அவள் பௌர்ணமி 16

IMG-20200921-WA0010-fa129b09

அவள் பௌர்ணமி 16

 

“சந்திரகாந்த், வீட்டு மாடியில இருந்து விழுந்து தான இறந்து போனாரு! சந்துரு காரோட மலையிலிருந்து தள்ளிவிட்ட மாதிரி சீன் எடுத்து இருக்கீங்களே மேடம்? எனி ரீசன்” ஒளிப்பதிவாளர் முகிலன் வழக்கம் போல வினவ,

 

“திரைக்கதையோட சுவாரஸ்யத்துக்காக தான் இப்படி மாத்தி எடுத்தேன் முகிலன் சார், படத்துல மாடியில இருந்து விழுந்து ஹீரோ இறந்து போனதா காட்டினா நிச்சயமா ரசிகர்கள் ஏத்துக்கவே மாட்டாங்களே” மித்ராவதி சொல்லி புன்னகைக்க, 

 

“ஹாஹா கரைக்ட் தான் மேடம் பண்ணென்டாவது மாடியில இருந்து ஹீரோ விழுந்தா கூட, அஞ்சாவது மாடியில எதையாவது பிடிச்சு தொங்கி மேல வரனும், இல்லனா கீழ வைக்கோள் வண்டியில விழுந்து உயிர் தப்பிக்கனும் அப்பதான் அவனை ஹீரோனே ஒத்துக்குவாங்க நம்மாளுங்க” என்று சொல்லி அவரும் சத்தமாக சிரித்தார். உடனிருந்த மற்றவர்களும் சேர்ந்து சிரித்தனர்.

 

“ஓகே கைஸ் லிசன்” என்று அனைவரின் கவனத்தையும் முடுக்கிய மித்ராவதி, “இதோட ஃபிளாஷ்பேக் ஸீன்ஸ் மொத்தம் முடிஞ்சது. அடுத்து சந்துருவோட ஆவி அவங்க மாமாவ பழி வாங்கற சீன்ஸ் எடுக்கனும். அப்புறம் கிளைமேக்ஸ் தான்” என்றார்.

 

“இன்னும் எத்தனை நாள்ல முடியும் மேடம்?” விதார்த் தான் கேட்டான்.  எப்படியும் விரைவில் படப்பிடிப்பு முடிந்து இங்கிருந்து முழுதாக சென்றால் போதும் என்ற மனநிலை அவனுக்கு.

 

“டூ ஆர் திரீ டேஸ்ல கிளம்பிடலாம் விதார்த்” என்று பதில் தந்தவர், நாளை எடுக்க போகும் காட்சிகளை விவரித்து, வசனங்களையும் லாவகங்களையும் அலசி முடிக்க, இரவு ஏறி இருந்தது.

 

மற்றவர்கள் கலைந்து சென்று அவரவர்கள் அறைக்குள் முடங்கி விட்ட பிறகும், மித்ராவதி ஓய்வையும் மறந்து குழப்பத்தில் ஆழ்ந்திருந்தார். 

 

‘இன்னும் இரண்டு மூன்று நாட்களில் இங்கிருந்து கிளம்பி ஆக வேண்டும்! அதற்குள் பௌர்ணமியின் ஆத்மாவை தன்னால் விடுவிக்க இயலுமா?!’

 

‘தனக்கு வந்த கனவு நிஜமே நிஜமா? இல்லை தன் பிரம்மையின் உச்சமா? உண்மையாகவே இங்கே பௌர்ணமி ஆத்மா அடைப்பட்டு இருக்கிறதா?’ அவருள் கேள்விகள் குடைய, அவரின் பகுத்தறிவு நம்ப மறுக்க, அவரின் மனதில் குழப்பங்கள் சூழ்ந்தன.

 

மித்ராவதிக்கு உறக்கம் பிடிப்பதாக இல்லை. வேறு மனநிலையாக இருந்து இருந்தால் அவர் மிகவும் உற்சாகமாக உணர்ந்திருப்பார். அவரின் படப்பிடிப்பு காட்சிகள் வெகு கச்சிதமாக அமைந்திருந்தன. படக்குழுவினர் அனைவருக்குமே காட்சி அமைப்பில் பெரும் திருப்தி. இன்னும் சில முக்கிய காட்சிகள், பாடல்கள் எடுத்து முடித்தால் இவரின் கற்பனைக்கு வடிவம் கிடைத்துவிடும். ஆனால் அவர் மனம் அதில் மட்டும் நிறைவதாக இல்லை. பௌர்ணமி பற்றிய எண்ணங்கள் அவர் மனதை ஓயாமல் அரித்தப்படி திணறடித்தது. 

 

இதெல்லாம் அவரின் அறிவுக்கு தேவையற்றதாக தோன்ற தான் செய்கிறது. ஆனாலும் மனம் தான் அடங்க மறுத்தது. தனக்குள்ளே இருநிலையாக போரிட்டு கொண்டிருந்தார் அவர்.

 

புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வருவதாக இல்லை. எழுந்து அறைக்கு வெளியே வந்தார். அறையின் வெளியே தரையில் போர்வையிட்டு உறக்கிக் கொண்டிருந்தான் விக்னேஷ். தன் பயத்திற்காகவே அவன் இங்கே படுத்திருக்கிறான் என்பது அவருக்கு புரிய, மனம் நெகிழ்ந்து அவனை பார்த்தபடி முன்னே நடந்தார். 

 

ஏனோ அறைக்குள் அடைத்து வைத்ததை போன்ற கசகச உணர்வு. காலாற சற்று நடந்தால் ஆசுவாசமாக இருக்கும் என்று எண்ணம் தோன்றவே படிகளில் இறங்கி கூடத்திற்கு வந்தார். 

 

ஏதோ வித்தியாசமாக பட்டது! என்னவென்று புரிந்து கொள்ள இயலவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தவருக்கு தாமதமாக புரிந்தது.

 

இரவில் ஊழியர்கள் கூடத்தில் அங்கங்கே படுத்து உறங்கி கிடப்பார்கள். ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக யாரையும் அங்கு காணவில்லை. ஒருவரை கூட! 

 

அத்தனை பரந்த கூடம் வெறிச்சோடி கிடந்தது. ‘சொல்லாமல் கொள்ளாமல் அதுவும் இந்த இரவு குளிரில் அனைவரும் எங்கே போய் விட்டனர்?’ இவரின் எண்ணம் ஓடும் போதே, அதுவரை இதமாய் வீசிய காற்றின் வேகம் அதிகரிக்க, சன்னல் கதவு திரைச்சீலைகள் எல்லாம் வேககாற்றில் வேகமாக பரபரத்தன.

 

எவ்வளவு தான் தன்னை, திடப்படுத்தி கொள்ள முயன்றாலும், பதற்றத்தில் மித்ராவதியின் உடல் நடுக்கமானது. ‘தன்னால் தனியே எதிர்கொள்ள முடியாது, விக்கியை துணைக்கு அழைத்து வரலாம்’ என்ற எண்ணத்தில் திரும்ப, அவரை விட்டு அந்த பங்களா மட்டும் பம்பரம் போல சுற்றலானது. 

 

இவர் மிரண்டு தலை கிறுகிறுக்க, இரு கைகளால் தன் காதுகளை பொத்தி, கண்களையும் இறுக மூடிக்கொண்டார். 

 

‘பிளீஸ் என்னை பயமுறுத்தாத… உனக்கு நான் உதவி செய்ய தான் நினைக்கிறேன்… என்னை பயமுறுத்தாத… ப்ளீஸ் பௌர்ணமி’ பய மூச்சுகள் வாங்கியபடியே மனதுக்குள் அரற்றி நின்றார்.

 

சற்று நேரம் பொறுத்து ஏதும் மாற்றம் ஏற்படாது போக, பயம் விலகாமலேயே மெல்ல கண்களை திறந்தார். சுற்றுவது நின்றிருந்தது. ஆசுவாச மூச்செறிந்து தன்னை சமன்படுத்தி கொள்ள‌ முயன்றார்.

 

சட்டென அந்த கூடத்தின் இருள்வெளியைக் கிழித்துக்கொண்டு வெளிச்சம் வீச, இவரின் கண்கள் கூசி பின் நேரானது. இப்போது அங்கே சலசலப்புகள் தென்படலாயின. மித்ராவதி நிதானித்து சுற்றி கவனிக்க, அதிர்ச்சியில் இரு கைகளால் வாய் பொத்தி நின்று விட்டார்.

 

அந்த கூடத்தில் அவரின் கண் முன்னால் பார்ப்பது அவரையே தான்!

 

தன்னையே தன் கண்ணால் எதிரில் பார்த்த வியப்பு! இதுவும் கனவோ என்று தன் கையை அவசரமாக கிள்ளி பார்த்தார். வலித்தது. 

 

இந்த பங்களாவிற்கு வந்த முதல் நாள் படப்பிடிப்பிற்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்த வேளை, இதோ இப்போது அவர் முன் நேரடியாக காட்சியானது.

அங்கே பலர் சுற்றி திரிந்தபடி படப்பிடிப்பிற்கான வேலையில் ஈடுபட்டிருந்தனர். கேமராமேன் முகிலன் மித்ராவதியிடம் வந்து ஏதோ கேட்பது இவருக்கும் கேட்டது. 

 

தானிருந்த இடத்தை விட்டு அசைய கூட முடியாமல் சில நாட்கள் முன் தான் கடந்த நிகழ்வை, இப்போது தன் கண் கொண்டு பார்த்தபடி நின்றிருந்தார் மித்ராவதி.

 

கூடத்து சுவற்றில் மாட்டப்பட்டு இருந்த சில கருப்பு வெள்ளை புகைப்படங்களை பார்த்து நின்ற மித்ராவதியிடம், “ஓ இதெல்லாம் இந்த பங்களாவில தங்கி இருந்தவங்களோட ஃபோட்டோஸா” என்று கேட்டபடி வந்து நின்ற முகிலன் அவற்றை சுவாரஸ்யமாக கவனித்தார்.

 

“ஆமா முகிலன், பரவால்ல இந்த போட்டோஸ் அவ்வளவு டேமேஜ் ஆகல” மித்ராவதி உற்சாகமாக பதில் தர,

 

“ம்ம் எல்லாமே பிளாக் அன்ட் வொயிட் போட்டோஸ், இந்த போட்டோஸ்ல நம்ம ஹீரோ சந்துரு இல்லையா?” அவர் ஆவலாக கேட்க,

 

“ப்ச் இல்ல, பட் சந்துரு பேரன்ட்ஸ் இருக்காங்க, அதோ அந்த ஃபேமிலி போட்டோல சென்டர்ல முறுக்கு மீசையோட உக்கார்ந்து இருக்கறவர் தான் சந்திரகாந்தோட அப்பா, அவர் பக்கத்தில நிக்கிறது அவனோட அம்மா, இது அவனோட அக்கா, உயரமா நிக்கறவர் தான் அக்கா புருசன் பைரவநாத், இதோ இந்த சின்ன பையன் பைரவநாத்தோட பையன்னு நினைக்கிறேன்” மித்ராவதி ஆர்வமாக சுட்டி சொல்ல,

 

“ஓகே உண்மையான பைரவநாத்க்கு எத்தனை பசங்க?” முகிலன் தனக்கு தோன்றிய சந்தேகத்தை கேட்டார்.

 

“ஒரே பையன் மட்டும் தான். இந்த குடும்பத்தில மிச்சமாகி இருக்கிறதும் அவர் மட்டும் தான். இங்க ஷூட்டிங் எடுக்க பர்மிஷன் கேட்டப்போ முதல்ல மறுத்தாரு, அமௌன்ட் கூட சொல்லி பேசி தான் சம்மதம் வாங்க வேண்டியதா போச்சு” மித்ராவதி விளக்க,

 

“ஆமால்ல இப்ப பைரவநாத் பையனுக்கு வயசாகிட்டு இருக்கும், ஸ்டோரி ஸ்கிரீன்பிளேல அந்த பையன் கேரக்டர நீங்க வைக்கல ரைட், ஏன் அவாய்ட் பண்ணீங்க மேம்? எனி ரீசன்?”

 

ஆமோதிப்பாக தலையசைத்தவர், “ஹாரர் பிலீம்ல உயிரோட இருக்கிற ஒரு கேரக்டரை இன்வால்வ் பண்ண வேணாம்னு தோனுச்சு அதான். ம்ம்…  ஹீஸ் நேம் இஸ் மிஸ்டர் சுரேந்தர்நாத்!” 

 

மித்ராவதி சொல்லவும் அந்த காட்சி அப்படியே உறைந்து நின்றது!

 

அங்கிருந்த கருப்பு வெள்ளை புகைப்படத்தில் அந்த சிறுவன் சுரேந்தர்நாத் படம் மட்டும் மெல்ல நிறம் மாறி தெரியலானது!

 

இதுவரை எதுவும் விளங்காமல் தனது சம்பாஷனையை தானே கேட்டு நின்ற மித்ராவதியின் பார்வை இருள, அங்கேயே நினைவிழந்து தரையில் விழுந்தார்.

 

***

 

முகத்தில் சில்லென்று தண்ணீர் பட, மித்ராவதி நினைவு திரும்பி பதறி எழுந்து அமர்ந்தார்.

 

அவரின் எதிரே விக்னேஷ் மட்டும் இருந்தான். அவரின் பார்வை அங்கே சுற்றி வர, இன்னும் விடிந்திருக்கவில்லை. அந்த ஹாலில் வழக்கம் போல படுத்து இருந்தவர்கள் இப்போதும் உருண்டபடி கிடந்தனர். சற்றுமுன் இவர்கள் யாரும் தனக்கு தெரியவில்லையே என்று மிரட்சியாக எண்ணியவர், “என்னாச்சு விக்கி?” என்று சோர்வாக வினவினார்.

 

“எனக்கு விழிப்பு வந்து பார்க்கும் போது, உங்க ரூம் கதவு‌ திறந்தே இருந்தது, உள்ள நீங்களும் இல்ல. கீழே தேடி வந்தேன். நீங்க மயங்கி கிடந்தீங்க மேடம்” அவன் படபடவென ஒப்புவித்தான்.

 

ஆமோதித்து தலையசைத்த மித்ராவதியின் உடல் மொத்தமும் வியர்வையில் நனைந்திருந்தது. “மேம் உங்களுக்கு பிபி லெவல் இன்கிரீஸ் ஆகிடுச்சு போல, உடனே டாக்டர்கிட்ட போகலாம்” அவன் பதற, “இல்ல விக்கி, ரூம்ல பிபி டேப்லெட் இருக்கு, எடுத்துக்கிட்டா கன்ட்ரோல் ஆகிடும்” என்று மெதுவாக எழுந்து கொண்டார்.

 

அவரை அறைக்கு அழைத்து வந்தவன் மாத்திரை எடுத்து கொடுக்க, அதை சாப்பிட்டு சற்று நேரம் கண்கள் மூடி சாய்ந்து அமர்ந்து இருந்தார். அவரின் படபடப்பு மெல்ல மெல்ல குறையலானது. 

 

விக்னேஷ் எதைப்பற்றியும் கேட்டு தொந்தரவு செய்யாமல் அமைதியாக எதிரில் அமர்ந்து இருந்தான். இன்றும் ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்பதை அவனால் உணர முடிந்தது. அவர் உடல்நிலை தேறுவது முக்கியம் என்று பேச்செடுக்காமல் இருந்தான்.

 

சற்று நேரம் பொறுத்து, தனக்கு நேர்ந்ததை மித்ராவதி சொல்ல, அதை கவனமாக கேட்டிருந்த விக்னேஷ், “நீங்க சொல்லறத பார்த்தா அந்த சுரேந்தர்நாத் பத்தி ஏதோ சொல்ல வர மாதிரி தோனுது மேடம்” என்றான் யோசனையாக.

 

“எனக்கும் அதான் தோனுது விக்கி, அதுவும் இன்னைக்கு வந்தது கனவு இல்ல, என் சுயநினைவோட நான் நேரா என்னையே பார்த்தேன்! அதான் என்னால தாக்கு பிடிக்க முடியல” என்று அந்நிகழ்வின் தாக்கத்தில் இப்போதும் மேல் மூச்சு வாங்கினார்.

 

“ரிலாக்ஸ் மேடம், இப்படி தினம் தினம் உங்கள வருத்திக்கிறதால நமக்கு எதுவும் தெரிய போறதில்ல, நேரடியா ஆவி கூட பேசறவங்கள கூட்டிட்டு வந்து பேசினா என்ன?” என்று யோசனை சொல்ல,

 

“ஊர்ல முக்காவாசி பேரு ஆவி கிட்ட பேசுறதா சொல்லி பணம் பறிக்கிறவங்க தான். இதுல யாரைனு நம்பி நாம கூப்பிடறது?” மித்ரா நம்பிக்கை இன்றி மறுத்தார்.

 

“அதைப்பத்தி நீங்க கவலைபடாதீங்க மேடம் நான் விசாரிச்சு அழைச்சிட்டு வரேன் அது என் பொறுப்பு” அவன் உறுதி கூற, இவரும் ஆமோதித்து தலையசைத்தார்.

 

***

 

அவள் வருவாள்…