அவள் பௌர்ணமி 8

IMG-20200921-WA0010-4d3ede20

அவள் பௌர்ணமி 8

 

விடியற்காலை வழக்கம்போல் விழித்து எழுந்த அமிர்தி அறையில் பாலியை காணாமல் தேடி கொண்டு வெளியே வர, காலை படப்பிடிப்பிற்கு அனைவரும் பரபரத்து கொண்டிருந்தனர். 

 

அவரவர்கள் தங்களுக்கான வேலைகளில் மும்முரமாக செயல்பட்டு கொண்டிருக்க, அமிர்தி ஒவ்வொருவரிடமும், ”பாலி எங்கே பார்த்தீங்களா?” என்று விசாரித்து வர, ஒன்றே போல அவர்கள், “தெரியலயே”, “நான் பாக்கலயே” என்றே பதில் தர, இவளுக்கு கவலையானது.

 

பிரியா, அமிர்தியை விரைந்து தயாராக துரிதப்படுத்த, “பாலி எங்க ப்ரியா?” அமிர்தி கேட்க, “நான் பார்க்கலையே” என்ற பிரியாவிற்கும் நெருடலானது. எப்போதும் அமிர்தி உடனிருக்கும் பாலி இத்தனை நேரமாகியும் தென்படாதது அனைவருக்கும் சந்தேகமானது.  

 

அமிர்தி, பாலியை அழைத்தப்படி அந்த மாளிகையில் அங்கும் இங்கும் தேடலானாள். மற்றவர்களும் அவளோடு சேர்ந்து பாலியை தேட, அவள் எங்கும் காணாமல் போக, அனைவருக்குள்ளும் கலவரம் மூண்டது.

 

“அய்யோ பாலி…! அமிர்தி… விக்கி… எல்லாரும் ஓடி வாங்க”

 

பின்புற தோட்டத்தின் கீழ்புற அறையின் முன்னே பாலி விழுந்து கிடக்க, அதை பார்த்து பதறிய பிரியா, சத்தமிட்டு அனைவரையும் அழைத்து, பாலியை எழுப்ப முயல அவளோ நினைவற்று கிடந்தாள்.

 

பிரியாவின் குரல் கேட்டு அங்கே ஓடிவந்தவர்கள் அந்த நிலையில் பாலியை பார்த்து பதறி தான் போயினர். மித்ராவதியும் விக்கியும் அந்த கதவை மிரட்சியோடு பார்க்க, அந்த இரும்பு கதவு பூட்டியது போலவே தான் இருந்தது.

 

நினைவற்று கிடந்தவளின் முகத்தில் தண்ணீர் தெளிக்க, நினைவு திரும்பி கண்கள் திறந்த பாலி அங்கிருந்தவர்களை மிரண்டு பார்த்தாள். அமிர்தியை பார்த்ததும் அவளை தாவி அணைத்து கொண்டவள், “அமுமா உனக்கு எதுவும் ஆகல இல்ல, உன்ன காணாம நான் ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா?” என்று கலங்கி பிதற்றினாள்.

 

“உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லயா பாலி, படிச்சு படிச்சு சொல்லி இருந்தேன் இல்ல, இந்த கதவு பக்கம் யாரும் போக வேணாமுன்னு, நீ என்னடான்னா இங்கேயே வந்து படுத்து கிடக்கிற” விக்னேஷ் தான் ஆத்திரமாக கேட்டிருந்தான்.  

 

“என்ன? நீ சொன்ன கதவு இதுவா? நான் வேணுமுன்னு எல்லாம் இங்க வரல, அமுமாவ தேடி தான் இங்க வந்தேன்” என்றாள் பாலி.

 

“நான் எங்கேயும் காணாம போகல பாலி, நீதான் ரூம்ல இல்லாம இங்க வந்து மயங்கி கிடக்குற, நீ எப்படி இங்க வந்த அதை முதல்ல சொல்லு” அமிர்தி அவளை ஆறுதலாக தட்டி கொடுத்தபடி விசாரித்தாள்.

 

அவளை புரியாமல் பார்த்த பாலி, “இல்ல அமுமா, ராத்திரி நான் எழுந்து பார்த்தப்போ நீ படுக்கையில இல்ல, உன்ன தேடி தான் நான் இங்க வந்தேன், இதோ இந்த ரூம்ல உன்ன யாரோ அடச்சு வச்சிருந்தாங்க, நீ உள்ளருந்து ஹெல்ப் கேட்டு கதவை தட்டின, நான் தான் கதவை திறந்து உன்ன காப்பாத்தினேன்…!” என்று பாலி படபடவென சொல்ல, அதனை கேட்டவர்களுக்கு குழப்பமாக இருந்தது.

 

“சும்மா ஏதாவது கனவு கண்டுட்டு உளறாத பாலி, இந்த கதவு பூட்டினது பூட்டின மாதிரியே இருக்கு, நீ திறந்தேன்னு சொல்லுற?” மித்ராவதி கேட்க, அந்த பூட்டி இருந்த கதவை பார்த்த பாலியின் முகமும் குழப்பத்தைக் காட்டியது.

 

“இல்லயே, நைட்டு கதவுல பூட்டு இல்லையே! ரொம்ப டைட்டா இருந்த கதவை நான் தான் நெட்டி தள்ளி திறந்தேன்! திறந்ததுக்கு அப்புறம், ரூமெல்லாம் இருட்டா தெரிஞ்சது, அப்புறம்… அப்புறம்!” அதற்குமேல் யோசித்தும் பாலிக்கு எதுவும் நினைவிற்கு வரவில்லை.

 

“பாலி நீ ஏதோ கனவு தான் கண்டு இருக்க போல, நான் நைட் புல்லா ரூம்ல தான் தூங்கிட்டு இருந்தேன், இப்போ தான் எழுந்து வரேன், நான் எங்கேயும் காணாமையும் போகல, யாரும் என்னை அடைச்சு வைக்கவும் இல்ல” என்று அமிர்தி அவளுக்கு விளக்கம் தந்தாள்.

 

“ஓவர் டென்சனாகும் போது சிலபேரு இப்படி தூக்கத்தில நடப்பாங்க, அதான் பாலிக்கும் நடந்து இருக்கு போல, நீ போய் ரெஸ்ட் எடுத்துக்கோ பாலி எல்லாம் சரியா போயிடும்” என்று முகிலன் அவரின் அறிவிற்கு எட்டிய சமாதானம் சொல்ல, மற்றவர்களும் அதையே நம்பி கலைந்து சென்றனர்.

 

மித்ராவதி அந்த கதவை நீங்காத கலவரத்தோடு வெறித்து நின்றிருந்தார். 

 

“மேடம்” விக்னேஷ் அழைக்க திரும்பியவர், “எனக்கு என்னவோ தப்பா தெரியுது விக்கி, தப்பி தவறி கூட இங்கிருக்க யாருக்காவது‌ ஏதாவது ஆனா…!” அவர் தன் பயத்தை வெளிப்படுத்தினார்.

 

“புரியுது மேடம், நேத்து நைட் ஸ்டோரி டிஸ்கஷனுக்கு எங்களை வர சொல்லி இருந்தீங்க இல்ல?” விக்னேஷ் யோசனையோடு கேட்க, “ஆமா விக்கி, பட் ஏதோ டயர்ட்ல எப்படியோ தூங்கிட்டு இருக்கேன்” என்றார் அவர்.

 

“நானும் வழக்கத்துக்கு மாறா நேத்து படுத்ததும் தூங்கிட்டு இருக்கேன் மேடம்!” என்று சொல்ல இருவருக்கும் ஏதோ நெருடலானது.

 

முகிலன், பிரியாவை‌ அழைத்தவர், “சாரி கைய்ஸ், நைட் உங்களை டிஸ்கஷனுக்கு வர சொல்லிட்டு நான் தூங்கிட்டேன்” மித்ராவதி வருத்தம் தெரிவிக்க,

 

“இட்ஸ் ஓகே மித்ரா மேடம், நானும் நைட் சீக்கிரமே தூங்கிட்டு இருக்கேன்” என்று முகிலன் சொல்ல, 

 

“சாரி மேடம், நானும் எப்படி தூங்கினேனே தெரியல, காலையில எழுந்தது மட்டும் தான் தெரிஞ்சது” பிரியாவும் மன்னிப்பை வேண்டினாள்.

 

நேற்றிரவு அனைவரும் ஒன்றே போல தூக்கத்தில் ஆழ்ந்து இருக்கிறார்கள் என்பது மித்ரா, விக்கிக்கு புரிந்தது. ஆனால் பாலி மட்டும் உறக்கம் கலைந்து அமிர்தியை காணாமல் தேடி இருக்கிறாள். நேற்றிரவு நடந்த நிகழ்வுகளை கோர்த்து பார்க்க மனதில் அச்சம் தான் மூண்டது. 

 

மித்ராவதி அதற்குமேல் யோசிக்க முடியாமல் தன் அறைக்குள் சென்றுவிட, குழப்பத்தோடு நின்றிருந்த விக்னேஷின் தோளை சொறிந்த பிரியா, “எனக்கு என்னவோ பயமாவே இருக்கு விக்கி, இந்த பங்களாவில நிஜமாவே பேய் இருக்கா?” வெளிரிய முகத்தோடு அவள் கேட்க, அவன் ஆழ்ந்த மூச்செடுத்து ஆமென்று தலை அசைத்தான். 

 

“என்ன சொல்ற விக்கி? நிஜமா நீ பார்த்தியா?” பிரியா மேலும் நடுங்கியபடி கேட்க, “பார்த்துட்டு தான் இருக்கேன்!” என்றவன் அவளின் பின்னால் கைக்காட்ட, அதிர்ச்சியுடன் மூச்சை இழுத்து பிடித்தபடி அவள் திரும்பி பார்த்தாள். 

 

அங்கே இருந்த ஆளுயற கண்ணாடியில், அகல விரிந்த விழிகளோடு தன் பயந்த தோற்றத்தின் பிம்பம் தெரிய, பின்னால் விக்னேஷ் வாய்க்குள் சிரிப்பதும் அவளுக்கு தெரிந்தது. கோபமாக திரும்பி அவனை இரண்டடி போட்டவள், “ச்சே நான் பயந்தே போயிட்டேன், என்னை பார்த்தா பேய் மாதிரியா தெரியுது உனக்கு? உன்ன போய் கேட்டேன் பாரு, மித்ரா மேடம் உன்ன தலையில வச்சு ஆடறாங்கன்ற திமிரு உனக்கு” என்று பிரியா அவனை நொடிந்து விட்டு அகல, அவளின் நொட்டம் எண்ணி சிரித்து கொண்டே திரும்பியவனின் சிரிப்பு உதட்டோடு உறைந்தது.

 

அதே ஆளுயர கண்ணாடியில், பாலியும் அமிர்தியும் பேசி கொண்டிருக்கும் பிம்பம் தெரிய, அவர்கள் பின்னால் நிழல் போன்ற உருவத்தின் பிம்பமும்  தெரிந்தது! இவனின் நெஞ்சுகூடு சில்லிட்டு போக, சட்டென திரும்பி அவர்களை பார்த்தான். அமிர்தி, பாலியை சமாதானம் செய்து அறைக்குள் அழைத்துச் சென்றாள். கண்ணாடியில் இப்போது இவன் பிம்பம் தவிர வேறு தெரியவில்லை. விக்னேஷ் இதயத்தின் தடதடப்பு வேகம் பிடித்திருந்தது.

 

மித்ராவதி இரு கைகளால் தலையை தாங்கிக் கொண்டு அறையில் அமர்ந்திருந்தார். அவருக்குள் பல யோசனைகள் ஒன்றோடொன்று மோதி அவரை அலைக்கழித்து இருந்தன.

 

ஒரு பெண் இயக்குனராக தடம் பதித்து இருப்பது அவருடைய வாழ்நாள் சாதனை. இதற்காக அவர் இழந்தவைகளின் எண்ணிக்கை அதிகம். அவர் தன் குடும்பத்திற்காக செலவழிக்கும் நேரமும் வெகு குறைவு. அத்தனை தொழிற் அர்ப்பணிப்பு அவரிடம். ஓய்வற்ற உடல் உழைப்பு, மன உழைப்பு, அதனாலேயே இப்போது இவரால் இந்த இடத்தில் நிற்க முடிந்திருக்கிறது.

 

இருபத்திரண்டு வருட அனுபவம் அவரது. இதுவரை பத்தொன்பது வெற்றி படங்களை இயக்கி வெளியிட்டு இருக்கிறார். இது அவரின் இருபதாவது படம். அவரின் ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு முகம் காட்டுபவை. நட்பு, காதல், அதிரடி, குடும்பம், சமூகம், அரசியல், தனிமனித வாழ்க்கை என்று அவர் எடுத்த ஒவ்வொரு கதைகளும் ஏதோவொரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு, இவரின் சுவாரஸ்யமான கற்பனையில் உருவானவை. ‘நிழல் காதலன்’ கதையும் அவ்வகையே. இவர் கையில் எடுத்திருக்கும் முதல் திகில் படம். காதலையும் திகிலையும் கலந்து இந்த படத்தை உருவாக்கினார். இதோ கிட்டத்தட்ட ஐம்பது சதவீத படப்பிடிப்பு முடிந்தது. இனி மீதம் இருக்கும் காட்சிகள் அனைத்தும் முக்கியமானவை அழுத்தமானவை. அவர் அமைத்திருக்கும் திரைக்கதையின் படி, படத்தின் எண்பது சதவீத காட்சிகள் இந்த பங்களாவில் இருப்பது போலவே அமைந்திருக்க, இன்னும் நிறைய காட்சிகள் மீதமிருக்கின்றன.

 

ஓர் உண்மை சம்பவம் தழுவிய கதையை அதன் உண்மை இடத்திலேயே படம் பிடிப்பதால், அந்த காட்சியின் அழுத்தம் இன்னும் அதிகமாகும் என்பது அவர் அனுபவத்தில் கண்டது. ஆனால், இந்த பங்களாவில் இப்படியொரு அமானுஷ்யத்தை அவர் எதிர்ப்பார்த்திருக்கவில்லை. பேய், ஆவி, பூதம் என்பதை இப்போதும் அவரின் பகுத்தறிவு முழுமையாக நம்ப மறுத்தது.

 

ஒவ்வொரு படத்தையும் இயக்கி முடிக்கும் வரையிலும் ஒரு இயக்குனராக அவரும் பல தடைகளை சந்தித்து மீண்டு வந்திருக்கிறார் தான். சில இக்கட்டான, சிக்கலான சூழ்நிலைகளில் முழு மூச்சாக போராடி வந்த அனுபவங்களும் அவருக்கு உண்டு. ஆனால் இன்றைய சூழ்நிலை அவரை வெகுவாக குழப்பி இருந்தது.

 

“மேடம்” விக்னேஷின் அழைப்பில் நிமிர்ந்தவர், அவனின் வெளிரிய முகத்தை பார்த்ததும் இவருக்குள் ‘அடுத்தென்னவோ?’ என்ற கேள்வி வந்தது.

 

“சாரி மேடம், நாம இன்னும் இங்க ஷுட்டிங் கன்டினியூ பண்றது ரிஸ்க், நாம போயிடலாம்” விக்னேஷின் படபடப்பை கவனித்தவர், “என்னாச்சு விக்கி? வேறென்ன பிரச்சனை? எனக்கு புரியற‌ மாதிரி சொல்லு” தன் மனதை திடமாக்கி கொண்டு கேட்க, அவன் தான் பார்த்ததை கூறியதும், இவருக்கும் பயம் வரத்தான் செய்தது கூடவே அவருள்ளே இருந்த இயக்குனரும் விழித்து கொண்டார்.

 

“ஹே செம்ம ஸீன் பா, நம்ம படத்திலயும் இப்படியொரு ஸீன் வச்சா பிச்சிக்கும் இல்ல” மித்ராவதி சட்டென சொல்ல, ஒரு நொடி திகைத்த விக்னேஷ், மறுநொடி சிரிப்போடு தலையசைத்துக் கொண்டான்.

 

“நீங்கெல்லாம் யூனிக் பீஸ் மேடம், நான் நிஜமா பார்த்து பயந்து நடுங்கி வந்து சொல்றேன், நீங்க என்னடான்னா?” அவன் இப்போது இலகுவாகவே சொல்லி நிறுத்தினான்.

 

“நான் என்ன செய்ய, நினப்பு முழுக்க கதைக்குள்ளயே புதைஞ்சு கிடக்கு, ஒவ்வொரு செகன்டும் சந்துரு, பௌர்ணமி கேரக்டர் கூட வாழ்ந்துட்டு இருக்கேன்! இதோ இந்த பங்களாவில ரெண்டு பேர் அநியாயமா உயிரை விட்டு இருக்காங்க, ஆனா அவங்களுக்கான நியாயத்தை யாருமே கண்டுக்கல, என்னால முடிஞ்ச நியாயத்தை அவங்களுக்கு நான் சமர்பிக்க நினைக்கிறேன். இந்த படத்து மூலமா! ஆனா இங்க இருக்க அமானுஷ்யம் நமக்கு பெரிய தடையா இருக்கும் போல” என்று சொல்லி சோர்ந்து போனார்.

 

இவனுக்கும் அவரின் நிலை புரிய, எதுவும் பேச இயலாமல் வேறென்ன செய்ய யோசனையோடு நின்றான்.

 

மித்ராவதி, “நாம இங்க வந்து அஞ்சு நாள் தான் ஆச்சு, அதுக்குள்ளவே இங்க இத்தனை பிரச்சனை, ஒவ்வொரு நாளும் இந்த பிரச்சனையோட தீவிரம் அதிகமாகிட்டு இருக்கு வேற” என்று பெருமூச்செறிந்தவர், “நாம தாமதிச்சு ஒருவேளை இங்க ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டா…! வேணா விக்கி, இந்த ஷுட்டிங் விட இங்க இருக்க அம்பது பேரோட உயிர் முக்கியம், நாம கிளம்பிடலாம்” என்று ஒரு முடிவோடு பேசினார்.

 

“ஓகே மேடம்”

 

“டே டைம்ல எந்த பிராப்ளமும் இல்ல தானே, சந்துரு, பௌர்ணமி சீன்ஸ் எவ்வளவு முடியுமோ அத்தனையும் டுடே ஃபினிஷ் பண்ணிடலாம்”

 

அவருக்கு இன்றைய திட்டத்தை விடுவதில் விருப்பமில்லை என்பது அவனுக்கு புரிய, “ஓகே மேடம்” என்றான்.

 

“இன்னைக்கு நைட் ஷுட்டிங் வெளியே தான பிளான் பண்ணி இருக்கோம், சோ நாம யாரும் இந்த பங்களாவில தங்க வேண்டிய அவசியம் இல்ல. நைட் ஷுட்டிங் முடிச்சிட்டு நாளைக்கு நாம கிளம்பிடலாம், மத்த சீன்ஸ் செட் வச்சு அரேஜ் பண்ணிக்கலாம். நான் ப்ரோடியூசர் கிட்ட பேசிக்கிறேன்” இத்தனை இக்கட்டிலும் திட்டமிட்டபடி இந்த ஒருநாள் படப்பிடிப்பை தவிர்க்க மனமின்றி மித்ராவதி சொல்ல, விக்னேஷ் அவர் சொன்னதை அப்படியே செயலாக்கினான். தன் பயத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு வேலைக்கு பின்னே ஓடிக் கொண்டிருந்தான். அனைவரையும் துரிதப்படுத்தினான்.

 

அன்று முழுவதும் பகலும் இரவுமாக ஓய்வு சாய்வின்றி காட்சிகள் படமாக்கப்பட்டன. மித்ராவதியின் வேகத்தில் மற்றவர்கள் திணறித்தான் போயினர்.

 

***

 

அவள் வருவாள்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!