அவள் பௌர்ணமி 9

IMG-20200923-WA0001-493f689c

அவள் பௌர்ணமி 9

 

அவள் பௌர்ணமி 9

 

நிழல் காதலன் – ஃப்ளாஷ்பேக் காட்சி

 

தன் மாமன் பைரவநாத் முன்பு தலை கவிழ்ந்து, ஆத்திரத்திலும் அவமானத்திலும் உடல் விறைத்து உட்கார்ந்து இருந்தான் சந்துரு. 

 

காந்திமதி மகனின் வாழ்வை எண்ணி  கண்களில் வழிந்த கண்ணீரை துடைக்கவும் மறந்து மனங்கலங்கி அமர்ந்து இருந்தார்.

 

இவர்களை பார்த்துக் கொண்டிருந்த பைரவநாத் முகத்தில் ஏளனமான நகைப்பு அப்பட்டமாக படர்ந்து இருந்தது.

 

அவர்கள் முன்பு பவ்வியமாக நின்றிருந்த கல்யாண தரகர், “என்னை மன்னிச்சிடுங்க மா, தம்பியோட காலு வளர்ச்சி இல்லாம இருக்கறது பெரிய குறையா தெரியலம்மா, அவருக்கு இப்படி இருக்கறதால… அவரால குடும்பம் நடத்த முடியுமானு… குழந்தை பெத்துக்கிற தகுதி இருக்கோ இல்லையோன்னு… பொண்ணு வீட்டுகாரங்க யோசிக்கிறாங்கம்மா! அதால தான்” என்ற அவரின் பேச்சை மேலும் கேட்க முடியாமல், “போதும் நிறுத்துங்க தரகரே, இனிமே ஒரு வார்த்தை என் மகனை பத்தி தப்பா பேசினா உங்க மரியாதை கெட்டு போகும் வெளியே போங்க” என்று கத்தி விட்டார் காந்திமதி.

 

பைரவநாத் தரகரிடம் கண்காட்ட, அதற்குமேல் அங்கு நிற்காமல், “என்னை மன்னிச்சிடுங்கம்மா” என்று மன்னிப்பை வேண்டிவிட்டு சென்று விட்டார்.

 

“கல்யாண தரகரை விரட்டினா எல்லாம் சரியா போச்சா அத்த” என்று ஏளனம் தொனிக்க கேட்டு விட்டு பைரவநாத்தும் நகர்ந்து விட, அவரை நிமிர்ந்து பார்த்த சந்துரு கண்களில் சிவப்பேறி இருந்தது.

 

தன் சக்கர நாற்காலியை தானே வேகமாக சுழற்றி தன் அறைக்குள் நுழைந்து கொண்டவன் மனம் வெந்தனலில் வெந்து மாய்ந்து கொண்டிருந்தது. தன் ஆண்மை தகுதியில் கேள்வி எழுப்பியவர்களை வெட்டி வீழ்த்தும் கோபம் அவனுக்குள். 

 

ஆனால் தன்னால் ஒன்றும் செய்ய இயலாமல் முடங்கி கிடக்கும் இந்த நிலை, இயலாமை அவனுக்கு அவன்மீதே வெறுப்பை ஏற்படுத்திட, அறையில் இருந்த பொருட்களை எல்லாம் தூக்கி வீசினான். இருகைகளாலும் தலையை பிய்த்துக் கொண்டு, “ஆஆஆ” என்று ஆங்காரமாய் கத்தினான்.

 

மருதாணி சிவப்பேறிய பொன்னிற பாதங்கள் தரையில் படிந்தும் படியாமலும் இருகைகளால் முன்புற பாவாடையை சற்றே தூக்கி பிடித்தப்படி அவன் அறையில் இறைந்து கிடக்கும் பொருட்களை மிதிக்காது தாண்டி தாண்டி அவன் முன் வந்து நின்றாள் பௌர்ணமி. 

 

அவளின் மிரட்சியான பார்வை அந்த அறையை சுற்றி வந்தது. அங்கே அழகழகாக நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்த எல்லா பொருட்களும் கீழே இறைந்தும் சில உடைந்தும் கிடக்க, சற்றுமுன் இவள் இஸ்திரி போட்டு மடித்து மர பீரோவில் அடுக்கி வைத்துவிட்டு சென்ற அவன் உடைகள் எல்லாம் கசங்கி கீழே இறைந்து கிடக்க, இன்னும் அடங்காத கோப மூச்சுகளோடு சந்துரு அறை நடுவே சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தான்.

 

அவன் முகம் சிவந்து இறுகி தரையை வெறித்து இருக்க, பௌர்ணமி அவன் தோளை தட்டி, அறையின் கதியை கைளால் காட்டி, ‘என்னாச்சு?’ என்பதாக சைகையில் கேட்டாள்.

 

இவனுக்கு அவளிடம் பதில் தரும் பொறுமை இருக்கவில்லை. தன் ஒற்றைக்கால் ஊன்றி சக்கர நாற்காலியில் இருந்து எழுந்தவன் அதை பிடித்தபடி நடக்க, அவனை புரிந்தவளாக, அங்கே இறைந்து கிடந்த பொருட்களில் அவனின் ஊன்றுகோலை தேடி எடுத்து அவனிடம் நீட்டினாள். அவளையும் அந்த ஊன்றுகோலையும் மாற்றி மாற்றி பார்த்தவன், ஆத்திரமாய் அதை பிடுங்கி வீசி எறிந்தான். 

 

“நீயும் எந்த சப்போட்டும் இல்லாம என்னால நடக்க முடியாதுனு காட்டிறியா? ஏய் ஒத்த கால்ல இருந்தாலும் நானும் ஆம்பள தான், என்னால ரெண்டு கால்ல நடக்க மட்டும் தான் முடியாது, இந்த ஒத்த கால்ல என் முழு உயரத்தோட நிக்க முடியும்” என்று ஒற்றை காலில் குதித்து எந்த பிடிப்பும் இன்றி அவன் நேராக நின்று காட்ட, இவள் அவன் கோபத்தோடு பேசுவதை விளங்கிக்கொள்ள முடியாமல் தலை சாய்த்து அவனை மேலும் கீழுமாக திருதிருத்து பார்த்தாள்.

 

“சாதாரண மனுசனுக்கு இருக்க எல்லா தகுதியும் எனக்கும் இருக்கு. எனக்கு ஒரு பொண்ண வச்சு வாழ தகுதி இல்லனு எப்படி அவனுங்க பேசலாம்? எப்படி பேசலாம்? இது மட்டும் தான் என்னோட ஒரே குறை, இதை வச்சு என்னை மொத்தமா குறையானவனா பார்ப்பானுங்களா?” என்று தன் வளர்ச்சி குறைந்த காலை ஆத்திரமாக தட்டி சொன்னவன், ஒற்றை காலில் குதித்து முன்னே வர, தரையில் கிடந்த பெயிண்டிங் பிரஸ் மீது காலை வைத்து வழுக்கிட பின்னால் தடுமாறினான். அவனை விழாமல் தாங்கி பிடிக்க முயன்ற பௌர்ணமியும் முடியாமல், அவனோடு சேர்ந்து இருவரும் கீழே விழுந்தனர்.

 

இறைந்து கிடந்த ஆடைகள் மீது அவன் மல்லாந்து விழ, அவன் மேல் அவள் குப்புற விழுந்திருந்தாள். அவன் கரமொன்று அவளிடையை அணைத்து பிடித்து இருக்க, தரையில் விழுந்த அதிர்ச்சியை தாண்டி, பெண்மையின் முதல் தேக ஸ்பரிசம் அவனின் உணர்வு நரம்புகளை கிளர்ந்தெழ செய்வதாய்.

 

அவன் மேல் விழுந்த அதிர்ச்சியில் பதறி பௌர்ணமி எழ முயல, அவனின் பிடியில் அழுத்தம் கூடி அவளை விலக விடாமல் தடுத்தது. அவள் மிரண்டு அவன் முகம் பார்த்தாள்.

 

சந்துரு இறுக கண்களை மூடி தன்னுள் கிளர்ந்தெழும் உணர்வுகளை ஆழ்ந்து அனுபவிக்க முயன்றான். தன்னை பழித்தவர்களின் பழிச் சொல்லும் அவன் நினைவில் மோதி அவன் இதயத்தை தாக்கியது. அந்த மனவேதனையில் அவன்‌ இறுக மூடிய இமையோரம்‌ துளி ஈரம் கசிந்திட, அதனை பார்த்த பௌர்ணமி அவன் கண்ணீரை அவசரமாக துடைத்து விட்டாள்.

 

சந்துரு கண்கள் திறக்க, பௌர்ணமியின் பரிதவித்த வட்ட முகம் அவனருகில் காட்சியானது. அவள் தன் கன்னத்தில் கண்ணீர் போல விரலால் கோடிட்டு காட்டி, கூடாது என்று விரலசைத்தாள். அவளின் பரிவில் இவன் மொத்தமாக உடைந்து போனான். மறுகையால் அவள் தலையை பற்றி தன் மார்போடு அவளின் முகத்தை அழுத்திக் கொண்டான்.

 

ஆனால் பௌர்ணமிக்கு அவனின் பிடியும் நெருக்கமும் அவஸ்தையாக இருக்க, அவன் கைகளுக்குள் அடங்காமல் தலையை நெட்டி, உடலை நெளித்து விலக போராட, இவன் பிடியும் தளர்ந்தது. உடனே அவள் எழுந்து நின்று கொள்ள, அவனும் எழுந்து தரையில் அமர்ந்தபடி ஏமாற்றம் அப்பிய முகத்துடன் பௌர்ணமியை பார்த்தான்.

 

அவள் சந்துருவின் நிலை புரியாது அவன் எழுந்து கொள்ள கைநீட்ட, சந்துரு தன்னை சுட்டி, அவளை சுட்டி இரு கைகளையும் இணைத்து விலக்கி, தலையை மறுப்பாக அசைத்து காட்டினான். “நான் தொடுறது உனக்கு பிடிக்கலையா, உனக்கு கூட நான் அருவெறுப்பா தோனுறேனா? நீயும் என்னை வெறுக்கிறீயா பௌர்ணமி” என்று அவன் ஆதங்கமாக கேட்க, அவன் கேள்வி புரிந்தவள் பதிலின்றி தயங்கி நின்றாள்.

 

சந்திருவின் முகம் அவமானத்தின் சாயல் காட்டியது. ‘இவளுக்கு கூட தன்னை பிடிக்காமல் போனதா? இவளும் என் அருகாமையை வெறுக்கிறாளா?” அவன் ஆண் என்ற கர்வம் அடிப்பட்டு போனது.

 

சந்துருவை அப்படி காண பொறுக்காத பௌர்ணமி, வேகவேகமாக கையசைத்து சைகைகள் செய்து அவனிடம் ஏதோ‌ தெரிவிக்க முயன்றாள்.

அவளின் செய்கையை ஊன்றி கவனித்தவன், “உன்னோட அம்மா, யாரையும் உன்ன தொடவிட கூடாதுன்னு முன்ன சொல்லி‌ இருக்காங்களா!” அவள் அப்படி தெரிவித்ததில் இவனுக்கொரு அற்ப‌ திருப்தி.

 

“உங்க அம்மா உனக்கு சொல்லி இருக்கறது சரிதான், ஆனா உனக்கு என்னை பிடிச்சிருந்தா, உனக்கு என்மேல நம்பிக்கை இருந்தா, நான் உன்னை தொடலாம் தப்பில்ல! நீ சொல்லு பௌர்ணமி உனக்கு என்னை பிடிச்சிருக்கா? உனக்கு என்மேல நம்பிக்கை இருக்கா?” அவன் நிதானமாக சைகையில் அவளிடம் கேட்க, அவள் மருண்டு அவனை பார்த்தாள்.

 

உலக அறிவு எதுவும் தெரியாதவள். தன் தாய்க்கு பிறகு தன்னை ஓரளவு புரிந்து கொண்டவன் சந்துரு மட்டும் தான் என்பதை உணர்ந்தவள். அவளை பொறுத்தவரை அவன் உயர்ந்தவன், இவள் அவனுக்கு சேவை செய்பவள் அவ்வளவே. இப்போது அவன் அவளை தனக்கு நிகராக வைத்து யாசித்து கேட்பது இவளுக்கு புரியாத புதிராக இருந்தது. 

 

சந்துருவிற்கு நன்றாகவே புரிந்து இருந்தது  ஒரு பெண்ணிடம் என்ன வேண்டி கொண்டிருக்கிறான் என்று. அதுவும் தனக்கு கீழ் வேலை செய்பவளிடம். ஆனால் மற்ற அனைவரை விடவும் அவள் இவனுக்கு‌ மனதளவில் நெருக்கமாகி இருந்தாள். இருவருக்கும் உடலளவில் குறைகள் இருப்பினும் மனதளவில் இயல்பான புரிந்துணர்வு‌ இருந்தது. 

 

தன் ஊனத்தால் எந்த பெண்ணுக்கும் தான் பாரமாக இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் இதுவரை பெண் துணையை பற்றி அதிகம் யோசித்திராதவன். இன்று அவன் ஆண்மை தகுதி மீது பழி வீசியிருக்க, அவனுக்கும் தனக்கொரு துணை வேண்டும் என்ற எண்ணம் உறுதியானது. பௌர்ணமி குணம் பற்றி நன்கு தெளிந்தவன், சற்று முன் அவளின் நெருக்கத்தில் நிறைந்து போனவன், இவளைவிட சிறந்த துணையாய் தனக்கு வேறுயாராலும் இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்திருந்தான்.

 

தான் கேட்டும் பௌர்ணமி பதிலின்றி நிற்க, இவன் முகம் அடிப்பட்ட வலி காட்டியது. அவன் முகமாற்றம் தாங்காதவள், இருகைகளையும் மறுத்தசைத்து, அவனை சுட்டி தன்னிரு கைகளையும் சேர்த்து தன் நெஞ்சோடு பொருத்திக் காட்டினாள்.‌ ‘எனக்கும் உன்ன பிடிக்கும்’ என்று.

 

சந்துரு அவளை நெகிழ்ந்து பார்த்தான். சற்றுமுன் அழுத்தம் கூடி இறுகி தெரிந்த அவன் முகம் இப்போது அவள் தன்னை ஏற்றதில் இளகி கனிவை காட்ட, தன் முன் தயங்கி நின்றிருந்தவளை தலையசைத்து அருகழைத்தான். பௌர்ணமி அவனெதிரே சங்கடம் விலகாது அமர்ந்து கொண்டாள். இருவரும் தரையில் எதிரெதிரே அமர்ந்திருந்தனர்.

 

சந்திருவின் பார்வை உரிமையோடு அவளை வருட, பௌர்ணமியின் நெஞ்சுகுழிக்குள் இனம்புரியா தவிப்புகள். 

 

கருத்தடர்ந்து பின்னந்தோள் தொட்டு வழிந்த சிகை, ஆளுமையும் அழகையும் காட்டும் முகம், அசாத்திய உயரம் காட்டும் உடல்வாகு, பழகுவதற்கும் இயல்பானவன், அவளுக்கு எப்படி அவனை பிடிக்காமல் போகும். முன்பும் இப்போதும் அவன் குறை இவளுக்கு பெரிதாக தெரியவில்லை. அதையும் அவன் தோற்றத்தோடு ஒத்திருந்த இயல்பாக அவளின் பேதை மனம் ஏற்றிருந்தது. தன்னை சுற்றி இருக்கும் புரியாத உலகத்திடையே, தன்னை புரிந்த தனியொருவன் அவன்!

 

சந்துரு தன் இரு கைகளை விரித்து, ஆதுரமாக இமைகள் மூடி திறந்து அவளை தன்னோடு அழைக்க, பௌர்ணமி தயங்கி மருண்டு தாமதித்தாளே ஒழிய, அவனை மறுக்க முனையவில்லை. தயங்கி தயங்கி சஞ்சலமாய் நெருங்கி அவன் திரண்ட மார்பில் பட்டும் படாமல் சாய்ந்து கொண்டாள். அவனின் திண்மை பொருந்திய கரங்கள் அவளை தன்னோடு சேர்த்து இறுக அணைத்துக் கொண்டன.

 

பெண்ணவளை தன்னவளாக ஏற்றுக் கொண்டவன் நிம்மதியாய் தன்னுள் நிறைந்து போனான். அவனுள் உணர்வுகள் பிரவாகமெடுத்து அவனை மூழ்கடித்து மூச்சடைக்கச் செய்ய, அவளை நிமிர்த்தி அவளின் பூமுகம் முழுவதும் வேக முத்தங்களை இறைத்து, அவளை திக்குமுக்காட செய்தான். திணறி சிவந்து தலை கவிழ்ந்தவளின் நாணம் இவன் முகத்தில் வசீகர புன்னகையைத் தேக்கியது.

 

அவள் முகம் நிமிர்த்தி அருகிருந்த வீல் சேரை கைக் காட்டியவன், அவளின் தோள் பற்றி ஒற்றைக்கால் ஊன்றி எழுந்து, தன் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

 

பௌர்ணமிக்கு அவன் அறையை சுத்தம் செய்வது தான் இப்போதைய பெரிய வேலையாக தெரிந்தது. அவள் ஒவ்வொன்றாக எடுத்து வைக்க, சந்துரு, “யாரங்க வெளியே, உள்ள வா” ஓங்கி குரல் கொடுக்க ஒரு வேலையாள் அவனறைக்குள் வந்து நின்றான். 

 

“இன்னும் அரைமணில என்னோட அறை சுத்தமாகனும் போய் ஆளுங்கள கூட்டிட்டு வந்து வேலைய பாரு” என்று உத்தரவிட்டான்.

 

மேலும் அங்கே இரு வேலைப்பார்க்கும் பெண்கள் வர, மும்மரமாக அவன் அறை சுத்தமானது. அவர்களோடு பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்த போதிலும் பௌர்ணமியின் தயங்கிய பார்வை சந்துருவிடம் அடிக்கடி பட்டு மீள, அவன் தன் வசீகர குறுநகையை அவளுக்கு ஈந்தான்.

 

***

அவள் வருவாள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!