ஆலாபனை-11

WhatsApp Image 2022-11-29 at 8.00.56 PM-52bb7fdb

ஆலாபனை-11

  • Yagnya
  • November 30, 2022
  • 0 comments

11

 

“Being against evil doesn’t make you good” – Ernest Hemingway

 

சிறுக சிறுக சேர்த்து வைக்கிறேன் நான் வாழாமல் விட்ட தருணங்களையெல்லாம்.. அன்புகள் ஒட்டா மெர்குரி உலகில்.. என் ரகஸிய ஆசைகளை அடி மனதோடு புதைத்து. அதற்கென்றொரு காலம் வருகையில் பனிச்சாரலாய் படரவிடும் கனவுகளில் தித்திக்கிறேன், வர இருப்பது தீ பிழம்பென்று அறிந்தும். மாற்றி எழுதவியலாத விதியை கிழித்தெறிய துடிக்கும் வெறியை எவராலும் கட்டிப்போட முடிவதில்லை.

 

கண்ணுக்கெட்டிய தூரம்வரை அடர் பச்சையை அள்ளித் தெளித்தாற்போல படர்ந்து கிடந்தது மரங்களும் செடிகளும். அதற்கு மேல் பனி மூட்டத்துடன் விரிந்துக்கிடந்த ஆகாயம். என்னவோ இருவேறு வண்ண துணிகளை அடுத்தடுத்து அடுக்கியது போலொரு பிரமை. அதற்கிடையில் ஆலாபனையுடன் ஆங்காங்கே சிறகடிக்கும் பட்சிக்கூட்டம்! பார்க்கவே அவ்வளவு ரம்மியம்.

 

தனது பால்கனியில் நின்று இமை ஓரங்களில் ரசனை சுருக்கங்களுடன் வானை வெறித்திருந்த மிளிராவின் பார்வை சற்று கீழிறங்கியது. இதோ.. இதே இடத்தில்.. இதே மரங்களுக்குப் பின்னால்தான் நேற்று அவளை யாரோ கொல்ல முயற்சி செய்தனர் என்றால் நம்ப இயலுமா? அதுவும் இப்படியொரு சூழலில் இவ்விடத்தைக் கண்டுவிட்டு.

 

ஆழ மூச்சிழுத்தாள். பச்சை வாசம் பரவசமாய் பரவியது உள்ளுக்குள். பார்க்கப் பார்க்க மெய்யாகவே கண்களில் கொஞ்சம் குளுமை கூடியதுபோலொரு உணர்வு.

 

 

அவள் வாழ்க்கை இருக்கும் நிலைக்கு யாரேனும் அவளை இப்பொழுது பார்த்தால் மொத்தமாய் மரை கழண்டுவிட்டது  என்றுதான் எண்ணப்போகிறார்கள். ஏன் அப்படியே இருந்துவிட்டுத்தான் போகட்டுமே! ஏற்கனவே இங்குச் சிலர் அதற்காகத்தானே ஏதேதோ செய்துகொண்டிருக்கின்றனர்.

 

எதை உணர்வதைத் தடுக்க அன்று ஓடினாளோ அதே உணர்வுகள் இன்று மெல்ல மெல்ல உடலெங்கும் பரவி அவளை ஆட்கொள்ளத் தொடங்கிவிட்டது. ஆம்! அவள் வாழ்வா சாவா போராட்டத்தில்தான் இருக்கிறாள். ஏன் போராடுபவர்கள் உலகில் முத்தங்கள் தடை செய்யப்பட்டதா? இந்த வாழ்வே எக்கணம் வரை என்று தெரியவில்லை. அவள் இக்கணத்தில் கொஞ்சமாவது வாழ்ந்துவிட்டுப் போகட்டுமே. ஐந்தே நிமிடம் ஆயுள் கொண்ட சொர்க்கம் எனினும் அதை வாழ்ந்து பார்க்க ஆசை கொண்டாள் மிளிரா. அவிரன் அவளை ஆசை கொள்ளச் செய்தான்.

 

திடீரென முளைத்த அப்பா அம்மா, அந்நியமாய் போன வினி, அடையாளமே தெரியாமல் மாறின சவி, சட்டெனக் கட்சி தாவிய டாக்டர் ஜெயன் என்று இக்கணம் வரை பூதாகாரமாய் மிரட்டிய அனைவரும் மனதில் பின் வரிசைக்குச் சென்றுவிட அவிரன் முதல் வரிசையில் முதல் ஆளாய் இடம் பிடித்துக்கொண்டான்.

 

அவளது பார்வை திடீரென ஓரிடத்தில் தடுமாறியது. அங்குக் கீழே மரத்தருகில் நின்றுகொண்டு எந்த ஒரு பாவமும் இன்றி இவளையே வெறித்துக் கொண்டிருந்த அந்த உருவத்தைப் பார்த்ததில். பார்வை மெல்ல சுழட்டியது. கவனம் தப்ப தொடங்கின. கேட்டு சுகித்த பறவைகளின் ஆலாபனை எங்கோ தொலை தூரத்தில் தொலைந்தன. உடல் முன்னும் பின்னுமாய் ஆடின. கீழே விழாமல் இருக்கத் தடுப்பில் கை வைத்து தன் உடலை பின்னிருந்த சுவரில் தள்ளியவள் அப்படியே மயங்கிச் சரிந்தாள்.

 

ச்சே என்ன செய்துகொண்டிருக்கிறாள் இவள்? ஆசையெனும் புது துள்ளல் உள் நுழைந்துவிட்டால் இத்தனை நேரம் உயிர்காக்கப் பிடித்திருந்த கேடயம் தளர்ந்துவிடுமா? இப்படி பால்கனியில் அவள் பாட்டு நின்றுகொண்டிருக்கிறாளே! என்னதான் அது அவள் அறையாகவே இருந்தாலும், அவ்வறையின் கதவு பூட்டப்பட்டே கிடந்தாலும், இவர்களுக்குலாம் பூட்டிய கதவொரு தடையா என்ன? எத்தனை நேரம் ஆகப்போகிறது அவளை பின்னிருந்து தள்ளிவிட? என்ற எண்ணம் செல்லும் திசையைக் கண்டவள் அரண்டுவிட்டாள். கடைசியில் எல்லாவற்றிற்கும் பயப்படும் நிலையில் வந்து நின்றுவிட்டாளே! அவளை இப்படி பாரானாய்ட் ஆக்குவதற்குத்தான் இத்தனை மிரட்டலோ? இன்னும் எத்தனை காலம் இப்படிப் பயந்து பயந்து சாவது. இப்படித் துடிக்க வைப்பதற்கு ஒரேயடியாய் கொன்றுவிடலாமே! இது என்ன மாதிரி தண்டனை இவளுக்கு.

 

 மீண்டும் கண் விழிக்கையில் வான் முழுதும் இருள் போர்வை. அதைக் கிழத்து எரிந்துவிடும் நோக்கில் கொட்டித்தீர்த்திருந்த பேய் மழை. அதை உணர்த்துவது போல் உடல் எங்கும் நீரில் பொதுமியிருக்க இரவு பனியில் உறைந்துகொண்டிருந்தாள் அவள். உயிரை உருக்கிடும் பனியில் கிடந்தவளுக்கு விரலைக்கூட அசைக்க முடியாத நிலை. உடல் முழுதும் உறைந்து கிடந்தது. முகம் வெளிறி உதடு காய்ந்திருக்க அவளுக்கு தன் நிலையை நினைத்தே பரிதாபமாக இருந்ததோ என்னவோ. அவளுக்கென இரு சொட்டு கண்ணீரை அவளே சிந்திக்கொண்டாள். உறைந்த கன்னத்தில் வெதுவெதுப்பாய் வழிந்தது அத் துளி கண்ணீர். மெல்ல மெல்ல முயன்று கை கால்களை அசைத்து எழுந்தமர்ந்தாள். கொஞ்ச நேரம் முன்புவரை இருந்த சுமுக நிலை மொத்தமாய் சிதைய விரக்தி சூழ்ந்திருந்தது  அவளுள். பின்னால் திரும்பியவள் பால்கனி கதவு குமிழியில் கை வைத்துத் திருப்ப அது திருக மாட்டேன் என்றது. மிளிராவினுள் பதட்ட அலைகள் கரை கடந்தன. அறைக்கதவை தாழிட்டது நன்றாய் நினைவில் இருந்தது. அப்படியிருந்தும் இப்படி ஒரு நிலை எனில்.. ஒரேயடியாய் ஒழித்துக்கட்ட முடிவு செய்துவிட்டார்களா என்ன? ஆம் இந்தக் குளிரில் இன்னும் சில மணி நேரங்களைக் கழித்தாள் அவள் உண்மையிலேயே உறைந்து இல்லாமல் போவாள். அப்படிப்பட்ட குளிர். எத்தனை செய்திகள் வருகிறது? பனியில் பால்கனியில் மாட்டிக்கொண்டு எத்தனை உயிர்கள் மரித்திருக்கின்றன. அதில் இவளது பெயரும் வரும்.

 

கதவை படபடவென தட்டினாள். ஒரு அசைவு இல்லை மறுபுறம். கண்ணாடிக் கதவு அடித்த பனியில் சில்லிட்டிருந்தது. அடக்க இயலாதவளைப் போல படபடவென கதவைத் தட்டிக்கொண்டே கிடந்தாள். ஒரு பிரயோசனமும் இருக்கவில்லை. அப்படியே கீழே மடிந்தமர்ந்து முழங்கால்களைக் கட்டிக்கொண்டு தலையை அதில் வைத்துக்கொண்டாள். அடுத்து என்ன செய்யவென சிந்திக்க இயலவில்லை. மூலையும் மரத்துவிட்டதுபோல அக்குளிரில். கண்களில் இருந்து சூடாய் கண்ணீர் தாரை தாரையாய் வழிந்து பார்வையை வேறு மங்கலாக்கிக் கொண்டிருந்தது. கண்களை இடது தோள்பட்டை துணியில் துடைத்துக்கொண்டவளின் பார்வையில் மின்னியது என்னவோ. மெல்ல கைகளைத் தரையில் ஊன்றி எக்கிப் பார்த்தவளின் முன் கிடந்தது ஒரு பேனா. பழைய பேனா. அது எப்படி அங்கு வந்தது என்றெல்லாம் யோசிக்கும் நிலையில் அவளில்லை. அது ஒன்றுதான் இப்பொழுது அவள் தப்ப இருக்கும் ஒரே வழி! நெடுங்காலம் அங்கேயே கிடந்திருக்க வேணும். சில்லிட்டிருந்த பேனாவை கைகளுக்குள் இறுகப் பிடித்துக்கொண்டவள் கதவைப் பற்றி எழுந்தாள். ஒருக்களித்து சாய்ந்துகொண்டவள் மறு கையில் இருந்த பேனாவால் கண்ணாடிக் கதவில் ஓங்கிக் குத்த தொடங்கினாள். முதலில் சிறு சிராய்ப்புகூட விழவில்லை. இருந்தும் கிடைத்த ஒர வாய்ப்பையும் தவற விட அவள் தயாராயில்லை. கண்களை மறைக்கும் கண்ணீரைப் பொருட்படுத்தாது மறுபடியும் மறுபடியும் ஓங்கிக் குத்தினாள். லேசாய் விரிசல் விழுந்தது. அவ்விரிசல் அவள் நம்பிக்கையில் விழுந்த விரிசலை ஒட்ட முழு பலத்தையும் திரட்டி கண்மண் தெரியாமல் பேனாவோடு சேர்த்து குத்த தொடங்கினாள். ஒரு கட்டத்தில் ‘சிலீர்’ என்ற சத்தத்துடன் அரைகுறையாய் உடைந்த கண்ணாடி வழியே அவள் கை உள்ளே சென்றதில் நொடியில் சரசரவென சிறு ரத்த நதி அவள் முழங்கை வரை பாய்ந்தது. அப்படியே கையால் லாட்ச்சை தேடியவள் கதவை திறந்துகொண்டு அப்படியே அறையினுள் தரையில் சரிந்தாள்.

 

 

காலை வெகு நேரம் சென்று மிளிராவின் அறைக்குள் நுழைந்த சவியின் பார்வை வட்டத்தில் விழுந்ததெல்லாம், மென் பிஸ்தா நிற இரவு உடையிலும் தரையிலும் ஆங்காங்கே ரத்த கோலங்களுடன், பாதி கால்கள் பால்கனியிலும் மீதி உடல் அறையினுள்ளுமாக அலங்கோலமாய் குப்புற விழுந்துக்கிடந்த மிளிராவையே. காணும் காட்சி மனதில் உரைத்த மறு நொடி அவளது “ஆ!” என்ற அலறல் அவ்வீட்டையே அதிரச்செய்தது. காரணம் மிளிரா விழுந்துக்கிடந்த விதம்.. என்னவோ அவள் உடலில் உயிர் இருப்பதாய் இவளுக்குத் தோன்றவேயில்லை. சவியின் அலறலில் அவ்வறைக்கு ஓடி வந்த அப்பாவும் அம்மாவும் மிளிராவின் கோலத்தைக் கண்டு நெஞ்சைப் பிடித்துக்கொண்டனர். அவளுக்கு உயிர் இருப்பதை உறுதி செய்த பின் மூவருமாய் சேர்ந்து அவளைக் கட்டிலில் கிடத்திவிட்டு உடனடி சிகிச்சைக்கான வேலையில் இறங்கினர்.

 

 

அன்று வெகு நேரம் சென்று அந்தி சாய்ந்த பின் நினைவு திரும்பினாள் மிளிரா. கனத்த இமைகளைப் பிரித்தெடுப்பதே பெரிதாய் இருக்க மெல்ல விழித்தவளின் பார்வையில் எவரும் விழவில்லை. லேசாய் தலையைத் திருப்பி பார்த்தவளுக்கு இட புறம் சலைன் ஏறியதற்கான தடம். மறுபுறம் திரும்பினால் கையில் பெரிய கட்டு. நடந்ததெல்லாம் துளி துளியாய் ஞாபகம் வரதா தொடங்கியது. பிழைத்துவிட்டாள்!

 

 தலையைத் தூக்கிப் பார்த்தாள். அவ்வறைவில் அவளைத் தவிர வேறெவரும் இருப்பதாய் படவில்லை. எங்கோ தூரத்தில் முணுமுணுவென சில குரல்கள். கண்களை சுருக்கி செவிகளைத் தீட்டியவளுக்கு அது யார் குரல் எனப் புலப்பட்டதும் சத்தமெழாமல் எழுந்தாள். சத்தம் எங்கிருந்து வருகிறது? இரண்டு அறைகள் தள்ளித்தானே! பூனை பாதம் வைத்து வெளியேறியவள் பக்கத்து அறையில் மறைந்துகொண்டாள். கதவு இடுக்கு வழியாய் தெரிந்த உருவங்கள் அது அம்மா, அப்பா மற்றும் டாக்டர் ஜெயன் என்றது. ஆனால் அவர்கள் எதையோ காரசாரமாய் விவாதித்துக்கொண்டிருந்தனர். மூச்சை இழுத்துக்கொண்டு கேட்கத் தொடங்கினாள் மிளிரா.

 

அம்மா, “என்ன ஜெயன் சொல்றீங்க?” குரலில் சிறு தவிப்பு இருந்ததோ? ம்ஹ்ம்

 

 

டாக்டர் ஜெயன், ” எத்தனை வாட்டி படிச்சு படிச்சு சொன்னேன்! மிளிராவ எதாவது ஹாஸ்பிடல்ல சேருங்க அவளுக்கு முறைப்படி ட்ரீட்மெண்ட் தேவைனு.. கேட்டீங்களா நீங்க?” என்றவரின் பாவம் ஏதோ நடக்கக் கூடாது எதுவோ நடந்துவிட்ட வெறுப்பில் இருந்தது.

 

இப்பொழுது அப்பா வாயைத் திறந்தார்,”மிரா எங்களுக்கு ஒரு பொண்ணு ஜெயன்.. அவள” என்றவர் ஏதோ சொல்ல வர இடைமறித்தார் ஜெயன்.

 

“ஒரே பொண்ணு ஒரு பொண்ணுனு கடைசில அந்த பொண்ண இல்லாம ஆக்கப்போறீங்க உங்க வறட்டு பிடிவாதத்தால!” என்று எரிந்துவிழுந்தவர் மற்ற இருவரும் அவர் சொன்னதில் விக்கித்து நிற்பதைக் கண்டுவிட்டுப் பெரு மூச்சொன்றை இழுத்துவிட்டு கொண்டு பொறுமையான குரலில்,

 

“நீங்க ரெண்டு பேரும் மொதல்ல ஒன்ன புரிஞ்சுக்கோங்க, இப்ப மிளிரா இருக்கற நிலமைல அவள இப்படியே வச்சிருந்தா அது அவளுக்கும் ஆபத்து அவள சுத்தியிருக்கவங்களுக்கும் ஆபத்து. உங்க ஒரே பொண்ணு முழுசா குணமாக வேண்டாமா? அவளும் இதே வீட்டுல உங்க கூட நார்மல் லைஃப் லீட் பண்ண வேணாமா? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே வச்சிருப்பீங்க? அஸ் எ வெல்விஷரா சொல்றேன்.. ப்ளீஸ் மிளிராவ ஹாஸ்பிடலுக்கு மாத்துங்க” என்றவர் கிளம்ப எத்தனிக்க வந்த சுவடே இன்றி தனது அறைக்கு வந்துவிட்டாள் மிளிரா.

 

 

சத்தம் வந்துவிடாமல் இருக்க வாயை இரு கைகளாலும் மூடிக்கொண்டவளுக்கு உலகமே சுற்றி விழுந்தது போலானது. எந்த ஹாஸ்பிடலை பற்றிப் பேசினார்கள்? அவர்கள் இவளை பற்றித்தான் பேசினார்கள் என்பது துளி சந்தேகமின்றி புரிந்தது. இவளை எங்கு சேர்க்கப்போகிறார்களாம்? இவளால் அப்படியென்ன ஆபத்து வந்துவிட்டதாம்? அவர்களால் தானே இவள் ஆபத்தில் இருக்கிறாள்! அப்படியென்றால் முதலில் இருந்தே இதுதான் அவர்களது திட்டமா? ஹாஸ்பிடல் என்று சொல்லி அவளை எங்கோ அனுப்பிவிடுவது! அப்படி அனுப்பிவிட்டு இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? அப்படி அனுப்புவதால் இவர்களுக்கு என்ன பயண்? இல்லை! இப்பொழுது இது தேவையில்லை! அவர்களுக்கு என்னவும் பயன் இருந்துவிட்டுப் போகட்டும்! ஆனால் அவள் இதில் இருந்தே தப்ப வேண்டும்! இது தான் அவர்களது நாடகத்தின் வெற்றிகரமான முடிவென்றால் அதை அவள் அவர்களுக்குத் தரப்போவதில்லை! என்ன செய்வது.. எங்குச் செல்வது.. என்றது சட்டென மனம் அலைபாய அதைப் பிடித்து வைப்பதைப் போல் அந்த பெயர் நினைவிலாடியது. அவிரன்! யெஸ் அவள் அவிரனிடம் செல்ல வேண்டும் முதலில்! முடிவுடன் மூச்சையும் இறுக்கிப்பிடித்தவள். யார் கவனத்தையும்  கவராத வண்ணம் அப்படியே அப்பொழுதே வெளியேறினாள். காரை கிளப்பினால் தெரிந்துவிடும் என சுவரேறி குதித்தவளுள் குளிர்காற்றைப் பரப்பியது அந்த இருள் சூழ்ந்த பாதையும் வளர்ந்து நின்ற ராட்சத மரங்களும். தெருவிளக்கற்று கிடந்த தெருவில் வெறுங்காலோடு ஓடினாள் மிளிரா. இல்லை! இந்த இருளுக்குப் பயந்தால் பின்னால் இருக்கும் மர்மங்கள் அவளைக் கடித்து முழுங்கிவிடும். அவள் பயப்பட வேண்டியது இருளுக்கல்ல மனிதர்களுக்கு!

 

 

 

கைகளால் தலையைத் தாங்கியபடி அமர்ந்துவிட்ட அவிரனுக்கு எல்லாம் புரிந்தும் ஒன்றும் புரியாத நிலை. அவன் அன்று வீட்டிற்கு வந்ததும் நேராய் தன் அறைக்கு வந்தவன் தான் அப்படியே அமர்ந்துவிட்டான். இப்பொழுதுவரை எழவில்லை. கடந்த சில நாட்களில் அவன் கடந்து வரும் விடயங்களைச் சீரணிக்க முயற்சி செய்தான். ஏதேதோ எண்ணங்கள் வலை பின்ன அமர்ந்திருந்தவனின் கவனம் சிதறியது. அந்த நள்ளிரவு வேலையில் அவன் அறை பால்கனி கதவு தட்டப்பட பதறியெழுந்த அவிரனுக்கு ஒரு கணம் ஒன்றும் விளங்கவில்லை. பால்கனி கதவை எவர் தட்டுவர்? வாசல் வழியாய் வருவதை விட்டு இதென்ன. அதுவும் நேற்று இரவு வந்த அந்த கேண்டிக்கு பிறகு கதவைத் திறக்க வெகுவாய் தயங்கினான் அவன். அது அந்தப்புறத்தில் இருப்பவருக்குத் தெரியாது என்பதால் கதவு மறுபடியும் தட்டப்பட்டது. தயங்கித் தயங்கியே கதவைத் திறக்க சென்றான். அவன் எழுந்து வருவதற்கும் அக் கதவைத் திறப்பதற்கும் இடையே இருந்த சில நொடிகளில்தான் அவனுள் எத்தனை எண்ணங்கள் வந்து போயின. அத்தனையும் ஒதுக்கியவன் குமிழியை இறுகப்பற்றி பட்டெனத் திறந்துவிட்டான். ஆனால் அங்கு அவன் நினைத்ததை போலல்லாமல் அரை மயக்க நிலையில் மிளிரா நின்றுகொண்டிருந்தது தான் அவனை இன்னும் குழப்பியது.

 

அதுவும் இவனைக் கண்டதும் “அவிரன்” என்று காற்றுக் குரலில் பெரும் நிம்மதியும் சிறு சிரிப்புமாய் சொன்னவள் அப்படியே அவன் நெஞ்சில் விழுந்து கீழே சரியத் தொடங்கவும் சுதாரித்தவனாய் அவளை நெஞ்சோடு சேர்த்தணைத்தபடி உள்ளே கொண்டு வந்தான் அவிரன். உடல் தோய்ந்திருந்தவளை அவனது மெத்தையில் இருத்திவிட்டு மறுபுறம் இருந்த குவளையில் இருந்து நீர் வார்த்துக் கொண்டு வந்து அவள் அருகில் அமர்ந்தான்.

 

வெள்ளை நிற சாட்டின் இரவு கௌன் அதற்கு மேலே அதே நிறத்தில் பெரிய கோட். கால்களில் செருப்பில்லாமல் வந்ததினால் வெளிறி விறைத்திருந்த பாதத்தில் ஆங்காங்கே கன்றிச் சிவந்த தடங்களென அமர்ந்திருந்தவளையே வெறித்திருந்தவனின் பார்வை அவள் கைகளிலேயே கூர்மையாய் படிந்தன.

 

நேற்று,

 

 

மிளிராவை சந்தித்த பிறகு அன்று வீடு திரும்பிய அவிரனுக்கு கதவைத் திறந்து விளக்கை எரியவிட்டதும் பக்கென்றானது கண்ட காட்சியில். வாசலில் காபி மக் ஒன்று உடைந்து கிடக்க அதைச் சுற்றி காய்ந்துபோன கடுங்காப்பியின் கரை படிந்துக்கிடந்தது. அடுத்த அதிர்ச்சி அதையே வெறித்தவாறு உள்ளே சோஃபாவில் அமர்ந்திருந்த வீயின் கோலம். நேற்று அணைந்திருந்த அதே இரவு உடையில் கண்கள் சிவந்து கேசம் கலைந்து அமர்ந்திருந்தவனைப் பார்த்ததுமே தெரிந்தது அவன் காலையில் எழுந்ததில் இருந்து இப்படித்தான் அமர்ந்திருக்கிறான் என்று. ஓரிடத்தில் ஐந்து நிமிடத்திற்கு மேல் அமராத வீயனா இது? ஏதோ பித்துப் பிடித்தவன் போல..

 

 

அமைதியாய் உள்ளே நுழைந்த அவிரனை தடுத்தது வீயின் குரல்.

 

 

வீயன், “எங்க போய்ட்டு வர?”

 

அவனது குரலில் இருந்த அதட்டலில் எரிச்சலுற்ற அவிரன், “நீ எங்கெல்லாம் போறனு சொல்றியா” என்றுவிட்டு அகல முயற்சி செய்ய குறுக்காக கரம் நீட்டிய வீயன் எழுந்து நின்றான்.

 

“எங்க போய்ட்டு வர அவிரா?” வீயனின் குரலில் அதே அழுத்தம். நீ பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் என்ற அழுத்தம். அதைவிட அதிர்ச்சி அவனது விளிப்பு. இருவரும் நெருங்கிய நண்பர்களாய் ஆனதிலிருந்து அவன் அவிரனை ‘அவி’ அல்லது ‘பேப்’ என்பானே தவிர அவிரன் என்று மறந்தும் சொன்னதில்லை. இது என்ன புதிதாய் அவிரா? சம்பந்தமின்றி நேற்று அந்த கேண்டியில் எழுதப்பட்டிருந்த ‘குட்நைட் அவிரா’ வேறு மனதில் மின்னிச் சென்றது.

 

எதையோ சொல்ல வாயெடுத்த அவிரன் வீயனின் கையை அப்பொழுதுதான் கவனித்தான். உள்ளங்கையில் இருந்த வெட்டுக்காயத்தைச் சுற்றி ரத்தம் உறைந்துக்கிடந்தது. உடைந்த காபி மக்கிற்கான காரணம் இப்பொழுது புரிவது போலிருந்தது.

 

 

“என்ன பைத்தியக்காரத் தனம் இது வீ!” அவிரனின் குரலில் அதட்டலே அதிகமாய் இருந்தது.

 

 

அதற்கு,”அதை தான் நானும் கேக்கறேன், என்ன பைத்தியக்காரத்தனம் இது அவி?” என்ற வீயனின் குரலும் சளைக்காமல் வந்தது.

 

‘ப்ச்’ என சலித்துக்கொண்ட அவிரன்,”இதை பத்தி நாம ஏற்கனவே பேசிட்டோம் வீ” என்றான்.

 

 

“நானும் ஏற்கனவே உன்ட்ட சொல்லிட்டேன் அவி, இது வேண்டாம்னு” வீயன் விடுவதாயில்லை.

 

அதில் அயர்ந்த அவிரன்,”உனக்கு என்னதான் பிரச்சினை வீ? எதுக்கு இப்படி ஒரேயடியா நிக்கற?” என்று குரலை உயர்த்தினான்.

 

“கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா அவி! அவ சொல்றதுல முன்னுக்குப் பின் முரணா இருக்கு! எதுவுமே சரியில்லை! அவ பிரச்சினைல இல்லை அவி நீதான் பிரச்சினைல இருக்க இப்ப அவளால!” என்கவும் அவன் எதிர்பாராத சமயம் வீயனின் சட்டையை இறுகப் பிடித்தான் அவிரன்.

 

அதைச் சற்றும் எதிர்பார்த்திராத வீயனின் அடிபட்ட பார்வையைக் கண்டவன் தன் செயலை உணர்ந்த மறுகணம் பட்டென விட்டுவிட்டு இரண்டடி பின்னால் நகர்ந்தான். அவனாலே நம்ப இயலவில்லை அவன் செய்ததை.

 

“பாரு! எப்படி ஆகிட்டனு நீயே பாரு அவி..” என்றவன் சட்டென அவன் அருகில் வந்து அவன் கைகளைப் பற்றிக்கொண்டு மென்குரலில்,

 

“ப்ளீஸ் அவி.. நமக்கு இது வேணாம்.. விட்டுடலாம்.. இது சரியாபடலை அவி” என்று கெஞ்சலில் முடிக்க தன் கையை உருவிக்கொண்ட அவிரனோ,

 

“ப்ளீஸ் வீ.. என்ன புரிஞ்சுக்கோ, என்னால மிளிராவ அப்படியே விட முடியாது வீ” எனவும் வீயின் பொறுமை பறந்தது.

 

“மிளிரா.. மிளிரா.. மிளிரா.. அப்படியென்ன அவி தெரியும் உனக்கு அவள பத்தி? ஏதோ கொஞ்ச நாள் கூட படிச்சவ அதுவும் திடீர்னு காணாம போன ஒருத்தி திருப்பி வந்து புது கதைய சொல்றா அதை நீயும் நம்பற இல்ல?”

 

 

“ஏன் வீ.. நீ என்ட்ட கதை சொல்லும்போதும் நான் நம்பினேன்ல?” என்றதும் வீயின் முகமே மாறியது “உண்மை தெரிஞ்சும்” என்று முடித்த அவிரன் வீயன் அசையாது நிற்கவும் அவன் கரங்களைத் தனதுக்குள் எடுத்துக்கொண்டு அவன் முகம் நோக்கினான்.

 

“வீ.. உனக்கும் யாருமில்லை எனக்கும் யாருமில்லை.. அதே மாதிரிதான் மிளிராவுக்கும் யாருமில்லை.. இப்ப உனக்கு நானும் எனக்கு நீயும் இருக்கோம் வீ.. ஆனா அவளுக்கு நம்மள விட்டா வேற யாரு இருக்கா?” என்று குழந்தைக்கு சொல்லும் பாவத்துடன் பேச மௌனமாய் தன் கைகளை உருவிக்கொண்ட வீயன் அதே அமைதியான குரலில் தரையைப் பார்த்து, “ஆனா அவளும் நாமளும் ஒன்னில்ல” என்றுவிட்டு அவிரனின் முகத்தை திரும்பியும் பாராது சென்றுவிட்டான்.

 

அவன் அடைத்துச் சென்ற கதவையே பார்த்து நின்ற அவிரனுக்கு என்ன செய்யவென்று புரியவில்லை. வீயன் தான் அவனது பெரும் நம்பிக்கை. அவனால் இருந்தால் இவனுக்கு போதும். ஆனால் அவனே இன்று இப்படிச் செய்யவும் அவிரனுக்கு என்ன செய்யவென்று விளங்கவில்லை.

 

 

அன்று காலை,

 

 

அறை சுவர் முழுதும் வண்ண வண்ண பூக்களும் பறவைகளுமாய் வரையப்பட்டிருக்க, அறை முழுதும் குட்டி ரோஜா மொட்டுக்களாய் மழலையர் கூட்டம். பாதி தூங்கி வழிந்து மீதி முழித்திருக்கப் பாடுபட்டுக்கொண்டு இன்னும் சிலர் எதையாவது செய்துகொண்டு என துறுதுறெவன்றிருந்த வகுப்பறையையே பார்வைக்குள் அடக்கிக்கொண்டிருந்த வினியை கலைத்தது அக்குரல்.

 

“வினி மிஸ், உங்கள பார்க்க யாரோ வந்துருக்காங்க” என்ற சக ஆசிரியையை வகுப்பைக் கவனித்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு ஸ்டாஃப் ரூம் நோக்கி விடுவிடுவென நடையை எட்டிப்போட்டாள் வினி. அவளைப் பார்க்க யாராய் இருக்கும் என.

 

 

அத்தனை எண்ணம் சட்டென அறுந்தது ஸ்டாஃப் ரூமில் அவளுக்காகக் காத்திருந்த அவிரனை கண்டதும். மௌனமாய் சென்று அவன் எதிரில் அமர்ந்தவள், “சொல்லுங்க உங்களுக்கு என்ன வேணும்?” என்றாள்.

 

“ஹாய் நான் அவிரன். மிளிராவ பத்தி உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்” எனவும் நொடிப்பொழுதில் மாறிய அவள் முகத்தை அவனும் கவனித்துக்கொண்டுதான் இருந்தான்.

 

பார்வையைக் கீழே அலைபாயவிட்டவள்,”இங்க வச்சு வேணாம். கொஞ்சம் வெளில வாங்க” என்றுவிட்டு வெளியேற அவிரனும் வினியை பின்தொடர்ந்தான்.

 

அவனை யாருமற்ற விளையாட்டு மைதானத்துக்கு அழைத்துச் சென்றவள் அத்தனை நேரம் எதையோ பிடித்து வைத்திருந்தவள் போலப் படபடத்தாள்.

 

“மிளிராவுக்கு என்னாச்சு? எனித்திங் சீரியஸ்?” என்று.

 

அவளது படபடப்பின் காரணத்தை கண்டுகொள்ள இயலாதவனோ அவளைச் சமாதானப்படுத்த முயற்சி செய்தான்.

 

“காம் டௌன் மிஸ். மிளிராவுக்கு எதுவும் ஆகலை” என்றதும் தான் அவளுக்கு மூச்சு வந்தது. அதையே புருவம் சுருங்க பார்த்திருந்த அவிரனோ,

 

“இவ்ளோ பதட்ட படற நீங்க ஏன் அப்படி நடந்துக்கிட்டீங்கனு என்னால புரிஞ்சிக்க முடியல”

 

 

இப்பொழுது குழப்பப் பார்வை பார்ப்பது அவள் முறையானது.

 

“என்ன சொல்றீங்க? புரியல. நான் என்ன பண்ணேன்?” என்றவளின் குரலில் தன்னிச்சையாய் சற்று அதட்டலும் சேர்ந்துகொண்டது.

 

இன்னும் சந்தேகக் கண்ணோடே பார்த்திருந்த அவிரன் அன்று மிளிரா சொன்னதை அப்படியே சொன்னான்.

 

“ஏன் அப்படி பண்ணீங்க?” எனவும் வினியின் முகத்தில் வந்துபோன உணர்வுகளை அவனால் பிரித்தறிய இயலவில்லை. ஆனால் நிச்சயம் அது பிடிபட்டதற்கான பாவனை இல்லை. அதென்ன அது? குழப்பமா? அதிர்ச்சியா? இல்லை அயர்வா?

 

 

“ஐ காண்ட் பிலிவ் திஸ் இஸ் ஹேப்பனிங் அகைன்!” என்று தலையை உலுக்கிக் கொண்டவள் மற்றவனின் கேள்வியை உணர்ந்து

 

 

“பாருங்க அவிரன், மிளிரா உங்ககிட்ட என்னலாம் சொன்னானு எனக்கு தெரியாது.. பட் அதை நீங்க சீரியஸா எடுத்துக்க வேண்டிய அவசியமில்லை” என்றவள் அவ்வளவுதான் பேச்சு முடிந்தது என்பதுபோல அகல முயல அவளுக்கு முன் வந்து வழிமறித்து நின்றவன்,

 

“புரியல வினி. தெளிவா சொல்லுங்க” என்றான்.

 

அவனிடம் இருந்த தீவிரத்தைக் கண்டவள் அவனுக்கான பதில் கிட்டும் வரை அவன் அவளை விடப்போவதில்லை என்பதை உணர பெரு மூச்சொன்றை இழுத்துவிட்டுக்கொண்டாள்.

 

 

வினி,”மிளிரா நீங்க நினைக்கற மாதிரி இல்ல”

 

அவிரன்,”நான் நினைக்கற மாதிரினா?”

 

வினி,”ப்ச்! மிளிரா பொய் சொல்லுவா அவிரன்! போதுமா?”

 

அவிரன்,”புரியல வினி.. எல்லாரும்தான் பொய் சொல்றோம்?”

 

வினியின் பொறுமை பறந்தது,”யெஸ்! ஆனா நமக்கு நாம சொல்றது பொய்னு தெரிஞ்சு சொல்லுவோம் ஆனா மிளிராக்கு அவ சொல்றது பொய்னு அவளுக்கே தெரியாது!”

 

அவிரன்,”என்ன சொல்றீங்க நீங்க..”

 

வினி பொறுமையாய் அவனை ஏறிட்டாள். பிறகு என்ன நினைத்தாளோ, அவளது குரலும் இறங்கியது.

 

வினி,”மிளிராக்கு சின்ன வயசுல ஒரு ஆக்ஸிடென்ட் ஆச்சு..”

 

 

அவிரன்,”யெஸ்.. அவ அப்பாம்மா இறந்தது.. அதானே?”

 

 

ம்ஹூம் என்று மறுப்பாய் அசைந்தது அவள் சிரம்.

 

வினி,”இல்லை அவிரன். அந்த ஆக்ஸிடென்ட்ல அவ அப்பாம்மாக்கு எதுவும் ஆகல.. ஆனா அவளுக்குத்தான்.. அதுக்கடுத்துல இருந்து ரொம்ப வித்தியாசமா பிஹேவ் பண்ண ஆரம்பிச்சா.. திடீர் திடீர்னு பயப்படுவா, நிறைய பொய் சொல்லுவா.. அண்ட்..” என்றவள் எதையோ சொல்லத் தயங்க

 

அவிரன்,”ப்ளீஸ் வினி” எனவும்

 

வினி,”ரொம்ப வயலெண்ட்டா பிஹேவ் பண்ணுவா அவிரன்”

 

அவிரனால் அதை மட்டும் நம்பவே இயலவில்லை. உயிரும் உருகலுமாய் நேற்று சந்தித்தவளை பற்றி இவள் சொல்லும் எதையுமே ஏற்க இயலவில்லை. அதை அவன் முகமும் பிரதிபலிக்க வினிக்கு கோபம் துளிர்த்தது.

 

வினி,”மிளிராக்கு லைப்ரரினா ரொம்ப பிடிக்கும்”

 

“ம்ம்” என்று ஒப்புதலாய் ஆடியது அவன் தலை.

வினி,”அவ லைப்ரரிக்கு போயிருக்கீங்களா நீங்க?” என்றாள் ஒரு மாதிரியான குரலில்.

 

அவள் சொல்ல வருவது புரியாவிட்டாலும் இல்லை எனத் தலையசைத்தான் அவிரன்.

 

 

அதில் தனது பேண்ட்டை முட்டிவரை மடக்கியவள் அவனிடம் சுட்டிக்காட்ட அங்கு நீளமாய் பூரான் அளவில் ஒரு தளும்பு இருந்தது.

 

 

வினி,”என்ன கூப்பிட்டு போயிருக்கா மிளிரா.. சின்ன வயசுல. அப்போ எனக்கு விவரம் தெரியாது. ஆண்ட்டி குடுத்த சாக்லேட் கேக்க சாப்டவ கைய தொடைக்காம அப்படியே புக்க தொட்டுட்டேன்.. என்ன பண்ணா தெரியுமா உங்க மிளிரா?”

 

அவனுக்கு ஏதோ விபரீதமாய் வரப் போகிறது என்று தெரிந்தும் இல்லை என இடவலமாய் தலையசைத்தான்.

 

வினி,”பெரிய படியில எனக்கு மேல நின்னுட்டு இருந்தவ திடீர்னு என்ன பாத்து சிரிச்சா.. அதுக்கு பதிலுக்கு நான் சிரிக்கவும் ஒரே மிதி, என்ன கீழ மிதிச்சு தள்ளிட்டா. ரொம்ப நாள் ஹாஸ்பிடல்ல இருந்தேன். ஆனா திருப்பி வந்தப்போ என்ன தெரியுமா சொன்னா? சிரிச்சுக்கிட்டே எப்படியிருக்க வினின்னா”

 

 

அவிரனின் புருவ மத்தியில் முடிச்சிட்டுக்கொண்டது.

 

அவனை நம்பமாட்டாத பார்வை பார்த்த வினி அங்கிருந்து அகன்றுவிட்டாள். இம்முறை அவன் அவளைத் தடுக்க முயற்சி செய்யவில்லை. மௌனமாய் பார்த்து நின்றான்.

 

 

இப்பொழுது,

 

 

திடீரென்று கதவு தட்டப்பட்டதில் திடுக்கிட்டனர் எதிர் எதிரே அமர்ந்திருந்த அவிரனும் மிளிராவும்.

 

 

அவிரன்,”பாத்துட்டு வரேன்” என்றுவிட்டு எழ முயற்சி செய்தவனின் கரம் பற்றினாள் மிளிரா. அவள் முகம் பார்த்தவனோ அதில் வேண்டாம் போகாதே என்ற கெஞ்சலைக் கண்டு தன் கரம் பற்றியிருந்த அவள் கரத்தில் தட்டிக்கொடுத்தான். நான் பார்த்துக்கொள்கிறேன் என்ற கண்ணசைவுடன்.

 

மிளிராவை பயம் கவ்விக்கொண்டது. அவள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிட்டார்களோ? இதற்கு மேல் அவள் எங்குச் செல்வது? அவிரன் என்ன செய்வான்? தன்னை விடமாட்டேன் என அவன் நின்றால் அவனையும் இந்த ஆபத்து பிடித்துக்கொள்ளுமோ? என்றெல்லாம் எண்ணங்கள் கரைபுரண்டோடிக்கொண்டிருக்க மனம் ஒரு நிலையில் நில்லாது தவித்துக்கொண்டிருந்தாள் மிளிரா.

 

 

அவள் தவிப்பைத் தடுப்பது போல் அறையினுள் அவிரனுடன் நுழைந்தார் டாக்டர் ஜெயன் மற்றும் வேறு இருவரும். அவள் பயம் அத்தனையும் கண்ணெதிரே அரங்கேறிக்கொண்டிருக்க அவள் அவிரனைப் பார்த்தால் அவனிடம் எதிர்ப்பு என்பது எள்ளளவும் இருக்கவில்லை.

 

 

மாறாய்,”மிளிரா உன் வீட்ல இருந்து வந்துருக்காங்க” என்றவன் அவ்வளவுதான் என்பதுபோல் அமைதியாக நின்றுவிட மிளிராவின் கண்கள் அகல விரிந்தன.

 

அவளருகில் வந்த டாக்டர் ஜெயன்,”மிளிரா என்னமா இது? இந்த நேரத்துல யார் வீட்டுக்கோ வந்துட்டு.. வீட்டுல அம்மாவும் அப்பாவும் வெய்ட் பண்றாங்க.. வாடா போலாம்” என்று தேன் குரலில் அழைக்க படாரென எழுந்தவள் கையை உதறிக்கொண்டு அவிரனின் அருகில் போய் நின்றுகொண்டாள்.

 

“நான் எங்கயும் வரல” என்றவள் அவிரனின் பின்னால் ஒடுங்க

 

 

டாக்டர் ஜெயன்,”விளையாடத மிளிரா. நேரமாச்சு” என்று மற்ற இருவரிடமும் அர்த்தமாய் கண்ணசைத்தார்.

 

என்ன நடக்கப் போகிறது என்பதை உணர்ந்தவள் போல அவள் இன்னும் இன்னும் அவிரனின் பின்னால் ஒடுங்கினாள்.

 

“அவிரன் என்ன இவங்க கூட அனுப்பாத அவிரன்! ப்ளீஸ் அவிரன்! நீயாவது நான் சொல்றத நம்பு அவிரன்” என்று அழுகுரலில் கெஞ்சிக்கொண்டிருக்க அவிரன் தன் பின்னால் ஒளிந்தவளைப் பிடித்து தன் முன்னால் நிறுத்தினான்.

 

“இங்க பாரு மிளிரா. வீட்ல எல்லாரும் உன்ன தேடுவாங்க. உன் அப்பாவும் அம்மாவும் ரொம்ப டென்ஷனா பேசினாங்க.. இப்போ கிளம்பு மிளிரா.. நாளைக்கு நானே வந்து உன்ன பாக்கறேன்” என்றென்னவோ பள்ளிச் செல்ல அடம்பிடிக்கும் பிள்ளைக்கு ஐஸ்க்ரீம் ஆசை காட்டுவது போல் பேசினான்.

 

 

மிளிராவால் தன் காதுகளையே நம்ப இயலவில்லை. அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டாள். மற்ற இருவரும் அவளை அழைத்துச் செல்ல வர ஒரு வார்த்தை உதிர்க்காது சென்றவளையே பார்த்து நின்றான் அவிரன்.

 

 

அன்று,

 

 

அவ்வகுப்பிற்கு அப்பொழுது பி.ஈ. நேரம். வகுப்பறையே வெறிச்சோடிக் கிடந்தது. பி.ஈ. நேரத்தில் வகுப்பிற்கு மாணவர்கள் இருக்கக் கூடாதென்பது அப்பள்ளியின் சட்டம். அப்படியொரு பி.ஈ. நேரம் முடித்து முதல் ஆளாய் வகுப்பறைக்குள் நுழைந்த அவிரன் முதலில் கண்டது அவனது புத்தகத்திற்குள் வைக்கப்பட்டிருந்த அந்த ஸ்ட்ராபெர்ரி கேண்டியைதான். இதுபோல் அடிக்கடி சிலருக்கு நடந்து பார்த்திருக்கிறான். இதுவும் அது போல் தன்னை பிடித்த யாராவது வைத்திருக்கக் கூடும் என்றெண்ணியவன் முதலில் அதைச் சன்னலில் வைத்துவிடலாம் என்று எண்ணி எழவும் வகுப்பிற்குள் அடுத்த ஆசிரியர் வரவும் சரியாய் இருக்க அதை அப்படியே தன் பைக்குள் திணித்தான். அன்று பைக்குள் விருப்பமின்றி திணிக்கப்பட்ட கேண்டிதான் சில நாட்கள் கழித்து விருப்பத்துடன் மிதுனாவின் கையில் போய்ச் சேர்ந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!