அத்தியாயம் 19.
மாலை, சொன்ன நேரத்துக்கெல்லாம் வந்து ரேவதியை அழைத்துச் சென்றான் டாக்டரிடம். இரத்த அழுத்தம் கூடியிருப்பதாகக் கூறி ஓய்வெடுக்க கூறியிருந்தார். இவர்கள் வீட்டுக்கு வரவும்,அதிதியும் அப்போதுதான் வந்திருந்தாள்.
அன்றைய நாளும் அதை தொடர்ந்து இரண்டு நாட்களும் அவளை தவிர்த்துக்கொண்டே அதிரையனும் இருக்க, அதிதிக்கும் இருந்த வேலைப்பலுவோடு அவனை நெருங்க முடியாது தவித்துப்போனாள்.
அன்று சனிக்கிழமை,நீண்ட நாட்களுக்குப் பிறகு ஊரில் இருந்த இளைஞர் பட்டாளம் ஆலைக்கு அருகில் இருந்த திடலில் விளையாடுவதற்காக ஒன்றுகூட ஆதிரையனும் எப்போதும் போல இணைந்துக்கொண்டான்.
அதிதி அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்து குளித்து உடைமாற்றிக் கொண்டவள், கையில் தேநீரோடு மாடியேறி வந்தாள். இளைஞர்களில் கூச்சல் அதிகமாக இருக்க யாரென்று பார்க்க, அதிரையன் சேர்த்து ஒரு பட்டாளமே விளையாடிக்கொண்டிருந்தனர். இவளும் இங்கிருந்து அவர்களைப் பார்த்துக்கொண்டே தேநீரை அருந்தினாள்.
ஆம் அருந்தினாள்.தேநீரையா? தேவனையா? அவளே அறியாள். இங்கேயும் ஓரிருவர் அதிதியை காட்டி,
“அண்ணி, அங்க இருக்கவே இங்க இத்தனை கோல் போடறாங்க, நாம வேணும்னா அண்ணியை இங்க வர சொல்லலாம்ணா.”
“டேய் டேய்… பால் சரியா கவர் பண்ண தெரியல என்னை சொல்றியா?”
அவர்களுக்கு இணையாய் பேசிக்கொண்டே இருள் தொடங்கும் மட்டும் விளையாடினார்கள்.
“டேய், அடிக்கடி இப்டி வாங்கன்னா, வருஷத்துக்கு ரெண்டு வாட்டிதான் வரீங்க. ரொம்ப நாள் அப்புறம் விளையாண்டா அப்றமா ரெண்டு நாளைக்கு கை காலை அசைக்க முடியாதுடா.”
“எல்லாருக்கும் சேர்த்தால் போல லீவ் அமையலண்ணா அதான்.”
விளையாடிக் களைத்து அப்படியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். இவர்களோடு பேசுவதும் வீட்டு மாடியைப் பார்ப்பதுமாகவே ஆதிரையன் இருந்தான்.
“அண்ணா நீங்க கிளம்புங்க நாம இன்னொருநாள் மீட் பண்லாம் என மகேஷ் கூற இவனும் கூறிக்கொண்டு கிளம்பினான்.
வீட்டுக்கு வந்தவன் குளித்து ரேவதியோடு பேசிவிட்டு மாடியேற அதிதி அப்போதும் அங்கே தூரமாய் தெரியும் இருள் வானைத் தான் பார்த்திருந்தாள்.
மாடிக்கு வரும் வாயிலில் நின்று அவளையே பார்த்திருந்தான். அவளை தன் கை வளைவுக்குள் கொண்டுவந்து தன் நேசம் மொத்தம் அவளுக்கு உணர்த்திவிட துடிக்க அவளை நெருங்க முடியாமல் பார்த்திருந்தான்.
அவளோடு கோபம் என்றால் அதுவெல்லாம் வெறும் ஊடல் தான். மனதுக்குள் அரித்துக் கொண்டிருக்கும் விடயமே அவளை நெருங்கவிடவில்லை என்பதுதான் உண்மை.
‘அவளுக்கான ஞாயம் கிடைக்க நான் ஏதும் செய்யவில்லையே, இப்போதும் இருக்கும் சொத்து மொத்தமும் அவனுடையதாகவேத்தானே இன்னுமும் இருக்கிறது. அவளுக்கானதை சேர்ப்பித்து அவள் தந்தை கொண்ட நட்பிற்கு நான் நன்றிக்கடனாய் ஏதும் செய்யவில்லையே. ‘
இதுதான் அவனுக்குள் அவனை வருத்திக்கொண்டு இருந்தது.
கிடைக்கவில்லையே என ஏங்கி,மனம் விரும்பியவள், கண் முன்னே இருக்க வேறென்ன வேண்டும் அவனுக்கு.
பார்த்துக்கொண்டு மட்டுமே இருந்தவன் அவனே அறியாது அடிகள் மெல்லமாய் எடுத்துவைத்து அவளுக்கு இரண்டடி இடைவெளியில் இப்போது இருந்தான்.
அதிதிக்கு அவன் பின்னோடு இருக்கிறான் எனும் உணர்வோ உடலை சில்லிடச் செய்ய,
“கவிஞரே…”
“ஷ்…”
அவள் இதழ்களை பின்னிருந்தாவாறே மூடினான்.
அவள், அவன் பக்கம் திரும்பப்பார்க்க,
“திரும்பாத, எனக்கு உன்கூட பேசணும்.”
சரியென்பதாய் அவள் அப்படியே இருந்துக்கொண்டாள்.
“என் மனசுக்குள்ள என் தீக்கு ஞாயம் பண்ணலன்னு உறுதிட்டே இருக்கு. இப்போவும் நான் என் பக்கம் மட்டுமேதானே சரி படுத்தி இருக்கேன்.”
அதிதி ஏதோ சொல்லவர அவளை தடுத்தவன் அவளை இன்னும் பின்னிருந்து நெருங்கி,
“பேசாதன்னு சொன்னேன்ல?”அவன் வார்த்தைகள் அவள் செவி மடல் தீண்ட அவன் செய்கையில் தன்னிலை மறந்திருந்தாள் தீ.
“கண்டிப்பா நீதான்னு அன்னைக்கே தெரிந்திருந்தால் உனக்காக எல்லாமே இழந்திருப்பேன். அப்பா அம்மாக்கூட ரெண்டாவதா ஆகிருப்பாங்க. அது எவ்வளவு பெரிய பிழையா போயிருக்கும்?
ஆனாலும் இப்போ நீயும் இருக்க, எல்லாமும் இருக்கு. என் பக்கம் நான் இழந்தேன்னு ஒன்னும் இல்ல.ஆனாலும் நீ இழந்ததை என்னால மீட்டி தர முடில.”
அவன் கைகளை விலக்கியவள்,
“நான் இழந்த மொத்தமும் ஒன்னாகி அது நீங்களா உங்க ரூபத்துல எனக்கு திருப்பி கிடைச்சிருக்குன்னு நம்புறேன் கவிஞரே.”
கூறிட அவனின் பதிலின்றிப்போக அவளும் தொடர்ந்து பேசினாள்.
“உங்ககிட்ட இதுக்காக மட்டுமே தான் சொல்லல. என் மொத்தம் என்கிட்ட திருப்பி கொடுத்துட்டு உங்களை மட்டும் எப்போவும் கொடுத்திருக்க மாட்டீங்க. அதுக்கப்றம் எல்லாமும் இருந்து எனக்கு என்ன பிரயோஜனம்? அதான்.”
அப்படியே அவன் பக்கம் திரும்பியவள்,
“எனக்கு எங்கவிஞர் மட்டும் தான் வேணும். என் மனம் மட்டும் உணர்ந்து எனை எனக்காக வாழச் செய்த எங்கவிஞர் மட்டும்தான் வேணும். மொத்தமா வேணும்.”
கண்கள் கண்ணீர் பொழிய நெஞ்சம் மொத்தம் நிறைந்த காதலோடு அவனை இறுக்கி அணைத்துக்கொண்டாள் அதிதி.
அவனும் அவளை அதே காதலோடு இனியும் பிரியேன் என்பதாய் அணைத்துக்கொண்டான். அந்த அணைப்பே இருவருக்கும் தேவையாய், போதுமாய். கீழிருந்து ரேவதி அழைக்க இருவரும் அவரவர் நிலை உணர்ந்து விலக, அவன் முகம் காண நாணியவள் செல்லப்பார்க்க அவளை தன் புறம் திருப்பியவன் தன் இதழ் கொண்டு அவள் நுதல் ஒற்றி எடுத்தான். கண்கள் மூடி ஆழ்ந்து அதை அனுபவித்தவள், அவன் மாரோடு ஒன்றிக்கொண்டாள்.
அப்படியே அவன் கைவளைவுக்குள் வைத்துக்கொண்டே அறைக்குள் அழைத்து வந்தான்.
ரேவதி இரவுணவுக்காக மீண்டும் அழைக்க, நேரம் மிகையாய் கடந்திருப்பதை பார்த்தவன்,
“அதி,கீழ போக வேணாமா அம்மா ரொம்ப நேரமா கூப்பிடறாங்க.”
சரியென்று இருவருமாக சென்று ரேவதியோடு இணைந்துக்கொண்டனர்.
அதி,ரேவதிதை ஓரிடம் இருக்க சொல்லிவிட்டு அவருடன் பேசிக்கொண்டே சமையலறையை சுத்தம் செய்தவள், அவருடன் அவர் அறைக்கு வந்து அவர் இரவில் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளை கொடுத்து அவர் கட்டிலில் சாய்ந்துக்கொள்ளும் வரை கூடவே இருந்து விளக்கை அணைத்துவிட்டு வந்தாள். இது இவள் இங்கு வந்த நாள் முதல் செய்வதுதான். இருந்தும் இன்று கொஞ்சம் தாமதப்படுத்திக்கொண்டிருந்தாள்.
இவள் மாடியேறி வர, ஆதிரையன் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தான். இவள் சென்று இரவுடைக்கு மாறிவர, அப்போதும் பேசிக்கொண்டே கட்டிலில் அமர்ந்திருந்தான். அவளை அருகே இடம் காட்டி அமருமாறு அழைக்க, அவளும் அவனோடு வந்து அமர்ந்துக்கொண்டாள்.
பேசிவிட்டு அலைபேசியை அணைத்தவன்,
“ஜீவா கூடத்தான் பேசிட்டு இருந்தேன்.”
“என்ன சொன்னாங்க?”
“இந்த தாத்தாவை என்ன பண்றதுன்னே தெரில. அதான் அவன்ட நேற்று பேசினேன். அதான் இப்போ கால் பண்ணுனான்.
“ஹ்ம்.”
“அவன் சொல்றது போல பண்ணலாமான்னு யோசிக்கிறேன்.”
“அவங்க என்ன சொல்றாங்க? திரும்ப அத்த மனசு கஷ்டப்பட்ற மாதிரி எதுவும் நடக்காம இருந்தா சரி. உங்க அளவுலேயே எதுன்னாலும் முடிச்சுக்க பாருங்க.நம்மளுக்கு அந்த மனுஷன் கூட மல்லுக்கு நிற்க முடியாது.”
“ஓஹ்! அப்போ எனக்கு என்ன சொன்னாலும் பரவால்ல?”
“அப்டில்லாம் இல்ல.நேற்று போல வீடு வரைக்கும் வர வேண்டாம். அதைத்தான் சொல்ல வந்தேன்” என்றாள்.
“ஹேய்…” கொஞ்சம் சத்தமாகவே ஆதிரையன் சிரித்து,
“மனசுக்குள்ள என்னை அடி வெளுக்கட்டும்னு தானே நினச்ச?”
அவனையே பார்த்திருந்தாள் அதிதி. அவள் ரசனையைக் கண்டவன், இப்போது இந்த பேச்சே முக்கியம் என மனதுக்கு கூறி அடக்கினான்.
“அதி,தாத்தாக்கு என்கூட உறவு வச்சுக்கணும், அவருக்கு நான் அவர் பேரன்னு அவர் ஊருக்குள்ள சொல்லி, நான் அவரை தேடிப்போனதா காமிச்சுக்கணும். சோ, நான் அதை பண்ணிட்டா பிரச்சினை இல்லையே. கண்டிப்பா எனக்கும் அதுல துளியும் விருப்பம் இல்லை. ஆனாலும் ஜீவா சொல்லறது போல அப்பப்ப போய் அவரை பார்த்துட்டு வந்துட்டா பிரச்சினை இல்லன்னு தோணுது, ஆனாலும் அம்மாவுக்கு தெரியாம பார்த்துக்கலாம் “
“ஹ்ம். ஆனாலும் அத்தோட விட்டுட்டா ஓகே தான், அதுக்கப்றமா சொத்தை பார்த்துக்கோ, அவர் நாட்டாமை வேலையை பொறுப்பெடுத்துக்கோன்னு வந்து நின்னுட்டா? “
“அதெல்லாம் என்னால பண்ண முடியாது. இருக்க வேலையே மனுஷனை படுத்தி எடுக்குது. அதெல்லாம் ஜீவா மூலமா பேசிக்கலாம்னு சொல்றான். அதனாலதான் அப்டி பண்ணலாம்னு இருக்கேன்.”
“ஹ்ம்.”
“இந்தா,அப்போவே இதை கொண்டு வந்து வச்சிருந்தேன் உன்கிட்ட காமிக்கலாம்னு. ” என்னவென்று பார்க்க,
“உனக்கு ஞாபகம் இருக்கா? அவன் பத்திறப்படுத்திய அவளின் சிறுவயது புத்தகமொன்று. அவனுக்கும் நினைவில் இருந்தவைகளைக் கூறி, ரேவதி கூறும் சிலவும் சேர்த்து கூறினான். அவளுக்கு அதுவெல்லாம் நினைவில் பதியவில்லை. அவர்கள் இறுதியாய் கழித்த பொழுதுகள், இந்த ஊர் விட்டு செல்லும் போது அவர்களின் நிலை, இவளைப் போகவேண்டாம் என மகேஷ் அழுதது இதுவே ஞாபகத்தில். அதனால் தான் மகேஷை கண்டுகொண்டாள் அன்று. மனங்கள் சந்தோஷப்பட்ட இடங்களை காயப்பட்ட இடங்கள் மொத்தமாய் ஆக்கிரமித்துக் கொள்ளும். அதோடு அவன் இரண்டு கை விரல்களில் போட்டு சத்தம் எழுப்பிய சலங்கையை காட்டி,
“இது? “எனக் கேட்க, அதையும் கைக்கு எடுத்து பார்த்தாள். இதுவும் அவள் தந்தை வாங்கிப் போட்டாதாகத் தானே இருக்கும்.
அதை கைகளில் எடுத்து வருடுடிக்கொண்டே பார்த்தவள்,
“எனக்கு இதெல்லாம் நினைவிலேயே இல்லை. சாரி.” மேலும் பழையன அவன் மனதைக் காயப்படுத்துமோ அஞ்சி,அதைப் பற்றி பேசப்பிடிக்காதவளாய் அவனிடம் அதை திருப்பிக்கொடுத்தவள்,
“குட்நைட்.” கூறிவிட்டு திரும்பி படுத்துக்கொண்டாள்.
அவனோ அவளையே பார்த்திருக்க, திரும்பிப் படுத்தவளோ நேற்று இதுவெல்லாம் தான் பேச எண்ணி இருந்தாள், ஆனாலும் கீழிருந்து வரும் போது,இந்த பேச்சுக்களை எதிர் பார்த்து வரவில்லை. அதைவிட அவளோடு அவன் வேறேதும் பேசவேண்டும் என நினைக்க, இவனோ இவர்களின் சிறுகாலத்தை மீட்ட மனம் அதில் லயிக்கவில்லை.
இத்தனை நாளாய் அவன் மடல் வழி பேசிய தமிழ், அவன் கற்றுச் சொன்னவையெல்லாம் அவன் கூறக் கேட்கவேண்டும் போல இருந்தது. தமிழ் பற்றி பேசவே இருவரும் இருவரை மறந்து மனங்களை பகிர்ந்திருந்தனர். ஆனாலும்,இப்போது…
அழுகை வரும்போல இருக்க அவன் புறம் திரும்பாது அப்படியேத்தான் இருந்தாள்.
தாத்தாவை பற்றி பேசியவன், அவளோடு எப்டி, என்ன பேசவென்று ஆரம்பிக்கவே இந்த பேச்சு. அவள் அருகே அவனும் உறங்கியவன் அவள் தோள்களைத் தொட, கையை எடுத்துவிட்டாள்.
“அதி…” அவளை அழைக்க அப்படியே இருந்தாள்.
“என்னாச்சு?” பதிலில்லை.
அவளை தன் பக்கம் திருப்பார்க்க அதற்கும் விடவில்லை. அப்போதுதான் ஏதோ தான் பேசியதில் கோபமாய் இருக்கிறாள் என புரிந்துக்கொண்டான்.
‘ஏதோ சொதப்பிட்டேன் போல.’ உள்ளுக்குள் கூறிகொண்டவன்,
“அதி,கோவமா இருக்கியா?” அவளை தான் புறம் மொத்தமாய் திருப்பி அவனை பார்க்குமாறு செய்தான்.
கண்கள் லேசாய் கலங்கியிருந்தது.
“ஹேய், என்னாச்சு?”
அவள் ஏதும் பேசவில்லை. அவன் மாரோடு அணைந்துக்கொண்டாள்.
“ஹேய். ஏதாவது ஹர்ட் பண்ணிட்டேனா?”
‘இல்லை.’என்பதாய் அவள் தலையை ஆட்ட அவள் முகம் அவன் நெஞ்சில் உரசிக்கொண்டது.
‘மெல்லிய மஞ்சள் ஒளி விளக்கில்
பஞ்சு மஞ்சமதில்
மங்கை தலையணை என்றே
அவன் நெஞ்சில் தஞ்சம் கொண்டாள்…
தலைவனோ சித்தம் கொண்டான்…
அவளைக்களவாடும் எண்ணமும் கொண்டான்…’
“தீ…”
அவன் மாரிலிருந்து தலை உயர்த்தி அவன் முகம் பார்க்க, அவள் முக வடிவை விரல்களால் அளந்தான்.
சின்னதாய் அவனை கட்டிப்போட்டு கட்டளையிடும் கண்கள், கூர் நாசி கூராய் இதழ் தீண்டவிடாது தடுக்க, தோடம்பழ சுலையாய் வரிகள் கொண்டு பிறை நிலவாய் ஈரிதழ் மலர் அவனை வா என்றே அழைப்பதுவாய். தேனெடுக்க வண்டும் அவள் வசமிழக்க அவள் தேகம் தந்த சிறு நடுக்கமும் அவன் மேனி சில்லிடச் செய்தது.
“தீ… “
“ஹ்ம்…”
“தீன்னா சுடுமா? “
அவளோடு பேசிக்கொண்டே அவளைத் தீண்டும் விரல் அதன் பணி தொடர பனியாய் கரைந்தாள் தீ. அவனோ அவள் வெம்மையில் குளிர்க் காய்ந்தான். இனிதாய் கவியும் அங்கே அரங்கேற இசையாய் அவள் முனங்களும் , தாளமாய் அவன் தீ எனும் வார்த்தையும் முழுதானது. முழுமையானது அவ்வுறவும்.
நாளை இதன் இன்னுமொரு பகுதியோடு கதை நிறைவுக்கு ❤️
Leave a Reply