அவள் பௌர்ணமி 20(2)

IMG-20200921-WA0010-fc52d847

அவள் பௌர்ணமி 20(2)

 

சுரேந்தர் திரும்பி வேகமாக இரண்டடி கடப்பதற்குள் அங்கு சூழ்நிலை மொத்தமாக மாறி போனது!

 

நிலைவாசல்  கதவு‌கள் பட்டென்ற சத்தத்துடன் அடைத்துக் கொண்டன. வெறிச்சோடி கிடந்த கூடம் ஊஞ்சல், சோஃபா, அலங்கார பொருட்கள் என முன் காலத்தில் வாழ்ந்த உயிரோட்ட நிலையை மீட்டு நின்றது.

 

சட்டென நிலை மாறிய சூழல் சுரேந்தரை முன்னர் இங்கு வாழ்ந்த நாட்களுக்கு அழைத்து செல்வதாய்! அவர் முழுதாக இழந்து போன அவரின் இளமைக்காலத்தை இப்போது அவரின் கண்முன்னே விரிப்பதாய்!

 

தியானத்தில் இருந்த ருத்ரதேவன் தவிர மற்றவர்கள், அந்த மாயை சூழலில் மிரண்டு, தங்களை முயன்று சமாளித்து கொண்டு, சுரேந்தரின் நிலையை கவனித்தனர். தவிர அவர்களால் இனி செய்ய கூடியதும் வேறொன்றும் இருக்கவில்லை.

 

அச்சூழலின் கலவர அமைதியை கலைத்தது, கண்ணாடி வளைகள் கலகலத்து வரும் ஓசை! 

 

அதே ஓசை தான்! சுரேந்தர் திடுக்கிட்டு திரும்ப, அங்கே பௌர்ணமி வந்து கொண்டிருந்தாள்!

 

பூப்போட்ட பாவாடை, தாவணி அணிந்து, ஒற்றை கையில் பூக்கூடை ஏந்தி, மறுகையை வீசியபடி துள்ளலாய் நடமிட்டு வந்தவள் அவரை பார்த்ததும்  தாமதித்து, வெள்ளந்தி சிரிப்பை சிதறவிட்டு அதே துள்ளல் நடையோடு நகர்ந்துவிட்டாள்!

 

குழி விழுந்த கண்கள் மிரண்டு விரிய, திணறி போனார் சுரேந்தர்.

 

“வேலைக்காரிக்கு இருக்கிற திமிர பார்த்தியா, மரியாதைக்கு வணக்கம் கூட வைக்காம இளிச்சிட்டு‌ போவுது ச்சே” என்ற சத்தமான முணுமுணுப்பு அருகே கேட்க, திடுக்கிட்டு திரும்பினார்.

 

அங்கே, பௌர்ணமி போகும் வழி பார்த்து பழித்து நின்றது இவரே தான்! அரும்பு மீசை, ஒல்லியான தேகத்தோடு சிடுசிடுத்த முகமாக இளமையின் முகவரியில் தெரிந்தது சுரேந்தர்நாத் தான்!

 

கண்முன்னே தன்னை தானே கண்டு திக்பிரமை பிடித்து போனது அவருக்கு.

நிழலிற்கும் நிஜத்திற்கும் இடைப்பட்ட இந்த நிலையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கால்கள் தளர, தரையில் மடிந்தமர்ந்து விட்டார்.

 

“அய்யோ என்னாச்சுங்க ஐயா” என்று பதறி அவரை தூக்க முயன்ற கருப்பசாமியால் தான் நின்ற இடத்தைவிட்டு நகரவும் முடியவில்லை. கால்கள் பூமியில் வேரூன்றி போக, உடலையும் அசைக்க முடியவில்லை.

 

தளர்ந்து தோய்ந்து அமர்ந்துவிட்ட‌ தன் முதலாளியை கருப்பசாமி கவலையாக பார்த்திருக்க, மித்ராவதி, விக்கியின் பார்வை கலவரமாய் நிலைத்திருந்தது.

 

பௌர்ணமி இனி என்ன செய்வாள்?

 

அவள் இறப்பின் மர்மம் விலகுமா?

 

இந்த இரண்டு கேள்விகள் மட்டுமே அவர்கள் மனதில் உலாவிக் கொண்டிருந்தது. திக் திக்கென்ற இதயத்தின் தடதடப்பிற்கு போட்டியாக.

 

அடுத்த நொடி அவர்கள் பார்க்க நேர்ந்த அமானுஷ்யத்தில் பேச்சற்று போயினர்.

 

“கடவுளே…!” என்று வாய்விட்டு பதறிய மித்ராவின் நெஞ்சுகூடு உச்சக்கட்ட அதிர்ச்சியில் சில்லிட்டது!

 

“ஹோ காட்” விக்கியும் அந்த காட்சியில் பதறித்தான் போனான்.

 

அவர்கள் பார்த்திருக்கும் போதே, நெருப்பில் வார்த்தெடுத்த பெண்ணின் பாத அச்சு தடங்கள் அந்த மொசைக் தரையில் ஆழ புதைந்து வந்தன ஒன்றன் பின் ஒன்றாய்.

 

அதிர்ச்சியில் உறைந்து, பழைய நினைவலைகளுக்குள் சிக்கி, திக்பிரமை பிடித்து அமர்ந்திருந்த சுரேந்தரை சுற்றி காலடி பதித்து வந்து அவர் முன்னால் நின்றன அந்த பாதத்தடங்கள்!

 

சுரேந்தர் யாரையோ உணர்ந்து அதிர்வோடு மெதுவாக தலைத்தூக்கி பார்க்க, பொன்னிற பாதங்கள் மேல் பூக்களிறைத்த பாவாடை, கை நிறைய கண்ணாடி வளைகள், பச்சை வண்ண தாவணி சதிராட, மஞ்சள் முகம் ஒளிர பாந்தமாய் நின்றிருந்தாள் அவள்!

 

“பௌர்ணமி…!” அவர் குரல் எழவில்லை.

 

அவர் மிரண்டு பார்த்திருக்கும் போதே அவளின் அழகு முகம் அலங்கோலமாக திரிந்து, ராட்சச கொடூரமாக உருமாறி, நெருப்பு பூத அரூபமாக அவரை சுற்றிலும் சூழ்ந்துக் கொண்டது! மற்ற யாருக்கும் அவளுருவம் தெரிந்திருக்கவில்லை. தீயை மட்டுமே அவர்களால் காண முடிந்தது.

 

சுரேந்தர் உயிருக்கு ஆபத்து நேருமோ என்று விக்னேஷ் மனதில் பதற்றம் தொற்றிக் கொண்டது. அந்தளவு அவரை சுற்றிலும் வட்டமாக தீ பரவி சூழ்ந்து கொண்டது! 

 

மித்ராவதிக்கும் அதே பதட்டம் தான் தொற்றிக் கொண்டது. பௌர்ணமி ஆத்மாவிற்கு விடுதலை கிடைப்பது ஒருபுறமிருந்தாலும், அதற்காக ஓர் வயதானவரின் உயிர் பலியாவதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. முதல் முறை தான் தவறு செய்து விட்டோமோ என்ற குற்றவுணர்வு அவருக்குள் எழுந்தது.

 

அந்த இடம் விபரீதமாக மாறி போக, யாராலும் எதுவும் செய்ய இயலாத நிலையில் விதிர்த்து தவித்து நின்றிருக்க, தன் ஆழ்நிலை தியானத்தில் இருந்தபடியே ருத்ரதேவனின் அழுத்தமான உத்தரவு அங்கே எதிரொலித்தது.

 

“சொல்லிடுங்க சுரேந்தர்… எல்லா உண்மையையும் மறைக்காம சொல்லிடுங்க, இது உங்களுக்கான கடைசி வாய்ப்பு!” 

 

தகிக்கும் அனல் வளையத்திற்குள், இரு கைகளை தரையில் ஊன்றி, தலை கவிழ்ந்து இருந்தவரின் கண்கள் கலங்கி கண்ணீர் கோடிட்டது. “இனியும் மறைச்சு என்னாக போவுது… நான் சொல்லிறேன்” விரக்தியாக பலவீனமாக முனங்கியது சுரேந்தர் குரல். 

 

அவரின் திக்கி திணறி வந்த தீனமான குரலும் அந்த நிசப்த சூழலில் தெளிவாகவே எதிரொலித்தது.

 

“சின்ன வயசுல இருந்தே சந்தர் மாமாவுக்கு நான்னா ரொம்ப இஷ்டம்! எல்லார்கிட்டயும் கத்தி கூச்சல் போட்டு திட்டறவரு, என்கிட்ட மட்டும் அன்பா தான் பேசுவாரு. ஆனா, நான் அப்படி இல்ல. என்ன காரணமோ மாமாவ எனக்கு சுத்தமா பிடிக்காம போச்சு.

 

எனக்கும் மாமாவுக்கும் வெறும் பத்து பதினொரு வயது வித்தியாசம் தான் அதுகூட ஒரு காரணமா இருந்து இருக்கலாம். அவர் ஊனமா இருக்கிறது முக்கிய காரணம்! அவர்மேல இருந்த அந்த வெறுப்புல தான் அன்னிக்கு என் அப்பா சொன்னதை நான் தட்டாம செஞ்சேன்!”

 

அன்றைய வினை,

 

‘ஏதாவது காரணம் சொல்லி உன் மாமன மொட்ட மாடிக்கு கூட்டிட்டு வாடா’ பைரவநாத் அதிகாரமாக சொல்ல, “ஆமா, அந்த காலை வச்சுட்டு அவரு அப்படியே மாடியேறி வந்துட்டாலும், போங்க பா” மறுத்து பேசி கடுப்படித்து இருந்தான் இளைஞனான சுரேந்தர்நாத்.

 

‘இருக்க நிலைம தெரியாம கோவத்த கிளப்பாம போய் அவனை மேல கூட்டிட்டு வா, இன்னைக்கு நானா அவனானு முடிவெடுத்தாகனும்’ முடிவாக மகனுக்கு உத்திரவிட்டார்.

 

இன்றைய பயன்,

 

“அப்பா சொல்ல நான் தான் மாமாவ மொட்ட மாடிக்கு அழைச்சிட்டு போனேன். நான் கேட்டு தட்ட முடியாம தான் அவரு எங்கூட வந்தாரு! அங்க, அப்பாவுக்கும் மாமாவுக்கும் வாக்குவாதம் நடந்தது. பேச்சு பேச்சா இருக்கும்போதே திடீர்னு அப்பா மாமாவ கீழ தள்ளி விட்டுட்டாரு! சமயத்துக்கு பிடிப்பு கிடைக்காம மாமாவும் கீழ விழுந்துட்டாரு… எனக்கும் அதிர்ச்சி தான். ஆனா வருத்தமெல்லாம் பெருசா இருக்குல. அந்த வகையில நான் என் அப்பனோட வார்ப்பு தான்!” சிறுகுரலாக தளர்ந்து சொல்லி மூச்சு வாங்கினார்.

 

“சொத்துகாக சந்துருவ கொன்னீங்க… பௌர்ணமிய என்ன செஞ்சா உங்கள, அந்த அப்பாவி பொண்ண என்ன செஞ்சீங்க?” மித்ராவதி ஆத்திரமாக கேட்க, சுரேந்தரிடம் பதில் இல்லை. 

 

சுற்றி எரியும் நெருப்பின் தகிப்பில் வியர்வை வழிய, நாக்கு வரண்டு சோர்ந்து இருந்தார். 

 

“முழுசா சொல்லிடுங்க, எதையும் மறைக்க வேணாம்” ருத்ரதேவன் குரல் மறுபடி எச்சரிக்க, தீ நாக்குகள் சுழன்று நீண்டு சீறி சுரேந்தரை விழுங்குவதை போல பயங்காட்டின.

 

தீ சுட்டால் துடிக்காதவர் யார்?! சுரேந்தரும் துடித்து மிரண்டு பின்னால் நகர, அங்கேயும் தீயின் தழல் சுட்டெரிக்க, துவண்டு போனார்.

 

அவரின் முன்வினைப் பயன் உறுத்து வந்து ஊட்டியது!

 

அவசர மூச்சுக்களை இழுத்து விட்டு, இருமலில் களைத்து, செறுமலில் விழித்து நிமிர்ந்து, மறுபடி தலைக் கவிழ்ந்து கொண்டார். தலை நிமிர்த்தி சொல்லும் வகையில் அவர் வாழ்வில் ஏதும் இருக்கவில்லை.

 

அன்றைய வினை,

 

‘என்னப்பா மாமாவ கொன்னுட்டீங்க?!’ சுரேந்தர் அதிர்ச்சி விலகாமல் கேட்க, ‘செத்து தொலையட்டும், யாரும் வரத்துக்கு முன்னாடி சீக்கிரம் இடத்தை காலி பண்ணனும் கிளம்பு’ என்று திரும்பிய பைரவநாத் சிறு அதிர்வோடு நின்றுவிட்டார்.

 

தந்தையின் சுணங்கிய முகம் கண்டு சுரேந்தரும் திரும்பி பார்க்க, அங்கே பௌர்ணமி நின்றிருந்தாள்.

 

அவளின் அதிர்ந்து உறைந்து நின்ற தோற்றமும், வெளிரிய முகமும் கலங்கிய கண்களும் அவள் நடந்ததை பார்த்து விட்டாள் என்பதை உணர்த்தியது.

 

முதல்கட்ட அதிர்ச்சியிலிருந்து விலகி, ‘ஆங் ஆங்’ என்று கதறியபடி ஓடிவந்து, சந்திரகாந்த் விழுந்த இடத்தை எட்டி பார்த்தாள். இருளில் கீழே எதுவும் அவளுக்கு தெரியவில்லை. மேலும் அவளின் கதறல் சத்தம் எழும் முன், அவளின் வாயை பொத்தி பிடித்து இழுத்து இருந்தார் பைரவநாத்.

 

அவர் கைகளுக்குள் அடங்காமல் திமிறி முரண்டவளை, இருவரும் பிடித்து தூக்கிக்கொண்டு கீழே இறங்கினர். அதற்குள் ஆட்கள் சத்தம் கேட்க, அவசரகதியில், பங்களா பின்புற கீழ்பக்க அறைக்குள் அவளை இழுத்துச் சென்றனர். அந்த அறைக்குள் மொத்தமாக தட்டுமுட்டு பொருட்கள் அடைத்து கிடந்தன. 

 

‘இவ எப்படி டா மாடிக்கு வந்து தொலைச்சா, ச்சே இப்ப ஒன்னுக்கு ரெட்ட வேலையா போச்சு’ பைரவநாத் காலை தரையில் உதைத்துக்கொண்டார்.

 

‘இப்ப என்னப்பா செய்யறது, இவளையும் கொன்னுடலாமா!?’ சுரேந்தர் குழம்பி கேட்க, ‘டேய் மடையா, உன்ன தான்டா முதல்ல கொல்லனும்’ பற்களை நறநறத்தவர், ‘இப்ப நாம அவன் விழுந்த இடத்தில இல்லாம போனா நம்ம மேல சந்தேகம் வந்திடும், இவளை கட்டி போட்டு சீக்கிரம் கிளம்பு. மத்ததை அப்புறம் பாத்துக்கலாம்’ என்று பௌர்ணமியின் வாய், கைக்கால்களை கட்டி தரையில் உருட்டி விட்டு, அறையை பூட்டி கொண்டு அகன்று இருந்தனர்.

 

இன்றைய பயன்,

 

“அப்பா மாமாவ கீழ தள்ளி கொன்னதை பௌர்ணமி பார்த்துட்டா, அங்கேயே கத்தி கதறி அழ ஆரம்பிச்சிட்டா வேற, நாங்க மாட்டிக்க கூடாதுன்னு அவளை ஸ்டோர் ரூம்ல கட்டி போட்டு பூட்டிட்டு வந்துட்டோம். அப்புறமும் போலிஸ், விசாரணைன்னு அந்த அறை பக்கம் போக முடியல, நாலு நாளா சோறு, தண்ணீ இல்லாம அங்க அடைஞ்சு கிடந்தா, எனக்கு தான் மனசு கேக்காம ராத்திரி அப்பாகிட்ட சாவி வாங்கிட்டு அவளுக்கு சாப்பாடு தண்ணீ கொண்டு போனேன். இருட்டு அறைக்குள்ள மயங்கி கிடந்தா, அவ முகத்துல தண்ணீ இறைச்சதும் துடிச்சு எழுந்துக்கிட்டா, வாய் கட்ட அவிழ்க்கவும் சொம்பு தண்ணீய தவிச்சு குடிச்சா, அப்ப எனக்கும் பாவமா தான் இருந்துச்சு, ஆனா…”

 

“ஆனா… தனியா அறைக்குள்ள சிக்கி இருக்க அழகான பொண்ணு, ஊமை வேற. என்னை தப்பா நினைக்க வச்சிடுச்சு… தப்பா நடக்க வச்சிடுச்சு…  அவள ஆண்டு… ஆசைய தீத்துக்கிட்டேன்” திக்கி திணறியவர் சொல்லிவிட்டு முகத்தில் அடித்துக் கொண்டு அழுதார்.

 

கருப்பசாமி உட்பட அனைவரின் பார்வையும் அவரை நீசமாய் நோக்கியது. அவரின் இப்போதைய கண்ணீரோ, தற்போதைய வயதோ கூட இரக்கம் கொள்ள வைக்கவில்லை, ஆத்திரத்தையும் கோபத்தையும் தான் அதிகமாக்கியது.

 

“த்தூ பாவீ, ஒன்னுந்தெரியாத புள்ளய‌ போயி சீரழிச்சு இருக்கியேயா, உனக்கெல்லாம் நல்ல சாவு வந்து சேருமா, இது முன்னவே தெரிஞ்சு இருந்தா எங்கையாலயே உன்ன வெட்டி சாச்சி இருப்பேனேயா” கை நரம்புகள் புடைக்க ஆவேசமாக கத்தினார் கருப்பசாமி. அவரின் கண்ணெதிரே பார்த்து வளர்ந்த பெண்ணல்லவா. ஒன்னுமன்னாய் வளர்ந்த உடன் பிறவாத பாசம் மிச்சம் இருக்கவே செய்தது.

 

மித்ராவதியின் மனதோடு கண்களும் கலங்கியது. உடல் தீய்ந்து மரணித்தது பெரும் கொடுமை என்றால், அதற்கு முன்பே உடலால் உணர்வால் வதைப்பட்டது, சொல்லவும் அடங்கா கொடுமையன்றோ. காலகாலமாய் பெண் இனத்திற்கு மட்டும் இந்த கொடுநிலையா? ஆண் இனத்தை இல்லாமல் அழித்தால் மட்டும் தான் இந்த கொடுமை தீருமா என்ன!? தானும் ஒரு பெண்ணாய் மித்ரா மனம் கொதித்தது.

 

“பொண்ணுங்க தங்களை காப்பாத்திக்க கட்டாயமா கையில ஆயுதத்தை வச்சிக்கனும்ற நிலைமைய உருவாக்கிறது உங்களை போல ஆளுங்கதான்யா, ம்ம் உங்க வாயாலேயே நீங்க செஞ்ச கொடுமைய மேல சொல்லுங்க” விக்னேஷ் பற்களை கடித்தபடி மேலே சொல்ல ஊக்கினான். 

 

அன்றைய வினை,

 

அடுத்த சில நாட்களில் சந்திரகாந்த் இறப்பு தற்கொலை தான் என்று காவல்துறையை சொல்ல வைத்திருந்தார் பைரவநாத். அந்த பிரச்சனை ஓய்ந்ததும், இந்த ஊமை பெண்ணை என்ன செய்வது என்ற யோசனையோடு, அந்த பௌர்ணமி இரவின் முழு நிலா வெளிச்சத்தில் யாரும் அறியாமல் கீழ்புற அறைக்குள் மகனுடன் நுழைந்தார்.

 

சிறு அரிக்கேன் விளக்கை ஏற்றிவிட, அங்கே அலங்கோலமாய் கிடந்த பௌர்ணமியை பார்த்ததும், தன் மகனின் செயல் அவருக்கு வெட்ட வெளிச்சமானது. கோபமாக மகனிடம் திரும்பியவர், அவன் கன்னம் வீங்க அறைந்து தள்ளிவிட்டு காரி உமிழ்ந்தார்.

 

‘த்தூ நாயே, முழுசா மீச முளைக்காதப்பவே தினவெடுத்து கிடக்கயாடா, போயும் போயும் வேலைக்காரிய தொட்டுருக்கியே, நீயெல்லாம் எனக்கு பொறந்தவனாடா’ என்று நான்கு மிதி மிதித்துவிட்டே ஓய்ந்தார்.

 

‘ச்சீ இனி இவள உயிரோட விடவும் முடியாது’ என்று சுற்றும் முற்றும் பார்க்க, அங்கே மண்ணெண்ணெய் கேன் தென்பட்டது. அதை எடுத்து வந்து மூடியை திறந்து வீசிவிட்டு, தரையில் கிடந்தவள் மீது ஊற்றினார்.

 

மிரண்டு பார்த்திருந்த மகனிடம் அவளின் வாய், கை, கால்களில் பிணைந்திருந்த கட்டுக்களை அவிழ்த்து விடச் சொல்ல, அவனும் கட்டுகளை பிரித்து விட்டான்.

 

எரிந்து கொண்டிருந்த அரிக்கேன் விளக்கை மகனிடம் தந்தவர், ‘இதை அவமேல வீசிட்டு வெளியே ஓடி வந்துடு’ என்றார்.

 

‘நா நானா ப்பா?’ சுரேந்தர் நடுக்கமாக கேட்க, ‘நீதான அவள தொட்ட அப்ப இதையும் நீதான் செய்யனும், முடிச்சிட்டு சீக்கிரம் வா’ என்று விட்டு வெளியேறி விட்டார்.

 

கையிலிருந்த விளக்கையும் அவளையும் மாறி மாறி பார்த்தான். அப்போதுதான் அரைகுறை நினைவு திரும்பி இருந்த பௌர்ணமி, மிரட்சியாய் விழித்து வேண்டாமென்று தலையசைக்க, “இன்னும் என்னடா?” வெளியே இருந்த பைரவநாத்தின் அதட்டலில், விளக்கை அவள்மீது போட்டு விட்டு ஓடிவந்து விட்டான். எண்ணெயில் பட்ட தீ முழுவதுமாக அவளை ஆக்கரமித்துக் கொண்டது! வலியில் துடித்த அவளின் கதறலில் அந்த மாளிகை அதிரலானது.

 

இன்றைய பயன்,

 

“நான் பௌர்ணமி கிட்ட தப்பா நடந்துக்கிட்டது அப்பாக்கு தெரிஞ்சு போச்சு. அந்த கோவத்துல என்னை அடிச்சவரு, அவமேல் மண்ணெண்ணெய ஊத்திட்டு, என்னை நெருப்பு வைக்க சொன்னாரு. நானும் அவளுக்கு… உசுரோட தீ வச்சுட்டு ஓடி வந்துட்டேன்!” 

 

இது மனிதர்கள் வாழும் நாடு அல்ல கண்மணி!

கொடுங் கொலைஞர்கள் மண்டி கிடக்கும் காடு இது!

மலரென்றும் இறங்கமாட்டார்! மழலையென்றும் தயங்க மாட்டார்!

மனிதனென்ற போர்வைக் கொண்டு கொடும் பிசாசுகள் 

அலையும் சுடுகாடு இது!

 

உடல் வருந்தி அழுதாயோ!

உணர்வுகள் மடிந்து கசந்தாயோ!

உயிர்‌ நடுங்க துடித்தாயோ!

வலி மீறி கதறினாயோ!

இறுதி மூச்சிலும் 

உதவிக்கு யாரையோ தேடினாயோ!

 

பாவ புண்ணியம் இல்லை இங்கே,

நீதி நியாயம் செல்லாது இங்கே,

சுயநல பிசாசுகளிடமிருந்து 

தப்பி பிழைத்துவிடு நீ,

தப்பிக்க வழியற்று போனாலோ,

தரணியை தகர்த்துவிடு நீ!

உன்னில் மிஞ்சி உலகம் இல்லை தகர்ந்தெறிந்து விடு நீ!

 

தேவதை அம்சமடி 

கண்ணம்மா நீ,

இந்த பாவபூமி 

உனக்கானதல்லம்மா!

 

பாத்திரத்தில் இருந்த தெய்வாம்சம் நிறைந்த புனித நீர் சலசலவென கொதிக்கலானது!  

 

ஆத்மாவின் உக்கிரம் ஏறிக் கொண்டே போவதை ருத்ரதேவனால் உணர முடிந்தது! தன் ஆன்ம சக்தியை முழுவதும் திரட்டி ஆத்மாவை அமைதிப்படுத்த முயன்றார்.

 

பௌர்ணமியின் ஆற்றாமை அடங்குவதாக இல்லை! ஆழ்நிலை தியானத்தில் இருந்து தூக்கி வெளியே எறியப்பட்டார் அவர்!

 

சட்டென கண்களை திறந்தவர் சுற்றிலும் பார்வையை திருப்பினார். அனைவரின் முகங்களும் ஆற்றாமை, ஆத்திரம், பரிதவிப்பை பிரதிபலித்தது. எரியும் தீ வளையத்திற்குள் ஓய்ந்து கிடந்தார் சுரேந்தர்நாத்.

 

“அடுக்காத பாதகம் செஞ்சிட்டு ஏன் இங்கிருந்து ஓடி போனீங்க? இத்தனை வருசம் இங்க வராம ஏன் ஓடி ஒளிஞ்சீங்க?” ருத்ரனின் கேள்வி ஆவேசமாக ஒலித்தது. அவன் செய்த பாவத்திற்கு பரிகாரமும் அவனே தான் செய்தாக வேண்டும். எத்தனை வருடங்கள் கடந்து போனாலும் கூட.

 

சில பாவங்களுக்கு பரிகாரம் என்பதில்லை தண்டனை மட்டுமே! அவர்கள் பாவத்தின் தண்டனை அவர்களுக்கு கிடைத்ததா?!

 

அன்றைய வினை,

 

பௌர்ணமி ஊமை, புத்தி சுவாதீனம் அற்றவள், தனக்கு தானே தீ வைத்துக் கொண்டாள் என்று சொல்லி அவளின் இறப்பையும் தற்கொலை என்று மாற்றி இருந்தார் பைரவநாத். தன் எல்லா பிரச்சனைகளும் ஒருவழியாய் ஓய்ந்தது என்று அவர் ஆசுவாசமாக எண்ணிக்கொண்டார். அவரின் நிம்மதி அடுத்த ஒருவாரம் கூட நிலைத்திருக்கவில்லை.

 

அவர் எதிர்பாராத அளவு ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்த பிரச்சனைகள் அங்கே எழலாயின. முதல் பிரச்சனையாக அதுவரை தெய்வாம்சம் நிறைந்திருந்த அம்மாளிகையில் அமானுஷ்யத்தின் இருளும் மாயையும் மெல்ல சூழலாயின.

 

இறந்துபோன சந்திரகாந்த் உருவம் அவ்வப்போது தெரிந்து மறைய, வீட்டு ஆட்கள் உட்பட வேலை ஆட்கள் கூட பயந்து நடுங்க ஆரம்பித்து இருந்தனர். நட்டநடு இரவுகளில் விடாமல் கேட்கும் பெண்ணின் அலறல் குரல் வேறு அனைவரையும் திகிலடையச் செய்தது.

 

ஒருபுறம், தன் செல்ல மகன் சந்தர் இறப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் அவனின் அம்மா நோய்வாய்ப்பட்டு படுக்கையில் முடங்கினார். மறுபுறம், தன் தம்பி இறப்புக்கு தன் கணவன் தான் காரணம் என்பதை அறிய நேர்ந்து, தனக்குள் குழம்பி தவித்து, ஆற்றாமை விஞ்சி அவரின் மனைவி மனநோயாளியாக மாறிக் கொண்டிருந்தார். அவரின் குடும்ப அமைதி முற்றிலும் குலைந்து போயிருந்தது.

 

தொழில் நிலையும் சறிய தொடங்கி இருந்தது. சில மாதங்களே ஆனாலும் சந்திரகாந்த் எஸ்டேட் பொறுப்பேற்று திறம்பட நடத்தியிருந்ததால் தொழிலாளர்கள் மத்தியில் அவனுக்கான மதிப்பும் விசுவாசமும் உருவாகி இருந்தது. இந்நிலையில் சந்திரகாந்தின் மர்ம மரணம் அவர்களின் மத்தியில் சந்தேகத்தையும் குழப்பத்தையும் விளைவித்திருந்தது. பைரவநாத் மீது சந்தேகமும் கோபமும் கொண்ட ஒரு பிரிவினருக்கும் முன்பிருந்தே பைரவநாத் மீது விசுவாசம் கொண்டிருந்த மறு பிரவினருக்கும் முட்டல் மோதல் சண்டை சச்சரவுகள் ஏற்படலாயின. இதனால் தொழிலாளர்‌ ஒற்றுமை குலைந்து, தொழிலிலும் பிரச்சனை தலைத்தூக்கி இருந்தது.

 

பைரவநாத் இதற்கெல்லாம் அஞ்சுவதாக இல்லை. முதல் வேலையாக தன் ஒற்றை மகன் சுரேந்தர்நாத்தை பத்திரமாக விடுதியில் தங்கி படிக்க ஏற்பாடு செய்தார். தனக்குள் பயந்து கலங்கி போயிருந்த சுரேந்தரும் விட்டால் போதுமென்று கிளம்பி விட்டிருந்தான்.

 

பணத்தை தண்ணீராக இறைத்து பூஜைகள், யாகங்கள், வேள்விகள் என அனைத்தையும் செய்தார் பைரவநாத். ஆனால், அவரே அந்த வீட்டைவிட்டு வெளியேறும் நிலை உருவாகியது.

 

‘பூரண ஆயுள் இருக்கற ரெண்டு உயிர்கள் இங்க அநியாயமா கொல்லப்பட்டிருக்கு. உயிர் பிரிந்த இடம் இதுவானதால அந்த ஆத்மாக்களின் சக்தியும் அடக்க முடியாததாக இருக்கு. எங்களால முடிஞ்சது இந்த வீட்டோட அந்த ஆத்மாக்களை கட்டு போட்டு வைக்கிறது மட்டும் தான். இனி இந்த வீடு நீங்க வாழ தகுதியில்லாதது. மீறி நீங்க இங்க தங்கினா உயிர்சேதம் ஏற்படும்’ என்று தாந்திரீகர்கள் எச்சரித்து சென்றனர்.

 

தான் ஆள நினைத்த வீட்டைவிட்டு வெளியேறுவதா? என்று அவரின் மனம் நிலைக்கொல்லாது தவித்திருந்தது. அடுத்தென்ன என்ற குழப்பத்தில் அன்றிரவு உறக்கமின்றி தீவிர யோசனையில் உழன்றிருந்தார். அறைக்குள் புழுக்கம் அதிகமாவது போல உணர்வு ஏற்பட, காற்றுக்காக மொட்டை மாடியை தஞ்சமடைந்தார். அந்த நடு இரவை முழு பௌர்ணமி நிலவு வெட்ட வெளிச்சமாக்கிக் கொண்டிருந்தது.

 

முதலில் உணராதவர், தாமதமாக தான் அங்கே ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தார். என்னவென்று யோசிப்பதற்கு முன்பே அவரை சுற்றிலும் நிழலுருவங்கள் ஆக்கரமிக்க தொடங்கின! 

 

அன்றைய கொலை நாளில் சந்திரகாந்த் அங்கே வந்தது, இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம், இவர் அவனை பிடித்து கீழே தள்ளியது, பௌர்ணமி அதை பார்த்து அதிர்ந்து கதறியது… என அங்கே முடிந்து போன காட்சிகள் மீண்டும் மீண்டும் அவர் முன்னே தோன்றி தோன்றி அவரை இம்சைப்படுத்தின! அவற்றை மறுபடி மறுபடி பார்க்க சகியாமல்‌ அங்கிருந்து தப்பியோட முயன்றார். நிழல் உருவங்கள் அவரை ஓட முடியாமல் மரித்து தோன்றி மறைந்தன! அவற்றிடமிருந்து தன்னை காத்துக்கொள்ள சுற்றிலும் அங்கும் இங்கும் ஓடி களைத்து வியர்த்து ஏதும் இயலாமல் நெருங்கி வரும் நிழலுருவங்களை பார்த்து‌ மிரண்டு பின்னால் நகர்ந்தவர் கால் தடுக்கி மாடியில் இருந்து கீழே விழுந்து தன் பாவ செயல்களுக்கான எளிதான கூலியை பெற்றுக் கொண்டார்!

 

“இன்னும் அமைதியா இருந்தா உங்க உயிருக்கு உத்திரவாதம் இல்ல, உள்ளதை மறைக்காம‌ சொல்லிடுங்க” ருத்ரதேவன் அழுத்தமான எச்சரிக்கை விடுக்க, ஓய்ந்து நிமிர்ந்த சுரேந்தர், 

 

“நிசமா இங்க நடந்த எதுவும் எனக்கு தெரியாது, ஒருவாரத்திலயே நான் ஹாஸ்டலுக்கு வந்துட்டேன்… அதுக்கப்புறம் அப்பா இறந்ததுக்கு தான் இங்க வந்தேன்! மாமா போலவே அப்பாவும் மாடியில இருந்து விழுந்து போனது என்னை ரொம்பவே கலங்கடிச்சிடுச்சு, அப்பா சாவ தாங்கிக்க முடியாம அம்மா முழுசா பித்து பிடிச்ச மாதிரி ஆகிட்டாங்க. பாட்டியும் உடம்பு முடியாம கிடந்தாங்க. அப்ப என்னால எதையும் யோசிக்க கூட முடியல, என்ன செய்றதுன்னு கூட தெரியல.

 

இந்த வீட்ட விட்டு போனா தான் நல்லதுன்னு எல்லாரும் சொன்னாங்க, பக்கத்து எஸ்டேட்காருங்க எங்க எஸ்டேட், ஃபேக்ரிய விலைக்கு கேட்டாங்க. எனக்கும் வேறவழி தெரில, எல்லாத்தையும் வந்த விலைக்கு வித்துட்டு கிளம்பிட்டோம்! அத்தனை நாள் இங்க என் உயிரை பிடிச்சு வச்சிருந்ததே எனக்கு பெரிய விசயமாயிடுச்சு, எங்கே இதே வீட்டுல தங்கினா அப்பா மாதிரி நானும் செத்து போயிடுவேனோனு பயம் வந்துடுச்சு, நான் இங்க தங்கவே இல்லை…!”

 

“ஓ மை காட், இது என்ன இது? எப்படி ஆச்சு?” ருத்ரதேவன் உடன் நின்றவனின் பதற்றமான குரல் அந்த சூழலை கலைத்தது.

 

என்னவென்று பார்க்க, அந்த மாளிகையின் வெளிப்புறம் தீப்பற்றி எரிய தொடங்கி இருந்தது!

 

யாரும் இதை எதிர்ப்பார்க்கவில்லை, அங்கிருந்தவர்கள் மனதில் பயம் சூழ்ந்துக் கொண்டது. 

 

“எல்லாரும் என்ன இப்படி நிக்கிறீங்க, உடனே வெளியே கிளம்புங்க ஹரி அப்” அவன் அவர்களை துரிதப்படுத்த,

 

“பௌர்ணமிய மீறி நம்மால இங்கிருந்து வெளியே போக முடியாது” மித்ராவதி கலக்கமாக சொல்வதை, மற்றவர்களும் உணர்ந்து அமைதியாக நின்றனர்.

 

“வாட், அதுக்காக ஆவிக்கிட்ட பர்மிஷன் கேட்டுட்டு நிக்க போறீங்களா? இப்ப நாம கிளம்பிலனா இங்கேயே சாக வேண்டியது தான்” நிலைமையின் தீவிரத்தில் அவன் கத்தி விட்டான்.

 

“நம்ம யாருக்கும் எதுவும் ஆகாது சிவா. கொஞ்சம் பொறுமையா இருங்க” என்ற ருத்ரதேவன், “இந்த வீட்டை சுத்தி புதைச்சு வச்சிருந்த மந்திர தகடுகளை நாங்க ஏற்கனவே நீக்கிட்டோம் சுரேந்தர்! இனி பௌர்ணமியை எந்த கட்டும் தடுக்காது… ஊமை கண்ட கனவு போலன்னு சொல்லுவாங்க, அதுபோல, தான் அனுபவிச்ச வலியும் கொடுமையும் மரணமும் ஒன்னுமில்லாம போச்சுன்ற வேதனையை சுமந்திட்டிருக்கு அந்த ஆத்மா! எந்த பாவமும் யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாத தனக்கு ஏன் இத்தனை கொடுமையான சாவு என்ற கேள்விக்கு பதில் கிடைக்காம துடிச்சிட்டு இருக்கு அந்த ஆத்மா! அதோட வேதனைக்கும் கேள்விக்கும் உங்களால பதில் தர முடியாது! நீங்க அவளுக்கு செஞ்ச பாவத்துக்கு இப்பவாவது மன்னிப்பு கேளுங்க சுரேந்தர்… நிச்சயமா உங்களுக்கு மன்னிப்பு கிடைக்காது! ஆனா உங்க உயிராவது உங்களுக்கு மிச்சமாகலாம்!” என்று முடித்தார்.

 

அவர் பேச்சை கேட்ட சுரேந்தர், தன்னை சுற்றி கனன்று எரிந்து கொண்டிருந்த நெருப்பு தழலை பார்த்தார். அந்த தீ நாக்குகள் இன்னும் தன்னை நெருங்காமல் இருப்பதையும் கவனத்தார். தள்ளாடி எழுந்து நின்றார்.

 

“இனி நான் மன்னிப்பு கேட்டு என்னாவ போவுது? இனிமே இந்த பாழா போன உசுர என் உடம்புல புடிச்சு வச்சு தான் என்னாவ போவுது… பேரும் புகழும் வசதி வாய்ப்போட இங்க வளந்தவன், அது எல்லாத்தையும் ஒட்டு மொத்தமா இழந்துட்டு தான இங்கிருந்து போனேன்… கையில காசிருந்தும் அதை லாபமாக்க துப்பில்லாம தரிக்கெட்டு போனேன், அடிச்சு பிடிச்சு வேலை வாங்கியும் எந்த வேலையிலயும் நிலைக்காம அல்லாடி சலிச்சாச்சு. பித்து பிடிச்ச அம்மாவ கவனிக்க முடியாம திண்டாடி அவங்க செத்ததுக்கும் நிம்மதி பட்டாச்சு. எட்டு வருசம் கிடையா கிடந்து காத்திருந்து எனக்கு பொறந்த புள்ளயும் முழு வளர்ச்சி இல்லாம ஊனமா போச்சு, அதை தாங்கிக்க முடியாம நானே கருணை கொல பண்ண சம்மதம் சொல்லி தொலைச்சேன். புள்ள போன வருத்தம் தாங்காம நான் கட்டி வந்தவ  தீக்குளிச்சு துடிச்சு அழிஞ்சு போனதையும் கையாலாகாதனமா பாத்து கதறினேன்… இந்த வயசான காலத்துல குடும்பமும் இல்லாம, கடன் தொல்லையில சிக்கிக்கிட்டு தினந்தினம் தள்ளாடி கிடக்கேன், இதுக்குமேல அனுபவிக்க என்ன மிச்சமிருக்கு? எங்கப்பன் செஞ்ச பாவம் அவனோட அழிஞ்சமாதிரி நான் செஞ்ச பாவம் என்னோட அழிஞ்சு போவட்டும். இந்த நெருப்புலயே நானும் அழிஞ்சு போறேன்” என்று எரியும் தீக்குள் பாய்ந்து விழுந்தார் சுரேந்தர்நாத்!

 

அவர் உடல் எரியவில்லை! அவரின் பாழும் உயிரும் பிரியவில்லை!

 

கொதித்து கொண்டிருந்த தண்ணீர் அடங்கி போனது!

 

சட்டென அங்கே பெரிதாய் எழுந்த சிரிப்பொலி அந்த மாளிகையின் மூளைமுடுக்கெல்லாம் எதிரொலித்து கலகலத்தது!

 

சுற்றும் முற்றும் அலைந்த மித்ராவதியின் கண்கள் கலங்கிட, “பௌர்ணமி…” என்றழைத்தார். அவரின் அழைப்பில் நெகிழ்வும் நிறைவும் சரிவிகிதம் கலந்திருந்தது.

 

மங்கிய இருள் படிந்திருந்த அந்த மாளிகை முழுவதும் பாலொளி வெளிச்சம் பரவி ஒளிர…!

 

வெப்பத்தின் தகிப்பு சூழ்ந்திருந்த மாளிகை சுற்றிலும் பனிக்காற்றின் குளிர்ச்சி பரவி வீசிட…!

 

கருகலின் நாற்றம் வீசிய அந்த இடத்தில் பூக்களின் சுகந்த நறுமணம் இதமாய் நிறைந்து அலைய…!

 

அடைத்திருந்த கதவுகள் விரிந்து திறந்து கொண்டன! 

 

அந்த இடத்தை போலவே அங்கிருந்தவர்களின் மனங்களும் புத்துணர்வை தன்னால் தத்தெடுத்துக் கொண்டு முகத்தில் மலர்ச்சியை பூட்டிக் கொண்டன.

 

வான்வெளியில் அப்போதுதான் மெது மெதுவாய் எழுந்து வந்த முழு நிலவின் பூரண ஒளியோடு, அங்கே பரவியிருந்த பாலொளியும் கலந்து முழுநிலவின் பிரகாசத்தை மேலும் கூட்டியது!

 

“இத்தனை வருச காத்திருப்புக்கு முழு நிறைவோட பௌர்ணமி ஆத்மா கரைசேர்ந்துடுச்சு…” ருத்ரதேவன் ஆசுவாசமாக மொழிந்தார்.

 

அதை பரவசமாக பார்த்திருந்தவர்கள் மகிழ்ச்சியோடு நிம்மதியும் அடைய, அங்கே காலங்கடந்த ஞானோதயத்தில் சுரேந்தர் மட்டும் கலங்கிக் கொண்டிருந்தார்.

 

“எனக்கு சாக கூட கொடுத்து வைக்கலையே ஆண்டவா! என் பாவம் எப்போ தீருமோ?” புலம்பியவர் முன் வந்த சிவா, “உங்க பாவம் தீராது பெரியவரே, ஆனா நிச்சயம் தண்டனை கிடைக்கும். உங்க மாமா சந்திரகாந்த் கொலைக்கு உடந்தையா இருந்ததுகாகவும், உங்க வீட்டுல வேலை செய்த பௌர்ணமி என்ற ஊமை பொண்ணை வன்கொடுமை செய்து கொன்றதுக்காகவும் உங்களுக்கு சிறை தண்டனை நிச்சயம் கிடைக்கும்” என்று அவரை எழுப்பினார் இன்ஸ்பெக்டர் சிவராஜ்.

 

“உங்க இன்ஃபர்மேஷனுக்கு தேங்க்யூ விக்னேஷ், குற்றம் எப்போ செய்திருந்தாலும் தண்டனையில இருந்து தப்ப முடியாது என்பதுக்கு இவர் வாழ்க்கை சரியான உதாரணம்” என்று கைக்குலுக்கி விட்டு, சுரேந்தரை கைது செய்து அழைத்துச் சென்றார்.

 

“இவரு போலிசுங்களா?” கருப்பசாமி சற்றே திகைப்புடன் கேட்க, ஆமோதித்து தலையசைத்த விக்கி ருத்ரனிடம் திரும்பி, “நிஜமாவே பௌர்ணமி ஆத்மா போயிடுச்சா?” என்று கேட்டான் இன்னும் நம்ப முடியாமல்.

 

ருத்ரதேவன் பதில் கூறும் முன் மித்ராவதி பதில் சொன்னார். 

 

“பௌர்ணமி பூரண நிம்மதியோட இங்கிருந்து போயிட்டா, என்னால உணர முடியுது விக்கி, அந்த ஃபீல வார்த்தையால சொல்லதான்… முடியல” என்றவரின் குரல் நெகிழ்ந்திருந்தது.

 

ஓர் உயிரின் எச்சம் இயற்கையோடு கலந்து ஆதியை அடைந்திருந்தது!

 

***

அவள் வருவாள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!