அவள் பௌர்ணமி 20(1)

IMG-20200921-WA0010-be061841

அவள் பௌர்ணமி 20(1)

மறுநாள் காலை அந்த பங்களாவில் இருந்து கிளம்பி செல்ல படக்குழுவினர் வேகவேகமாய் ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். படப்பிடிப்பு சாதனங்கள் ஒவ்வொன்றாக வாகனங்களில் ஏற்றும் வேலைகள் நடைபெற்றிருக்க அவற்றை பார்வையிட்டிருந்தார் மித்ராவதி.

 

“இப்ப இப்படி அவசரமா கிளம்ப வேண்டிய அவசியம் என்ன வந்தது மேடம்?” குரல் கேட்டு திரும்ப,  ஒளிப்பதிவாளர் முகிலன் தான் நின்றிருந்தார்.

 

“இன்னும் டூ டேஸ் மட்டும் இருந்தா படம் ஃபுல்லா முடிச்சிடலாம், அதைவிட்டு இப்ப எதுக்காக பிளான் சேன்ஞ் பண்ணீங்க?” முகிலன் பொறுக்காமல் கேட்டு விட்டார்.

 

“நான் தான் சொன்னேனே முகிலன், கிளைமேக்ஸ் சீன் நாம செட் வச்சு முடிச்சுக்கலாம், பிரச்சனையில்ல புரொடியூஸர் கிட்டயும் பேசிட்டேன்” மித்ராவதி இயல்பான குரலில் விளக்கம் தர,

 

“ஈஸியா டூ டேஸ்ல ஃபினிஷ் பண்ண வேண்டியதை ஒன் வீக் இழுக்கறது புத்திசாலிதனம் இல்ல மேடம்” முகிலன் குறை கூற, மித்ராவதியின் முகம் இறுகியது.

 

அவர் இரு கைகளையும் குறுக்கே கட்டியபடி, “இப்ப நான் முட்டாள் தனமா என்ன செஞ்சுட்டேன்னு குற்றம் சொல்றீங்க” அமர்த்தலான குரலில் கேட்க,

 

“எதுக்காக இப்ப ஷூட்டிங் கூட முடிக்காம அவசர அவசரமா இந்த இடத்தை விட்டு கிளம்ப சொல்றீங்கனு எனக்கும் தெரியும் மேடம்” முகிலனும் சரிக்கு சரியாக அழுத்தமாக சொன்னார்.

 

“ஆஹான் என்ன தெரியும் உங்களுக்கு” அலட்சிய பாவத்தோடு மித்ராவதி கேட்க,

 

“புதுசா என்ன, நாளைக்கு ஃபுல் மூன் டே, இங்க சொல்ற பேய் கதையை கேட்டு உங்களுக்கும் பயம் வந்துடுச்சு. அதான் இப்படி விழுந்தடிச்சு ஓட முடிவு பண்ணீட்டீங்க” அவரும் அலட்சியமாக பதில் தந்தார்.

 

மித்ராவதி குறுக்கே பேசவில்லை. நெற்றி சுருக்கி புருவங்களை உயர்த்தி இறக்கினார் அவ்வளவே.

 

“மத்தவங்க பயப்படுறது பத்தி எனக்கு கவலை இல்ல மேம், பட் நீங்க… இப்படி பேய், அது இதுன்னு இல்லாத ஒரு விசயத்தை நம்பறது தான் எனக்கு இரிட்டேட்டிங்கா இருக்கு. உண்மைய சொல்ல போனா பேய்னு ஒன்னை உருவாங்கறவங்களே நாங்க தான் மேடம்… எங்க கிராபிக்ஸ் பார்த்தா, ஒருவேளை நிஜபேய் இருந்தா கூட பயந்து ஓடி போயிடும்… அதைவிட்டு சும்மா, இன்டர்நெட் காலத்தில போய் பேய், பூதமெல்லாம் நம்பிக்கிட்டு, சுத்த நான்சென்ஸ்” படபடவென பேசியவர் இறுதி வார்த்தைகளை மட்டும் வாய்க்குள் முணுமுணுத்து கொண்டார்.

 

“முடிச்சிட்டீங்களா முகிலன்? இந்த படத்தோட டைரக்டர் நான் தான். சோ எந்த சீன் எப்ப எடுக்கனும், எங்க எடுக்கனும், எப்படி எடுக்கனும்ற முடிவும் என்னோடது மட்டும் தான், இதுக்கும் மேல நீங்க வேற ஏதாவது சொல்லனுமா?” மித்ராவதி அலட்டாமல் கேட்க, முகிலன் அசட்டையாக தலையசைத்து விட்டு நகர்ந்து கொண்டார்.

 

அடுத்த சிலமணி நேரங்களில் அந்த பங்களா மீண்டும் வெறிச்சோடி போனது. 

 

அமிர்தி கிளம்பும் முன் கடைசியாய் ஒருமுறை அந்த மாளிகையின் ஒவ்வொரு இடமாய் பார்த்தபடி நடமிட்டு வந்தாள். உடன் பாலியும்.

 

சில நாட்களேயாயினும், வெறும் நடிப்புக்காக இருந்தாலும், இந்த வீட்டில் என்றோ வாழ்ந்த ஒருத்தியாய் தானும் வேடமிட்டு வாழ்ந்ததாய் நினைந்து நெகிழ்ச்சிக் கொண்டாள் அவள்.

 

“நீ இம்புட்டு ஃபீல் பண்ணி பார்க்கறதுக்கு இங்க எதுவும் இல்ல அமுமா, ஓவரா எமோஷனல் ஆகாம சீக்கிரம் கிளம்பு போகலாம்” பாலி அலுத்தப்படி சொல்ல,

 

“அப்படியில்ல பாலி, இந்த இடம் எனக்கு ஸ்பெஷல் தான். இங்க நான் ஒவ்வொரு முறையும் பௌர்ணமியா நடிக்கும் போதும் அந்த ஊமை பெண்ணோட உணர்வுகளை என்னால ஃபீல் பண்ண முடிஞ்சது” அமிர்தி மென்மையாய் சொல்ல,

 

“அடியாத்தி, என்ன அமுமா ஏதேதோ சொல்லி என்னை பதற வைக்கிற, எந்த சேதாரமும் இல்லாம திரும்பி போறோம்னு நானே வேண்டிக்கிட்ட தெய்வம் எல்லாத்துக்கும் நன்றி சொல்லிட்டு இருக்கேன், நீ வேற” பாலி பதறியபடியே சொன்னாள்.

 

அதற்கும் மென்மையாய் புன்னகைத்த அமிர்தி, “இந்த பங்களா பத்தி கேள்விப்பட்டு முதல்ல நானும் பயந்தேன் தான் இல்லனு சொல்லல, பட், அந்த பயத்தையும் தாண்டி இந்த இடத்தில ஓர் உயிரோட்டத்தை என்னால உணர முடிஞ்சது பாலி. என்னோட நடிப்பை நீங்க எல்லாரும் நல்லாயிருக்குனு சொன்னீங்கல்ல, அதுக்கு காரணமும் அந்த ஃபீல் தான், நான் எந்த பெரிய எஃபெக்டும் எடுக்காம அந்த கேரக்டர் எனக்கு கேட்ச் ஆச்சு” அவள் உணர்ந்து சொல்ல, பாலி இருகரம் தலைமேல் கூப்பி பெரிதாய் அவளுக்கு ஒரு வணக்கம் வைத்தாள்.

 

“நீ சொல்லறதை கேட்டா எனக்கு இன்னும் கப்பங்கலங்குது அமுமா, போதும் உன் ஃபீலிங்க்ஸ் எல்லாம் இங்கேயே ஏறகட்டி வச்சுட்டு நடைய கட்டு” என்று பாலி பரபரக்க, அவளின் அலும்பில் அமிர்தி வாய்விட்டு சிரித்து விட்டாள்.

 

அப்போதுதான் அங்க வந்த விதார்த், தீபக்‌ இருவரும், அமிர்தியின் சிரிப்பை பார்த்து பயத்தில் சட்டென நின்றனர்.

 

“பாஸ் இதென்ன இப்படி சிரிக்கிறாங்க, பேய் இன்னும் இவங்கள விட்டு போகல போலவே” தீபக் கிசுகிசுக்க,

 

“நீ வாய மூடிட்டு வாடா” என்று அவனை அடக்கிய விதார்த், அமிர்தி, பாலியை விட்டு தூரமாய் நகர்ந்து சுற்றிக் கொண்டு வெளியேறினர்.

 

அவர்களை வித்தியாசமாய் கவனித்த பாலி, “அமுமா இவனுங்களுக்கு என்னாச்சு, இப்படிக்கா போற வாசலுக்கு அப்படிக்கா சுத்திக்கிட்டு போறானுங்க, கிறுக்கு புடிச்சிருக்குமோ?” என்று கேலி பேசி சிரிக்க, “அவங்களை பத்தி நமக்கென்ன நாமளும் கிளம்பலாம் வா பாலி” என்று அமிர்தியும் உடன் நடந்தாள்.

 

அந்த பங்களாவை விட்டு வெளியேறும் போது கேட்டின் அருகே நின்றவள் திரும்பி, பங்களா மீது சில நொடிகள் பார்வை பதித்தாள்.

 

“ஆத்தீ, உனக்கு நல்லாவே கிறுக்கு புடிச்சிருக்கு போல, வீட்டுக்கு போனதும் வேப்பிலை அடிக்க சொல்லனும், அங்கேயே வெறிச்சு பார்த்து நிக்காத அமுமா, ஏதாவது வந்து தொலைக்க போவுது, எனக்கு பதறதுல்ல, முதல்ல நீ கார்ல ஏறு” என்று அமிர்தியை அமர வைத்து பாலியும் அமர்ந்து கொள்ள, கார் அங்கிருந்து கிளம்பியது.

 

உடன் வந்த அனைவரையும் வழி அனுப்பி வைத்த மித்ராவதி, விக்னேஷ் மட்டும் வேலையிருப்பதாக அங்கேயே தங்கிக் கொண்டனர்.

 

“நீங்க மட்டும் தனியா இங்க தங்கறது உசிதமில்ல, வெளியே எங்காவது தங்கிக்கோங்க, நாளைக்கு எல்லாம் நல்லதே நடக்கும்” என்று நம்பிக்கை கூறி ருத்ரதேவனும் விடைபெற்று கிளம்பினார்.

 

மித்ராவதி, விக்னேஷிற்கு நாளை என்ன நேருமோ வென்ற இனந்தெரியாத அச்சம் இப்போதே மையம் கொண்டது.

 

“நாளையோட பிரச்சனை சால்வ் ஆகிடும் மேம், நம்பலாம்” என்று தைரியம் சொல்லி அவரையும் அங்கிருந்து அழைத்து சென்றான் விக்னேஷ். 

 

மறுநாள் விடியல் அந்த மலை பகுதியில் எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி விடிந்தது. ஆனால் மித்ராவதி மனம் மட்டும் படபடப்பிலேயே இருந்தது. அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் இரவு முழுவதும் தூக்கம் தொலைந்து அலைப்புற்றவர், காலை வெகு சீக்கிரமே தயாராகி இருந்தார். 

 

‘இன்றைய இரவு‌ முழுநிலா எழுவதற்குள் பௌர்ணமி ஆத்மா சாந்தி எய்திருக்க வேண்டும்! தவறினால் ஆத்மாவின் கோபம் மேலும் உக்கிரமாகி அழிவு சக்தியாக மாறி வாய்ப்புள்ளது. அந்த ஆத்மா இத்தனை வருடங்கள் பொறுமை காத்ததே பெரிய விசயம்’ ருத்ரதேவன் சொன்னவை நினைவில் வந்து, என்ன நேருமோ? என்ற பதைதைப்பை கூட்டியது.

 

இப்போது கூட இவர் இந்த அமானுஷ்ய விசயங்களை விட்டு விலகி விடலாம் தான். அவருக்கு அதனால் எவ்வித நஷ்டமும் ஏற்பட போவதில்லை. இது இவருக்கு தேவையற்ற வேலை தான் என்றாலும், பௌர்ணமிக்காக அவர் செய்ய துணிந்து இருந்தார்.

 

அவரின் கைப்பேசி ஒலிக்க, எடுத்து பார்த்தவர் முகம் மென்மையானது. காதில் ஒற்றி, “விஜீ…” என்றார்.

 

“ஆஹான் மேடம்க்கு என் பேரெல்லாம் கூட நினைவு இருக்கே, பெரிய விசயம் தான்” எதிர்முனையில் கிண்டல் குரல் ஒலிக்க,

 

“ஆமான்னு சொன்னா என்ன செய்வீங்களாம்?” அவருக்கு இணையாய் மித்ராவின் குரலிலும் மிடுக்கு தெறித்தது.

 

“தூர இருக்க தைரியத்தில பேசுற இல்ல, பக்கத்துல வாடீ, நான் யாருன்னு காட்டறேன்” இப்போது அவர் குரலில் சவாலும் ஏக்கமும் போட்டியிட்டது.

 

“ப்ச் என்னவோ நானும் இப்ப லோன்லியா ஃபீல் பண்றேன் விஜி, கொஞ்சம் பயமா கூட இருக்கு” தன் மனநிலையை மித்ரா மறைக்காமல் உரைக்க, எதிர் முனையில் சற்று பொறுத்து பெரிதாய் சிரிப்பு சத்தம் கேட்டது.

 

“ஹாஹாஹா என்னோட டெர்ரர் பொண்டாட்டி பயப்படுறாளா, எவ்வளோ பெரிய விசயம் அது, சே என்னால பக்கத்துல இருந்து பார்க்க முடியாம போச்சே” விஜயேந்திரன் அநியாயத்திற்கு கவலைப்பட்டார்.

 

“என் பயம் உங்களுக்கு விளையாட்டா இருக்கா? ஒரு பதினஞ்சு நாள் நான் வீட்ல இல்லாத போனதும் குளிர் விட்டு போச்சு உங்களுக்கு” மனைவியின் காட்டமான மிரட்டலுக்கும்,

 

“சென்னையில காயுற வெயிலுக்கு எப்படிடீ குளிரும்” சளைக்காமல் கவுன்டர் கொடுத்தார்.

 

“போங்க, நான் எவ்வளோ சீரியசா சொல்றேன். நீங்க கிண்டல் அடிக்கிறீங்க?” மித்ராவதி முறுக்கிக் கொள்ள,

 

“கோபமா மித்துமா? நல்லா கோப படு. பட்டுக்கோ பட்டுக்கோ” அவர் விடாமல் கலாய்க்க, இவர் முறைத்து சண்டை இழுக்க, பெச்சின் முடிவில் மித்ராவதியின் மனநிலை இலகுவாகி இருந்தது. அவர் மனநிலையை மாற்றி இருந்தார் அவரின் சரிபாதி.

 

“மித்துமா, பேட்லி மிஸ்யூ டா, எப்போ வர?” விஜியேந்திரன் குரலில் இப்போது அப்பட்டமாக ஏக்கம் தொனித்தது.

 

“நாளைக்கு வந்திடுவேங்க, பசங்க எப்படி இருக்காங்க” தாயாய் பிள்ளைகளின் நலன் விசாரித்தார்.

 

“உன்னோட கெடுபிடி இல்லாம ரெண்டும் செம என்ஜாய் பண்ணுதுங்க” விஜய் சொல்லி சிரிக்க,

 

“நான் வந்து கவனிச்சிக்கிறேன் அவங்களை” மித்ராவதி அழுத்திச் சொல்ல,

 

“அப்போ என்னை கவனிக்க மாட்டீங்களா மேடம்?” அவர் சளைக்காமல் வம்புக்கழைத்தார்.

 

“ம்ம் தலை நரச்சும் குசும்பு குறையல! முதல் கவனிப்பு உங்களுக்கு தான்” காதல் மனைவியின் மிரட்டலில் சத்தமாக வாய்விட்டு சிரித்தார் விஜயேந்திரன்.

 

கணவனுடன் பேசிய இந்த சில நிமிடங்களில் மித்ராவதியின் படபடப்பும் பரிதவிப்பும் சமநிலைக்கு வந்திருந்தது. அவரின் மன தைரியமும் மீண்டிருக்க, புத்துணர்வாய் உணர்ந்தார்.

 

“தேங்க்ஸ்ங்க, இப்ப ரொம்ப ரிலாக்ஸா ஃபீல் பண்றேன்” மித்ராவதி இதமாய் கூற,

 

“குட் இதான் என் மித்துமா… விக்கி சொன்னான் நீ ரொம்ப ரெஸ்ட்லஸ்ஸா இருக்கனு அதான் மார்னிங் கால் பண்ணேன்” என்றவர் சற்று நிதானித்து, “உன் தைரியமும் துணிச்சலும் எனக்கு தெரியும், இருந்தாலும் கேர்ஃபுல்லா இரு மா” ஆழ்ந்த குரலில் பத்திரம் சொன்னவர், அழுத்தமான தொலைதூர முத்தம் ஒன்றை பதித்து விட்டு வைக்க,

மித்ராவதி புன்னைகையோடு இணைப்பை துண்டித்தார்.

 

சிறிது நேரத்தில் சந்துருவின் பங்களா நோக்கி பயணமானார். விக்னேஷ் உடன்.

 

அன்று மாலை வரை அவர்களை காத்திருப்பில் விட்டு, தாமதமாக தான் பங்களாவின் முன்னால் வாடகை காரில் வந்து இறங்கினார் சுரேந்தர்நாத். வரலாமா? வேண்டாமா? என்று தனக்குள் போராட்டம் நடத்தி இப்போது இங்கே வந்தேவிட்டார்.

 

நீண்ட நெடிய வருடங்களுக்கு பிறகான வரவு. அந்த இடத்தை சுற்றிலும் அவர் பார்வை நெகிழ்வாக படர, எல்லாமே மொத்தமாய் மாறி போயிருந்தது அவர் பிறந்து வளர்ந்த பிரதேசம். இப்போதும் மாறாமல் அப்படியே நின்றது அவரின் பூர்வீக வீடு மட்டுமே. 

 

சுருங்கிய விழிகளை உயர்த்தி அந்த மாளிகையைப் பார்த்த அவரின் கண்களில் கலக்கமும் மிரட்சியும் மட்டுமே வந்து மறைந்தது.

 

நரைத்த தலையும் தளர்ந்த உடலுமாக தன் முன் வந்து நின்ற முதலாளியை திகைப்பும் அதிர்ச்சியுமாக பார்த்து நின்றார் கருப்பசாமி.

 

தன்னைவிட வயதில் குறைந்தவர், பெரிய வீட்டு பிள்ளை, அந்த காலத்தில் மிடுக்காக சுற்றி திரிந்த கட்டிளங்காளை இப்போது தன்னை விட தளர்ந்து முதிர்ந்து வந்து நிற்கும் முதலாளியை கவலையோடு பார்த்தார்.

 

“ஐயா, என்னய்யா, ஆளே அடையாளம் தெரியாம ஆகிட்டு இருக்கீங்க” என்று வரவேற்ற கருப்பசாமியின் கண்களில் ஈரம் கோர்த்துக் கொண்டது.

 

நேர்மாறாய், அவரை பார்த்ததும் சுரேந்தர் முகத்தில் தெளிந்த புன்னகை விரிந்தது. “ஏலேய் கருப்பு, நான் மட்டும் இல்லல, நீயுந்தான் மாறி போயிருக்க” என்று சொல்லி சத்தமாகவே சிரிக்க, கருப்பசாமி தன் முன் வழுக்கை தலையை சொரிந்து கொண்டார்.

 

சுரேந்தர் அந்த பங்களாவை நோக்கி நடந்தபடி, “அந்த மேடம் வந்துட்டாங்களாலே” கேள்வி எழுப்ப, “அப்பவே வந்துட்டாங்க, உங்களுக்காக தான் காத்திருக்காங்க” என்ற கருப்பசாமி குரல் இடறியது.

 

அதனை கவனத்தில் கொள்ளாதவர், “உன்மேல செம காண்டுல இருக்கேன் தெரியுமா கருப்பு. முன்ன மாதிரி பங்களாவில பிரச்சனை எதுவும் இல்லனா சொல்லி இருக்கலாம் இல்லல, இந்த வீட்டுல வாழவும் முடியாம, விக்கவும் முடியாம நான் திண்டாடுறது உனக்கு தெரியும்ல”

 

“அது வந்துங்கையா…” கருப்பசாமி உண்மை சொல்ல முடியாமல் இழுத்தார்.

 

“அவங்க ஷூட்டிங்க்கு வந்த போது கூட, எனக்கு மரமரனு தான்ல இருந்துச்சு, யாராவது உசுருக்கு ஆபத்து வந்து பிரச்சனை பெருசாகிடுமோனு கூட பயந்துட்டு கிடந்தேன். நல்ல நேரம் அப்படி எதுவும் ஆகல”

 

“அ ஆமாங்கையா”

 

“எது எப்படியோ இப்பவாவது இந்த வீட்டுக்கு விடிவு காலம் வந்திருக்கே, எனக்கு நிரம்ப சந்தோசம்ல” என்று பேசியபடி உள்ளே வந்தவர் கூடத்தில் நின்றவர்களை பார்த்து தயங்கி நின்றார்.

 

நடு கூடத்தில் சக்கரம் வரைந்து, அதன் நடுவே அகன்ற செம்பு பாத்திரத்தில் புனித நீர் நிரப்பி வைத்திருக்க, அதன் முன்னால் ருத்ரதேவன் ஆழ்ந்த தியான நிலையில் அமர்ந்து இருந்தார். அவரின் அருகே சீடன் தொற்றத்திற்கு சற்றும் பொருந்தாமல்‌ திடகாத்திரமான தோற்றத்துடன் கைகளை கட்டியபடி ஒருவன் நின்றிருந்தான்.

 

நாள் முழுவதும் காத்திருந்து சலிப்புற்றிருந்த மித்ராவதியும், விக்னேஷும், புதிதாய் வந்திருந்த முதியவரை பார்த்து திகைப்புற்று ஒருவருக்கு ஒருவரை பார்த்துக் கொண்டனர். சுரேந்தர்நாத்தை இத்தனை வயதானவராக அவர்கள் எண்ணி பார்த்திருக்கவில்லை.

 

திரை விழுந்த கண்களை சுருக்கி பார்த்தவர், “என்ன நடக்குது இங்க? நடு கூடத்துல என்னய்யா செய்யிறீங்க?” என்று ருத்ரதேவனை நோக்கி கோபமாக நடந்தவரை விக்னேஷ் குறுக்கே வந்து நிறுத்தினான்.

 

“நீங்க தான் மிஸ்டர் சுரேந்தர்நாத்தா? வணக்கம், நான் மித்ராவதி” என்று தன்னை சங்கடமாக அறிமுகம் செய்து கொள்ள சற்று நிதானித்தவர், “ஓ நீங்களா, இனிதான மா வீட்ட விக்கிறது பத்தியே பேச போறோம், அதுக்குள்ள என்ன இங்க என்னென்னவோ பண்றீங்க” அடக்கிய கோபத்துடன் கேள்வி கேட்டார்.

 

மித்ராவதியின் பதில் நிதானமாகவே வந்தது. “நான் இந்த வீட்டை வாங்கனும்னா, இங்க அடைப்பட்டு கிடக்கிற பௌர்ணமியோட ஆத்மாக்கு விடுதலை கிடைக்கனும், அதற்கான ஏற்பாடு தான் இதெல்லாம்”

 

சுரேந்தர் முகம் வெளுத்து போனது. “யாயாயாரு பபபௌர்ணமியா!?” அப்பட்டமாக அதிர்ந்தவர், திரும்பி அங்கிருந்து வேகமாக வெளியேற முயற்சித்தார்.

 

அங்கிருந்த யாருமே அவரை தடுக்கவோ நிறுத்தவோ முயலவில்லை. அதற்கு அவசியம் இருக்காது என்பதை உணர்ந்தே இருந்தனர்.

 

***

அவள் வருவாள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!