ஆதிரையன் -அத்தியாயம் 15

1653401117018-eb583e0b

Epi 15

அதிதியின் கழுத்தோடு கைக்கு சுற்றி மாரோடு சேர்த்து கட்டிட்டு ஒரு மாதம் கடந்துவிட்டிருந்தது.

அன்று திருமணம் முடியவுமே அதிதியை அழைத்துக்கொண்டு மருத்துவரிடம் செல்ல அவள் தோள்பட்டைக் கூட்டு விலகியிருப்பதாகக் கூறி அதற்கு மாரோடு சேர்த்து கட்டு போட்டுவிட்டிருந்தார்.

“இப்படித்தான் அடாவடித்தனமா முடிவெடுப்பாங்களா? எப்படி கலெக்டர் ஆன நீ?ஒரு இழுவைக்கே கை கலண்டு வந்திருக்கு. கொஞ்சம் டிலே ஆகியிருந்தாலும் என்னாகியிருக்கும்? அந்தாளை பார்த்ததும் நீ எனக்கு கால் பண்ணிருக்கணும். இல்லையா, வண்டிவிட்டு இறங்கி இருக்கக் கூடாது. கூடவே சுமன் இருந்தான் தானே? அவனை இறங்கி பேச சொல்லியிருக்கணும்.இவ பேசிட்டா எல்லாரும் கேட்டுப்பாங்கன்னு நினைப்பு.”

வீடு வர மட்டும் அவளை திட்டிக்கொண்டேதான் வந்தான். அவள் எதுவும் பேசவில்லை. இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவள் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டு வந்தாள்.

அவளுக்காய் அவன் மனம் கொண்ட வேதனை அத்தனையும் அச்சு பிசகாமல் அவன் முகம் காட்ட அதை காதலோடு பார்த்துக்கொண்டிருந்தாள். அதையெல்லாம் கவனிக்கும் நிலையில்லை ஆதிரையன்.

‘உங்க தீயாகவே நான் உங்களுக்கு மனைவியாகி இருக்க கூடாதா? இந்தக் காதலை முழுதாய் அனுபவித்திருப்பேனே? எதுக்கு அந்த மனுஷனுக்குப் போய் மகனாய் பிறந்தீங்க?’

மனதுக்குள் வலியோடு கேட்டுக்கொண்டாள்.

வீட்டின் முன்னே வண்டியை நிறுத்தியவன், அவள் பக்கம் திரும்ப, அவள் மனதை நிதானப்படுத்தி, முகத்தை சரிபடுத்திக் கொண்டாள்.

“அதி,அம்மாவுக்கு அவங்க அப்பாதான் எல்லாம் பண்ணுனாருன்னு தெரியும். ஜஸ்ட் சொல்லிவச்சிருக்கேன். அவங்க எப்படி ரியாக்ட் பன்வாங்கன்னு தெரியல.அவங்க அப்பா கூட சேரனும்னாலுமோ, இப்படியே இருக்கணும்னு சொன்னாலுமோ எதுக்கும் என்னால இடையில பேச முடியாது. அது அவங்க விருப்பம்.

அதோட அவங்க புருஷனோட இறப்புக்கு அவர்தான் காரணம்னு அம்மாக்கு தெரியாது. அதைப்பற்றி பேசி இருக்க நிம்மதி இழந்துக்க நான் விரும்பல. அம்மா என்ன பேசுறாங்கன்னு பார்த்துட்டு அப்றமா நாம என்ன செய்யாலாம்னு பார்க்கலாம். இந்தப் பிரச்சினை இத்தோட முடியணும்னு நினைக்குறேன்.”

கூறி முடித்தவன் அவளைப் பார்க்க அவளும் அவனைத்தான் பார்த்திருந்தாள்.

“ரொம்ப கை வலிக்குதா? என்னாலதான் இப்டி ஆகிடுச்சு. என் மேல இருக்க கோபத்தை உன் மேல காமிச்சுட்டாரு அந்த மனுஷன்.”

அவன் கேட்டதற்கு பதில் கூறாதவள்,

“வீட்டுக்குள்ள போகலாமா?’

வாயிலைக் காட்டியவள்,

‘நாம வர்ற வரைக்கும் பார்த்துட்டு இருக்காங்க.”

“ஹ்ம்.” என்றவன் இறங்கி அவள் பக்கக் கதவை திறக்க அவள் இறங்கவும் ஓடி வந்து அவள் கைகளை பிடித்துக்கொண்டவர்,

“மன்னிச்சுடு அதிம்மா, என் பாவம் என் புள்ள மேல திரும்பிடுச்சு. என்னால உனக்குத்தான் கஷ்டம். மன்னிச்சுடு இந்த அத்தைய… “

அவள் கைகளை தடவிக்கொடுத்துக்கொண்டே அழ,

“ம்மா எல்லாரும் பார்க்குறாங்க. முதல்ல அவளை உள்ள அழைச்சிட்டு போ.”

அப்போதும் அழுதுக்கொண்டே தான் இருந்தார்.

யோசனையாகவே இவர்களை பார்த்துக்கொண்டிருந்தார் செல்வநாயகம்.

உள்ளே வந்தவன்,அவரோடு சென்று அமர்ந்துகொண்டான்.

“ரொம்ப சாரி அங்கிள்.என்ன சொல்றதுன்னு தெரில.நானே எதிர்பார்க்கல. கண்டிப்பா உங்களுக்கு அதிதியை பற்றி யோசனையா இருக்கும். இனி எப்போவும் இப்படி நடந்துக்காம பார்த்துக்கிறேன். நீங்க என்னை நம்பலாம்.”

ஆதிரையன் தோள்களில் தட்டிக்கொடுத்தவர்,

“நீங்க அவளை நல்லா பார்த்துப்பீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அவ பார்க்கத்தான் கலெக்டர். மனசலவுல இன்னும் அவ குழந்தைதான். அவ இழந்த மொத்தம் எடுத்துக்கணும்னு நினைக்கிறா. அவளால எல்லாமே திரும்ப மீட்டிக்க முடியாது. எனக்கு அது நன்றாகவேத் தெரியும். ஆனாலும் அவ இதுக்கப்பறம் பெறப்போற சந்தோஷத்தை கொண்டு இழந்ததை மறக்கணும். அதற்கு நீங்கதான் துணையாக இருக்கணும். “

“கண்டிப்பா அங்கிள்.” ஆதிரையனுக்கு அதற்கு மேல் என்ன பேசவென்று தெரியாது மௌனமானான்.

அடுத்த நாள் எல்லோரும் கிளம்பிவிட, அதிதி வேலைக்கு செல்வதாகக் கூற இரண்டு நாள் ஓய்வெடுக்க வைத்தே வேலைக்கு செல்ல அனுமதித்தார் ரேவதி.

அன்றைய சம்பவத்தைப் பற்றி அதன் பின் அதிதி ஆத்திரையனுடனோ ரேவதியோடோ பேசவே இல்லை.

ஆதிரையன் கேட்டதற்கும்,

“அன்னைக்கு வண்டில அத்தனை விளக்கம்,நான் அது பற்றி பேச கூடாதுன்னு தானே?அதான்.”

என பேச்சை அத்தோடு முடித்துக்கொண்டாள்.

அவள் அவளது ஸ்கூட்டிலேயே அலுவலகம் சென்று வர, ஆதிரையனும் அவன் தோட்ட வேலையும் ஆலையின் வேலைகளையும் கவனிக்கவென்று இருக்க எப்போதும் போலவே அவர்கள் நாட்கள் கடந்தன.

இருவரும் ஒரே அறையை பயன்படுத்திய போதும் அதிதிக்கு அவள் அலுவலக வேலைகளை செய்துகொள்ள சிரமப்படுவதைக் கண்டு அவர்களது அறையோடு ஒட்டி கண்ணாடி தடுப்புகளால் அவளுக்கு சிறு அறையொன்றை ஒரு வார காலத்திற்குள் அமைத்துக்கொடுத்தான்.

வீட்டிற்கு வந்தாலும் பெரும்பாலும் இருவரும் இருவரது அலுவலக அறைக்குள்ளேயே இருந்தனர். அதுவும் அவனது அலுவலக அறை கீழ்த்தளத்தில் இருக்க இருவரையும் பார்த்துக்கொண்டிருந்த ரேவதிக்கு மிகவும் கவலையாகிப்போனது.

அதிதிக்கு பலநேரங்களில் அவனோடு நேரம் செலவிட ஆவலாய் இருக்கும், அவள் கொண்ட நேசம் மொத்தம் அவனிடம் கொட்டித்தீர்க்க எழும் எண்ணத்தை மிகக் கடினப்பட்டு அடக்கிக் கொள்வாள். அவனை அருகில் பார்ப்பதைக் கொண்டே கண்களால் நிரப்பிகொள்வாள்.

‘அவனோடு மனைவியாய் பேசிப்பழகி நெருக்கம் கொள்வோமா?’ என மனதோடு கேட்டுக்கொள்பவள், நான் ‘தீ’ என்று கூறாது அவனை நெருங்கி, பின்னொரு நாள் அது அவனுக்கு தெரிய வர அதனால் மனம் வேதனைக் கொள்வானோ என அஞ்சி விலகிப்போவாள்.

ஆதிரையனுக்குமே இரண்டுக்கும் இல்லா நிலை. மனம் மொத்தம் முகம் காணா அவள் நினைவை சுமந்து, அவள் வரிகளில் லயித்து கிடந்தவனுக்கு அதிதியை ஏற்பது ஒன்றும் அத்தனை பெரிதில்லை. காலம் எல்லாம் மாற்றும்தான். ஆனாலும் கடைசியாக அனுப்பிய மடலில் அவள் மனதை கூறியிருக்க தன்னை எத்தனை எதிர் பார்த்திருந்திருப்பாள் எனும் குற்ற உணர்வே மனதை அரித்துக்கொண்டிருந்தது. ‘நானும், அவளிடம் சொல்லாது சொல்லி விட்டபோதும் அதே நிலை தானே இருந்தேன்,என் மனமும் அவள் அறிந்தது தானே. என் மடல் பார்த்த பின் அவளிடம் எந்த கடிதமும் வரவில்லையே…

எனை உணர்ந்திருப்பாளா? என் நிலை புரிந்திருக்குமா?’

இதுவே அவன் மனவோட்டமாக இருந்தது. அதிதியை முழுதாக ஏற்கவும் முடியாமல், தீயை உள்ளுக்குள் அணைக்கவும் முடியாமல் தவித்தான்.

‘இருவரும் ஒருவரே என்று அவன் அறிய என்னாகும்?’

*****

அதிதி இன்று நேரமாகவே வீடு வந்திருக்க ஆதிரியனை காணவில்லை.

அவன் ஆலையில் இருப்பதாக ரேவதி கூற இவளும் உடை மாற்றிக்கொண்டு அவனைக் காணும் ஆவலில் ஆலைக்குச் சென்றாள்.

அப்போதுதான் வேலை முடித்துக்கொண்டு ஒவ்வருவரும் கிளம்ப, இவளுக்கும் வணக்கம் சொன்னவண்ணமே சென்றனர். இவளும் சிறு புன்னகையோடும் தலையசைப்போடும் அவர்களை கடந்து வர மகேஷை கண்டவள்,

“என்ன மகி ரொம்ப வேலை போலயே, நான் வந்தது கூட தெரில. “

“ஹேய் அதி வா வா. சத்தியமா கவனிக்கல.அக்கௌன்ட் கரெக்ட் பண்ணிட்டிருந்தேன் அதான்.” என அவளை அமருமாறு இருக்கையை எடுத்துக் கொடுத்தான்.

“எங்க உங்க பாஸ்? மதியத்துக்கும் வீட்டுக்கு போகலையாம்?”

“அதானே பார்த்தேன், என்னடா இந்தப்பக்கம் வந்திருக்கான்னு. வர்றவ கையோடு சாப்பாடு எடுத்துட்டு வந்திருக்கலாமே”

“அச்சோ! மகி நிஜம்மா மறந்துட்டேன்.”

சிரித்தவன், ” இப்போதான் சாப்பிட்டோம். இன்னிக்கு கொஞ்சம் வேலை அதிகம் அதி. இல்லனா போய்ட்டு தான் வருவார்.”

“ஹ்ம் எங்க இருக்காங்க இப்போ? “

 அலைபேசியில் பேசிக்கொண்டே இவர்களுக்கு எதிரில் வந்துக் கொண்டிருந்தான்.

“அதோ வரார்.”

ஆதிரையன் வரும் திசையை காட்ட அவளும் அவன் பக்கம் திரும்பினாள். அப்போதுதான் குளித்திருப்பான் போல. அலுவலக அறையிலே இடம் இருக்க அங்கேயே குளித்து உடை மாற்றிக்கொண்டு வந்திருந்தான்.

யாருக்கோ திட்டிக்கொண்டுதான் இருந்தான். இவளுக்கு அப்படித்தான் அவன் பேச்சு சத்தத்தில் விளங்கியது, ஆனாலும் அவன் முகத்தில் குடிகொண்ட அவனுக்கேயான புன்னகை அப்போதும் இருக்கவே விழுந்துதான் போனாள். அவன் கவிக்கு இரையான அதிதீ…

***

“என்ன கவிஞரே…!

முறுக்கிவிட்ட மீசையும் கையோடு கட்டு ஏடுகளும் சுமந்துதான் வருவீரோ…?

பார்ப்பதிலெல்லாம் உம் இதழ் கவியாய் வெட்டி விலாசுமோ…?

வெள்ளை வேட்டியும்

வெள்ளை ஜிப்பாவும் அணிந்து துணிப்பை தோள் தொங்க நடப்பீரோ…?

கவிஞரே…!

உமை என்னவென்று கற்பனை செய்துகொள்ள நானும்…

உம் வார்த்தையில் உம்மை நவீன காதலனாய் காணவில்லை. காவியம் படைத்த காதலை மிகைக்குதே…

ஆங்காங்கே நவீனம் ஏற்று என்னை மயக்குதே…

உமை என்னவென்று செதுக்குவேன் உமக்கும் ஓர் உரு கொடுக்க ஏங்கியே போகிறேன் கவிஞரே…!

***

அவனுக்காய் ஒரு முறை அவள் எழுதி அனுப்பியிருந்தது. இப்போதும் வெள்ளை வேட்டி சட்டையில் அவன் நடந்து வர மேசையில் கையூன்றி அவனையே பார்த்திருந்தாள்.

“என்ன அதி உட்கார்ந்துட்டே கனவா?”

ஆதிரையன் கேட்க, கன்னம் தாங்கிய கை நழுவ நனவுக்கு வந்தாள்.

எப்போதாவது இப்படி உடுத்துவான் ஆதிரையன். அப்பொழுதெல்லாம் அதிதி அவள் கவிஞனை மிகை நினைக்க, அவனுக்குமே அவன் தீயின் நினைவுகள். இதோ இப்போது அதிதி நினைத்த வரிகளும் சேர்த்தே அவன் நினைவுக்கு வர உடுத்திக் கொள்வான் இப்படியாய்.

“பாஸ் நான் கிளம்புறேன். இன்னும் கொஞ்சம் பென்டிங் இருக்கு. வீட்டுப்போய் உங்களுக்கு அனுப்பிடுறேன்.” என்றவன், அவர்களுக்கு தனிமை கொடுத்து அதிதியிடமும் கூறிக்கொண்டு கிளம்பினான்.

“வா அதி உள்ள போகலாம்.”

 அவளை அழைத்தவன், அவன் அலுவலக அறைக்குச் செல்ல இவளும் அவன் பின்னோடே சென்றாள்.

“சாப்டீங்களா? மதியத்துக்கும் வீட்டுக்கு வரலன்னு அத்த சொன்னாங்க.”

“ஹ்ம் கொஞ்சம் வேலை ஜாஸ்தி ஆகிடுச்சு அதான். இப்போதான் சாப்பிட்டோம்.”

“அப்போ இங்கேயே சாப்பாடு கொண்டு வர சொல்லிருக்கலாமே? “

“அப்போ பசிக்கல அதி.இப்போ கேட்டா அம்மா திரும்ப ஏதாவது பண்ணுவாங்க. அதனால வெளில வாங்கிட்டோம்.”

இருவரும் பேசிக்கொண்டே அவன் அலுவலக அறைக்குள் நுழைந்தனர். அவன் இருக்கையில் அழைத்து சென்று அவளை அமரச் செய்தான். அவளும் இயல்பாய் அவனோடு புன்னகைத்தவாறே அமர்ந்து அலுவலகத்தை சுற்றிப் பார்த்தவள் அவனையும் பார்க்க, அவள் முன்னிருந்த இருக்கையில் அவனும் அமர்ந்தான்.

“இப்போதான் கரெக்டா உட்கார்திருக்கேன்ல.நீ உன்னிடத்துல உட்காரவும்தான் எனக்கு என்னோட இடம் எடுத்துக்க முடியும்.”

அதிதிக்கு அவன் கூறுவது முதலில் புரியவில்லை. அதன்பின் அவன் கூறிய வார்த்தைகளில் அவ்விருக்கையை விட்டு பட்டென்று எழுந்துவிட்டாள்.

“அப்றம் மேடம்,எப்போ இந்த பொறுப்பையெல்லாம் உங்க கைக்கு எடுக்கப் போறீங்க?”

“எதுக்கு நான் எடுத்துக்கணும்?”

“இது உனக்கானது, அப்போ நீ தானே எடுத்துக்கணும். “

“கல்யாணம் பண்ணிக்க முன்னமே இதுக்கு பதில் சொல்லிட்டேன் நினைக்குறேன்.”

ஏனோ காலை முதல் தீயின் நினைவில் இருந்தவன், அதிதியின் மனம் உணர மறந்து விட்டான்.

“நான் கல்யாணம் பண்ணினது இது மொத்தமும் உனக்கு போய் சேரணும்னு.”

“நான் அப்போவே சொல்லிட்டேன் என்னோட பதில், இதற்காக நம்ம கல்யாணம் வேணாம்னு.”

“எனக்கு அடுத்தவங்க சொத்துன்ற குற்ற உணர்ச்சியோடவே தினம் வாழ முடியாது அதி.எனக்கு இங்க எதுலயுமே கான்சன்ரேட் பண்ண முடில.

“எவ்வளவோ வேலை பார்க்குறீங்க, அப்போ அன்னைக்கே ஏதாவது பண்ணி மொத்த சொத்தும் எழுதி கொடுத்துட்டு போயிருக்கலாமே? எதுக்கிந்த கல்யாணம்? உங்க அப்பாவோட அந்தஸ்தையும், உங்க மரியாதையை தக்க வச்சுக்கவும் எல்லாம் செய்துவிட்டு இப்போ என் சொத்தை தரேன் சொல்றீங்க? “

“ஓஹ்! வாழ்க்கை கொடுக்குறீங்களா?”

அமர்ந்திருந்த இருக்கை விட்டு எழுந்தவள்,

“சொல்லுங்க, அநாதையாச்சே அப்பா நட்பை கலங்கப்படுத்தி குடும்பத்தை ஏமாத்துனான்னு பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்தீங்களோ,

சொல்லுங்க ஆதி?”

“எனக்கு என் சொத்து மொத்தம் வேணும்னுதான் தான் இந்த ஊருக்கு வந்தேன். சொத்தை விட எங்கப்பாவோட நம்பிக்கையை, அன்பையும் கொச்சப்படுத்துன உங்கப்பாவோட மரியாதையை அழிக்கணும்னுதான் இங்க வந்தேன்.

எல்லாம் இருந்தும் ஒன்னும் இல்லாதவங்களா தவங்கி தனிச்சு எங்கம்மா அனுபவித்த வலி எனக்கு மட்டும் தான் தெரியும். பதினஞ்சு வருஷமா உள்ளுக்குள்ள வேர்விட்டு என் மொத்தம் மீட்டு சாதிக்கணும்னு இருந்த என் தேவையையே நான் ஒரே ஒரு காரணத்துக்காக மட்டுமே விட்டுட்டேன். அந்தக் காரணத்தை உங்களுக்கு சொல்லி இனி புரியுமா தெரில.”

வழியும் கண்ணீரை கன்னத்தோடு சேர்த்து அழுந்த துடைத்தவள்,

“இப்போவும் யாரோவா தான் உங்களுக்கு நான்னு புரிஜிட்டேன். உங்கள மனசு என்னை ஏத்துக்கலன்னு நல்லாவே புரிது. அதானே இப்டி பேசுடீங்க. பரவால்ல விடுங்க. உங்க தப்பு இதுல எதுவும் இல்லை.”

ஆதிரையன் எதுவுமே பேச வில்லை. ‘என்ன பேசவந்து என்ன பேசிவிட்டேன்.’

அவனே அவனை உள்ளுக்குள் திட்டிக்கொண்டிருந்தான்.

“உங்கப்பா செஞ்ச மொத்தமும் கூறி,அதுக்கு பரிகாரமா எனை பாவம் பார்த்துதான் வாழ்க்கை கொடுத்தேன்னு உங்கம்மா முன்னாடி இந்த சொத்து மொத்தமும் கொடுங்க வாங்கிட்டு நான் யாரோவாகவே உங்களை விட்டு போய்டுறேன். கண்டிப்பா போய்டுறேன்.’

‘இதுவே என் இடத்துல உங்களுக்கு, உங்க மனசுக்கு நெருக்கமானவங்க இருந்திருந்தா என்ன பண்ணிருப்பீங்க?”

அவள் தீயாகவே இருந்திருந்தால் அவன் முடிவு என்னவாகி இருக்கும் என அவன் வாய் வார்த்தையாக கேட்டுக்கொள்ள விரும்பினாள்.

ஆதிரையன் எண்ணத்திலுமே அது தீயையே நினைவு கொள்ள,

“உங்கம்மா முன்னாடி நான் இப்போ கேட்டதை அப்போவே கொடுத்திருப்பீங்க கரெக்டா?”

அவன் ‘ஆமாம்.’ என்பதாய் பார்த்து வைக்க உள்ளுக்குள் சில்லுச்சில்லாய் உடைந்து போனாள். வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்டு வெளியேறிவிட்டாள்.

அவள் இறுதியாய் சொல்லிச்சென்ற வார்த்தை?

ஆம் அப்படித்தானே செய்திருப்பான். தீயை எப்படி ஏற்றிருப்பான்? அவளுக்காக அவன் தந்தையை எதிர்த்திருப்பான் தானே.அவள் மொத்த சொத்தையும் அவளிடம் சேர்த்திருப்பான் தானே. ‘

‘ஏன் இவளை திருமணம் செய்தேன், இவள் சிறுவயது தோழனாய் அவளுக்கு இப்போதும் உற்ற துணையாய் இருக்க வேண்டும் என்று தானே? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான் ? ‘

அப்படியே அமர்ந்தவன் வீட்டிலிருந்து ரேவதி அழைக்கவுமே நேரத்தை பார்த்துவிட்டு கிளம்பிச்சென்றான்.

வீட்டுக்கு வந்தவளுக்கோ மனதில் சொல்ல முடியா வலி. மொத்தமாய் அழுது கரைத்தாள். ஆதிரையன் வந்து பார்க்க நல்ல உறக்கத்தில் இருந்தாள். கன்னத்தில் கண்ணீர் தடம் இருக்க முகம் கசங்கி அப்படியே சுருண்டு படுத்திருந்தாள்.

ரேவதியிடம் அவளுக்கான உணவை எடுத்து வந்தவன் அவளை எழுப்ப,எழும்பினாள் இல்லை.

“ஹேய் அதி எழுந்து சாப்பிடு. “

“வேணாம் போ.என் மேல பாசமே இல்லை. எனக்கு யாரும் வேணாம். நான் தனியாவே இருந்துப்பேன்.” சொல்லிக்கொண்டே திரும்பி படுத்தாள்.

அப்படியே உறங்க விட்டவன் அவனுமே அடுத்தப்பக்கத்தில் வந்து சாய்ந்துக்கொண்டான். அவள் சிறுவயது ஞாபகங்கள் மீட்டிப்பார்த்தான்.அவள் அவன் பின்னே திரிவதும் அவன் மடி அமர்ந்து விளையாடுவதும், அவள் தந்தையோடு உரையாடியவை என ஏதோ மேக மூட்டமாய் நினைவில் இருந்தது. அவனிடம் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் புத்தகம் கூட அவனுக்கு அத்தனை நினைவை தரவில்லை.ஏன் கால் சலங்கைக்கூட பெரிதாய் நினைவிலில்லை.

அவள் முகம் விழுந்த கூந்தலை ஒதுக்கி விட்டவன் அவளுக்கு போர்வையை போற்றியும் விட்டான். ஏதோ நினைத்தவனாய் “சாரிடி.” என அவள் நெற்றியில் இதழ் தொட்டும் தொடமலும் ஒற்றி எடுத்தான்.