ஆலாபனை-10

10

 

“Find what you Love, and let it kill you” – Charles Bukowski

 

அமுதவிஷம், எத்தகையதொரு வசீகரச் சொல். காதலுக்கு மறுபெயர் இருந்தால் அது இதுவாய்தான் இருந்தாக வேண்டும்! மெல்ல மெல்ல நுனி நாக்கில் தித்திக்க தொடங்கி இறுதியில் என்னை அதற்குள்ளேயே அமிழ்த்தி என் மூச்சை அடக்கிவிடும் விஷம். அதை அறிந்தும் விரும்பியே சரணாகதி ஆகும் நான். காதலெனும் ஆழ்கடல் நஞ்சில் மட்டும் மூச்சிழந்தாலும் முக்குளிப்பது திவ்யசுகம். அதில் பிடிமானம் இன்றி விழுவதில் எனக்கு எவ்வித தயக்கங்களும் இல்லை. தடுக்கி விழுதலுக்கும் தானாய் விழுவதற்கும் உண்டான வித்தியாசம் அறியும்வரை அமுதும் நஞ்சே.

 

கையில் காகிதத்தைத் திணித்துவிட்டுச் சென்றவள் திசையையே பார்த்து நின்ற அவிரன் தலையை உலுக்கிக்கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.

 

 

நன்கு இருள் சூழத் தொடங்கியிருந்த வேளை. கால் போன போக்கில் நடந்து வீட்டை அடைந்த அவிரன் வீட்டினுள் நுழைந்தாலும் அவன் மனம் மட்டும் என்னவோ சில மணி நேரங்களுக்கு முன் நடந்த சம்பாஷணையிலேயே தேங்கிக் கிடந்தது.  மிளிரா அப்படிச் சொல்லிச் சென்ற பிறகு அந்த லைப்ரரியில் இருந்து கிளம்பியவனுக்கு வீடு செல்லும் உத்தேசம் இருக்கவில்லை. நேராக நீண்ட காலம் சந்தித்திராத தன் நண்பன் ஒருவனை காணச் சென்றுவிட்டான். இவனைக் கண்ட மற்றவன் முகத்தில் வந்து போன ஆச்சயர்த்திற்கு பிறகு தான் அய்யோ என்றானது இவனுக்கு. இவனும் மற்றவர்களுடன் சற்று தொடர்பில் இருந்திருக்க வேண்டுமோ?

 

 

அவனிடம் கையிலிருந்த மாத்திரையைக் கொடுத்தவன் அது என்ன மாத்திரை, எதற்கானது என்ற விவரங்கள் அனைத்தும் தனக்கு உடனடியாய் தேவைப்படுகிறது என்றுரைக்க, சிறு சந்தேகத்துடன் ஏறிட்டன மற்றவனின் பார்வை. அதைச் சுதாரித்தவனாய்.

 

“என் ஸ்டூடன்ட் சம்பந்தப்பட்டது” என்று முடித்துவிட்டான்.

 

“ஓ..” என்றவன் எங்கேயோ உள்ளறையை நோக்கிச் சென்று சில நிமிடங்கள் இவனை காக்க வைத்தே திரும்பி வந்தான் ஒருவித குழப்பப் பார்வையுடன்.

 

தன்னெதிரில் வந்தமர்ந்தவனின் முகத்தைப் படிக்க முயற்சி செய்த அவிரன் அதில் எவ்வித தெளிவும் இல்லாததைக் கண்டுவிட்டு.

 

 

“என்னாச்சுடா? எதாவது பிரச்சினையா?” என்றான்.

 

 

அதில் கலைந்தவன் தன்னையே ஆர்வமாய் பார்த்துக்கொண்டிருக்கும் அவிரனை கண்டுவிட்டு தலையைச் சிறு தயக்கத்துடன் இடவலமாய் ஆட்டினான்.

 

“ம்ஹ்ம்.. இந்த மாத்திரை எங்க கெடச்சுது அவி?” என்க

 

 

“சொன்னேனே..  என் ஸ்டூடன்டோடதுனு.. ஏன்டா? எனித்திங் சீரியஸ்?” என்றவனின் குரலில் சிறு பதட்டம்.

 

 

அதை கண்டுகொண்டவன் போல தன் பாவத்தை திருத்திக்கொண்டான் மற்றவன்.

 

“ச்சே ச்சே! டென்ஷனாகாத அவி” என்றவன் பிறகு மெல்ல, “இது ஸ்லீப்பிங் டிஸார்டர்க்கு ப்ரிஸ்க்ரைப் பண்ற டேப்ளட்.. ஆனா இப்ப யாரும் இதை அவ்வளவா ப்ரிஸ்க்ரைப் பண்றதில்லை.. ரொம்ப மோசம்னா தவிர..” என்றவன் எதையோ சொல்லாமல்விட

 

அவிரன், “இதுக்கு.. ஸைட் எஃபெக்ட்ஸ் உண்டா?” என்று கேட்கையிலேயே இல்லை என்றுவிட வேண்டும் என்று எங்கோ ஒரு மூலையில் அவன் மனம் அடித்துக்கொள்வதை அவனே எதிர்பார்த்திருக்கவில்லை.

ஆனால் அவன் பயந்ததை போலவே மேலும் கீழும் அசைந்தது அடுத்தவனின் சிரம் “ம்ம்” என.

 

 

சற்று நேரம் சகஜமாய் மற்றதைப் பேசி இருந்துவிட்டுக் கிளம்பி இதோ, வீட்டிற்கே வந்துவிட்டான் தான். இருந்தும் அவன் மனம் ஒரு நிலையில் நில்லாது தடுமாறிக்கொண்டே கிடந்தது.

 

அதே நினைப்பில் ஸ்னீக்கர்ஸை கழட்டி இன்னொரு செருப்பின் மீது வைத்தவனைக் கலைத்தது வீயனின் கேலிக் குரல்.

 

“என்ன பேப் ட்ரீம் வர்ல்ட்ல இருந்து இன்னும் ரிட்டன் ஆகலையா?” என்ற குரலில் பட்டென தட்டினார்போல நடப்புக்குத் திரும்பியவன் புரியாமல் குரல் வந்த திசையைப் பார்க்க கையில் எதையோ வைத்துக்கொண்டு, ஒரு ஆள் உட்காரும் சோஃபாவில் குறுக்காகப் படுத்துக்கொண்டு ஸ்பூனை வாயில் வைத்திருந்த வீயின் பார்வை “அங்கே கீழே பார்” என்பதாய் சுட்டிக்காட்ட அப்பொழுதே கவனித்தான் அவன் ஷூ ரேக்கை. தான் ஏதோவொரு நினைப்பில் சொதப்பிவிட்டது புரிய அதைக் காட்டிக்கொள்ளாமல் எடுத்துச் சரியாய் வைத்தவன் நேராய் குளியலறை சென்று கை கால் கழுவி வந்தான்.

 

அவிரனது மௌனத்தையே அமைதியாய் பார்த்திருந்த வீயும் அவன் வந்ததும், “பேப்! வா வா.. இங்க வந்து உக்காரு” என்று பக்கத்து சோஃபாவை காட்ட, முகத்தில் கேள்வி பாவத்தை அப்பட்டமாய் காட்டியபடி அமர்ந்தான் அவிரன்.

 

அவன் கையில் ஒரு கிண்ணத்தைத் திணித்தவன், “நீதான ஃபீல் பண்ண.. வாஃபில்ஸும் பான்கேக்குமா போடறேனு.. அதான் இன்னைக்கு கேசரி செஞ்சேன்” என்கவும் அவிரனின் கண்கள் படு அகலமாய் விரிந்தன.

 

அதற்கு வீயனோ,”ரொம்ப பண்ணாதடா” என்று பிடுங்கிக்கொள்ள வரக் கேசரி கிண்ணத்தை தனக்குப் பின்னால் மறைத்துக்கொண்ட அவிரன், “சரி.. சரி..” என்று சமாதானக்கொடியைப் பறக்கவிட்டான்.

 

அதற்கு வாய் நிறையக் கேசரியை அடைத்துக்கொண்டு “உம்ம்” என கண்கள் சுருங்க சிரித்த வீயனை காண்கையில் அவிரனின் அத்தனை குழப்பமும் இருந்த இடம் தெரியாமல் அமிழ்ந்துவிட்டது போலாயின. அந்த ஒற்றை சிரிப்பில். தன்னையுமறியாமல் மலர்ந்துவிட்ட புன்னகையுடன் ஒரு ஸ்பூன் கேசரியை எடுத்து வாயில் வைத்தவனுக்கு உண்மையிலேயே ஆச்சரியம்தான். வைத்த கணம் கேசரியின் ருசியும் பதமும் அகமெங்கிலும் நெய் வாசமாய் ஒரு இனிப்பு பரவியது. வெகு சில பதார்த்தங்களே செய்தாலும் இந்த வீயனின் கைப்பக்குவமே தனிதான்! அது எதுவாய் இருந்தாலும் சரி! அவனுக்கென்று ஒரு தனித்துவம் இருக்கத்தான் செய்கிறது.

 

கண்களை மூடி ஆழ ரசித்தவன் விழிகளை திறக்கையில் அவன் முகத்தருகே வீயின் முகம் அதனுடனே அவனது, “ரசிச்சு சாப்பிட்ற மூஞ்ச பாரு!” உம் சேர அதை எதிர்பார்க்காத அவிரனுக்கு பகிரென்றாக வீயின் நெஞ்சில் கை வைத்து ஒரே தள்ளாய் தள்ளிவிட்டான்,”போ பக்கீ” என்று. அவன் இருக்கையில் போய் விழுந்தவனோ இன்னமும் சிரிப்படங்காமல், “என்னவோ போ வீயா! உன் அருமை யாருக்கும் தெரியல..ப்ச்” என்று சலித்துக்கொண்டு கேசரியில் கவனமானான்.

 

 

கேசரியை ருசித்துக்கொண்டிருந்தவனுக்கு ஏன் அப்படித் தோன்றியதென்று அவனறியான்! ஆனால் திடீரென ஓர் எண்ணம்! ஸ்பூனால் மீதி கேசரியை அலைந்தபடியே தொடங்கினான்.

 

“வீ..” என

 

ஒரு கையில் மொபைலில் எதையோ சுவாரஸ்யமாய் பார்த்துக்கொண்டே வயிற்றில் கிண்ணத்தை வைத்துக்கொண்டு மறு கையால் எடுத்து சாப்பிட்டுக்கொண்டிருந்த வீயனோ அரை கவனத்துடன், “ம்ம்..” என்றான்.

 

“இன்னைக்கு லைப்ரரி போனேன்ல..” என்று அவிரன் இழுக்க

 

 

“ம்ம்.. உன் மிளிராவ பார்த்தியா” என்று முடித்து வைத்த வீயனையே அதிர்ந்து நோக்கினான் அவிரன். வீயனின் கவனம் இன்னும் மொபைலில்தான்.

 

“எப்படி தெரியும்?” என்றவனின் தீவிரக்குரலில் “ப்ச்” என்றொரு சலிப்புடன் மொபைலை அணைத்து டீப்பாயில் வைத்தவன் நேராய் நிமிந்தமர்ந்தான்.

 

“இதென்ன பெரிய சிதம்பர ரகஸியமா பேப்? வர்க்கிங் டேல ஒருத்தன் லீவ் போட்டு லைப்ரரி போறான்.. அதுவும் நேத்து அவன் க்ரஷ்ஷ பார்த்த அதே இடத்துக்கு.. இத கண்டுபிடிக்க எனோலா ஹோம்ஸா வரனும்?” என்றான் கிண்டல் தொனியில்.

 

“வீ விளையாடாத” என்றவனின் தீவிர குரலில் மற்றவனும் சற்றே தீவிரம் காட்டினான்.

 

“என்னாச்சு சொல்லு?” என்றபடி

 

அவிரன் “மிளிரா ஒன்னும் என் க்ரஷ் இல்ல” என்றான் திடீரென நினைவு வந்தவனாக

 

வீ, “சரி.. லவ்” என்று இரு கைகளையும் சரண்டர் என்று உயர்த்திக் காட்டவும் இன்னும் கடுப்பாகினான் அவிரன்.

 

“வீ ஸ்டாப் இட்!” என்ற அவிரனின் அதட்டல் குரலில் மெல்லிய சிரிப்பொன்றைச் சிந்தியவன், “நான் என்ன பண்ண பேப்? ஐ ஜஸ்ட் நோ எவ்ரிதிங் அபௌட் யூ” என்றான் ஒரு மாதிரிக் குரலில். இல்லை அவிரனுக்குதான் அப்படித் தோன்றியதோ? என்னவோ.

 

அவிரனின் முகத்தை பார்த்தவன் பெருமூச்சொன்றை எடுத்துக்கொண்டவனாய் நிமிந்தமர்ந்தான். ‘நான் கவனிக்கிறேன்’ என்ற உடல்மொழியுடன்.

 

வீயன் விளையாட்டுத்தனங்களைக் கைவிட அவிரன் நடந்தவை அனைத்தையும் சொன்னான். அவனுக்கே பல விடயங்களில் குழப்பம்தான். ஆனால் இதை வீயனிடம் சொன்னால் ஏதேனும் தெளிவு பிறக்கலாமே! என்ற எண்ணத்தாலோ என்னவோ அத்தனையும் சொன்னான். சற்று நேரம் நெற்றி சுருங்க சிந்தித்த வீயன்,” ஸ்டே அவே ஃப்ரம் திஸ் அவி” என்று அவன் சற்றும் எதிர்பாராத ஒன்றை வெகு தீவிரமான குரலில் சொன்னான். அவிரன் அவன் முகத்தை அளவிட்டான். அதில் அவன் விளையாடுகிறான் என்று நினைக்கக் கூடிய பாவமில்லை. மாறாய் எதையோ தீவிரமாய் யோசித்துக்கொண்டிருந்தான்.

 

“வீ..” அவிரனின் குரல் சற்று தயக்கமாய் வந்தது.

 

“ஸ்டே அவே ஃப்ரம் ஹெர் அவி! எதுவோ சரியாபடல” என்கவும் அவிரனுக்கு கோவம் வந்துவிட்டது.

 

“வீ அவ பிரச்சனைல இருக்கா! அப்படியே விட சொல்றியா?” என்றான் அழுத்தமாய்

 

“இல்ல! இதுல போய் மாட்டிக்காதன்றேன்” வீயனின் குரலிலும் அழுத்தம்.

 

“என்னால மிளிராவ எப்படியோ போகட்டும்னு விட முடியாது வீ!” அவிரன் இத்தனை அழுத்தமாய் ஒன்றில் நின்று வீயன் இதற்கு முன் கண்டதில்லை. உள்ளுக்குள் வெகுவாய் அதிர்ந்து போனான் வீயன்.

 

“வெல் தென்! என்னாலயும் உன்ன எப்படியோ போனு விட முடியாது அவி!” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பியவன் கையிலிருந்த கிண்ணத்தை டீப்பாயில் எரிந்துவிட்டு எழுந்து சென்று அறைக்கதவை அடிச்சாத்திக்கொண்டான். வீயன் இப்படி ஒரே மூச்சாய் ஒன்றை மறுத்து அவிரன் பார்த்ததில்லை. இதுவே முதல் முறை. அதுவும் அவிரனிடம் இப்படி அவன் நடந்துகொள்வது, அவிரனால் அன்று நடந்த எதையுமே நம்ப இயலவில்லை. அப்படியே அமர்ந்துவிட்டான்.

 

அத்தனை நேரம் அங்குப் படர்ந்திருந்த நெய் வாசம் விலகி கரிந்த நிசப்தமே நிறைந்தது.

 

 

நொடிகள் நிமிடங்களாகின. ஆழ மூச்சிழுத்துவிட்டுக்கொண்டு எழுந்த அவிரன் நேராய் சென்று அப்படியே தன் படுக்கையில் விழுந்தான். விழுந்த முதல் சில நிமிடங்கள் தான் நினைவில் இருந்தது. எப்பொழுது கண்ணயர்ந்தானோ மறுமுறை அவன் விழிக்கையில் விழிகளை பிரித்தெடுப்பதற்குக் கூட உடலில் தெம்பில்லாத நிலை. காந்திய மணிக்கட்டுகளில் கவனம் பதிய அவன் கைகளை யாரோ படிக்கட்டு கைப்பிடியோடு சேர்த்துக் கட்டியிருப்பதை உணர்த்தியது. உடல் தோய்ந்து கீழே சரிந்து கிடக்கிறான் போலும் மேலே இருந்த கட்டு கையை உடலில் இருந்து பிய்த்துவிடும் போல வலி பின்னியது, அவனது முழு கனமும் கையில் விழுந்ததில். வாங்கிய  கசையடிகளால் ஆங்காங்கே கிழிந்து தொங்கிய சட்டையும் முதுகு முழுதும் காய்ந்த ரத்த வரிகளுமாய் கிடந்தான். கிழிந்த சட்டையின் நூலும் துணியும் ரத்தம் காயாத காயங்களில் பட்டு மரண வேதனையைக் கூட்டியது. அவிரனுக்கு இது நினைவிருக்கிறது. இந்த அவிரனுக்கு வயது பதிமூன்றோ பதினான்கோ.. வலி தாளாத உடம்பு விழித்துவிடு என்று அலறி கெஞ்சுகிறது. விழிகளைக்கூட சரிவரத் திறக்க இயலாத அவிரனால் தப்பக் கூட நினைக்க முடியவில்லை. தொலைவில் வரி வடிவமாய் அப்பா வருவது தெரிந்தது. அவர் கையில் என்ன அது? மறுபடியும் சாட்டையா? அவர் நெருங்க நெருங்க அவிரனின் உடல் உதறத் தொடங்கியது. தூக்கத்தில் உடலை முறுக்கிக்கொண்டான். கண்மணிகள் இரண்டும் முடிய விழிகளுக்குள் அலைபாய்ந்தன. அவர் நெருங்கி அவனருகில் குனிந்தமர்ந்தார். அவனது முன்னுச்சி கேசத்தைக் கொத்தாய் பற்றி நிமிர்த்தினார். விழிகள் இரண்டும் சிவந்து மதுவில் மிதந்த அப்பாவின் முகம் அகோரமாய் தெரிந்தது. அவன் கண்களை இறுக மூடிக்கொண்டான். அப்பொழுதுதான் அந்தக் குரல் கேட்டது! எங்கிருந்தோ வந்த அதே குரல்! அவன் தேகத்தைச் சில்லிடச் செய்யும் அதே சிலீர் குரல்!

“அவிரா.. எழுந்துக்கோ” என்று காற்றோடு காற்றாய் கலந்து வந்த அதே குரல்! பட்டென விழிகளை திறந்துகொண்டான். வேர்வையில் குளித்த உடல் வயதுகேற்றார் போல் வளர்ந்திருந்தது. கண்ணெதிரே அவன் அறை காற்றாடி சுழன்றுகொண்டிருந்தது. பெரிய மூச்சுக்களாய் எடுத்துக்கொண்டவன் எழுந்தமர்ந்தான். உடலில் இன்னும் அந்த படபடப்பு மிச்சம் இருந்தது. தொண்டை வறண்டு கிடந்தது. இதயத் துடிப்பை அவனால் கண்ணாலையே பார்க்க முடிந்தது. அருகிலிருந்த குவளை நீரை மொத்தமாய் தொண்டையில் சரித்துக்கொண்டவன் தன்னியல்பு மீளத்தொடங்கினான்.

 

சில நொடிகள் அப்படியே அமர்ந்துவிட்டவன் முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டு நிமிரச் சட்டென நினைவு வந்தது அந்த குரல்! நிச்சயம் அவனை யாரோ எழுப்பினர். யாரோ என்ன யாரோ! அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் தான் எழுப்பியிருக்க வேண்டும்! சுற்றுமுற்றும் பார்வையை ஓட்டினான். அவன் அறையினுள் யாரும் இருப்பதாய் தோன்றவில்லை. எழுந்து பால்கனி பக்கம் சென்றவனுக்கு அங்கும் ஏமாற்றம் தான். அன்று போல் தான் இன்றும் அந்த தெரு விளக்கின் மஞ்சள் ஒளியைத் தவிர்த்து  அத் தெருவே வெறிச்சோடிக் கிடந்தது. ஏமாற்றத்துடன் திரும்பியவனின் காலில் ஏதோ இடற கீழே பார்த்தான். பிரிக்கப்படாத உள்ளங்கை அகல ஸ்ட்ராபெர்ரி கேண்டி ஒன்று கிடந்தது. எடுத்துப் பார்த்தான். அதில் “குட்நைட் அவிரா” என எழுதப்பட்டிருந்தது. கைகளில் மெல்லிய நடுக்கம்.

 

அப்போ எதுவுமே கனவில்லை! அந்த குரல் நிஜம்! அவன யாரோ ஸ்டாக் பண்றதும் நிஜம்! இத்தனை வருடம் நிழலாய் நடந்துகொண்டிருந்த ஒன்றிற்கு இப்பொழுது உருவமும் முளைக்கத் தொடங்கிவிட்டது. அதுவும் இந்த கேண்டி.. அப்படியென்றால் எத்தனை வருடமாய் பின்தொடர்கிறது அவனை?

 

கேண்டியை மேசை இழுப்பில் வைத்து மூடியவன் அறையில் இருந்து வெளியேறினான். வீயனின் அறைக் கதவு சாத்தப்பட்டிருந்தது. மெல்ல எட்டுகள் வைத்தவன் லேசாய் கதவைத் தள்ளிப் பார்த்தான். வீயன் உறங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. கதவை பழையபடி சாத்திவிட்டு வெளியே வந்தவன் தன் அறைக்குள் நுழைவதற்கு முன் அவன் கவனத்தில் விழுந்தது, வீயனது செருப்பு இடம் மாறியிருந்தது.

 

 

காலையில் நேரம் கடந்தே விழிப்புத் தட்டியது வீயனுக்கு. கண்களைச் சுருக்கி அருகில் மேசையில் கிடந்த ஃபோனை எடுத்துப்  மணி பார்த்தான். இது அவிரன் கல்லூரிக்கு கிளம்பும் வேளையைத் தாண்டி சில நிமிடங்கள் கடந்திருந்தன. பெருமூச்சுடன் எழுந்தமர்ந்தவன் கைகளை நீட்டிச் சோம்பல் முறித்துவிட்டு எழுந்துகொண்டான்.

 

அடுக்களை வந்து வெந்நீரை அடுப்பில் வைத்தவன் அங்கிருந்தே வாசல் புறம் கவனம் பதிக்க முன்னடியிலேயே அவிரனின் ஃபார்மல் ஷூ கிடந்தது. வீயனின் புருவம் நெரிந்தன. இவன் இன்னும் கிளம்பலையா என. தண்ணீர் கொதிக்கவும் தனக்கு மக்கில் காபியைக் கலந்தவன் குரல் கொடுத்தான் அங்கிருந்தே, “பேப் காஃபி?” என்று.

 

அந்தப்புறம் இருந்து பதில் எதுவும் வராமல் போக தன் மக்கை வலக் கைக்கு மாற்றியவன் அவிரன் அறைக் கதவில் இடக்கையை பதித்து லேசாய் தள்ள அது திறந்துகொண்டது. உள்ளே எட்டிப் பார்த்தவனின் பார்வையில் அவிரன் அங்கிருப்பதற்கான எந்தவொரு தடயமும் இருப்பதாய் படவில்லை. அவிரன் வேலைக்கு எடுத்துச் செல்லும் பேக்பாக் வேறு அதனிடத்தில் அப்படியே தொங்கிக்கொண்டிருக்க வீயனின் முகம் சந்தேகத்தில் சுருங்கியது. விடுவிடுவென வெளியேறியவன் ஷூ ரேக்கை நோட்டமிட அதில் அவிரனது ஸ்னீக்கர்ஸ் மாயமாகியிருந்தது. வீயனது முகச்சுருக்கம் விடையறிந்ததில் ஒரு கணம் தளர்ந்து பிறகு பாறையாய் இறுகியது.

 

போயாச்சு! அவன் அத்தனை சொல்லியும் அவிரன் அவளைப் பார்க்கக் கிளம்பி சென்றிருக்கிறான்! அதுவும் அவன் அத்தனையாய் நேசிக்கும் வேலைக்கு விடுப்பெடுத்துக்கொண்டு! அவி! அவி! இதென்ன முட்டாள்தனமான வீம்பு அவி! வீயனின் தாடை இறுகியது. வலக்கைக்குள் இருந்த கோப்பை அவனது அழுத்தம் அத்தனையும் உள்வாங்கிக்கொள்ள இயலாமல் நொறுங்கிச் சிதறியது, கைகளில் வழிந்த ரத்தத்தையே வெறித்து நின்றான் வீயன்.

 

கண்மண் தெரியாமல் வீட்டை நோக்கி ஓடிக்கொண்டிருந்தாள் மிளிரா. அவள் உடல் முழுதும் பதட்ட அலைகள் பரவிக்கிடந்தன. எங்குப் போகிறோம் எதிரே என்ன இருக்கிறது என்று பாராமல் ஓடியவள் லைப்ரரி இருக்கும் தளத்தை எட்டவும் லைப்ரரியினுள் நுழைந்து அப்பெரிய மரக்கதவுகளை இழுத்து மூடி அதன் மீதே சாய்ந்துகொண்டாள். மூச்சு சீராவதாய் இல்லை. வாயை இரு கரங்களால் மூடிக்கொண்டு வெளிச் சத்தத்தைக் கேட்க முயற்சி செய்தாள். யாரும் அவளைப் பின்தொடரவில்லை. பல மணித் துளிகள் அப்படியே கழிய இனியும் யாரும் வரமாட்டர் என்ற தைரியத்துடன் அவள் கதவை இழுக்க அது அசைய மறுத்தது. வெளிப்புறம் இருந்து யாரோ பூட்டியிருக்க வேண்டும்! மெல்ல மெல்ல உரைக்கிறது அவள் இருக்குமிடம்! பல வருடங்களாகின அவள் அந்த லைப்ரரி பக்கம் வந்து. பால்ய காலத்தில் கிட்டத்தட்ட அங்கேயே குடியிருந்தவள் அவள். ஆனால் அதற்கு பிறகு நடந்த சம்பவங்கள் அவளை அங்கு அதிகம் தங்கவிடாமல் விரட்டின. அதிலும் இரவு நேரம் தனிமையில்.. ம்ஹூம்! கனவில் கூட வர நினைய மாட்டாள். உள்ளே மாட்டிக்கொண்டோம் என்பது புரியத் தொடங்கவுமே உலகம் தலைகீழாய் புரண்டதுபோலானது மிளிராவுக்கு. அளவுகடந்த பய மிருகம் அவளை கவ்வி மெல்ல மெல்ல விழுங்கத்தொடங்கியது. கதவை படபடவென தட்டினாள். ஒரு பிரயோசனம் இல்லை. அசையாமல் நின்றது. கத்த நினைத்தவளுக்கு வாயைத் திறந்தாள் காற்றுதான் வந்தது. உடல் உறைந்து போன நிலை. கண்ணில் இருந்து நீர்த் தாரை தாரையாய் நில்லாமல் கொட்டியது. படபடவென இரு கைகளாலும் தட்டிக்கொண்டிருந்தவளை கலைத்தது அக்குரல்!

 

“என்னவிட்டு எங்க போற?” என்ற குரலில் அவள் முதுகுத் தண்டில் குளிர் பரவியது. அப்படியே உறைபனியாய் நின்றவள் மெல்லத் திரும்பினாள். அங்குத் தொலை தூரத்தில், சன்னல் வழியாய் கசிந்த நிலா வெளிச்சத்தில் ஒரு உருவம் நின்றுகொண்டிருந்தது . ஓர் இளைஞன். சர்வமும் அடங்கியவளாய் அப்படியே நின்றாள் மிளிரா.

 

கண்களை சற்று விரித்துப் பார்க்க முயற்சி செய்தாள். அது அப்பாதானே? ஆம்! அப்பாவேதான்! அவள் கடைசியாய் அவரை எப்படிப் பார்த்தாளோ அப்படியே! மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து முன்னேறிய உருவத்தின் உடலில் பல காயங்கள். ரத்தம் வழிய நடந்து வரும் அப்பாவைப் பார்த்தவள் கால்கள் தோய்ந்து அப்படியே தரையில் மடிந்தமர்ந்துவிட்டாள். தந்தையைக் கண்டு கட்டிக்கொள்வதற்குப் பதிலாய் உயிர் நடுங்கியது இவளுக்கு அவரது கோர உருவத்தைக் கண்டு. ஆம் இது அவள் அப்பாதான். இந்த உருவம்.. கோரைப் பற்களுடன் கண்கள் சிவந்து தன்னை நோக்கி நடந்து கைகளைக்  காட்டிக்கொண்டு வரும் உருவத்தைக் கண்டு அவள் ஒடுங்கினாள்.

 

“அப்பா கிட்ட வந்துருடாமா” என்றொரு வித குழைந்த குரலில் கூப்பிட்டுக்கொண்டே அவ்வுருவம் நெருங்கக் காதுகள் இரண்டையும் கைகளால் பொத்திக்கொண்டவள், “இல்ல! இல்ல!” என்று அலறியபடியே மயங்கிச் சரிந்தாள்.

 

மீண்டும் விழிப்புத் தட்டுகையில் அவள் நினைத்தது போலவே அவள், அவள் படுக்கையில் இருந்தாள். கணம் தாழ்த்தாது விடுவிடுவென கிளம்பிய மிளிரா அவிரனை காணச் சென்றாள்.

 

 

வண்டியை ரெஸ்டோபாரின் எதிர் புறம் நிறுத்தியவளின் கடைக்கண்ணில் விழுகிறது அந்த கருப்பு கார். இங்கும் அவளைப் பின்தொடர்கிறார்கள்! அதைக் கண்டும் காணாததுபோல இறங்கியவள் உள்ளே நுழைந்து ஒருவர் மட்டும் அமரும்படியான ஒரு ஓரத்து இருக்கையை பார்த்து அமர்ந்தாள். அவளது பார்வை மட்டும் அவிரனுக்காக அவ்விடத்தை அலசிக்கொண்டே இருந்தது. அவன் கண்ணில் படவில்லை. தன்னை நோக்கி வரும் பணியாளிடம் வாயைத் திறப்பதற்குள் அவரே, “ரெஸ்ட்ரூம் மேம்” என்றுவிட்டு அகல. எதையோ ஆர்டர் செய்தவள் போலவே சற்று நேரம் அமர்ந்திருந்தவள் பிறகு எழுந்து அந்த ரெஸ்ட்ரூமை நோக்கி நடந்தாள். ரெஸ்ட்ரூம் கதவைத் தள்ளித் திறக்க அவள் கை வைக்கையிலேயே அதன் பக்கத்து ‘ஸ்டாஃப்ஸ் ஒன்லி’ கதவு திறந்து அதற்குள் இழுக்கப்பட்டாள். அவிரன்!

 

எதுவும் பேசாதே என்பது போல் உதட்டில் விரல் வைத்து சைகை செய்தவன் அவள் கரம் பற்றி இழுத்துச் சென்றான். அவர்கள் கிட்சனின் பின்புற கதவு வழியாய் யார் கவனத்தையும் ஈர்க்காத வண்ணம் வெளியேறினர். அது சற்றே குறுகலான சந்து. ஒருவர் மட்டுமே தாராளமாய் நிற்கலாம். இருவர் என்றால் இடித்துக்கொண்டேதான் நிற்க வேண்டும். பின்பக்க கதவை அடைத்தவன் அவளை தன் முன்னால் நிறுத்திக்கொண்டான்.

 

“ஆர் யூ ஆல்ரைட் மிளிரா?” என்றவாறு.

 

அவனை ஸ்பரிசிக்கும் அருகில் நின்றவளோ மெல்லத் தலையசைத்தாள்.

 

அதில் திருப்தியுராதவனாய் எதிரில் இருப்பவளை எடைபோட்டான் அவிரன். ஆஃப் ஓய்ட் நிற காட்டன் ட்ரௌஸர், மென் நீலத்தில் தொள தொள காட்டன் சட்டை, ஏனோதானோவென முடியப்பட்டிருந்த கூந்தல்.. ஆனால் இது எதற்குமே சம்பந்தமில்லாமல் கழுத்தில் மாவ்(mauve) நிற ஸ்கார்ஃப். அதை உற்றுக் கவனித்தவனின் கண்கள் கூர்மையானது. அவள் சுதாரிப்பதற்குள் அவள் கழுத்தில் கிடந்த ஸ்கார்ஃபை விலக்கியவன் அங்குக் கிடந்த தடத்தைக் கண்டு அதிர்ந்தான். அவள் பார்வை தரையை தொட்டது.

அது.. அது யாரோ கழுத்தை நெறித்ததற்கான தடம்தானே?

 

அவிரன்,”எ.. என்ன மிளிரா இது?”

 

மிளிராவிடம் மௌனம்.

 

அவள் தாடையைப் பிடித்து நிமிர்த்தியவன் அவள் கண்களையே கூர்மையாய் நோக்கினான்.

 

“என்னாச்சு மிளிரா?” அவிரனின் குரலில் அழுத்தம் கூடியிருந்தது.

 

 

நேற்று லைப்ரரியிலிருந்து அப்படி கிளம்பியவளுக்கு நேராய் வீடு செல்லும் எண்ணம் துளியும் இருக்கவில்லை. மாறாய், வெளியில் மனம் போன போக்கில் அலைந்துகொண்டிருந்தவள் நன்றாய் இருட்டிய பிறகே வீட்டிற்கு வந்தாள்.  வண்டியை பார்க் செய்துவிட்டு வீட்டை நோக்கி நடந்தவளின் நடையில் சிறு தயக்கம் திடீரென. பார்க்கிங் ஏரியாவில் இருந்து வீட்டிற்குச் செல்ல பொது ஐந்தாறு நிமிடங்கள் ஆகலாம். வீட்டைச் சுற்றி மரங்களும் செடிகளுமாய் இருப்பதால் ஆங்காங்கே விளக்குகள் போடப்பட்டிருந்தாலும் சில இடங்களில் இன்னும் இருள்வாசம் இருக்கத்தான் செய்தது. அப்படி ஒரு இடத்தை அவள் கடக்கும்பொழுது தான் அங்கு அவளைத் தவிர வேறு யாரோ இருப்பதாய் ஓர் எண்ணம் எழுந்தது. அவள் சுதாரிப்பதற்குள் நொடிப்பொழுதில் அந்த இருளுக்குள் பிடித்து இழுக்கப்பட்டாள் கழுத்தோடு சேர்த்து. ஆம், அவள் கழுத்தில் எதோ ஒரு கயிற்றை கட்டி இறுக்கிய ஒரு உருவம் அவளை இருளுக்குள் இழுத்து நெறித்தது. என்ன தான் அவளுக்கு பின்னால் இருந்து நெறித்தாலும் அவளால் திமிறும்பொழுது உருவத்தைக் கொஞ்சம் பார்க்க முடிந்தது. ஆனால் அதில் எந்த வித பிரயோசனமும் இருக்கவில்லை. ஏனெனில் முழுக்க கருப்பு உடுப்பு அணிந்திருந்த உருவத்தின் முகத்திலும் முகமூடி. அவள் மூச்சே நின்றுவிடும் என்று நினைக்கையில் சட்டென கயிற்றை உருவிய உருவம் அவள் கழுத்தைப் பிடித்து காம்பௌண்ட் சுவரோடு சேர்த்து அழுத்தியது.

 

“ஸ்டே அவே ஃப்ரம் அவிரன்! அவன் எனக்கு மட்டும்தான் சொந்தம்!” என்ற உருமல் குரலில் விழிகளைப் பிரித்தவள் எதிர்பாராத சமயம் சட்டென  அவ்வுருவத்தை தள்ளிவிட்டு ஓடத்தொடங்கினாள். இதில் இருந்து தப்பியவள் லைப்ரரியில் சிக்கிக்கொண்டாள்.

 

கேட்ட அவிரனுக்கு என்ன சொல்லவென்று தெரியவில்லை.  அவனால் அதை முழுதாய் உள்வாங்கிக்கொள்ளக்கூட இயலவில்லை.

 

மிளிரா, “அவிரன்.. சம்படி இஸ் வாட்ச்சிங் அஸ்” எனவும் தயக்கமாய் அவள் தோள் பற்றியவன் இறுக அணைத்துக்கொண்டான்.

 

அவிரன், “நான் உன்ன நம்பறேன் மிளிரா.. மனசார நம்பறேன்! இதுல இருந்து நிச்சயம் உன்ன வெளில கொண்டு வந்துடுவேன்..” என்றவன் ஒரு முடிவுக்கு வந்தவனாக,

 

“இனி நாளைக்கழிச்சு நாம மீட் பண்ணலாம்.. இடம் நான் சொல்றேன்..”

 

“ம்ம்” என்றவளையே பார்த்திருந்தவன்

 

“ப்ளீஸ் பத்தரமா இரு” என்று அனுப்பி வைத்தவனின் முஷ்டி இறுகின.

 

 

எங்கோ,

 

மிதுனா அந்த பெரிய வீட்டில் வேலைக்குச் சேர்ந்து சில மாதங்கள் கடந்திருந்தன. அவள் தேவையில்லாத எந்த விடயத்திலும் மூக்கை நுழைப்பவளில்லை. சொல்லப்போனால் அவள் வந்து பேசுபவர்களிடம் இருந்தே ஒதுங்கிப் போகும் ரகம். அவள் வயதையொத்த நண்பர்கள் என எவரும் இல்லை. ஏன் நண்பர்கள் என்றே எவரும் இல்லை. அவள் வாழ்க்கை முழுதும் வீட்டில் அண்ணிக்கு வேளை செய்து கொடுப்பது. பள்ளி செல்வது அங்கிருந்து நேராய் தனது பகுதி நேர வேலைக்குச் செல்வது பிறகு மறுபடியும் வீட்டு வேலை இரவில் படிப்பென கழிபவை. அதில் முதன் முதலாய் நுழைந்தவன் தான் அவிரன். அவள் வேலை செய்யும் வீட்டுப் பிள்ளை. ஒரே பிள்ளை. தன் வாழ்க்கை தான் நரகம் என்று எண்ணியவளுக்கு இல்லை என நிரூபிப்பதைப்போலொரு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தவன். அத்தனை பெரிய வீட்டில் உயிராய் கூட மதிக்கப்படாத சிறுவன்.

அன்று சீக்கிரமாய் வேலைக்கு வந்தவள் பார்த்த முதல் காட்சியே படிக்கட்டுக்கருகில் சுருண்டு கிடந்த அவிரன் தான். கண்ட காட்சியில் பதறியவள் சுற்று முற்றும் பார்வையை ஓட்டினாள். அவன் அப்பா இருப்பதற்கான சுவடில்லை. ஓடிச்சென்று ஒரு குவளை நீரை கொண்டு வந்தவள் புகட்டினாள். மெல்ல எழுந்தமர முயற்சி செய்தான். இவள் கேட்ட அத்தனைக்கும் வேண்டாமென தலையசைத்தான். தட்டுத்தடுமாறினாலும் தானே எழுந்து தன் அறை நோக்கி நடந்தான். செல்பவனையே பார்த்து நின்ற மிதுனாவிற்கு மனம் பிசைந்தது. இவ்வுலகத்தின் மீதிருந்த கடைசி நம்பிக்கையும் பறக்கத் துடித்தது. அப்பொழுதுதான் பார்த்தாள். கடைசி படியில் நின்றிருந்தவன் அவளை ‘வா’ என்பதுபோல கையசைத்து கூப்பிட்டான்.

 

இவள் என்னவோ ஏதோவென்று பதறியடித்துக்கொண்டு விடுவிடுவென படிகளைக் கடந்து சென்று அவன் முன் நிற்க, அவன் அவனது பையில் கைவிட்டு எதையோ எடுத்து நீட்டினான். அது ஒரு ஸ்ட்ராபெர்ரி கேண்டி. அவள் தயக்கமாய் பார்க்க அதை அவள் கையில்  வைத்துவிட்டுத் திரும்பி அறையினுள் சென்றுவிட்டான்.