ஆட்டம்-19
“நறுமுகை!” என்ற அபிமன்யுவின் அழைப்பில், உத்ராவை கேலியான பார்வை கொண்டு கபளீகரம் செய்து கொண்டிருந்தவள் மாமன் மகனை விடுக்கென பார்க்க,
“நான் கிளம்பறேன். நீ பொறுமையா வா” என்றவன் கால்களை எட்டிப்போட்டு விடுவிடுவென்று சென்றுவிட, அவன் அணிந்திருந்த ஷூவின் ஓசை சிறிது சிறிதாக குறைய, மொத்தமாக சத்தம் மறைந்த பின் நறுமுகையை நிமிர்ந்து பார்த்த உத்ரா,
“தேங்க்ஸ்” என்றாள் நறுமுகையிடம் மிடுக்காக தலையை சிலுப்பியபடி, முன்னால் விழுந்திருந்த முடியை பின்னே தூக்கி போட்டபடி.
“ம்கூம்! ம்கூம்!” என்று இருமுவது போல செய்த நறுமுகை, “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மௌன ராகம் வாசிச்சிட்டு இருந்தவங்க எல்லாம் ஏதேதோ சொல்றாங்க” என்றாள் கேலியாக.
இருவரும் ஒருவரை ஒருவர் பேசி வாரிக் கொண்டிருந்த சமயம், சமையலறையில் இருந்து எட்டிப் பார்த்த திலோத்தமை, “அண்ணா போயிட்டாங்களா?” என்று கேட்டபடி வந்து தட்டுடன் அமர, இரு இளவரசிகளின் பேச்சுக்களும் அப்படியே நின்றது.
இருவருக்கும் இருவரின் விஷயங்களும் தெள்ளத் தெளிவாக தெரிந்திருந்த போதிலும், அவர்களின் தங்கையின் முன்பு எதுவும் அவர்களைப் பற்றி பேச முடியாது அமைதி காக்கும்படி ஆனது.
சாப்பிட்டு முடித்த உத்ரா, “ரொம்ப நல்லா இருந்துச்சு அத்தை எல்லாமே” இமைகளை மூடித் திறந்து சப்புக் கொட்டியபடி கூற, அவளிடம் வந்த நறுமுகை,
“உத்ரா என்னோட ப்ரசென்ட்” என்று நீட்ட, உண்மையில் அவள் நறுமுகையிடம் பரிசை எதிர்பார்க்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
“எனக்கா?” விட்டால் விழிகள் இரண்டும் கீழே விழுந்து உருண்டு ஓடிவிடுமோ எனும் அளவுக்கு வியப்பில் கண்களை விரித்தவள், அதனை கைகளால் திருப்பித் திருப்பி அழகு பார்த்தாள்.
“ம்ம்” என்றவள் விழிகளை வசீகரமாய் சிமிட்டிவிட்டுச் செல்ல, அவளையே பார்த்தபடி உத்ரா பரிசை பிரிக்க, அதில் இருந்ததோ ஃபோன் கவர். விக்ரம் வாங்கிக் கொடுத்த ஐ போனிற்கு ஏதுவான கவர். அவன் அவளுக்கு ஐ போன் வாங்கியிருந்தது தெரிந்தால் மட்டுமே நறுமுகையால் அதற்கு கவரை வாங்க முடியும். ஏனென்றால் அனைத்து போனிற்கும் அனைத்து கவரும் பொருந்தாதே.
‘அப்போ மாமா ஐ போன் வாங்குனது இவங்களுக்கு தெரிஞ்சிருக்கு?’ யோசித்தவளின் உள்ளம், ‘இருவரும் சேரும் நாள் தொலைவில் இல்லை’ என்று உணர, உதட்டில் குழுமியிருந்த புன்னகையுடன் சென்று கொண்டிருக்கும் நறுமுகையை இமை கொட்டாது அவள் பார்க்க,
உத்ராவை திரும்பிப் பார்த்தவள், ஒற்றை விழியை மட்டும் அடித்துவிட்டு முன்னே ஸ்டைலாக திரும்பி, ஹனி ப்ரவுன் நிறம் கொண்ட தன் இரு விழிகளையும் மறைக்க, வட்ட வடிவ ரேபான் கூலர்ஸை கெத்தாக அணிந்துவிட்டு வெளியே சென்று தனது வெண்மை நிற டெஸ்லாவில் ஏற, உத்ராவின் அலாதி மகிழ்ச்சி விண்ணைத் தொட்டது.
அவளருகே வந்த திலோத்தமையோ, “இதெல்லாம் நானும் பாத்தாச்சு.. நீ ஓவரா கனவு காண வேணா” என்றாள் அவளின் மகிழ்ச்சியை கீழே பிடித்து இழுத்தபடி.
“நீ வேணா பாரு.. கூடிய சீக்கிரம் சேந்திடுவாங்க” என்று நம்பிக்கையோடு கூறிய உத்ராவின் வார்த்தைகள், கடவுளை அடைய அவர் ஒரு திட்டம் தீட்ட, அபிமன்யுவின் திட்டம் வேறாய் இருக்க, விதி யாரும் அறியாத ஒன்றை வைக்க காத்திருந்தது.
******
கார் பார்க்கிங் வரை அதி வேகத்துடன் காரை ஓட்டிவந்த நறுமுகை கீறிச்சிடலுடன் அங்கிருந்த, செக்யூரிட்டி அதிரும் வகையில் நிறுத்திவிட்டு இறங்க, அப்போது தான் வந்தது அந்த சிவப்பு நிற வேங்கையும், தனது சிவப்பு நிற ரேன்ஞ் ரோவரில் சீறப் பாய்ந்து கொண்டு.
யார் என்று உணர்ந்தாலும், ஏறெடுத்தும் பார்க்காதவள், லிப்ட்டில் சென்று ஏற, காரை பார்க் செய்துவிட்டு வந்த விக்ரம் அவளுக்கு எதிரில் இருந்த லிப்ட்டிற்குள் ஏறினான்.
அவளை கொஞ்சம் கூட நிமிர்த்து பார்க்கவில்லை. அவனுடனே அவனின் பி.ஏவும் நுழைந்துகொள்ள, நறுமுகையின் வேக மூச்சுக்கள் சீற்றமாய் சுழன்று புயலாய் எதிர் லிப்ட்டிற்குள் நுழைய, இரு லிப்ட்டுக்களின் கதவுகளும் ஒரே நேரத்தில் மூடப்பட, ஒரு அங்குல இடைவெளியில் தன்னவளை அவன் பார்க்க, அவளோ தவறாது அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.
அவளின் பொசசிவ்நஸ்ஸில், உல்லாசமாக உள்ளுக்குள் பொங்கிய அருவி போல ஊற்றிய உவகையுடன், புன்னகையும் சேர்ந்துகொள்ள, ஸ்டைலாக நின்றவனை அவனின் அருகில் நின்றிருந்த தீஷா (பி.ஏ) பார்வையால் பருகிக் கொண்டிருந்தாள்.
அறிவும், ஆற்றலும், அழகும், லட்சணமும் பொருந்திய எந்த மனிதனையும் யாராலும் பார்வையால் கூட தவிர்த்திட முடியாதே!
அபிமன்யுவின் அறைக்குள் நுழைந்த நறுமுகை, அமைதியாய் வந்து அமர, இருவருமே எதுவும் பேசிக் கொள்ளவில்லை. இருவரின் மனதையுமே இருவரின் மனதை அளாதியாய் அசைத்திருந்த இருவர் ஆட்கொண்டு இருந்தனர்.
இருவரின் நிலையை கலைக்கவென்றே அபிமன்யுவின் பி.ஏ ஆரவ் உள்ளே வந்தான். வந்தவன் எதையோ கூற வர, லேப்டாப்பில் குடியிருந்த அபிமன்யுவின் விழிகள், அவனைப் பார்த்த எச்சரிக்கை தெறிக்கும் பார்வையில் அவன் நறுமுகையின் முன் வாய் திறக்கவில்லை.
நறுமுகை அதை கவனிக்கும் நிலையிலும் இல்லை!
“நறுமுகை.. நான் கொஞ்சம் அத்தையை பாக்க கிளம்பறேன். நீ அந்த டென்டருக்கு கோட்டேஷன் ரெடி பண்ணி வை” என்றவன் லேப்டாப்பை மூடி வைத்தபடி எழ, ஆரவ் அபிமன்யுவின் பின்னேயே ஓடினான்.
லிப்ட்டிற்குள் நுழைந்தவுடன் அபிமன்யு, “ம்ம்” என்று உத்தரவிட, 0
“ஸார் கன்பார்ம் தான் ஸார்.. மேம் கார்ல தான் விக்ரம் ஸார் ரொம்ப நேரம் பார்ன்ல இருந்திருக்காரு” அவன் கூற, அபிமன்யுவின் வதனம் கடுமையைத் தத்தெடுத்து இறுக்கம் வாய்ந்த பாறையாய் மாறியது.
மெய்யாகவே அவனுக்கு நீரஜாவிடம் பேசியாக வேண்டிய நிலை!
நறுமுகையின் வாழ்வை பற்றி இன்று அவன் முடிவெடுத்தே தீர வேண்டும்!
அன்று இருவருக்கும் நடந்த பிரச்சினையில் அபிமன்யுவை அடக்குவதற்குள் ஒட்டுமொத்த குடும்பமும் பட்ட பாடு கொஞ்சமும் நஞ்சமும் அல்ல. அதுவும் விக்ரம் கைகளைக் கட்டிக் கொண்டு இறுமாப்பாக அன்று இருந்ததையும், நறுமுகையின் கதறலையும் பார்த்தவனின் ஆங்காரமும், ஆத்திரமும் சேர, அபிமன்யு வெடித்து சகோதரனை தகர்க்க முயல, விக்ரமும் சளைக்காது அதிரடி அரசனாக ஆட்டிப் படைக்க, இடையில் இருவருக்கும் சிம்ம சொப்பனமாக இருந்து, அன்று அனைவரையும் அடக்கியது நீரஜா மட்டும் தான்.
அபிமன்யுவின் அழுத்தமான ஆக்ரோஷத்திலும், விக்ரமின் அடங்காத ஆத்திரத்திலும் நறுமுகையே எங்கே தன்னால் அடித்துக் கொள்வார்களோ என்று பயந்து அழுகையை மறைத்துதான் இருந்தாள்.
அன்று அபிமன்யு அமைதியாக சென்றதிற்கு ஒரே காரணம், நீரஜா மட்டுமே!
“அபி மறுபடியும் இந்த குடும்பத்துல ஒரு பிரச்சனை வேணாம். மொதல்ல அம்மானால வந்துச்சு.. இப்ப பொண்ணுனாலனு யாரும் பேச வேணாம்” மனதில் குடியிருந்த பன்மடங்கு பாரத்தை அன்று மறைத்துக் கொண்டு அப்போதும் நீரஜா கம்பீரமாக பேசியது அவனது மனக்கண்ணில் இன்றும் நின்றது.
அவன் தனது கருப்பு நிற ராட்சத ரேன்ஞ் ரோவரை அதிவேகத்துடன் செலுத்திக் கொண்டிருக்க, அவனுடன் அமர்ந்திருந்த ஆரவ்வோ ஒவ்வொரு நொடியும் தன் உயிரை நினைத்து கடவுளிடம் வேண்டியபடியே வந்து கொண்டிருந்தான்.
‘அய்யா என்னை எப்படியாவது காப்பாத்தீடு.. உனக்கு கெடா வெட்டி பொங்க வைக்கறேன்’ மானசீகமாக மனதுக்குள் வேண்ட அதையெல்லாம் அவர் செவி சாய்ப்பாரா என்ன?
அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தவன் நீரஜாவின் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகம் வந்தவுடனே வேகத்தை குறைத்திட, அப்போதுதான் ஆரவ்விற்கு மூச்சே வந்தது. மருத்துவமனை என்பதால் வேகத்தைக் குறைத்துக் கொண்டான். அதுவும் அவனின் அத்தை தன்னந்தனி மனுஷியாக உருவாக்கியது.
கண்ணாடிப் பாத்திரம் போல அவரின் ஒவ்வொரு விஷயமும் அபிமன்யுவிற்கு.
ஏற்கனவே அவன் வரப் போவதாக ஆரவ்வின் மூலம் செய்தி பறந்துவிட்டதால், அபிமன்யுவுக்காகவே காத்திருந்தார் நீரஜா.
உள்ளே வந்தவனிடம், “வா அபி” என்று புன்னகையுடன் வரவேற்க, அவருக்கு எதிரே அமர்ந்தவன், ஆரவ்வை அர்த்தமாய் திரும்பிப் பார்த்துவிட்டு பின் கதவை பார்க்க, அவன் வெளியே சென்றுவிட, நீரஜாவை பார்த்து புன்னகைத்தவனை அவர் புருவங்கள் சுருங்க, ஹனி ப்ரவுன் விழிகளில் வழிந்த குறும்புடன் அவரின் கரத்தில் வளர்ந்த அபிமன்யுவை பார்த்தார்.
“என்ன விஷயம் அபி? வொர்க் டைம்ல வரவே மாட்ட?” அவர் சிரிப்புடன் வினவ,
“சும்மாதான்” என்று தோள்களை இலேசாக குலுக்கியவனை அவரால் நம்ப முடியவில்லை.
காலை அலுவலகம் சென்றவுடன் அவனின் வேலை எப்படி இருக்கும் என்று அவருக்கு தெரியும். என்ன அவசர விஷயமாக இருந்து பேச வேண்டும் என்றாலும் மாலை வருபவன், இல்லை என்றால் அலைபேசியில் அழைத்து வேலையை முடித்துக் கொள்பவன், மணி பதினொன்று கூட ஆகாத நிலையில் வந்தால், அவர் யோசிக்கத் தானே செய்வார்.
அவர் அவனையே நம்பாது பார்க்க, நீரஜாவிற்கு அழைப்பு வர, எடுத்துப் பேசியவர், “சரி அனுப்புங்க” என்று ஃபோனை வைத்துவிட்டு, “என்ன சாப்பிடற அபி? ஜூஸ்?” என்று வினவ,
அவனோ, “நத்திங் அத்தை” என்று அவரிடம் வேறு சிலதை பேசிக் கொண்டிருக்க கதவைத் திறந்து,
“மே ஐ கம் இன் மேம்?” என்று உத்ரா தலையை மட்டும் உள்ளே நீட்ட, வந்திருப்பது யார் என்று தன்னவளின் குயில் குரலை வைத்து உணர்ந்தும், நீரஜாவின் முன் எதையும் காட்டாது அவன் ஃபோனை பார்த்துக் கொண்டே அமர்ந்திருக்க,
“ம்ம்” என்று அந்த மருத்துவமனையின் சேர்மன் என்கின்ற அதிகாரத்திற்கே உரிய குரலில், ‘வா’ என்பது போல தலையசைக்க, ஒரு ஃபைலை எடுத்து வந்தவளுக்கு, பின்னிருந்து பார்த்த போதே யார் அங்கு அமர்ந்திருப்பது என்று புத்தியில் அடிக்க, காரிகையவளின் மென் உடலில் மெல்லிய நடுக்கம் பரவி குடுகுடுவென ஓடியது.
ஃபைலை நீரஜாவிடம் நீட்டியவள், எதையோ சொல்ல வர எத்தனிக்க, ஃபைலை பார்த்தவாறே கரம் உயர்த்தி, ‘நிறுத்து’ என்பது போல சைகை செய்தவர் ஃபைலை முழுதாக பார்த்துவிட்டு,
“ஹீ இஸ் ஸ்டில் அன்கான்சியஸ் ரைட்? (He’s still unconscious right?)” என்று வினவ, “எஸ் மேம்” என்றாள் ஓர விழியால் அபிமன்யு தன்னை பார்க்கிறானோ என்று கள்ளத்தனத்துடன்.
அவனோ தலை நிமிரவே இல்லை. ஒரு கரத்திலுள்ள ஆள் காட்டி விரலை கன்னத்தில் கொடுத்து, கட்டை விரலை தாடையில் தாங்கி, மற்றொரு கரத்தில் இருந்த ஃபோனையே அலசிக் கொண்டிருந்தான்.
‘யாருனே தெரியாத மாதிரி உக்காந்திருக்கிறதை பாரு’ மனதுக்குள் வெகுண்டு வெடித்துச் சிதறியவளுக்கு, அவனின் மேல் உரிமை கொஞ்சம் கொஞ்சமாகவே அதிகரிப்பது போலத் தோன்றியது. அதை நினைத்தவுடனே அந்தச் சிட்டின் மனமோ சிறகடிக்கத் துவங்க,
“ஸோ?” என்றபடி கணீர்க் குரலுடன் நிமிர்ந்தார் நீரஜா.
அவரின் குரலில் தன்னிலை அடைந்தவள், “மேம் இந்த பேஷன்ட்..” அவள் தொடங்கும் முன்னே, ‘போதும்’ என்பது போல கரத்தை வைத்தவர்,
“நான் கேட்டது வேற” என்றவரின் பார்வை கண்டிப்புடன் அவளின் உடையை அளவெடுக்க,
அதில் அவர் என்ன கேட்க வருகிறார் என்பதை உணர்ந்தவள், “மேம் இன்னைக்கு என்னோட பர்த்டே” என்றாள் புன்னகை மாறாது. தனது நெற்றிப் பொட்டை ஒருமுறை அழுத்திவிட்டுக் கொண்டு நிமிர, அவரின் பார்வையில் இருந்த கடுமையை உணர்ந்த உத்ராவுக்கு மனம் சுணங்கிப் போய்விட்டது.
“இங்க பாருங்க உத்ரா.. இன்னிக்கு உங்களுக்கு என்ன நாளா வேணா இருக்கலாம்.. ஆனா இங்க சில ரூல்ஸ் இருக்கு.. டாக்டர்ஸ், நர்ஸஸ், அட்மினிஸ்ட்டேரிட்வ் வொர்க்கர்ஸ் எல்லாருமே இங்க அவங்கவங்க யூனிபார்ம்ல தான் வரணும்.. அது அவங்களுக்கு எவ்வளவு ஸ்பெஷலானா நாளா இருந்தாலும் சரி..” என்றவர் கடுமையுடன்,
“மொதல்ல போய் ஏப்ரானை (வைட் கோட்) போட்டுட்டு வாங்க” என்று திட்டி அனுப்ப,
“ஸாரி மேம்” என்று திரும்பியவளின் விழிகளில் அபிமன்யு சிரமப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு அமர்ந்திருப்பது புரிந்தது. அதரங்களை இலேசாக அவன் அழகாய் மடித்து கட்டுப்படுத்தி இருந்தாலும், அவனின் விழிகள் அவனின் கேலியை பிரதிபலித்துவிட்டது.
‘பர்த்டே அன்னைக்கு மானமே போச்சு’ என்று திட்டு வாங்கிய உணர்வில் சிணுங்கலுடன் மனதுக்குள் இருவரையுமே திட்டியவள், விடு விடுவென்று சென்று ஏப்ரானை அணிந்து கொண்டு வந்தாள்.
வந்தவளிடம், “இப்ப சொல்லுங்க” என்றார் நீரஜா.
“மேம் இப்ப வரைக்கும் அவரு அன்கான்சியஸ் தான். முகம் ஒரு பக்கம் முழுசா வீங்கியிருக்கு.. மானிட்டர் பண்ணிட்டு தான் இருக்கோம். பட் நோ இம்ப்ரூவ்மென்ட்ஸ்” என்றவளை நிமிர்ந்து பார்த்தவர்,
“நியூரோசர்ஜனை (Neurosurgeon) கன்சல்ட் பண்ணிடலாமா?” அவர் கேட்க,
“மேம் இஃப் யூ டோன்ட் மைன்ட்.. நான் ஒண்ணு சொல்லட்டா?” உத்ரா தயங்காது கேட்க,
“கோ அகெட் (Go ahead)” என்றார்.
“மேம் ஐ திங்க் அவருக்கு ஜைகோமேட்டிக் போன் (zygomatic bone) டேமேஜ் ஆகியிருக்கு.. அன்ட் ஆக்ஸிடென்ட் ஆனதுல நெர்வ் (nerve) இரண்டு பல்லுக்கு இடைல ப்ளாக் ஆகியிருக்குனு தோணுது.. பர்ஸ்ட் நாம அதை க்ளியர் பண்ணிட்டு மத்த சர்ஜரி பண்ணனும்.. ஐ திங்க் வீ ஷூட் கன்சல்ட் ஓரல் மேக்ஸிலோ பேசியல் சர்ஜன் (I think we should consult oral maxillofacial surgeon)” என்று தான் கூறுவது தவறோ என்ற தயக்கமும் யோசனையும் சிறிதும் இல்லாது, நீரஜாவிடம் கூறியவள், அவரின் பதிலுக்காக காத்திருக்க,
“இந்த மாதிரி கேஸ் பாத்திருக்கியா நீ?” என்று சாய்ந்து இருந்தபடி கேட்டார்.
“ஹம் எஸ் மேம். இந்த மாதிரி நிறைய கேஸ் பாத்திருக்கேன். சர்ஜரியும் அசிஸ்ட் பண்ணியிருக்கேன்” அவள் கூற,
“ஓகே. ஆக வேண்டிய ப்ரொசிஜரை (procedure) பாருங்க. கன்பார்ம்னா நான் எம்டிஎஸ் (MDS) படிச்ச சர்ஜனை வர சொல்றேன்” என்றவர் அவளிடம் ஃபைலை கொடுக்க, ‘ஒரு குட் சொன்னா என்னவாம்’ மனதிற்குள் கடுப்புடன் நினைத்தாலும் புன்னகைத்தபடி வெளியே வந்தவள்,
“அத்தைக்கு தப்பாத அண்ணன் மகன் , அண்ணன் மகனுக்கு தப்பாத அத்தை போல..” முணுமுணுத்தபடி அவள் வேலையை பார்க்க செல்ல, அபிமன்யுவை புன்னகையுடன் பார்த்த நீரஜா,
“இப்ப பேசலாம் அபி” என்றார்.
தனது இடது கை பெரு விரலால் தனது வலது புருவத்தை வருடினான் சித்தார்த் அபிமன்யு. முக்கியமான முடிவுகளின் போது, அல்லது இக்கட்டான நிலையின் போது அவனின் பழக்கம் அது.
அவனுக்கு இப்போது தான் நினைத்தது நடந்தாக வேண்டும் அல்லவா!
“அத்தை நறுமுகை மேரேஜ் பத்தி பேச வந்தேன்.. அவளுக்குன்னு?” அவன் தொடங்கும் முன் அவர்,
“பேசிட்டியா?” என்றார் கேள்வியாக. என்ன கேட்கிறார் என்று அவனுக்கு புரிந்தது.
“இல்ல அத்தை. நறுகிட்ட இன்னும் பேசல.. பட் நாம எப்படியும் பண்ணிதானே ஆகணும்” அவன் கூற, நீரஜா அனைத்தையும் தெளிவாக கேட்டவர்,
“விக்ரம்?” அவர் கேள்வியாக கேட்க, அந்த பெயரில் அவனின் மனமும் வதனமும் அடியோடு மென்மையை இழந்து கடினமுற, நாடி நரம்பெல்லாம் சினம் பொங்கிறது.
“அவன் எதுக்கு இப்ப?” அபிமன்யுவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் கடினமாய் உதிர, நீரஜாவிற்கு அபிமன்யுவிடம் இருக்கும் பிடிவாதமும், கோபமும், ஆங்காரமும், ஆணவமும் அச்சைத்தை விளைவித்தது.
கோபம் அறிவுள்ளவனை கூட புத்தி மலுங்கச் செய்துவிடும் அல்லவா!
அவனை மட்டுமல்லாது எதிரில் உள்ளவரையும் பாதிக்கும் அபாயம் உண்டு என்பதை அவரால் நன்கு உணர முடிந்தது.
அவர் சிந்தனையில் சஞ்சரிப்பதை உணர்ந்தவன், “இல்ல நீங்க என்ன பண்ணலாம்னு நினைக்கறீங்க அத்தை?” வினவ, நீரஜாவாலும் முடிவெடுக்க முடியவில்லை. அபிமன்யு கூறுவதும் ஒருவகையில் சரிதான் என்று அவரின் தாயுள்ளம் சிறு குழப்பத்தில் தத்தளிக்க, சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த எண்ணியது அபிமன்யுவின் மாஸ்டர் மைன்ட்.
“உங்க முடிவு என்ன அத்தை? நறுமுகையை மட்டும் நினைச்சு சொல்லுங்க” என்றான் அவருக்கு மகளின் வாழ்க்கையை பற்றிய கலக்கத்தை ஏற்படுத்தி.
அமைதியாய் அமர்ந்திருந்த நீரஜாவின் மனதில் தன் வாழ்க்கையில் நடந்த அனைத்தும் மனதில் ஓட, அவருக்கு தோன்றியது இரண்டே இரண்டு விஷயங்கள் தான். மகளை தன்னை போல தனியை விட இயலாது. அதேச மயம் அவளின் விருப்பமின்றியும் அவளை எங்கேயும் தள்ளவும் எண்ணவில்லை.
ஒரு முடிவை எடுத்தவராக, “நறுமுகைக்கு ஓகேன்னா நான் எதுவும் சொல்ல போறது இல்லை அபி.. எனக்கு எல்லாமே அவ தான்.. அவ சந்தோஷம் தான் என் சந்தோஷம்” என்று தன் சம்மத்தை தெரிவித்துவிட, அந்த பொக்கிஷமான தருணத்திற்கு தானே இந்த சாம்ராஜ்யத்தின் ஆட்ட நாயகன் காத்திருந்தது.
“நறு சம்மதிப்பா அத்தை” அழுத்தமாக கூறி அதே அழுத்தத்துடன் எழ, அவனையே பார்த்திருந்த நீரஜாவின் இதழ்கள் புன்னகையை சிந்த, அதில் மெய்யான சந்தோஷம் இருப்பதாக அபிமன்யுவுக்கு தோன்றவில்லை.
அவன் வெளியே செல்ல எத்தனித்த வேளை, “நல்ல வேளை அபி.. அத்தனை சங்கடம் வந்தும் எங்க அண்ணங்க இரண்டு பேரும் பிசுனஸை பிரிக்காம இருந்தது ரொம்ப நல்லது.. இல்லைனா நீங்க இரண்டு பேரும் போட்டி போட்டுட்டு..” என்று மேலே சொல்ல வந்தவருக்கே பயமாய் இருந்தது.
இருவரும் போட்டி போட்டுக் கொண்டு என்னவெல்லாம் செய்திருப்பார்களோ என்று மனதில் நினைத்தவருக்கே ஜீரணிக்க இயலவில்லை.
மனதில் இருக்கும் வஞ்சகம் சீற்றமாய் எழ, அதை தன் இதழுக்கிடையில் கொணர்ந்தவன் அனைத்து உணர்வுகளையும் கீற்றுப் புன்னகையாய் வெளியிட்டாலும், அவனின் மனதில் பல நெருப்புகள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தன.
“நீங்க என்னை வளர்த்தீங்க.. நான் நறுவை வளர்த்திருக்கேன்..” என்றவனின் அளவு கடந்த கோபம் எந்தவளவு என்றும், நறுமுகையின் மேல் உள்ள தூய்மையான அன்பு எத்தகையது என்றும் அவரால் உணர முடிந்தது. ஆனால், அபிமன்யுவும் விக்ரமும் இணைய மாட்டார்களா என்று தினமும் அவர்களின் பெற்றோர்களை விட ஏங்கிக் கொண்டிருப்பவர் நீரஜா தான்.
ஆனால், அது இந்த ஜென்மத்தில் நடக்கப் போவதாக அவருக்குத் தோன்றவில்லை.
அவரையே இரு விநாடிகள் பார்த்திருந்தவன், “ஐம் லீவிங் அத்தை (I’m leaving)” என்று அலுவலகம் வந்து சேர்ந்தவன், “நறு ஆல் செட்?” என்று வினவினான்.
“எஸ். ஆல் ரெடி” என்றவள் கோட்டேஷனைக் காட்ட, சரி பார்த்தவன், அவளையே மெயிலிலும் அனுப்ப வைத்துவிட்டு, “நறு! உன்கிட்ட பேசணும்” என்றவனின் முகமும் தொணியுமே சடுதியில் கடுமையாய் மாற, அவனைப் பார்த்தவளுக்கு அது என்ன விடயமாக இருக்கும் என்று புரிந்தது.
அபிமன்யு அவளிடம் கடுமையை காட்டினாலே அது விக்ரமின் விடயமாகத் தான் இருக்கும் என்பது அதி நிச்சயம் என்று அவள் அறிவாளே.
“மாமா” அவள் பதைபதைப்புடன் அவனை பார்க்க,
“நான் ஸ்ட்ரெயிட்டா கேக்கறேன்.. யூ ஸ்டில் லவ் விக்ரம்?” என்று நேரிடையாகவே கேட்டுவிட, அவனின் கேள்வியில் பூ மனம் படைத்தவள் தவித்துப் போக, வெகு விநாடிகள் வார்த்தைகள் வராது தொண்டை விருப்பிற்கும் வெறுப்பிற்கும் இடையே மேலும் கீழும் அசைந்தாட,
“மா.. மா..” என்றவளுக்கு வார்த்தகைள் வரவில்லை. மாமனின் சுழற்றியடுக்கும் பார்வையில் சிக்கிவிட்டவளுக்கு, பதில் சொல்லாமல் எழ முடியாது என்று தெரியும்.
அவளின் முகத்தில் ஆழப் பதிந்தவாறே தன் பார்வையை பதித்திருந்த அபிமன்யுவின் விழிகள் நறுமுகையின் தடுமாற்றத்தை பார்த்து இடுங்க, நறுமுகையின் உள் கரம் வியர்க்கத் துவங்குவது போல, இலேசாக ஈரப் பதமாக, தனது பாண்ட்டின் மீதே கைகளை மறைத்துத் தேய்ப்பது அவனின் விழிகளிலும் பட்டது.
அவளின் தடுமாற்றத்தையும், பயத்தையும் கண்டவன், “டெல் மீ (Tell me)” என்று அவளின் ஆன்மாவை ஊடுருவும் குரலில் வினவ, அவனின் துளைக்கும் பார்வையில விதிர்விதிர்த்துப் போனவள்,
“இல்ல மாமா” என்றாள் பட்டென்று. அவளுக்கு அவளின் ஈகோ பெரிதாக இருந்தது. மீண்டும் ஒருமுறை அவனின் பின் சென்று தன்மானத்தை இழக்க அவள் விரும்பவில்லை. அதனால் இல்லை என்று ஒற்றை வார்த்தையில் தன்னவனின் மேல் இருந்த கோபத்தில் சொல்லிவிட்டாள்.
அபிமன்யு எதற்காக கேட்கிறான் என்றுகூட அவள் சிந்திக்கவில்லை. தெரிந்திருந்தால் உண்மையை கூறியிருப்பாளோ?
ஒரு நிலையில்லாத புத்தி இருக்க, மனம் பிசைய, அபிமன்யுவை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளில் இருந்த சஞ்சலத்தை டக்கென்று மனதில் நிறுத்திக் கொண்டவன், “ஷ்யூர்?” என்று வினவினான்.
அடுத்தடுத்து வந்த அவனின் திடீர் கேள்வித் தாக்குதலில், அவளால் பதில் அளிக்க முடியவில்லை தான். ஆனாலும், காயம் பட்ட உள்ளம், காயம் கொடுத்தவனை நினைத்து, அன்றைய நிகழ்வின் தாக்கம் இன்றும் அழியாது இருக்க, அபிமன்யுவை பார்த்தவள், நடக்கவிருப்பது எதையும் அறியாது, “ஷ்யூர்” என்று வாயைவிட்டாள்.
மனதை இறுக்கிப் பிடித்துக் கொண்டு அவள் அதைக் கூறியிருந்தாலும், அவள் அடிவயிறு காரணமின்றி வெம்மையோடு கலங்குவதை அவளால் உணர முடிந்தது.
****
அன்று பின் மாலை தாண்டி இருவரும் வீட்டிற்கு வந்து சேர, அழகி டிவியில் மூழ்கியிருக்க, சிம்மவர்ம பூபதி சரித்திர புத்தகத்தில் ஆழ்ந்திருக்க, நீரஜாவும் அவர்களுக்கு சற்று முன் தான் வந்து இலேசான சோர்வுடன் அமர்ந்திருக்க, இமையரசி பூஜையறையில் இமைகளை மூடி அமர்ந்திருந்தார்.
உள்ளே வந்தவுடன் நறுமுகை அறைக்கு மேலே ஏறிச் செல்ல, நீரஜாவுடன் அமர்ந்த அபிமன்யு, அவரின் தோளில் உரிமையாய் கரத்தை போட, குரலை செருமிய சிம்மவர்ம பூபதி, இருவரையும் பார்க்க, “என் அத்தை என் உரிமை” என்றான்.
நீரஜாவை பார்த்தவன், “நறுமுகை கிட்ட பேசிட்டேன். எல்லாம் ஓகே தான் அத்தை” என்று கூற, அவர் அபிமன்யுவை சலாரென்று அதீத அதிர்ச்சியுடன் பார்க்க, அவனின் இதழ்களோ வன்மமான புன்னகையை உதிர்த்தது.
“அ..பி” என்ற நீரஜாவிற்கே அவன் சொன்னதில் வார்த்தைகள் மெதுவாய்த் தான் உதிர்ந்தது.
“என்ன?” சிம்மவர்ம பூபதி இருவரின் பேச்சையும் கவனித்தவராய் கேட்க,
தன்னுடைய நிதானம் எங்கும் சிதறாது அவரை அமைதியாக பார்த்தவன், “நறுமுகைக்கு மாப்பிள்ளை பாக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்” கூற,
“அபி என்ன பேசறே நீ?” அழகி மகன் கூறிய வார்த்தைகள் தாங்க இயலாது கூவியேவிட, மருமகளை பார்வையாலேயே அமைதியாக்கிய சிம்மவர்ம பூபதி, அபிமன்யுவை விட அமைதியாக அவனைப் பார்த்தவர்,
“நறுமுகை கிட்ட முதல் கேட்டியா அபி.. அவ சம்மதம் தான் முக்கியம்” என்று அவர் பேப்பரை மடித்து வைத்தபடி வினவ,
“நறுமுகைக்கு சம்மதம் தான்” என்று அபிமன்யு கூறியது தான் தாமதம் பூஜையறையில் கடவுளின் முன் அமர்ந்திருந்த இமையரசியின் மூடிய விழிகளில் இருந்து கரகரவென்று நீர்த் துளிகள் வழிந்தது.
படீரென்று ஷோபாவில் இருந்து எழுந்த சிம்மவர்ம பூபதி, “அபி! விக்ரம் உன் தம்பி.. அதை மறந்திடாத” என்ற குரலை உயர்த்த அந்த வார்த்தைகளில் அவனின் அடங்கியிருந்த கோபம், தூண்டிவிடப் பட்டது போல கிளர்ந்தெழ, கொதி கொதிக்கும் ராட்சஷ நிலையை அடைந்தவன் தன் இயல்பு மாறாது,
“எதையும் நான் மறக்கல.. யார் தடுக்க நினைச்சாலும் நறுமுகையோட கல்யாணம் நடக்கும்” அப்போதும் சர்வ சாதாரணமாக அமர்ந்து கொண்டு, கர்ஜனையுடன் கூறியவனை அனைவரும், உறைந்து போய் பார்த்திருக்க, நீரஜாவை பார்த்தார் சிம்மவர்ம பூபதி.
“நீரஜா என்ன பேச்சு இது.. விக்ரமும் இப்படியே இருக்கான்.. இது என் இரண்டு பேர பிள்ளைக வாழ்க்கையும் தான்.. இப்படி இருக்க இந்த மாதிரி நீங்க முடிவை எப்படி எடுக்கலாம்” என்றிட, அதற்கு மேல் அங்கு நிற்க பிடிக்காத அபிமன்யு விடுவிடுவென்று படிகளில் ஏற, பாதி படிகளுக்கு மேல் ஏறியவன் அவரைத் திரும்பி பார்த்து,
“இந்த முடிவை யார் மாத்த நினைச்சாலும், அதோட கான்ஸிக்வன்ஸ் (Consequence) பயங்கரமா இருக்கும்” என்று ரௌத்திரம் வதனத்தில் தெறித்து, அதன் அனல் அனைவரையும் தகிக்கும் வகையில் உறுமியவன் கடகடவென்று சென்றுவிட, பூஜையறையில் கண் மூடி அமர்ந்திருந்த இமையரசி விழிகளை திறக்க, அவரின் அழகிய இமைகளில் ஈரம் பரவி சிவந்திருக்க, ஒரு முடிவை எடுத்தவராய், பூஜையறையில் இருந்து எழுந்தவர், இறுக்கமாக வெளியே வர, அனைவரும் அவர் முகத்தையே பார்த்திருந்தனர்.
அவரோ யாரையும் பார்க்காது, இரண்டாவது மகனின் வீட்டிற்குச் செல்ல, அவர் எங்கு எதற்கு செல்கிறார் என்பதை உணர்ந்த நீரஜா, “அம்மா!” என்று அழைக்க, மகளை ஆங்காரம் தெறிக்க திரும்பிப் பார்த்தவர்,
“என்னை இன்னைக்கும் பேச விடாம பண்ண போறியா?” அவர் பயங்கர சினம் பொங்க காளி அவதாரம் எடுத்துக் கேட்க, நீரஜா மௌனமாய் நின்றுவிட, யாரின் கலக்கத்தையும் பொருட்படுத்தாதவர், சென்றுவிட்டார் இளைய மகன் வீட்டிற்கு.
மனதின் கனம் விழியில் சிவப்பாய் படர்ந்திருக்க, ஈர விழிகளோடு வீட்டிற்கு வந்த மாமியாரை பார்த்த கோதை, “என்னாச்சு அத்தை?” என்று பதற,
“விக்ரம் எங்க?” என்று கேட்டார் அவர்.
“வர்ற நேரம் தான் அத்தை.. என்னாச்சு?” அவர் மனம் வேகமாய் துடிக்கக் கேட்க, விக்ரமின் ரேன்ஞ் ரோவர் உறுமலுடன் உள்ளே நுழைந்தது.
காரை நிறுத்திவிட்டு உள்ளே வழக்கம் போல புன்னகையுடன் நுழைந்தவனை பார்த்த இமையரசி, அவன் அருகே செல்ல, இனிமையான புன்னகையை சிந்திக் கொண்டு வந்தவனின் புருவங்கள் அவனின் பாட்டியையும், அவரின் கசங்கிய வதனத்தையும், சிவந்திருந்த விழிகளையும் பார்த்து, முகம் சட்டென மாறிப் போக,
“என்னாச்சு?” அன்னையை கேட்டபடி இமையரசியின் அருகே வந்த விக்ரம் அவரின் கரத்தை ஆதரவாய் பிடித்துக் கொள்ள, பேரனின் முகத்தை அண்ணாந்து பார்த்தவர் அனைத்து விஷயங்களையும் கூற, விக்ரமின் பின்னேயே வந்த உத்ராவும் அனைத்தையும் கேட்டு, தன்னவன் எடுத்த முடிவில் கற்சிலையாகி நின்றுவிட்டாள்.
அனைத்தையும் கேட்ட விக்ரமின் கழுத்து நரம்புகள் புடைத்து எழ, ஆத்திரத்தின் நிலை உச்சகட்டத்தை எட்டித் தொட்டிருக்க, அங்கு செல்ல புயலென கிளம்பியவனிடம், “விக்ரம்! அபி உன் அண்ணன்” என்று கோதை கூற, வாழ்நாளில் பயம் என்பதையே அறியாத அஞ்சா நெஞ்சன் அன்னையை திரும்பித் தீ பார்வை பார்க்க, அனைவரும் நடுக்கித் தான் போய்விட்டனர்.
கொலைவெறி தாண்டவமாடிக் கொண்டிருந்தது, அவனின் வெறி கொண்ட விழிகளில்.
காதல் என்ற மென் உணர்வு அவளவனிடம் விரவியிருக்க, அவள் என்னவள் என்ற ஆணவம் உள்ளுக்குள் சுழற்றியடிக்கும் சுனாமியாய் பெரும் பேரழிவாய் எழ, “அவன் என் வைஃப். எங்க இரண்டு பேருக்கும் ஒன்றரை வருசத்துக்கு முன்னாடி கல்யாணமானது உங்களுக்கு எல்லாம் மறந்து போச்சா?” என்று ஆக்ரோஷம் சூழ, எரிமலையாய் உஷ்ணம் விரவ, அவன் கரத்தில் அணிந்திருந்த ரோடியமும் பல்லாடியமும் ஆன ப்ரேஸ்லெட்டில் இருந்த வேங்கையும் வெறி கொண்டு உறுமியது.
ஆம்!
அவள் மிஸஸ்.நறுமுகை விக்ரம் அபிநந்தன் ஆவாள்!