அவள் பௌர்ணமி 2

images (27)-c9bf379b

அவள் பௌர்ணமி 2

 

“டேக் ஓகே… வெல் டன் கைய்ஸ்” 

இயக்குனர் மித்ராவதி இரு கைகளையும் தூக்கி கட்டைவிரல் உயர்த்தி காட்டினார். 

படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரும் அந்த காட்சியின் பிரம்மிப்பில் இருந்து முயன்று விலகி கைத்தட்டினர்.

பௌர்ணமி, சந்துரு இருவரும் புன்னகையுடன் இறங்கி வர, மித்ராவதி, பௌர்ணமியை அணைத்துக் கொண்டார்.

“வாவ் எக்ஸலன்ட் அமிர்தி, அந்த ஊமை பொண்ணோட உணர்வுகளை அப்படியே கண்முன்னால கொண்டு வந்துட்ட, இது உன்னோட ஃபர்ஸ்ட் ஃபிலிம்னு சொன்னா யாராலையும் நம்ப முடியாது… ஆக்டிங் ஃபீல்ட்ல உனக்கு பிரைட் ஃபியூச்சர் இருக்கு. பெஸ்ட் விஷ்ஸஸ் டியர்” என்று மனதார பாராட்டினார் இயக்குனர் மித்ராவதி.

நாற்பதை தொட்ட வயது. திரைப்படத் துறையில் அவரின் அனுபவங்களும் அதிகம். ஆண் இயக்குநர்களின் ஆதிக்கம் மிகுந்த திரைத்துறையில் பெண் இயக்குனராக தனக்கான அழுத்தமான தடம் பதித்தவர். இவர்‌ இயக்கும் படங்கள் வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்டு அழுத்தமானதாக,‌ சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும்.

பெரும்பாலும் நிஜ சம்பவங்களைக் கொண்டே இவரின் கதை பின்னல்கள் அமைந்திருக்கும். இதோ ‘நிழல் காதலன்’ இந்த படமும் நிஜ நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு இவரின் கற்பனை அரிதாரம் பூசி தயாராகிக் கொண்டிருக்கிறது. 

மித்ரா இயக்கிய படங்கள் தோல்வி கண்டதாக சரித்திரம் இல்லை. அத்தனை நுணுக்கமான திறமையும் அனுபவமும் கொண்டவர். அவரின் அடுத்த வெற்றி பயணம் இது. முதல் முதலாக அவர் கையில் எடுத்திருக்கும் திகில் படமும் இதுதான்.

எங்கும் இருள் சூழ்ந்து, கல்லும் முட்செடிகளும் மண்டி கிடக்கும் அந்த தண்டவாள பகுதியில், படப்பிடிப்பு குழுவினரும், படப்பிடிப்பு சாதனங்களும் சுற்றி அடைத்து இருந்தன.

இந்த காட்சிக்காக குளிரான இரவையும் பொருட்படுத்தாது பட குழுவினர் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.

அமிர்தியின் நேர்த்தியான நடிப்பு, இந்த காட்சியை இன்னும் மெருகேற்றி இருக்க, தயாரிப்பாளர், துணை இயக்குநர்கள், கேமராமேன் போன்றோர்  அமிர்திக்கு வாழ்த்து சொல்லி பாராட்டினர். அமிர்தி அனைவருக்கும் புன்னகையோடு நன்றி தெரிவித்துக் கொண்டாள்.

அவள் நடித்த முதல் காட்சிக்கு வந்த இத்தனை பாராட்டு, நடிப்பின் மேல் அவளுக்கு இருக்கும் ஆர்வத்தையும் தன் திறமையின் மேல் இருக்கும் நம்பிக்கையையும் கூட்டுவதாக அமைந்தது.

ஆனால், இதையெல்லாம் பார்த்து விதார்த்தின் முகம் மட்டும் சுருங்கி போனது. இந்த திகில் படத்தின் நாயகன் அவன். இறந்து போன சந்துருவின் ஆத்மாவாக நடிப்பவன்.

இதற்கு முன் சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளான். கதையின் நாயகனாக நடிப்பது இதுவே முதல்முறை.

இயக்குனர் மித்ராவதி, விதார்த்தின் நடிப்பு திறமையையும் அவனின் ஆறடி உயர கவர்ச்சியான தோற்றத்தையும் கொண்டு, சந்துரு கதாபாத்திரத்திற்கு பொருந்துவதாகவும் இருக்க இவனை தேர்ந்தெடுத்து இருந்தார்.

முகம் வதங்கி நின்றவன் தோளை தட்டிய விக்னேஷ், “என்ன ஹீரோ சார், ஆத்மாவா‌ நடிக்கிறது கஷ்டமா இருக்கா?” என்று வினவினான். விக்னேஷ் படத்தில் துணை‌ இயக்குனராக பணிபுரிபவன். 

“அதெல்லாம் இல்ல விக்கி, நான் சரியா நடிக்கலையா என்ன? எல்லாரும் அமிர்திய மட்டும் பாராட்றாங்க” விதார்த் சற்று பொறாமையாகக் கேட்க,

“நீ சந்துரு கேரக்டரை நல்லாவே நடிச்சு கொடுத்த விதார்த்… ஆத்மாவா நீ நின்னது, உன்னோட ஃபேஸ் எக்ஸ்பிரஷன்ஸ் எல்லாமே பர்ஃபெக்ட். பட் எந்த டைலாக்கும் பேசாம காது கேக்காத, வாய் பேச முடியாத ஊமை பொண்ணா, ஃபேஸ் எக்ஸ்பிரஸன்ஸ் அன் பாடிலேங்க்வேஜ் மட்டும் யூஸ் பண்ணி முழு நீள சீனும் அதிகமா டேக் எடுக்காம முடிச்சு தந்திருக்காங்க அமிர்தி… இந்த பாராட்டு அவங்களுக்கு தகுதியானது தான்” என்று விளக்கினான் விக்னேஷ்.

விதார்த்திற்கும் அது புரிந்து இருந்தது. எனவே ஆமோதித்து தலையாட்டினான்.

“டோன்ட் வொர்ரி மேன், பிளாஷ்பேக் ஃபுல்லா உன்னோட பார்ட் தான்… நடக்கமுடியாத ஹீரோ கேரக்டர்ல நீ உன் பெஸ்ட்ட கொடு” என்று அவன் கையை குத்தி உற்சாகம் ஊட்ட, விதார்த் முகமும் தெளிந்து மலர்ந்தது.

எப்படியும் அவனுடைய முழு திறமையையும் இந்த படத்தில் அவன் தந்தே ஆக வேண்டும். தவறினால் மீண்டும் இரண்டாம் கட்ட கதாபாத்திரங்களில் நடிக்க மட்டுமே அனுமதிக்கப்படுவான். முயன்று வெற்றி பெற்றால் அவனுக்கு தமிழ் திரையுலகில் ஏறுமுகம் தான். விதார்த் மனதிற்குள் உறுதி ஏற்றுக் கொண்டான்.

முதல்கட்ட காட்சி வெற்றிகரமாக முடிந்துவிட, அனைத்தையும் ஏறகட்டும் வேலைகள்‌ அங்கே மும்முரமாகின. 

அமிர்தி கேரோவனிற்கு சென்று உடைமாற்றி சுடிதாரில் வெளியே வந்தாள். 

விதார்த் அவளை பார்த்து சினேக முறுவல் புரிந்தான். “இன்னைக்கு கலக்கிட்டீங்க அமிர்தி,‌ வாழ்த்துக்கள்”  தன் முறைக்கு இவனும்‌ பாராட்ட, “தேங்க்ஸ் விதார்த்” என்று அவளும் நன்றி உரைத்தாள்.

“அய்யையோ அய்யோ அய்யோ” என்று அலறிக் கொண்டு ஓடி வந்தவள் அவர்கள் இருவரையும் மோதிக் கொண்டு அவளும் தடுமாறி நின்றாள்.

அவள் பாக்கியலட்சுமி. பாலி என்ற பெயர் சுருக்கம் திரைத்துறையில் பிரபலம். அமிர்தியின் உதவிக்காக அவளின் பெற்றோரால் தேர்ந்தெடுக்கப்பட்டவள். 

முப்பதை கடந்த வயது. ஆனாலும் அந்த வயதிற்குரிய நிதானத்தை இவளிடம் பார்க்க முடியாது. சற்று துடுக்கான குணம் கொண்டவள். தோற்றத்தில் சற்று பூசினாற் போன்ற உடல்வாகோடு துறுதுறுத்த உடல்மொழி கொண்டிருந்தாள்.

“அச்சோ பாலி, என்ன இதெல்லாம் ஒழுங்கா பிஹேவ் பண்ணு” அமிர்தி கண்டிக்க, அவளின் பாலி அதை சற்றும் சட்டை செய்யாமல்,

“அதைவிடு அமுமா, உனக்கு விசயம் தெரியுமா?” என்று பதறியவள்,‌ “அடுத்த சீன் சந்துருவோட பங்களாவில எடுக்க போறாங்களாம்… அதுவும் அந்த‌ பார்ட்‌ முடியறவரைக்கும் நாம அதுல தான் தங்கனும் வேறயாம்” என்று கைகள்‌ வெடவெடக்க படபடத்தாள் பாலி.

அவள் சொன்னதை கேட்டு அமிர்தி, விதார்த் இருவரின் முகங்களும் யோசனை காட்டின.

விதார்த், விக்கியை கைக்காட்டி அழைத்தான். “என்ன விக்கி இதெல்லாம் செட் போறதா தான பேசி இருந்தீங்க, இப்ப என்ன புதுசா அந்த பங்களால சூட்டிங் சேன்ஜ் பண்ணி இருக்கீங்க… எங்களுக்கு பிராப்பர் இன்ஃபார்ம் கூட தரல” அந்த பங்களாவை பற்றி உலவும் அமானுஷ்ய கதைகளை ஓரளவு கேள்விப்பட்டு இருந்ததால் விதார்த்தும் சற்று பதற்றமாக கேட்க,

“இது மித்ரா மேடமோட ஏற்பாடு விதார்த். நாம எதுவும் பேச முடியாது” விக்னேஷ் விளக்கம் சொல்ல,

“பட் விக்கி, இது ரிஸ்க் இல்லையா” என்று அமிர்தியும் தயங்கி கேட்டாள்.

“ஆமா ஆமா, இது ரொம்ப பெரிய ரிஸ்க்கு, பேய் படம் எடுக்க, பேய் இருக்க வீட்டையா உங்க டைரக்டர் பாப்பாங்க” பாலியும்‌ மறுத்து படபடக்க,

“இப்படியே அவங்ககிட்ட பேசி தொலைக்காத உன்ன கடிச்சு கொதறிடுவாங்க” விக்னேஷ் பாலியை எச்சரிக்கவும், மித்ராவதி அங்கே வரவும் சரியாக இருந்தது.

“வொன்டர்புல் நியூஸ் ஃபார் யூ கைய்ஸ், சந்துருவோட கதைய அவன் வாழ்ந்த வீட்டலையே எடுக்க நமக்கு பர்மிஷன் கிடைச்சிருக்கு” என்று அவர்‌ உற்சாகமாக சொல்ல, மற்ற மூவருக்கும் என்ன சொல்வது என்று புரியவில்லை. 

“பேய் வீட்டுக்கு போறதெல்லாம் உங்களுக்கு வொன்டரு புல்லு நியூசா மேடம்… எங்களை உசுரோட ஊர் திருப்பி அனுப்ப‌ ஐடியா இல்லயா உங்களுக்கு?” பாலி தான் துடுக்குதனமாக கேட்டு வைத்தாள்.

“சில்லியா பேசாத பாலி. அந்த வீட்டுல பேய் இருக்குன்னு சொல்றதெல்லாம் சும்மா வதந்தி. உண்மை இல்ல. ஒரு ரியல் ஸ்டோரிய, அதோட ரியல் லொகேஷன்ல எடுக்கும் போது இன்னும் நம்ம படத்தோட எஃபெக்ட் அதிகமாகும். எவ்வளவு போராடி அங்க ஷூட்டிங் எடுக்க பர்மிஷன் வாங்கி இருக்கோம் தெரியுமா? இதுவொரு நல்ல சான்ஸ். மிஸ்‌ பண்ணா நமக்கு தான் லாஸ்” மித்ராவதி குரலை உயர்த்தி காட்டமாக பேச, மற்றவர்கள் வாய் அடைத்து கொண்டது.

விக்கி ‘தேவையா இது?’ என்பது போல பாலியை முறைக்க, 

“இதெல்லாம் சரிப்பட்டு வராது, சும்மா இருக்க நாய் வால கடிச்சு விடறதும், சாமானு இருக்க பேய் விட்ல குடி போறதும் ஒன்னு. நான் சொன்னா கேக்கவா போறீங்க” பாலி சத்தமாகவே முணுமுணுத்தாள்.

“சும்மா உளறாத பாலி, பேய்னு எதுவும் இங்க கிடையவே கிடையாது. பேய், பிசாசு எல்லாம் நம்மோட அதீத கற்பனை மட்டும் தான்” என்றவர்,

“நெக்ஸ்ட் வீக் சந்துரு வாழ்ந்த பங்களாவுக்கு நாம எல்லாரும் போறோம். பிஃப்டீன் டேஸ் அங்க தான் ஷூட்டிங். விதார்த், அமிர்தி உங்களுக்கு புரிஞ்சதா?” மித்ரா முடிவோடு கேட்க, திரைத்துறையில் முதற்படியில் இருக்கும் அவர்களாலும் பெரிதாக மறுப்பு சொல்ல முடியவில்லை. சரியென்று தலையசைத்தனர்.

அடுத்த வாரம் அந்த பங்களாவை வந்தடைந்தனர் படக்குழுவினர். சற்று பயத்துடனே வந்தவர்கள், அந்த பங்களாவை பார்த்து வியந்து தான் போயினர்.

அத்தனை அழகாக புதுப்பிக்கப்பட்டு இருந்தது அந்த மாளிகை. மலைபாங்கான இடத்தில் சுற்றிலும் பச்சைநிற தோட்டத்துடன் தனித்து நேர்த்தியாக அமைந்திருந்தது.

பாலி கூட வாய்பிளந்து கொண்டாள். ”அடங் கொய்யால, என்னங்கடா இது பேய் பங்களானு சொன்னாங்க, இங்க பேய் இருக்கறத்துகான எந்த தடயமும் இல்ல. வழி மாறி வந்து புட்டோமோ” பாலி, அமிர்தி காதில் கிசுகிசுக்க, “பாலி, இல்லாத பேய நீயே வர வச்சுடுவ போல அமைதியா வா” என்று அமிர்தி முன் நடந்தாள்.

அங்கே வேலை செய்யும் வயதான தம்பதி பங்களா முன் வணக்கம் வைத்து அவர்களை வரவேற்க, “சொன்ன நேரத்திற்கு பங்களாவ கிளீன் பண்ணி கொடுத்ததுக்கு தேங்க்ஸ்” என்றார் மித்ராவதி.

“இது எங்க வேலைங்க மா, ஐயா தான் போனுல நீங்கல்லாம் படம் புடிக்க வரதா தகவல் சொன்னாரு” என்றார் வேலைக்கார பெரியவர்.

“இந்த பங்களா பத்தி வெளியே என்னென்னமோ சொல்றாங்க… நீங்க தைரியமா இங்கேயே தங்கி இருக்கீங்க?” படத்தில் துணை இயக்குநராக இருக்கும் பிரியா வியந்து கேட்க,

“நீங்க அந்த வதந்தி பேச்செல்லாம் நம்பாதீங்க மா, நாங்க அதோ அந்த தோட்டத்து வீட்டுல தான் ரொம்ப வருஷமா தங்கி இருக்கோம்” அவர் சொல்ல, அந்த பங்களாவை விட்டு சற்று தூரத்தில் அவரின் சிறிய வீடு தெரிந்தது. படக்குழுவினர் அனைவரும் நிம்மதியோடு உள்ளே சென்றனர்.

“ஏன் இப்படி உள்ளத மறச்சு சொன்னீரு? ஒவ்வொரு பௌர்ணமி நாளுலயும் இங்க நடக்கிறதுக்கெல்லாம் பயந்துட்டு தான், நாம அந்த நாள்ல வெளியே எங்கேயோ போயி தங்கிட்டு வாரோம்… இப்ப இவங்கள இதே பங்களா உள்ளார தங்க வச்சு ஏதாவது ஆச்சுனா?” அந்த பெரியவரின் மனைவி கலவரத்தோடு ஆதங்கப்பட,

“அட அடுத்த பௌர்ணமி வரதுக்குள்ள இவக எல்லாரும் போயிடுவாங்க புள்ள, நீ விசனபட்டுக்காத… வருச கணக்கா மூடி கிடந்த பங்களாவுக்கு இப்பவாவது வேலை வந்துச்சேன்னு சந்தோசபடுவியா” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

பங்களாவின் உட்புற பிரம்மாண்டத்தைப் பார்க்கவும் அனைவருக்கும் நிம்மதி. முக்கிய நடிகர்கள், துணை நடிகர்கள், மற்ற படக்குழுவினர்களுக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டு இருந்தன.

மித்ரா, விக்கி, பிரியா, முகிலன் அந்த பங்களா முழுவதையும் ஆராய்ந்து படமெடுக்க இடங்களை தெரிவு செய்வதில் ஆயத்தமாகினர்.

“இதே பங்களால தான உண்மையான சந்துருவும், பௌர்ணமியும் வாழ்ந்து இருந்தாங்க?” கேட்கும் போதே பிரியாவின் உடல் சிலிர்த்தது.

“ஆமா ப்ரியா, அவங்க ரெண்டு பேரோட துர் மரணம் கூட இதே பங்களால அடுத்தடுத்து நடந்து இருக்கு… அவங்களோட முடிவை தற்கொலையா எடுத்துக்கிட்டு சரியான விசாரணை இல்லாம மர்மமாவே கைவிடப்பட்டுடுச்சு… என்னோட ஊகத்திலயும் கற்பனையிலும் அவங்களோட மரணத்துக்கு நியாயம் செய்ய முயற்சிக்கிறேன். இந்த ‘நிழல் காதலன்’ படம் அவங்க ரெண்டு பேருக்கான என்னோட சமர்ப்பணம்” மித்ராவதி ஒருவித தீவிரத்தோடு உரைத்தார். 

கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக சந்துரு, பௌர்ணமியின் வாழ்க்கை விவரங்களை சேகரித்து, திரைக்கதை அமைப்பதில் முழ்கி இருந்ததால் அவருக்குள் ஏற்பட்டிருந்த தாக்கம் இது.

இரவு உணவு முடித்து ஓய்வை ஒதுக்கி மறுநாள் காலை படப்பிடிப்பிற்கான காட்சிகளை விளக்கிக் கொண்டிருந்தார் மித்ராவதி.

“பௌர்ணமி அவளோட ரூம்ல தூங்கிட்டு‌ இருக்கா, அப்போ திடீர்னு…” அவர் ஆரம்பிக்கும் போதே ஏதோ விழுந்து உடையும் சத்தம் கேட்க, அங்கிருந்த அனைவருமே பதறி நடுங்கினர்.

***

அவள் வருவாள்…