ஆட்டம்-21

ஆட்டம்-21

அன்று காலை ஐந்தரை மணிக்கு எழுந்த நறுமுகை, வேக வேகமாக முகம் கழுவி மற்ற வேலைகளையும் முடித்து, தன் அறையோடு இருந்த பால்கனி கதவினை ஆவலுடன் திறக்க, அங்கு அவளின் கதாநாயகனோ இன்று அவளுக்காக இருக்கவில்லை.

கனடாவிற்கு பிசினஸ் வேலையாக சென்றவன், இன்றுதான் வரப்போவதாக இமையரசி பேசிய நினைவு மங்கையவளுக்கு!

கீழ் அதரத்தை பிதுக்கி தன் ஏமாற்றத்தை உள்ளத்தில் வைத்து சிணுங்கலுடன் அலுத்தவள், அறைக்குள் செல்ல எத்தனிக்க, விக்ரமின் பால்கனியில் இருந்து கதவு திறக்கப்படும் சப்தம் கேட்ட விநாடி, கதவில் கை வைக்க போனவளின் இதழ்கள் புன்னகையில் தாரளமாய் விரிய, தென்றல் அவளைக் குளுமையாய்த் தீண்ட,

தன்னவனை பார்க்க ஆர்வமாய் திரும்பியவளை விக்ரமின் கைகளில் இருந்த வெளிநாட்டில் இருந்து வாங்கி வந்த மமியா லீஃப் க்ரிடோ (Mamiya leaf credo) கேமிரா கச்சிதமாக படம் பிடித்தது, அவனின் மனதைப் போலவே!

முட்டிவரை இருந்த ஐஸ்லான்ட் பாப்பி நிற (Iceland poppy) கையில்லாத இரவு உடையை அணிந்து, மேலே ஷ்ரக்கை அணிந்திருந்தாள்.

இளம்பிடியவளின் அடர்த்தி வாய்ந்த மிஞ்சிகம் (முடி) காற்றின் விளைவால், அவளின் வதனத்திலேயே விழுந்து தவழ, உதட்டில் தன்னவனை பார்த்துவிடும் வேகத்தில் புன்னகையும், விழிகளில் சிகை விழுந்ததினால் குடை இமைகள் மூடியும் என்று பொன் மானை அவனின் கேமிராவில் பதிந்திரருந்தாள்.

விழிகளில் இருந்த கேமிராவை இறக்கிப் பார்த்தவனின் கண்கள், புன்னகையுடன் தன்னவளின் அழகை ரசிக்க, அங்கே இருந்து ஏதோ எட்டிப் பார்த்தால் தெரிந்துவிடுமோ என்னும் அளவிற்கு பாதங்களை உயர்த்தி அவனவள் எட்ட, அவளை நிமிர்ந்து பார்த்தவனுக்கு அவளின் செயல் சிரிப்பை வரவழைக்க, கேமிராவை அவளிடம் திருப்பியவன் அவளிடம் புகைப்படத்தை காட்ட முயல, அவளுக்கோ அது ஏனோ தானோவென்று தான் தூரத்தில் தெரிந்தது.

இதழ்களை பிதுக்கி, இடமும் வலமும் தலையாட்டியவள், ‘தெரியவில்லை’ என்பது போலக் கூற, “சரி இங்க வா” என்று கண்ணடித்து வாயசைத்தவனை, முறைத்தவள்,

“பிச்சு” என்று அவனைப் போலவே வாயை அசைத்து சைகை செய்ய, அதையும் கேமிராவில் க்ளிக் செய்தவனின் பார்வையில் அத்தனை மயக்கம்.

அவளை நோக்கி ஆள்காட்டி விரலை நீட்டியவன், அவளின் நெற்றியில் துவங்கி கொஞ்சம் கொஞ்சமாய் விரலை கீழே இறக்கி, அவளை நாணம் கொள்ளச் செய்தவன், பார்வையிலேயே அவளை சிவக்க வைத்து, ‘சூப்பர்’ என்பதுபோல விரல்களை மடித்து கூற, சிவப்பு பெட்டூனியா மலரின் நிறத்தில் கன்னங்கள் மாறிப்போக, கலாபமாய் வதனம் ஜொலிக்க அறைக்குள் ஓடி மறைந்தாள், அவனின் நறுமுகை!

விக்ரம் படித்து முடித்து இந்தியா திரும்பிய தினம் தொட்டு நடக்கும் ஒன்று. முதன்முதலாக அவளை இங்கு பார்த்திருந்தான். அப்போது பள்ளிப் படிப்பில் இருந்த மொட்டு அவள். அப்போதே அவன் உள்ளத்தில் காதலின் உவமையாய், அது கொடுக்கும் எல்லையில்லா உவகையாய் பதிந்துவிட்டாள்.

அவள் பள்ளிப்படிப்பை முடிக்கும் வரை அவளறியாது தன்னவளை ரசித்துக் கொண்டிருந்தவனுக்கு அவள் கல்லூரி சேர்ந்த தினத்தில் இருந்தே, தினமும் காலையில் தரிசிக்கத் துவங்கிவிட்டான்.

அதுவும் மங்கையவளின் ஹனி ப்ரவுன் விழிகள் காலைப் பொழுதில் செங்கதிரவனின் ஒளியில் பட்டு, தேன் போன்று தேங்கி நின்று மின்னுவதை பார்க்க ஆடவணுக்குத் தெவிட்டுமா?

முதலில் அவன் பார்வையை ஒதுக்கினாள்!

அடுத்து அவளும் கள்ளமாய் பார்க்கத் துவங்கினாள்!

பார்வை புன்னகையாக மலர்ந்தது!

புன்னகை நாணமாக மாறித் துடித்தது!

நாணம் தாண்டி கண் பாஷைகள் அரங்கேறியது!

விழி பாஷைகள் காதல் சம்பாஷணைகளாய் இப்போது!

யாரையும் கல்லூரியில் ஏறெடுத்தும் பார்க்காது, ஏன் தன்னிடம் வழிந்து கொண்டு வரும் ஆண்களை மதிக்காது, எக்கச்சக்கமான திமிரோடு ஆண்களை பார்வையாலேயே தள்ளி நிறுத்தி, யாரின் தூண்டிலிலும் சிக்காது ஓடிக் கொண்டிருந்தவளை, தன் பார்வை எனும் மாய வலையில் அலுங்காது அசராது வீழ்த்தி இருந்தான் அவளின் விக்ரம்.

அவர்களுக்கான நேரம் எப்போதும் அந்த கதிரவன் உதிக்கும் அதிகாலையே!

அன்றும் வழக்கம் போல, அவனைப் பார்த்துவிட்ட உவகையில் குளியலறைக்குள் புகுந்தவளுக்கு அன்று தான் இறுதிப் பரீட்சை. குளித்து முடித்து, ஆரஞ்சு மிட்டாய் நிறத்திலான ஸ்லீவ்லெஸ் டாப்ஸும், த்ரீ போர்த் லைட் ப்ளூ ஜீன்ஸும் அணிந்து ப்ரீ ஹேரில் கீழே வந்தவள், சாப்பிட்டுவிட்டு அபிமன்யுவுடன் கிளம்பினாள்.

“மாமா! இன்னிக்கு லாஸ்ட் எக்ஸாம்.. ஸோ, ஈவ்னிங் ப்ரண்ட்ஸ் கூட போயிட்டு நானே கால் பண்றேன்” அவள் அபிமன்யுவிடன் கூற,

“ஹம்.. ஐ ஹேவ் எ மீட்டிங் நறு (I have a meeting naru).. நீ கால் பண்ணு நான் நம்ம ட்ரைவரை அனுப்பறேன்” அபிமன்யு கூறிவிட, தலையை ஆட்டிவிட்டாள்.

அன்று மதியம் பரீட்சை முடிந்து தோழிகளுடன் கல்லூரியை விட்டு வெளியே வந்தவள், அவர்களுடன் கஃபேவிற்குள் நுழைந்து ஆர்டர் கொடுத்துவிட்டு அரட்டையில் மூழ்க, அவளின் அலைபேசிக்கு குறுஞ்செய்தி வந்தது.

“வேர் ஆர் யூ? (Where are you?)” என்று வந்திருக்க, நம்பரை வைத்தே யாரென்று கண்டுகொண்டாள். அன்னையின் அலைபேசியில் பலமுறை இந்த நம்பரை கண்டிருக்கிறாளே!

“ப்ரென்ச் கஃபே (French cafe)” பதிலை அவள் அனுப்பி வைக்க, அங்கிருந்து திரும்பி பதிலில்லை. அவன் இங்கு வந்து கொண்டிருக்கிறான் என்று புரிந்தது. அந்தளவு அவனை உணர்ந்திருந்தாள் அவள்.

அனைவரும் மகிழ்ச்சியாக இருந்த சமயம் அங்கு வந்த ஒருவன், “ஏய் உனக்கு என்ன பெரிய அழகின்னு நினைப்பா?” என்று கேட்க, நறுமுகைக்கு, ‘யாருடா இவன் தலைவலி’ என்றிருந்தது.

அவள் கல்லூரியில் படிக்கும் ஒரு பிரபல நடிகருடைய மகன் அவன். பல நாட்களாக நறுமுகையின் பின்னால் சுற்றிக் கொண்டிருப்பவன். அவள் இவனையெல்லாம் பார்வையால் கூட கவனித்தது கிடையாது. நண்பர்களிடம் கல்லூரி முடிவதற்குள் அவளை மடக்கி காட்டுகிறேன் என்று பெட் கட்டியவனிற்கு அவள் கிடைக்காமல் போன ஆத்திரம்.

அதுவும் ஒவ்வொரு முறையும் தன்னை அலட்சியம் செய்பவளை நினைக்க நினைக்க, பெண்ணவளை அடையத் துடித்தது அவனின் கேவலமான மனம். ஹீரோயிசம் காட்ட நினைத்தானோ என்னவோ!

அவனுக்கு நறுமுகை பெரிய இடம் என்று தெரியும். ஆனால், யார் எவர் என்றுதான் தெரியாது. நறுமுகையும் இதுவரை யாரிடமும் சொன்னது கிடையாது. இத்தனை தினங்களில் அபிமன்யு அவளை சில முறைகள் தனது ரேன்ஞ் ரோவரில் வந்து இறக்கி விட்டிருந்தாலும், கருப்பு ரின்ட் அடித்திருந்த காருக்குள் யாரும் அவனைக் கண்டதில்லை.

கண்டிருந்தால் நெருங்கிக் கூட இருக்க மாட்டான்.

அதனால் விளைந்த தைரியும் இந்த மந்தையை சேர்ந்த ஆட்டிற்கு.

“ஏய் என்ன கேட்டுக்கிட்டே இருக்கேன்.. நீ பெரிய்ய இவ மாதிரி உக்காந்து லுக் விட்டுட்டு இருக்க?” என்றவன் சட்டென நறுமுகையின் கை பற்றி எழுப்ப, சுற்றியிருந்த தோழிகள் அனைவரும் அதிர்ந்து எழுந்துவிட்டனர்.

அப்போதும் நறுமுகை ஒரு துளி சத்தம் போடவில்லை. அவளின் பார்வையில் அத்தனை திமிரும், என்ன செய்துவிடுவாய் என்ற தெனாவெட்டும் தெறித்துக் கொண்டிருத்தது.

நறுமுகையின் மணிக்கட்டை பிடித்திருந்தவனின் விழிகள், அவளின் ஸ்லீவ்லெஸ் டாப்பின் வெளியே தெரிந்த, அவளின் வெண் தந்தக் கரங்கையும் தோளையும் வெறிக்க, அடுத்து அவனின் எச்சில் கைகள் தூய காரிகையவளின் தோளைத் தொட போக,

இருவருக்கும் நடுவே வந்து நின்ற விக்ரம் அங்கிருந்த சர்வரிடம், “ஒன் ஐஸ்ட் அமெரிக்கானோ (One iced Americano)” என்று படு கூலாக கூறியவன், நறுமுகையின் கரத்தை பற்றியிருந்தவனின் கரத்தை பற்ற, விக்ரம் வன்மையாக கொடுத்த அழுத்தத்தில், அவன் புன்னகைக்கு பின் தெரிந்த ரௌத்திரத்தில், எதிரில் இருந்தவனின் தசைகள் பிரண்டு, எலும்புகள் வலியெடுக்க, முதலில் சமாளித்தவனுக்கு வலி கரத்தில் இருந்து தோள் வரை சுறுசுறவென்று எகிற, நறுமுகையின் கரத்தை அவனின் கரங்கள் அவனறியாது விட்டது.

வலியில் கத்த தொடங்கியவனிடம், “ஷ்ஷ்” என்று ஆத்திரம் தெறிக்க அடக்கிய விக்ரம், அடுத்து கொடுத்த அழுத்தத்தில் அவனின் மணிக்கட்டில் இருந்த ஒரு எலும்பு முறிந்தேவிட, உள்ளே ஓடிவந்த அவனின் நண்பர்கள், விக்ரமின் தோற்றத்தை பார்த்தே நடுங்கிப் போக, எதிரில் இருந்தவர்களின் பயத்தில், தன்னவனை கர்வம் மின்ன பார்த்தவளுக்கு அத்தனை பெருமையாய் இருந்தது.

அவனை பிடித்து கொண்டு அவனின் நண்பர்கள் சென்றுவிட, நறுமுகையை பார்த்து கண் சிமிட்டியவனை, பார்த்து புன்னகைத்தவள், தன் தோழிகளுக்கு விக்ரமை அறிமுகம் செய்து வைத்தாள்.

“இவங்க விக்ரம் மாமா” அனைவருக்கும் அறிமுகம் செய்ய,

“ஓஹ் மாமாஆஆவாஆஆஆஅஅ?” இழுத்த தோழிகளை அஞ்சனமிட்ட அழகிய விழிகளால் மிரட்டியவளின், மேகத்தை ஒத்த மென்மையான கன்னங்களில், வெட்கப் பூக்கள் பூத்துக் குலுங்கத் தவறவில்லை.

தன்னவளை ரசித்தவனின் விழிகள், அவளை காதலுடன் தழுவ, அவனின் அதரங்களில் மென்னகை நழுவ, தன்னவளை விழுங்கியபடியே தன்னுடைய அமெரிக்கானோவை குடித்து முடித்தான் அந்த காதல் இராஜ்யத்தின் உச்சத்தில் அமர்ந்திருந்தவன்.

அனைவரும் கிளம்ப, நறுமுகையின் கரத்தைப் பற்றியவன், அவளை வெளியே அழைத்து வர, அங்கு அவன் புதிதாய் வாங்கியிருந்த மூன்று கோடி மதிப்புள்ள ரத்த சிவப்பு நிற ஆஸ்டன் மார்டின் வால்கன் (Aston Martin Vulcan) நின்றிருக்க, தன் செப்பு வாயைப் பிளந்தாள் விக்ரமின் காதலி.

“இது எப்ப?” நறுமுகை அவனிடம் வினவ,

“தோணுச்சு வாங்கிட்டேன்” என்றவனை பொய்யாய் முறைத்தவளின் இதழ்களின் மேல் அவனின் பார்வை, தின்றுவிடும் அளவிற்கு பதிய, கீழ் இதழை மென்மையாய் கடித்து நாணத்தை கட்டுப்படுத்தியவள்,

“போகலாம்” என்றிட, இருவரும் காரில் ஏறிய அடுத்த நொடி ரோட்டில் இருந்த அனைத்து கார்களையும் ஓரம் கட்டி அதிர வைத்துக் கொண்டு விக்ரம் காரை முன்னே செலுத்த,

“அதென்ன நீங்க எப்ப பாரு ரெட் கலர்தான் சூஸ் பண்றீங்க.. உங்கள மாதிரி தான் அபி மாமாவும் எப்பவுமே ப்ளாக்..” என்றவள் ஞாபகம் வந்தவளாக, “அட மாமாகிட்ட கிளம்புனதை சொல்லவே மறந்துட்டேன்” என்றவள் அபிமன்யுவுக்கு அழைத்து,

“மாமா! நான் கிளம்பிட்டேன். என் பிரண்ட் தான் ட்ராப் பண்றா.. வழில ஒரு சின்ன வேலை முடிச்சிட்டு வந்திடறேன்” என்று அபிமன்யுவுக்கு சந்தேகம் வராதவாறு சரமாரியாக பொய்களாய் அடித்து தாக்கியவள், போனை வைத்துவிட்டு விக்ரமை பார்த்து புன்னகைத்தாள்.

‘காதல் வந்தால் கள்ளமும் சேர்ந்து வந்துவிடுமோ?’

“ஏன் என்கூட தான் வர்றேன்னு சொல்ல வேண்டியது தானே?” விக்ரம் வேண்டுமென்றே அவளை சீண்ட,

“வேணவே வேணாம்..” சிரிப்புடன் கூறியவள், மியூஸிக்கை ஆன் செய்ய,

‘அழகிய அசுரா அழகிய அசுரா அத்துமீற ஆசையில்லையா
கனவில் வந்து எந்தன் விரல்கள் கிச்சு கிச்சு மூட்டவில்லையா
வட்ட வட்டமாக வானவில்லை வெட்டி
குட்டி குட்டி மாலை ஆக்குவேன்
புரவி ஏறி நீயும் என்னை அள்ளி கொண்டால்
மூச்சு முட்ட முட்ட சூட்டுவேன்
கூடுவிட்டு கூடு பாயும் வித்தை கற்று உன்னை அடைவேன்’

என்ற அனிதா சந்திரசேகரின் குரலிலும், அது கூறிய வரிகளின் அர்த்தத்திலும், நறுமுகை பாடலை ஹம் செய்தபடியே வர, அவளுக்கு தோன்ற வேண்டியதும் சேர்ந்து அவளவனுக்கு தோன்றிவிட்டதோ என்னவோ.

காரை ஒரு கரத்தால் செலுத்தியபடியே மறுகரத்தால் அவளின் கரத்தைப் பற்றியவன், அதன் மென்மையை உணர்ந்தான். இப்படி ஒரு மென்மையை யாரிடமும் அவன் உணர்ந்ததும் இல்லை, அதை உணர்ந்து கொள்ள முயற்சித்ததும் இல்லை.

குழந்தையின் ஸ்பரிசத்தை போன்று இருந்த அவளின் கைகளை மேலும் அழுத்திப் பிடித்துக் கொண்டான்.

அவன் கரத்தினுள் இருந்த தன் கரத்தை பார்த்தவள், புன்னகைத்தபடியே தன்னவனை பார்க்க அவனோ, “உனக்கு சின்ன வயசுல என்னை பிடிக்காதுல?” என்று ரோட்டில் விழிகளை பதித்தபடியே கேட்க,

அவனையே பார்த்திருந்தவள் அவனின் கரத்தில் இருந்த தன் கரத்தை மேலும் இறுக்கமாய் பிடித்து, “இப்ப இல்ல” என்றிட, தன்னவளின் பதிலில் பனி கட்டிய நீரை நெஞ்சில் வீசியது போல சில்லென்று உணர்ந்தவன், அவளின் கரத்தை பிடித்து தன் இதழ்களுக்கு அருகே கொண்டு செல்ல, பெண்ணிற்கே உரிய உணர்வு உந்த வெடுக்கென்று கைகளை உருவிக் கொண்டாள் நீரஜாவின் மகள்.

அவ்வளவு தான்!

அவனை பற்றி சொல்லவா வேண்டும்!

ஜிவுஜிவென்று கோபம் பெருக, முகம் இரும்பாய் இறுகிவிட்டது!

அவளோ ஆயிரம் முறை கூப்பிட்டுவிட்டாள். அவன் அசைந்தான் இல்லை.

காரின் கதவிலியே சாய்ந்து அவனை புன்னகையுடன் பார்த்துக் கொண்டே அவனின் கோபத்தை ரசித்தபடி வந்தவள், “கோபமா மாமாக்கு?” என்று ஹஸ்கி குரலில் வினவ, அவளின் குரல் நாபியில் இருந்து உள்ளம் வரை எதையோ செய்தாலும், அவன் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை.

“மாமா?” அவள் அழைக்க மீண்டும் மௌனம்.

அப்படியே புன்னகையுடன் அமர்ந்திருந்தவள், கரத்தை அவனிடம் நீட்ட, “ஒண்ணும் வேணா போடி” என்றான்.

“இப்ப மாமா கிஸ் குடுக்கலைனா கையை கண்ணு முன்னாடி நீட்டுவேன்” என்றவளை அவன் துச்சமாய் அசட்டை செய்ய, மெய்யாகவே அவன் விழிகளின் முன் கையை வைத்து ரோட்டை மறைத்து விட்டாள் அந்த வீம்புக்காரி.

“ஏய்!!” என்று அதி வேகத்தில் இருந்த காரை சடன் ப்ரேக்கை போட்டு நிறுத்தியவன், சற்று மிரண்டு தான் போனான். நல்லவேளையாக முன்னேயும் பின்னேயும் எதுவும் வரவில்லை.

அவள் கரத்தை தட்டி விட்டவன், “லூசு” என்று திட்ட, உதட்டை குவித்து அவனுக்கு சைகையில் முத்தமிட்டவள் மீண்டும் தன் கரத்தை நீட்ட, அவனுக்கே சிரிப்பு வந்துவிட்டது.

“அடங்க மாட்டியாடி?” என்றவன் அவளின் கரத்தை பிடித்து, அவளின் மென்மையான உள்ளங்கையில் தன் மீசை முடி கூட குத்திவிடாத அளவில் அழகிய முதல் முத்தத்தை பதிக்க, என்னதான் அவன் மெதுவே கொடுத்தாலும், இலேசாக உரசிய அவனின் மீசை ரோமங்கள் கொடுத்த உணர்ச்சி பிழம்புகள் காரிகையவளின் உடல் முழுதும் வேகத்துடன் பாய, அவளின் இமைகள் தாமாக மூடிக் கொண்டது.

தன் ஒற்றை முத்தத்தில் தன்னவளின் உணர்வுகளின் ஆழம் புரிந்தவன், அவளைத் தன் அருகில் இழுத்து, இதழுக்குச் செல்ல, இதழ் வரை சென்றவன், மீண்டும் பின்னே நகர்ந்து அவளை பார்க்க, அவளோ அவனின் இரு கரங்களுக்குள் தன் கன்னங்கள் அடங்கியபடி, அவனை பார்த்து இரு புருவங்களை உயர்த்தி தைரியமாய் சிரிக்க, “பயமா இல்லையா டி?” என்றான் அவளின் நெற்றியோடு நெற்றி முட்டி.

“மாமா குடுக்க மாட்டான்னு தெரியும்” அவனின் கன்னத்தை தொட்டுப் பார்த்தபடியே நம்பிக்கை மிதமிஞ்சி வழிய கூறிய, தன்னவளின் வார்த்தைகளில், அவனின் காதல் சுமந்த நெஞ்சம் மெய் சிலிர்க்க, அவளின் கன்னத்தில் அழுத்தமாய் முத்திரை பதித்து, அவளின் கற்பிற்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து விலகினான்.

அதன் பின் அங்கு இருவரின் மௌனமும், காரினுள் ஓடிய பாடல்கள் மட்டுமே ஆட்சி செய்தது!

அதன் பின் இரண்டு மாதங்கள் வேகமாய் கடந்திருக்க, நறுமுகை அபிமன்யுவோடு அலுவலகத்திற்கு அவ்வப்போது சென்று வருவாள். இதனிடையில் ஒருநாள் இமையரசி அனைவரும் இரவு அமர்ந்திருந்த வேளையில், கணவரிடம் ஏதோ சைகை காட்ட, அதை கவனிக்காது இருக்குமா அங்கிருந்த ஜாம்பவானின் கழுகை ஒத்த கூர் விழிகள்.

அபிமன்யுவின் பார்வை தன் மேல் விழுந்துவிட்டதை கண்டுகொண்ட இமையரசி, ‘ஐயோ’ என்று உள்ளுக்குள் அதிர்ந்தபடி கப்சிப் என்று ஆகிவிட, சிம்மவர்ம பூபதி பேரனை பார்க்க, அபிமன்யு வாய் திறக்கவில்லை என்றாலும், அவரே சொல்லட்டும் என்று அமைதியாய் இருந்தான்.

“அபி! உன் கல்யாணம் விஷயமா தான் பேசலாம்னு இருக்கோம்..” என்றிட, தலையை இலேசாக சரித்து அவரை பார்வையால் துளைத்தவன், “பொண்ணு பாத்தாச்சா?” என்றான் எள்ளல் தெறிக்க. யார் அவன் விஷயங்களில் முடிவெடுத்தாலும் அவனுக்கு அறவே பிடிக்காது என்று தெரிந்திருந்தாலும், சிம்மவர்ம பூபதி வீட்டில் அனைவரின் நச்சரிப்பு தாங்காமல் தான் கேட்டார்.

பேரனின் கேள்வியில் மனையாளை பார்த்து முறைத்தவர் மீண்டும் அபிமன்யுவை பார்த்து, “நம்ம நறுமுகை தான்” என்று கூற, நறுமுகை கையில் வைத்துக் குடித்துக் கொண்டிருந்த கண்ணாடி டம்ளர் கீழே விழுந்து சிதற, வாயில் இருந்த தண்ணீரும் நன்றாக புரையேறிவிட்டது.

அவளோ அதிர்ச்சி தாளாமல் அபிமன்யு என்ன கூறப் போகிறானோ என்று நெஞ்சில் நடுக்கத்துடன், அச்சமும் இணைந்து கொண்டு பதட்டத்துடன் அவனின் பதிலுக்காக காத்திருக்க, “நான் என்னைக்குமே நறுவை அப்படி பாத்ததே இல்லை” என்று விக்ரமின் காதலியின் உள்ளத்தில் உவகையை ஊறச் செய்தான்.

அதில் விழிகளை மூடி, ‘உப்’ என்று உதடுகளை குவித்து அத்தனை நேரம் இழுத்து வைத்திருந்த மூச்சினை வெளியிட்டு, தன் காதலனை நினைத்து மனதுக்குள் சிலிர்த்தவளின் வதனத்தில், அவள் உள்ளத்தில் தோன்றிய அனைத்தும் கண்ணாடியாய் அபிமன்யுவுக்கு காட்ட, சட்டென்று நீரஜாவை பார்த்தவன்,

“ஆனா, நறுவுக்கு நாம அலையன்ஸ் பாத்திடலாம் அத்தை” என்றிட, உச்சகட்ட அதிர்ச்சியை தொட்ட விக்ரமின் உள்ளம் கவர்ந்தவள், வெளிறிப் போன வதனத்துடன் அனைவரையும் பார்க்க அவளின் முகத்தை பார்த்த அனைவருக்கும் ஏதோ ஒன்று புரிய,

அவளையே பார்த்திருந்த அபிமன்யு, “ஹம், சொல்லு நறு.. ஹூ இஸ் ஹீ (Who is he?)” என்று கேட்டவனின் குரலில் தெறித்த தொணி பெண்ணளின் அடி நெஞ்சம் வரை சென்று பாதிக்க, நீரஜாவோ கலக்கத்துடன் மகளையே பார்த்திருக்க, மற்றவர்களுக்கு விட்டால் நெஞ்சு வெடித்துவிடுமோ என்னும் அளவிற்கு இருந்தது இதயத் துடிப்புகள்.

அனைவரும் தன்னையே பார்ப்பதையும், அபிமன்யு கைகளை கட்டிக் கொண்டு கால் மேல் காலிட்டு அமர்ந்தபடி அவளின் பதிலுக்காக காத்திருப்பதையும் உணர்ந்து, “மாமா” என்றபடி மேல் உதட்டின் மேல் வியர்வை பூக்கள் பூக்க, அச்சத்துடன் அபிமன்யுவை நிமிர்ந்து பார்த்தவளின் பன்னீர் இதழ்கள் அதீத பயத்தில் காய்ந்து போனது.

அபிமன்யு அவளை ஒரு உணர்ச்சியும் இன்றி பார்த்திருந்ததே அவளுக்கு ஏகப்பட்ட பயத்தை எக்கச்சக்கமாக வாறிக் கொடுத்தது.

“நறு மா..” அழகி பெண்ணவளின் பயத்தைக் கண்டு அவளருகே வர எத்தனிக்க, மகனின் எரிமலையாய் திகுதிகுவென்று அனலைக் கக்கிய பார்வையில் காலை கட்டிப் போட்டபடி நின்றுவிட்டார் அபிமன்யுவின் அன்னை.

அனைவரின் விழிகளையும் ஒரு முறை சந்தித்தவள், “மாமா! நான் விக்ரம் மாமாவை கல்யாணம் பண்ணிக்கறேன்” என்று தொண்டையில் வார்த்தைகள் சிக்கித் தவித்தாலும், கோர்வையாய் காதல் கொஞ்சம் கொடுத்த தைரியத்தில் விஷயத்தை போட்டு உடைக்க, இரு விநாடியில் எழுந்த அபிமன்யு,

“உன்கிட்ட பேசணும் நறு” என்று கீழே இருந்த தனியறைக்கு அவளை அழைத்துச் சென்றவன், அரைமணி நேரம் கழித்து வெளியே வந்து, சிம்மவர்ம பூபதியிடமும், அரிமா பூபதியிடமும், “சித்தப்பாகிட்ட பேசிட்டு.. சீக்கிரம் கல்யாணத்தை பிக்ஸ் பண்ணுங்க” என்றிட,

இமையரசி, “உனக்கு முடிக்காம எப்படி விக்ரமுக்கு பண்ணுவோம் அபி” என்று வருத்தத்துடன் கேட்க,

“காலம் மாறிடுச்சு பாட்டி.. அன்ட் எனக்கு இப்ப கல்யாண மூடெல்லாம் இல்ல” என்றவன் மேலே அறைக்குச் சென்றுவிட, செல்லும் போது நீரஜாவை பார்த்து புன்னகைத்தவனின் புன்னகையிலேயே நீரஜாவுக்கு புரிந்து போனது, அபிமன்யுவிற்கு முழு மனதுடன் இதில் விருப்பமில்லை என்று. நறுமுகைக்காக மட்டுமே தலையாட்டி இருக்கிறான் என்று.

அதற்காக அவர் விக்ரமையும் விட்டுக் கொடுக்க மாட்டார். அவனின் பாசத்தையும் அவர் அறிவார். அபிமன்யுவுக்கு நீரஜாவின் மீது அதீத பொசசிவ்நஸ் என்பதால் தான், நீரஜாவின் மனதிற்காக விக்ரம் கொஞ்சம் தள்ளியே நிற்கிறான் என்பதையும் அவர் அறிவார்.

‘தன் உணர்வுகளுக்கே மதிப்பளிப்பவன், தன் மகளுக்கு அளிக்க மாட்டானா?’ என்ற எண்ணம் அவருள் வேறாய் ஊன்ற, அறையை விட்டு வெளியே வந்த மகளை கண்டு புன்னகைத்தவரை ஓடி வந்து அணைத்துக் கொண்டாள், விக்ரமின் வருங்கால மனைவி.

அனைவரும் அவளைக் கொஞ்ச, இமையரசிக்கு உத்ராவை நினைத்து குட்டி வருத்தம். ஆனால், அதுவும் நறுமுகையில் வதனத்தில் இருந்த மகிழ்ச்சியில் பறந்தோட, திருமண ஏற்பாடுகள் விடுவிடுவென்று அரங்கேறத் துவங்கியது.

***

நீரஜாவின் ஒற்றை ராஜகுமாரி, அன்று அதிகாலை இலை பச்சை நிறத்தில், தூய தங்கத்தினால் சரிகைகள் பிண்ணிய மங்கள வடிவங்கள் கொண்ட காஞ்சி பட்டில், அதற்கு ஏற்ற சிவுப்பு நிற ப்ளவுஸில், பின்னே மணமகனும், மணமகளும் மணக்கோலத்தில் ஒன்றாய் இருப்பது போன்று தைத்து அணிந்திருக்க, ஏற்கனவே அஜாந்தா ஓவியங்களின் அழகு பெற்றவளை இன்று காதலும், ஒப்பணைகளும் மெருகேற்றியிருக்க சொல்லவா வேண்டும்!

ஹனி ப்ரவுன் கருவிழிகள் கொண்ட மான் வடிவ விழிகள் இரண்டிலும் அஞ்சனம் தீட்டப்பட்டிருக்க, இதழில் உதட்டுச் சாயம் தன்னவனுக்கு பிடித்த சிவப்பு நிறத்தில் இட்டிருந்தவள், பொன் சிலையாய், மின்னும் தங்க ரதமாய் மணமேடைக்கு வர, அவளின் அளப்பரிய அழகில் மெய் மயங்கி நின்றனர் பலர்.

மணமேடைக்கு வந்தமர்ந்தவளின் பார்வை நாணத்தையும் மீறி, தன்னவனை கர்வமாய் பார்த்து வைத்தது.

தன்னவனின் மனைவியாகப் போகிறாள் இன்று. அதுவும் பெரியோர்களின் ஆசியோடு, அபிமன்யுவின் சம்மதத்தோடு, அன்னையின் நிம்மதியான உள்ளத்தோடு.

இதழ்களில் அரும்பிய மகிழ்ச்சியோடு, பூரிப்பும் பூசிக்கொள்ள தன்னருகில் மனம் முழுதும் காதலை சுமந்துகொண்டு, இன்னும் சில நொடிகளில் தன் பாதியாகப் போகும் தன் பொக்கிஷத்தை கண்ட விக்ரமின் கம்பீரமும், திமர் கலந்த ஆண்மையும் அங்கிருந்த அனைவரையும் நொடிக்குள் இழுத்து, உள் வாங்கிக் கொண்டிருக்க, அவனின் மனமோ கர்ம சிரத்தையுடன் சித்திர மேனியாளை வலம் வந்து கொண்டிருந்தது.

“கெட்டிமேளம் கெட்டிமேளம்” அங்கிருந்த புரோகிதர் அந்த பிரம்மாண்டமான மண்டபத்தில் நிறைந்திருந்த அனைவரின் செவிகளிலும் எட்டும் அளவிற்கு, மைக்கில் மந்திரத்தை உச்சரிக்க, உலகில் உள்ள அனைத்து கடவுள்களையும் மனதார வணங்கி, விக்ரமின் கரத்தில் மங்கள நாணை கொடுத்தனர் சிம்மவர்ம பூபதி-இமையரசி தம்பதியினர்.

மங்கள வாத்தியங்கள் யாவும் செவிப்பறையை கிழித்துக் கொண்டு முழங்க, மணக்க மணக்க மஞ்சளில் கலந்திருந்த அரிசியும் ரோஜா இதழ்களும் மணமக்களின் மேல் அட்சதையாய் பல ஆசிர்வாதங்களுடன் விழ, சுற்றியிருந்தோர் சிலரின் விழிகளில் ஆனந்த விழி நீர்கள் பெருக, அத்தனை நகைகளையும் தாண்டி தன்னவளின் சங்குக் கழுத்தை மேலும் பேரழகாய் கட்டப் போகும் நாணை, மூன்று முடிச்சிட்டு அழகாய் கட்டி முடித்து, அவளைத் தன் சரி பாதியாக்கி, அவளுடன் தன் வாழ்க்கையை இணைத்தான் விக்ரம் அபிநந்தன்.

தன்னவனின் கரத்தால் வாங்கிய தாலியை குனிந்து பார்த்தவளின் இதழ்கள் தாராளமாய் பல் வரிசை தெரிய அழகாய் சிரித்துக் கொள்ள, இனி அவனவள் என்ற நினைப்பே அவளுக்கு சிலிர்ப்பைக் கொடுத்தது.

அடுத்தடுத்து நடந்த ஒவ்வொரு சடங்குகளும் நன்றாக அமைந்து முடிய, அன்றைய இரவும் எவருக்கும் காத்திடாது அழகாய் சிவக்கத் துவங்கியது.

மாம்பழ நிறத்தில் மாங்கா பச்சை கரையிட்ட பட்டுப் புடவையில், தாங்கத் தாரகையாக நறுமுகை நிற்க, அவளின் தலையில் வந்து மல்லிகை சரத்தை சூடிய கோதை, “ரொம்ப அழகா இருக்க நறுமுகை” என்று அவளுக்கு கையாலேயே திருஷ்டி கழித்து முடிக்க,

பெரியோர்களிடம் ஆசி வாங்கியவளின் விழிகள் அன்னையை தேட, கைகளை கட்டிக் கொண்டு மகளை தூரத்தில் இருந்து ரசித்துக் கொண்டிருந்தவர், அவளை ஆசிர்வதித்து அனுப்பிவிட்டு வீட்டிற்கு வர, அபிமன்யு ஓய்வாக ஷோபாவில் சாய்ந்தபடி தொலைக்காட்சியில் மூழ்கியிருந்தான்.

“தூங்கலையா அபி?” என்றபடி அவனின் நெற்றியை தொட்டவரை பார்த்து புன்னகைத்தவன்,

“தூக்கம் வரல அத்தை.. அங்க எல்லாம் ஓகே வா?” என்று கேட்க, “எல்லாம் ஓகே அபி.. ஆனா, நீ வரலைன்னு தான் எல்லாருக்கும் வருத்தம்” என்று கூற, அவனிடம் அதற்கு பதிலில்லை.

மண்டபத்தில் அனைத்து சடங்குகளுக்கும் இருந்தவன், மண்டபத்தில் இருந்து கிளம்பிய பின், விக்ரமின் வீட்டிற்கு வரவில்லை. அவன் திருமணத்திற்கு எதுவும் சொல்லாமல் தலையாட்டி நின்றதே கடவுள் கொடுத்த வரம் என்று நினைத்தவர்களும் அவனை வற்புறுத்தவில்லை.

****

விக்ரமின் அறை வரை நறுமுகையை விட்ட பெண்கள், தங்களுக்குள் பேசியபடி சிரிப்பும் கேலியுமாக திரும்பிவிட, நாணத்தில் துடித்த இதழ்களை அடக்கியவள், கணவனின் அறைக்குள் முதன்முறையாக காலை வைத்தாள்.

அவளோ வெண்மை நிறத்து பிரியக்காரி! அவனோ சிவப்பு நிற பிரியக்காரன்!

அறை முழுவதும் சிவப்பு நிறமே ஆட்சி செய்ய, ஆங்காங்கே முதலிரவுக்காக போடப்பட்டிருந்த மஞ்சள் நிறத்தில் ஒளிர்ந்த சின்ன சின்ன லைட்ஸும், அள்ளிப் போடப்பட்டிருந்த ரோஜா இதழ்களின் நறுமணமும், ஏசிக் காற்றும் புதுப் பெண்ணின் உடலையும் உள்ளத்தையும் வெகுவாய் மயக்க,

தன்னவன் தன்னைப் பார்ப்பதை கூட உணராது அவனின் அறையில் விழிகளை சுழற்றிக் கொண்டிருந்தவளின் அழகில், தாபங்கள் தீமூட்டி விடப்பட்டது போல ஆனது அந்த சாணக்கிய ஏகாதிபதிக்கு.

கரத்தில் இருந்த பால் அடங்கிய சிறு வெள்ளி குவளையை அங்கிருந்த மேஜையில் வைத்தவள் திரும்ப எத்தனிக்க, திரும்பும் முன்னே தனக்கு பின்னே வெகு அருகில் நின்ற கணவனை இடித்தவளுக்கு, நாணம் மீறிப் போனதில், அவனைத் திரும்பிப் பார்க்கும் சக்தியே இல்லாது போக,

கணவனின் மேனி தன் மேனியோடு பட்டும் படாதவாறு உரசும்படி இருப்பதை உணர்ந்து கொண்டவளின் இமைகள் தாமாக மூட, அவனின் உஷ்ண மூச்சுக்காற்று, அவளின் பின்னங் கழுத்தில் மோதி, கணவனின் வேட்கையை உணர்த்த, ஒரு கட்டத்திற்கு மேல் கூச்சம் பாய, அவனிடமிருந்து விலகியவள், கன்னங்கள் இரண்டும் தாமரை மலர் போன்று நிறம் மாறியிருக்க, தங்கத் சிலையாய் நின்றிருந்தவளின் வெட்கம் அவனை மென்மேலும் இழுத்தது.

“என்னடி பேசிட்டே இருப்ப? இப்ப தள்ளி போற?” என்று வார்த்தையில் சீண்டிய விக்ரமின் கரம் மனையாளின் கரத்தை பிடித்து இழுக்க, அவனின் நெஞ்சோடு நெஞ்சம் மோதி நின்று கணவனின் சித்தத்தை கலங்கடித்தவள், அவனை பார்க்க இயலாது, அவனின் நெஞ்சில் முகம் புதைத்துக் கொள்ள, சட்டென்று வந்த கருப்பு நிற ரேன்ஞ் ரோவரின் உறுமலில் இருவரும் பிரிந்தனர்.

படபடக்கும் இதயத்தோடு நிற்கும் தன்னவளை பார்த்து குறும்பாய் புன்னகைத்தவன், “ஐ தின்க் அபிமன்யுவோட ரேன்ஞ் ரோவர்” என்றான். அபிமன்யு அப்போது தான் தன்னுடைய கருப்பு நிற ராட்சஷனை உள்ளே நிறுத்த எடுத்திருந்தான்.

அதில் கணவனை வியப்பாய் பார்த்தவள், “பரவாயில்லையே.. இதெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க” என்றாள் புன்னகையுடன்.

அதற்கு பதிலுக்கு புன்னகையை மட்டும் வெளியிட்டவன், தனது கேமிராவை எடுத்து மனையாளை ஒரு படம்பிடிக்க, உதட்டை குவித்து அவனுக்கு காற்றிலேயே சூடாக முத்தத்தைக் கொடுத்தவளை மோகத்துடன் மேய்ந்தவன், “ஹே நாளைக்கு மீட்டிங் வேற இருக்குடி.. நைட் நிறைய வேலையும் இருக்குஉஉ.. நீதான் எழுப்பணும் எவ்வளவு லேட் ஆனாலும்” என்றான் அழுத்தமாக இரு பொருள்பட கூறி.

அதில் செம்பருத்தி மொட்டாய் சிவந்தவள், “எனக்கு ரெஸ்ட் தான்.. நீங்கதான் போகணும்” என்றாள் சிரிப்பை அடக்கிக் கொண்டு.

“எது ரெஸ்டா? மேடம் நீங்களும் தான் வரணும்” விக்ரம் கேமிராவை மூடி வைத்துவிட்டு அவளைப் பார்த்து கண்ணடிக்க,

“நான் எப்படி வர முடியும்.. நான் அபி மாமா கூட இல்ல சைன் பண்ணுவேன் எப்பவும்?” என்று புரியாது யோசித்தவளின் அருகே வந்தவன்,

“அதெல்லாம் நேத்து வரைக்கும்.. காலைல இருந்து இல்லடி.. இனி என் கூட தான்” என்று இலகுவாய் விக்ரம் கூறிக் கொண்டிருக்க,

“மாமாகிட்ட பேசிட்டீங்களா?” என்று கேட்ட நறுமுகையில் கேள்வியில் அவனின் ஈகோ தட்டப்பட, சிறுக சிறுக ஆடவணின் கோபம் புது மனையாளின் மேல் எழும்பிக் கொண்டிருந்தாலும், அனைத்தையும் அடக்கி உள்ளே தன்னவளுக்காக ஒடுக்கியவன்,

“நான் எதுக்கு அவன்கிட்ட கேக்கணும்.. நீ என் வைஃப்” என்றான். முகத்தில் எவ்வளவு முயன்றும் காட்டாது இருந்த போதிலும், அவனின் கோபம் குரலில் வெளிப்பட்டுவிட, கணவனிடம் இருந்து விலகிய நறுமுகை,

“சரி நான் சொல்லிக்கறேன் மாமாகிட்ட” கூறி ஒரு விநாடி கூட ஆகியிருக்காது, விக்ரமின் பொறுமை காற்றின் வேகத்தை விட, அசூர வேகத்தில் விண்ணை அடைய,

“இப்ப எதுக்கு அவனுக்கு இவ்வளவு இம்ப்பார்டன்ஸ் தர்ற நீ?” என்று குரலில் வெடித்து சிதறினான்.

தான் இவ்வளவு சொல்லியும், மனைவி அதிலேயே நிற்பது அவனுக்கு பிடிக்கவில்லை. எரிச்சலாக வந்தது. அவன் கேட்டது ஓரளவு நியாயமான விஷயமாக இருந்தாலும், அவன் சொன்ன விதம் தவறு தான். சொன்ன நேரமும் தவறு தான். அவனை விட வயதில் அவள் சிறு பெண் தான். அதுவும் அபிமன்யுவின் கரங்களிலேயே வளர்ந்தவள் அவள். அதுவும் இன்றி இப்போது அபிமன்யுவோடு அவளுக்கு நிறைய ப்ராஜெக்ட் வேலைகள் இருந்தது.

திருமணத்திற்கு பிறகு அபிமன்யு தருவதாக கூறியிருந்தான். அதுவும் அவள் தனியாக பார்க்கிறாளா என்று சோதிக்க. அதை அவளிடமும் சொல்லித்தான் இருந்தான். இதை விக்ரமிடம் கேட்டாலும் அவன் தந்திருப்பான்.

அல்லது அவளாவது அவனின் உரிமை உணர்வு புரிந்து அதிலேயே நிற்காமல் இருந்திருக்க வேண்டும். ஒரு விநாடி இருவரில் யாராவது ஒருவர் யோசித்திருந்தால், இருவரின் சம்பாஷணைகளும் காரசாரமாக சென்றிருக்காது.

அதுவும் நறுமுகைக்கு கோபம் கணவன் கத்தியதில் எகிறிவிட, “இப்ப நான் ஏன் அபி மாமாக்கு இம்ப்பார்டன்ஸ் தர்ற கூடாது” என்று எதிர்க் கேள்வி கேட்டாள்.

மனைவியின் பதிலில் அவனின் உள்ளம் நெருப்பில் போட்ட இரும்பை போன்று கோபத்தில் பளபளக்க, “ஸ்டாப் டெல்லிங் ஹிஸ் நேம் (Stop telling his name).. எரிச்சலா இருக்கு” என்று சீற,

“அமைதியா பேசுங்க” என்றாள் அவன் கத்துவதை உணர்ந்து.

மெய்யாகவே அவன் இப்படி கத்துபவன் கிடையாது. இன்று ஏனோ தன் கரத்தால் மங்கள நாணை வாங்கிய மனைவி தன் சொல்வதை கேட்காதது அவனுக்கு ஆத்திரத்தை மூட்டிக் கொண்டிருந்தது.

அவளின் பேச்சில் அவளைத் திரும்பிப் பார்த்து பார்வையாலேயே அவளின் மேல் அனலை வாரி இறைத்தவன், “நறு! லிசன் மீ (Listen me). உனக்கு இப்ப என ப்ராப்ளம் இதுல.. நீ என் வைஃப். என் கூட இருக்கணும்னு நினைச்சேன். நானே எல்லாம் கத்து தர்றனும்னு நினைச்சேன்..

நீ சும்மா சும்மா மூச்சுக்கு முண்ணூறு தடவை அவன் பேரை சொல்ற.. எனக்கு அவனை பிடிக்காது.. அவன்கூட பிசுனஸ்ல இருக்கிறதே தாத்தாவோட கம்பல்ஷன்ல தான்.. இல்லைனா எப்பவோ..” என்றவனுக்கு அப்போது தான் என்ன பேசிக் கொண்டிருக்கிறோம் என்று புரிந்தது.

பேச்சை அங்கேயே கத்தரித்தவன், நறுமுகையை பார்க்க அவளோ இதழ்கள் அதிர்ச்சியில் விரிந்திருந்தும் பேச முடியாது நின்றிருந்தாள்.

“இல்லைனா எப்பவோ?” அவள் விழிகளில் நீர் ரேகை உருவாகக் கேட்க, அவளின் கணவன் பதில் அளிக்கவில்லை.

“சொல்லுங்க.. இல்லைனா சொத்தை பிரிக்கிறது தான் உங்க ப்ளான் இல்லையா?” என்று இளக்காரத் தொணியில் கேட்க, அதில் விக்ரமின் ஈகோ அளவிற்கதிகமாக தூண்டப்பட, அவனுக்கு அது மட்டுமே பெரிதாய் பட்டது.

எதிரில் நிற்பவள் தன் மனைவி. அதுவும் தன் காதலை முழுதாய் சுமந்து கொண்டு தன்னை நம்பி, இன்று தன் கரங்களால் தாலி வாங்கிக் கொண்டு வந்த மனைவி என்பதெல்லாம் மறந்து போனது.

“ஆமா என்ன இப்ப? எப்பவுமே போட்டிதான்.. அவனை ஜெயிக்கணும் எனக்கு.. பிசினஸ் தனியா இருந்திருந்தா தெரிஞ்சிருக்கும் யாரு..” அவன் முடிப்பதற்குள் வெகுண்டு எழுந்த நறுமுகையின் உள்ளம்,

“இரண்டு பேருல யாரு அசிங்கமா அடிச்சிக்கிட்டு தோத்திருப்பீங்கனு” என்றாள் பற்களுக்கு இடையில் வார்த்தைகளை தூக்கியபடி.

இருவருக்கும் இடையே பிரச்சினை இருக்கும் என்று தெரிந்தவளுக்கு, இந்தளவு வன்மம் கொதித்துக் கொண்டிருக்கும் என்று தெரியவில்லை. இருவருமே அவளுக்கு முக்கியம்தான்.

இப்போது அவள் பேசியது கூட இருவரையும் வைத்து தான். சிம்மவர்ம பூபதி-இமையரசியின் இரு கண்கள் பேரன்கள் இருவரும். அதை நறுமுகை நன்கு அறிந்ததினால் தான் அவளால் விக்ரம் பேசியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆனால், விக்ரம் நினைத்ததோ மனைவி தன்னைத் தான் சொல்கிறாள் என்று.

அவளின் அருகே சென்று அவளின் தோளை அழுத்திப் பிடித்தவன், “யாருடி தோப்பாங்க.. ஹீ வில் லூஸ் (he will lose).. அவனை விட எனக்கு” என்று கரத்தை நெற்றிக்கு அருகே திமிராக வைத்தவன், “அதிகம்” என்றான் அவனின் சாணக்கிய புத்தியை சொல்லிக் காட்டி.

இத்தனை ஈகோவா இவருக்குள்ளும் என்று தவித்த நறுமுகை, “உங்க இரண்டு பேருக்குள்ள என்னதான் பிரச்சினை?” என்று கேட்டேவிட்டாள். கிட்டத்தட்ட குரலை உயர்த்தி இருந்தாள்.

“தெரியல.. சின்ன வயசுல மார்க் மாதிரி ஆகிடுச்சு..” என்றவன் நறுமுகையை பார்த்து, “நீ இதுல பாசப்பயிர் வளக்காத” என்று விழிகளாலேயே இந்த விஷயத்தில் மனைவியை தள்ளி நிறுத்தி எச்சரித்தான்.

திருமணமான அன்றே கணவன் இவ்வாறு பேசுவது, கோடி ஆசைகளை சுமந்து கொண்டு முதலிரவு அறைக்குள் வந்த புதுப் பெண்ணின் இதயத்தை சுக்குநாறாக்க, அவளின் விழிகள் கலங்கியது.

“நீங்கதான் மாமாவை இப்படி எல்லாம் சொல்றீங்க.. உங்களை கல்யாணம் பண்றேன்னு நான் சொன்னப்ப மாமா ஒரு வார்த்தை சொல்லல” என்றவளிடம் நக்கல் பார்வையை வீசியவன்,

“வேற வழி இல்ல.. என்னை மீறி அவனால எதுவும் பண்ண முடியாது” என்று கூற,

“அப்படின்னு யார் சொன்னா?” என்றவளின் கேள்வியில் அவள் கணவனின் காதல் நெஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக வஞ்சகம் சூழந்து கொண்டிருக்க, சீற்றமாய் மாறிக் கொண்டிருக்கும் அவனது ஆங்காரத்தை அவள் அறியவில்லை.

“மாமா முடியாதுன்னு சொல்லியிருந்தா.. கண்டிப்பா அவரு கன்வின்ஸ் ஆகற வரைக்கும் நான் வெயிட் பண்ணியிருப்பேன்.. உங்கனாலயும் எதுவும் பண்ணியிருக்க முடியாது” என்று அவள், ‘முடியாது’ என்பதை கரத்தை அசைத்துக் கூற,

“வாட்? கம் அகைன்?” கேட்ட விக்ரமின் ஆக்ரோஷத்தை அடைந்த கோபம் ஒவ்வொரு மூலையிலும் தெறிக்க, அவனின் கோபத்திலும் அவன் தன்னை நோக்கி விழிகள் சிவக்க வருவதிலும், நறுமுகையின் பாதங்கள் பின்னே நகர்ந்தது.

நறுமுகை மிரண்டு போய் வாய் திறக்காது இருக்க, “கம் அகைன்?” என்றவனின் வார்த்தையும், குரலும், அதன் தொணியும் அவளுக்கு அச்சத்தைக் கொடுக்க, அவள் வாய் திறக்கவில்லை.

“உங்கள் மாதிரி மாமா உங்களை இவ்வளவு வென்ஜென்ஸா பாக்கல” நறுமுகை கூற அதில் சத்தமாய் வாய்விட்டு சிரித்த விக்ரமின் செயல் பெண்ணவளுக்கு கிலியையே கொடுத்தது. அபிமன்யுவிடம் கூட அவள் இவ்வளவு பயந்தது இல்லை. அவன் இவளிடம் இவ்வாறு நடந்து கொண்டதும் இல்லை.

“நீ பாத்தியா டி.. நானாவது மனசுல வச்சுட்டு எல்லாருக்காகவும் அமைதியா இருக்கேன். அவன் பிசினஸ் வர்றதுக்கு முன்னாடியே தனியா பண்றேன்னு தாத்தாகிட்ட கேட்டிருக்கான்.. ஆனா, அதுல அத்தையோட (நீரஜா) ஷேரும் வர்றதுனால தான் அவன் அமைதியா இருக்க ஒரே காரணம். அவனோட முகம் தெரியாது உனக்கு” என்று ஆள்காட்டி விரலை தன் முகத்திற்கு முன் நீட்டி பேசும் கணவனை நறுமுகையின் விழிகளில் தோன்றிய கண்ணீர் படலம் மறைத்தது.

‘தனக்கு மிகவும் பிடித்த இருவருக்குள் இப்படி ஒரு பகையா?’

‘தாத்தா மட்டும் இல்லையென்றால் என்னவாகி இருக்கும்?’

‘தனித்தனியாக இருந்திருந்தால் என்னென்ன செய்திருப்பார்கள்?’

‘பகை இருவரையுமே அழித்திருக்காது?’

ஒரு முடிவை எடுத்தவளாக, “நான் ஆபிஸுக்கே இனி வரல.. நீங்களே எதுவா இருந்தாலும் பாத்துக்கங்க” என்றவளுக்கு அன்று தோன்றியிருந்த பூரிப்பெல்லாம் வடிந்திருக்க, அப்போது தான் இரு இரவுகள் சரியாக உறங்காததால் அசதியும் மேனிக்கு தெரிந்தது.

தூங்கலாம் என்று போனவளின் கரத்தைப் பிடித்த விக்ரம் இன்று அவளை விடுவதாய் இல்லை. “அது எப்படிடி நீ இவ்வளவு பேசுன அப்புறம் நான் உன்னை விடுவேன்..” என்று அவள் நெற்றியோடு நெற்றி முட்டியவன்,

“நீ ஆபிஸ் என்கூட வர்ற.. என்னோட பெர்சனல் செக்கரெட்டரியா” என்று அழுத்தமாகக் கூறியவனின் வார்த்தைகளில் அவளின் ஈகோ வீறு கொண்டு எழ, அவனிடம் இருந்து விலகியவள்,

“அப்படியெல்லாம் என்னோட ஸ்டான்டர்ட் இழந்து உங்களோட என்னால வர முடியாது.. அப்படி பாத்தா அம்மாவோட ஷேர்ஸ் தாத்தாவை வச்சு நானும் வாங்கலாம்” என்றவளை அவன் ஒரு மாதிரி பார்வை பார்த்ததும், அவனின் விழிகள் எதையோ எடுத்தெறிந்ததையும் உணர்ந்தவளுக்கு, உள்ளம் பயத்தில் அலறத் துவங்க,

“இப்ப நீங்க பாத்ததுக்கு என்ன அர்த்தம்?” என்றவள் கிட்டத்தட்ட கத்தினாள்.

விழிகள் ஈரமாகத் துவங்கியது!

நெஞ்சில் நீர் வற்றத் துவங்கியது!

வயிற்றில் சூடாய் ஏதோ சுரந்தது!

பயம்!

அவனின் பார்வை சட்டென அதை பிரதிபலித்துவிட்டாலும், அதில் தன்னவளின் வதனத்தில் கொப்பளித்த உணர்ச்சிகளை கண்டவனின் முகம் மாறிவிட, அவளிடம், “போய் ஷேர்ஸ் வாங்கிறதுனா வாங்கிக்க” என்று விட்டேற்றியாக பதில் கூறினான்.

அவனின் முன் சென்று நின்றவள், “பேச்சை மாத்தாம சொல்லுங்க.. எதுக்கு இப்ப என்னை அப்படி.. அதாவது ரொம்ப… அப்படி பாத்தீங்க?” என்றவளின் தொண்டை குழிகள் அதுவாக மட்டும் இருக்கக் கூடாது என்று கடவுளிடம் வேண்ட, அவளைக் கடந்து செல்ல முயன்றவனின் கரத்தை இரும்பாய் அவளின் விரல்கள் சுற்றிக் கொண்டது.

“இப்ப சொல்ல முடியுமா? இல்ல நான் எங்க வீட்டுக்கு கிளம்புட்டா? என்னால தாத்தாகிட்ட இப்பவே பேச முடியும்” அவள் விழிகளை மட்டும் உயர்த்தி கணவனை மிரட்ட, அவளின் செய்கையில், அவனுக்கு அத்தனை ஆங்காரம் ஆணவத்துடன், ஆத்திரத்துடனும் எழ,

“ஏய் அது என்ன உன் வீடாடி? இல்ல இதுதான் உனக்கு வழிவழியா வந்த ஷேர்ஸா?” என்று அடக்க நினைத்தும் கேட்டேவிட்டான். வார்த்தைகளை விட்டுவிட்டான்.

எந்தவொரு விஷயம் இத்தனை நாளாய் அவளை பாதிக்காமல் அனைவரும் அவளை வளர்த்து வந்தார்களோ, அந்த விஷயத்தாலேயே அவளை தன் நஞ்சு கொண்ட வார்த்தைகளால் உயிருடன் கொன்றுவிட்டான்.

அதுவும் அவள் கணவன்!

தாலியின் ஈரம் கூட இன்னும் முழுதாய் காயவில்லை!

அதற்குள் இப்படியொரு வார்த்தைகள்!

சொல்லாமல் சொல்லிவிட்டான் அவளை அனாதை என்று!

தன்னவனின் வாயாலேயே அதைக் கேட்டவளின் நிலை விக்கித்துப் போனதாய் இருந்தது. சர்வமும் உள்ளுக்குள் ஆடிப் போயிருக்க, விழிகளில் இருந்து ஆறாய் நீர் வழியத் துவங்க, கணவனையே இமைக்காமல் பார்த்திருந்தாள்.

கண்ணீர் நின்ற பாடில்லை!

கணவனின் நாவு ஆண்ட இராஜ்யம் அவளை உயிருடன் வதைத்திருக்க, அமைதியாய் நின்றிருந்தவளின் மூச்சுக்காற்றுகள் கேவலாய் உருமாற, தன் நிலையை முதலில் இருந்து எண்ணிப் பார்த்தவள் இறுதியில் சத்தமாக கதறிவிட்டாள்.

மனையாளின் அழுகையும், கண்ணீரும், கேவல் கதறலாய் உருமாறிய போது வந்த அந்த, ‘ஒரு சத்தம்’ அவனின் ஆன்மாவை ஒரு விநாடி ஆட்டிப் படைத்திருக்க, அப்போதும் அவளை பார்த்துக் கொண்டுதான் நின்றிருந்தான். அவளுக்கோ அவன் கல்லாய் நின்றிருப்பது இன்னும் ஆத்திரத்தை கிளப்ப, அவனின் கேமிராவை எடுத்தவள் தன் கோபத்தை முழுதும், அதன் மீது காட்டினாள்.

சுவற்றில் அடித்து உடைத்து எறிந்துவிட்டாள். அவளால் இயலாமையில் அதை மட்டும்தான் செய்ய முடிந்தது.

அடுத்து அவனை ஏறெடுத்தும் பார்க்காதவள், விடுவிடுவென்று கதவினைத் திறந்து கொண்டு வெளியே செல்ல, அப்போதுதான் கோதை மாமியாருடன் ஏதோ பேசிக் கொண்டிருக்க, மாடிப் படிகளில் சத்தம் வருவதை உணர்ந்தவர்கள் மேலே பார்த்து அதிர்ச்சியில் நடுங்கிப் போய்விட்டனர்.

கீழே வந்தவளிடம் இமையரசி, “நறு எங்கடா போற?” என்று தடுக்க முயல, அறையில் இருந்து வெளியே வந்த விக்ரம் இதையெல்லாம் கைகளை கட்டியபடி பார்த்துக் கொண்டிருக்க,

“விக்ரம்! நறு ஏன் அழுகறா?” கோதை வினவ, அதியரன் பூபதியும் அங்கு வந்துவிட்டார்.

எதுவும் பேசாது அழுத்தமாய் விக்ரம் நிற்க, “நான் போறேன்.. என்னை விடுங்க” என்ற நறுமுகை அழுதபடியே வீட்டை நோக்கி நடக்க, இரவு நேரத்தில், அதுவும் புதிதாய் திருமணமான அந்த வீட்டின் இளவரசி வருவதை கண்ட காவலாளிகள் கூட அதிர்ச்சியில் கதவைத் திறந்து விட, தொலைக்காட்சியில் மூழ்கியிருந்த அபிமன்யு, வந்து கொண்டிருக்கும் நறுமுகையையும், அவளின் வதனத்தையும் பார்த்து திகைத்து தான் போனான்.

சற்று நேரத்திற்கு முன் சிரித்த முகத்துடன், காதல் கொண்டவனை கை பிடித்த பூரிப்புடன் பார்த்தவளை, இப்போது இதழ்கள் அழுகையில் துடிக்க வீட்டிற்கு வந்தால்?

அபிமன்யுவை பார்த்தவுடன், மீண்டும் அழுகை பீறிட்டு அருவியாய் கொட்ட, “மாமா” என்று கத்தியபடி அவனிடம் சென்று தஞ்சமடைந்தவள், அடிபட்ட பறவையாய் வலியில் கதற, அபிமன்யுவிற்கு ஒன்றும் புரியவில்லை என்றுதான் கூற வேண்டும்.

விக்ரமை அவனால் சந்தேகிக்க முடியவில்லை. திருமண நிச்சயமான பின்பு அவன் நறுமுகையை வெளியே அழைத்துச் சென்றது, அவளுக்கு பரிசுகள் ஆசையாக வாங்கிக் குவித்தது, முக்கியமாக அவனின் காதல் பார்வை அனைத்தையும் பார்த்தவனால் முதலில் அவனை சந்தேகிக்க முடியவில்லை.

பின்னேயே இமையரசியும் வந்துவிட, “என்னாச்சு நறு.. இங்க பாரு.. அழுதா எங்களுக்கு என்ன புரியும்?” அபிமன்யு அதட்ட, அனைவரும் அந்த மாளிகையின் வரவேற்பறையில் கூடிவிட்டனர்.

“நான் அனாதையா மாமா.. எனக்கு எதுவும் உரிமை இல்லையா?” என்று அவனின் தோளில் புதைந்து கதற, மகள் இப்படி கதறி வாழ்நாளில் பார்த்திடாத நீரஜாவிற்கு ஏதோ பெரிதாக நடந்திருப்பதாக மட்டும் புரிந்தது.

மகளின் தலையை வருடியவர், “நறு” என்று அழைக்க, அன்னையை பார்த்தவள், “ப்ளீஸ் மா.. உன் கூடவே இருக்கேன்.. என்னை போக சொல்லிடாதே” என்று கதறியவளை அமர வைத்த அபிமன்யு, அவளிடம் மெதுவாய் விசாரிக்க, அனைத்தையும் ஒப்பித்துவிட்டாள் அவள்.

நீரஜாவின் விழிகள் கலங்கிவிட்டது!

அனைத்தையும் கேட்டு முடித்த அபிமன்யு ரௌத்திரத்துடன் ருத்ரதாண்டத்திற்கு தயாராக எழ, அனைவருமே கிடுகிடுவென்று நடுங்கித் தான் போய்விட்டனர்.

அனைவரும் அவனைத் தடுக்க முயற்சிக்க, “எங்களுக்குள்ள இருக்க பிரச்சினையை கொண்டு வரமாட்டான்னு நினைச்சேன்” என்று சிம்மவர்ம பூபதியிடம் உறுமியவன், அனைவரையும் மீறிக் கொண்டு செல்லப் பார்க்க, நறுமுகை அவனின் கரத்தை பிடித்துவிட்டாள்.

“வேணா மாமா” என்றவள் அன்னையிடம், “ம்மா சொல்லு” என்று கெஞ்ச, நீரஜா பல மணி நேரம் மன்றாடி அன்று அபிமன்யுவை அடக்க படாத பாடு பட்டிருந்தார். அடுத்த நாளிலிருந்தே நறுமுகையை வீட்டில் இருக்க வைக்காது அலுவலகம் அழைத்துச் சென்ற அபிமன்யு சிம்மவர்ம பூபதியிடம் கூறி, அவளுக்கென்று அங்கு ஒரு பதவியை கொடுத்தான். ஆற்றலையும் விவேகத்தையும் கற்றுக் கொடுத்தான்.

பலமுறை வந்து கோதை அழைத்துப் பார்த்தும் நறுமுகை அங்கு செல்லவில்லை. தாலி பிரித்து கோர்ப்பது கூட கோதை மட்டும் வந்து செய்ய வேண்டியதாகி போயிற்று. விக்ரம் இறுக்கமாகவே சுற்றித் திறந்தவன் யாரிடமும் பேசவும் இல்லை.

அதுவும் பிரித்துக் கோர்த்த தாலியை நறுமுகை அணியக் கூட இல்லை. இமையரசி ஒரு முறை திட்டியபோது கூட, அதை எடுத்து வந்து அவரின் கரத்தில் வைத்தவள், “இந்தாங்க.. வேணும்னா போய் குடுத்திடுங்க” என்று ஒருநாள் கூறிவிட, அதிலிருந்து அவர் வாய் திறப்பதில்லை.

பால்கனி கதவை அன்றிலிருந்து அவள் திறப்பது கூட இல்லை. எத்தனை காதலோடும் ஆசைகளோடும் அவனின் கை பிடித்திருந்தாள். ஆனால், அனைத்தும் அவனின் கொடிய வார்த்தைகளால் மாறிப் போயிருந்தது.

அவன் பால்கனியில் வைத்து அவளை எடுத்திருந்த புகைப்படம், திருமணத்திற்கு முன்பு அவள் ப்ரேமிட கொடுத்திருக்க, அதுவோ ஒரு நாள் வந்திறங்க, யாரையும் பார்க்காது அதை அமைதியாய் எடுத்துச் சென்றவள் அதை அணைத்துக் கொண்டு கதறியிருந்தாள்.

அது அவள் இருக்கும் புகைப்படம் மட்டும் அல்ல. அவளுக்கு பின்னிருந்த பால்கனியின் கண்ணாடியில் விக்ரமின் பிம்பமும் அவளை படம் எடுப்பது போன்று விழுந்திருந்த புகைப்படம்.

காதலைத் தாண்டி, கவிதையால் கூட விவரிக்க இயலாத எத்தனை அழகிய தருணம்!

இந்த விக்ரமினை அவளால் வெறுக்க முடியாதே?

அதே சமயம் அவன் பேசியதை மறந்து சென்று, அவளால் வாழ இயலுமா என்று தெரியவில்லை! அதனால் அதன் போக்கில் செல்ல முடிவெடுத்தாள்!

விக்ரமும் பல யோசனைகளில் இருந்தான். அனைவரிடமும் பராமுகம் காட்டினான்.

நீரஜா விக்ரமிடம் பிசினஸ் விஷயமாக பேசும்போது கூட, அவனால் அவரை பார்த்து பேச முடியவில்லை. கை நீட்டியிருந்தால் கூட என் மனைவி என்றிருப்பானோ என்னவோ! வார்த்தகைளால் அவளை குத்தி கதறச் செய்துவிட்டு அவனால் நீரஜாவை எதிர்நோக்க முடியவில்லை.

“ரொம்ப பிடிவாதமா இருக்காதீங்க விக்ரம்.. லைபை வேஸ்ட் பண்ணிட்டு திரும்பி பாத்தீங்கன்னா ரொம்ப ஃபீல் பண்ணுவீங்க” என்று ஒருநாள் அவன் கரத்தின் மீது கரம் வைத்து கூறியவரின் கரத்தை இறுக பிடித்துக் கொண்டவன்,

“கோபமா அத்தை என் மேல” கேட்க, அதில் புன்னகைத்தவரின் தலை மறுப்பாய் அசைந்தது.

அபிமன்யுவும் சரி, விக்ரமும் சரி அவருக்கு இன்னமும் அவர் கரங்களில் தவழ்ந்த குழந்தைகள் தான். நறுமுகையை ஏந்தும் முன் அவர்களை ஏந்தி அவர்களின் மென்மையை உணர்ந்தவர். என்ன தவறு செய்தாலும் அவருக்கு அனைவரும் தன் பிள்ளைகள் தான்.

“எல்லாம் சரியாகும் விக்ரம்” என்றவரை எழுந்து அணைத்தவன்,

“உங்களை கஷ்டப்படுத்திறனோனு இருக்கு” அவரிடம் ஆறு வயது விக்ரமை மாறி கூற, அவனின் முதுகைத் தட்டிக் கொடுத்தவர்,

“அதெல்லாம் இல்ல.. நீ நறுவை பாரு” என்றவரின் வார்த்தைகளுக்காகத் தான் அவன் அவளை தொந்திரவு செய்யாது விட்டிருந்தது.

ஆனால், அதை எப்போது அபிமன்யு கையில் எடுத்தானோ விக்ரமும் தன்னவளை தோளில் எடுத்துவிட்டான்.

கடந்த காலங்களில் இருந்து வெளியே வந்த விக்ரம் விழிகளை மனையாளிடம் திருப்ப, அவளோ வெளியே பார்த்தபடி அமர்ந்து கொண்டு இருந்தாள். அழுது கொண்டிருக்கிறாள் என்று அவளிடம் இருந்து வரும் விசும்பல் ஒலியிலேயே அவனுக்குப் புரிந்தது.

மனம் தன்னவளின் அழுகையில் பாரமாய் கனத்தாலும், அவளின் அருகாமை அவனுக்கு அமைதியையே கொடுக்க, ஒரு இடத்தில் கொண்டு சென்று காரை நிறுத்தியவன், யாருக்கோ காத்திருக்க, ஒரு கார் அவர்களுக்கு முன்னே வந்து நிற்க, அதிலிருந்து இறங்கி வந்த ஒருவனிடம் தன்னுடைய அலைபேசியை கொடுத்த விக்ரம், “பத்திரம்” என்று ஃபோனுக்கு சொன்னானா இல்லை அவனுக்கு சொன்னானா என்று தான் தெரியவில்லை.

“நான் சொன்ன ப்ளேஸ்ல இருந்துக்க.. அதுதான் சேஃப்” என்றவன் பதிலை எதிர்பாராது காரை எடுக்க, அனைத்தும் செவிகளில் விழுந்தாலும் நறுமுகை ஒருமுறை கூட திரும்பவில்லை.

நீண்ட நேர பயணத்திற்கு பிறகு, காரை தன்னுடைய கனவு இடத்தில் நிறுத்திய விக்ரம் தன்னவளை பார்க்க, நேற்று இரவில் இருந்து அழுது கொண்டிருந்தவளின் முகம் வீங்கியிருக்க, கன்னங்கள் தடித்திருக்க, சிவந்து போயிருந்த முகத்துடன் தூங்கிப் போயிருந்தாள்.

இனி எல்லாம் அவன் கரங்களிலேயே!

(நேத்து எனக்கு ரிசல்ட் வந்திருச்சு மக்களே. ஆல் பாஸ். அபிஸியலா இனி டாக்டர்🙈)