அவள் பௌர்ணமி 19

IMG-20200921-WA0010-058708ba

அவள் பௌர்ணமி 19

அவள் பௌர்ணமி 19

“முடியாதுங்க மா, நீங்க என்ன சொன்னாலும் சரி, எங்க முதலாளி இங்க வரமாட்டாரு” என்று வேகவேகமாக மறுத்தார் அந்த பங்களாவின் வேலைக்கார பெரியவர் கருப்பசாமி. 

மேலும், “நீங்க செய்யறது எதுவுமே சரி இல்லீங்க, இந்த பங்களாவில படம் புடிக்க மட்டும் தான் உங்களுக்கு அனுமதி கொடுத்து இருக்கு. நீங்க என்னான்னா தேவயில்லாத வினையெல்லாம் இழுத்து விடுறீங்க, வேணாம்மா எல்லாத்தையும் இத்தோட நிறுத்திக்கங்க” பெரியவர் ஆதங்கமாக பேசிக்கொண்டே போனார்.

கருப்பசாமி பேச்சில் மித்ராவதியின் ஆதங்கம் ஆத்திரமாக மாறியது. “இதுக்கு மேல பேசினா மரியாதை கெட்டு போகும் உங்களுக்கு, என்ன பெரிய உங்க முதலாளி, அவங்க இடத்தில ஒரு பொண்ணோட உயிர் போயிருக்கு அதைபத்தி கொஞ்சமும் கண்டுக்காம பயந்து‌ ஓடினவங்க தான உங்க முதலாளி! ச்சே” அவர் காட்டமாக கூற, கருப்பசாமியின் முகம் இருண்டது.

“ஏன்மா பெரியவுங்களாச்சேன்னு பணிஞ்சு பேசுனா ரொம்ப தான் எடுத்தெறிஞ்சு பேசுறீங்க… இப்பவே நீங்க செய்யறதெல்லாம் பத்தி எங்க‌ முதலாளிக்கு சொல்ல தான் போறேன். இன்னைக்கு சாயந்திரத்துக்குள்ள எல்லாரும் காலி பண்ணுங்க அதான் எல்லாருக்கும் நல்லது” கருப்பசாமியும்  குரல்‌ உயர்த்த,

“யோவ் மேடம் எவ்வளவு சீரியஸா‌ பேசிட்டு இருக்காங்க, நீ என்ன எங்களை விரட்டுறதுலேயே குறியா இருக்க! அப்ப உங்க முதலாளி மேல ஏதோ தப்பிருக்குனு உங்களுக்கும் தெரிஞ்சிருக்கு அதானே” என்று விக்னேஷ் அவர் முன்னால் தன் முழு உயரத்திற்கு நிமிர்ந்து முறைத்து நின்றான்.

“எ எ என்னப்பா, மிரட்டுறீங்களா? இன்னும் ஒரு நிமிசம் கூட உங்களை இந்த இடத்தில இல்லாம பண்றேன் பாருங்க” என்று கருப்பசாமி வேகமாக அங்கிருந்து செல்ல, மித்ராவதிக்கு சலிப்பானது.

“இவங்க என்ன லூசா விக்கி, ச்சே நாம இவ்வளோ சொல்லியும் புரிஞ்சிக்காம” மித்ராவதியின் வார்த்தைகள் அப்படியே நின்றது கருப்பசாமியின் அலறலில்.

“அய்யோ…” 

வேகமாக வந்த கருப்பசாமி அறை கதவை திறக்க கைவைத்த வேளையில் மின்சாரம் தாக்கியதை போல தூக்கி எறியப்பட்டார்.

எதிர்பாராத அதிர்ச்சியில் ‘அய்யோ’வென்று சத்தமிட்டு, தரையில் விழுந்த வலியில் வெலவெலத்து போனார் அந்த அறுபது வயது முதியவர்.

அவரின் நிலையை பார்த்த மற்ற மூவரும் சடுதிநேர திகைப்பிற்குள்ளாக, அவர்கள் இருந்த அறை முழுவதும் மாயை சூழ்ந்தது போலானது.

அவர்கள் பார்த்திருக்கும் போதே அறை கதவு இருந்த இடம் மாயமாக மறைந்து போனது! அதேநேரம் அறை முழுவதும் மெல்ல மெல்ல இருளில் அமிழ தொடங்கியது! 

அடுத்தடுத்த அதிர்ச்சியில் கண்கள் விரிய, இதயம் தடதடக்க சுற்றும் முற்றும் பார்த்திருந்த, மித்ராவதிக்கும் விக்கிக்கும் ஏதோ புரிய தங்கள் மனதைரித்தை சேகரித்து இறுத்தி வைத்துக் கொள்ள முயன்றனர்!

அதுவரை அமைதியாய் அவர்களை பார்த்திருந்த ருத்ரதேவன், நிலைமை உணர்ந்து தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்து தன் மனதை குவிக்க முயன்றார்!

உச்சக்கட்ட பயத்தில் கருப்பசாமியின் தொண்டை வற்றிவிட, நாக்கு மேலண்ணத்தோடு ஒட்டி கொண்டது. வியர்வை சுரப்பிகள் வேகமாக செயல்பட அவரின் உடல் முழுவதும் மொத்தமாய் வியர்த்து வழிந்தது. 

முகத்தில் வழியும் வியர்வையை துடைத்துக் கொண்ட போதுதான் அவரால் உணர முடிந்தது. அதுவரை சில்லிட்ட ஏ சி அறைக்குள் இப்போது அனலின் தகிப்பு கூடிக்கொண்டே போனது! செய்வது புரியாது மிரண்டு, வெடவெடத்து போனார் அவர்.

சில நிமிடங்களில், அடைப்பட்ட அந்த அறைக்குள் மூச்சு முட்டும் உணர்வு மித்ராவதிக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, விக்கியின் கைகளை பற்றிக்கொண்டு தன்னை சமாளிக்க முயன்றார்.

திடீரென மாறிவிட்ட இந்த அமானுஷ்ய சூழலை எப்படி எடுத்து கொள்வது? என்ன செய்வது? அடுத்தென்ன? என்ற குழப்பம் விக்கியை திகைக்க வைத்திருந்தது.

அறை முழுவதுமே இப்போது அடர்ந்த இருள் சூழ்ந்துக் கொண்டது! ஒருவரை ஒருவரை பார்க்கவும் முடியாத அடர் இருள்வெளியில், மிரட்டும் தனிமையின் பய உணர்வில் உள்ளுக்குள் சேகரித்த தைரியம் எல்லாம் வடியலானது.

அங்கே பரவும் அனல் வீச்சில், கொடுந்தீயின் தகிப்பு அவர்கள் இதயத்தின் அடியாழம் வரை திகில் வெப்பத்தை பாய்ச்சுவதாய்.

ருத்ரதேவன்‌ தன் மனக்கண் மூலம் அந்த அறையை சுற்றி அலசினார். எங்கும் இருளின் திரை அவரின் தேடலை மரித்தது. தன் மனோபலத்தின் சக்தியை திரட்டி, அந்த மாயை இருள் திரையை கிழிக்க முயன்றார். இருள் திரையின் பின்னே கொழுந்து விட்டு எரியும் கொடுந்தீ ஜுவாலைகள் மட்டுமே காட்சியானது! 

அந்த தீயும் ஒருவித மாயையே! அதையும் கடந்து தேடலை தொடங்கினார். அவர் விடாது முயற்சிக்க, சுற்றிலும் அனலின் தகிப்பு கூடிக்கொண்டே போனது!

இப்போது நிழல் காட்சிகள் தென்படலாயின அரைகுறையாய். மேலும் ஊன்றி கவனிக்க, ஒன்றுக்கொன்று தொடர்பற்ற பல பிம்ப காட்சிகள் தொடர்ந்தன. அவற்றை தொடர்புப்படுத்தி சேர்க்க முயன்றார் அவர். அவரின் முயற்சிக்கு தடையாய் காட்சிகள், பிம்பங்கள் அழிந்து கலைந்து மாயம் காட்டலாயின!

இன்னும் எத்தனை நிமிடங்கள் அவரால் தாக்குபிடிக்க இயலும் என்பதும் கேள்விக்குறியே? அந்தளவு அந்த இடத்தின் வெப்பம் கூடிக்கொண்டே போனது!

பௌர்ணமி… எங்களால முடியல… ப்ளீஸ் விட்டுடு…” மித்ரா தாக்கு பிடிக்க முடியாமல் அரற்ற,

“மேடம் நெருப்பு!” விக்கியின் குரலிலும் நடுக்கம் தெறித்தது.

இருண்டிருந்த அறையின் திரைச்சீலைகளின் நுனிகள் தீப்பற்றி எரிய தொடங்கின!

அதைப்பார்த்த மித்ராவதி தடதடக்கும் நெஞ்சை அழுத்தி பிடித்து கொண்டார். சூழ்நிலை மோசமாவது அவரின் பதற்றத்தை‌ மேலும் கூட்டியது.

“அய்யோ தாயீ, என்னை விட்டுடு ஆத்தா… இந்த பாவிய மன்னிச்சு விட்டுடு ஆத்தா… உன்ன எங்க குலசாமியா வச்சு பூசை போடுறேன் விட்டுடு ஆத்தா” தீயை பார்த்ததும் நெடுசாண்டையாக தரையில் விழுந்து கதறலானார் கருப்பசாமி.

காட்சிகளை மறைத்து தீயின் தழலே விஞ்சி தெரிந்தது இப்போது, எரியும் ஒவ்வொரு எரிதழலிலும் பெண்ணின் உருவம் போலவே காட்சியானது ருத்ரதேவனுக்கு. 

அந்த நெருப்பு அவரை மோதுவது போல சீற்றமாய் பாய்ந்து அவரின் ஆழ்நிலையை கலைக்க முயல, ‘பதறாதே மா, அமைதியா இரு, உன் இருப்பை நீ உணர்ந்திட்ட, உனக்கான விடுதலைக்கு என்னால வழி செய்ய முடியும்… இத்தனை வருசம் காத்திருந்த இன்னும் ஒரேயொரு நாள் காத்திரு, உன் காத்திருப்பு முடிவுக்கு வரபோகுது… உனக்குள்ள அணையாம எரியற நெருப்பு அடங்க போகுது…’ அவர் தன் மனதோடு நம்பிக்கை வார்த்தைகளை திரட்டி, அந்த அமானுஷ்ய சூழலை அமைதிப்படுத்த முயன்றார்.

ஒருபுறம், “புத்திக்கெட்டு பேசிபுட்டேன் உன் கோவத்தை இந்த கிழட்டு உடம்பு தாங்காது தாயீ. என்னை உசுரோட விட்டுடு ஆத்தா…” என்று கருப்பசாமி தரையில் புரண்டு மிரண்டு புலம்பினார்.

மறுபுறம், மித்ராவதி கண்களை இறுக மூடிக்கொண்டு ‘எங்களை பயமுறுத்தாத பௌர்ணமி, உனக்கு உதவி செய்ய தான் நாங்கெல்லாம் முயற்சி பண்றோம். எப்படியும் சுரேந்தர்நாத்தை இங்க கூட்டிட்டு வருவோம்… அது என்னோட பொறுப்பு’ என்று மனதிற்குள் உறுதி தந்து பௌர்ணமியிடம் வேண்டினார்.

அறையின் நாலாபுறமும் தீ பரவலானது.‌ அடைப்பட்ட இருள் போர்வையில் தீயின் அடர் செந்நிற ஒளி அங்கே பிரதிபலிக்க, அந்த இடம் முழுவதும் அமானுஷ்யம் காட்டியது.

விக்கி தப்புவதற்கு ஏதேனும் வழி உள்ளதா என சுற்றிலும் பார்வையால் தேடலானான். அறையை விட்டு வெளியேற கதவு தென்படும் வழியாக காணோம். நெருப்பு அறை முழுவதும் பரவுவதற்குள் ஏதேனும் செய்ய வேண்டும் என்று மனம் பரபரக்க, சட்டென ஒரு குருட்டுத்தனமான யோசனை வந்தது விக்னேஷிற்கு.

“பெரியவரே… உங்க முதலாளிய இங்க கூட்டிட்டு வரேன்னு சொல்லுங்க… சீக்கிரம் சொல்லுங்க” விக்கி கத்திட, கருப்பசாமி வேறெதையும் யோசிக்கவில்லை.

“முதலாளிய நான் வர வைக்கிறேன்… சத்தியமா வர வைக்கிறேன் ஆத்தா” என்று கண்ணீரும் வியர்வையும் வழிய தரையில் தட்டி உறுதி தந்தவர்,  உச்சக்கட்ட மிரட்சியில் நினைவிழந்து அங்கேயே மூர்ச்சையானார்!

அடைப்பட்ட அறையின் இருளும் வெம்மையும், வழியும் வியர்வையும், மனதின் தடதடப்பையும் தாங்கும் சக்தியற்று மித்ராவதி உடலும் தோய்ந்து சரிய, விக்கி பதறி அவரை பிடித்துக் கொண்டான்!

மறுபுறம் திரும்பி ருத்ரதேவனை பார்க்க, தியானத்தில் அமர்ந்து இருந்தவர், அப்படியே தரையில் சரிந்து நினைவிழந்தார்!

பெரியவர்கள் மூவரின் நிலையும் பார்த்த விக்கிக்கு மேலும் மனம் பதறியது! அந்த அறை முழுவதும் தீயின் செஞ்சுவாலை பரவி இருக்க, பார்க்கவே உடலும் உள்ளமும் நடுக்கம் கொண்டது.

கைகளில் மித்ராவதியை தாங்கியவாறே, கண்களை இறுக மூடி கொண்டவன், ‘ரிலாக்ஸ் விக்கி… இது எதுவும் உண்மையில்ல, ஜஸ்ட் இல்யூஷன் தான், யாருக்கும் எதுவும் ஆகாது ரிலாக்ஸ்’ என்று தனக்கு தானே தைரியமூட்டிக் கொண்டவனுக்கு தன் அம்மா பூஜை வேளையில் உச்சரிக்கும் கந்தசஷ்டி கவசம் நினைவிற்கு வர, “காக்க காக்க கனகவேல் காக்க, நோக்க நோக்க நொடியினில் நோக்க, தாக்க தாக்க தடையற தாக்க, பார்க்க பார்க்க பாவம் பொடிபட, காக்க காக்க கனகவேல் காக்க…” அடுத்த வரி தெரியாததால் அதனையே திருப்பி திருப்பி திக்கியபடி குரல் நடுங்க முணுமுணுக்கலானான்.

அங்கே சூழ்ந்திருந்த தீஞ்சுவாலை ஒன்றாய் கலந்து நெருப்புரு கொண்ட பெண்ணுருவாய் மாறியது! அந்த தீ உருவின் இதழ் கடை தீச்சுடர் சற்றே புன்னகைப்பதை போல் விரிந்தது.

விக்கி விடாமல் ‘காக்க காக்க’ வென்று பாடிக்கொண்டே இருக்க, தடதடவென்ற சத்தத்தில் அரற்றி கண்திறந்து பார்த்தான்.

***

அவள் வருவாள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!