ஆதிரையன் -அத்தியாயம் 09

Screenshot_2021-07-27-16-11-56-1-2431a810

அத்தியாயம்-09

ஆதிரையன் சரண் கூறிய விடயங்களையும் தனக்கு தெரிந்தவையும் சேர்த்து ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்தி யோசித்துக்கொண்டிருக்க நல்லிரவைத் தொட்டிருந்தது. இடையில் அன்னையோடு உணவை உண்டவன் அவரை உறங்க அனுப்பிவிட்டு மீண்டும் தன் அலுவலக அறையினுள் நுழைந்துக் கொண்டான். வெளிப்படையாக எந்தவொரு காரியம் செய்தாலும் அது தந்தையின் பெயருக்கு இழுக்கு. இறந்தவர் இறந்தாயிற்று. அன்னைக்கு இது பற்றி தெரிந்தால் அவர் மனதுக்கும் கஷ்டம். என்ன செய்வதென்றாலும் நிதானமாக செய்ய வேண்டும்.

இனி எந்த காரணத்தைக்கொண்டும் தன்னால் இந்த சொத்துக்களை அனுபவிக்க முடியாது. தெரியாதிருக்க ஒன்றும் இல்லை. தெரிந்த பின், எனை என்ன நினைப்பாள். என்னால் இனி இதுபோல பலமடங்கு சம்பாதித்து கொள்ளலாம்.ஆனால் இவை அனைத்தும் அவள் பெயருக்கு உடனடியாக மாற்றப்பட்டால் அங்கேயே எல்லோராலும் கண்டுகொள்ள முடிந்திடுமே.’ என்ன செய்யலாம்…’ யோசித்துக்கொண்டே இருந்தான் ஆதிரையன்.

தனியாய் முடிவெடுக்க முடியாது, அவசரமாய் இதில் எதுவும் செய்து தனக்கு தானே இழுக்காகிக் கொள்ளவும் கூடாது. அதேபோல அவளுக்கும் சரியான ஞாயம் கிடைத்தாக வேண்டும்.இன்னும் யோசிக்க வேண்டும் என்று தனதறைக்குச் செல்ல எழுந்தவன் அந்த தகவல்கள் அடங்கிய காகிதங்களை அவன் மேசை இழுப்பறையில் வைக்கப் போக அவன் பகல் வைத்த அவன் ரசிகையின் கடிதம் கண்ணில் பட்டது. இதை எப்படி மறந்தேன் என முகம் மலர அதை எடுத்தவன் அப்படியே அதை பிரித்து படிப்பதற்காக மீண்டும் அவ்விடமே அமர்ந்தான்.

அவள் எழுத்துக்கள் அத்தனை அழகாய் இருக்காது. அவன் எழுத்துக்களோடு பார்க்க ஏதோ சுமார்தான். அவளே அதை பலமுறைக் கூறியுள்ளாள். ஆனால் அவள் வரிகள் பல கதை சொல்லும். இவன் மூன்று நான்கு பக்கங்களில் சொல்ல அவளோ ஒரே பக்கத்தில் முடித்திருப்பாள்.

எப்போதும் இவன் சொல்ல நினைப்பதை இன்று அவள் எழுதியே அனுப்பியும் விட்டாள். மனம் அவள் கடிதம் படித்து முடிக்க அத்தனை இதமாய் உணர்ந்தான். ஆனால் இருக்கும் பிரச்சினையோடு எப்படி மகிழ்ந்திருக்க?ஆனாலும் மனம் அவள் மடிசாய்த்து தலை கோதுவதாய் உணர்ந்தான். இனி அவளிடமிருந்து பதில் வரப்போவதில்லை என்பது தெரியாத கவிஞனோ எப்போதும் போலவே படித்த மறுக்கணமே அதற்கான பதில் கடிதம் எழுதினான்.

*****

அன்பின் தீ…

என் கவியின் தீனி…

மடல் கண்டு மகிழ்ந்தேன்.மனம் நிறைந்தேன். அகம் வெளிப்பட தயங்க நானும் தயங்கியே எழுதும் பல மடல்களே எப்போதும் உன்னைச் சேரும். இன்று உன் வரிச்சொன்ன வார்த்தைகள் உள்வாங்கினேன். உள்ளத்தோடு பொத்தி வைத்துக்கொண்டேன்.

“யார் நீ…?

என்

தூரிகை 

தீரும் போதெல்லாம்

விரல் கொடுத்தாய்…!

என்

கற்பனை 

காயும் போதெல்லாம்

கண் கொடுத்தாய்…!

மனம் 

உடைகையில்

மடிதந்து

மயில் இறகால்

என் நெற்றி வருடினாய்…!

வார்த்தைகள்

தீர்கையில்

உள்ளிருந்து

ஒலிப்பித்தாய்…!

வண்ணம் குன்றும் போதெல்லாம்

வானவில்லாய்

வந்து நின்றாய்…!

நீ யார்…?

இரசிகையா…?

இல்லை

தோழியா…?

அதற்கும் மேல்…

எல்லை தாண்டி

எனை ஆளும்

வல்லமை கொண்டவள்…

என் எழுத்துகளில்

மகரந்தம் தேடும் வண்டே…

வா…!

உன்னில் இருந்து

இந்த கவிப் பூ

மது பருக வேண்டும்…

வா…!

என் கவியின் தீயே

என் கவிக்கு தீனியே…

நானோ தமிழ் மீது காதல் என்கிறாய் …

என் தமிழே நீயென்கிறேன்….

இதற்கு மேல் என் மனம் எங்ஙணம் கூறுவேன்…

எப்போதும் பகிர்ந்ததில்லை. என்னைப் பற்றி. இன்று பகிரவே நினைக்கிறேன். பெரும் இழப்பை சந்தித்து மீண்டுள்ளேன். மீண்டுள்ளேன் என்பது சரியா தெரியவில்லை. எனை சுற்றி நானே அறியாது சில பின்னல்கள். விடுவிக்க தெரிந்தும் முடியா நிலை. சொல்லிக்கொள்ள, தீர்த்து வைக்க யாரும் இல்லாத புலம்பலோ இது.அதுவும் அறியேன். என்னால் வெளிப்படையாக பேச முடியவில்லை. கண்டிப்பாக மனம் நிறைவாக என் முடிவுகள் சரியாக அமைய மொத்தம் சரிசெய்து பின்னே,உன்னோடு மொத்தம் பகிரங்கமாய் பகிர்ந்திட நினைக்கிறேன்.

உன் தேவைகள், எப்போதும் நிறைவாய் அமையும். நல்லதாய், பயனுடையதாய் நீ நினைத்ததைப்போலவே நடந்திடும். மகிழ்ந்திரு…

உனை அறிய ஆவலாய் உள்ளேன். நம் வார்த்தைகளில் உயிர்ப்பிருக்க, உணர்வுகள் சேர வழிக்கூறும்…

உன் நிழலும் கண்டதில்லை என் நிஜதோடு நீயன்றி வேறேதுமில்லை…

எபோதும் ஏதோ உனக்கு நான் கற்றுக்கொடுத்து கற்றுக்கொண்டேன். மனம் அந்தளவுக்கு இன்று ஒத்துழைக்கவில்லை. இருந்தும் உன் மடல் கண்டு அகம் நிறைந்துள்ளேன். காத்திருக்கிறேன்…

அன்பின் உன் கவிஞன்.

*****

அவன் மனம் அவனுக்கான துணைத்தேடி தவித்தது.இத்தனை நாள் அவன் காதல் கொண்டிருந்தானா என்பது தெரியாது. அவள் அவனுக்காக எழுதிய வரிகளை நிச்சயமாக காதல் கொண்டிருந்தான்.அவள் எப்படி இருப்பாளோ தெரியாது. அவளை மனதுக்குள் சிலை செய்து வைத்திருந்தான்.

இப்போது உயிரிக்கொடுக்க எண்ணுகிறான். இந்தக் காதல் சாத்தியமா, ‘முகம் காணாது காதல் கொண்டு பின்,மனம் விரும்பாது போனால்? ‘ 

‘பார்த்ததும் அழகில் காதல் கொள்ள நானொன்றும் கல்லூரி இளைஞன் இல்லையே.’

மனம் இத்தனை ஒன்றிப் போயாச்சே.

‘மனம் ஒன்றிப் போனதா இல்லை நம் தமிழ் மட்டும் ஒன்றிக்கொண்டதா?’

எத்தனை வருடங்களாக உறவாடுகிறேன், நம்மிடையே நல்ல நட்பொன்று மலர்ந்தந்திருக்கிறதே.

‘அந்த நட்பு நம் வாழ்க்கைக்கு துணை தருமா?’ இந்தக் காதல் சாத்தியமா?

மனம் ஓர் நிலை இன்றி தவித்தது ஆதிரியனுக்கு. கடிதம் எழுதி மடித்து அட்டைக்குள் வைத்து ஒட்டியும் முடிந்தாயிற்று. அதை கையில் வைத்துக்கொண்டே இத்தனை யோசனை. மனம் மட்டும் போதும் மற்றதை பொறுத்திக்கொள்வேன்.வீட்டார் பேசி முடிக்கும் திருமணங்களில் ஒன்றுமே பொருந்தி இருப்பதில்லையே. அவரவர் தானே பொருந்தி பொறுத்திக் கொள்கிறார்கள்.மனதை அவனே தேற்றிக்கொண்டு உறக்கத்தை கடினப்பட்டு வரவழைத்தவன் அதிகாலை முன்னே உறங்கினான்.

அதிதி வீட்டுக்கு வந்ததிலிருந்து மனம் நிறைய அவன் எண்ணமே நிறைந்திருக்க, ரேவதியின் அன்பும் அவளை ஏதோ செய்தது. இன்று மிகையாய் தன் அன்னையை தேடியது மனம். எதாவது ஒரு உறவாவது இருந்திருக்க வேண்டாமா? மனம் தேறி இருக்குமே. தனக்கென்று யாருமில்லையே. இனி ஆதிரையன் தன்னை அந்த நிலஉரிமையாளராய் பார்ப்பான். அல்லது தந்தையால் ஏமாற்றப்பட்ட நண்பனின் மகளாகவே பார்ப்பான். வேறெந்த எண்ணமும் என்னில் அவனுக்கு இருக்கப்போவதில்லை. இன்று அலுவலகத்தில் இவள் இறுதியாய் கையொப்பமிட்டு கொடுத்த கடிதம் கண்டானே அன்றி இவளும் அவனுடைய கவி ரசிகையும் ஒன்றே என்று தெரிய வராது.இவள் கையொப்பம் மட்டுமே அவள் என்று சாட்சியாய், அல்லது அவளே கூற வேண்டும்.

ஆதிரையன் அந்த நகலை அப்போதே மகேஷிடம் கொடுத்திருந்தான். அது அவனுக்கு அப்போதைக்கு அத்தனை முக்கியமாய் இருக்க வில்லை. எனவே மகேஷ் அதை ஆலையில் இருக்கும் அவன் அலுவலக அறையில் பத்திரப் படுத்தியிருந்தான்.

ஆதிரையன் இனி என்ன செய்வானோ தெரியாது. அது பற்றி மட்டுமே எண்ணமெல்லாம் சுழன்றுக் கொண்டிருந்தது அதிதிக்கு. சற்று முன் சரண் அழைத்து ஆதி அழைத்து பேசியதாக கூறியிருந்தான். ஆனாலும் ஐந்து நாட்கள் கொண்ட கலெக்டர்களுக்கான அரச நிகழ்ச்சி ஏற்பாடு ஒன்றில் கலந்துகொள்ள வேண்டி நாளை பகல் பொழுது பின்னே கிளம்பவேண்டி இருந்தது. எனவே அவள் வரும் வரை அவள் வேலைகள் ராமின் வசம் ஒப்படைத்தே செல்லவேண்டும். அது சம்பந்தமாக நாளை நிறைய வேலைகள் இருப்பதால் ஆதிரையனுடன் பேச சந்தர்ப்பம் கிடைக்கும் என்று தோன்றவில்லை. என்னவிருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம். என்ன காரணத்திற்காகவும் ஆதிரையனுக்கு அவப்பெயர் இனி என்னைக்கொண்டு வந்திடக் கூடாது என எண்ணிக்கொண்டாள்.

அவனுடைனான துளிர்த்த காதல் அவனுக்கு வந்திருக்குமா தெரியாது. இருந்தும் என் மனம் சொல்லியாயிற்றே. அவன் என்னை யாரென்று அறியாது நிச்சயமாகக் காதல் சொல்வான். தெரிந்திருந்தால் காதல் வந்தாலுமே இருவருக்கும் உண்டான இந்த நிலம் தொடர்பான பந்தத்தில் எப்போதும் சொல்ல மாட்டான்.அவனை நன்கு உணர்ந்தே வைத்திருந்தாள் அதிதி.’மனம் ஆற்றிக்கொள்ள மனதோடு உறவாடவாவது ஓர் உறவு கொண்டிருந்தேனே. இனி அதையும் இழந்துவிட்டேன்.’ கண்கள் நிறைந்த கண்ணீரை கைக்கொண்டு கன்னத்தோடு அழுந்த துடைத்து நிறுத்திக்கொண்டவள், ‘உங்களுடையை ஒவ்வொரு வரிகளும் போதும் கவிஞரே எனை உயிர்ப்பாய் வைத்திருக்க. வாழ்க்கை முழுக்க சாத்தியமாகுமா தெரியாது, ஆனாலும் முடியுமான வரை நினைவுகள் என்று சுமந்து வாழ்வேன்.’

இனி எப்போதும் இதுதான், இப்படித்தான் வாழ்க்கை. ஆதிரையனுக்கு அவன் வாழ்க்கை சிறப்பாகிட இனி என்ன செய்ய வேண்டும் அதை மட்டும் செய்திட வேண்டும். இப்போது போலவே எப்போதும் அவன் சிறப்பாய் வாழவேண்டும். ‘தனி மனிஷியாய் இந்த சொத்தெல்லாம் நமக்கெதுக்கு.’ மனதோடு கூறிக்கொண்டு மனம் கொண்ட புலம்பல்களை கேட்டுக்கொண்டு உறங்கிப்போனாள்.

நினைப்பதெல்லாம் நடந்து விடுமானால் இறைவன் எதற்கு?

சொத்துக்கள் வேண்டும் என்று வந்தாள். இப்போது கையெட்டும் தூரமிருக்க வேண்டாம் என்கிறாள். மனம் நிறைந்தவன் கண் முன் இருக்க கையள்ளிக்கொள்ள வழியில்லாது தவங்கி நிற்கிறாள். இனியென்ன?

பார்க்கலாம்…

தொடரும்.