அவள் பௌர்ணமி 4

IMG-20200921-WA0010 (1)-9e6b2912

அவள் பௌர்ணமி 4

 

நிழல் காதலன் – காட்சி

மயக்கம் தெளிந்து சோர்வோடு எழுந்து அமர்ந்தார் பைரவநாத். கணவனின் அருகே கவலையோடு அமர்ந்திருந்த கௌதமி, “என்னாச்சுங்க திடீர்னு உங்களுக்கு? இப்பவும் ஏதாவது செய்யுதா?” என்று பதற்றமாக கேட்டாள்.

பைரவநாத் மனைவிக்கு பதில் தராமல் சுற்றி பார்த்தார். சொந்தங்கள் அனைவரும் அவர் படுத்திருந்த கட்டிலை சுற்றி நின்றிருந்தனர்.

“என்னாச்சு மாப்பிள்ளை உங்களுக்கு?” காந்திமதியும் மருமகனிடம் கவலையாக விசாரித்தார்.

“சந்துரு… சந்துரு தான் அந்த போட்டோல இருந்து வெளியே எழுந்து வந்து என்… என் கழுத்தை நெறிச்சான்… அவன் தான்!” அவர் பயம் அகலாமல் பேச, அங்கிருந்த அனைவரும் நம்பாத பார்வை பார்த்தனர்.

“நம்பற மாதிரி ஏதாவது சொல்லு பா, நாய் தள்ளி விட்டதில தலையில அடிப்பட்டு மூளை குழம்பி போச்சா என்ன?” அந்த குடும்பத்தின் பெரியவர் கேலியாக கேட்க, 

“நீங்க யாரும் என்னை நம்பல இல்ல” என்றவர் ஆத்திரமாய் போர்வையை விலக்கிக் கொண்டு எழுந்து, மறுபடி மாலையிட்டு வைத்திருந்த சந்துருவின் புகைப்படத்தை எடுத்து வீட்டிற்கு வெளியே தூக்கி வீசினார். யார் தடுப்பதையும் காதில் வாங்காமல் மண்ணெண்ணெய் எடுத்து வந்து அதன்மேல் ஊற்றி புகைப்படத்தை எரியூட்டினார்.

“அய்யோ சந்துரு…” காந்திமதி கதறி அழ, மற்றவர்கள் நடப்பதை கலவரமாக பார்த்து நிற்க, அங்கே பாய்ந்தோடி வந்த பௌர்ணமி, வாளி தண்ணீரை எடுத்து வந்து அதில் ஊற்றி நெருப்பை அணைத்து விட்டாள்.

நிழற்படத்தின் மேல் சட்டமும் கண்ணாடியும் தீயில் கருகி இருக்க, “அஆங் நா…” என்ற கதறலோடு சூட்டையும் பொருட்படுத்தாமல் அதை எடுத்து தன்னோடு அணைத்து கொண்டாள். 

“ஏய், அந்த போட்டோவ கீழ போடு…” பைரவநாத் அதட்டலை கேட்காமல் அந்த நிழற்படத்தை கட்டிக்கொண்டு அழுதவளை பார்த்து இவரின் கோபம் இன்னும் அதிகமானது.

“போயும் போயும் வேலக்கார நாயி நீ, உனக்கு என்ன இவ்வளவு திமிர் தனம்?” என்று கோபமாக அவளை எட்டி உதைக்க காலை உயர்த்த, வெட்டென மின்னல் போல பௌர்ணமி அவர்முன் எழுந்து நின்றாள். அந்த வேகத்தில் அதிர்ந்தவர் ஓரடி பின்வாங்கினார்.

தன் முழு உயரம் தாண்டி நிமிர்ந்து முறுக்கேறி அவள் நின்ற தோற்றத்தை பார்த்தவர் இதயம் நின்று துடித்தது. கவிழ்ந்திருந்த அவள் தலை சட்டென நிமிர, அவளை உதைக்க வந்தவர் தூக்கி பின்னால் எறியப்பட்டார். 

அங்கிருந்தவர்கள் பயந்து நடுங்கி அவளை பார்க்க, மென்மையான அவள் முகத்தில் ஏகத்துக்கும் ஏறி இருந்த இறுக்கம்! ரத்த சிவப்பாய் சிவந்து குரோதம் காட்டிய அந்த கண்கள்… அனைவரையும் வெலவெலக்கச் செய்தது.

“பௌர்ணமி மேல கைய வச்சா… கொன்னுடுவேன்” 

ஊமைப்பெண்ணின் வாயிலிருந்து, சந்துருவின் குரலில் மிரட்டலாக உதிர்ந்த எச்சரிக்கை வார்த்தைகள் கேட்டவர்களுக்குள் கிலி பரவ செய்தது.

“சந்… சந்… சந்துரூ” என்ற அலறலோடு காந்திமதி நினைவிழந்து அங்கேயே மயங்கி சறிந்தார்.   

சிவப்பேறிய பார்வையை அங்கிருந்த அனைவரின் மேலும் செலுத்திய பௌர்ணமி, நிழற்படத்தை பிடித்தப்படியே, நேராய் சந்துருவின் அறைக்குள் செல்ல, பட்டென்று கதவு அடைத்துக் கொண்டது.

 

***

 

“கட் கட்” மித்ராவதியின் குரலில் நடிகர்கள் காட்சியில் இருந்து இவரிடம் திரும்பினர்.

அமிர்தியிடம் வந்தவர், “ஸீன் படி, உன் உடம்புக்குள்ள சந்துரு ஆவி இருக்கு. சோ உன்னோட பாடிலேங்கவேஜ் பௌர்ணமி மாதிரி இருக்கக்கூடாது. சந்துரு மாதிரி ஸ்ட்ராங்கா இருக்கனும். உன்னோட பேஸ் எக்ஸ்பிரஷன்ல இன்னும் இன்னும் கடுமைய கொண்டு வரனும் ஓகே” அவர் மேலும் சில திருத்தங்களைச் சொல்ல, அந்த காட்சி மீண்டும் மீண்டும் இயக்குநருக்கு‌ திருப்தி ஆகும் வரை பல டேக்குகள் வாங்கி எடுத்து முடிக்கப்பட்டது.

 

***

 

“இதான் முதல் படம் அமிர்திக்கு, என்னவோ அவங்கள தான் எல்லாரும் பெருசா கொண்டாடுறாங்க” விதார்திடம் அவனின் உதவியாளன் தீபக் புகைந்து கொண்டிருந்தான்.

“எனக்கும் அதான் புரியல, நானும் அவளுக்கு ஈக்குவலா பர்ஃபெக்டா தான் என்னோட பெஸ்ட தரேன், ஆனாலும் அவளுக்கு அடுத்து தான் என்னை பாக்குறாங்க, மித்ரா மேம் உட்பட” விதார்த்திற்கு முதலில் இருந்தே இந்த குறை. இதனை பொறாமை என்றும் சொல்ல வேண்டுமோ!

“புது பொண்ணு, அழகா இருக்கு, செமயா நடிக்குது வேற, அதால தான் எல்லாரும் கும்பலா அந்த புள்ள மேல விழுறாங்க சார்” தீபக்கும் அவனுக்கு ஒத்து ஊதினான். 

“பிளாஷ்பேக்ல எனக்கு தான் வொர்த் அதிகம், அப்போ பாரு, எல்லாரும் விதார்த் விதார்த்னு என்மேல விழுவாங்க” என்று நம்பிக்கையோடு சொன்னவன்,

“இந்த மூவி எனக்கு எவ்வளவு இம்பார்டென்ட் தெரியுமா? என்னோட ஃபியூச்சர் பிளான் எல்லாமே இதுல தான் இருக்கு… ஆனா அந்த அமிர்தி என்னை ஓவர்டேக் பண்ண பாக்குறா, இந்த ஸ்கிரீன் பிளேல ஹீரோஹிசம் காட்டவும் சான்ஸ் இல்ல வேற ப்ச்” அலுத்துக் கொண்டான். 

திரைக்கதையின் சாரம் அப்படி என்பதை உணர்ந்தும் அவன் மனம் ஆறுவதாக இல்லை. ஒரே படத்தில் ஓஹோ என்று ஆக வேண்டும் என்ற கனவு அவனுக்கு.

அமிர்தி கைப்பேசியில் பேசியபடியே தோட்டத்தின் பக்கம் செல்வது இவர்களின் பார்வையில் பட்டது. 

அம்மா, அப்பா, தங்கை மூவரும் மாற்றி மாற்றி கேட்கும் கேள்விகளுக்கு உற்சாகமாகவே கைப்பேசி வழி பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் அமிர்தி. 

அவர்கள் குடும்பத்தில் அமிர்தி தான் முதல் முதலாக நடிப்பு தொழிலை தேர்ந்தெடுத்தது. முதலில் பெற்றவர்களுக்கு சிறு சங்கடம் இருப்பினும் தன் பெண்ணின் விருப்பத்திற்கு தங்களால் இயன்றளவு ஒத்துழைப்பு வழங்கினர். மகளுக்கு வந்த முதல்பட வாய்ப்பு அவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. எனினும் தங்கள் பெண்ணின் பாதுகாப்பு விசயத்திலும் அவர்கள் கவனமாகவே இருந்தனர். பத்து நாட்கள் பிரிவிலும் மகளின் நலனை ஒவ்வொரு நாளும் உறுதிபடுத்திக் கொள்ள விழைந்தனர். பெற்றவர்களின் தவிப்பு அது.

“எனக்கு இங்க எந்த பிராப்ளமும் இல்ல மாம்” 

“பாலி என் கூடவே ஒட்டிட்டு தான் சுத்திட்டு இருக்கா” 

“நான் ஒன்னும் தனியா இல்ல, இங்க என்கூட கிட்டத்தட்ட அம்பது பேர் இருக்காங்க”

“நீங்க டென்சனாகாதீங்க டேட், இங்க எந்த பயமும் இல்ல”

“ம்ம் மித்ரா மேம் ஃபுல் சப்போர்ட்டா இருக்காங்க, ரொம்ப ஹேப்பியா ஃபீல் பண்றேன் புஜ்ஜி”

“இன்னும் டென் டேஸ்ல வந்துடுவோம்” 

“பாய் டாட்” 

“டேக்கேர் மாம்”

“குட்நைட் புஜ்ஜி”

கைப்பேசியை அணைத்துவிட்டு நிமிர்ந்தவளுக்கு திக்கென்றானது. பேச்சு சுவாரஸ்யத்தில் அந்த தோட்டத்தின் இருள் கவிழ்ந்த இடத்திற்கு வந்திருந்தாள். 

அந்த இருளில் தனித்து நின்றவளின் இதயத்தின் தடதடப்பு தன்னால் கூடிக்கொண்டே போனது. வேக நடையும் சிறு ஓட்டமுமாக வெளிச்சத்தை நோக்கி வந்த பிறகே சற்று ஆசுவாசமானாள்.

‘ச்செ எவ்ளோ தைரியமான பொண்ணு நீ, ஒரு செகன்ட் இருட்டை பார்த்து பயந்துட்டியே அமிர்தி, நாட் ஃபேர்’ என்று தன்னை தானே மனதுள் குட்டி கொண்டு தன் அறைக்கு வர, அங்கேயும் இருள் சூழ்ந்திருந்தது. வடிந்த தைரியத்தை தேக்கி பிடித்தவள், கைப்பேசி டார்சை சொடுக்கி, மின்சார பொத்தான்களை தேடி அழுத்தினாள். அறையில் வெளிச்சம் வந்த பிறகு‌ அவளுக்கு நிம்மதியானது. 

”ரூம் லைட்ட ஆஃப் பண்ணிட்டு இந்த பாலி எங்க போனா?” முணுமுணுத்தப்படி, கைப்பேசியை மெத்தையில் வீசிவிட்டு, கண்ணாடி முன் நின்று, சற்றே வியர்த்து தெரிந்த முகத்தை டிஸ்யூ காகிதம் கொண்டு தன்மையாக ஒற்றி எடுத்தாள். உள்ளதை காட்டும் கண்ணாடி திரையில் அவள் பின்னோடு வெள்ளை திரையிட்ட உருவம் தெரிய, இவள் கண்கள் விரிய நடுங்கி போனாள்.

உடல் நடுங்க திரும்பி பார்க்க, அங்கே எதுவும் தெரியவில்லை. ஆழ்ந்த மூச்சுக்களை எடுத்து தன்னை சமன்படுத்திக்கொள்ள முயன்றபடி, வெளிரிய‌ முகத்துடன் வியர்த்து நின்றிருந்தவளை, அங்கே மறைந்திருந்த விதார்த்தும், தீபக்கும் பார்த்து வாய்க்குள் சிரித்துக் கொண்டனர். அவளின் பயந்த தோற்றத்தை தங்கள் கைப்பேசியில் வீடியோ எடுத்தப்படி.

சற்றுமுன் வெள்ளை போர்வைக்குள் கண்ணாடி பிம்பத்தில் வந்து நின்றவனும் தீபக் தான். ஏதோ சிறுபிள்ளை விளையாட்டு போல, அமிர்தியை பயமுறுத்தி, இவர்கள் அற்ப திருப்தி கொண்டனர்.

தலையைக் குலுக்கிக் கொண்டவள், குளியலறைக்குள் சென்று முகத்தில் நீர் தெளித்து, தானும் சற்று தெளிந்து வெளியே வந்தாள். பூந்துவாலையால் முகத்தை ஒற்றி துடைத்தபடி வந்தவள் முகத்தின் அருகே, அகோரமான முகம் தெரிய அலறி விட்டாள். 

“ஆ… ஆ…” அவள் பயத்தில் அலறி கத்தவும், அந்த கோர உருவம் கைகளை விரித்து அவளை மிரட்டவும், அதற்குமேல் பொறுக்க முடியாமல் மறைந்திருந்த விதார்த் சத்தமாக வாய்விட்டு சிரித்து விட்டான்.

விதார்த் வயிற்றை பிடித்து சிரித்துக் கொண்டே மறைவில் இருந்து வெளியே வரவும், தன் முகமூடியை கழற்றி கீழே வீசிவிட்டு தீபக் சிரிக்கவும், அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்த அமிர்திக்கு திகுதிகுவென கோபம் ஏறியது.

“ஸட்அப், அறிவில்ல உங்களுக்கு? எதெதுல விளையாடனும்னு விவஸ்தையில்ல… விதார்த் நீயுமா? உன்கிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கல” அவள் கோப கோபமாக வார்த்தைகளை துப்பி விட்டு வெளியே நடந்தாள்.

“ஹேய் ஜஸ்ட் ஜாலிக்காக தான் அமிர்தி, டோன்ட் மிஸ்டேக் மீ” விதார்த் அவளை சமாதானம் செய்த படி பின்னால் சென்றான். சாதாரண விளையாட்டு வினையாவதில் அவனுக்கு உடன்பாடு இல்லை. “சாரிங்க அமிர்தி மேடம்” தீபக்கும் அவளிடம் மன்னிப்பை வேண்டியபடி தொடர்ந்தான்.

அந்த அறையில் அந்த கோர முகமூடி மட்டும் தனியே தரையில் கிடந்தது. சற்று பொறுத்து மெல்ல அசைந்தது! எந்த பிடிமானமும் இன்றி அந்த முகமூடி காற்றில் மிதந்த படி உயர எழுந்து தொங்கியது! 

“அமுமா, என்னாச்சு, திடீர்னு கத்தின…” குரல் கொடுத்தப்படியே பாலி அறைக்குள் நுழைய, அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்த முகமூடி பொத்தென்று கீழே விழுந்தது.

 

***

அவள் வருவாள்…