அவள் பௌர்ணமி 17

IMG-20200921-WA0010-c5834d62

 

அவள் பௌர்ணமி 17

 

நிழல் காதலன் – முன் காட்சி தொடர்ச்சி

 

பாதி கருகி இருந்த சந்துருவின் நிழற்படத்தை பார்த்து பார்த்து கண்ணீர் விட்டிருந்தாள் பௌர்ணமி.

 

நெருப்பிலிட்ட நிழற்பட சட்டத்தை கையில் எடுத்து அணைத்து கொண்டதால் அவளின் கைகளில் அங்கங்கே சுடுகாயம் ஏற்பட்டிருக்க, அவளை வேதனையோடு பார்த்திருந்தது சந்துரு ஆத்மா.

 

“என் உடம்பே மிச்சமில்லாம சிதைஞ்சு அழிஞ்சு போச்சு. போயும் போயும் இந்த ஃபோட்டோ எரிஞ்சதுக்கா நீ இப்படி காயப்பட்டு இருக்க” என்று சலித்து கொண்டான்.

 

அவள் தேம்பல் மட்டுமே பதிலாக தந்தாள். அவன் கட்டிலில் அவள் தோய்ந்து படுத்திருந்தாள். எழ முயன்றும் அவளால் முடியவில்லை. அவள் உடலின் ஒவ்வொரு செல்லிலும் வலி தெறித்தது.

 

அவளின் வேதனையை இவனும் வேதனையாக பார்த்து இருந்தான். அவளின் இந்த வலிக்கு தான் தான் காரணம் என்பதையும் நன்கு அறிவான்.

 

அவளின் உடலுக்குள் இவன் ஆத்மா புகுந்து வெளிவந்த ஆக்ரோஷத்தை அவள் உடலால் தாங்க முடியவில்லை. அதனாலேயே இந்த வலியும் சோர்வும் அவளுக்கு.

 

வலியில் பௌர்ணமி முனகினாள். துடித்தாள். அவளுடலை ஏதோ போல முறுக்கி தன் வலியை குறைக்க முயன்றாள். அவளால் முடியவில்லை. அவளை இந்நிலையில் இன்னும் அவனால் பார்த்திருக்க முடியவில்லை.

 

“பௌர்ணமி, என்னை பாரு” என்று அவள் முகத்தை தனக்கு நேரே திருப்பி, அவளின்‌ விழிகளுக்குள் கூர்ந்தான். அதன் வீச்சில் அவள் நினைவிழந்து மூர்ச்சையானாள்.

 

அவள் உடல்நிலை தேறும்வரை இந்த மயக்கநிலை அவளுக்கு அருமருந்து என்று எண்ணிக் கொண்டது அவன் ஆத்மா.

 

இவளோடு இன்பமாய் வாழ நினைத்த தன் கனவு மொத்தமும் கானலாய் போனதை எண்ணி வெதும்பி இருந்தான் சந்துரு.

 

அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டு திரும்ப, கதவின் வெளிப்புறம் காந்திமதி நின்றிருப்பது தெரிந்தது. உட்புறம் பூட்டி இருந்த தாழ்ப்பாள் தன்னால் தாழ் திறக்க, கதவும் பட்டென்று திறந்து கொண்டது.

 

தானாய் திறந்த கதவு காந்திமதியை சற்று மிரள தான் வைத்தது. ஆனாலும் பிள்ளைப் பாசத்தில் அவர் அறைக்குள் வந்தார். 

 

சந்துருவின் கட்டிலில் தோய்ந்து மயங்கி கிடந்த பௌர்ணமியை பார்த்தவர், கண்கள் கலங்க அவளருகில் வந்து, “சந்துரு… சந்துரு நான் அம்மா டா” என்றவரின் தொண்டைக்குழி அடைத்துக் கொள்ள, தலையில் அடித்து கொண்டு கதறினார்.

 

“என் புள்ளய நான் இப்படியா பார்க்கனும்? என்னை ஏன்டா விட்டுட்டு போன? சாகற வயசா டா உனக்கு? அய்யோ அய்யோ என் புள்ளைய நான் எப்படி மீட்டெடுப்பேன்”

 

தன் அம்மாவின் புலம்பலை கேட்டு சந்துரு ஆத்மாவிற்குள்ளும் கனத்த உணர்வு.

 

அவர் அழுது களைத்து ஓய்ந்து போகவும், அவரின் மடிமீது ஏதோ விழுந்தது. அவர் விதிர்த்து பார்க்க, அது சற்று அளவில் பெரிதான ஓவியம் தீட்டும் நோட்டு புத்தகம்!

 

கண்மூடி கிடந்த பௌர்ணமியை பார்த்தவர் கைகள் நடுங்க அதை திறந்து பார்க்க, அதில் வெற்று வெள்ளை தாள்களே இருந்தன. அவர் அடுத்தடுத்த பக்கங்களை திருப்பவும் அதில் எந்தவொரு எழுத்தோ படமோ இல்லை. பெருமூச்செறிந்தவர் அதை மூடி நகர்த்தி வைத்துவிட்டு தலையைப் பிடித்து கொண்டார்.

 

மறுபடி அந்த நோட்டு புத்தகம் அவர்மீது வந்து விழுந்தது! 

 

அவருக்குள் மிரட்சி பரவ, அந்த அறையை மிரண்டு பார்த்தார். அந்த புத்தகத்திடம் இவரின் பார்வை நிலைக்க, அது தன்னால் திறந்து கொண்டது!

 

வெள்ளை தாளில் இப்போது ஓவியங்கள் தெரிந்தன. சந்துரு, பௌர்ணமி முதல் சந்திப்பு, அவர்கள் பழக்கம், இணக்கம், காதல், கூடல், தொழிலில் அவன் முயற்சி, அவன் கொலை செய்யப்பட்டது வரை அதில் ஓவியங்கள் உருவாகி அவருக்கு காட்சியானது.

 

அடுத்தடுத்த தொடர் அதிர்ச்சிகளை தாங்கிக் கொள்ள அவராலும் முடியவில்லை. கண்ணீர் வழிய தோய்ந்து சாய்ந்து கொண்டார். ‘சந்துரு சந்துரு உன்ன கொன்னுட்டாங்களா… என் புள்ளய என்னால காப்பாத்த முடியாம போச்சே’ என்று விடாமல் அவர் வாய் முணுமுணுத்தபடி அரற்றி கொண்டிருந்தார்.

 

சந்துருவின் ஆத்மா தன் தாயின் கலக்கத்தை வேதனையோடு பார்த்திருந்தது.

 

வெகு நேரத்திற்கு பிறகு முயன்று தன்னை சமாளித்துக்கொண்டு காந்திமதி நிமிர்ந்து அமர்ந்தார். விரிந்து கிடந்த புத்தகத்தின் கடைசி பக்கத்தில், பௌர்ணமி கரு கொண்டு இருப்பது போன்ற ஓவியம் இருக்க, அவரின் இருண்ட கண்களில் ஒளி சேர்ந்தது.

 

கைகள் நடுங்க பௌர்ணமியின் வயிற்றை பரவசமாக வருடி தந்தார். “சந்துரு… சந்துரு நீ மறுபடி என்கிட்ட வர போறயா? நான் உன்ன பார்த்துப்பேன், உன்ன மறுபடி என்னால இழக்க முடியாது சந்துரு” என்று கண்ணீரில் கரைந்து நெகிழ்ச்சியோடு உறுதி ஏற்றுக் கொண்டார்.

 

அவரின் உறுதியை ஏற்று கொண்ட சந்துருவின் ஆத்மாவிற்குள் நிம்மதி பரவியது. இனி பௌர்ணமியையும் தன் பிள்ளையையும் தன் அம்மா கவனித்து கொள்வார் என்ற நம்பிக்கையில் அவன் ஆன்மாவிற்குள் இதமான குளிர்ச்சி பரவியது. 

 

மறுபுறம் அவன் தீர்க்க வேண்டிய வன்மம் தீயாய் எரிந்து பரவி அந்த ஆன்மாவை ஆவேசமாக்கியது.

 

***

 

மலைப்பகுதி சாலையில் வேகமெடுத்து விரைந்து கொண்டிருந்தது அந்த அம்பாஸிடர் கார். வியர்த்து வழியும் நெற்றியை புறங்கையால் துடைத்தப்படி அதன் உள்ளே படபடக்க அமர்ந்திருந்தார் பைரவநாத். 

 

“நிசமாலுமே அது சின்னய்யாவோட ஆவி தானுங்களா எசமான்?” இன்னும் நம்ப முடியாமல் மிரண்டபடி காரோட்டி கேட்க,

 

“ச்சே அவன் செத்து தொலைஞ்சா பிரச்சனை இருக்காதுன்னு கொன்னு போட்டா, இப்படி செத்தும் வந்து கெடுக்குறானே” எரிச்சலோடு புகைந்தார் பைரவநாத்.

 

“கொடுமுடி நம்போதரி எப்பேர்ப்பட்ட பேயா இருந்தாலும் அடக்கி ஒடுக்கிடுவாறு நீங்க கவலைபடாதீங்க எசமான்” காரோட்டி தைரியம் சொல்ல,

 

“அவன மொத்தமா ஒன்னுமில்லாம செய்யனும்டா அப்போ தான் எனக்கு நிம்மதி” என்று இருக்கையில் பின்புறம் தலைசாய்த்து கண்மூடி கொண்டார்.

 

காரோட்டி வாகனத்தின் வேகத்தை கூட்ட, முன் சாலையில் அவன் பார்வை மங்கலாக தெரிந்தது. கண்களை ஒருமுறை கசக்கி கொண்டு காரின் வேகத்தை சற்று குறைத்து ஓட்டினான்.

 

சாலையின் குறுக்கே யாரோ நிற்பதுபோல் தோன்ற, பதறி பிரேக் அடிக்க கார் குலுங்கி நின்றது. அந்த குலுக்கலில் முன்புறம் முட்டி கொண்டு வலித்த நெற்றியை தேய்த்தபடி கோபமாக நிமிர்ந்த பைரவநாத், “டேய் மடையா, காரை ஒழுங்கா ஓட்ட தெரியாதா உனக்கு” என்று கத்தியவர், காரோட்டியின் மிரண்டு பிதுங்கி வெறித்திருந்த பார்வையை பார்த்து எதிர்புறம் திரும்பினார்.

 

அங்கே எந்த தடையமும் இல்லாது சுழல் காற்று சுழற்றி கொண்டு அவர்களை நோக்கி வந்தது.

 

“இது பேய் காத்து மாதிரி தெரியுது எசமான்” காரோட்டி திணறி சொல்ல, “டேய் காரை பின்னால எடுடா, சீக்கிரம்” என்று கத்தினார் பைரவநாத்.

 

அந்த மலைப்பகுதியின் கொண்டையூசி வளைவு சாலையில் கார் தடதடத்து பின்னாக்கி நகர, அந்த சுழல் காற்று அவர்களை முன்னோக்கி தாக்க, கார் தடுமாறி தாழ்வான பகுதியில் உருண்டது. சில நிமிடங்களில் தீப்பிடித்து எரிந்தது.

 

உயிர் துடித்து தங்கள் பூத உடல் அழிந்து போக மேலெழுந்த இருவரின் ஆத்மாக்களும் மிரட்சி விலகாமல் மேலே பார்த்தன.

 

அங்கே தகிதகித்திருந்த சந்துருவின் ஆத்மா மெல்ல மெல்ல சாந்தம் அடைய, பூரண அமைதி நிலை எய்தியது. 

 

சந்துரு ஜனித்த ஜென்மம் பூர்த்தியாக, அவன் ஆன்ம உருவம் லட்சம் கோடி ஒளி புள்ளிகளாய் சிதறி அண்டசராசரத்தில் கலந்து முக்தி எய்தியது.

 

***

 

மயக்கம் தெளிய கண்விழித்த பௌர்ணமியை காந்திமதி தாங்கிக் கொண்டார்.

 

பௌர்ணமி அவரை புரியாமல் பார்க்க, அவளின் வயிற்றில் கைவைத்து, நெகிழ்வாக தலையாட்டி கண் கலங்கினார். பௌர்ணமியின்‌ உதடுகள் பிதுங்கி அழ தொடங்க, அவளை தன்னோடு சேர்த்து ஆறுதலாய் ஆதரவாய் அணைத்துக் கொண்டார்.

 

சில நிமிட நகர்வுக்கு பிறகு தான் பௌர்ணமி விலகி, சுற்றும் முற்றும் பார்வையால் தேடினாள்.

 

“யாரம்மா தேடுற பௌர்ணமி?” காந்திமதி மருமகளின் தலைவருடி வாஞ்சையாக கேட்க, சந்துருவை காணாத தவிப்போடு, “த்ரு… த்ரு… அஆங்” நெஞ்சம் விம்ம தன்னவனை அழைத்தாள் அவள்.

 

அவளின் அரைகுறை விளிப்பும்‌ தவிப்பும் தேடலும் இவருக்கு உணர்த்தியது அவள் தேடுவது தன் மகனை என்று. தான் உணர்ந்ததில் அதிர்ந்தவர், “என்னம்மா சொல்ற, சந்துரு இங்க இருக்கானா? நீ அவனை… சந்துருவ பார்த்தியா பௌர்ணமி?” பதைபதைத்து கேட்க, அவருக்கு பதில் தராதவள், அவனை மீண்டும் மீண்டும் அழைத்தபடி அரற்றலானாள்.

 

எத்தனை முயன்றும் காந்திமதியால் அவளை சமாதானம் செய்ய இயலவில்லை. உடல் சோர்ந்து மனம் சோர்ந்து உரு திரிந்து இருப்பவளை இப்படியே விட்டால், அவளுக்கும் ஏதேனும் ஆகி விடுமோ என்று பதைபதைப்பானது அவருக்கு. யாரையாவது துணைக்கு அழைத்துவர வெளியே ஓடினார்.

 

‘என்னைவிட்டு எங்க போயிட்ட சந்துரு, சீக்கிரம் வா’ அவள் சோர்வோடு கலங்கி அழைக்க, “பௌர்ணமி அழாத” சந்துருவின் மென்மையான குரலை உணர்ந்து, உயிர்த்து நிமிர்ந்தவள், எதிரே சந்துருவின் தோற்றத்தைக் கண்டு தாவி அணைத்துக் கொண்டாள். சந்துருவிடம் ஆதூரமான நிறைவு நிறைந்திருந்தது.

 

எதையோ வித்தியாசமாக உணர்ந்த பௌர்ணமி நிமிர்ந்து அவன் முகம் பார்க்க, அவனின் உருவம் பேரொளியாக ஒளிர்ந்து தெரிந்தது.

 

அவள் விழிகளை வியந்து விரிக்க, அவளிடமிருந்து விலகி நின்றான். அவளின் உள்ளுணர்வில் ஏதோ எச்சரிக்கை எழ, ‘நீ என்னை விட்டு போக மாட்டேன்னு சத்தியம் செஞ்சிருக்க சந்துரு’ எங்கே அவன் மறுபடியும் தன்னைவிட்டு போய் விடுவானோ என்று மனதோடு அவனிடம் மன்றாடினாள்.

 

“சத்தியத்தை நான் மீற மாட்டேன் பௌர்ணமி, உன்கூடவே தான் இருப்பேன். ஆனா இப்படி இல்ல” என்றவனின் ஆன்மா, அவள் பரிதவித்து பார்த்திருக்கும் போதே, ஒளி பந்தாய் சுருங்கி, அவளின் மணி வயிற்றில் அடைக்கலமானது! பௌர்ணமியின் உடல் முழுவதும் சிலிர்த்து அடங்கியது. சந்துரு ஆன்மா அவளின் கருவில் புது உயிராய் உயிர்த்தது.

 

நிகழ்ந்ததை உணர்ந்து கொள்ள அந்த பேதைக்கு சில நிமிடங்கள் ஆனது! நிதர்சனம் உறைத்ததும், “த்ரு…” வாய்விட்டு கத்தி அழுதாள்.

 

சந்துருவை முழுதாக இழந்துவிட்டதை ஏற்றுக்கொள்ள முடியாமலும், தன் உயிரானவனை புது உயிராக தன் கருவிலேயே அடைக்காக்கின்ற உணர்ச்சிவசத்தாலும் பௌர்ணமி கதறி அழுது தீர்த்து விட்டாள். 

 

மிகவும் முயன்று பௌர்ணமியை சமாதானப்படுத்தினார் காந்திமதி அம்மாள். தாயாக பொறுப்பேற்று அவளை கவனித்து கொண்டார். ஆனாலும் பௌர்ணமியால் சந்துருவின் நினைவில் இருந்து மீள முடியவில்லை. அவனுடனான நினைவுகளை மட்டுமே உயிர் மூச்சாய் சுவாசித்து நாட்களை நகர்த்தி வந்தாள்.

 

பாழும் சொத்து மீது பேராசை பட்டு அநியாயமாக தன் மகனை கொன்றவன் என்ற போதிலும் பைரவநாத்தின் துர் மரணம் காந்திமதியை கலங்கடிக்கவே செய்தது. கொண்டவனை இழந்து நிற்கும் மகளின் குடும்பத்தையும் தானே தாங்கிக் கொண்டார்.

 

சந்துருவை கொன்றது தன் மருமகனின் பேராசை தான் என்ற உண்மையை  திடமாய் வெளியே உரைத்தார். “பௌர்ணமி கருவில் தாங்கும் உயிர் சந்துருவின் இரத்தம். இந்த குடும்பத்தின் வாரிசு” என்பதை அனைவருக்கும் அறிவித்தார்.

 

குடும்பத்தின் அடுத்தடுத்த இழப்புகள் காந்திமதியை இரும்பு மனுசியாக மாற்றி இருந்தது. கணவன் இழப்பிற்கு பிறகு தனக்குள் ஒடுங்கி கொண்டவர், இப்போது மகள், மருமகள், குடும்பம், தொழில் என அனைத்தையும் ஒற்றை ஆளாய் பொறுப்பேற்று நடத்தினார்.

 

மாதங்கள் விரைய, பௌர்ணமிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கலில் பௌர்ணமியின் உயிரும் பிரிந்தது! 

 

அவளின் இந்த பிறவியின் கர்மா தீர்ந்தது!

 

பெண்ணொன்று ஆணொன்றென இரு மழலைகளையும் தன் மடியேந்திக் கொண்டார் காந்திமதி. பேரன், பேத்தியின் மழலை சிரிப்பில் அவர்கள் வீட்டில் மீண்டும் உயிர்பு துளிர்ந்திருந்தது.

 

***

“டேக் ஓகே, வெல்டன் கைய்ஸ்”

 

மித்ராவதியின் குரலில் அனைவரும் படப்பிடிப்பு இடத்தைவிட்டு கலைந்தனர்.

 

இதுவரை எடுத்த காட்சிகளை திரையில் மீட்டு பார்த்து நிறை குறைகளைக் கவனித்து இருந்தவர்களுக்கு தேநீர் பரிமாறப்பட்டது.

 

“நெக்ஸ்ட் கிளைமேக்ஸ் தானே மேடம்” பிரியா உற்சாகமாய் கேட்க, தேநீர் மிடறை ஆசுவாசமாக சுவைத்தபடி தலையாட்டினார் மித்ராவதி.

 

“கிளைமேக்ஸ் எப்படி கொண்டு போக போறீங்க? முன்ன சொன்ன சீன்ஸ் தானா இல்ல இப்ப ஏதாவது சேஞ்ச்சஸ் இருக்கா?” முகிலன் வினவ,

 

“பெரிய சேஞ்ச்சஸ் எதுவும் இல்ல, சின்ன சின்ன இடங்கள் மட்டும் சேஞ்ச் பண்ணி இருக்கேன்” என்றார் மித்ராவதி. 

 

“படத்தோட லாஸ்ட் பார்ட் ரொம்ப கனமா இருக்கே”

 

“வேறவழி இல்ல, இந்த முடிவு தான் கதைக்கு பொருத்தமா இருக்கும்” மித்ராவதி சொன்னார்.

 

“அப்போ கதை இதோட என்டா?” 

 

“இல்ல இன்ட்ரஸ்டிங் ட்விஸ்ட் கிளைமேக்ஸ் ஸீன்ல இருக்கு” விக்னேஷ் சின்ன சிரிப்போடு சொல்ல,

 

“அதானே பாத்தேன், அழுகாச்சியா படத்த முடிச்சீங்கனா நானே தியேட்டர் போயி படம் பார்க்க மாட்டேன். பார்த்துக்கோங்க” பாலி வெட்டென சொல்ல, அனைவரும் கலகலத்து சிரித்தனர்.

 

“அப்போ பாலிகாகவே கதைக்கு சுபம் போட்டுலாம் பா” மித்ராவதியும் உற்சாகமாய் சொல்ல, “ஏஏய்ய்” “உஊஊ” மற்றவர்கள் அதே உற்சாகத்துடன் கூச்சலிட்டனர்.

 

இரவு வானத்தில் குறைநிலா வளர்ந்து வந்தது. சில நாட்களில் அடுத்த நிறைநிலவு நாள் நெருங்கி கொண்டிருந்தது!

 

***

அவள் வருவாள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!