அவள் பௌர்ணமி 5

IMG-20200921-WA0010 (1)-47ebc73c

அவள் பௌர்ணமி 5

 

அகலமான மெத்தை போன்ற விரிப்பில் படத்தின் முக்கியமானவர்கள் கூடி அமர்ந்து, திரைக்கதை, காட்சி அமைப்பு பற்றிய விவாதத்தில் இருந்தனர்.

 

மித்ராவதி கதையின் நகர்வை பற்றி விளக்கிக் கொண்டிருக்க, அனைவரின் கவனமும் அவரிடம் நிலைத்திருந்தது.

 

அவரை குறுக்கிட்ட வாசன், “இந்த பங்களாவில உண்மையா என்ன நடந்தது? அதைப்பத்தி கொஞ்சம் சொல்லுங்க, நாங்களும் தெரிஞ்சுக்கிறோம்” என்று கேட்க, அவரின் மனநிலை புரிந்தவர், இங்கு நடந்த உண்மை நிகழ்வை தனக்கு தெரிந்த வகையில் கூறலானார்.

 

“சுமார் நாற்பது வருசத்துக்கு முன்ன இதே பங்களாவில வாழ்ந்தவங்க தான், சந்திரகாந்த் அவங்க குடும்பமும். சின்ன வயசுல போலியோ அட்டாக்னால சந்திரகாந்தோட வலது கால் வளர்ச்சி குன்றி போயி அவனால நடக்க முடியாம வீல்சேர்ல தான் எப்பவும் இருப்பானாம்”

 

“சந்திரகாந்த்’ பேரே வித்தியாசமா இருக்கே” பாலி தான் குறுக்கே புகுந்தாள் வழக்கமான துடுக்கு கேள்வியோடு.

 

“ஆமா பாலி, அப்போ இதுபோல பேரெல்லாம் ரொம்ப ஃபேமஸ் போல. ரஜினிகாந்த், விஜயகாந்த் மாதிரி இவன் பேரு சந்திரகாந்த்” மித்ராவதியும் பதில் தந்தார்.

 

“இந்த பங்களாவுல எங்கேயும் அந்த சந்திரகாந்தோட ஒரு ஃபோட்டோ கூட இல்லையே” விதார்த் சந்தேகமாக கேள்வி எழுப்பினான். தான் நடிக்கும் கதாப்பாத்திரத்தின் நிஜ உருவத்தை காண வேண்டும் என்ற ஆர்வம் அவனிடம்.

 

ஆமோதிப்பாக தலையசைத்த மித்ராவதி, “சந்திரகாந்த் இறந்ததுக்கு அப்புறம் இந்த பங்களாவுல தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடக்க ஆரம்பிச்சிருக்கு, அதெல்லாம் சந்திரகாந்த் ஆவியோட வேலை தான்னு பயந்து, அவனோட பொருள், ஃபோட்டோ முதற்கொண்டு எல்லாத்தையும் தீயில போட்டு எரிச்சிட்டதா சொன்னாங்க, நான் விசாரிச்சு தேடி அலைஞ்சதுக்கு அப்புறம் சந்திரகாந்தோட உருவ பெயிட்டிங் மட்டும் எனக்கு கிடைச்சது” என்று அவர் கண்காட்ட, சற்று பெரிய அளவிலான அந்த ஓவிய சட்டத்தை எடுத்து வந்து விக்னேஷ் அவர்கள் முன்னால் நிறுத்தி திரையை விலக்கினான். அதைப்பார்த்த அனைவரின் கண்களும் வியப்பில் விரிந்தன.

 

அடர்ந்து தோள் தட்டிய சிகை, அகன்ற நெற்றி, குறுகிய கண்கள், நீள்வட்ட முகம், கோதுமை குழைத்த நிறம், கோட்சூட் போன்ற சற்று வித்தியாசமான உடையில் சற்று மிடுக்கான தோற்றத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி சந்திரகாந்தின் ஓவியம் அழகாய் தீட்டப்பட்டு இருந்தது. 

 

அந்த சக்கர நாற்காலியின் பிடியை இருகைகளால் பிடித்தப்படி, முழுநீள ஊதாநிற கௌன் போன்ற உடையில், தலையைச் சுற்றி பூக்களிலிட்ட ஸ்கார்ப் துணியால் மறைத்துக் கட்டி, மாநிறத்தில், நெளிந்த புருவங்கள்,  அகன்ற கண்கள், குட்டி நாசி, பளபளத்தக் கன்னங்கள், வடிவான செவ்விதழ்கள் என அழகோவியத்திற்கு அழகு சேர்க்கும் பேரழகாய் ஒரு சிறு பெண்ணின் உருவமும் அதில் உடன் வரையப்பட்டு இருந்தது.

 

“இதுதான் பௌர்ணமியா?” அமிர்தி பிரம்மிப்பாக கேட்டாள்.

 

“ஆமா, பிறவியிலேயே காது கேட்காத, வாய் பேச முடியாத பௌர்ணமி இந்த பங்களாவில வேலை பார்த்த போண்ணு, அவளோட அதிகமான வேலை சந்திரகாந்தை கவனிக்கிறதா மட்டும் தான் இருந்து இருக்கு… 

 

இந்த பெயிண்டிங்ல பெரிய வித்தியாசத்தை கவனிச்சேன்! ஒரு வேலைக்கார பொண்ணோட ஓவியத்தை தன்னோட சேர்த்து வரைஞ்சு இருக்கிறது எனக்கு முரண்பாடா தெரிஞ்சது! இந்த பெயிட்டிங் பார்த்தபிறகு தான் இவங்க ஸ்டோரிய சினிமாவா எடுத்தா என்னனு எனக்கு தோனுச்சு” என்று மித்ராவதி விளக்கம் தர, கேட்டு கொண்டிருந்தவர்களுக்கு இன்னும் சுவாரஸ்யம் கூடியது.

 

“இன்னோரு இன்ட்ரஸ்டிங்கான மேட்டர் என்னனா, இந்த பெயிட்டிங் வரைஞ்சது மிஸ்டர் சந்திரகாந்த் தான்” என்று விக்னேஷ் சொல்ல,

 

“ஆஹா பலே கில்லாடியா இருப்பான் போல இருக்கே, கால் ஊனம்னாலும் ரொம்ப அற்புதமா பெயிண்ட் பண்ணி இருக்கான்” கேமராமேன் முகிலன் வியந்து சொன்னார்.

 

“அவனுக்கு பெயின்டிங் மட்டுமில்ல, ரொம்ப நல்லா பியானோ வாசிப்பானாம், கிட்டார் வாசிச்சிட்டு அவன் பாடுனா அவ்வளவு நல்லா இருக்குமாம். அதோட நிறைய மேஜிக் ட்ரிக்ஸ் வேற செய்வானாம்”

 

“ஓ மியூஜிஷியனா கூட இருந்து இருக்கான் போல, அப்ப எப்படி அவன் இறந்து போனான்?” வாசன் கேட்க,

 

பெருமூச்செறிந்தவர், “இந்த பங்களா மாடியில இருந்து கீழ விழுந்து இறந்து போயிருக்கான்! அவன் தற்கொலை பண்ணிகிட்டதா சிலர் சொல்றாங்க, அவனோட அக்கா வீட்டுகாரர் தான் அவனை கீழ தள்ளி கொன்னதா சிலர் சொல்றாங்க” மித்ராவதி சொல்லி நிறுத்தினார்.

 

“இதுல உண்மை எது?” முகிலனிடம் இருந்து கேள்வி வந்தது.

 

“தெரியல, ஆனா போலிஸ் இந்த கேஸை தற்கொலைன்னு முடிச்சிட்டு இருக்காங்க! சந்திரகாந்த் இறந்து கொஞ்ச நாள் கழிச்சு, ஒருநாள் நடு ராத்திரியில, இந்த பங்களா கீழ்பக்க அறையில் இருந்து பெரிய சத்தமும், வெளிச்சமும் வந்திருக்கு, எல்லாரும் கீழ போய் பாத்தப்போ அங்க எரிஞ்ச நிலையில பௌர்ணமி கிடந்திருக்கா! 

 

“அய்யோ…!” அமிர்தி, பிரியா, பாலி மூவரும் ஒன்றே போல அரற்றினர்.

 

“ம்ம் சந்திரகாந்த் இறந்ததுக்கு அப்புறம் பௌர்ணமிய யாருமே பார்க்கலயாம். அவதான் சந்திரகாந்தை கொன்னிருப்பானு கூட சந்தேகப்பட்டு இருக்காங்க. பௌர்ணமி எப்படி அங்க வந்தா ஏன் செத்துபோனானு யாருக்கும் விவரம் தெரியல.

 

உண்மையில பௌர்ணமியோட கொடூர மரணத்துக்கு அப்புறம் தான் இந்த பங்களாவுல நிறைய அமானுஷ்யங்கள் நடக்க ஆரம்பிச்சிருக்கு”

 

“என்னமாதிரி அமானுஷ்யங்கள் நடந்துச்சு?” பிரியா பயந்தபடியே கேட்க,

 

“நடுராத்திரியில ஸ்கிரீன் எல்லாம் தீப்பிடிச்சு எரியுமாம், திடீர்னு ஒரு பொண்ணு அலறல் சத்தம் கேட்குமாம் இல்ல அழுகை சத்தம் கேட்குமாம், இப்படி நிறைய”

 

“அய்யோ அப்புறம் என்னாச்சு?” எச்சிலை விழுங்கிய படி அந்த அறையை பயந்த பார்வையால் சுழற்றினாள்‌‌ பாலி.

 

“பயப்படாத பாலி, பௌர்ணமி இரவுகள்ல மட்டும் தான் அந்த மாதிரி நடக்குமாம்” மித்ராவதி தைரியம் சொல்லி சின்னதாக சிரித்தார்.

 

“பௌர்ணமி பேருக்கும் பௌர்ணமி இரவுக்கும் நிறைய சம்பந்தம் இருக்கும் போல மேடம்” பிரியா யோசித்து கேட்க,

 

“நிஜம் ப்ரியா. பௌர்ணமி இரவுல பிறந்ததால தான் அவளுக்கு பௌர்ணமினு பேர் வச்சாங்களாம். அதோட அந்த பொண்ணு எரிஞ்சி செத்து போனதும் ஒரு பௌர்ணமி இரவுல தானாம்! என்ன கோஇன்ஸிடன்ஸ் இல்ல” மித்ரா இலகுவாக சொல்லவும், அங்கிருந்த முகங்கள் எல்லாம் பயத்தில் வெளிரி வியர்த்தன.

 

“இதுல இன்னொரு மிரள வைக்கிற சம்பவம் என்னன்னா…? பௌர்ணமி இறந்த மூனாவது பௌர்ணமி ராத்திரி… சந்திரகாந்த் எப்படி மாடியில இருந்து விழுந்து செத்து போனானோ, அதேபோல அவனோட அக்கா வீட்டுகாரரும் மாடியில் இருந்து குதிச்சு தற்கொலை பண்ணிக்கிட்டாங்களாம்…! அதுக்கப்புறம் இங்க தங்க யாருக்குமே தைரியமில்ல. வந்த விலைக்கு அவங்களோட எஸ்டேட், ஃபேக்ட்ரி எல்லாம் வித்துட்டு வெளிநாடு கிளம்பிட்டாங்களாம். அப்ப கூட இந்த பங்களாவ வாங்க யாருமே தயாரா இல்லையாம்!” மித்ராவதி சொல்லி நிறுத்த, அங்கிருக்கும் அனைவருக்குள்ளும் பயம் பரவி நடுக்கமானது.

 

“இப்ப வரைக்கும் இந்த பங்களாவை எப்படியாவது வித்தே ஆகனும்னு முயற்சி பண்ணிட்டு தான் இருக்காங்க, ஆனா முடியல” என்று முடித்தார்.

 

“இந்த பெயிண்ட்ங்ல அந்த பொண்ணு ரொம்ப சின்ன பொண்ணா தெரியுதே?” கேமராமேன் தான் சந்தேகம் எழுப்பினார்.

 

“ஆமா முகிலன், பௌர்ணமி சாகும் போது அவளோட வயசு பதினாறு, பதினேழு தானாம், மூவில அத்தனை சின்ன பொண்ணா காட்ட எனக்கு விருப்பம் இல்ல. அதால தான் இருபது வயசு பொண்ணா எடுத்தேன்” என்று விளக்கம் தந்தவர், 

 

“நாளைக்கு சந்துருவோட பிளாஷ்பேக் சீன்ஸ் கொஞ்சம் எடுத்துடலாம் ஓகே?” அதற்கு மேல் பேச்சுகள் நாளை எடுக்க போகும் காட்சிகள், வசனங்கள் என்று சென்றது.

 

தடதடவென ஏதேதோ பொருட்கள் விழுந்து உடையும் சத்தம்!

 

முதல் நாள் போலவே இன்றும் அதே சத்தம் கேட்டது. அன்றை விட அதிகமான பயத்தில் அவர்கள் ஒருவரோடு ஒருவர் ஒடுங்கிக் கொண்டனர். 

 

“முந்தாநாள் நைட்டும் இதே நேரத்தில இதே மாதிரி சத்தம் கேட்டதில்ல… ஆனா நாம தேடி பார்த்த வரைக்கும் இங்க எதுவுமே உடையல!” என்று அமிர்தியை கெட்டியாக பிடித்துக் கொண்டு பாலி பயத்தில் வெலவெலத்து நடுங்கினாள்.

 

“பௌர்ணமி கதைய கேட்ட எஃபக்ட்ல சும்மா நடுங்காதீங்க, வாங்க போய் எங்க இருந்து சத்தம் வந்துச்சுன்னு பாக்கலாம்” என்று கேமராமேன் முகிலன் எழ, “ஆமா அதுதான் சரி” என்று விதார்த்தும் மற்ற சிலரும் எழுந்து அவருடன் நடந்தனர்.

 

விக்னேஷும் தலையசைத்து விட்டு வெளியே வந்து சுற்றிலும் கவனித்தான். அவர்கள் அந்த பங்களா முழுவதும் சென்று கவனித்து வந்தனர். உடைந்த பொருள்கள் என்று எதுவும் அவர்கள் கண்ணில் படவில்லை. திரும்பி அறைக்குள் வந்து “எதுவும் உடையல” என்று கைவிரிக்க, 

 

அதேநேரம் மீண்டும் பொருட்கள் விழுந்து உடையும் சத்தம் கேட்டது.

 

பயத்தில் அமர்ந்திருந்தவர்கள் எழுந்து இதயம் தடதடக்க நின்றனர்.

 

“ப்ச் ஸ்டோர் ரூமில பூனை, எலி ஏதாவது உருட்டி இருக்கும். பயப்படாம போய் படுத்து தூங்குங்க போங்க எல்லாரும்” மித்ராவதி உத்தரவிட, விலகியும் விலகாத பயத்துடன் மற்றவர்கள் தங்கள் அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டனர்.

 

***

அவள் வருவாள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!