ஆட்டம்-13
“ஹேஏஏஏஏஎஎஎஎஎ!!!” கால்கள் தரையில் ஓடுகிறதா அல்லது காற்றில் பறக்கிறதா என்று, பார்ப்பவருக்கு புரியாத வகையில் ஓடிய திலோத்தமை, தனது லக்கேஜை தள்ளிக் கொண்டு வந்த உத்ராவை இறுக அணைக்க, இத்தனை நாள் ஸ்கைப், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாக்ராம் என அனைத்திலும் தன்னுடன் லூட்டி அடித்தவளை பார்த்த குஷியில் உத்ராவும் அவளை அணைத்துக்கொள்ள, அவள் தள்ளிக் கொண்டு வந்த லக்கேஜோ, ஒரு பக்கம் அவள் ஓடி வந்து திடீரென விட்டதில், தனியாக ஓடத் துவங்கியது.
“லவ் யூ! லவ் யூ!” திலோத்தமை கத்தி குதிக்க, “மீ டூ! மீ டூ!” என்று உத்ராவும் குதிக்க, இருவரும் அணைத்தபடி கத்தலும் சிரிப்புமாக குதித்தபடியே சுற்ற, ஏர்ப்போர்டில் வருவோரும் போவோரும், இருவரையும் நன்றாக வேடிக்கை பார்த்துவிட்டுச் செல்ல, தனியாக ஓடி வந்து நின்ற லக்கேஜை, வேறு பக்கம் நகராது பிடித்து நிறுத்திய விக்ரம்,
“லக்கேஜை எல்லாம் எடுத்து வைங்க..” ட்ரைவரிடம் கூறிவிட்டு, இருவரையும் நோக்கிச் செல்ல, எதிரில் வந்த வெள்ளைக்கார பால் பணியாரமோ, விக்ரமை பார்த்து தன் ஆம்பெர் (amber) நிற விழிகளை சிமிட்டிவிட்டுச் செல்ல, அவளுக்கு சிறிதாக தலையை மட்டும் அசைத்து புன்னகைத்தவனை பார்த்து, அவளோ வசீகர சொந்தக்காரனை விட மனமே இல்லாமல், நமது நாயகனை கண்களால் மட்டும் நிரப்பிக் கொண்டு சென்றாள்.
இருவரையும் திலோத்தமையும், உத்ராவும் பார்த்துவிட, தனது ப்ரான்டட் மாட்ஸுடா கூலர்ஸை கழற்றிபடி ஸ்டைலாக, சிகையை கோதியபடி ஆண்மை நிறைந்த வசீகரம், தலையில் இருந்து கால் விரல் நுனி வரை தெறிக்க, நடையில் கூட தனது ஆட்டிட்யூடை எவ்வகையிலும் குறைக்காது வந்த விக்ரமை பார்த்த உத்ரா, மயக்கம் வருவது போல தலையையும் விழிகளையும் சுழற்றியவள், “ஹப்பாஆஆஅஅ!! மாமா நான் கூட இன்ஸ்டாக்ராம்ல ஃபோட்டோலாம் பாத்து எடிட்னு நினைச்சேன். உண்மையாவே செம ஹான்ட்சமா இருக்கீங்க” என்றவளின் குமட்டில் குத்திய திலோத்தமை,
“நானும்தான் இங்க நிக்கறேன்” என்றாள் இடையில் கை வைத்து கோபமாக.
விக்ரமும், உத்ராவும் முகத்தைப் பார்த்து சிரித்துக் கொள்ள, “அடப் பாவிகளாஆஅஅ!! வந்தவுடனே ஒண்ணு சேந்துட்டீங்களா?” என்று இருவரையும் பார்த்து வாய்பிளந்து கேட்டவள்,
“உன்னை போய் காலேஜுக்கு லீவ் போட்டுட்டு பாக்க வந்தேன் பாரு” என்றவள் தங் தங் என்று கால்களை தரையில் உதைத்தபடி நடந்து செல்ல, அவளின் பின்னேயே ஓடிய உத்ரா, அவளின் தோளில் கை போட்டு,
“கோவத்த பாரு..” அவளை போட்டு உலுக்க, அவளோ அவள் உலுக்களுக்கு ஏற்றவாறு அசைந்து கொண்டே, “ஏய் போடி வந்தவுடனையே சைட் அடிக்க ஸ்டார்ட் பண்ணிட்ட.. உனையெல்லாம் நம்பவே கூடாது” அவள் திட்ட,
“உன் ஆளு..” தொடங்கிய உத்ராவின் வாயை சட்டென்று பொத்தியவள், “ஷ்ஷ்!! அண்ணாடி ப்ளீஸ் கம்முனு இரு” என்றாள் ரகசியமாய் கெஞ்சலுடன்.
“என் மாமன் மக.. என்னை ரசிக்கறா,, உனக்கென்ன?” விக்ரம் அருகில் வந்து உத்ராவின் தோளில் கை போட்டபடி கேட்க, “கடவுளே இந்த அண்ணாவுக்கு சீக்கிரம் எல்லா முடியும் நரைக்கணும்” என்றாள் தீவிரத் தொணியில் திலோ.
“அதெல்லாம் மாம்ஸ் பெப்பர் அன்ட் சால்ட்ல கூட செமையாஆஅ இருப்பாரு” என்ற உத்ரா தலையை நிமிர்த்தி விக்ரமை பார்க்க, இருவரும் ஹைபை அடித்துக் கொண்டனர்.
“ச்சை!! வர வர ஏர்ப்போர்ட்ல கொசு அதிகம் ஆகிடுச்சு” என்ற திலோத்தமை தாங்கள் வந்திருந்த ஆடி ஆர்.எஸ் செவனில் அமர்ந்து கொள்ள, உத்ராவோ,
“நறுமுகை எப்படி இருக்காங்க?” என்றாள் ஆர்வமாக, விக்ரமின் முகத்தை ஆராய்ந்து கொண்டே.
விழிகளில் குறும்பு மின்ன, அத்தை மகளின் கழுத்தை சுற்றி கரத்தை போட்டவன் அவளின் தலையில் கொட்டி, “இன்னும் சின்ன வயசுல இருந்த அதே ஆர்வம்???” என்று கேலி செய்ய,
“உங்களுக்கு அவங்க மேல இருக்கிறது விடவா?” நக்கல் பேசியவள் அவனிடம் இருந்து தப்பித்து சென்று திலோதமைக்கு அருகில் காரில் ஏறிக்கொண்டாள்.
காரில் இருந்து இறங்கிய உத்ரா இமையரசியையும், சிம்மவர்ம பூபதியையும் பார்த்தவுடன் இருவரின் அருகில் சென்றவள், இருவரின் பாதங்களிலும் விழுந்து வணங்க, கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பிறகு கண்ட உத்ராவை கண்டு கண் கலங்கிவிட்டார் இமையரசி.
கலை மானின் அழகிய துறுதுறு குறும்பு விழிகளைக் கொண்டு, வளைந்திருந்த புருவங்கள் அவளின் கூர் நாசியை இருபக்கமும் நெருங்கி தொட்டு, விழிகளைத் தாண்டி மறுபக்கம் நீண்டிருக்க, அதில் இருந்து இறங்கிய கன்னக் கதுப்புகள் சர்க்கரைப் பாகைப் போல பளபளக்க, பீச் நிறத்தில் சிவந்திருந்த செதுக்கிய அதரமும், கழுத்திலிருந்து கால்வரை எதிலும் குறை இல்லாது இருந்த உத்ராவை கண் நிறைய பார்த்தவரின் கலங்கிய விழிகளை பார்த்த உத்ரா, “ஏன் அழறீங்க?” என்று இரு கன்னங்களையும் பிடித்துக் கொஞ்ச,
“அதுனாலதான் ஏர்ப்போர்ட்டுக்கு கூட்டிட்டு வரல.. அப்புறம் நீந்திதான் வீட்டுக்கு வந்திருப்போம்” திலோத்தமை கிண்டலடிக்க, இமையரசியை அணைத்துக் கொண்ட உத்ரா, “அழக்கூடாது. தி கிரேட் சிம்மவர்ம பூபதி வைஃப் அழலாமா?” என்றாலே பாக்கலாம்.
இமையரசி சிரித்துவிட்டார்!
உத்ராவை உள்ளே அழைத்துச் செல்ல, அனைவருக்கும் அங்கு அன்னை வாங்கி கொடுத்துவிட்டதை தந்தவள், “இதை அழகி அத்தை கிட்ட அம்மா தர்ற சொன்னாங்க” என்றவள் விக்ரமை பார்க்க, கடிகாரத்தைப் பார்த்த விக்ரம், ‘இப்போது அபிமன்யு இருப்பான்’ என்று நினைத்துவிட்டு, “குளிச்சு சாப்பிட்டு போ உத்ரா. திலோ நீயும் உத்ரா கூட போ” என்றான்.
அவன் திலோத்தமையிடம் கூறியதில் இருந்த தொணியில் மட்டும் அனைவரும் அழுத்தத்தை கண்டனர் என்றாலும் ஏன் என்று கேட்கவில்லை.
சிரித்துப் பேசுபவன் என்றாலும் அவன் ஒரு நிலையை அடைந்துவிட்டால், யாராலும் வரப்போவதை கணிக்க முடியாது. அபிமன்யுவால் கூட!!
சாணக்கிய கூர் புத்தி அல்லவா!
அன்னை தந்தையிடம் வந்துவிட்டதாக அழைத்துப் பேசியவள், ஏற்கனவே தனக்குத் தயாராக வைத்திருந்த அறைக்குள் நுழைந்தாள். அவளுக்கு பிடித்த பீச் நிறத்தில் அனைத்தும் அமைக்கப்பட்டிருந்தது. அனைத்திலும் பீச், ஒரு சில இடங்களில் அடர் பீச் நிறமும், மற்ற இடங்களில் லைட் பீச் நிறமும் இருப்பதைக் கண்டவளுக்கு, அறையை காண காணத் தெவிட்டவில்லை. ரசனையாக பார்த்து பார்த்து செய்திருந்தனர் அவளுக்காக.
திலோத்தமையின் அறைக்கு அருகேயே அந்த மாளிகையின் இரண்டாவது தளத்தில் இருந்தது உத்ராவின் அறை.
ஒவ்வொன்றையும் நிதானமாக முதலில் ரசித்து முடித்தவள், உடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்தாள். வெதுவெதுப்பான நீரை பாத் டப்பில் நிரப்பியவள், அணிந்திருந்த பாத்ரோபை ரிங்கில் மாட்டிவிட்டு உள்ளே இறங்க, பயண அலுப்பில் அவளின் செப்பிதழ்கள், “ஹப்பா!!” என்று முணுமுணுத்தது.
அன்னை கூறியது அவளுக்கு ஒவ்வொன்றாய் நினைவு வந்தது.
விமான நிலையத்தில் வைத்து, “இங்க பாரு உத்ரா. உன்னை நான் அங்க விடறேன்னா உனக்காகவும், உன்னோட ஹாப்பினஸுக்காகவும் தான். உன்னை விட்டுட்டு இருக்கிறது எங்களுக்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமா?” குழந்தை போல பேசியவர்,
“நீ கோதை அத்தை வீட்டுல என்ன வேணாலும் பண்ணிக்க.. ஆனா, அழகி அத்தை வீட்டுக்கு அவ்வளவா.. இல்லை முடிஞ்ச அளவு போகாத.. அந்த பையன் அபிமன்யு கூடவும் பேச்சு வச்சுக்காத.. அங்க போயிட்டு அழகி அத்தை கிட்ட இந்த ஸாரியை குடுத்திட்டு வந்திடு. மத்தபடி அவங்கள எங்காவது பாத்தா பேசு.. ஜாக்கிரதையா இரு சரியா.. யாரையும் நம்பாத.. எதுவா இருந்தாலும் எங்களுக்கு ஃபோன் பண்ணு.. உனக்கு ப்ராப்ளம்னா விக்ரம் கிட்ட தயங்காம சொல்லு சரியா” என்று நெற்றியில் முத்தமிட்ட, அன்னையின் வார்த்தைகள் அனைத்தும் அவளுக்கு நினைவு வந்தது. அவளின் செவிகளுக்குள் அது ஒலித்துக் கொண்டே இருந்தது என்று கூட சொல்லலாம்.
‘ஏன் என்ற பல கேள்விகள் அவளுக்குள்?’
கேட்டாலும் பதில் சொல்ல மாட்டார்கள் என்று தெரியும்!
சிறு வயதில் வராத யோசனையாக, ‘ஏன் அபிமன்யு தன்னை வெறுக்கிறான்?’ என்று மேலே இருந்த சீலிங்கை பார்த்துக் கொண்டே யோசித்தாள். ஏனோ அதுவே அவளுக்கு குத்தும் வலியை கொடுப்பது போல இருந்தது.
காரணம் புரியவில்லை! ஆனால், ஆழ்மனம் வரை வலித்தது!
நீண்ட நேரம் யோசித்தவள் அலுப்புத் தீர குளித்துவிட்டு வெளியே வந்து, கீழே வர, அவளுக்கு பிடித்த இடியாப்பம், பணியாரம், அனைத்தும் என அதற்கு சாம்பார், நாலு வகை சட்னியோடு தயாராக இருந்தது. அதுவும் இடியாப்பத்திற்கு தேங்காய் பாலும் செய்திருந்தார் கோதை.
டஸ்டி லைட் ரோஸ் (Dusty light Rose) நிறத்தில் முட்டிக்கு கீழ் வரை இருந்த சிங்கிள் ஸ்ட்ராப் வைத்த மேக்ஸியை அணிந்தவள் அதற்கு மேலே ஒரு லேஸான ஸ்ரங்கை (shrug) போட்டுக் கொண்டு, சிறிய முடிகளை மட்டும் எடுத்து நடுவே க்ளிப் குத்தியிருந்தவள், கீழே வர, வருபவளை பார்த்தால் யாரும் டாக்டர் என்று சொல்ல மாட்டார்கள். மிகவும் சிறு பெண் போல இருந்தாள்.
அதுவும் அவளின் சிரித்து பேசும் இயல்பும், மிகவும் நளினமான மிளிரும் சிரிப்பும் அவளை இருபத்தி இரண்டு வயது பெண் என்றால் நம்ப இயலாது.
“வாடா உத்ரா. நல்லா இருக்கியா? அப்பா, அம்மா எல்லாம் எப்டி இருக்காங்க?” காலையே வெளியே சென்றுவிட்டு வந்த அதியரன் உத்ராவிடம் வினவ,
“நல்லா இருக்காங்க மாமா” என்றாள் வதனத்தில் இருக்கும் புன்னகை சிறிதும் குறையாது.
அவள், ‘போதும்’ ‘போதும்’ என்று,,, விட்டால் அழுதுவிடும் அளவுக்கு, வயிற்றை நிரப்பிவிட்டார் இமையரசி. விட்டால் ஒரே நாளில் சாப்பிட வைத்தே அமெரிக்காவுக்கு ஓட வைத்திருப்பார்.
“பாட்டி!!! நான் வெறும் தட்டோட உக்காந்து இருக்கேன்” திலோத்தமை கத்த,
“ஏன்டி எடுத்து போட்டு சாப்பிடேன்” என்றார் கோதை மகளுக்கு எடுத்து பரிமாறியபடியே.
உத்ராவுக்கோ சிரிப்பு வந்துவிட்டது!
மித்ரா அருகில் இல்லாத குறையை திலோத்தமை நிரப்பிவிடுவாள் என்று தோன்றியது அவளுக்கு!
விக்ரம் சாப்பிட்டு கிளம்ப, வாசல் வரை சென்றவன் திரும்பி உத்ராவை அழுத்தமாக எச்சரிக்கை உணர்வுடன் பார்க்க, அவளும் அவனையே தான் பார்த்தாள்.
விழிகளாலேயே பெண்ணவளிடம் தன் கண்டிப்பை அந்நொடி உணர்த்தியிருந்தான் விக்ரம் அபிநந்தன்!
சிரித்தால் இதமான தென்றல் அவன்! ஆனால் அவனை பகைத்தால் சூறாவளியாய் ஆக்ரோஷமாய் சுழற்றி, இருப்போரை இருக்கும் இடம் தெரியாது ஒழித்துவிடுவான்!
உள்ளுக்குள் அத்தனை உயர் அழுத்தமும், இரும்பின் உறுதியும் கொண்டவன் அவன்!
அவளையே சிறிது விநாடி பார்த்திருந்தவன், “திலோத்தமை கூடவே எங்கவா இருந்தாலும் போ உத்ரா” முகத்தில் தீவிர கண்டிப்புடன், தொணியில் கடினம் விரவ கூறியவனின் குரலில் தெறித்த கட்டளையில், அவனின் அதிகார நடத்தையில், தன்னால் பெண்ணவளின் தலை அசைய, அதில் வதனம் இளக புன்னகைத்தவன், அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினான்.
சாப்பிட்டு முடித்துவிட்டு சிறிது நேரம் அனைவரிடமும் பேசிக் கொண்டிருந்தவள், அழகிக்காக அன்னை வாங்கிய பட்டுப் புடவையை எடுத்துக் கொண்டு, திலோத்தமையுடன் தன் வருங்கால மாமியாரை, வருங்காலத்தில் தனக்கு முழு ஆதரவும், அரவணைப்பும் அவர் தான் என்று அறியாதவள் அவரை பார்க்க புறப்பட்டாள்.
வேங்கையின் அச்சுறுத்தும் கானகத்திற்குள், புள்ளி மான் செல்லத் துணிந்தது!
இன்று செல்லப் போகும் இடத்திற்கு தான், அந்த அழகிய பிரம்மாண்ட மாளிகைக்கு தான், இன்னும் சில மாதங்களில் தான் ராணி என்பதை அறியாது!
வீட்டிற்குள் இருவரும் நுழைய, வீடே வெறிச்சோடி இருந்தது. யாரின் சுவடுமே அங்கு இல்லை. சில வேளையாட்கள் மட்டுமே!
‘அபி அண்ணா இல்லை போல.. ஆனா, வெளிய அண்ணாவோட கார் நிக்குதே? வேற கார்ல போயிருப்பாரோ?’ என்று நினைத்த திலோத்தமை, உத்ராவை அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல, நீண்ட நாட்களுக்கு பிறகு உத்ராவைக் கண்ட அழகி, ஸ்தம்பித்து போய் நின்று விட்டார்.
சிறிய வயதில் அவள் பெரிய பொண்ணான போது, அழுகையில் சிணுங்கியவளை பார்த்தது நினைவு வர, இப்போது பேரெழிலாய் வருபவளை கண்டு, அவளின் பொன் வதனத்தில் இருந்து அவரால் விழிகளை அகற்ற முடியவில்லை.
“பெரியம்மா!!!” சத்தமாக அழைத்துக் கொண்டு அழகியிடம் ஓடினாள் திலோத்தமை, அபிமன்யு இல்லை என்று நினைத்துக் கொண்டு.
“வாடா உத்ரா.. எப்படி இருக்க? எவ்வளவு பெருசு ஆகிட்ட..” அவர் இலகுவாய் அவள் கைகளை பிடித்துக் கொண்டு பேச, உத்ராவும் அபிமன்யு இல்லை போல என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு அழகியிடம் நன்றாக பேச ஆரம்பித்துவிட்டாள்.
நீண்ட நேரம் மூவரும் பேசியிருக்க, “நறுமுகை எப்படி இருக்காங்க?” என்று வினவினாள் உத்ரா. அவளிடம் இங்கு இருக்கும் போதுதான் பேசியதே தவிர, மற்றபடி திலோத்தமை, விக்ரமிடம் பேசியது போல அவள் பேசவில்லை.
புகைப்படத்தை மட்டும் கண்டிருக்கிறாள்!
“நல்லா இருக்கா உத்ரா” என்றார் அழகியும்.
“ஈவ்னிங் வந்தா பாக்கலாம்” என்றாள் திலோத்தமை.
“அவ மேல தான் இருக்கா.. இன்னும் கிளம்பல.. அப்பவே எந்திரிச்சுட்டா. போய் பாருங்க. ஃப்ரீயா தான் இருப்பா” என்று அழகி கூற, உத்ரா எப்படி ஒருவரின் அறைக்கு திடீரென செல்வது என்று தயங்க, அவளின் கரம் பற்றினாள் திலோத்தமை.
இல்லை அவளின் விதி கரம் பற்றியது என்று சொல்வது தான் ஆகச் சிறந்த உண்மை!
“நாங்க மேல போறோம் பெரியம்மா” திலோத்தமை உத்ராவுடன் மேலே செல்ல, இரண்டாவது தளத்தில் அவர்கள் பேசியபடியே ஏறிக் கொண்டிருந்த சமயம்,
“திலோத்தமை..” என்று கீழே இருந்து அழகி அழைக்க,
“என்ன பெரியம்மா?” என்றாள் மேலிருந்தபடியே. வரவேற்பறையில் இருந்து படி ஏறுவதால் நடுவே யாரும் எட்டிப் பார்க்க இயலாது. அப்படியான வீட்டின் அமைப்பு அங்கு இல்லை.
“ஒரு நிமிஷம் வாயேன்” அவர் அழைக்க,
“நீ மேல போ உத்ரா.. நான் வந்திடறேன்” என்று திலோத்தமை நகர, பதறிப்போய் அவளின் கரத்தை பிடித்த உத்ரா, “விட்டுட்டு போகாத திலோ” என்றாள்.
அவளுக்கு ஏனோ இங்கு தனியே இருக்க பதட்டம்!
“மேல போனா இடது பக்க ரூம். நீ போ. பெரிம்மா கூப்பிடறாங்க. நான் வந்திடறேன்” என்றவள் கீழே செல்ல, அழகி அவளிடம் எதையோ கேட்கத் துவங்க, இங்கு நின்றிருந்தவளுக்கோ மிகப் பெரிய குழப்பம்.
“இடதுன்னா ரைட் சைடா? இல் லெப்ட் சைடா?” என்று யோசித்தபடியே மூன்றாவது தளத்தை அடைந்தவளுக்கு, அப்போது என்று நன்றாக குழம்பிவிட்டது.
“இடதுன்னா ரைட் சைட் தான்” என்று அவள் வலது பக்கம் இருந்த அறையை அவள் பார்க்க, அதுவோ வெளிக் கதவு சிறிதாக திறக்கப்பட்டு இருந்தது.
‘அப்ப இதுதான் நறுமுகை ரூம் போல’ என்று நினைத்தவள் உள்ளே நுழையும் முன் கதவைத் தட்ட, அங்கிருந்த இரண்டு அறைகளுக்குமே முதலில் ஒரு கதவு, உள்ளே சென்றவுடன் இன்னொரு கதவு என்ற அமைப்பு தானே.
அதைக் கண்டவள் இரண்டாவது கதவை தட்டலாம் என்று, அது யாரின் அறை என்று தெரியாது, அதன் உள்ளே யார் இருக்கிறார் என்று அறியாது, வெறிகொண்ட வேங்கையின் குகைக்குள் தானாக காலை எடுத்து வைக்கப் போகிறோம் என்று புரியாது, தனது வலது காலை எடுத்து உள்ளே வைத்து, அவள் உள்ளே முழுதாக நுழைய, வெளிக் கதவு அதுவாக சாத்திக் கொண்டது.
ஆட்டோமேட்டிக் லாக்!
இனி உள்ளிருப்பவன் வந்தால் மட்டும் தான் கதவை திறக்க முடியும்!!!
கச்சிதமாக சிக்கியிருந்தாள்!!!
‘அய்யயோ’ என்று மனம் காரணமின்றி படபடவென்று அடித்துக் கொள்ள, கதவை திறக்க முற்பட்டவளுக்கு பெருந்தோல்வியே கிட்டியது. தட்டினாலும் வெளியே கேட்காது.
ஃபோனை எடுக்கலாம் என்று நினைத்தவளுக்கு அப்போது தான் கீழே பேசிக் கொண்டிருந்த போது மேஜையின் மீது வைத்த நினைவு வர, ‘ச்சை! இது வேறையா? நல்ல வேளை நறுமுகை ரூமுக்குள்ள வந்தேன். மாத்தி போயிருந்த என்ன ஆகறது’ என்று வேறு நினைத்துக் கொண்டாள்.
சதுரங்க ஆட்டம் தொடங்க ஆயத்தமான சமயம் ராணி நிதானமாக, பயமின்றி சாந்தமடைய, ஆட்டதின் நாயகனான ராஜாவோ எதிரிலிருந்த அனைவரும் திடுக்கிடும் வண்ணம், தனது நகர்வை எடுத்து வைக்க ஆயத்தமானான்.
King’s Gambit!
கிங்க்ஸ் காம்பிட் என்பது ஆட்டத்தின் தொடக்கத்திலேயே நடக்கும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்த வைக்கும் நகர்வு. அந்த நகர்வுக்கு எதிராக யாராலும் தப்பிக்க இயலாது. அதன் அனுகூலத்தின் மதிப்புக்கு கோடி விலைகள். மிக வலிமையான மற்றும் புத்தி கூர்மையான பெஸ்ட் ஓப்பனிங் (Best opening) என்று பெயர் பெற்ற திறப்பு.
எதிராலியை விரைவில் தாக்கி கீழே இறக்க, வேங்கையின் ஆட்டத்திற்கு, அவனுக்கு எதிரில் இருந்த அவனின் ராணியே நல்ல பாதையை அவனுக்கு வித்திட்டிருந்தாள்.
வெளிக் கதவிற்கும் உள்ளே இருக்கும் கதவிற்கு இடையில் நான்கு பேர் தான் நிற்க முடியும். அதுவும் திடமான ஆண் நின்றால் இரண்டு பேர் மட்டும் தான். இரண்டு கதவிற்கும் இடையே மிகச் சிறிய மஞ்சள் நிற விளக்கு மட்டும், அங்கு மங்கிய வெளிச்சத்தை மையலாக பரப்பிக் கொண்டிருக்க, அதுவே பெண்வளுக்கு அடிவயிற்றில் சிறிய திகிலை பரப்பிக் கொண்டிருந்தது.
அதுவும் அந்த சிறிய இடத்திலும் கருப்பைத் தவிர வேறு வண்ணங்கள் இல்லாது இருக்க, ‘என்ன இது? இப்படி ப்ளாக்கா?’ என்று அவள் நினைக்க நினைக்க, அவளின் வயிற்றில் தோன்றியிருந்த சிறிய திகலை, பெரும் சுனாமியாய் மாற்ற, வெளியே யாரோ ஒருவரின் பேச்சு சத்தம் கேட்க, தடுமாறிப் போனாள் காரிகையவள்!
நெஞ்சில் இருந்த நீர் வற்றி, இதயம் தொண்டை குழிக்குள் இடியாய் சென்று வந்து சிக்குவதைப் போன்ற உணர்வு!
“ஹலோ! நறுமுகை ஹியர்” அங்கிருந்து வந்த கணீர்க் குரலிலும் அதனைத் தொடர்ந்து வந்த கதவு அடைக்கும் சத்தத்திலும், உள்ளம் பேயை கண்டது போல சில்லிட்டு ஆடிப் போக,
“அப்ப இந்த ரூம்?” வாய்விட்டே கேட்டவள், கதவை அவசரமாக திறக்கப் பார்க்க, அவளின் மென் கரங்கள் பயத்தில் குளிர்ந்து விறைத்து போகத் துவங்க, அடுத்து பெண்ணவள் கதி கலங்கி போகும் வகையில், உத்ராவுக்கு பின்னிருந்த கதவு, அதாவது இரண்டாவது கதவு, திறக்கப்பட, திடுக்கிட்டுப் தூக்கிவாரிப் போட நடுங்கி போனாள் விஜயவர்தனின் மகள்.
பயத்தில் சலாரென திரும்பியவள், எதிரில் நின்றவனின் இரும்பு மேனியிலேயே மோதி நிற்க, தன் முன் நின்றிருந்தவனைப் பார்த்து உள்ளம் அச்சத்திலும், நடுக்கத்திலும் தடதடக்க, கதவின் மேலேயே அரண்டு போய், பயந்து வழிந்து சாய்ந்தவளின் இதயம், அச்சத்தில் எப்போது வெடித்துச் சிதறப் போகிறதோ என்று அவளுக்கே தெரியாத நிலையில் துடித்துக் கொண்டு இருத்தது.
எதிரில் நின்றவனின் விழிகளுக்கு முதலில் நிற்பது யார் என்று பிடிபடவில்லை. அறையை சுத்தம் செய்யக் கூட ஆண்களை வைத்திருப்பவன், யாரோ தெரியாத பெண் தன் அறைக்குள் வர நினைத்ததின் ஆங்காரம் முதலில் எகிற, மங்கிய வெளிச்சத்தில் பெண்ணவளின் பயந்த முகமும், சிலையான தோற்றமும், தன்னை கண்டதும் ஓட நினைக்கும் விழிகளும், விநாடிக்குள் அவள் யாரென்று கூற, அவனின் விழிகள் அவள் மேலேயே தன் பார்வையை நகராது நிறுத்தியிருக்க, அவனின் கை முஷ்டிகள் இறுக, அவனின் கரத்தில் வரியாய் நரம்புகள் புடைத்து எழத் துவங்கியது.
அவளையே பார்த்திருந்தவனின் மனம் பாறையாய் இறுகியிருக்க, அதற்குள் கொப்பளிக்கும் சத்தத்துடன் வெடிக்கக் காத்திருந்தது எரிமலை அக்னிக் குழம்புகள்!
அந்த சத்தங்கள் அவனவளையும் அடைந்திருந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!
அவனின் வேட்டையாடும் ராஜ விழிகள் அவளை துளைத்தெடுக்க, சுவாசிக்க கூட மறந்து நின்று போனவள், “நா.. நா.. நான் போகணும்” என்று மீண்டும் பயத்தில், கதவின் தாழை உடைக்கும் அளவிற்கு திறக்க முயல, அவளை ஏற்கனவே வெறுப்பவன், தன் எதிரிகளை தன் ஆங்காரத்தால் ஒன்றுமில்லாமல் செய்து கொண்டிருப்பவன், தன்னை யாரும் நெருங்க இயலாத இடத்தில் அனைவரையும் வைத்திருப்பவன், அவளின் இந்தச் செயலில் எரிச்சலடைய,
“ஏய்!!” என்று உறுமியவன் அவளை இழுக்க, அந்த உறுமலில் அவனின் வன்மையான இழுப்பில், அவள் மேலே அணிந்திருந்த ஷ்ரக்கின் (shrug) ஒரு பகுதி கிழிய, அதில் உள்ளம் பனியாய் உறைந்து அதிர்ந்து போனவள், அடுத்து என்ன என்று யோசிப்பதற்கு முன், அபிமன்யுவின் கரங்களிலேயே மயங்கிச் சரிந்தாள் அவனின் உத்ரா!