அவள் பௌர்ணமி 18

IMG-20200921-WA0010-a3d7f7d9

அவள் பௌர்ணமி 18

 

இந்த பட்ட பகல் வேளையிலும் அந்த பூட்டிய இரும்பு கதவை பார்க்க மனது தடதடக்க தான் செய்தது அவர்களுக்கு.

 

“இதெல்லாம் உங்களுக்கு தேவயில்லாத வேல மா, வந்தோமா படத்த புடிச்சோமோ போனோமானு இல்லாம, இந்த அறைய திறந்தே ஆகனும்னு ஏன் வினைய வாங்கிக்கிறீங்க?” வேலைக்கார பெரியவர் கருப்பசாமி சற்று மிரட்சியோடே மித்ராவதியிடம் ஆதங்கப்பட, அவர் அதை கவனித்ததாக காட்டிக்கொள்ளவில்லை. 

 

இன்று இந்த அறையை திறப்பதற்காகவே படப்பிடிப்பிற்கு விடுமுறை விட்டு, அங்கிருந்த அனைவரையும் வெளியே சுற்றி பார்த்து வர கிளப்பி விட்டிருந்தார். அவர்கள் திரும்பி வருவதற்குள் இந்த அறைக்குள் இருக்கும் அமானுஷ்யம் பற்றி தெரிந்தாக வேண்டும்!

 

“எம்மா தாயீ, இந்த கிழவன் சொல்றதை கேளுங்கமா… இந்த அறையை திறக்கற எண்ணத்தை விட்டுடுங்க, இன்னும் ரெண்டு நாள்ல பௌர்ணமி வர போவுது. அதுக்குள்ள இந்த பங்களாவ காலி பண்ணிட்டு போயிடுங்க, பத்து நாளுன்னு வந்துட்டு இன்னும் கிளம்பாம இருந்தா என்ன அர்த்தம் மா, புண்ணியமா போகும் போயிடுங்க மா” கருப்பசாமி தன் பாட்டிற்கு புலம்பி கொண்டிருக்க, மித்ராவதியின் பொறுமை குறைந்தது.

 

“போதும் நிறுத்துங்கயா… உங்க கண்ணு முன்னாடி ஒரு சின்ன பொண்ணு சிதைஞ்சு போயிருக்கா, வருத்தப்பட்டதோட விட்டுட்டீங்கல்ல, அவளோட அந்த நிலைமைக்கு காரணம் யாருன்னு கூட விசாரிக்க தோனல இல்ல உங்களுக்கு” அவரின் ஆதங்கமான கேள்விக்கு,

 

“நான் என்ன பண்ண முடியும் மா, நான் வெறும் தோட்டக்காரன் தான” என்று தன் இயலாமை சொன்னார்.

 

“தோட்டக்காரன்னா, உங்களுக்கு கைகாலு இல்ல, யோசிக்க மூளை இல்ல, நீங்களும் முழு மனுசன் தானே, உங்கள போல ஒரு வேலைகார சின்ன பொண்ணு தான நினைக்கவே பதறுற கொடுமைய அனுபவிச்சிருக்கா, அவளுக்காக நீங்க என்ன பண்ணீங்க?” என்றவரின் கேள்வியில் அவர் தலை தன்னால் தாழ்ந்தது.

 

“செத்து போனவளுக்கு நான் என்னத்த மா பண்ண முடியும்?” அவர் கேள்வி முணுமுணுப்பாக வர,

 

“ஏன், நீங்க பெத்த பொண்ணு இப்படி அகால மரணமாகி இருந்தா நீங்க என்ன செஞ்சிருப்பீங்க அதை செய்ய வேண்டியது தான” 

 

“அதை எல்லாம் உறவுகாரங்க தான் செய்யனும் தாயீ”

 

“அவளுக்கு தான் யாருமிருக்கலையே, நீங்களாவது அந்த ஆத்மா சாந்தியடைய ஏதாவது சின்ன முயற்சியாவது செஞ்சு இருக்கலாம் இல்ல… பயந்து நடுங்கினா மட்டும் போதுமா”

 

பௌர்ணமி மேலுள்ள கழிவிரக்கத்தில் தன் உள்ளக் குமுறலை படபடவென கொட்டிவிட்டார் மித்ராவதி. பெரியவருக்கும் அது புரிய அத்தோடு வாய் மூடிக் கொண்டார்.

 

அதேநேரம் அந்த பங்களாவிற்குள் வந்த புதியவரின் உடல் ஒருமுறை சிலிர்த்து அடங்கியது!

 

காவி வேட்டி, வெள்ளை சட்டை அணிந்து கிட்டத்தட்ட எழுபது வயது மதிக்கத்தக்கவராக இருந்தார் அவர். தோற்றத்தில் நேர்த்தியும், முதுமையின் மென்மை முகத்தில் வெளிப்பட முதல் பார்வையிலேயே அவர்மீது மரியாதை வரவழைத்தது.

 

“என்னாச்சு ஐயா, உள்ள வாங்க” உடன் வந்தவர் திடீரென்று நின்றுவிட, விக்னேஷ் நின்று திரும்பி அழைக்க, மேலோட்டமான தலையசைப்புடன் அவனை தொடர்ந்தார் ருத்ரதேவன்.

 

இருவரும் பங்களாவின் தோட்டத்து அறையின் பக்கம் வர,‌மித்ராவதியும் அவர்களுக்காக தான் காத்திருந்தார்.

 

புதியவரின் கழுத்தில் ருத்ராட்ச மாலை தவிர வேறெந்த படோடோபமும் இன்றி,

பேயோட்டுபவருக்கான எவ்வித அலப்பறையும் அற்ற வெகு சாதாரண தோற்றத்தில் காணப்பட்டவரை பார்த்து, “விக்கி இவரா அது?” மித்ராவதி சந்தேகமாக வினவ, “எஸ் மேடம், இவர் தான் ருத்ரன் ஐயா, இங்க நடந்த எல்லா விசயமும் சொல்லி தான் கூட்டிட்டு வந்திருக்கேன்” விக்னேஷ் பதில் தந்த பிறகும் மித்ராவதியின் முகம் தெளியவில்லை.

 

“நல்லா விசாரிச்சு தான கூட்டிட்டு வந்த விக்கி?” குரல் தாழ்த்தி மித்ராவதி கேட்க, “நம்பலாம் மேடம், அப்பாவுக்கு இவர்மேல நல்ல அபிப்பிராயம் இருக்கு. நானும் விசாரிச்ச வரைக்கும் இவரை பெருசா சொன்னாங்க, பார்க்கலாம் மேடம்” என்றான் விக்னேஷ்.

 

அவர்களின் ரகசிய பேச்சை கவனித்த ருத்ரதேவன் முகத்தில் மெலிதான இதழ் விரிப்பு வந்து மறைந்தது.

 

“நான் பேயோட்டுறேன்ற பேர்ல பணம் பறிச்சு ஏமாத்துறவன் இல்லமா, எனக்குன்னு சுயதொழில் இருக்கு. தோப்பு தொறவு இருக்கு. அதுல மனசார உழைச்சு வயிறார சாப்பிடுறேன். 

 

ஏதோ எங்க மூதாதையர் புண்ணியதால அமானுஷ்யங்களை உணர சக்தி எனக்கு கிடைச்சிருக்கு. மனசாட்சிக்கு விரோதமில்லாம என்னாலான உதவிகளை தேவைபடுறவங்களுக்கு செஞ்சுட்டு இருக்கேன் அவ்வளவு தான்” அதிராத குரலில் பதில் சொன்னார்.

 

‘பணத்தின் பின்னால் வெறிபிடித்து ஓடும் இந்த காலத்தில் இப்படியொரு மனிதரா!’ மித்ராவின் மனதில் வியப்பு தோன்றி மறைந்தது.

 

“அதோட ருத்ரன் ஐயா ஆவி, ஆத்மா, அமானுஷ்யங்கள் பத்தி நிறைய புத்தகங்கள் எழுதி வெளியிட்டிருக்காரு. இவர் தரும் விளக்கங்கள் எதார்த்தம் மீறாமல் அறிவியல் சார்ந்தும் இருக்கும்னு அப்பா அடிக்கடி சொல்வாரு. அப்பா தான் இவரை பார்க்க ஏற்பாடு பண்ணாரு மேடம்” விக்னேஷ் மேலும் அவரை பற்றி விளக்கம் தர, மித்ராவதிக்கும் ஓரளவு நம்பிக்கை வந்தது.

 

“நீங்க சொன்ன அறை இதுதானா?” என்று ருத்ரதேவன் வினவ, விக்னேஷ், “ஆமாங்க ஐயா, இதேதான்” என்றான்.

 

கீழ்புறம் நோக்கி சென்ற படிகளில் இறங்கியவர், ஒரு நொடி அந்த கதவை உற்று நோக்கினார். மூடிய கதவின் மீது தன் வலது கையை பதிய வைத்து கண்கள் மூடி நின்றவர், பின் ஆழ மூச்செடுத்து இவர்களிடம் திரும்பி, “இந்த பூட்டோட சாவி இருக்கா?” என்று கேட்டார்.

 

கருப்பசாமி கை நடுங்க சாவியை அவரிடம் நீட்ட, அவர்கள் மூவரையும் ஆழ்ந்து ஒருமுறை பார்த்து விட்டு திரும்பி அந்த கதவின் பூட்டை திறக்கலானார்.

 

பயத்தின் காரணமாக மற்ற மூவரும் சற்று விலகியே நின்றிருந்தனர்.

 

அவர் பூட்டை திறந்து கதவை திறக்க முயல, அந்த கதவுகள் அசைவேனா என்று இறுகி கிடந்தன.

 

பார்த்திருந்த மூவரின் முகங்களிலும் வியர்வை துளிகள் அரும்பி நெற்றிவழி வழிந்திட, இதய துடிப்பின் வேகம் கூடிக்கொண்டே போனது.

 

“தம்பி கொஞ்சம் கதவை திறக்க உதவி பண்ணுபா” என்று விக்கியை துணைக்கு அழைக்க, அவனும் தன் தைரியத்தை மீட்டுக் கொண்டு அவருடன் கதவை உந்தி தள்ளினான்.

 

பழைய கனமான இரும்பு கதவுகள் இரு ஆண்களின் வலிமையான உந்துவிசையில் ‘கர கர’ சத்தத்துடன் மெதுவாக திறந்தது!

 

அறையின் உட்புறம் முழுவதும் இருண்டு கிடந்தது. ஆள் நுழைய முடியாத அளவிற்கு ஒட்டடை பின்னி கிடந்தது.

 

“இந்த அறைய கடைசியா எப்போ திறந்தீங்கனு நினவுல இருக்கா?” ருத்ரதேவன் வினவ, விக்கி, மித்ராவதி பார்வை கருப்பசாமியை நோக்கியது.

 

“அது… அதுங்க இந்த பங்களாவ எல்லாரும் காலி பண்ணின அன்னிக்கு பூட்டினதுங்க, அப்புறம் திறக்குற தகிரியம் எங்களுக்கு வரலைங்க” என்றார் கருப்பசாமி அவரின் தளர்ந்த குரல் நடுங்க.

 

புரிந்ததாக தலையசைத்துக் கொண்ட ருத்ரதேவன், அறை வாயிலில் கைகள் கூப்பி, கண்கள் மூடி இரு நிமிடங்கள் நின்றார். அந்த அறை முழுவதும் பரவியிருந்த கொடும் நெருப்பின் தகிப்பு அலையை அவரால் உணர முடிந்தது! 

 

கண் திறந்தவர், அறையை அடைத்து இருந்த ஒட்டடையை கிழித்துக் கொண்டு தயக்கமின்றி உள்ளே சென்றார்.

 

“இந்த ரூம்ல லைட் இல்லயா?” என்று கேட்டபடி விக்கி தன் மொபைல் டார்ச் ஒளியை அடித்து அந்த அறையை பார்த்தான். மித்ராவதியும் அவ்வாறே செய்தார். மனம் மட்டும் அடங்காமல் திக் திக் திக்கென்று தடதடத்துக் கொண்டே இருந்தது.

 

“முன்ன இருந்துச்சுங்க, இப்ப எரியுமானு தெரியல” என்றார் கருப்பசாமி. முகத்தில் வழியும் வியர்வையை துண்டால் துடைத்தபடி.

 

பெரிதும் அற்ற சிறிதும் அற்ற நடுநிலை அளவிலிருந்த அகன்ற அறை அது. அங்கங்கே சிதறிக்கிடந்த தட்டுமுட்டு சாமான்கள் தவிர, அந்த அறை காலியாகவே காணப்பட்டது. அறையின் மூலை முடுக்களில் எல்லாம் ஒட்டடை தான் பின்னி பிணைந்து அடைத்துக் கொண்டிருந்தது.

 

கைபேசி ஒளியில் அந்த அறையை ஆராய்ந்து இருந்தவர்களை, ருத்ரதேவன் குரல் கலைக்க, அவரிடம் திரும்பினர். அறையின் நடு பகுதியில் நின்றிருந்தார் அவர்.

 

“ஒரு பாத்திரத்தில தண்ணீ கொண்டுவர சொல்லுங்க” என்றார்.

 

சிறுது நேரத்தில் அவரிடம் செம்பில் தண்ணீர் தரப்பட்டது. அதை வாங்கிக் கொண்டவர், வடக்கு திசை நோக்கி நின்று, தன் வலது கை நிறைய நீர் நிறைத்து, தூசு படிந்து கிடந்த தரையில் விட்டார். நீர் தெளித்த தரையில் செம்பை வைத்து விட்டு ஓரடி பின்னால் நகர்ந்து நின்று கண்கள் மூடி கை கூப்பி தன் மனதை ஒரு நிலைப்படுத்த முயன்றார்.

 

அவரின் மனக்கண்ணில் அந்த அறையில் முன்பு நேர்ந்தவை அனைத்தும் தெளிவற்ற நிழல் காட்சிகளாய் தெரியலாயின. 

 

ஒன்றல்ல இரண்டல்ல எத்தனை எத்தனையோ காட்சிகள்! ஒன்றன் பின் ஒன்றாக! தெளிவற்றவையாக, தோன்றிக் கொண்டே இருந்தன. யார் யாரின் உருவங்களோ அங்கே நடந்தன. நின்றன. ஓடின. மறைந்தன. ஏதேதோ சத்தங்கள், தெளிவற்ற பேச்சுகள்… பல பிம்பங்கள் கலவையாக சுழன்றடிக்க, அவை அனைத்தையும் விழுங்கியபடி, ஒரு சிறு பெண்ணின் பெரும் கதறல், அவரின் திடமான உடலையும் நடுங்க செய்தது!

 

அந்த அறையில் மெல்ல மெல்ல கொடுந்தீயின் தகிப்பு பரவ, தாளாத அத்தனை தகிப்பில் அவரின் உடல் முழுவதும் வியர்த்து வழியலானது!

 

அந்த அறையின் வாயிலில் இருந்தே அவரை பார்த்து நின்ற மூவருக்கும் அவரின் உடல் நடுக்கமும் அதிக வியர்வை நனையும் அவர் சட்டையும் கண்டு பதற்றமானது.

 

ருத்ரதேவன் தன்னை திடப்படுத்தி, தன் முழு மன ஆற்றலையும் சேர்த்து, அந்த பெண்ணின் கதறல் சத்தத்தில் குவித்தார்.

 

செம்பில் இருந்த தண்ணீர் தன்னால கலங்கி தளும்பியது!

 

அதை பார்த்த மற்றவர்கள் நெஞ்சம் சில்லிட்டது!

 

கொடுந்தீயின் தகிப்பும், இதய சுவர்களை தாக்கும் கதறலும், அந்த ஆன்மாவின் ஆண்டாண்டு கால காத்திருப்பின் அழுத்தமும், ருத்ரதேவன் மன உறுதியை தளர செய்தது. 

 

தொண்டை வரண்டு போக, மூச்சு காற்றுக்கு முட்டி மோதி சுவாசம் தடைப்பட, முகத்தில் வியர்வை மழையாய் வழிந்து வடிய, அதற்கு மேல் சமாளிக்க முடியாமல் தோய்ந்து தடுமாறி கீழே சரிந்தார்.

 

விக்னேஷ் அதிகம் யோசிக்காமல் அவரின் அருகில் ஓடிச்சென்று அவரை தாங்கிக் கொண்டான். கண் திறந்தவர் தளும்பி அடங்கும் செம்பு தண்ணீரை விதிர்த்து பார்த்தார்.

 

“ஐயா, உங்களுக்கு எதுவும் ஆகலையே” அவரின் நிலைக்கண்டு விக்னேஷ் பதறி கேட்க, அவன் முகம் நோக்கி நிமிர்ந்தவர் மறுப்பாய் தலையசைத்து, “கொஞ்ச நேரம் ஓய்வா உக்கார்ந்து எழுந்தா சரியாகிடும் தம்பி” என்றவரை, “சரி வாங்க இங்கிருந்து போலாம்” என்று கைதாங்கலாய் அழைத்துக்கொண்டு நடந்தான்.

 

அவர்கள் அந்த அறையை தாண்டியதும், செம்பில் இருந்த தண்ணீர் தன்னால் கவிழ்ந்து தரையில் கொட்டியது!

 

அந்த சத்தத்தில் அனைவரும் அங்கே திரும்ப, தரையில் ஊற்றிய நீர் உறிஞ்சி எடுத்தது போல, இமைக்கும் நேரத்தில்  வேகமாய் வரண்டு மறைந்து போனது!

 

“அய்யோ!” 

 

“சாமி!”

 

மித்ராவும் பெரியவரும்  பதறிட, “பயப்படாதீங்க, எதுவும் தவறா நடக்காது” என்று அவர்களை அமைதி படுத்திய ருத்ரதேவன்,‌ “இந்த அறையை சுத்தம் செய்ய சொல்லுங்க, யாரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை, தைரியமா சுத்தம் செய்ய சொல்லுங்க” என்று தளர்வான குரலில் சொல்லிவிட்டு நடந்தார்.

 

சிறிது நேர ஆசுவாசத்திற்கு பிறகு, ருத்ரதேவன் இயல்புநிலைக்கு திரும்பி இருந்தார். 

 

அவர்கள் மூவரும் பங்களாவின் ஹாலில் அமர்ந்து இருந்தனர். கருப்பசாமி பெரியவர் அந்த அறையை சுத்தம் செய்யவென ஆட்களை அழைத்து வருவதாக கூறி சென்று விட்டார்.

 

“என்னாச்சு, பௌர்ணமியோட ஆத்மாவுக்கு விடுதலை கிடைச்சிடுச்சா” ஆவலும் சந்தேகமுமாக மித்ராவதி கேட்க,

 

அவரின் தவிப்பை கவனித்தவர், “வெறும் கதவை மட்டும் பூட்டி அறைக்குள்ள அடைச்சு வைக்க, ஆத்மா, முழு மனிசனோ, விலங்கோ உருவுள்ள பொருளோ இல்ல மா, ஒரு உயிரின் மிச்சமான நினைவு பிண்டம் மட்டும் தான் அது” என்றார்.

 

“அப்படின்னா, பௌர்ணமி அந்த அறைக்குள்ள அடைப்பட்டு இல்லையா? எனக்கு வந்த கனவு?” மித்ராவதி குழம்பி மேலும் கேட்க,

 

சிரித்தவர், “இல்லமா, பௌர்ணமியோட ஆத்மா அடைப்பட்டு இருக்கிறது நிஜம்”

 

“அப்படின்னா? புரியல” 

 

“மன வேதனையிலும் உடம்பு வலியிலும் துடிச்சு இறந்து போயிருக்கு அந்த பொண்ணு… தன்னோட இழப்புக்கு நியாயம் கேட்டு அந்த உயிர் இன்னும் இங்க ஓட்டிட்டு இருக்கு”

 

இருவரும் மிரட்சியோடு அவரையே பார்த்திருக்க, மேலும் விளக்கலானார்.

 

“முதல்ல உடல் அழிந்த ஆத்மா என்பது அருவம், காத்தோடு காத்தாய் கலந்து விட்ட உயிரின் மிச்சங்கள் தான் அது. துர்மரணத்தால் பாதிக்கப்பட்ட ஆத்மாக்கள், அவங்க பிறப்பு பலன் முடியும் வரை முக்தி பெறாமல் பேயா அலையறாங்கனு நம்ப படுது!”

 

“நம்ப படுதுனா? அப்ப பேய்னு எதுவும் இல்லனு சொல்றீங்களா?” விக்னேஷ் கேட்க,

 

அவர் சிறு புன்னகையுடன், “எனக்கும் உறுதியா தெரியாது தம்பி, இத்தனைக்கும் ஆத்மாக்களை பற்றி ஆராய்ச்சி செய்துட்டு இருக்கேன். ஆனாலும் அப்படி எதையும் நான் பார்த்தில்ல”

 

“அப்ப, ஓ பிரிவு பிலட் குரூப் இருக்கிறவங்களுக்கு இதுபோல அமானுஷ்யம் எல்லாம் கண்ணுக்கு தெரிய வாய்ப்பிருக்கு சொல்றாங்களே அது?”

 

“எனக்கு ஓ குரூப் இரத்தம் இல்ல தம்பி, என்னால அமானுஷ்யங்களை பார்க்க முடியாது. ஓரளவு உணர முடியும் அவ்வளவு தான். அதோட இரத்த பிரிவுக்கும் ஆத்மாக்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்? 

 

உயிர் உடலை விட்டு பிரிஞ்சதுமே அந்த உயிருக்கும் இந்த உலகத்திற்கும் உள்ள அனைத்து பிணைப்பும் அறுபட்டு போகுது… அதை மீறியும் இந்த பூமியில் இருந்து விடுதலை அடைய முடியாத ஆத்மாக்கள், நிறைவேறாத ஆசைகளை, இறுதிநேர சங்கல்பங்களை, பழியை தீர்த்துக்க வழி தேடி அலைய நேருது…

 

முழு மனுசனா பிறந்து வளர்ந்து வாழ்ந்து இருந்தாலும் இறந்த பிறகு ஆத்மாவுக்கு இந்த உலகம் அன்னியம் தான். இந்த பங்களாவில இருக்க அந்த பெண்ணோட ஆத்மாவும், இந்த பூவுலக பிணைப்பை அறுத்துக்க முடியாமலும், தனக்கான உலக்கத்தை சேர முடியாமலும் துடிச்சிட்டு இருக்கு!”

 

“அப்ப எல்லாரும் சொல்ற மாதிரி இந்த பங்களாவில பௌர்ணமியோட ஆவி இருக்கிறது நிஜம்” விக்னேஷ் கேட்க,

 

ஆமென்று தலையசைத்தவர், “ஒருநாள் ரெண்டு நாள் இல்ல கிட்டத்தட்ட நாற்பது வருச காத்திருப்பு அந்த ஆத்மாவிற்குள்ள பெரிதான ஏமாற்றத்தையும் ஆங்காரத்தையும் விளைவிச்சு இருக்கு”

 

“என்ன சொல்றீங்க?”

 

“அந்த ஆத்மாவுக்கு என்ன தேவைனு நான் தேடினேன், அது எனக்கு எதையும் காட்டல! என்மேலயும் அதுக்கு நம்பிக்கை வரல போல, இனி மனுசங்க தனக்கு உதவி செய்யமாட்டாங்கன்ற நிலைக்கு வந்திருக்கும் போல” அவர் கவலையாக சொன்னார்.

 

“அப்போ என் கனவுல விடுதலை செய்ய சொல்லி கேட்டுச்சே அது” 

 

“உங்க கிட்ட அது கேட்டிருக்குனா உங்க மேல அதற்கு நம்பிக்கை இருக்குனு அர்த்தம்”

 

“நான் செய்றேன். பௌர்ணமியோட ஆத்மா சாந்தியடைய என்னால என்ன செய்ய முடியுமோ எதுவா இருந்தாலும் நிச்சயமா செய்யறேன். ஆனா நான் என்ன செய்றதுனு எனக்கு தெரியலயே” மித்ராவதியும் கவலை கொண்டார்.

 

“உங்க கனவுல ஏதாவது ஒன்னை பத்தி துருப்பு மாதிரி ஏதாவது தெரிஞ்சதா? ஏதாவது பொருளோ, மனுசனோ, இல்ல இடமோ அப்படி ஏதாவது தெரிஞ்சதா?”

 

“கனவுல இல்ல, சுய நினைவோட நான் பார்த்தேன். இந்த வீட்டோட ஓனர் சுரேந்தர்நாத்தோட பழைய ஃபோட்டோவ எனக்கு காட்டுச்சு…!” என்று இரண்டு நாள் முன்பு தான் தன்னையே பார்த்து மிரண்டதை, அன்று நேர்ந்ததை விளக்கமாக சொன்னார்.

 

“ம்ம் சரிதான். இப்ப அந்த சுரேந்தர்நாத்தை இந்த பங்களாவுக்கு அழைச்சிட்டு வரது தான் நமக்கு இருக்க ஒரேவழி. அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க” என்றார் ருத்ரதேவன்.

 

“நாம அழைச்சதும் சுரேந்தர்நாத் இங்க வருவாரா?” சந்தேகமாக கேட்ட விக்னேஷ், “நாற்பது வருசமா இந்த ஊர் பக்கமே வராதவரு, இப்ப நாம கூப்பிட்டா மட்டும் வருவாரா என்ன? வரலன்னு சொல்லிட்டா அவரை கைகால கட்டியா கூட்டிட்டு வர முடியும்”

 

“அவரை இங்க வரவைக்க ஏதாவது வழி கிடைக்கும் யோசிக்கலாம்” மித்ராவதி யோசித்தார்.

 

“எதுவா இருந்தாலும் நாளைக்குள்ள செயிங்க, நாளைன்னைக்கு பௌர்ணமி. அந்த பொண்ணு இறந்த நாள். வழக்கத்தைவிட அப்ப அந்த ஆத்மாவோட தாக்கம் அதிகமா இருக்கும்!” ருத்ரதேவன் விளக்கிச் சொல்லவும் மற்ற இருவருக்கும் பதற்றமானது.

 

***

அவள் வருவாள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!