தானா! அவன் உள்ளம் கொதித்தது. நேராய் அமர்ந்து கை முஷ்டிகளையும் கண்களையும் இறுக மூடிக் கொண்டான். 

 

அவன் அறிவு, ஆதியில் தொடங்கி அந்தத்தின் முடிவில் அடங்கி போனது!

 

அவன் மனம், பெற்றவளையும் உற்றவளையும் எண்ணி படபடக்க, பௌர்ணமியின் வெள்ளந்தி சிரிப்பும் நேச பார்வையும் இமை நிழலில் விரிவதாய். 

 

காரோடு சேர்ந்து அவனும் பள்ளதாக்கில் வீழ்ந்து கொண்டிருந்தான். 

 

சந்துருவின் இமையோரம் ஈரம் கசிந்தொழுக, “பௌர்ணமி…” இறுதி மூச்சில் அவள் பெயரை அவனிதழ்கள் முணுமுணுத்தன. கலக்கமாய். காதலாய். இயலாமையாய்.

 

பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய காரோடு அவனுடலும் சிதைந்து அழிந்து போக, அவன் ஆன்மா காற்றோடு மேலெழுந்து வந்தது!

 

***

அவள் வருவாள்…