ஆட்டம்-12

ஆட்டம்-12

“நீதான்டி.. நீதான் நீதான்” என்று காது கிழிய தொண்ட வறல கத்தினாள், லெவன்த் க்ரேட் படித்துக் கொண்டிருக்கும் மித்ரா.

“நானா?” என்று வாயில் கை வைத்து கேலியுடன் சிரிப்பதுபோல பாவனை செய்த உத்ரா, “நீதான். நானும் சரி இருந்துட்டு போகட்டும்னு அப்ப விட்டுட்டேன். உம்ம் என்ன மாதிரி பரந்த மனசு யாருக்கு இருக்கும்” மீண்டும் அவள் சலித்துக்கொண்டு தங்கையை வம்பிழுக்க,

“நீதான்டி. உன்னை தான் குப்பை தொட்டில இருந்து தூக்கிட்டு வந்தாங்க..” என்று அவர்கள் வீடு அதிர்ந்து இடியும் அளவிற்கு கத்தினாள், அந்த ஸ்வீட் சிக்ஸ்டின்.

அந்த ஸ்வீட் சிக்ஸ்டீனை, ஹாட் சிக்ஸ்டீன் ஆக்கிக் கொண்டிருந்தாள் நம் நாயகி! அவளின் துறுதுறு வாயால்!

“நானெல்லாம் இல்லபா. ஆனா, உன்னை குப்பை தொட்டில இருந்து எடுத்ததை நானே பாத்தேன். ஒரு பெரிய கார்பேஜ்ல அப்பவே நல்லா பலாபழம் சைஸ்ல இருந்த நீ” என்று கலாய்க்க துவங்க,

“ஏய்!!!” என்று தன் உருவத்தை கேலி செய்தவுடன், பாய்ந்து சென்ற மித்ரா, உத்ராவின் உச்சி முடியை பிடித்து, இரண்டு கைகளாலும் வலிக்க வலிக்க இழுக்க, உத்ராவும் அவளின் கைகளில் சுளீர் சுளீரென்று அடித்து வைக்க, இருவரும் தடுமாறி அங்கிருந்த மெத்தையில் விழுந்து புரண்டு புரண்டு, மாறி மாறி அடித்துக் கொள்ளத் துவங்கிய வேளை, அங்கிருத்த அனைத்து அமைப்புகளும் மாறத் துவங்கியது.

மெத்தை கலைந்து, உத்ராவின் கால் இடித்ததில் அருகில் மேஜையில் இருந்த ப்ளார் வாஷ் உடைந்து சிதறி, ‘டமார்’ என்று சத்தம் கேட்க, சத்தம் கேட்டு அங்கு வந்த ரஞ்சனி மகள்கள் அடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு கோபம் தலைக்கேறி ரௌத்திரமாய் மாறிவிட்டார்.

“எருமைஐஐ மாடுகளாஆஆஅஅ!” அவர் அடித் தொண்டையில் இருந்து கத்த, மகள்கள் இருவரும் சட்டென விலகிவிட்டனர்.

ரஞ்சனி மகள்களிடம் இப்போதெல்லாம் கொஞ்சம் கண்டிப்பு!

இதுகளின் சேட்டைகளால்!

“அம்மா நான் இல்ல.. இவ தான்” ஒரே சமயத்தில் இருவரும் இருவரை குறை சொல்ல, இடுப்பில் கை வைத்து இருவரையும் மாறி மாறிப் பார்த்தவருக்கு என்ன சண்டை என்று தெரியும்.

பல வருடங்களாக இதே சண்டை தானே!!!

“அம்மா இவ என்னை குப்பை தொட்டில இருந்து எடுத்திட்டு வந்தேன்னு சொல்லிட்டே இருக்கா” மீண்டும் இருவரும் இணைந்து கொண்டே கூற, அவருக்கு தலை வெடித்து, தூள் தூளாகி பறக்கும் அளவிற்கு கோபம் வந்தது.

“இரண்டுமே எனக்கு பொறக்குல. தவுட்டுக்கு வாங்கிட்டு வந்தேன் உங்க இரண்டு பேரையும் போதுமா?” மகள்களுக்கு இணையாக கோபத்தில் கத்தியவர், “இனிமே நாய்க மாதிரி அடிச்சுக்கிட்டு இருந்தீங்க. இரண்டு பேரையும் அவ்வளவு தான்” என்று அவர் எச்சரித்துவிட்டுப் போக,

“எவ்வளவு தான்” என்று வாய்க்குள் முணுமுணுத்து சிரித்தாள் மித்ரா.

இருவருக்குமே இருவர் சொல்வது பொய் என்று நன்கு தெரியும். எப்போதும் இரண்டு குழந்தைகள் இருக்கும் வீட்டில் நடக்கும் ஒன்றுதானே. ஒருவர் மாற்றி ஒருவர் மற்றொருவரை குப்பைத் தொட்டியில் இருந்துதான் உன்னை எடுத்து வந்தார்கள் என்று உடன் பிறந்தவர்களை சண்டையிடும் போது சொல்லி அழ வைப்பது என்பது.

உண்மை தெரிந்தாலும், உடன்பிறந்தவனோ / உடன்பிறந்தவளோ சொல்லிவிட்டால், கோபம் அணையில் இருந்து உடைந்து வரும் வெள்ளமாய் தான் அன்று வீட்டை சுழற்றியடிக்க வந்துவிடுகிறது.

அக்காளும் தங்கையும் தங்களால் கலைந்து கிடந்த அறையை சுத்தம் செய்ய, உத்ரா, “அம்மா ஓகே சொல்லுவாங்களா டி?” என்றாள் யோசனையும் ஆசையுமாக.

அந்த சின்ன இதயத்திற்குள் கோடி ஆசைகள்! பிரபஞ்சத்தை தாண்டிய கனவுகள்!

“கஷ்டம்தான். அப்பாவை வச்சு பேசு. இல்லைனா விக்ரம் மாம்ஸ் கிட்ட சொல்லு” என்று அக்காளுக்கு தலையில் பல்ப் எரிய வைக்க முயன்றாள் மித்ரா.

என்னதான் வளர்ந்தாலும் சில சமயங்களில் மித்ராவின் விவரம் உத்ராவிற்கு போதாது!

இலகிய மனமும், அழகிய குணமும் இணைந்த பட்டுப் போன்ற மென்மையானவள்!

“இன்னிக்கு அப்பா பேசறேன்னு சொன்னாரு மித்து.. ஆசையா இருக்குடி” என்றாள் தவிப்புடன் ஏக்கமும் கலந்து.

அன்று இரவு நால்வரும் சாப்பிட்டு முடித்துவிட்டு டிவியின் முன் அமர, ரஞ்சனியோ யோசனையுடனே அமர்ந்திருந்தார். அடுத்த நாளுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற குழப்பம். அனைத்து வீட்டிலும் தாய்மார்களுக்கு உள்ள கவலை. பாவம்!!!

“ரஞ்சனி..” விஜயவர்தன் அழைக்க,

“இன்னும் ஒன் மன்த்ல உத்ரா படிப்பு முடிய போகுது.. அடுத்து அவ..” என்றவருக்கும் தயக்கம் இருந்தது. மனைவியின் மனதிற்குள் இருந்த தவிப்பு அவருக்கும் இருந்தது அல்லவா!

அதே சமயம் எதற்கும் பயந்து மகளின் கனவுகளை முடக்கி வைக்க அவர் விரும்பவில்லை. எத்தனை நாள் இந்த பயத்தை அவர் உள்ளுக்குள் வைத்துக் கொண்டிருப்பார். எனவே பேசிவிட முடிவு செய்துவிட்டார்.

“சொல்லுங்க” என்ற ரஞ்சனிக்கு மகளின் அடுத்தகட்ட திட்டம் தெரியவில்லை. அவளுக்கு அப்படியொரு திட்டம் இருப்பதே அவர் இன்று தான் அறியப் போகிறார்.

ஒரு பெருமூச்சை வெளியிட்ட விஜயவர்தன், “அடுத்து உத்ரா இண்டியா போறேன்னு சொல்றா..” அவர் முடிக்கவில்லை. உடலில் உள்ள அனைத்து அணுக்களும், கணவர் சொன்னதைக் கேட்டு, ஆடிப் போனதில் வெடவெடத்துப் போக, அமர்ந்திருந்த இடத்திலிருந்து சலாரென எழுந்தார் ரஞ்சனி.

“என்ன சொல்றீங்க நீங்க? தெரிஞ்சுதான் பேசறீங்களா?” என்றார் காட்டமாக. அவரின் சொற்களுக்கான அர்த்தம் அவர் அறிவார்.

அவரின் குரலில் கோபம் தெரிந்த போதிலும் அதில் இருந்த தாயிற்கே உண்டான ஆதங்கத்தை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. சின்னப் பெண் போல மனைவி பதறுவதும் புரிந்தது.

இருந்தும் மகளுக்காக பிடிவாதத்தில் நிற்கத் தயாரானார் அவர்!

“தெரிஞ்சு தான் பேசறேன்” என்றார் அமர்ந்திருந்தபடியே மனைவியை பார்த்துக் கொண்டு.

இதற்கு மேல் இவரிடம் பேசி பயனில்லை என்று நினைத்த ரஞ்சனி, “உத்ரா” என்று அழைத்த விதத்தில், அன்னையின் குரலில் எப்போதும் கோபத்தையும், கண்டிப்பையும் மட்டுமே கண்டு வந்த உத்ராவிற்கு, இன்று அந்த குரல் தன்னை அழைத்த விதத்தில், அதில் தேங்கியிருந்த தீவிர மூர்க்கத்தையும், அழைத்த வேகத்தையும் கண்டவளுக்கு உள்ளுக்குள் இதயத் துடிப்பு, அவளையறியாது ஏவுகணை வேகத்திற்கு ஈடாக அடித்துக் கொள்ளத்தான் செய்தது.

அவளுக்கே என்னவென்று புரியாத வேகத் துடிப்புகள்!!!

“ம்மா!!” என்றவள் மெதுவாக எழ,

“உனக்கு இப்ப எதுக்கு அங்க போகணும்?”

“ம்மா” என்றவளுக்கு வார்த்தைகள் வர சிரமப்பட்டது. வேண்டாம் என்று சொல்லிவிடுவாரோ என்ற அச்சம் பெண்ணவளுக்கு.

உத்ராவின் கரம் பயத்தில் படபடப்பதைக் கண்ட விஜயவர்தன், மகளின் கரத்தை ஆதரவும், தைரியமுமாக அழுத்திக் கொடுத்து, “என்கிட்ட சொன்னதை உன் அம்மாகிட்டையும் சொல்லு உத்ரா” என்றார்.

தந்தையின் அழுத்தத்தில் சிறிது தைரியம் பெற்றவள், “அம்மா எனக்கு அங்க வொர்க் பண்ணனும்னு சின்ன வயசுல இருந்து ஆசை ம்மா. அப்புறம் டான்ஸ் இன்ஸ்டிடியூட் ஸ்டார்ட் பண்ணனும்..” என்றாள் அன்னையின் விழிகளிடம் தன் விழிகளால் கெஞ்சியபடியே.

மகளின் செயலும், அவளின் விழிகள் அழகாய் கெ(கொ)ஞ்சிய விதமும், தாயின் மென் மனதை கரைக்க முயன்றாலும், அவரோ, “முடியவே முடியாது உத்ரா” என்றார் முடிவாக. இதற்கு மேல் பேசாதே என்றிருந்தது அவரின் தொணி.

“அதுதான் ஏன்?” என்று பொறுமையின்றி குரலை உயர்த்தி கேட்டே விட்டாள் உத்ரா.

அவர்கள் இந்தியாவில் இருந்து வந்தபின்பு, இடையில் அன்னை தந்தை இரண்டு முறை இந்தியா சென்று வந்தும், அவளை அழைத்துச் சென்றதில்லை. அதுவும் எத்தனையோ முறை இவள் அழுதும் கூட. அப்போதெல்லாம், “நீ அங்க வரக்கூடாது” என்றுவிடுவார் ரஞ்சனி.

இவளுக்கோ அப்போது எல்லாம் காரணம் தெரியாமல் சலித்துவிட, அவளின் ஏமாற்றமும், சலிப்பும், கனவுகளும் இப்போது ஒன்று சேர்ந்து கோபமாய் மாறிவிட்டது. அபிமன்யுவை கண்டு அவள் அஞ்சினாலும், அவளுக்கு உள்ளுக்குள் நடந்தது எதுவும் தெரியாது அல்லவா?

“உத்ரா..” விஜயவர்தன் மகளை சமாதானம் செய்ய முயல,

“இப்பவே சொல்ல சொல்லுங்க ப்பா. ஏன்னு. எப்ப பாத்தாலும் இதையே தான் சொல்றாங்க. எனக்கு நீங்க எவ்வளவு கன்ட்ரீஸ் கூட்டிட்டு போனாலும், அங்க போற மாதிரி இருக்காது தெரியுமா. எனக்கு இங்கவிட அங்கதான் புடிக்குது. சரி என்னை சின்ன பொண்ணுன்னு நினைச்சிட்டு சொல்றீங்கனு பாத்தா, இப்பவும் விட மாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்” என்றவள் படபடவென்று பேசிக் கொண்டே போக, அந்த அறையே அதிர்ந்து போய், உறையும் வகையில், பளாரென்ற சத்தம் அறை முழுக்க எதிரொலித்தது.

மித்ராவை அறைந்திருந்தார் ரஞ்சனி. பெரிய மகளின் மேல் இருந்த கோபத்தை சின்ன மகளின் மேல் காட்டியிருந்தார்.

மித்ராவோ கண்களை பொத்தியபடி கண்ணீருடன், அன்னை அறைந்த அறையில் சிலையாகி போய் எழுந்து நிற்க, அவளின் நீர் மணிகளோ நிற்கவா வேண்டாமா என்று தடுமாறி தள்ளாடிக்கொண்டு பளபளப்புடன் நின்று கொண்டிருந்தது.

மூவரும் அதிர்ந்து போய் நின்றிருக்க முதலில் விஜயவர்தன் தான் நினைவிற்கு வந்தது. “ரஞ்சனிஇஇ! இப்ப எதுக்கு மித்ராவை அடிச்ச?” என்று மனைவியிடம் சீற, ரஞ்சனியோ, “எந்திரிச்சு உள்ள போ” என்று சின்ன மகளிடம் சீறினார்.

மகளை அடித்த கரம் ரணமாக வலித்தது!

மித்ராவோ கன்னங்களை பொத்தியபடியே உள்ளே சென்றுவிட, “அவளை ஏன் அடிச்சீங்க ம்மா. என் மேல கோபம்னா என்கிட்ட காட்ட வேண்டியதுதானே” அன்னையிடம் கோபத்தைக் காட்டினாள் உத்ரா.

மகளை நிமிர்ந்து பார்த்த ரஞ்சனிக்கு கண்கள் கலங்கி அதரங்கள் துடிக்க, பதறிவிட்டனர் தந்தையும் மகளும்.

“ம்மா!! என்ன ம்மா?”

“என்ன ரஞ்சனி இது?”

கணவரும் மகளும் அருகே வந்து அவரை சமாதானம் செய்ய, அவருக்கோ உள்ளுக்குள் பிசைந்தது. மகளின் ஆசைகளுக்கும் கனவுகளுக்கும் அவர் ஒன்றும் எதிரி இல்லையே!

ஆனால்…?

யாரிடம் சொல்ல முடியும் நடந்ததை எல்லாம்?

மகளிடம் கூறினால்…?

அவரால் அதற்கு மேல் என்ன நடக்கும் என்று யோசிப்பதற்கு கூட சக்தியில்லை. அவள் கேட்பதை செய்ய இயலாமல் போன நிலையை எண்ணி அவருக்கு தன் மேலேயே உள்ளுக்குள் ஆத்திரம்!

அன்னையின் தவிப்பைக் கண்ட உத்ரா, “சரி விடுங்க. நான் எங்கேயும் போகல. இங்கேயே இருக்கேன்” குரல் கரகரக்க, தன் ஆசைகளை புதைக்கத் தயாரானவளாய், அவர்களின் செல்ல மகள் பேசிவிட்டுச் செல்ல, ரஞ்சனிக்கு மேலும் அழுகை தான் பொங்கி வந்தது.

விஜயவர்தன் ரஞ்சனியை பார்க்க, அவரின் பார்வை புரிந்தவரோ, “நான் ஒண்ணும் அவ கோல்ஸுக்கு எதிரி இல்ல” என்றவர் அறைக்குள் செல்ல, தலையை பிடித்துக் கொள்ளலாம் என்றிருந்தது விஜயவர்தனுக்கு.

யாரை சமாதானம் செய்வது என்று அவருக்கு புரியவில்லை.

ஆனால், மகளை இந்தியா அனுப்ப வேண்டும் என்ற முடிவை அவர் எடுத்துவிட்டார். ஒருவரின் ஆசையை அடக்க யாருக்கும் உரிமையில்லை என்பது அவரின் நினைப்பு!

சிம்மவர்ம பூபதியிடம் அவர் கற்றுக் கொண்டது.

இப்போது முக்கிய தடுப்பாக யார் இருப்பது என்று யோசித்தவர் மனைவியை தேடி அறைக்குச் செல்ல, அவரோ அப்போது தான் முகத்தை கழுவிவிட்டு குளியலறைக்குள் இருந்து வந்தார். சற்று நேரத்திற்கு முன் இருந்த கோபத்திலும், அழுகையிலும் அவருக்கு முகமெல்லாம் சிவந்திருந்தது

கதவை அவரைப் பார்த்தபடியே தாழிட்டவர், குறுஞ்சிரிப்புடன் அவர் அருகே சென்று, அவரை பிடித்து அணைக்க, “என்ன இது?” என்று திட்டியவர், அவரிடம் இருந்து விலக, “வர்ற வர்ற நீ என்னை கவனிக்கறதே இல்ல ரஞ்சனி” என்றார் கண்களை சிமிட்டியபடி.

“பொண்ணுக எவ்வளவு பெருசு ஆகிட்டாங்க. இப்ப வந்து ரொமான்ஸ் கேக்குதா?” அவரின் வயிற்றில் இடித்தவர், அவரின் கரத்தில் முத்தமிட்டு, “அவ்வளவு தான்” என்றுவிட்டு படுக்கையில் போய், தலையணையை சாய்வதற்காக வைத்துவிட்டு அதன் மேலே சாய்ந்தபடி அமர்ந்தார்.

இருவருக்கும் இருக்கும் விடாத பழக்கம் இது!

இரவு உறங்கச் செல்லும் முன் தலையணையை வைத்து, அதில் சாய்ந்தபடி கதை பேசுவது இருவருக்கும் மிக மிக அத்தியாவசிய சம்பாஷணைகள்.

மனைவியின் அருகே வந்தவர், “என்ன பண்றது.. இப்ப தான் உன் மேல லவ் அதிகமா வருது” என்றவர் மனைவியின் கரத்துடன் கரம் கோர்க்க, கணவரின் தோளில் சாய்ந்து கொண்டார் ரஞ்சனி.

மனைவியின் தோளை சுற்றி கை போட்டவர், அவரின் கரத்தில் இருந்த மனைவியின் கரத்தை தட்டிக் கொடுக்க, “பயமா இருக்கு” என்றார் ரஞ்சனி. தன் மேல் சாய்ந்திருந்த மனைவியின் இதயத்துடிப்பை அவரால் உணர முடிந்தது.

தாய்மையின் தவிப்பு அது!

தாய்மையின் பயம் அது!

“எனக்கு புரியுது ரஞ்சனி.. ஆனா, எவ்வளவு ஆசையா இருக்கா உத்ரா. கொஞ்சம் நினைச்சு பாரேன்.. இந்த விஷயத்துக்காக அவ ஆம்பிஷனை சாகடிக்கணுமா?” அவர் மெதுவாய் கேட்டார். ஆனால், அத்தனை அழுத்தமாகவும் கேட்டிருந்தார்.

அவரை ஏறிட்டுப் பார்த்த ரஞ்சனியின் இதழ்கள் நடுங்கத் துவங்க, அவரின் விழிகளுக்கு அது தப்பாமல் சிக்கியது. கணவரது கரத்துடன் இருந்த கரத்தை மேலும் இறுக்கமாய் பற்றியவர், “இது சின்ன விஷயமாங்க.. எவ்வளவு பயமா இருக்குன்னு தெரியுமா எனக்கு. அவ படிச்சு இப்ப டாக்டர் ஆனாலும், எனக்கு அவ இன்னும் சின்ன குழந்தை தான். யாருன்னாலும் அவளை ஈசியா ஏமாத்த முடியும். சீக்கிரம் நம்பிடுவா. அவளோட இலகுன மனசே போதும் காரியம் சாதிக்க நினைக்கறவங்களுக்கு.. இப்ப நான் அழுததுக்கே அவளோட ஆசையை வேணாம்னு போறா பாத்தீங்களா” என்றவர் கணவரின் விழிகளை அழுத்தமாக பார்த்து,

“அவளுக்கு ஏதாவது ஒண்ணுனா நான் மனுஷியா இருக்க மாட்டேன்” என்றார் கண்களில் கண்ணீருடன் கூடிய பளபளப்பும் தாயிற்கே உண்டான வெறியும், எச்சரிக்கை உணர்வுமாக.

மனைவியின் தலையில் செல்லமாய் முட்டியவர், “அவ எனக்கும் பொண்ணுதான் ரஞ்சனி” என்றார் புன்னகையுடன்.

“எத்தனை நாள் இப்படியே வச்சிருப்போம் சொல்லு.. எப்படியும் மித்ரா ஸ்கூல் முடிச்ச அப்புறம் நாம மொத்தமா இண்டியால செட்டில் ஆகற ப்ளான் தானே.. அவ இப்ப போகட்டும் அதான் விக்ரம் இருக்கானே..” அவர் கூறி முடிக்கவில்லை.

“அபிமன்யுவும் இருக்கான்” என்றார் ரஞ்சனி அடுத்த நொடியே. அவரின் மனதில் இன்றும் அபிமன்யு இறுதியாக கிளம்பும் போது உத்ராவை பார்த்த பார்வை நினைவிருக்கிறது. வடு போல பதிந்திருந்தது மனதில். ஆடவணின் பார்வையே அவருக்கு அடித்ததை போல வடுவைக் கொடுத்திருந்தது.

ஆம், அவரும் அன்று அதை பார்த்திருந்தார்!

மனைவியின் முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்தியவர், “விக்ரம் இருக்கான். விக்ரம் வீட்டுல உத்ரா இரண்டு வருஷம் இருக்கட்டும். அது அவளுக்கு ரொம்ப சேஃப். அதுவும் இல்லாம மாமாவை (சிம்மவர்ம பூபதி) மீறி எதுவும் நடக்காது” என்றார் உறுதியாக. மனைவிக்கு கிட்டத்தட்ட சத்தியம் செய்து கொடுத்தார்.

ஆனால் அவரின் சத்தியமும், விக்ரமின் அரணும், சாணக்கியத் தனமும் கை மீறும் போது? சிம்மவர்ம பூபதியை மீறி அந்த சம்பவம் நடக்கும் போது?

அமெரிக்க டாலர்கள் பலதை சம்பாதித்து, வருடம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் மருத்துவர்கள் இருவரும், நள்ளிரவு என்னும் கொடிய நேரத்தில், நாய் ஊளையிடும் ஐயம் தெறித்கும் சமயத்தில், தங்கள் மகளைத் தேடி ரோடு ரோடாக திரியப் போகிறார்கள் என்று இன்றே தெரிந்திருந்தால், சுதாரித்திருப்பார்களோ?

அல்லது மகள் கதறி அழும் நிலையையும், கடந்த காலத்தில் அன்னை செய்த துரோகத்தை அறிந்து, அனைவரின் முன்பு விக்கித்து நின்று, உண்மைகளை தெரிந்து, யாரையும் பார்க்கா இயலாது, கடலளவு காதல் கொண்டவனையும் வெறுத்து ஒதுக்கி, இத்தனை நாள் அனுபவித்த சந்தோஷங்களுக்கும், சிரிப்புகளுக்கும் ஒன்றாக சேர்த்து வைத்து துன்பத்தை அனுபவிக்கப் போகிறாள் என்று தெரிந்திருந்தால் அவளை அனுப்பாமலேயே இருந்திருப்பார்களோ?

மகளின் ஆசைகள் முக்கியம்!

அவளின் மகிழ்ச்சி முக்கியம்!

அதனால், அவளின் விதி அவளாலேயே அனைத்தையும் செயல்பட வைத்தது!

சிறிது நொடி யோசித்த ரஞ்சனி, “நான் விக்ரம்கிட்ட பேசணும்” என்றார்.

உடனே விக்ரமிற்கு விஜயவர்தன் அழைக்க, முதலில் விக்ரமிடம் அவர் விஷயத்தைக் கூற, கணவரிடம் இருந்து ஃபோனை பறித்தார் ரஞ்சனி.

“விக்ரம் நான் அத்தை பேசறேன்” ரஞ்சனி கூற,

“சொல்லுங்க அத்தை.. எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கேன் ப்பா.. நீ??”

“நல்லா இருக்கேன்”

“விக்ரம் எனக்கு உத்ராவை இண்டியா அனுப்ப கொஞ்சமும் இஷ்டம் இல்லைபா. அவளுக்காக மட்டும் தான் அவளை அங்க அனுப்பறேன். முக்கியமா உன்னை நம்பி மட்டும்தான் அனுப்பறேன். நான் சொல்ல வேண்டியது இல்ல விக்ரம். எங்களுக்கு இருக்க பயம் உனக்கு என்னனு தெரியும்” ரஞ்சனி நெஞ்சின் மீது கை வைத்துக் கொண்டே பேச, மனைவியின் மனதுக்குள் ஓடும் கோடி தவிப்பை அறிவார் விஜயவர்தன்.

அந்தத் தாயின் தவிப்பை ஆயிரக்கணக்கான மயில்களுக்கு அப்பால் இருந்த விக்ரம் அபிநந்தனாலுமே உணர முடிந்தது.

“அத்தை! நீங்க உத்ராவை அனுப்புங்க. அவளை பாத்துக்க வேண்டியது என் பொறுப்பு” என்றான் இரும்பின் உறுதியோடு.

உத்ராவின் மீது கை வைக்க நேர்ந்தால் அவனுக்கு அபிமன்யுவை எங்கு அடிக்க வைக்க வேண்டும் என்று தெரியும்!

அவனாலும் அவனுக்கு மறக்க இயலாத வலியை வலிக்க வலிக்க தர முடியும் அல்லவா!!!

அவனுக்கு நிகர் இவனே! இவனுக்கு நிகர் அவனே!

ஃபோனை வைத்து முடித்த இருவரும், மகள்களின் அறைக்குச் செல்ல, அதுவோ திறந்து தான் இருந்தது. ரஞ்சனி முதலில் எட்டிப் பார்க்க மகள்கள் இருவரும் ஆளுக்கொரு பக்கம் பார்த்தபடி படுத்திருந்தனர். ஒருத்தி அழுது கொண்டிருக்க, இன்னொருத்தி வாய்க்குள் முனகிக் கொண்டிருந்தாள். அதாவது திட்டிக் கொண்டிருந்தாள்.

ரஞ்சனி உள்ளே செல்ல மித்ரா போர்வையை எடுத்து தன்னை முழுதாக தலைவரை போர்த்திக் கொள்ள, உத்ராவோ அவசரமாக கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தமர்ந்தாள். பால் முகம் மொத்தமும் அழுததில் சிவந்திருந்தது.

மகளின் அருகே அமர்ந்த ரஞ்சனி, “நீ இண்டியா கிளம்பு..” என்று கூற, விலுக்கென்று அன்னையை பார்த்த உத்ராவுக்கு அழுகைதான் வந்தது. அன்னையை கட்டிக் கொண்டவள், அழுதுவிட்டாள்.

“ஏய் லூசு மாதிரி எதுக்கு அழுகற?” மகளின் முதுகை வருடியபடி ரஞ்சனி கூற, “தேங்க்யூ ம்மா” என்றவள் அன்னையின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

மகளின் முகத்தையே பார்த்தவர், “ஆனா நான் சொல்ற கண்டிஷனுக்கு நீ ஓகே சொல்லணும்” என்றவர், மித்ரா என்ன செய்கிறாள் என்று பார்க்க, அவளோ போர்வைக்குள் இருந்தே புரிந்து கொண்டாள் போல.

“இது என் ரூம். பெட் ரூரூஊஊம். வேணும்னா வெளில போய் பேசலாம் பேசறவங்க” என்று கத்தினாள் அவள் கோபத்தில்.

சிவனேன்னு கிடந்தவளை அடித்தால்?

அமர்ந்திருந்த ரஞ்சனி சின்ன மகளின் மேல் சாய்ந்து அணைத்து, “ஸாரிடா மித்து” என்று கொஞ்ச, போர்வைக்குள் இருந்து வெளியே வர மாட்டேன் என்று இருந்தவள், “முடியாது முடியாது. என்னை அடிச்சுட்டே இல்ல. இப்பவே டைம் லெவன் தெர்டி. என் தூக்கத்தையே கெடுத்துட்டீங்க.. நாளைக்கு நான் ஸ்கூலுக்கு போக மாட்டேன்” என்று கத்தினாள்.

அவளுக்கு தேவையானதை அவள் சாதித்துக் கொண்டாள். அவ்வளவு தான்!

“கேடி.. இதுதான் சமயம்னு ஸ்கூல் கட் அடிக்க பாக்கறியா?” என்று அவளின் முதுகில் அடி போட்டவர், “நீயும் அக்கா மாதிரி டாக்ட” அவர் முடிப்பதற்குள்,

“அவ பல்லு புடுங்கி.. பல்ல புடுங்கிறதுக்கு டாக்டர் வேற” என்று உள்ளுக்குள் உருண்டபடியே கலாய்க்க, தங்கையின் தலையில் கொட்டி வைத்தாள் அவளின் அக்கா.

“ஆஹ்ஹ்..” தலையை தேய்த்தபடி புயலென எழுந்தவள், உத்ராவை அடிக்க மின்னலென பாய, அவளை தடுத்து நிறுத்துவதற்குள் ரஞ்சினிக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.

மூச்சு வாங்க தந்தையை பார்த்தவள், “இவளுக்கு சீக்கரம் கல்யாணம் பண்ணுங்க” என்றுவிட்டு, “உனக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகும்டி.. இது என் சாபம்” என்று இரு கைகளின் விரல்களையும் நெட்டி முறித்து கைகள் குவித்து சாபம் கொடுக்க, அவளுக்கு நாக்கைத் துருத்தி பழிப்பு காட்டிய உத்ராவிற்கு தெரியவில்லை, இன்னும் சில மாதங்களில் தன்னுடைய திருமணம், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு நடக்கக் காத்திருக்கிறது என்று.

அதுவும் அபிமன்யுவுடன்!

அபிமன்யுவின் பெயரையே அச்சத்தில் மறக்க நினைப்பவளுக்கு, அவளின் வாழ்க்கையையே கடவுள் அவனுடன் முடிச்சிட்டது தெரிந்திருந்தால்?

வாழ்க்கை அவளுக்காக நிறைய வைத்திருந்தது!

அபிமன்யுவுடன்!

உத்ராவின் அபிமன்யுவுடன்!

பெயரில் கூட பொறுத்தமானவர்கள் தான்!

மகாபாரதத்தில் வந்த அபிமன்யு, தன் மனைவி உத்ராவை தனியே தவிக்க விட்டு உலகையே விட்டுச்செல்ல, இந்த அபிமன்யுவும் தனது உத்ராவை தனியே விடத் துணிவான்!!!

உலகால் அல்ல, சொற்களால்!

தன் கடும் சொற்களால்!

(சின்ன எபி தான் மக்களே. நாளைக்கு ரொம்ப பெரிய எபி. இப்பவே ஸ்டார்ட் பண்ணா செட் ஆகாது. அதுனாலதான் இதுலையே முடிக்கறேன். அடுத்த எபி நாளைக்கே ரெடியா இருக்கு. நாளைக்கு ஈவ்னிங் ஸார்ப் 5 க்கு. நெக்ஸ்ட் எபி அபிமன்யு உத்ரா மரணமான மீட்டிங்..

இரண்டு நாள் எபி தாமதம் பண்ணதுக்கு ஸாரி. கை வலி.. பாடி பெயின்.. கண் எரியுது. விட்டா விக்ரம் நறுமுகை ரொமான்ஸ் பாத்து வயிறும் எரியும் போல எனக்கு!!)