ஆட்டம்-17
கண் கொத்திப் பாம்பாக, ஒவ்வொரு விநாடியும் உத்ராவினை கவனமாக கண் காணித்துக் கொண்டிருந்தான் விக்ரம். இத்துடன் உத்ரா அங்கு வேலையில் சேர்ந்து ஒரு மாதம் பறந்திருந்தது. ஒவ்வொரு நாளும் அவள் நீரஜாவின் மருத்துவமனைக்கு கிளம்பும்போது அவன் விழிகள் எப்போதும் அவளின் மீது அழுத்தமாக படியும்.
இரவு திரும்பி வந்தால், அவளின் வதனத்தை உற்று கவனிப்பான் ஏதாவது வேறுபாடு தென்படுகிறதா என்று. அவள் எப்போதும் போல் இருப்பதைப் பார்த்தால், அவன் மனம் அமைதியாக, அனைவருடனும் இயல்பு போல சாந்தமாக இருந்துவிடும்.
அன்று வழக்கம்போல இரவு உணவை முடித்துக்கொண்டு அறைக்கு வந்த உத்ரா, தன்னை முழுதாக உள்வாங்கிக் கொள்ளும் படுக்கையில் புதைய, புரண்டு புரண்டு படுத்தவளுக்கு அன்று ஏனோ உறக்கம் விழிகளை கட்டி அணைக்கவில்லை.
சிறிது நேரம் சலுப்பும், உறக்கம் வராத சிணுங்கலும் அவளை இம்சிக்க, எழுந்தவள் தந்தைக்கு அழைக்க, அவரோ, “சொல்லுடா?” என்றார்.
அவரின் குரலில் இருந்த அன்பையும், அக்கறையையும் உணரும்போதே அவரின் செல்ல மகளுக்கு அவளை பார்க்க வேண்டும் என்று இருந்தது.
“ப்பா!” என்றவளின் குரலில் வழிந்த ஏக்கத்தையும், அதன் தொணி உணர்த்திய தவிப்பையும் புரிந்து கொண்டவர், “என்னடா?” என்றார் சிரிப்புடன்.
“மிஸ் யூ ப்பா” என்றவளுக்கு அவர்களைப் பிரிந்த ஏக்கம் துளிர்விட்டது. இந்தியா வந்த நாளில் இருந்து அவளுக்கு அந்த எண்ணமே சிறிதும் முளைக்காத வகையில், இன்று ஏனோ அவர்களைக் காண வேண்டும் என்ற விடாத தவிப்பும், விட்டுப் போகாத பதைபதைப்பும்.
“லவ் யூ டா உத்ரா” என்ற விஜயவர்தன், வீடியோ காலில் வந்தார். மணி அமெரிக்காவிலோ பின் காலையில் தான் இருந்தது. அவர் மருத்துவமனையில் தன்னுடைய சுழற் நாற்காலியில் அமர்ந்து கொண்டு, எதையோ எழுதியபடியே ஃபோனை மேஜையின் மேல், தான் தெரியுமாறு வைத்துவிட்டு அமர்ந்துவிட்டார்.
தந்தை வீடியோ காலில் வருவதை கண்டவள், தன் பூ பாதங்களுக்கு வேலை கொடுத்துக் கொண்டு பால்கனிக்கு வர, ஃபோனை ஏற்றவளுக்கு தந்தையை பார்த்தவுடன் விழிகளில் நீர்மணிகள் கோர்க்க, கண்ணீர் வைரமாய் பளபளத்தது.
புதல்வியின் வதனத்தைப் பார்த்தவருக்கோ அவளின் கண்ணீரும், வருத்தம் தோய்ந்த முகமும், இதயத்தை கனக்கச் செய்ய, “ஏன்டா அழறே?” என்றார். அவளின் வருத்தமும் கண்ணீரும் மகளை கண்ட அடுத்த நொடியே அவரையும் தொற்றிக் கொண்டது.
தந்தையின் அக்கறையான கேள்வியில், காரிகையவள் மனதை இத்தனை நாட்களாய், அழுத்திக் கொண்டிருந்த பாரமான வினா பெண்ணவளையும் மீறி, அவளைத் தாண்டி வெளியே வந்தது.
“ஏன்பா நீரஜா அவங்களை ஏமாத்துனீங்க?” என்று குற்ற உணர்வில் அதரங்கள் அவமானத்தில் துடிக்கக் கேட்டுவிட, மகளின் வெட்டாய் விழுந்த கேள்வியில், அவளின் அடித் தொண்டையில் இருந்து வந்த அழுகையிலும், குற்றச்சாட்டான பார்வையிலும் மனிதர் உள்ளுக்குள் மடிந்து செத்தேவிட்டார்.
மகளுக்கு தெரிந்துவிட்டதா என்ற பேரதிர்ச்சி ஒருபுறம், மகளின் கேள்வியில் சொல்ல முடியாத வெட்கத்தில் சுருண்ட தந்தையுள்ளம் மறுபுறம்.
தந்தையின் விழிகளிலும் ஈரம் சுரப்பதைக் கண்டவள், “இத்தனை நாள் கல்யாணம்னு ஒண்ணு பண்ணாம அவங்க இருக்காங்க ப்பா.. அப்ப எந்த அளவுக்கு நீங்க, அம்மா பண்ணது அவங்களை பாதிச்சு இருக்கும்.. எனக்கு இது தெரியறதுக்கு முன்னாடி வரை அவங்க ஏன் என்கிட்ட பேச மாட்டிறாங்கனு இருக்கும்.. தெரிஞ்சதுக்கு அப்புறம் அவங்க முகத்தை பாக்கவே முடியல ப்பா.. ஹாஸ்பிடல்ல ஏதாவது விஷயமா பேசுனா கூட என்னால ஃபேஸ் பண்ண முடியல” அனைத்தையும் தாங்க இயலாத வேதனையோடு அவள் கூறிக் கொண்டிருக்க, பெண்ணவளின் விழிகளில் இருந்து சரசரவென்று நீர் வழிய, ஒரு கரத்தால் தன் மென் கன்னங்களை குழந்தை போல அழுந்தத் துடைத்தவள், தந்தையின் பதிலுக்காக அவரை கேள்வியுடன் பார்த்திருந்தாள்.
மகள் அழுவதையே பார்த்திருந்தவருக்கு, “அழ வேண்டாம்” என்று கூட சொல்ல முடியவில்லை. எடுத்துச் சொல்லி சமாதானம் செய்ய அவள் ஒன்றும் சிறு குழந்தை அல்லவே!
“உத்ரா, சில விஷயம் எப்பவுமே வெளிய தெரியாம இருக்கிறது நல்லதுடா” என்றவர், “இது என்கிட்ட கேட்ட மாதிரி உன் அம்மாகிட்ட கேட்டிறாத” என்றவர் விழிகளில் மின்னிய ஈரத்துடன் இருகைகளையும் எடுத்து மகளிடம் கும்பிட, பெண்ணவளுக்கு தந்தையின் அழுத்தமான செயல், அவளின் உள்ளத்தை தகர்த்து உடையச் செய்துவிட்டது.
“அப்பா! ப்ளீஸ் இப்படி எல்லாம் பண்ணாதீங்க..” என்றவள் அலைபேசியை அதற்கு மேல் முடியாமல் அணைத்துவிட்டாள்.
‘என்ன மாதிரியான செயல் இது?’
‘எதற்காக தந்தை இப்படி கலங்க வேண்டும்?
அவர் கலங்கி அவள் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. விழிகள் சிவந்து, ஈரம் பரவி, தந்தை தன்னிடம் கை கூப்பி, ‘அன்னையிடம் கேட்க வேண்டாம்’ என்று கேட்டது அனைத்தும் அவளின் அதரங்களை, அழுகை வருவதற்கு அறிகுறியாய் துடித்து நெளிய வைத்தது.
“ஏன் ம்மா இப்படி பண்ணீங்க?” பெண்ணவளின் அதரங்கள் தனிமையில் முணுமுணுக்க, அவளின் இமைகள் அடித்து துடித்தது. தலை பாரமாக வலித்து கனத்தது. தலை பின்னே சாய்வது போல இருக்க, உள்ளே சென்றவள் ஒரு மாத்திரையை எடுத்துப் போட்டு தண்ணீரை பருகிவிட்டு மீண்டும் வெளியே வந்து, சாய்வது போல இருந்த, தேக்கு மரத்திலான நீளமான இருக்கையில் கால்களை நீட்டியபடி நன்றாக சாய்ந்து வானில் இருந்த நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.
மீண்டும் விஜயவர்தனிடம் இருந்து அழைப்பு வர, அதை ஏற்றவள், “சொல்லுங்க ப்பா” என்றாள். குரலில் சற்று தெளிவு இருந்தது.
“கோபமா டா?” அவர் இறங்கிய குரலில் வினவ,
“இல்லனு பொய் சொல்ல மாட்டேன் ப்பா. அதுக்காக உங்களை என்னால வெறுக்கவும் முடியாது. ஆனா நீங்களும், அம்மாவும் பண்ணது மன்னிக்க முடியாத தப்பு ப்பா” என்றவள், “நீரஜா அவங்களை பாத்தா பெருமையாவும் இருக்கு, அதே சமயம் உள்ளுக்குள் என்னென்ன புதைச்சு வச்சிருக்காங்களோனு பாவமாவும் இருக்குப்பா. எத்தனை கனவோட கல்யாணம் அன்னைக்கு காலைல இருந்திருப்பாங்க” என்றாள்.
ஏனோ நீரஜாவின் நிலையை நினைக்கவே விஜயவர்தன்-ரஞ்சனி புதல்வியால் முடியவில்லை. மகளின் கேள்விகள் எதற்கும் பதில் இல்லை விஜயவர்தனுக்கு. விண்ணிலிருந்து மண்ணில் இருப்போரை நடுங்க வைத்த இடியும், மின்னலும் போன்று தான் இருந்தது தளிர் பெண்ணவளின் கேள்வி அவருக்கு.
சில விநாடிகள் தகப்பனும், மகளும் மௌனத்தையே பதிவு செய்து ஏற்றிருக்க, விஜயவர்தனே வாயைத் திறந்தார்.
“மன்னிக்க முடியாத தப்பு தான் உத்ரா. ஆனா சூழ்நிலையை சொல்ல முடியாது. சொல்லணும்னா ஊருக்கே இதை சொல்ல முடியாது. சொன்னா யாரும் நம்பவும் மாட்டாங்க” மகளிடம் இதைப் பற்றி முதன்முதலாக மனம் திறந்தவர்,
“சில விஷயங்கள் எங்களோட இருக்க வரைதான் நல்லது” என்றார் அழுத்தமாக தொணியில்.
‘அப்படி என்ன மறைக்கிறார்கள்?’
‘அப்படி என்ன சூழ்நிலை?’
‘அப்படி என்ன தவறு?’
அனைத்தும் அவளின் மூளையை வண்டு போல குடைந்து கொண்டே போக, அவள் அதற்கு மேல் யோசிக்க முனையவில்லை. யோசித்து யோசித்து தன்னை வருத்திக் கொள்ள விரும்பவில்லை.
தந்தைக்கு பதிலாக ஒரு, ‘உம்’ஐ பதிலாக கொடுத்தவள் வைத்துவிட, அவரும் அதற்கு மேல் அழைக்கவில்லை.
அலைபேசியை அணைத்தவள், அருகில் நீள் இருக்கைக்கு ஜோடியான வட்ட மேஜையின் மீது அதை வைக்க, ஏதோ உள்ளே குத்த, எதுவோ தன்னை உந்த, யாரோ தன்னைப் பார்ப்பது போல நிச்சயமாய் உணர்ந்தவள் தலையை நிமிர்த்தவே இல்லை.
நிமிர்த்தும் தைரியம் இல்லாது பெருந்திகைப்பில் அவளது மிருதுவான அதரங்கள் காய்ந்து ஒட்டிக் கொண்டன.
அனைத்தையும் மாமன் மகளுக்கு பார்த்து பார்த்து, ஏன் ஒவ்வொன்றையும் அபிமன்யுவின் நிழலிருந்து மறைத்து வைத்திருந்த விக்ரம், முக்கிய இடத்தில் மறந்து போனான். அது உத்ராவின் அறை. அபிமன்யு அறையில் இருக்கும் பால்கனியில் இருந்து பார்த்தால் உத்ராவின் பால்கனி வெட்ட வெளிச்சம் தான்.
யானைக்கும் அடி சறுக்கும் என்பது இவ்விடயத்தில் மெய்யிலும் மெய்யாகிப் போனது.
‘நீ அண்ணாவை கல்யாணம் பண்ணிட்டா ப்ராப்ளம் க்ளியர்’ என்ற திலோத்தமையின் வார்த்தைகள் வேறு பெண்ணவளின் செவிகளில் அந்நேரத்தில் எக்கோ அடிக்க, எங்கிருந்து அவனின் அவளுக்கு அத்தனை தைரியம் வந்ததோ, அவனின் அம்பினைப் போன்ற கூர் விழிகள் தன்னை ஒவ்வொரு அங்குலமாய் அளவெடுப்பதை அவளின் உள்ளம் உள்வாங்கிக் கொண்டிருந்தாலும், இதயத்தில் தோன்றிய திகில் உடல் முழுவதும் பரவிக் கொண்டிருந்தாலும், மெதுவே எழுந்தவள், அவனின் பால்கனி திசை இருக்கும் இடம் சென்று கம்பியை இறுக பற்றியவள், அவனை முதல் முறை நிமிர்ந்து விழிகளுடன் விழிகள் கலக்க, தைரியமாகப் பார்த்தாள்.
இதயம் இவ்வளவு வேகமாகக் கூடத் துடித்து, ஒருவரால் அந்த சத்தத்தை கேட்க கூட இயலுமா என்னும் அளவுக்கு, அபிமன்யுவின் விழிகளை சந்தித்ததில், அவளின் இதயத்தில் கடுங்குளிர் பரவ, மின்சாரம் மேனி முழுவதும் ஓடுவதைப் போல உணர்ந்தவள், பால்கனியில் இருந்த கம்பி விட்டால் வளைந்துவிடும் என்னும் அளவிற்கு இறுகப் பற்றிக் கொண்டாள்.
அதன் பிறகு நீண்ட நேரம் அவளால் அங்கு நிற்க இயலவில்லை. உள்ளே தடதடவென்று ஓடிவிட்டாள்.
வழக்கமாக வதனத்தில் குடியிருக்கும் இறுக்கம் தளர்ந்து, வெகு நிதானத்துடன், கறுப்பு நிற வெஸ்ட்டை அபிமன்யு அணிந்திருக்க, அவனின் கரமோ, தனது ஐ பேடை தாங்கியிருக்க, அவனின் இதழ்கள் ச்விங் கம்மை மென்று கொண்டிருந்தது. அப்போது தான் வேலை முடிந்து வந்திருந்தவன், மீண்டும் ஏதோ வேலையாய் ஐ பேடை எடுத்துக் கொண்டவனுக்குத், தென்றல் காற்று சற்று தேவைப்பட்டதால், பால்கனிப் பக்கம் வந்து நின்றான்.
சிறிது நேரம் இருக்க, இடைவெளி அதிகம் இருந்தாலும், அவனின் மூளைக்கு ஏதோ அரவம் உணர, திரும்பியவனின் விழிகளில் விழுந்திருந்தாள், அவன் தன் வாழ்நாளிலேயே வெறுக்கும் இருவருக்கும் பிறந்த செல்ல புதல்வி.
Lip reading!
உதட்டின் அசைவுகளை வைத்தே என்ன பேசுகிறார்கள் என்று புரிந்துகொள்ள கூடிய ஆற்றல் தான் லிப் ரீடிங்.
அனைத்தையும் கண்கொண்டு பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். அவள் பேசியது, அழுதது அனைத்தையும் கண்ணுக்கு எதிர் பார்த்திருந்தான். அவள் பேசியதை உணர்ந்திருந்தான். கேட்கும் அளவில் இரு பால்கனிகளும், அருகருகே இல்லையென்றாலும் பார்க்கும் அளவில்தான் இருந்தது.
‘இல்லனு பொய் சொல்ல மாட்டேன் ப்பா. அதுக்காக உங்களை என்னால வெறுக்கவும் முடியாது. ஆனா நீங்களும், அம்மாவும் பண்ணது மன்னிக்க முடியாத தப்பு ப்பா’ என்ற உத்ராவின் வெளிப்படையான வார்த்தைகளை, அபிமன்யுவின் இரும்பின் உறுதி கொண்ட மனம் அசைபோட்டது. மீண்டும் மீண்டும் அதை மனதிற்குள் ஓட்டிப் பார்த்தது.
தவறு இழைத்தது பெற்றோராகவே இருந்தாலும், அதைச் சுட்டிக்காட்டிய விதம் அவனை ஈர்க்கத்தான் செய்தது. அவனின் அத்தைக்கு ஆதரவாக பெண்ணவள் பேசும்போது, அதுவும் தான் வெறுக்கும் அவள் பெற்றோரையே, கேள்வி கேட்கும்போது அவனுக்கு அது பதியத்தானே செய்யும்.
இருந்தாலும், ‘அவர்களுக்குப் பிறந்தவளுக்கு இப்படி ஒரு குணமா?’ என்று ஆடவணின் கடும் மனமும், முரட்டு இதழும் ஒரு சேர நக்கலாய் நகைத்தது.
தான் பார்ப்பதை தன்னை பார்க்காதே உணர்ந்து கொண்டவளின் செய்கைகளின் உள்ளுணர்வை நினைத்து அவன் மனம், ‘ப்ச்’ என்று அவனறியாதே புருவங்களை உயர்த்தி மெச்ச, அவளின் வெட்டி வைத்த பால் துண்டு நெற்றியில் துவங்கிய அவனின் மன விழிகள், பேதையவளின் மலர்க்கண்களும், அதன் இடையே அழகாய் கொட்டும் மொட்டான நாசியும், பந்து கன்னங்கள், அழகாய் விரிந்திருத்த அதரங்கள், நீண்ட சங்குக் கழுத்தும், என வந்தவனின் எண்ணங்கள் அப்படியே உறைந்து போய் தடைபட்டு நிற்க, நிகழ்காலத்திற்கு வந்த அவளின் எதிர்கால ரட்சகன், முன் சிகையை அழுந்தக் கோதினான்.
அவனுக்கே அவனின் எண்ணங்கள் அதிகமாகத் தோன்றியது!
விஜயவர்தன்-ரஞ்சனி தம்பதியர் என்ற கோட்டைத் தாண்டி, ஒரு பெண்ணாய் அவளைப் பற்றி அவன் இவ்வளவு நேரம் சிந்தித்திருக்கின்றான். அதுவும் விழி, நாசி, இதழ் என அவனின் மனம் அனைத்தையும் அலசியிருக்க, அபிமன்யுவின் கொதிக்கும் உள்ளத்தில் சில்லென்ற குளிர் நீரை இரைத்தது போன்ற உணர்வு.
அப்போது தான் அவனின் மனம், அதை உணர்ந்தது. அது.. அது உத்ராவின் பார்வை!
ஒருவரின் பார்வை ஆளையே திருப்பிப் போடும் வல்லமை வாய்ந்தது!
நீண்ட நேர பார்வை பரிமாற்றங்கள், ஈர்ப்பு எனும் உணர்வுகளுக்கு காரணமான ஃபைனிலெதிலமைன் (Phenylethylamine) என்ற வேதிப்பொருளை உடலில் வெளியிடும். அது உடலில் ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோனை வெளியிடும்.
Oxythocin!!!
Hormone for love!!! (காதலுக்கான ஹார்மோன்)
உடலில் உள்ள பல்வேறு உணர்ச்சிகளுக்கு ஏற்ப உதவும் ஊக்கிகள். நீண்ட கால காதல் பிணைப்புகள், மற்றும் நெருக்கமான அர்ப்பணங்களில் அதிகமாக வெளிப்பட்டு, மகிழ்ச்சியாக ஒருவர் உணரவும், மன அழுத்தத்தை குறைக்கவும், பாதுகாப்பு உள்ளுணர்வையும் கொடுக்கும் சக்தியைக் கொண்டது.
இப்போது அதைத்தான் தன் யுவதியின் விழிகளில் கண்டுவிட்டானோ என்னவோ!
தலை கவிழ்ந்திருந்தவளின் தாழ்ந்த இமைகள் மெல்ல மெல்ல நிமிர்ந்து தன்னை நோக்கியதை மீண்டும் ஒருமுறை மனதில் நிறுத்திப் பார்த்தவனுக்கு, அவளின் மருண்ட விழியில் கலந்து தெரிந்த ஈர்ப்பில், யாரும் வீழ்த்த முடியாத நிலையில், ஏன் நெருங்கக் கூட இயலாத இடத்தில், சாதுர்யமாக ஒரே அடியில் எதிரிகள் எழவே முடியாது, உறுமும் வெறி கொண்ட வேங்கையின் மனதிலேயே ஆக்ஸிடோசின் சுரப்பது போலத் தோன்றியது அந்த வீட்டின் மூத்த வாரிசிற்கு.
உஷ்ண மூச்சை வெளியிட்டவன் தன் இதழ்களை குவித்து ஊத, முதல் முறை, தான் ஒரு பெண்ணை நினைத்து பெருமூச்சு விடுவது அவனை மெலிதாய் புன்னகைக்க வைக்க, அவனுக்கே ஆச்சரியம் கலந்த திகைப்பு., அதனால் விளைந்த புன்னகையும் மேலும் அகல, இன்னும் விரிந்தது அபிமன்யுவின் இதழ்கள்.
அவளை சிறிய வயதில் முதன்முதலாக பார்த்தது தொடங்கி, அனைத்தும் அவனது விழிகளின் முன்னால் திரையில் காட்டப்படுவது போல ஓடத் துவங்க, அவளின் கரத்தை, அதுவும் பதின் வயதை அடைய இருந்தவளின் பிஞ்சு கரத்தை, இருபதுகளில் இருந்த தான் பிடித்த காட்சி நினைவில் வர, மொத்தமாய் எண்ணங்கள் கடந்த கால அலைகளில் சுழன்றதில், அங்கேயே சென்றுவிட்ட உணர்வில், வலுவான ஆடவணின் உடல் முழுதும் பனியாய் புல்லரிக்க, அவனின் ஆழ்மனம் எதையோ அவனுக்கு சம்மட்டியால் அடித்து உணர்த்த, சட்டென விழித்துக் கொண்டது அபிமன்யுவின் மனம்.
‘நானா?’
‘அவளை?’
பல கேள்விகள் அவனுக்குள். இம்மாதிரி ஒரு உணர்வை அவன் யாரிடமும் உணர்ந்ததில்லை. யாரும் ஒற்றை பார்வையில் அவனுக்கு கொடுத்ததும் இல்லை. அவனை கடந்த காலத்திற்கு அழைத்துச் சென்று சிலிர்க்க வைத்ததும் இல்லை.
சிறிது நேரம் விண்ணை பார்த்துக் கொண்டே நின்றிருந்தவன், தனது வேலைகளை முடித்துக் கொண்டு அறைக்குள் நுழைந்து கொள்ள, தனது அறையில் அந்த ஏசி கம்ப்போட்டர் ப்ளான்கெட்டை (Blanket) முழுதாக தன் மீது போர்த்தியபடி, படுக்கையில் இரண்டு அடி புதைந்து படுத்துக் கொண்டிருந்தவளுக்கு உடல் வெளிப்படையாக நடுங்கிக் கொண்டிருக்க, தனக்கு தானே முணுமுணுத்தது அவளின் இதழ்கள்.
அங்கு அவன் ஒரு முடிவுடன் படுத்தவுடன் உறங்கிவிட்டான். தான் வெறுக்கும் இரு ஜீவராசிகளின் புதல்விதான். ஏன் அவளையே வெறுத்தவன் தான் இவன். அவளின் மீது இப்போது ஈர்ப்பு வந்துவிட்டது அவனுக்கு.
காதலா என்று கேட்டால் அவனிடம் பதில் இல்லை.
ஆனால், சாதுர்யமாக காயை நகர்த்த நினைத்தவன், தனது முடிவுகளை சொடக்கிடும் கணத்தில் விடுவிடுவென்று எடுத்துவிட்டு, படுத்தவுடன் உறங்கிவிட, அவனவள் தான் உறக்கமின்றி தவித்துக் கொண்டிருந்தாள்.
‘இப்படியா பாத்து வைப்ப.. ஏற்கனவே உன்னை பிடிக்காது.. பாத்தாலே ஆகாது.. பாத்த டைமெல்லாம் அழ வச்சாரு இல்ல பயமுறுத்தினாரு.. இதுல வேற இப்படி பாத்து வச்சுட்டையே உத்ரா.. இனி என்ன ஆகுமோ.. அதுவும் இன்டர்வியூ போகும்போது எதுவுமே கேக்காம அப்பாயின்மென்ட் ஆர்டர் கொடுத்திட்டாரு. ஒரு வார்த்தை பேச கிடையாது நம்மகிட்ட.. அம்மா சொன்னதுக்கு எல்லாம் ஆப்போசிட்டா பண்ணிட்டு இருக்க.. அங்க போகவே கூடாதுனு சொன்னா நீ லுக்கு விட்டுட்டு வந்திருக்க.. அதுவும் தைரியமா நேருக்கு நேரா’ தனக்குள் இஷ்டத்திற்கு புலம்பியவள், நடு சாமம் கடந்தே நித்திரா தேவியை துணைக்கு அழைத்திருந்தாள்.
***
அன்று காலை ஐந்தரை மணிக்கே, பேபி ப்ளூ நிறத்தில் மிதமான சில்வர் வேலைப்பாடுகள் நிறைந்த பேன்சி புடவை அணிந்து, அதே பேபி ப்ளூ சாட்டின் கையில்லாத ப்ளவுஸுடன், மிக மிதமான ஒப்பனையிலேயே சிற்பிகள் கரம் கொண்டு, ரசித்து ரசித்து செதுக்கப்பட்டு வீற்றிருந்த பொன் சிலை போல, கீழே மங்கையவள் இறங்கி வர, வரவேற்பறையில் அமர்ந்திருந்த விக்ரம், புன்னகையுடன் செய்தித்தாளை மூடி வைத்தவன், அவளிடம் எழுந்து வந்து பரிசை நீட்ட, கன்னங்கள் உள்ளத்தில் தோன்றிய மகிழ்ச்சியின் காரணத்தால் புன்னகையில் மிளிர, அதை வாங்கி கொண்டாள்.
“ஹாப்பி பர்த்டே உத்ரா!” என்று கரத்தை நீட்டினான் விக்ரம் அபிநந்தன்.
“தேங்க்ஸ் மாம்ஸ்” என்றவள் கரம் குலுக்கிவிட்டு, பரிசை பிரிக்க, உள்ளே ஐ போன் 14 ப்ரோ மேக்ஸ் அவளைப் பார்த்து கண் சிமிட்ட, இதழ்கள் பேச முடியாது விரிந்து கொள்ள,
“மாம்ஸ் இவ்வளவு காஸ்ட்லியா?” அவள் தயங்க, “வாங்கிக்க உத்ரா” என்றபடி தீபாராதனை தட்டுடன் வந்த கோதை, அவளுக்கு நெற்றியில் திருநீறு பூசி மெதுவாய் ஊதிவிட, காலில் விழப்போனவளை அவசரமாகத் தடுத்தவர்,
“தீபாராதனை கையில இருக்கும் போது விழக்கூடாது.. அதுவும் இல்லாம பர்ஸ்ட் மாமா, அத்தைகிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு வா” என்று சிம்மவர்ம பூபதி, இமையரசியை கூறியவர், அங்கு சென்று வரச் சொல்ல, உத்ரா விக்ரமை பார்த்தாள்.
விக்ரம், “திலோ எங்க ம்மா?” என்று வினவ,
“அவ உங்க பாட்டி உத்ராவுக்கு ஸ்வீட் செய்யறாங்கனு உத்ராவுக்கு முன்னாடி கிளம்பி போயிட்டா” என்றவர் சிரித்தபடியே கூற, விக்ரமும் உத்ராவும் தலையில் ஒரு சேர அடித்துக் கொள்ள,
“ஏன்மா இப்படியே சாப்பிட்டானா அவளை கட்டிக்கப்போறவன் நிலைதான் என்ன?” என்று சிரித்தவன், “இங்க ஆடிட்டு அங்க போய் சில பாடி பில்டர்ஸுக்கு பயந்து அமைதி ஆகிடுவா” என்று வெளிப்படையாகவே அபிமன்யுவை கேலி செய்ய,
மகனின் தோளில் செல்லமாய் அடித்த கோதை, “என் பெரிய பையனை எதுவும் சொல்லாதே விக்ரம்” என்றுவிட்டுச் செல்ல, நெற்றி நெருங்கி, குறும்பாய் பார்த்த விக்ரமின் புருவங்கள் அன்னையை கேலியாய் மெச்ச, அவர் ஏதோ தொடங்குவதற்குள், கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு நகர,
அறைக்கு ஏற படி வரை சென்று உத்ராவை திரும்பிப் பார்த்தவன், “அங்கதான் திலோ இருக்கா.. போயிட்டு வந்திடு” என்று இரண்டாவது வாக்கியத்தை அழுத்தமாய் கூறியவன், சென்றுவிட, அவன் கொடுத்த கிப்டை பத்திரமாக அத்தையிடம் கொடுத்தவள், அபிமன்யுவின் இல்லத்தை நோக்கிச் சென்றாள்.
வீட்டை விட்டு வெளியே வந்தவள் அபிமன்யுவின் இல்லத்தில் கால் எடுத்து வைத்து, சிறிது தூரமே நடந்திருப்பாள், சேலை காலைத் தட்டிவிட, சொருகியிருந்த சேலை கொசுவம் வெளியே கிட்டத்தட்ட வந்துவிட்ட நிலை. உள்ளே செல்ல இன்னும் இருநூறு மீட்டர் இருந்தது.
‘ஐயோ இவ்வளவு பெருசாவா வீட்டை கட்டுவாங்க. அங்க போறதுக்குள்ள எல்லாம் வெளிய வந்திடுமே. இப்படியே எப்படி போறது?’ என்று உள்ளுக்குள் படபடவென்று அடித்துக் கொள்ள, யாராவது பார்த்து விடுவார்களோ என்று பொங்கிய கூச்சத்தில், சட்டென புடவையை பிடித்துக் கொண்டு வீட்டின் ஒருபக்கம் மறைந்தவள், நின்றது என்னவோ சித்தார்த் அபிமன்யுவின் தனிப்பட்ட உடற்பயிற்சி கூடத்தின் பின்புறம் தான்.
சுற்றியம் உறுதியான கண்ணாடியால் ஆன உடற்பயிற்சி கூடம். யாரும் தன் ஆஜானுபாகுவான உடலை பார்ப்பது அபிமன்யுவுக்கு அறவே பிடிக்காது. ஏன் தேவை இல்லாது அவனைத் தொட்டு பேசினாலே அவன் முகம் கடுமையை கொட்டிவிடும். அதற்காகவே ஒரு வயது வந்தபின், அவனுக்கு பிடித்தது போல வீட்டோடு ஒரு ஜிம்மை அமைத்துக் கொண்டான்.
கண்ணாடியால் சுற்றத்தை எழுப்பி, உள்ளே ஒரே ஒரு இடத்தில் மட்டும் அவன் விரும்பினால் அவ்வப்போது சூரிய ஒளி உள்ளே வருவதற்கான சன் ஷேட் ஸ்க்ரீன் (Sun shade screen) இருந்தது. அதை ஏற்றினால் மட்டுமே அந்த ஒரு இடத்தில் இருந்து வெளியே இருப்பவரால் உள்ளே பார்க்க முடியும். மற்ற இடத்தில் எல்லாம் சன் ஷேட் ஸ்க்ரீன் இல்லை என்றாலும் உள்ளே தெரியாது.
வெளியே இருந்து பார்ப்பவருக்கு அது ஏதோ கண்ணாடியால் ஆன தடுப்பு. அவ்வளவு தான். ஆனால், உள்ளே இருப்பவனுக்கு அனைத்தும் வெட்ட வெளிச்சம் என்பது அந்த அறைக்குள் சென்றவர்களுக்கு மட்டுமே தெரியும்.
அப்போது தான் இடையில் பார்பெல்ஸை (Barbells) தூக்குவதற்கான பெல்டை சுற்றிவிட்டு வந்த அபிமன்யு, இருநூறு பவுண்ட் எடையிலுள்ள பார்பெல்ஸை தூக்கிக் கொண்டு நரம்புகள் வரிவரியாக உடலில் புடைத்து, தெறித்துக் கொண்டு வியர்வை அருவியாய் வழிய நின்றிருக்க,
அங்கு வெளியே ஓடி வந்த உத்ராவை பார்த்த அபிமன்யுவின் விழிகள், ‘இந்த நேரத்தில் இவள் என்ன இங்கே?’ என்று பார்பெல்ஸை சுமந்தபடியே யோசனையில் சுருங்க, அவளோ சுற்றியும் முற்றியும் பார்த்தவள், சட்டென புடவையை நகற்றி, புடவை கொசுவத்தை மீண்டும் கட்ட, பெண்ணவளின் திடீர்ச் செயலில், நேருக்கு நேர் அவளின் மேனியில் தெரிந்த வெண் தந்தமும் பொன்னும் கலந்த அங்கங்களின் விளைவால்,
ஆயிரம் பேர் ஆயுதங்களோடு வந்தாலும் அஞ்சாத ஆண்மகனுக்கே அவளின் ஆயுதப் படையினால் மூச்சிரைத்துப் போக, பிடறியில் யாரோ இடியால் அடித்தது போலத் தோன்ற, கைகளில் இருந்த பார்பெல்ஸை அவனது கரங்கள் நிதானம் தவறியதில் விட்டுவிட, படாரென்று அது தரையில் பெருஞ் சத்தத்தோடு விழுந்ததில், கிட்டத்தட்ட நூறு கிலோ தடாலென்று கீழே விழுந்ததில், ஜிம் மேட்டில் இருந்த சிலபல தூசிகள் பறந்தோட, வெளியில் நின்றிருந்தவளோ இது எதுவும் அறியாது, தன் அழகை கண்ணாடியில் ரசித்தபடியே புடவையை ஒழுங்காக கட்டிக் கொண்டிருந்தாள்.