அவள் பௌர்ணமி 22 final

IMG-20200921-WA0010-4e7302b7

அவள் பௌர்ணமி 22 final

அவள் பௌர்ணமி 22 நிறைவு பகுதி

 

நான்கு மாதம் கழித்து, அந்த நட்சத்திர ஓட்டலில் பெரிய அளவிலான விருந்து விழா ஏற்பாடாகி இருந்தது.

 

திரைத்துறை பிரபலங்களுடன் ‘நிழல் காதலன்’ படக்குழுவினர் சேர்ந்து விழாவில் உற்சாகமாய் பங்கேற்று கொண்டாடிக்‌ கொண்டிருந்தனர்.

 

இத்தனை உற்சாக கொண்டாட்டத்திற்கான காரணம், மித்ராவதியின் இயக்கத்தில் ‘நிழல் காதலன்’ திகில் படம் வெளியாகி பெரிய அளவில் வெற்றியை அடைந்திருக்கிறது. அதற்கான கொண்டாட்ட ஏற்பாடு தான் இந்த பார்ட்டி.

 

அந்த இடம் முழுவதும் வண்ணமயமாக கொண்டாட்ட அலபறைகளுடன் களைக்கட்டி இருக்க, வாழ்த்துக்களை தெரிவித்தவர்களுக்கு விரிந்த புன்னகையுடன் நன்றி சொல்லியே மித்ராவதிக்கு வாய் வலிக்க ஆரம்பித்து விட்டது.

 

“ஹலோ மித்ரா, இருபதாவது படமும் வெற்றி படமா கொடுத்து சாதிச்சிட்டமா வாழ்த்துக்கள்” முன்னனி இயக்குனர் ஒருவர் பாராட்ட, அதற்கும் முகம் மலர்த்தி நன்றி சொன்னார் மித்ராவதி.

 

“நான் கேள்வி பட்டது உண்மையா?” அவர் குரல் தாழ்த்தி ஆர்வமாக கேட்க,

 

“நீங்க என்ன கேள்வி பட்டீங்க சார்?” மித்ராவதி அசராமல் எதிர் கேள்வி தொடுத்தார்.

 

அதற்கு பெரிதாக சிரித்தவர், “அதில்ல மித்ரா, நீங்க ஷூட்டிங் எடுக்க போன பங்களாவில நிஜமாவே பேய் இருந்ததாமே… கடைசியில தப்பிச்சு அடிச்சு பிடிச்சு தான் ஓடி வந்தீங்களாமே” அவர் புரளி பேச,

 

“ஓ அப்படியா கேள்வி பட்டீங்க சார்” என்று போலியாய் வியந்தவர், சுற்றும் முற்றும் பார்வையை சுழற்றி,‌ “முகிலன் சார் இங்க வாங்க” என்று ஒளிப்பதிவாளரை கைக்காட்டி அழைக்க, முகிலனும் அவர்களிடம் வந்து நின்றார்.

 

“ஷூட்டிங் ஸ்பாட்ல நாம பேயை பார்த்தோம் பயந்தோம்னு சார்கிட்ட யாரோ வத்தி வச்சிருக்காங்க, நீங்களே விளக்கி சொல்லுங்களேன்” என்று கோர்த்து விட்டு நழுவிக் கொண்டார்.

 

“என்ன டைரக்டர் சார், இந்த காலத்தில வந்து பேய், பிசாசு பத்தி எல்லாம் பேசிட்டு, படத்துல பேயை உருவாக்கி காட்டறவங்களே நாங்க தான் சார். இப்ப சொல்லுங்க நீங்களுமா இதையெல்லாம் நம்புறீங்க” முகிலனின் விளக்கத்தில் அவருக்கு புஸ்ஸென்றானது.

 

“கங்க்ராட்ஸ் மேடம், கலக்கிட்டீங்க படம் செமயா போயிட்டிருக்கு” விக்னேஷ் வாழ்த்து சொல்ல, “தேங்க்ஸ் விக்கி, எல்லாத்துக்கும்” மித்ராவதி ஆத்மார்த்தமாக நன்றி சொன்னார்.

 

அதற்கு அழகாய் புன்னகைத்தவன், “உங்க தைரியமும் மன உறுதியும் தான் மேடம் எல்லாத்துக்கும் காரணம், நான் ஏதோ கொஞ்சமா, ராமனுக்கு அணில் போல உதவினேன் அவ்வளோ தான்” என்க.

 

“அடாபாவி, தடிமாடு கணக்கா வளர்ந்து நின்னுட்டு உன்ன நீயே அணில்னு சொல்ற பார்த்தியா” அவர் கேலி பேசி சிரித்தார். மித்ராவதி இவ்வாறு சரிக்கு சரியாக பேசி கலாய்க்கும் சமயங்கள் வெகு குறைவு.

 

அவர் கேலியில் புன்னகைத்து, “உங்க படத்துல வேணா சந்துரு ஹீரோவா இருந்திருக்கலாம் மேடம், பட் ரியலா பௌர்ணமி தான் ஸ்டாராங் கேரக்டர்,  சின்ன நெருடல் இருக்கு மேடம், நிழல் காதலன் படத்துல வர மாதிரி சந்திரகாந்த், ஆத்மாவா வந்து பௌர்ணமியை காப்பாத்தி இருக்கலாம்… ஏன் காப்பாத்தல?” விக்னேஷ் கேட்க, அவரிடமும் பதில் இல்லை. அவரின் மனதிலும் இந்த நெருடலான கேள்வி இருக்கத்தான் செய்தது.

 

“ஒருவேளை நிஜத்தில பௌர்ணமியும் சந்துருவும் காதலிக்கவே இல்லையோ?! அவங்க நடுவுல வெறும் முதலாளி, வேலைக்கார பெண் தாண்டி வேறெதுவும் இருந்திருக்காதோ?” விக்கி மேலும் சந்தேகத்தை எழுப்ப, மித்ராவதி மறுத்து தலையசைத்தார்.

 

“பௌர்ணமிய வேலைக்கார பெண்ணா மட்டும் நினச்சு இருந்தா, சந்திரகாந்த் தன் கூட அவளோட ஓவியத்தையும் சேர்த்து தீட்டி இருக்கமாட்டான்! ஒரு கொலைய பார்த்த பயத்துல பௌர்ணமி அங்கிருந்து ஓடி போய் இருக்கலாம், சாதாரணமா எல்லாரும் அங்கிருந்து தப்பியோட தான் நினைப்பாங்க, ஆனா சந்திரகாந்த் கீழ விழுந்ததை பார்த்த அதிர்ச்சியில அவ அவனுக்காக கலங்கி கதறி இருக்கா, தன்னை காப்பாத்திக்கனும்ற அனிச்சை உணர்வையும் தவிர்த்து அவனுக்கு ஏதாவது ஆகிடுச்சோனு துடிச்சு இருக்கா… இதெல்லாம் யோசிக்கும்போது…‌ நிச்சயம் அவங்க ரெண்டு பேருக்குள்ள இழையோடிய நேசம் இருந்து இருக்கனும், அவங்க அந்த நேசத்தை தங்களுக்குள்ள வெளிப்படுத்தியோ அல்லது வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்காமலேயோ போயிருக்கலாம்” 

 

மித்ராவதி நீண்ட விளக்கம் தர, ஆமோதித்து தலையசைத்தவன், “ஒருவேளை தன்னை வஞ்சகமா கொன்ன பைரவநாத்த பழி தீர்த்ததோட சந்திரகாந்த் ஆத்மா சாந்தி அடைஞ்சு கரை சேர்ந்து இருக்கலாம்!” விக்கியும் தன்னுடைய யூகத்தை சொல்லி, “இறந்தும் பௌர்ணமியோட நாற்பது வருச நீண்ட நெடிய காத்திருப்பு… என்ன சொல்றதுன்னு தெரியல மேடம், வருத்தமா இருந்தாலும் அதே சமயம் பிரமிப்பாவும் இருக்கு” விக்கி சொல்ல, அவரும் தலையசைத்து கொண்டார். 

 

பௌர்ணமி, சந்துருவின் நிறைவேறாத இன்ப வாழ்க்கையை வைத்து படம் எடுத்ததில் அவருக்குள் நிறைவும் அதை தாண்டிய நிம்மதியும்.

 

“நெக்ஸ்ட் பிளான் என்ன மேடம்? அடுத்த மூவி எப்ப ஸ்டார்ட்?” விக்னேஷ் ஆர்வமாய் கேட்க, 

 

“கண்டிப்பா இப்ப இல்ல விக்கி, ரொம்ப ஸ்டர்ஸ்ஸா ஃபீல் பண்றேன். கொஞ்ச நாள் ஃபேமிலியோட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு பிளான் பண்ணியிருக்கேன்” மித்ராவதி சொல்ல தலையாட்டி கொண்டான்.

 

“உன் நெக்ஸ்ட் பிளான் என்ன விக்கி?” அவர் கேட்க,

 

“மேடம், என்னோட ஃப்ர்ஸ்ட் மூவி எடுக்கலாம்னு இருக்கேன், அதுக்கு உங்க ஆசியும் சப்போட்டும் வேணும் மேடம்” என்றவன் நின்றபடி குனிந்து அவர் பாதம் தொட்டு நிமிர, “ஹேய் குட்லக் மேன், கண்டிப்பா நீ கலக்குவ டா எனக்கு நம்பிக்கை இருக்கு. உன்னோட எல்லா படமும் பெரிய ஹிட்டடிச்சு உன் குரு எனக்கு பேர் வாங்கி கொடுக்கனும் சரியா” அவர் உற்சாகமாய் வாழ்த்த, “கண்டிப்பா மேடம்”‌ என்று அடக்கமாக பதில் தந்தான்.

 

அவர்களிடையே புகுந்த பிரியா, “கங்க்ராட்ஸ் மித்ரா மேடம், மூவி சாங்க்ஸ் எல்லாமே செம ஹிட், தமிழ்நாடே சும்மா தூள் பறக்கது” என்று உற்சாகமாய் சொல்லி விட்டு விக்னேஷை முறைத்து வைத்தாள்.

 

“பார்ட்டியில கூட மேடம் கிட்ட அப்படி என்ன டிஸ்கஸ் பண்ணுவ நீ, எல்லாம் மேடமை சொல்லனும் என்னைவிட உனக்கு தான் எப்பவும் ஃப்ர்ஸ்ட் பிரபரன்ஸ் கொடுக்கறாங்க இல்ல அந்த தைரியம் உனக்கு” என்று சிறு குரலாய் அவனிடம் வழக்கம்போல கடுகடுத்து கொண்டாள். அவளின் பொறாமையில் எப்போதும் போல விக்னேஷ் முகத்தில் புன்னகை விரிந்தது.

 

“ஒரு குட் நியூஸ் ப்ரியா, விக்கி இப்ப டைரக்டர் ஆகிட்டான், அவனோட ஸ்டோரி கேட்டதும் ப்ரொடியூசர் சார் டபுள் ஓகே சொல்லிட்டாரு” மித்ராவதி தன் சீடனை பெருமையாக சொல்ல, பிரியாவிற்கும் உற்சாகமானது.

 

“வாவ், ஹேய் விக்கி சொல்லவே இல்ல. கங்க்ராட்ஸ்” துள்ளலோடு வாழ்த்து சொல்லி கை குலுக்கினாள். 

 

“தேங்க்ஸ் ப்ரியா, இனி மேடம் உனக்கு தான் ஃப்ர்ஸ்ட் பிரபரன்ஸ் கொடுப்பாங்க, ஹேப்பி தான, உன்ன வச்சு செய்ய போறாங்க, நீ முழி பிதுங்கி நிக்க போற” என்று நன்றி சொல்லி உடன் கேலி பேசி விக்னேஷ் சிரிக்க, பெண்கள் இருவரும் அவனை சின்னதாய் முறைத்து விட்டு, சிரிப்பில் கலந்து கொண்டனர்.

 

இரவு பதினோரு மணி கடந்துக் கொண்டிருந்தது.

 

படத்தின் நாயகன் விதார்தை சூழ்ந்து ஒரு கூட்டம் புகழ்ந்து தள்ள, மது போதையில் கொஞ்சமும் புகழ் போதையில் மிச்சமும் தள்ளாடிக் கொண்டிருந்தான் அவன். 

 

பிரபல நடிகர், நடிகையர் முதல் திரைத்துறையின் பிரபலங்கள் வரை அவன் நடிப்புக்கான பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து விதார்த்தை திக்குமுக்காட செய்திருந்தது. இந்த படம் வெற்றி பெற்ற கையோடு முன்னணி இயக்குனர்களின் தொடர்ந்த மூன்று படங்களில் ஒப்பந்தமாகி இருந்தான். அவனின் நடிகன் என்ற கனவு நினைவாக, திரைத்துறையில் அவனுக்கான பிரகாசமான எதிர்காலம் கண் முன்னே விரிய, அந்த உற்சாகத்தை கொண்டாடி தீர்த்துக் கொண்டிருந்தான்.

 

மறுபுறம் அமிர்தியிடம் நெருங்க திரை பிரபலங்கள் முயன்று பாலியின் குறுகீட்டால் நொந்து, அமிர்தியின் தந்தையும் உடனிருக்க தயங்கி, எட்டி நின்றே அந்த அழகு புயலை ரசித்துக் கொண்டிருந்தனர்.

 

திரையில் அவளின் நடிப்பு திறமையை கண்டு இயக்குனர்கள் பட்டாளம் அவளை தங்கள் அடுத்த படத்திற்கு கால்ஷீட் கேட்டு தவமிருக்க, அவளின் பேசும் கண்களின் பேரழகில் மயங்கி பல முன்னணி கதாநாயகர்கள் தங்கள் படத்திற்கு அமிர்தியை ஜோடியாக போடும் படி கேட்டு நச்சரிக்க ஆரம்பித்து இருந்தனர்.

 

தன் முதல் படத்தின் அமோக வெற்றியை மனதார சுகித்து, பாராட்டும் வாழ்த்தும் சொன்னவர்களுக்கு விரிந்த புன்னகையுடன் நன்றி தெரிவித்து கொண்டிருந்தாள் அமிர்தி. அவள் கனவை நோக்கி எடுத்து வைத்த முதலடி வெற்றியாய் அமைந்ததில் மனம் நிறைந்த திருப்தி அவளுக்குள். இன்னும் இன்னும் பல கோணங்களில் தன் திறமைகளை வெளிப்படுத்தும் பேராவல் அவளிடம். அதற்கேற்ற கதை அம்சம் கொண்ட கதைகளை அலசி எடுத்து நடிக்க ஒப்புக் கொண்டு இருக்கிறாள். 

 

அவர்களிடம் வந்த விக்னேஷ், அமிர்தியின் தந்தையிடம் மரியாதை நிமித்தம் பேசிவிட்டு, அமிர்தியிடம் தன் வாழ்த்தை தெரிவித்துக் கொண்டான்.

 

“தேங்க்ஸ் விக்கி சர்” அமிர்தி அழகாய் நன்றி நவில,

 

“அமிர்தி என்னோட முதல் படத்துல நடிக்க உங்களுக்கு சம்மதமா?” அவன் நேராக கேட்க,

 

திகைத்தவள், “நிஜமா சர், கங்க்ராட்ஸ், நிச்சயமா சர், பட் ஸ்டோரி லைன் சொன்னா நல்லாயிருக்கும்?” அவன் மீது ஏற்பட்டிருந்த அபிமானத்தில் அவளும் நேரடியாக கேட்க, 

 

“காதல்… லவ் அன்ட் லவ் ஒன்லி” விக்கி ஆழ்ந்து சொல்லவும் மூவரின் முகங்களும் யோசனை காட்டின.

 

“எல்லா கதையிலும் தான் காதல் இருக்கு சார், உங்க கதையில என்ன புதுசா வித்தியாசமா காட்ட போறீங்க?” அமிர்தியின் தந்தையிடம் இருந்து கேள்வி வந்தது.

 

“அது, நான் கதையை உங்களுக்கு சொல்லும்போது உங்களுக்கே தானா புரியும் சர்” என்று பதில் இருத்தான்.

 

“ஓகே அப்படினா நாளைக்கு வாங்க பேசலாம்” என்று அவர் சொல்ல, விக்னேஷ் தலையசைத்தான்.

 

“சும்மா லவ்வு லவ்வு‌ லவ்வுன்னு, அதை தவிர வேற எதையும் வச்சு படமெடுக்க தெரியாதா உங்களுக்கு எல்லாம்” அதுவரை அமைதி காத்ததே பெரிதாக, பாலி விக்கியிடம் வாயடிக்க,

 

“காதல் இல்லாம படமெடுத்தா யாரு பார்ப்பாங்க? முதல்ல நீ பார்ப்பியா?” விக்கி ஒற்றை புருவம் உயர்த்தி அவள்மீது காய்ந்தான்.

 

“நீங்க பார்க்கற மாதிரி எடுத்தா நாங்க பார்க்க மாட்டோமாக்கும்” பாலி அசட்டை காட்ட,

 

“பிள்ளையார் சுழி போடும் முன்னவே, உன் வாய திறக்காத, சும்மா லபலபன்னு உளறிக்கிட்டு வாய் வலிக்குமா வலிக்காதா உனக்கு?” விக்கி அவளிடம் கடுகடுத்தான்.

 

“புது டைரக்டரே, அமுமா உன் படத்துல நடிக்கனும்னா என்கிட்ட அடக்கி வாசிக்கனும் சரியா” பாலி மிடுக்காக சொல்ல, அவளை இன்னும் அதிகமாக முறைத்தவன், “அமிர்தி முதல்ல இந்த பாலிய கட் பண்ணி விடு இல்ல, பேசி பேசியே உன் கெரியரை ஒன்னுமில்லாம பண்ணிடுவா” என்றான்.

 

“பார்த்தியா அமுமா நம்மள பிரிக்க பாக்குறான், இவன் படத்துல நடிக்கவே வேணாம் அமுமா” பாலி படபடக்க, 

 

“அப்பப்பா போதும் நிறுத்துங்க, உங்க சண்டைய, பாலி நீயும் கொஞ்சம் அமைதியா இரேன்” அமிர்தி இருவருக்கும் நடுவே வந்தாள்.

 

“விக்கி சர், உங்க படத்துல நடிக்க எனக்கு ஓகே தான். உங்க டேலன்ட் மேல நம்பிக்கை இருக்கு. பட்… உங்க படத்தோட ஹீரோ விதார்த்னா, நான் அவனோட நடிக்க விரும்பல” அமிர்தி மெல்லிய குரலில் சொல்ல, “என்ன காரணம்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” விக்னேஷ் யோசனையாக கேட்டான்.

 

பதில் சொல்ல அமிர்தி தயங்க, “இதென்ன கேள்வி? ரெண்டு பேரும் அடுத்தடுத்த படத்துல ஜோடியா நடிச்சா கிசுகிசு பரவுமில்ல” பாலி இருவருக்கும் நடுவே கிசுகிசுத்தாள்.

 

அவளின் பதிலில் சிரித்தவன், “நானும் தான் உங்க அடுத்தடுத்த படத்துல இருக்க போறேன், அப்ப என்கூட கிசுகிசு வந்தா பரவால்லயா?” விக்கி இயல்பாக கேட்க, ஒருவரையொருவர் விழித்து பார்த்து கொண்ட அமிர்தியும் பாலியும் அவனிடம் திரும்பி, ஒன்றேபோல உதட்டை பிதுக்கி, கைகளை விரித்து தோள் குலுக்கி காட்டினர்.

 

அவர்களின் செய்கையை பார்த்து விக்னேஷ் இப்போது சத்தமாகவே சிரித்து விட்டான். 

 

வேக நடையோடு பார்ட்டி ஹாலுக்குள் நுழைந்த விஜயேந்திரன் பார்வை அந்த கூட்டத்தை அலசி அவர் மனைவியிடம் நின்றது.

 

தன்னை நோக்கி வந்தரை பார்த்து, “விஜி நீங்க ரொம்ப லேட்” என்று புருவம் உயர்த்தினார் மித்ராவதி. 

 

“சாரி மித்துமா, பசங்க கார்ல வெயிட் பண்றாங்க கிளம்பலாமா?” என்றார்.

 

இரவு நேரம் அதிகமானதால் அவரின் அவசரத்தை உணர்த்த மித்ராவதியும் அங்கிருந்து விடைப்பெற்று கணவருடன் கிளம்பினார்.

 

காரில் ஏறும் முன்னே, பின் சீட்டில் அமர்ந்திருந்த பெரிய மகளும் சின்ன மகனும் அடம்பிடிக்க ஆரம்பித்தனர்.

 

“மாம், டேட் நோ, நீங்க மட்டும் ஜாலியா பார்ட்டி என்ஜாய் பண்ணிட்டு வரீங்க, அப்ப நாங்க” சின்னவன் சொல்ல,

 

“எங்களுக்கு பௌர்ணமிய பார்க்கனும், பேசனும் செல்ஃபி எடுக்கனும் பிளீஸ் மாம்” பெரியவள் கெஞ்சினாள்.

 

“நான் பார்ட்டி எல்லாம் என்ஜாய் பண்ணல, நேரே போய் என் பொண்டாட்டிய மட்டும் அழைச்சிட்டு வந்துட்டேன். சோ என்னை கேட்காதீங்க” என்று கை விரித்தார் விஜயேந்தர்.

 

“முதல்ல அது பௌர்ணமி இல்ல அமிர்தி, இப்ப லேட்நைட் ஆகிடுச்சு இன்னொரு நாள் மீட் பண்ணலாம் ஓகே” மித்ராவதி சமாதானம் சொல்ல,

 

“நோ மாம், எங்களுக்கு அவங்க பௌர்ணமி தான், ப்ளீஸ் ப்ளீஸ் மாம் ஒரேயொரு செல்ஃபி மட்டும்” இப்போது இருவரும் ஒன்றாக கெஞ்ச ஆரம்பித்து இருந்தனர்.

 

இதுபோன்ற திரைதுறை பார்ட்டிகளுக்கு மித்ராவதி படிக்கும் பிள்ளைகளை அழைத்து செல்வதில்லை. தேவையற்ற சங்கடங்கள் வருவதை அவரும் விரும்பவில்லை. முன்னெப்போதும் இல்லாமல் இன்று அவர்கள் அமிர்தியை‌ பார்க்க அடம்பிடிப்பது அவருக்கு சற்று சலிப்பாக இருந்தது.

 

“மிருதி, அஜய் உங்களுக்கு அமிர்திய பார்க்கனும் அவ்வளவு தானே, நான் அவங்கள நம்ம வீட்டுக்கு இன்வைட் பண்றேன் ஓகேவா இப்ப கிளம்பலாம்” அழுத்தமாக சொல்ல, இருவரும் உற்சாகமாயினர். 

 

“வாவ் சூப்பர் மாம், நாளைக்கே வர சொல்லுங்க” இருவரும் ஒரே குரலாக சொல்ல, “அவங்க எப்ப ஃபிரீயோ அப்ப வருவாங்க மிருதி, எனக்கு டயர்டா இருக்கு இப்ப போலாம் அஜய்” என்று பிள்ளைகளிடம் கேஞ்சலாக சொல்லி மித்ராவதி காரின் முன் இருக்கையில் அமர்ந்தார். 

 

“டேய் அந்த பௌர்ணமிய படைச்சதே என் பொண்டாட்டி தான்டா, நீங்க என்னவோ யாரோ அமிர்திய பார்க்க துள்ளுறீங்க” பிள்ளைகளை வம்பிழுத்தபடி விஜயேந்திரனும் ஓட்டுனர் இருக்கையில் அமர, மிருதி, அஜய் இருவர் முகத்திலும் அசடு வழிந்தது.

 

“சாரி மாம் லவ் யூ மாம்” “லவ் யூ சோமச் மாம்” மிருதி, அஜய் இருவரும் சேர்ந்து தன் அன்னையிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டனர்.

 

“போதும் போதும்டா” என்று விஜயேந்தர் சலிக்க,

 

“டேட் உங்களுக்கு பொறாமை” அஜய் சொல்ல, அங்கே சிரிப்பலை பரவியது.

 

விஜயேந்தர் காரை உயிர்பிக்க, திறந்திருந்த காரின் ஜன்னல் வழி சற்றே தலைசாய்த்து குனிந்து வானத்தை பார்த்தார் மித்ராவதி.

 

இரவு வானில் முழு பௌர்ணமி நிலவு அழகாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது. 

 

அதனை பார்த்ததும் மித்ராவதியின் முகத்தில் நிறைவான புன்னகை தன்னால் ஒட்டிக் கொண்டது.

 

பூமியின் எத்தனையோ ஓட்டங்களை கடந்தும் தன் கடமை தவறாது இருள் வானில் வடியாத அழகாய் சளைக்காமல் சுற்றிக் கொண்டிருந்தாள் பௌர்ணமி எனும் நிலவுபெண் அவள்!

 

***முற்றும்***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!