அவள் பௌர்ணமி 21(pre final)

IMG-20200921-WA0010-54cbe015

அவள் பௌர்ணமி 21(ஈற்றயல் பதிவு)

 

நிழல் காதலன் (கிளைமேக்ஸ் காட்சி)

 

இருபத்து ஐந்து வருடங்கள் கழித்து இன்று… காந்திமதி அம்மையாரின் மாளிகை விழாக்கோலம் பூண்டிருந்தது. எங்கும் வண்ண விளக்குகள் ஒளிவீச, பூந்தோரணங்கள் சதிராட அந்தி மாலை வேளையில் வண்ணமயமாக காட்சியளித்தது அந்த மாளிகை.

 

மாளிகையின் பரந்த கூடமெங்கும் உற்றார் உறவினர்களின் பேச்சும் சிரிப்பு சத்தமாக நிறைந்து வழிய, ஆட்களின் நடு நடுவே நுழைந்து ஒளிந்து நழுவி ஓடிக் கொண்டிருந்தது பட்டுப் பாவாடை சட்டை அணிந்திருந்த ஒரு வாண்டு. அந்த வாண்டை பிடிக்க பின் ஓடிக்கொண்டிருந்தாள் அவள்.

 

கருநீல கண்மணிகள் அங்குமிங்கும் அலையாட, செவ்வரி படர்ந்த உதடுகள் வளைந்து நெளிய, வெள்ளி கொலுசொலி சிணுங்கலை மதிக்காது தடதடத்து துள்ளியோடிய மறுதாணி பாதங்கள் எதிரே யார் மீதோ மோதி தயங்கி நின்றன. 

 

முட்டிக் கொண்ட நெற்றியை தேய்த்தபடி, எதிரில் நின்றவரை பார்த்து திருதிருத்தாள். “பொட்ட புள்ளயா அடக்க ஒடக்கமா இருக்க தெரியாது, இப்படி தான் ஓடிவந்து மோதுவியா” அவள் மோதியதில் வலித்த தன் நெற்றியை தேய்த்தபடி கடிந்து கொண்டார் அந்த பெண்மணி.

 

‘அடக்கமான பொண்ணுனா இடுகாட்டுல தான் கிடக்கும் போய் பார்த்துக்க’ அவள் மனதில் கவுன்டர் விட்டு வெளியே, அப்பாவியாக நிற்க, 

 

“யார் வீட்டு பொண்ணு நீ? எங்க உங்கம்மா? இப்படிதான் பொண்ண வளர்த்து வச்சிருக்கிறதானு கேக்குறேன்” அந்த பெண்மணி கோபமாக பேச இவளின் தாமரை‌ முகம் சுருங்கி போனது.

 

“ஆஹான் வே…” அவள் வாய் திறக்கும் முன்பே, “அத்த, இங்க என்ன செய்றீங்க? பாட்டிம்மா உங்களை முன்னவே வர சொன்னாங்களே” தன் பின்னால் கேட்ட ஆண் குரலில் வாய் மூடிக் கொண்டாள்.

 

“நான் பெரிம்மாவ பார்க்க தான் வந்திட்டு இருந்தேன் அதுக்குள்ள” என்றவர் அவளை ஒருமுறை முறைத்து வைத்து, “இந்த பொண்ணு யாரு என்னனு விசாரிச்சு வை பா. நான் வந்து கவனிச்சுக்கிறேன்” என்று எதிரில் நின்றவளை தள்ளிவிட்டு நகர்ந்து சென்றார் அவர். 

 

எதிர்பாராமல் அவர் இடித்து தள்ளியதில் தடுமாறியவள் பின்னால் நின்றவன் மீது மோதி நின்று திரும்ப, அவனும் அவளை யாரென்று பார்க்க, இருவரின் பார்வையும் இமைக்க மறந்தது!

 

தனக்கு‌ மிக பரிட்சியமாய் தெரிந்த அவளின் முகச் சாயல் இவனுக்குள் ஆர்வம் கூட்டியது.

 

இவள் தலை தூக்கி நிமிர்ந்து பார்க்கும் உயரத்தில், அளவான உடற்கட்டோடு, வெள்ளை பட்டு வேட்டியில் ஒருவித அசாத்திய நிமிர்வோடு நின்றிருந்தவனை அதிசயமாய் விழி விரிய பார்த்தாள் அவள்.

 

அவளின் கடல் விழிகள் அகல விரிந்ததில் அதனுள் குதித்து மூழ்கிவிடும் பொல்லாத பேராவல் எழுந்தது அவனுள்.

 

தன்னிலைக்கு வந்து தலையை உலுக்கிக் கொண்டவன், அவளின் பார்வை தாழ்ந்து தன் கால்களில் பதிவதை கவனித்து, எதற்கென காரணம் புரியாமல் இவனுக்குள் சட்டென கோபம் மூண்டது.

 

“அங்க என்ன பார்வை, நேரா முகத்தை பாரு” அவன் கோப குரலில் நிமிர்ந்தவள், நெற்றி சுருக்கி, ‘என்ன?’ என்பது போல் புருவத்தை உயர்த்த,

 

“ப்ச் ஒன்னுமில்ல, அத்தை திட்டினதுக்கு சாரி, நீயும் எதிர்ல வரவங்க மேல இடிக்காம நடக்க பழகு சரியா” சிறு குழந்தைக்கு சொல்வது போல அவன் சொல்ல, அவள் கண்கள் முறைப்பைக் காட்டின.

 

“நல்லது சொன்னா கேட்டுக்கனும் இப்படி முறைக்கக் கூடாது” அவனே மறுபடி சொல்ல, அவள் அசட்டையாக தலையசைத்து கொண்டாள். 

 

‘பெரிய வாத்தியாரு அறிவுரை சொல்ல வந்துட்டான், இவன் என்ன சொல்றது நான் என்ன கேக்கறது’ அவள் மனதிற்குள் கடுகடுக்க,

 

“என் வீட்டில நீ இருக்கற வரைக்கும் நான் சொல்றதை கேட்டு தான் ஆகனும்” அவனும் அசட்டையாக பதில் சொல்ல, 

 

‘அடாபாவி, மனசுல நினைக்கறதுக்கு எல்லாம் பதில் சொல்லிதொலைக்கிறீயேடா?’ அவள் விழிகள் தெறித்து விடுவன போல் விரிந்தன.

 

“எதுக்கு இவ்வளோ ஷாக்? நீ பேசவே தேவயில்ல, உன் கண்ணே அத்தனையும் பேசிடுது” அவன் விடாமல் பேச, அவன்முன் கைநீட்டி நிறுத்தியவள், “என்னை கொஞ்சம் பேச விட்டா தான?” என்று அவள் காட்டமாய் மொழிய, அவன் வாயடைத்துக் கொண்டது.

 

“நானும் பார்க்கறேன், நீங்க பாட்டுக்கு பேசிட்டு போயிட்டே இருக்கீங்க, அதென்ன நான் மனசில நினைக்கிறத்துக்கெல்லாம் அப்படியே ஆன்சர் பண்ணறது, என்ன டிராக் விடுறீங்களா? பிச்சுடுவேன் பிச்சு” அவள் படபடவென பொரிந்து தள்ள, அவள் பேசுவதை எட்டாவது அதிசயமாக பார்த்தவன், அவளின் தேன் குரலில் தனக்குள் ஏதோ நழுவிச் செல்வதை நெகிழ்ச்சியாய் உணர்ந்தான்.

 

“உன்னோட வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்டா இருக்கு பௌ…? ஹேய் உன் பேரென்ன?” தொண்டைக்குழிக்குள் அவள் பெயர் சிக்கி இருப்பது போன்ற உணர்வோடு அவன் கேட்ட,

 

“அவ்வளோ தான் மரியாதை சொல்லிட்டேன்” அவள் விரல் நீட்டி காட்டமாய் எச்சரித்து திருப்பி நடக்க, இவன் முகம் சிரிப்பில் விரிந்தது.

 

“எங்க போய் தொலைஞ்சதோ அந்த வாண்டு” அவள் நொந்தபடி தேடலை தொடர, அவளின் பின்னோடு வந்தவன், “பேரை கேட்டா இவ்வளோ கோபம் வருமா உனக்கு, இது தெரியாம போச்சே எனக்கு” என்று கேட்டபடி வம்பு வளர்க்க, திரும்பி அவனை முறைத்து விட்டு நடந்தவள், “ஹே வெண்மதி நில்லு” என்று ஓடி செல்ல, அந்த வாண்டு இவள் குரல் கேட்டதும் மறுபடி ஓடி நழுவியது. 

 

அவளை துரத்தி ஓடியவள் கீழே படி இருப்பதை கவனிக்காமல் தடுமாறி விழ போக, அதற்காகவே காத்திருந்தவன் போல அவள் கைபிடித்து இழுத்து, இடைவளைத்து தாங்கி கொண்டான்.

 

நிமிர்ந்தவள், “ஏன் என் பின்னாடியே வரீங்க?” என்று எரிந்து விழ,

 

“நீ தடுமாறும் போது தாங்கி பிடிக்க தான்” என்றவன் பார்வையில் அவள் மீதான சுவாரஸ்யம் கூத்தாடியது. அதில் மிரண்டவள் சுற்றும் பார்க்க அங்கே யாரும் இருக்கவில்லை. கூட்டத்தில் இருந்து விலகி வீட்டின் பின்புறம் வந்திருந்தனர். இப்போது அவளுக்குள் பயம் பிடித்துக் கொண்டது. 

 

“என்னை விடுங்க” என்றாள் அவன் கையை தன்னிடமிருந்து விலக்க முயன்று முடியாமல்.

 

“உன் பேரை சொல்லு விடுறேன்” அவன் சாவகாசமாக டீல் பேச, அவனின் இத்தனை அருகாமை அவளின் தைரியத்தை விலை கேட்டது.

 

“பொ… பொம்மி என் பேரு, இப்ப விடுங்க” என்றாள் பார்வை தாழ்த்தி.

 

“பொம்மி… நான் சூர்யா, என்னை மறக்க மாட்டல்ல” பத்து நிமிடங்கள் முன்பு பார்த்த பெண்ணிடம் இந்த கேள்வி அர்த்தமற்றது என்பதை உணர்ந்தும் கேட்டு விட்டான். 

 

பதிலற்று நிமிர்ந்த அவள் விழிகளில் கண்ணீர் தேங்கியிருந்தது.

 

“ஏய் என்னாச்சு? ஏன் அழற?” 

 

“இதெல்லாம் அப்பாக்கு பிடிக்காது, அம்மா திட்டுவாங்க, விடுங்க” சொன்னவளின் உதடுகள் பதற்றத்தில் நடுங்கின.

 

தன்னிடமிருந்து அவளை விலக்கி நிறுத்தியவன், தலை தாழ்த்தி அவள் நடுங்கிய இதழ்களில் உரிமையாய் இதழொற்றி நிமிர்ந்தான்.

 

அவள் அதிர்ந்து விலக, “ஏய் பயப்படாத, இந்த பங்கஷன் முடிஞ்சதும் நான் உன் அப்பா கிட்ட பேசுறேன், நம்ம கல்யாணத்தை பத்தி” சூர்யா உறுதி கூற, பொம்மி நம்பமுடியாமல் திகைத்தாள்.

 

“நாம பார்த்து பத்து நிமிஷம் கூட ஆகல” பொம்மி தவிப்பாக சொல்ல,

 

“ஆமா தான், ஆனா எனக்கு உன்கூட ஜென்ம ஜென்மமா பழகினமாதிரி தோனுதே! ஏன் உனக்கு அப்படி தோனலையா பொம்மி?” அவன் இதமாய் கேட்க, அவளிடம் பதில் இல்லை. தன்னுள் நிகழும் அவனுக்கான மாற்றங்களை ஒதுக்க இயலாமல் தவித்திருந்தாள்.

 

“என்னை கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதம் தான பொம்மி?” சூர்யா முடிவாக கேட்க,

 

“நீங்க என் அப்பா கிட்ட பேசிக்கீங்க, அவருக்கு சம்மதம்னா எனக்கும் சம்மதம்” என்றவள் அதற்கு மேல் நிற்க முடியாமல் ஓடி விட்டாள். 

 

“ஹே பார்த்து போ பொம்மி” அவள் ஓடும் வழி பார்த்து பத்திரம் சொன்னவன் முகத்தில் புன்னகை விரிந்து பரவியது.

 

இவர்கள் இங்கு காதல் வளர்த்து கொண்டிருக்க, அங்கே விழா தொடங்கி இருந்தது.

 

“காந்திமதி அம்மையாரின் பேற்றியும், சந்துருவின் மகளுமான மதுவந்தி என்கிற வதுவுக்கும், தாமோதரன் பெயரனும், திருமூர்த்தி மகனுமான தமிழ்ச்செல்வனுக்கும் திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்படுகிறது, சுபம்” உற்றார் சுற்றார் முன்னிலையில் நிச்சய பத்திரிகை வாசிக்கப்பட்டு திருமணம் உறுதி செய்யப்பட்டது.

 

முழு அலங்காரத்தோடு தலைக் கவிழ்ந்து ஓர பார்வையில் தமிழ்செல்வனை சந்தித்து மீண்ட மதுவந்தியின் முகமெங்கும் பூரிப்பும் புன்னகையும் பூத்திருக்க, பட்டு வேட்டி சட்டையில் மாப்பிள்ளை மிடுக்கோடு அமர்ந்திருந்த தமிழ்செல்வனின் கண்கள் தன்னவளை கள்ள பார்வையில் தீண்டி, புதுவித உணர்வில் கூத்தாடியது.

 

“மாப்பிள்ளைக்கு முறைமாலை அணிவிக்க, மணபெண்ணோட சகோதரன் வாங்க” ஐயர் குரல் கொடுக்க, மணமக்களை நிறைவாய் பார்த்தபடி, அழுத்தமான வேக காலடிகளோடு  மேடையேறி வந்த சூர்யாவின் மீது அனைத்து கண்களும் ஒன்றாய் நிலைத்தது. அவன் தந்தையை உரித்து வைத்ததை போல ஒத்திருந்த அவன் தோற்றம் எப்போதும் போல அந்த குடும்பத்தினரை பிரம்மிக்க வைப்பதாய்.

 

மேலும், காந்திமதி அம்மையாரின் முதிர்வு காரணமாக அவர் நடமாட்டத்தை பெரிதும் குறைத்துக் கொண்டிருக்க, சில வருடங்களாக வீட்டையும் தொழிலையும் சூர்யா முன்னின்று திறம்பட கவனித்து வருவதால், அங்கிருந்த அனைவருக்குமே சூர்யாவிடம் மரியாதையும் பிரியமும் அதிகமிருந்தது. 

 

மாப்பிள்ளைக்கு முறை மாலை அணிவித்து, தங்க மோதிரம் அணிவித்தவன், தமிழ்செல்வனுக்கு வாழ்த்து சொல்லி கைக்கொடுத்து விட்டு, உடன் பிறந்தவளை தோளோடு அணைத்து, “ஹேப்பி தானே மது” என்று சிரிக்க, மதுவந்தி வெட்க புன்னகை தந்தாள்.

 

“அச்சோ என் தங்கச்சியா வெட்கப்படுறது?” சூர்யா கேலி பேச, 

 

“நான் ஒன்னும் உனக்கு தங்கச்சி இல்ல நீதான் எனக்கு தம்பி” எப்போதும் போல அவனிடம் உரிமைக்கொடி நீட்டினாள்.

 

“ஐயோடா ஒரு நிமிசம் முன்ன பொறந்துட்டு இந்த அக்கா தொல்ல தாங்கல பா” என்று அவன் அலுத்துக் கொள்ள அங்கே சிரிப்பலை பரவியது.

 

தன் அண்ணன் மகள் வெண்மதியை தேடி பிடித்து கையோடு அணைத்து கொண்டிருந்த பொம்மியின் கண்கள் சூர்யாவிடமிருந்து நகர மறுத்தது. இதென்ன புதுவித தடுமாற்றம்? இது சரியா? தவறா? என்று தனக்குள் கேட்டு தவித்துக் கொண்டிருந்தாள் அவள்.

 

மதுவந்தியும் தமிழ்ச்செல்வனும் காந்திமதி அம்மையாரின் தாள் வணங்கி எழ, “நலமோடும் வளமோடும் ரெண்டு பேரும் சந்தோசமா வாழனும்” மனதார ஆசி தந்தவர், பேத்தியின் கன்னம் வருடி தர, “பாட்டிம்மா” என்று மதுவந்தி அவரை அணைத்து கொண்டாள். 

 

“சரி போய் சாப்பிட்டு வாங்க நேரமாச்சு” என்று அவர்களை அனுப்பிவிட்டு பேரனிடம் திரும்பினார்.

 

“நீயும் போய் சாப்பிட்டு வா சூரியா” பரிவோடு சொன்னவரின் கைப்பற்றிக் கொண்டவன், “பாட்டிம்மா… ம்ம் அதுவந்து” அவன் திணறலை வேடிக்கையாக பார்த்தவர், “என்ன பேராண்டி திக்குற திணற? என்ன விசயம்?” அவர் கேலியாக இழுக்க, வெட்கத்தோடு நெற்றியை தேய்த்துக் கொண்டான்.

 

“அடாபாவி வெட்கபடுறியே டா, என்னபா ஆச்சு உனக்கு?” அவர் வியந்து கேட்க,

 

“எனக்கு பொம்மிய ரொம்ப பிடிச்சிருக்கு பாட்டிம்மா, அவளோட அப்பா, அம்மாவ இங்க வர சொல்லி இருக்கேன் நீங்க தான், எங்களுக்கு கல்யாணம் பேசி முடிக்கனும்” என்ற பேரனை பார்த்து வியந்தவர், “யாருடா அது பொம்மி?” என்றார்.

 

“தமிழோட சித்தப்பா பொண்ணு பாட்டிமா” அவன் சாதாரணமாக சொல்ல,

 

“இன்னைக்கே பார்த்து கல்யாணம் வரைக்கும் முடிவு பண்ணிட்டியா சூரியா?”

 

“பின்ன பிடிச்சதுக்கு அப்புறம் யோசிப்பாங்களா?”

 

“சரிதான் டா, மதுவந்தி கல்யாணம் முடியட்டும் பேசலாம் டா, இப்பவே என்ன அவசரம்”

 

“இல்ல பாட்டிம்மா, நீங்க உடனே பேசிடுங்க, இந்த விசயத்தை ஆற போடறதுல எனக்கு விருப்பமில்ல” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, பொம்மியின் குடும்பம் அங்கே வந்தது.

 

காந்திமதி பார்வை பெரியவர்களை வரவேற்று சின்னவள் மீது படிய, எழுந்து நின்று விட்டார். பௌர்ணமி உருவில் அச்சில் வார்த்தது போல வந்து நின்ற பெண்ணை பார்த்ததும் அவர் கண்கள் கலங்கி விட்டன. தன் பேரனை பார்க்க அவன் ஆமென்பதாய் தலையசைத்தான்.

 

தன் பேரன் ஏன் திருமணத்திற்கு இத்தனை அவசரப்படுகிறான் என்பது அவருக்கு நன்றாகவே புரிந்தது. இவர்கள் இருவரையும் தாமதமின்றி வாழ்வில் சேர்த்து வைக்க அவர் மனமும் பரிதவித்தது.

 

பொம்மியின் கைப்பற்றி அழைத்து தன்னருகே அமர்த்தி கன்னம் வருடி தந்தவர், “என் பேரன் சூரியாவுக்கு உங்க பொண்ணு பொம்மிய கேக்கிறேன். உங்களுக்கு சம்மதமா?” அவரின் நேரடியான கேள்வியில் அங்கே அனைவருக்கும் திகைப்பே மிஞ்சியது. 

 

“இப்படி திடுதிப்புனு கேட்டா எப்படிங்கம்மா, நாங்க கொஞ்சம் யோசிச்சு சொல்றோம்” பொம்மியின் தந்தை தயங்க, சூர்யாவின் முகம் மாறியது.

 

“இதுல யோசிக்க எதுவுமில்ல, எனக்கு பொம்மிய பிடிச்சிருக்கு, பொம்மிக்கு என்னை பிடிச்சிருக்கு, முறைபடி பொண்ணு கேக்கறேன், நேரா பதில் சொல்லுங்க” சூர்யா அழுத்தமான குரலில் கேட்க, 

 

“அவ சின்ன பொண்ணுங்க, அவளுக்கு எதுவும் தெரியாது. அதோட உங்க அளவுக்கு நாங்க வசதியானவங்க இல்ல” அவர் மேலும் தயங்கினார்.

 

“நான் கேட்டது உங்க பொண்ண மட்டும் தான். உங்க வசதி வாய்ப்பை உங்ககிட்டயே வச்சுக்கோங்க. எனக்கு என் பொம்மிய மட்டும் கொடுங்க போதும்” அவன் வேகமாக சொல்ல, பொம்மி அவனை நிமிர்ந்து நோக்கினாள்.

 

“பொறுமையா இரு சூரியா, நீங்க சங்கடபடாம உங்க முடிவை சொல்லுங்க” காந்திமதி நிதானமாக கேட்க,

 

சற்று யோசித்தவர் மகளை பார்க்க, அவள் பார்வை சூர்யாவிடம் ஒட்டி இருந்தது. இதற்குமேல் என்ன? என்று பெருமூச்செறிந்தவர், “எங்களுக்கு சம்மதம்” என்றார்.

 

“ரொம்ப சந்தோஷம், அடுத்து வர முகூர்த்தத்துல ரெண்டு கல்யாணத்தையும் ஒன்னா நடத்திடலாம்” என்று சந்தோசமாய் சொன்ன காந்திமதி மேற்கொண்டு திருமண வேலைகளை பற்றி பேச ஆரம்பித்தார்.

 

பொம்மியின் பார்வையை எதிர் கொண்டவன் ஒற்றை புருவம் நெளித்து உயர்த்தி கண்சிமிட்ட, அவள் சட்டென தலை தாழ்த்திக் கொண்டாள்.

 

ஒன்றுக்கு இரட்டை திருமணம் முடிவானதில் அங்கே இன்னும் சந்தோசம் சேர்ந்தது. இரவு ஏறி போனதால் அனைவரும் அங்கேயே தங்கிட ஏற்பாடாகி இருந்தது. 

 

விழா அலைச்சலில் அனைவரும் உறங்கி கிடக்க மூவர் மட்டும் உறக்கம் தொலைத்து விழித்திருந்தனர். அவன், அவள் மற்றும் பௌர்ணமி முழு நிலவு!

 

கால்கள் தயங்க மெல்லடி எடுத்து வைத்து வெளியே வந்தவளை, இரு கைளில் ஏந்திக் கொண்டான் சூர்யா. 

 

“அய்யோ நீங்க இன்னும் தூங்கலையா?” பொம்மி திகைத்து கேட்க, 

 

“தூங்கறதா? நானா? உன்ன எப்படி அறையை விட்டு வெளியே வர வைக்கிறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன். இப்ப மட்டும் நீ வரலன்னா, நானே உள்ள வந்து உன்ன தூக்கிட்டு வந்திருப்பேன்” என்று அவள் மூக்கோடு மூக்குரச, அவள் உயிர் செல்கள் எல்லாம் குதித்தெழுந்து அமிழ்ந்தன.

 

அவன் கைகளில் இருந்தபடியே வாகாய் கழுத்தை கட்டிக் கொண்டவள், “எங்கப்பா எவ்வளோ கோபகாரர் தெரியுமா? நீங்க கோபமா பேசவும் அவரும் கோபபட்டு எழுந்து போயிடுவாரோன்னு ரொம்ப பயந்துட்டேன். நல்லவேளை அவரும் சம்மதம் சொல்லிட்டாரு” என்று மனம் நிறைந்து சிரித்தாள். அவனும் உடன் சிரித்தபடி அவளை சுமந்து வந்தவன் தோட்டத்தின் மகிழ மரத்தடியில் அவளை இறக்கி விட்டான்.

 

இந்த இரவும் தனிமையும் நிலவும் எதிரே அவனும் அவளுக்குள் பதற்றத்தை கூட்டியது. 

 

“எனக்கு தூக்கம் வருது நான் போகவா?” மெல்லிய குரலில் அவள் கேட்க,

 

“ம்ஹூம் இதுக்கப்புறம் நம்ம கல்யாணத்துல தான் உன்ன பார்க்க முடியும் அதனால இன்னும் கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம் பொம்மி” என்று மரத்தடியில் அமர்ந்தவன் அவளையும் அழைக்க, 

 

“ஆனா, நீங்க பேசிட்டு மட்டும் இருக்க மாட்டீங்களே சூர்யா” என்று தவிப்போடு சொல்லிவிட்டு நாக்கை கடித்து கொண்டவளை பார்த்து சிரித்து விட்டவன், அவள் கைப்பற்றி இழுத்து மடி தாங்கிக் கொண்டான்.

 

“ஆஹான் அப்படி நான் உன்ன என்ன செஞ்சுடுவேனாம்” என்றவன் கைகள் அவளின் கன்னம் வருட, கிறங்கி இமைகள் மூடியவள், “சூர்யா… இப்படியெல்லாம் நெருங்கி வந்து அப்புறம் என்னை விட்டு போயிட மாட்டீங்களே?” பொம்மி பரிதவித்து கேட்க, அவளின் இமையோரம் ஈரம் கசிந்தது. ஏன் தன்னுள் இத்தனை கலக்கம் என்பது அவளுக்கு புரியவில்லை. 

 

“நீயே விட்டு போக சொன்னாலும் நான் உன்ன விட மாட்டேன் டீ” என்று அவளை தன் நெஞ்சோடு புதைத்துக் கொண்டவனுக்கும் புரியவில்லை. ஏன் தன்னுள் இத்தனை அழுத்தம் என்று.

 

அவர்களின் தவிப்பையும் நேசத்தையும் முழுமையாக அறிந்திருந்த அந்த ஊமை நிலவு இன்றும் மௌன சாட்சியாக மட்டும்!

 

***

 

“டேக் ஓகே கைஸ் வெல் டன்” என்று மித்ராவதி கையுயர்த்த, அதற்காகவே காத்திருந்தவர்கள் போல பட தளத்தில் இருந்த அனைவரும், “ஹூர்ர்ரே” ஒரே குரலாய் கூச்சலிட்டனர்.

 

“சில் கைய்ஸ், ஷூட்டிங் பார்ட் மட்டும் தான் இப்பவரை முடிஞ்சிருக்கு, இன்னும் பாதி வேலை அப்படியே மிச்சமிருக்கு, அதெல்லாம் முடிச்சு படம் ரிலீஸ் ஆகி, சக்ஸஸ் ஆன பிறகு தான் நமக்கெல்லாம் ‘ஹூர்ர்ரே” என்று அவர் சொல்லியும் அங்கே கொண்டாட்ட கூச்சல் அடங்குவதாக இல்லை. அதற்கு மேல் மித்ராவதி தடுக்கவில்லை. புன்னகையுடன் அமைதியாகி விட்டார்.

 

எடுத்த காட்சியை திரையில் கவனித்திருந்த பிரியா, “கிளைமேக்ஸ் சீன் பர்ஃபெக்டா வந்திருக்கு விக்கி, பட் ஏதோ ஒன்னு மிஸ்ஸாகுற மாதிரி ஃபீல் வருதில்ல, ஏன்னு தெரியல, உனக்கு ஏதாவது தெரியுதா?” என்று குழப்பமாக கேட்க,

 

அவனுக்கு புரிந்தது என்று தலையாட்டியவன், “என்னதான் செட் வச்சு எடுத்தாலும் அந்த பங்களா மிஸ்ஸாகுது, அதோட…” என்று இழுத்தவன் இரு கைகளையும் உயர்த்தி காட்டி, “பௌர்ணமி ஆவியும் மிஸ்ஸாகுது” என்று அடிக்குரலில் அவன் சொன்னதில் சற்றே பயந்தவள், “போடா உன்கிட்ட போய் கேட்டேன் பாரு” முறைத்து விட்டு மறுபடி திரையில் கவனம் பதித்தாள். 

 

”சும்மா பேச்சுக்கே அலறியே ப்ரியா, நிஜத்துல பார்த்து இருக்கனும் நீ” விக்னேஷ் கண்களை விரித்து சொல்ல, “நிஜத்துல பேய், பிசாசெல்லாம் கிடையாது. சும்மா என்னை பயமுறுத்தாத போய் வேலைய பாரு கிளம்பு” என்றவள் தன் வேலையை கவனிக்க, விக்னேஷ் அர்த்தமாய் சிரித்துக் கொண்டான்.

 

***

அவள் வருவாள்…