அவள் பௌர்ணமி 3

IMG-20200921-WA0010 (1)-d444e0c4

அவள் பௌர்ணமி 3

நிழல் காதலன் – காட்சி:

உறக்கம் கலைந்து தரையில் இட்ட படுக்கையில் இருந்து விதிர்த்து எழுந்தாள் பௌர்ணமி. தன்னருகே பார்த்தாள். தன் அறையை சுற்றிலும் மருண்ட பார்வையைச் சுழற்றினாள்.

‘அய்யோ, அப்ப எல்லாம் கனவா? என் சந்துரு இல்லையா? சந்துரு…’ மனதிற்குள் அலற்றி, வெளியே கதற, “அஆங் த்ரு த்ரு” அவளின் குரல்வளையில் இருந்து ஒழுங்கற்ற சத்தம் தான் எழுந்தது.

“அட என்ன புள்ள நீ? மறுபடி அழுக ஆரம்பிச்சிட்டியா? உன்கூட பெரிய தலை நோவா போச்சு, இப்படி அழுதழுதே செத்து தொலைய போற பாரு” நடுத்தர வயதான வேலைக்கார அம்மா சலித்தபடி கத்தி விட்டு நகர, அவள் கதறிக் கொண்டு தான் இருந்தாள்.

அவர் பேசியது எதுவும் அவளுக்கு கேட்கவில்லை. கேட்க போவதும் இல்லை.

”ஏய் பௌர்ணமி… எதுக்கு அழற இப்போ” அவன் அழைப்பை அவள் உணர, சட்டென நிமிர்ந்தாள். அவளருகே தான் அவன் உருவம் அமர்ந்து இருந்தது. தாவி அவனை அணைத்துக் கொண்டாள். 

‘உன்ன பார்த்தது பொய்யோனு நினச்சு பயந்துட்டேன் சந்துரு. நீ என்னைவிட்டு எங்கேயும் போக மாட்டேனு சத்தியம் செஞ்சிருக்க இல்ல’ அவள் மனது அவனிடம் ஓலமிட, ஆம்! என்பதாக அவனும் தலையசைத்தான்.

நேற்று இரவு அவன் ஆன்மாவிடம் சத்தியம் பெற்று கொண்ட பிறகு தான் அவள் சற்று சமாதானம் ஆகி வீடு நோக்கி நடந்தாள். அவன் கையை இறுக்கமாக பிடித்தப்படி.

இப்போதும் அத்தனை இறுக்கமாக காற்றாகி போனவனை அணைத்து இருந்தாள். எங்கே தன்பிடி தளர்த்தினால் அவன் மறுபடி மறைந்து போவானோ என்று பயந்தவளாய்.

“பௌர்ணமி, நான் இல்லாம போனவன் என்னை உன்கிட்டயே இருத்தி வச்சிக்கனும்னு நினைச்சா முடியாது… உண்மைய ஏத்துட்டு நான் இல்லாம வாழ பழகிக்க புரியுதா” அவன் தன்னவளை தெளிவுபடுத்த முயல, அவள் இடவலமாக தலையசைத்து மேலும் அவனுள் ஒன்றி கொள்ளவே முயன்றாள்.

அவளை தன்னிடமிருந்து பிரித்து நிமிர்த்தியவன், அவள் வயிற்றில் தன் பார்வை பதித்து, “நம்ம பாப்பாவ நீதான் பார்த்துக்கனும். அதுக்கு நீ தைரியத்தை வளர்த்துக்கனும், புரிஞ்சதா?” என்றான்.

அவள் உதடுகள் பிதுங்க தேம்பி தேம்பி அழுதாள். ‘நீயில்லாத உலகத்துல நானும் பாப்பாவும் வேணாம் சந்துரு… பாப்பாவோட நானும் செத்து உன்கூடவே வந்துடுறேன்’ அவள் சைகையில் மொழிய, அவன் உருவம் தீயாய் தகித்தது. அவன் அருகாமை சூடு தாங்காது விதிர்த்து நகர்ந்து கொண்டவள், அவனை அடிப்பட்ட பார்வை பார்த்தாள்.

“உனக்கான நியாயத்தையும் நம்ம பாப்பாக்கான அங்கீகாரத்தையும் வாங்கி தர கடமை என்னோடது… நான் இல்லாம பாப்பாக்காக வாழ பழகிக்க வேண்டிய கடமை உன்னோடது… மறுபடி சாகனும்னு பேசின…” அவன் உருவம் மெல்ல மெல்ல படுகோரமாக மாறிக் கொண்டே போக, அதை காண சகியாமல் பௌர்ணமி கத்தி விட்டாள்.

“ஆங் ஆங் நா த்ரு ஆஆங்” 

“நம்ம குழந்தைக்காக வாழுவேன்னு சொல்லு…” அவனின் ஓங்கிய மிரட்டலில் உடல் அதிர மிரண்டவள், சுவரோடு ஒன்றி கொண்டு, உடலை குறுக்கி மடித்த கால்களிடையே முகம் புதைத்து நடுங்கினாள்.

“சாகமாட்டேன்னு சொல்லு…” அவன் உத்தரவு வார்த்தைகள் கத்தியாய் வீச, “ங்கா ங்கா ப்பா த்தா ம்ப”

‘மாட்டேன் சாகமாட்டேன்… பாப்பாவ நானே பாத்துப்பேன்” என்று கையசைத்து உடல் வெடவெடத்து கதறினாள்.

அவன் உருவம் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு வந்தது. கலங்கி, கதறியவளை இழுத்து தன்னோடு அணைத்து கொண்டான். அவள் இன்னும் அதிகமாக கதறி அழுதாள்.

அவனின் முடிந்து போன வாழ்வில் பேரின்பம் தந்தவள் இவள்! ஓரறையில் முடங்கி போன அவன் குறுகிய வட்டத்தின் பேருலகம் இவள்!

இவளோடு இன்பம் துய்த்து வாழ, அவன் வாழ்ந்த நாட்கள் போதவில்லை. இவளின் காதலில் திளைத்து வாழ, வரும் ஏழேழு ஜென்மங்களும் போத போவதுமில்லை. 

இவள் மீது முதல் முதலாக காதல் கொண்ட நொடியை நினைக்கும் போதே அவன் ஆன்மா பனியாய் குளிர்ந்து போனது. அந்த அறையின் தட்பவெப்ப நிலையில் மெல்ல குளிர்ச்சி பரவலானது.

அதேநேரம், வீட்டின் நடு கூடத்தில் சந்துருவின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அவனுக்கு பிடித்த உணவு வகைகள் படையல் வைக்கப்பட்டு இருந்தன. அதை நோக்கி அவன் ஆத்மா ஈர்க்கப்பட்டது.

அங்கே அவனின் அக்கா, அவள் கணவன், தாய்மாமன், மாமி, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா என நிறைய சொந்தங்கள் கூடி இருந்தனர். ஆனால் அவர்கள் யார் முகத்திலும் துக்கத்தின் சாயல் இருக்கவில்லை. 

சந்துருவின் தாய் காந்திமதி மட்டும் தன் மகன் புகைப்படத்தைப் பார்த்து பார்த்து கண்ணீர் வடித்து கலங்கிக் கொண்டிருந்தார். தன் அம்மாவிற்காக இவன் ஆன்மா இளகியது. அவரின் அருகே சென்று வலியோடு அவரின் கலங்கி தோய்ந்த முகத்தை பார்த்திருந்தது.

அங்கே முறைப்படி சந்துருவிற்கு ஆன்ம சாந்தி பூஜை நடைபெற, அந்த பூஜையின் ஆகர்ஷணம் இவன் ஆன்மாவை தாக்கியது. ஏதோ அவஸ்தையை உணரச் செய்தது. இவனுள் மெல்ல மெல்ல தகிப்பு பரவி உஷ்ணம் கூட்டியது. 

வெளி வாசல் தோட்டத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்த காவல் நாய்களை இவன் விரித்து பார்க்க, அவற்றின் கழுத்து சங்கிலி அறுபட்டு வீட்டின் உள்ளே பாய்ந்தோடி வந்த நாய்கள் அங்கிருந்த படையலை எல்லாம் சிதறடித்தன.

அனைவரும் அலறி, கத்தி ஓடி ஒளிய, வேலையாட்களாலும் அந்த நாய்களை கட்டுப்படுத்த முடியவில்லை. சடுதியில் அந்த இடமே அலங்கோலமாக மாறிப்போனது.

நாய் மோதிய வேகத்தில் சுவரின் ஓரமாக கீழே விழுந்து விட்ட சந்துருவின் அக்கா கணவன் பைரவநாத் மீது பூஜையில் வைக்கப்பட்ட சந்துருவின் புகைப்படம் வந்து விழுந்தது. அவர் வலியில் அதை மிரண்டு பார்க்கும் போதே, அந்த புகைப்படத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த சந்துருவின் உருவம் எழுந்து, புகைப்பட சட்டத்தை தாண்டி கை, கால்களை வெளியே நீட்டி வர, அவர் பயந்து நடுங்கி, “அஆ…” அலறி கத்த, வெளி நீட்டிய சந்துருவின் கைகள் அவர் கழுத்தை இறுக்கி நெறித்தன.

அவரின் கண்கள் சொருக, கைகால்களை தரையில் அடித்துக்கொண்டு போராடினார் அவர். ஆனால் நாய்களின் அட்டகாசத்தில் யாரும் அவரை கவனிக்கவில்லை. 

கடைசியில் கணவன் கை, கால்கள் வெட்டி வெட்டி துடிப்பதை கவனித்த கௌதமி, “அய்யோ உங்களுக்கு என்னாச்சுங்க” கலவரமாக பதறி ஓடிவந்து அவரை பிடித்துக் கொள்ள, சந்துருவின் ஆத்மா காற்றில் கரைந்து மறைந்தது.

***

“டேக் ஓகே வெல்டன் கைய்ஸ்”

மித்ராவதி வழக்கம்போல இரண்டு கைகளையும் நீட்டி கட்டை விரல் உயர்த்தி காட்டினார்.

“நெஸ்ட் ஸீன்க்கு அரேஜ்மென்ஸ் பண்ணுங்க குயிக்” என்று அவர் ஆணையிட, மற்றவர்கள் துரிதமாகினர்.

இதை எதையும் கவனிக்காது ஓய்ந்து போய் அமர்ந்து இருந்தார் சற்றுமுன் சந்துருவின் மாமா பைரவநாத்தாக நடித்த வாசன். யாரோ அவர் தோள் தீண்ட, விதிர்த்து திரும்பினார். 

அங்கே விதார்த் சினேக புன்னகையோடு நின்றிருந்தான். சந்துருவின் வேசத்தோடே அவனிருக்க இவர் முகம் மிரண்டு வெளிரியது.  

“ஹலோ சார், உங்க கூட நடிக்க வாய்ப்பு கிடச்சது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு” என்று முகமன் கூறினான் விதார்த். 

அதிக படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் அவர். தயாரிப்பாளராகவும் நடிகராகவும் திரைத்துறையில் மிகுந்த அனுபவமும் செல்வாக்கும் உடையவர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவருடன் நல்ல நட்பை ஏற்படுத்திக் கொள்ள விழைந்தான் விதார்த்.

அவர் பதில் பேசவில்லை. ஒப்புக்கு தலையை மட்டும் அசைத்து வைத்தார்.

“உங்க ஆக்டிங் செம சார், நீங்க பயந்து‌ கத்தின நடிப்ப பார்த்து நானே அரண்டுட்டேன்னா பாருங்களேன்” விதார்த் விடாமல் பேச்சை வளர்க்க,

“நான் நடிச்சேனா!? நிஜமாவே பயந்துட்டேன் பா” அவர் அலுத்து சொல்ல,

“நிஜமா பயந்தமாதிரி அவ்வளவு நேச்சுரல் ஆக்டிங் சார் உங்களோடது” அவன் சிலாகிக்க, இவர் ரசிக்காதவராக தலையசைத்து விலக முயன்றார்.

“சந்துருவோட வில்லன் நீங்க தான, அப்போ உங்கள தான் நான் கிளைமாக்ஸ்ல கொல்ல போறேன்” விதார்த் நகைச்சுவையாக சொல்லவும், “நான் ஏற்கனவே சந்துருவ கொன்னதால தான் நீ ஆவியா அலையற” என்று அவரும் சற்று கடுப்பாக பதில் கொடுத்துவிட்டு  மித்ராவதி முன் வந்தார்.

“வாசன் சார் கிரேட் வொர்க், ஒரே டேக்ல சீன பர்ஃபெக்டா முடிச்சிட்டீங்க, உங்க ஆங்ட்டிங் பார்த்து எல்லோருமே அரண்டுட்டாங்க போங்க” படக்காட்சி கச்சிதமாக அமைந்த நிம்மதியோடு மித்ராவதி அவரை பாரட்ட, இவரோ அதை கண்டுக்கொள்ளாமல், “இங்க ஷுட்டிங் கன்டினியூ பண்ண வேணா மேடம், சீக்கிரம் நாம இங்கிருந்து போயிறது நல்லது!” வாசன் பதற்றமாக சொன்னார்.

“ரிலாக்ஸ், ஏன் திடீர்னு இப்படி சொல்றீங்க” மித்ராவதி குழப்பமாக கேட்க, “என்னால விளக்கி சொல்ல முடியாது… இப்ப எடுத்த சீனை மறுபடி பாருங்க, உங்களுக்கே புரியும்” என்றார் கலவரமாய்.

மித்ராவதி சற்று நிதானித்து, “பிரியா நீ போய் விக்கிய வர சொல்லு” என்று உத்தரவிட, தலையசைத்த பிரியா ‘ச்சே எப்பவும் எல்லாத்துக்கும் இவங்களுக்கு விக்கி தான் ஃபர்ஸ்ட், நான் ரெண்டாம் பட்சம் தான்’ என்று கறுவிக் கொண்டு நகர்ந்தாள்.

விக்னேஷ் வந்ததும் அந்த காட்சியை திரையில் ஓட்டி பார்த்தனர். எதுவும் தவறாக தெரியவில்லை.

“என் முன்ன இருக்க ஃபோட்டோவ ஜூம் பண்ணி பாருங்க…” வாசன் சொல்ல, அப்படியே செய்து பார்த்தவர்களின் கண்கள் விரிந்து, முகம் வெளிரியது. நிஜமாகவே அந்த புகைப்படத்தில் இருந்து புகைப் போன்ற உருவம் வெளியே கிளம்புவது போல பதிவாகி இருந்தது!

“என்ன கேமராமேன் சார், இதென்ன நியூ மாடல் கேமராவா? ஸீன் ஷூட் பண்ணும் போதே எஃப்க்ட்ஸோட கிராபிக்ஸும் ஆட் பண்ணிடுவீங்க போல?” விக்னேஷ் வியப்பாக கேட்க,

தன் முகவாயை விரலாய் தேய்த்தபடி அந்த காட்சியை மீட்டு பார்த்த முகிலன், “இந்த ஸீன் ஜஸ்ட் ஏதாவது ஃபால்ட்டா இருக்கும், ஹாரர் மூவின்ற பீதியில இது நமக்கு திகிலா தெரியுது. அவ்ளோதான்” தனக்கு தோன்றிய விளக்கம் தந்தார் கேமராமேன் முகிலன்.

“அப்போ கண்ணால நான் பார்த்ததை என்ன சொல்றீங்க முகிலன்?” வாசன் விடாமல் கேட்க,

“வாசன் சர், இதுதான உங்க முதல் திகில் படம், அதோட இந்த பங்களாவோட கதைய கேட்டு எல்லாருக்குள்ளேயும் ஒரு பயம் இருக்க தான் செய்யுது. அந்த பயத்தோட வெளிப்பாடு தான் இது. இதையெல்லாம் ரொம்ப யோசிக்காம விட்டு தள்ளுங்க… அப்படியே இங்க அமானுஷ்யம் ஏதாவது இருந்தா அதையும் நம்ம பிலிம்ல ஒரு கேரக்டரா சேர்த்துக்கலாம்” முகிலன் சாதாரணமாக சொல்லிவிட்டு அடுத்த காட்சி படப்பிடிப்பிற்கு தயாராக சென்று விட்டார்.

“பேய், ஆவி, பூதமெல்லாம் நிஜமில்ல வாசன் சார், எதையும் போட்டு குழப்பிக்காம தைரியமா இருங்க, மறுபடி இப்படி இல்யூஷனெல்லாம் தோன்றாது” மித்ராவதியும் இயல்பாக சொல்லிவிட்டு நகர, வாசனுக்கும் தான் பார்த்தது வெறும் பிரம்மை தானோ என்ற குழப்பம் மேலோங்க தலையைக் குலுக்கிக் கொண்டு நகர்ந்தார்.

***

அவள் வருவாள்…