அவள் பௌர்ணமி 7
அவள் பௌர்ணமி 7
அவள் பௌர்ணமி 7
நிழல் காதலன் – (பிளாஷ்பேக்) காட்சி
பௌர்ணமியின் சைகை பேச்சுகள் விரைவாகவே சந்துருவிற்கு பிடிபட, ஏனோ அவள் கை அசைவுகளை விட அவளின் கண் அசைவுகள் அதிகம் பேசுவதாக தோன்றும் இவனுக்கு.
கைகளை அசைத்து கண்களை விரித்து சுவாரஸ்யமாக விவரிக்கும் போது நவரசம் காட்டும் அவள் விழிகளை விட்டு நகராது இவன் பார்வை.
“உன் கண்ணே இவ்வளவு பேசறதால தான், உனக்கு தனியா வாய் பேச்சு தேவையில்லனு கடவுள் உனக்கு கொடுக்கல போல” சந்துரு உணர்ந்து சொல்ல, பௌர்ணமி அவன் இதழசைவை கூர்ந்து கவனித்து, வெட்கத்தோடு கிளுக்கி சிரித்தாள்.
பௌர்ணமிக்கு சந்துரு என்றால் அதிசயமானவன் அவளை பொறுத்தவரை. அவள் இதுவரை பார்த்த ஆடவர்களில் முழுதும் வித்தியாசமானவன் அவன்.
முதலில் அவன் தோற்றமே அதிசயம் அவளுக்கு. அத்தனை ஆளுமை தோற்றத்திற்கு முன் அவன் கால் ஊனமென்பது பெரிதாக தெரியவில்லை அவளுக்கு. தான் சொல்ல விழைவதை பொறுமையாக, நிதானமாக கேட்டு புரிந்து பதில் தரும் அவனின் பாங்கு அதிசயம். இதுவரை அவளின் அம்மாவை தவிர வேறு யாரும் இவளிடம் இத்தனை பொறுமை காட்டியதில்லை.
அவனறையும் அங்குள்ள ஒவ்வொரு பொருளும் இவளுக்கு பேரதிசயங்களே.
அவன் பியானோ வாசிக்கும் போது அவனின் நீண்ட விரல்களின் நளினங்கள் அதிசயமே!
ஒற்றை கால் தாங்கி சுவற்றோடு சாய்ந்து நின்று கித்தார் வாசித்தபடி, மென்மையாக அவன் பாடும் போது, இதம் காட்டும் அவன் முகத்தையும், அவன் இதழசைவுகளையும் கண்கொட்டாமல் பார்த்திருப்பாள்.
அவன் ஓவியம் தீட்டுகையில் அவன் வண்ண சேர்க்கையை உலக அதிசயமாக ரசித்திருப்பாள்.
சந்துரு தந்திரங்கள் செய்கையில் சிறு குழந்தைபோல குதுகளிப்பாள்.
அவன் விரல்களை சொடக்கி ரோஜாப்பூ வரவைத்து அவளிடம் நீட்டுவான். சீட்டு கட்டு அட்டையை தன் பார்வை நோக்கில் தீப்பற்றி எரிய வைப்பான். அணைந்திருக்கும் மெழுகுவர்த்தியை ஒற்றை சொடுக்கில் ஒளிர செய்வான். வெறித்த பார்வையில் அந்த தீயை பனிகட்டியாக இறுக செய்வான். இதுபோல சிற்சில தந்திரங்களை தனிமையில் செய்தே பழகி சோர்ந்திருந்தவனுக்கு முதல் ரசிகையாய் அவள் இருந்தாள் இப்போது.
பௌர்ணமி வரவுக்கு பிறகு சந்துருவின் மன அழுத்தங்களும் வெகுவாக குறைந்து இருந்தன. வெகுளியான அவளின் குணம் அவனை எப்போதும் இளக வைப்பதாய்.
இப்போதெல்லாம் அவன் அதிகமாக அனைவரிடமும் எரிந்து விழுவதில்லை. இயல்பான மனநிலையை தக்க வைத்துக் கொண்டிருந்தான்.
ஒருநாள் இரவில் அறையின் சுவற்றை பிடித்து ஒற்றை காலில் தாங்கி நடை பயிற்சி செய்து கொண்டிருந்தான். அப்போது தோட்டம் பக்கமாக பௌர்ணமி தனியே செல்வதை சன்னல் வழி பார்த்தவன், தன் அருகிருந்த பேனாவை எடுத்து அவள்மீது வீசிட, அது தோளில் பட்டு அவள் திரும்ப, சன்னல் முன் சந்துரு அவளை முறைத்து நின்றிருந்தான்.
“இப்ப எங்க போற” அவன் கையசைத்து கேட்க, அவள் வானத்தில் முழு நிலவை காட்டி, நடப்பதை போல இரண்டு விரல்களை அசைத்து, தூரமாக கைக்காட்டினாள். இவனுக்கு புரிந்தது. முழு நிலவை ரசிக்க போகிறாளாம்!
“தனியாவா போவ, பயமில்லையா” என்று சற்று வியப்புடனேயே அவன் கேட்க,
‘எதுக்கு பயம், நான் சின்ன வயசுல இருந்தே முழு நிலா பார்க்க அங்க போவேனே, அம்மா கூட எப்பவாவது வருவாங்க, ரொம்ப நல்லாருக்கும்’ என்று கைகளை வேகவேகமாக அசைத்து காட்டினாள்.
“ரொம்ப தூரமா?” சந்துரு யோசனையோடு வினவ, ‘நீயும் வரயா? நான் காட்டுறேன்’ என்றாள் அவள்.
இந்த வீட்டின் தோட்டத்தை தாண்டி இதுவரை வேறெங்கும் சென்றதில்லை அவன். அவள் ஏதோ புதுவிடத்திற்கு அழைக்க, இவனுக்குள் ஆர்வம் தொற்றிக் கொண்டது. சக்கர நாற்காலியைத் தவிர்த்து, இருபுறம் ஊன்றுகோலை ஊன்றியபடி பின்பக்க கதவுவழி அவளுடன் நடந்தான்.
சில்லென்ற குளிர் காற்று, புல்வெளியில் ஒற்றையடி பாதை, இரவில் பாலொளி இறைக்கும் முழுநிலா வெளிச்சம்… இருவரும் நடந்தனர். சட்டென பௌர்ணமி நின்று விட்டாள். சந்துரு என்னவென்று அவளை பார்க்க, அவள் தரையை கைக்காட்டினாள். அங்கே இவர்கள் பாதையின் குறுக்கே ஒரு நீள பாம்பு ஊர்ந்து கொண்டிருந்தது.
அதை பார்த்த பயத்தில் சந்துரு பின்வாங்க, பௌர்ணமி அவன் கைப்பற்றி நிதானப்படுத்தினாள். சில நிமிடங்களில் அந்த பாம்பு சென்று விட, இருவரும் முன்னேறி நடந்தனர்.
சந்துரு அவளை வியந்து பார்த்து, “உனக்கு பாம்ப பார்த்தாலும் பயமில்லயா” என்று வினவ, “ப்ச் ப்ச்” என்று உச்சு கொட்டி துள்ளி நடந்தாள் அவள். இவன் ஊன்றுகோலூன்றி அவளுடன் நடக்க, சற்று பள்ளத்தாக்கு போன்ற பாதையில் இறங்கி, அரைமணி நேர நடையில், அந்த இடம் காட்சியானது.
ஆங்காங்கே தூர தூர உயர்ந்த மரங்கள், படர்ந்த புல்வெளி விரிப்பு, சிறிதும் பெரிதாக பாறை திட்டுக்கள், எல்லாவற்றிற்கும் மேலாக, பாறையின் பிளவில் இருந்து மெலிதாக கசிந்து விழும் நீர் அங்கே சிறிய ஓடை போல நீர்தடம் அமைத்திருந்தது. அந்த குளம் முழுவதும் அல்லி, தாமரை, செங்கழுநீர் போன்ற நீர் பூக்கள் அழகு காட்டின.
சந்துரு அங்கிருந்த மேடான பாறையில் அமர்ந்து கொண்டான். பழக்கமற்று அதிக தூரம் நடந்தது சற்று மூச்சு வாங்கியது. ஊன்றுகோல் ஊன்றி வந்ததால் கை அக்குள் பகுதியில் வலி எடுத்தது. ஆனாலும் அவன் கண்முன்னால் விரிந்திருந்த இயற்கை காட்சியில் அவனுடல் மெய் சிலிர்த்தது.
காகிதம் இல்லாமல் வண்ணங்கள் குழைக்காமல் இயற்கை தீட்டிய அற்புதமான ஓவியங்களில் ஒன்று, இன்று அவன் கண் முன்னால். ரசிகனாய், ஓவியனாய் அந்த இயற்கை சூழலில் இதமாய் அமிழ்ந்து போனான்.
பௌர்ணமி அந்த நீர் தடாகத்தின் நீரில் கால்களை விட்டு ஆட்டியபடி கரையில் அமர்ந்துகொண்டு, தனக்கு மேலிருந்த நிலவை தோழமையோடு பார்த்தாள்.
இவளின் சிறு வயதில், ‘எல்லாரும் பேசுறாங்க மா, ஏன் எனக்கு மட்டும் பேச வரல?’ என்று அவள் தன் வாயை தொட்டு காட்டி தேம்பலோடு கேட்டிருந்தாள். பாவம் இந்த உலகம் ஒலி அலைகளால் நிறைந்திருப்பது என்பது அந்த நிசப்தகாரிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எப்போதும் ஒலியற்ற ஆழ்ந்த நிசப்தம் மட்டுமே அவள் உலகம்!
அன்றுதான் அவளின் அம்மா இந்த இடத்திற்கு அழைத்து வந்து, இதே பௌர்ணமி நிலவை காட்டி, ‘அதோ அந்த நிலாவால கேட்கவும் முடியாது, பேசவும் முடியாது. அது போல தான் நீயும்’ என்று மகளை தேற்றி இருந்தார்.
அன்றிலிந்து ஒவ்வொரு பௌர்ணமிக்கும் இங்கே வந்து முழுநிலவோடு அளாவுவதை வழக்கமாக்கிக் கொண்டாள். என்ன பேசுவாள்? என்ன கேட்பாள்? என்பது அவளும் நிலவும் மட்டுமே அறிந்த ரகசியம். அவளின் தனித்த வாழ்க்கையில் இந்த பௌர்ணமி நிலவு பெரும் ஆறுதல் துணை எப்போதும்.
முன்பு தன் அம்மாவின் வீட்டிலிருந்து பத்து நிமிட நடை பயணத்தில் இங்கு வந்து விடலாம், இப்போது சந்துரு மாளிகையில் இருந்து அரைமணி நேர நடைப்பயணம் அவ்வளவு தான் வித்தியாசம் அவளுக்கு.
சற்று நேரம் பொறுத்து பௌர்ணமி ‘போகலாம்’ என்று அழைக்கவும் தான், சந்துரு மனமே இல்லாமல் அவளுடன் திரும்பி வந்தான். ‘அடுத்த பௌர்ணமிக்கும் நானும் உன்னோட வருவேன்’ என்பதையும் அவளிடம் தெளிவித்து கொண்டான். நேற்றுவரை கூண்டில் அடைப்பட்டு இருந்தவன், மீண்டும் ஒருமுறை அந்த சுதந்திர காற்றை ஆழ்ந்து சுவாசித்தபடி தாங்கி தாங்கி நடந்தான்.
அடுத்தடுத்த பௌர்ணமி இரவுகளில் அந்த நீரோடையில் இறங்கி, மெதுமெதுவாக நீச்சல் பழகலானான்.
பஞ்ச பூதங்களில் நீரின் சக்தி அற்புதமானது. நம் பூமி முக்கால் பாகம் நீரால் சூழ்ந்தது. மீதம் மட்டுமே நிலமாக மீந்தது. ‘நீரின்றி அமையாது உலகு’ அல்லவா.
அத்தகைய நீரின் அளப்பரிய ஆற்றலை இப்போதெல்லாம் அணுஅணுவாய் அனுபவித்தான் சந்துரு.
நிலத்தில் வாழ்வதை விட நீரில் அமிழ்ந்திருப்பதே அவனுக்கு பிடித்திருந்தது. இத்தனை வருடங்கள் அவன் அனுபவித்திராத நீர் வெளியின் அலாதியை இப்போதெல்லாம் உளமார அனுபவித்து கொண்டான். வெகு விரைவாகவே லாவகமாக நீச்சல் பழகி கொண்டான்.
நிலம், அவன் ஊனத்தை பறைசாற்றி அவனை முடக்கி வைக்கிறது. ஆனால் நீர் அவன் ஊனத்தை ஒற்றுமில்லாமல் தன்னுள் மறைத்து கொள்கிறது. அவன் சுயமாய் நீந்தி நகரும் சுதந்திரத்தை தருகிறது. அவனால் நீரில் நீந்த முடியும்! நேராக நிற்க முடியும்! எந்த உதவியும் இல்லாமல் இங்கும் அங்கும் சுற்ற முடியும்! நிலத்தில் அவன் இயலாமையை, நீர் வெளி ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. அவனுள் உத்வேகத்தையும் தன்னம்பிக்கை வளர்க்கிறது.
தற்போதைய குடும்ப, தொழில் சூழலில் அவனுக்கு தன்னம்பிக்கை மிக தேவையானதாகவும் இருந்தது.
***
படப்பிடிப்பு முடிந்து இரவு தன் அறைக்குள் வந்த அமிர்த்தி சோர்வில் ஓய்ந்து போய் அப்படியே கட்டிலில் தொப்பென்று குப்புற விழுந்தாள்.
“அமுமா டின்னர் சாப்பிட்டு வந்து படுத்துக்கோ வா” பாலி அழைக்க, “முடியல பாலி, ரொம்ப டயர்டா இருக்கு, கொஞ்சம் உடம்பு பிடிச்சு விடு, அங்கங்க வலிக்குது” அமிர்தி எழாமலேயே சொல்ல, பாலி அவளின் உடலை இதமாக பிடித்து விடலானாள்.
“என்னடா மா ரொம்ப ஓஞ்சு தெரியற? அந்த டைரக்டர் உன்ன படுத்தி எடுக்கிறாங்களா?” அவள் முதுகை அழுத்தி விட்டபடி பாலி பேச்சை வளர்க்க, “ஸீன் பர்ஃபெக்டா வரனும்னு தான செய்றாங்க, கஷ்ட படாம இங்க எதுவும் கிடைக்காது பாலி, அதுவும் இந்த சினி ஃபீல்ட்ல நான் என்னோட முத்திரை பதிக்க இன்னும் இன்னும் முயற்சி செஞ்சு என்னோட பெஸ்ட் கொடுத்தே ஆகனும்” சொர்ந்த குரலிலும் உறுதியோடு பேசினாள் அமிர்தி.
“உன்னோட இந்த நம்பிக்கையும் உழைப்பும் தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அமுமா, நானும் எத்தனையோ ஆக்டர்ஸ்க்கு அஸிஸ்டென்டா இருந்திருக்கேன். ஆனா அவங்கெல்லாம் ஒரே நைட்ல எப்படி உச்சத்தை தொடலாம்னு தான் அங்கலாய்பாங்க, உயர பறக்கற வேகத்திலயே கலைஞ்சு போயிடுவாங்க” பாலி சொல்வதை கேட்டபடி அவள் கைகள் தரும் அழுத்ததை அனுபவித்தவளாக ”ம்” கொட்டினாள் அமிர்தி.
“ஆனா அமுமா, இந்த ஃபீல்ட்ல ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும் இல்லனா நம்மள ஒன்னுமில்லாம ஆக்கிடுவாங்க”
“ம்ம்”
“இங்க யாரையும் பகைச்சிக்கவும் கூடாது, யாரையும் முழுசா நம்பவும் கூடாது”
“ம்ம்”
“இந்த பாலி உன்கூட இருக்கிறவரை உனக்கு கவலையே வேணா அமுமா, என்னை தாண்டி உன்ன யாரும் நெருங்கவே முடியாது”
“ம்ம் பாலி”
“இந்த பாலி இருக்க பயமேன்?” அவள் கையை அபய கரம் காட்டி சொல்ல, அதைப் பார்த்து சத்தமாக சிரித்தப்படி எழுந்து அமர்ந்த அமிர்தி, “நீ யூனிக் பீஸ் பாலி” என்று சிரிப்பு மாறாமல் குளியலறை நோக்கி நடந்தாள்.
“நீ சீக்கிரம் ஃபிரஷ்ஷா ஒரு குளியல் போட்டு வா அமுமா, நான் உனக்கு டின்னர் எடுத்து வைக்கிறேன்” சொல்லிவிட்டு பாலி வெளியே நடந்தாள்.
அமிர்தி குளித்து வரவும், பாலி உணவை அறைக்கே கொண்டு வந்து விட, இருவரும் பேச்சை வளர்த்த படி சாப்பிட்டு முடித்தனர்.
“எம்மாடியோவ் இன்னிக்காவது சீக்கிரம் படுத்து உறங்கலாம். இங்க வந்ததுல இருந்து ராத்திரில நல்ல உறக்கமே இல்ல, திடீர்னு ஏதேதோ சத்தம் கேக்குது, பௌர்ணமி, சந்திரகாந்த் கதைய கேட்டதுக்கு அப்புறம் பொட்டு தூக்கம் வந்து தோலையில, இன்னிக்காவது எந்த தொந்தரவும் இல்லாம தூங்கியே ஆகனும்” பாலி வளவளத்தபடி படுத்துக் கொண்டாள்.
“முதல்ல உன் ஸ்பீக்கர ஆஃப் பண்ணா தான தூக்கம் வரும் பாலி” அமிர்தி சொல்லவும்,
“நானெல்லாம் வாயில வாழுறவ, வாயாடமா எப்படி இருக்க சொல்ற” அலுத்து கொண்டு, “ஆமா அமுமா உனக்கு இந்த பேய், பிசாசு மேல எல்லாம் நம்பிக்கை இருக்கா?” என்று தாழ்ந்த குரலில் சந்தேகம் கேட்டாள்.
“நம்பிக்கை இருக்கு இல்லனு எனக்கு உறுதியா சொல்ல தெரியல பாலி, பட் சினிமால காட்டற மாதிரி அநியாயமா இறந்தவங்க ஆவியா வந்து பழிவாங்கினா, அந்த பயத்துலயாவது இந்த உலகத்துல அநியாயங்கள் குறையலாம்னு தோனும்” அமிர்தி தன் கருத்தை சொல்ல,
“இங்க பீதியில எனக்கெல்லாம் பேதி கிளம்புது, நீ நல்லா தான் சொல்ற கருத்த, எனக்கெல்லாம் இந்த ஷுட்டிங் சீக்கிரம் முடிஞ்சு முழுசா ஊரு போய் சேர்ந்தா போதும்னு இருக்கு, ஆத்தா மகமாயி நீ தான் துணை நிக்கனும்” என்று வேண்டுதலையும் வைத்து விட்டு போர்வையை இறங்க போர்த்திக்கொண்டு உறங்கி போனாள்.
அமிர்தியும் சின்ன புன்னகையோடு திரும்பி படுத்து உறங்க முயன்றாள்.
இரவு ஏறிக் கொண்டு இருக்க, அரை வட்ட நிலவும் காய்ந்து கொண்டு இருக்க, பாலிக்கு சட்டென விழிப்பு தட்டியது. எழுந்து அமர்ந்தவள் சுற்றும் முற்றும் பார்க்க, படுக்கை வெறிச்சோடி தெரிந்தது.
“அய்யோ அமுமா எங்க போன?” என்று பதறி எழுந்து, குளியலறை பக்கம் தேட அங்கேயும் காணவில்லை. பாலிக்கு உள்ளுக்குள் பதறியது.
அறைக்கு வெளியே சென்று சுற்றும் முற்றும் தேட, கடைநிலை வேலையாட்கள் கூடத்தில் அங்கங்கே சுருண்டு உறங்கி கிடந்தனர். அமிர்தி எங்கே என்ற யோசனையே பாலியை பதைபதைக்க செய்ய, நேரே மித்ராவதி அறையை நோக்கி ஓடினாள்.
அந்த ஆழ்ந்த அமைதியில் ஏதோ சத்தம் கேட்க, சற்று தாமதித்து காது கொடுத்து கேட்டாள். கதவு தட்டப்படும் சத்தம் அது. சத்தம் வந்த திசையில் இவள் நடக்க, பங்களா பின்புறத்தின் கீழ் பக்கம் இருந்த கதவிலிருந்து சத்தம் வந்தது.
அந்த படிகளில் இறங்கிய பாலி அந்த அகன்ற இரும்பு கதவை மிரண்டு பார்த்தவள், “அமுமா… நீயா? உள்ளயா இருக்க?” எச்சிலை விழுங்கியபடி கேட்டாள்!
அந்த கதவின் உட்புறம் இருந்து தட்டும் சத்தம் இப்போது வேகமாக கேட்டது!
அமிர்தி அந்த அறைக்குள் அடைப்பட்டு இருக்கிறாள் என்பதை தாண்டி வேறு யோசனை வரவில்லை பாலிக்கு. “நீ பயப்படாத அமுமா, நான் உன்ன வெளியே கொண்டு வரேன் இரு” என்று பல வருடம் பூட்டி இறுகி கிடந்த அந்த இரும்பு கதவை தன் முழு பலம் கொண்ட மட்டும் நெக்கி தள்ளினாள் பாலி. மறுபடி மறுபடி அவள் திறக்க முயல அசைவேனா என்றிருந்த கதவு மெல்ல மெல்ல கரகர சத்தத்துடன் திறந்து கொண்டது!
அதேநேரம், அமிர்தி அவளின் அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். பாலி அருகிருந்து சென்றதைக் கூட அறியாமல்.
***
அவள் வருவாள்…