அவள் பௌர்ணமி 19(2)

IMG-20200921-WA0010-bfea39d4

அவள் பௌர்ணமி 19(2)

 

விக்னேஷ் விடாமல் ‘காக்க காக்க’ வென்று பாடிக்கொண்டே இருக்க, தடதடவென்ற சத்தத்தில் அரற்றி கண்திறந்து பார்த்தான்.

 

அறை சாதாரணமாகி இருந்தது! இருளும் நெருப்பும் தடமின்றி மாயமாய் மறைந்திருக்க, ஏசியின் குளிர்ச்சி வியர்த்த உடலில் இதமாய் சில்லிட்டது.

 

மீண்டும் தடதடவென்ற சத்தம் வர, திரும்பி பார்த்தான். அந்த அறையின் கதவை தான் யாரோ தட்டிக் கொண்டு இருந்தனர்.

 

தான் தாங்கி நின்றிருந்த மித்ராவதியை மெத்தையில் கிடத்திவிட்டு, தன் முகத்தை அழுத்தி துடைத்தபடி மெல்ல கதவை திறக்க, வெளியே பாலி தான் நின்றிருந்தாள். 

 

“எப்பா சாமி, எவ்வளோ நேரம் தான் கதவை தட்டறது, என்னதான் செஞ்சுட்டு இருந்தீங்க உள்ளாற” பாலி சலித்துக் கொள்ள, அறையை விட்டு வெளியே வந்தவன், கதவை மெதுவாய் சாற்றிவிட்டு,

 

“ஏன் இப்படி கத்தற, மேடம்க்கு லோ பிபி டேப்லட் போட்டு ரெஸ்ட்ல இருக்காங்க, டிஸ்டர்ப் பண்ணாம கிளம்பு” என்றான் அவள் நம்பும்படி.

 

“எல்லாருக்கும் பிபி ஏத்துற உன் மேடமை பிபி ஒன்னும் பண்ணாது” என்று பாலி நகராமல் நக்கல் அடிக்க,

 

“உன் நக்கல் எல்லாம் நீயே வச்சுக்க, இப்ப எதுக்கு வந்த, அதை சொல்லறீயா இல்ல கிளம்புறீயா” என்றான்.

 

“அந்த பேய் ரூமை திறந்து ஆளுங்கெல்லாம் சுத்தப்படுத்திட்டு இருக்காங்க விக்கி” பாலி கண்கள் விரிய திகைப்போடு சொல்ல,

 

இவன் சலிப்பாய், “இதான் மேட்டரா, கிளீன் பண்ண சொன்னதே மித்ரா மேம் தான், அங்க ஒரு சீன் எடுக்கலாம்னு பிளான். அதுக்கென்ன இப்போ” வாய்க்கு வந்ததை உளறி அவளை கிளப்ப முயன்றான். அறைக்குள் மயங்கி கிடப்பவர்களுக்கு முதலுதவி செய்ய வேண்டும் என்ற பரபரப்பு அவனுக்கு.

 

“அய்யோ அப்ப பேய்?” அவள் பயத்தில் கண்களை உருட்டினாள். இந்த இரண்டுவார இருப்பில் படக்குழுவினர்களுக்குள் அந்த அறைப்பற்றிய பல பயங்கர கதைகள் இட்டுக்கட்டி பரவி இருந்தன. எல்லாமே பயங்காட்டும் கதைகள் தான். வெளியே காட்டிக்கொள்ளாவிடினும் அன்றைய இரவுக்கு பிறகு பாலியும் அதிகம்‌ பயந்தே இருந்தாள்.

 

“நீ இருக்கற வீட்டுல பேய்‌ எப்படி இருக்கும். நீ இங்க வந்த உடனேயே அது பிச்சிக்கிட்டு போயிருக்கும், லன்ச் டைமாச்சு ரெடியானு பாரு கிளம்பு” என்று பாலியை திசை திருப்ப, 

 

“போறேன்” கழுத்தை கோணி திருப்பியவள், ‘எப்பபாரு பேய் பங்களாவில ஷூட்டிங், பேய் ரூம்ல ஸீன்னு பீதிய கிளப்பறதே இந்த மித்ரா மேம் வேலையா போச்சு’ என்று சத்தமாகவே முணுமுணுத்து நகர்ந்தாள்.

 

அவளை முறைத்தபடி நின்றவன் அவள் அங்கிருந்து அகலும் வரை‌ பொறுத்திருந்து அறைக்குள் வந்தான்.

 

உள்ளே, ருத்ரதேவன் மட்டும் நினைவு திரும்பி எழுந்து சோர்வாய் அமர்ந்து இருந்தார். அவர் கைகளை பற்றி தூக்கி சோஃபாவில் அமர வைத்து, அவருக்கு பருக தண்ணீர் கொடுத்தான்.

 

மற்ற இருவரின் முகத்திலும் நீர் தெளித்து எழுப்பி அமர வைத்து, தண்ணீர் பருக செய்து சற்று ஆசுவாசப்படுத்தினான்.

 

“உனக்கு மனோதைரியம் அதிகம் பா, அதான் தாக்குபிடிச்சு இருக்க” ருத்ரதேவன் சொல்ல,

 

“நீங்க வேற ஐயா, பேயிக்கு எங்களை கொல்றது தான் மோட்டிவ்வா‌ இருந்தா, நாங்க வந்த அன்னைக்கே எங்க எல்லாரையும் போட்டு தள்ளி இருக்கும்! இதுவரைக்கும் எங்களை பயமுறுத்தி இருக்கே தவிர, எங்கள்ல யாரையுமே காயப்படுத்தினதில்ல… அந்த தைரியம் தான் எனக்கும்” என்று விக்கி விளக்கம் தர, மித்ராவதியும் அவன் சொல்வதை ஆமோதித்து சோர்வாய் தலையசைத்தார்.

 

அனைவருக்கும் பழச்சாறு வரவழைக்கப்பட்டது.

 

இன்னும் பயம் விலகாமல் தரையில் ஓய்ந்து போய் உட்கார்ந்து இருந்த கருப்பசாமி, பழச்சாறை வாங்க மறுத்து, 

“வாங்க எல்லாரும் இங்கிருந்து போயிடலாம். இல்ல, அது… நம்ம எல்லாம் காவு வாங்கிடும். ஓடியாங்க” என்று படபடத்து விட்டு அவர் எழுந்து ஓட முயல, விக்னேஷ் அவரை பிடித்து நிறுத்தினான்.

 

“அப்படி எல்லாம் எதுவும் ஆகாது பெரியவரே நீங்க பயப்படாம முதல்ல இதை குடிங்க. தெம்பு வரும்” என்று தைரியம் சொல்லி, அவரின் கையில் பழச்சாறை திணித்தான்.

 

கைகள் நடுங்க அதை மடமடவென பருகியவர், “ஏன் புரியாம அடம்புடிக்கிறீங்க, இந்த கிழவன் சொல்றதை கேளுங்க, முதல்ல இங்கிருந்து கிளம்பலாம் வாங்க” இப்போதும் கருப்பசாமி பயம் குறையாமல் அங்கிருந்து ஓடவே எத்தனித்தார். ஆனால் மறுபடி அந்த கதவில் கைவைத்து திறக்க பயமாயிருக்க, அவர்களிடம் கெஞ்சினார்.

 

“நீங்க தான் புரிஞ்சுக்காம பேசுறீங்க கருப்பசாமி, உயிர்காவு வாங்கிறது தான் அந்த ஆத்மாவுக்கு முக்கியம்னா இங்க தங்கியிருக்க ஒருத்தர் கூட இப்ப உயிரோட இருந்திருக்க மாட்டாங்க” ருத்ரன் சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை.

 

“அது இப்ப நம்மள காட்டனது பத்தலையா இன்னும் பெருசா காட்டனுமா” பயத்தில் பிடிவாதமாக கேட்க,

 

“அது பயமுறுத்தனும்னு நினைச்சிருந்தா, இவங்கெல்லாம் வந்த முதல் நாள்லயே இங்கிருந்து விரட்டி அடிச்சு இருக்கும், அந்த ஆத்மாவுக்கு யாரையும் பயமுறுத்தற எண்ணமில்ல… தன்னோட இருப்ப உங்களுக்கு உணர்த்த‌ முயற்சி செஞ்சிருக்கு. உங்கள்ல யாராவது‌ தனக்கு உதவுவாங்களான்னு எதிர்பார்த்து இருந்து இருக்கு” ருத்ரதேவன் பொருமையாக விளக்கினார்.

 

“அப்படின்னா, ஏதோவொரு வகையில என்னால உதவ முடியும்னு பௌர்ணமி ஆத்மாவுக்கு நம்பிக்கை வந்திருக்கு. எப்பாடுபட்டாவது அந்த நம்பிக்கைய நான் காப்பாத்தி ஆகனும்” சொல்லும் போதே மித்ராவதி கண்கள் உணர்வு மிகுதியில் கலங்கின. 

 

“இத்தனை நாள்ல இப்ப மாதிரி நேரா மிரட்டினதில்ல. ஆனா இப்ப… பிராப்ளம் இன்னும் கிரிட்டிகல் ஆகிட்டு போகுதுன்னு தோனுது, நாம என்ன செய்யறது” விக்னேஷ் நிலைமையின் தீவிரம் உணர்ந்து ருத்ரனிடம் கேட்க, ருத்ரன் பார்வை கருப்பசாமியை சுட்டியது.

 

“இவரை விசாரிச்சா அடுத்து நாம என்ன செய்யலாம்னு ஒரு ஐடியா கிடைக்க வாய்ப்பிருக்கு தம்பி, ஏன்னா நம்மள விட இந்த இடத்தை பத்தியும் பங்களா பத்தியும் இவருக்கு தான் நிறைய விசயங்கள் தெரிஞ்சு இருக்கும்” என்க. விக்கியும் மித்ராவதியும் அவரிடம் திரும்பினர்.

 

“நா நான் எ என்ன பப பண்ண முடியும்? உங்க அளவுக்கு கூட எனக்கு‌ எதுவும் தெத்… தெரியாதே” என்று கருப்பசாமி திணற,

 

“நான் கேட்கறதுக்கு‌ மட்டும் உண்மையை மறைக்காம பதில் சொல்லுங்க போதும்” என்ற ருத்ரன், “வெறும் பத்தே நாள் தங்கிட்டு போக வந்த இவங்ககிட்ட தன் இருப்பை உணர்த்தி உதவி கேட்டிருக்குனா… இத்தனை வருஷம் இங்கேயே வாழ்ந்திட்டு இருக்கிற உங்ககிட்ட அந்த ஆத்மா உதவி கேட்காம இருந்திருக்காது…!” ருத்ரன் சொல்லவும் கருப்பசாமி‌ முகம் மிரண்டு வெளிரியது.

 

“சொல்லுங்க பெரியவரே… ஏதோவொரு வகையில் அந்த ஆத்மா தன்னோட நிலைமைய நிச்சயம் உங்களுக்கு உணர்த்தி இருக்கும், இல்லனு பொய் சொல்லாதீங்க… கொஞ்ச நேரம் முன்னாடி நடந்தது நினைவு‌ இருக்கில்ல” 

 

ருத்ரதேவனின் அழுத்தமான மிரட்டலான கேள்வியில், கருப்பசாமி மொத்தமாய்‌ வெலவெலத்து போய், முகம் கலக்கமுற தலைத்தாழ்த்திக் கொண்டார்.

 

“அது வந்துங்க, இந்த பங்களாவ சுத்தி முன்ன எங்களைபோல நிறைய குடும்பங்க தங்கி இருந்தாங்க, இந்த பௌர்ணமி அட்டகாசத்தில பயந்து எல்லாரும் ஒவ்வொருத்தங்களா இங்கிருந்து கிளம்பி போயிட்டாங்க. முதலாளிக்காவும், எங்களுக்குனு இருக்க கொஞ்சநஞ்சம் தோட்டந்தொரவுக்காகவுந்தான் நானும் என் பொஞ்சாதியும் இங்கன‌ இருக்கோம்” கருப்பசாமி பதில் சொல்ல,

 

“ம்ம் எல்லாரும் பயந்து உங்க பாதுகாப்பு முக்கியம்னு ஓடி இருக்கீங்களே தவிர, அந்த ஆத்மா ஏன் இப்படி அலறுதுனு யாருக்குமே யோசிக்க தோனல இல்ல” ருத்ரதேவன் சலித்தபடி கேட்டார். சக மனிதனுக்கு உதவி செய்யவே‌ யோசிக்கும் மனிதர்கள், இறந்த ஆத்மாவிற்கு உதவி செய்ய முன்வருவார்களா என்ன? என்று பெருமூச்செறிந்தார்.

 

“அப்படின்னா ஏதாவதொரு வகையில உங்க கிட்டையும் சுரேந்தர்நாத்தை இங்க அழைச்சிட்டு வர சொல்லி, பௌர்ணமி உணர்த்தி இருப்பா தானே!” மித்ராவதி ஆதங்கமாக கேட்க,

 

“எனக்கு அப்படி எதுவும் தெரிஞ்சதில்லங்க, ஆனா என் பொஞ்சாதிக்கு தான்…” என்று கருப்பசாமி தயங்கி நிறுத்த,

 

“ம்ம் சொல்லுங்க உங்க மனைவிக்கு என்ன தெரிஞ்சது?” ருத்ரதேவன் ஊக்கினார்.

 

எச்சிலை கூட்டி விழுங்கியவர், “என் பொஞ்சாதியும் பௌர்ணமி கூட இந்த பங்களாவில தானுங்க முன்ன வேலை செஞ்சுட்டு இருந்துச்சு… அதுக்கு பௌர்ணமி புள்ள கூட நல்ல பழக்கம் வேற… அன்னிக்கு பௌர்ணமி உடம்ப கரிக்கட்டயா பாத்து அப்பவே காய்ச்சல் வந்து வார கணக்கா படுத்துக்கிட்டா… அப்புறம் கூட தினமும் கனவுல எதையாவது கண்டு அலறுவா…”

 

மூவரும் குறுகிடாமல் அவர் சொல்வதை கவனித்தனர்.

 

“பௌர்ணமி எரிஞ்சு செத்து போறதும், அந்த உடம்பு காத்துல மிதந்து வந்து இவகிட்ட ஏதோ கத்தறமாதிரியும் கனவு கண்டு அலறி துடிச்சு போயிடுவா… அவ தனிச்சிருக்க நேரத்தில கதவை விடாம தட்டி அவளை மிரட்டும்! ஒருமுறை சுயநனவு இல்லாம இந்த பங்களாவுக்குள்ள நுழைஞ்சு, அந்த அறைக்கு முன்னாடி மயங்கி கிடந்தா, நாங்க அவள காணோம்னு எங்கெங்கோ தேடி இங்கன கண்டு புடிச்சோம்!”

 

‘தனக்கு வந்த அதே கனவு!’ என்று மித்ராவதி எண்ணிக்கொள்ள, ‘பாலியும் அப்படித்தான மயங்கி கிடந்தாங்க’ விக்னேஷ் எண்ணிக் கொண்டான்.

 

“எங்க வீடு பூரா பூசை போட்டு, சக்கரம் வச்சு என் பொண்சாதிக்கு காத்து கருப்பு அண்டாம கயிறு கட்டி காபந்து பண்ணி வச்ச அப்புறந்தான் எங்களுக்கு நிம்மதியாச்சு… ஆனாலும் பௌர்ணமி நாள் ராத்திரியில எந்த கட்டும் அதை தடுக்காது… இந்த பங்களாக்குள்ள இருந்து ஆங்காரமா கத்தி கதற சத்தம் ராத்திரி பூரா விடாம கேட்கும்! கூட ஏதேதோ சத்தமும் கேட்கும்! சிலநேரம் இருட்டுல எரியற உடம்போட அது உலாத்தறது தெரியும்! காத்துல கருகுன நாத்தம் வீசி மூச்சு முட்ட வைக்கும்… அதெல்லாம் பார்க்கவே நெஞ்சுகூடு தெறிச்சி போகும்! அதாலயே பௌர்ணமி ராத்திரி நாங்க வெளியே போய் தங்கிக்குவோம். தவறி கூட இங்கன இருக்க மாட்டோம்!” அவர் மூச்சு வாங்க சொல்லி முடிக்க, அங்கே ஆழ்ந்த அமைதி நிலவியது.

 

அவர் சொன்னதை உள்வாங்கிக் கொண்டவர்களுக்கு பதில் வார்த்தை வரவில்லை. என்ன சொல்வது என்றும் புரியவில்லை.

 

உயிருள்ள மனிதர்களுக்கும் உடலழிந்த ஆத்மாவிற்குமான போராட்டம் இது! சாதாரண மனித அறிவுக்கு எட்ட முடியாத அமானுஷ்ய நிகழ்வு!

 

இந்த உலகில் மற்ற எல்லாவற்றையும் விட ஒவ்வொரு மனிதனின் உடலும் உயிரும் விலைமதிப்பற்றது! அத்தகைய பொக்கிஷமான உடலிற்கும் உயிருக்கும் மனிதன் செய்யும் மரியாதை பூஞ்சியமே!

 

தீய பழக்கவழக்கங்களால் தன் உடலை சிதைத்துக் கொள்வது மட்டுமன்று, மற்றவர் உடலை காயப்படுத்துவதும், அவர்கள் உயிரை அழித்து தான் வாழ நினைப்பதும் என்று மனிதன் மிருகதனத்திலிருந்து மீளாமல் மண்டி கிடக்கிறான்! 

 

என்னதான் ஆறறிவு மனிதன் என்று மார்தட்டி கொண்டாலும் ஆதியின் மிருக குணத்தை அவன் உயர் பிறப்பாலும் வேரறுக்க முடியவில்லை! என்று ருத்ரதேவன் மனதில் மூண்ட கவலையோடு எண்ணிக் கொண்டு பெருமூச்செறிந்தார்.

 

இறந்த பிறகும் பௌர்ணமி ஆத்மா தனக்காக நடத்திய போராட்டமும் தொடர்ந்த நீண்ட நாற்பது வருட ஏமாற்றமும் மித்ராவதியை கலங்க செய்தது. எல்லா துன்பத்திற்கும் மரணம் மட்டுமே பூரண விடுதலை எனும்போது இறந்தும் துன்பத்தில் உறழும் நிலை  வருத்தமுற செய்வதாய்.

 

விக்னேஷ் அத்தனை ஆழமாக சிந்திக்கவில்லை. தற்போதைய பிரச்சனைக்கான தீர்வை மட்டுமே அவன் யோசித்தான். எனவே, “அப்ப இத்தனை வருஷத்துல ஒருமுறை கூட சுரேந்தர்நாத் இங்க வந்ததே இல்லயா?” என்ற கேள்வியில் அங்கிருந்த அமைதியை கலைத்தான்.

 

இல்லையென்று தலையசைத்த கருப்பசாமி, “அவருக்குனு இங்க இருக்கற ஓரே சொத்து இந்த பூர்வீக பங்களா மட்டுந்தான். அப்பத்துக்கே கோடியில மதிப்பு வந்தது. இப்ப இதோட மதிப்பு பலகோடி பெரும். இந்த பங்களாவ எப்படியாவது கைமாத்தி விடனும்னு தலைகீழா தண்ணீ குடிச்சு பார்த்தாரு. இப்பவரைக்கும் முடியல. எதுவா இருந்தாலும் போன்ல தான் பேசுவாரு, நான் கூப்பிட்டு பார்த்து‌ விட்டுடேனுங்க”

 

“ஓஹ் அப்ப இன்னும் ரெண்டு நாள்ல அவரை எப்படி இங்க வர வைக்கிறது?” கேட்ட விக்னேஷிற்கு சுரேந்தர்நாத்தை வர வைப்பது கடினமாக தோன்றியது.

 

“கண்டிப்பா வரவைக்க முடியும்” சட்டென மித்ராவதி உற்சாகமாக சொல்ல, மற்றவர்கள் பார்வை அவரிடம் பதிந்தது.

 

“நான் இந்த பங்களாவ வாங்க போறேன்… அப்படினு சொல்லி உடனே ரிஜிஸ்ரேஷன் வச்சுக்கலாம்னு  அவருக்கு கால் பண்ணா நிச்சயமா வருவாரு” மித்ராவதி நம்பிக்கையோடு சொல்ல, மற்ற மூவரும் இது சரி வருமா என்ற நொடிநேர யோசனையில் தாமதித்தனர்.

 

விக்னேஷ், “ஐடியா ஓகே மேடம், பட் அவர் ரிஜிட்ரேஷனுக்கு ஓகே சொன்னாலும் இந்த பங்களாவுக்கு வர சம்மதிக்கனுமே” சந்தேகமாக யோசித்தான். நாற்பது வருடங்களாக பல கோடி பெருமானமுள்ள சொந்த இடத்திற்கு வராமல் தயங்குபவர் அத்தனை சுலபத்தில் வர சம்மதிக்க மாட்டார் என்றே தோன்றியது.

 

“அவர்கூட நான் போன்ல பேசியிருக்கேன் விக்கி. அதை வச்சு பார்த்தா ஆளு பணத்துக்கு அடி பணியவரு. முதல்ல இந்த பங்களாவ ஷூட்டிங்க்கு தரவே மாட்டேன்னு மறுத்தவரு, அமௌன்ட் அதிகமா சொன்னதும் ஒத்துக்கிட்டாரு. அதோட இந்த பங்களாவ எப்படியாவது வித்துடனும்னு தான் ரொம்ப வருஷமா முயற்சி பண்ணிட்டு இருக்காரு வேற. கண்டிப்பா நான் கொடுக்கற சான்ஸ மிஸ் பண்ண மாட்டாரு, எப்படியாவது இந்த பங்களாவ என்கிட்ட வித்தே ஆகனும்னு ஃபுல் எஃபெக்ட் எடுப்பாரு. சோ கண்டிப்பா இங்க வருவாரு” மித்ராவதி கணக்கை சரியாக வகுத்தார்.

 

“நமக்கு வேற வழி இல்ல, ரெண்டு நாள்ல அவரை இங்க வர வைக்கனும் அவ்வளவு தான்” ருத்ரதேவன் சாதமாக சொல்லவும், மித்ராவதி தாமதிக்கவில்லை. உடனே சுரேந்தர்நாத் கைப்பேசி எண்களை தேடி எடுத்து பேசினார்.

 

அவரது பேச்சை மற்ற மூவரும் கவனித்து இருந்தனர்.

 

“…”

 

“எஸ் சார், எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ரிஜிட்ரேஷன் முடிச்சுக்கலாம்”

 

“…”

 

“அமௌன்ட் பத்தி எனக்கு கவலை இல்ல சார், நான் நெட் கேஸ்ஸா செட்டில் பண்ணிறேன்”

 

“…”

 

“நாளையோட இங்க ஷூட்டிங் முடிஞ்சது. அப்பறம் படம் ரிலீஸ் ஆகற வரை என்னால நகர முடியாது. சோ நீங்க இங்க வந்தா ஒரு அக்ரீமென்ட் போட்டுக்கலாம்”

 

“…”

 

“உங்க சொந்த வீட்டுக்கு வர ஏன் இவ்வளவு தயங்குறீங்க? உங்களுக்கு சேல் பண்ண விருப்பம் இல்லனா இட்’ஸ் ஓகே, நான் வேற பார்த்துக்கிறேன்” மித்ராவதி காட்டமாக சொல்லிவிட, மறுமுனையில் அவசரமாய் பணிந்து வந்தார் சுரேந்தர்நாத்.

 

“ஓகே டன், நாளைக்கு மறுநாள் எங்க டீம் கிளம்புறோம், அதுக்குள்ள நீங்க வந்தா நாம டீல் பேசிக்கலாம்” கராராக சொல்லி  இணைப்பை துண்டித்த மித்ராவதி, நிமிர்ந்து கட்டைவிரல் உயர்த்தி, “சக்ஸஸ்” என்றார்.

 

***

அவள் வருவாள்…