ஆலாபனை-15

15

 

“I desire the things which will destroy me in the end” – Sylvia Plath

 

சரியான கதவைத் தவறான தருணத்தில் திறப்பதை விடப் பெரிய துரதிஷ்டம் வேறு எதுவுமே இருக்க முடியாது. திறந்துவிட்ட கதவின் உள்ளேயும் செல்ல இயலாது. அடைத்துச் சாத்திவிட்டு அகலவும் முடியாது. இதோ.. இப்பொழுது நான் வாசலிலேயே நின்றுகொண்டிருப்பதைப்போல. இது சாத்தப்படவேண்டிய கதவென்று புத்திக்கு உரைத்தாலும் மனம் ஏனோ இன்னும் இரு நொடி என மன்றாடித் தவிக்கத்தான் செய்கிறது. முன்னும் செல்ல முடியாத பின்னும் செல்ல முடியாத திரிசங்கு சொர்க்கத்தில் நிற்கிறேன் நான். அந்தப்பக்கத்தில் நீ தெரியும்வரை அத்தனையும் எனக்குச் சம்மதமே.

 

 

ஆழ்கடலின் ஆர்ப்பரிப்போடு சேர்த்து மரங்களில் இருந்து வந்துகொண்டிருந்த பூச்சிகளின் சத்தம் மினர்வாவின் முதுகுத் தண்டில் குளிர் கம்பிகளைப் படரவிட்டது. ஆனால் அதை எதையுமே உணராதவள் போல அவளது விழிகள் இரண்டு விரித்து தெரித்துவிடும் அளவு நின்றது அவள் கண்டுகொண்டிருந்த காட்சியில்.

 

இருள் சூழ்ந்திருந்த அவ்வறையில் தொங்கிய ஒற்றை பல்பின் கீழ் பரிதாபகரமாய் கிடந்த அவ்வுடலையே வெறித்திருந்தாள் மினர்வா. இது.. அவன்தானே! அந்த நடிகன்!அவனேதானே! ஆம் அவனேதான் என்று சொல்வதைப் போல் எங்கோ சூனியத்தை வெறித்துக்கொண்டிருந்தன அவனது நீல நயனங்கள் இரண்டும். மினர்வா மெல்ல அமர்ந்து நடுங்கிய கையை அவனது நெஞ்சில் வைத்துப் பார்த்தாள். இதயத் துடிப்பு இருப்பதாய் சிறு அறிகுறி கூட இல்லை. மறுபடியும் மூக்கில் கை வைத்துப் பார்த்தாள். மூச்சில்லை. அவனது புஜத்தை தொட்டு பார்த்தாள். சில்லிட்டுப்போயிருந்த உடல் அவன் எப்பொழுதோ இறந்துவிட்டதைச் சொல்லிக்கொண்டிருந்தது. சட்டென இரண்டடி பின்னால் நகர்ந்தவள் முழங்கால்களில் தலையை வைத்துக்கொண்டு இரு கைகளாலும் பின்னந்தலையைப் பிடித்துக்கொண்டாள். கண் முன்னே தரை முழுதும் வழிந்திருந்த ரத்தம் உறைந்து உடலில் ஆங்காங்கே கொடூர காயங்களுடன் உறைந்து கிடப்பவனின் உருவமும் அன்று பார்ட்டியில் தன்னிடம் கண்கள் சுருங்க சிரித்தவனின் உருவமும் மாற்றி மாற்றி வந்து போவதை அவளால் தவிர்க்க இயலவில்லை.

 

கடைசியில் ஆதி கொலையே செய்துவிட்டானா! அவள் நினைத்து நினைத்துப் பயந்தவை அனைத்தும் நிஜம்தானா! ஆதி இந்தளவு துணியக்கூடியவன்தானா! தொண்டை இறுகியது அவளுக்கு.

 

இதற்குத்தான் திடீரென இவளை இத்தீவுக்கு அழைத்து வந்தானா! கீழே இப்படியொரு உயிர் வலியில் பிரிந்துகொண்டிருந்த அதே சமயத்தில் தான் மேலே தன்னுடன் அத்தனை காதலுடன் அந்நாளைக் கடத்தினானா.. மயிர்க்கால்கள் கூட அச்செய்தியில் விறைத்துக்கொண்டன. இல்லை! இல்லை! இவள் இங்கிருந்து உடனடியாய் கிளம்பியாக வேண்டும்! கிளம்பியே ஆக வேண்டும்! கண் மண் தெரியாமல் அந்த பின்பக்க அறையிலிருந்து வெளியேறியவளுக்கு முன் அந்த மரக்கூட்டமும் அதைத் தாண்டிய கடலுமே கண்ணில் பட்டு அவள் கால்கள் தயங்கி நின்றன. அவளால் இங்கிருந்து எப்படிச் செல்ல இயலும்? இப்படி ஆளரவமற்ற தீவிற்குள் தனித்து மாட்டிக்கொண்டாளே! என்று நொடியில் எண்ண அலைகள் கரை புரண்டோட அவை அனைத்தும் சட்டென நின்றது அந்த ஒரு பெயரில்.

 

சஃபயர்! அய்யோ கடவுளே! சஃபயரும் அல்லவா இங்கு மாட்டிக்கொண்டிருக்கிறாள்! அவ்வளவுதான் எதைப் பற்றியும் யோசியாது அத்தனை நேரம் கோர மிருகம் வாழும் குகையாய் தெரிந்த அதே வீட்டினுள் தயக்கமின்றி ஓடினாள் மினர்வா. என்ன ஆனாலும் சரி! அவளால் சஃபயரை அங்கு விட்டுவிட்டுச் செல்ல இயலாது. சஃபயரின் அறையினுள் நுழைந்தவள் அங்கு அவள் காணாமல் போக அவளது பதட்ட அளவு பல மடங்கானது.  அவள் மூச்சுடன் சேர்த்து அதையும் ஒரேயடியாய் நிறுத்தி விடுவதுபோல வந்தது ஆதியின்,”மினா மா..” என்ற ராகமான அழைப்பு. ஒரு கணம் உறைந்து நின்றவள் நொடியில் அங்கிருந்த வார்ட்ரோபினுள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டாள்.

 

தன் அழைப்பிற்கு எந்தவித பதிலும் வராமல் போனதில் புருவங்கள் சுருங்க இரண்டெட்டு எடுத்து வைத்த ஆதியின் பார்வை வட்டத்தில் விழுந்தது. அச்சுவரில் ரத்தத்தால் பதிந்திருந்த மினர்வாவின் கைத்தடம். நொடியில் நடந்தது புரிந்துவிட அருகில் இருந்த வாஸ் அடியிலிருந்து ஒரு கத்தியை உருவியவனின் குரல் ராகமாய் வெளிவந்தது.

 

“மினா.. மா” என்று.

 

 

கதவு இடுக்கு வழியாய் ஆதி கையில் கத்தியுடன் அவ்வறை வாசலைத் தாண்டி செல்வதைச் சிறு நிம்மதியுடன் பார்த்திருந்த மினர்வாவின் இதயம் நொடியில் நின்றது. அவன் அப்படியே இரண்டெட்டு பின்னால் வைத்து வாசலில் நின்றுகொண்டே இவளிருந்த வார்ட்ரோபை விழிகள் சிரிக்கப் பார்த்ததில். மெல்ல நெருங்கியவன் அவள் இதோ.. வந்துவிட்டான் என்று அஞ்ச அவளுக்கு மூச்சுவிட இடம் கொடுப்பவனைப் போல அந்த வார்ட்ரோபை கடந்து செல்ல மினர்வா சற்று தளரவும் படாரென வார்ட்ரோப் கதவு திறக்கப்படவும் முகம் முழுக்க சிரிப்புடன் ஆதி நிற்கவும் சரியாய் இருந்தது.

 

 

கண்ணீரும் வேர்வையும் வழிய அமர்ந்திருந்த மினர்வா வரமாட்டேன் என்பதுபோல் மறுப்பாய் வேகமாகத் தலையசைத்தபடி கப்போர்ட் கைப்பிடியை பிடித்துக்கொள்ள.

 

“ப்ச் ப்ச்” என்றவன் அவளை அனாயாசமாய் ஒரு கையால் பிடித்துத் தூக்கி வெளியில் வைத்து தரதரவென இழுத்துச் சென்றான். அவளது அழுகுரல் என்று ஒன்று அவ்வீட்டில் கேட்கவே இல்லாததுபோல.

அவனிடம் இருந்து திமிறிக்கொண்டிருந்த மினர்வா ஆதியே எதிர்பாராத வண்ணம் கால் இடறி படிகளில் உருண்டாள். முதல் தளத்தில் இருந்து கீழ்த்தளத்திற்கு செல்லும் பெரிய படிகளில் உருண்டவளின் இடக்காலும் தோளும் கழண்டுவிட்டது போல் விண்ணென்று வலிக்க அதை உதறித் தள்ளியவளாய் ஒத்துழைக்க மறுத்த உடலை இழுத்துக்கொண்டு எழுந்தவளின் பார்வையில், நடந்ததில் ஒரு கணம் அதிர்ந்து பிறகு அதே பழைய பாவத்துடன் பொறுமையாய் படியிறங்கி வரும் ஆதியே பட எழுந்து ஓட முயற்சி செய்தாள். அவள் உடல் அவளுக்கு ஒத்துழைக்கவில்லை. அவள் இரண்டெட்டு எடுத்து வைப்பதற்குள் அவளை நெருங்கிவிட்ட ஆதி அவளது கழுத்தோடு சேர்த்து நெருக்கி சுவரில் தள்ளினான். பொங்கிய கண்ணீர் பார்வையை மறைக்கத் தெளிவில்லாத சித்திரமாய் நின்று இருந்தவனை பார்த்திருந்தாள் மினர்வா.

 

ஆதி,”மினா.. மினா.. ப்ளீஸ் மினா! என்ன அப்படி பாக்காதயேன்.. நான் உன் ஆதி மினா” என்றவன் குரலில் இருந்த தவிப்பிற்கும் மறு கையில் இருந்த கத்திக்கும் சம்பந்தமே இருக்கவில்லை.

 

 

“ப்ளீஸ்.. என்ன விட்டுடு” என்று கெஞ்சலாய் வந்த மினர்வாவின் வார்த்தைகளில் அவனது சுபாவம் கணப்பொழுதில் மாறியது.

 

“விட்டுட்டு? விட்டுட்டு? என்ன விட்டு எங்க போவ மினா? நீயில்லாம நான் என்ன பண்ணுவேன்? அய்யோ! அய்யோ! அய்யோ!” என்று இரண்டடி முன்னும் பின்னுமாய் பின்னந்தலையில் தட்டிக்கொண்டு நடந்த ஆதியின் பிடி தளர்ந்ததில் சற்று சுவரில் சாய்ந்து கொண்ட மினர்வாவின் உடல் அடுத்த நிமிடமே விறைத்தது.

 

 

ஆதி,”பேசாம நாம ரெண்டு பேரும் சேர்ந்தே போயிடலாம்! என்ன? ஆஹ்! அதான் சரி!” என்றவன் கண்கள் ஆனந்தத்தில் பளபளக்கக் கத்தியை ஓங்கிய படி அருகில் நெருங்கக் கண்களை இறுக மூடிய மினர்வா ‘ஆ’ வென அலறியது மட்டும்தான் அவளுக்குக் கடைசியாய் நினைவில் இருந்தது. மறு முறை அவள் கண்களைத் திறந்த பொழுது அவள் உடலில் கத்தி பாய்ந்திருக்கவில்லை. ஆனால் எதிரில் நின்றிருந்த ஆதி தலையில் இருந்த கோடாய் ரத்த நதியொன்று உடைப்பெடுத்திருக்கக் கால்கள் துவளத் திரும்பி நின்றுகொண்டிருந்தான்.

 

அவனுக்கு எதிரில் கையில் பெரிய சுத்தியல் ஒன்றுடன் நின்றிருந்தாள் சஃபயர். ஆம்! அத்தனை நேரம் மாடி வளைவில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அதே சஃபயர் தான் கையில் இருக்கும் சுத்தியலில் இருந்து சொட்டிய ரத்தத்தை அலட்சியம் செய்தபடி முகத்தில் எந்தவொரு உணர்வுகளையும் காட்டாத அமைதியுடன் ஆதியின் விழிகளையே வெறித்து கொண்டு நின்றிருந்தாள் அந்த பதின் வயதை தொடவிருந்த சிறுமி.

 

ஆதியின் கண்களில் வலியையும் மீறிய அதிர்வு ஒன்று பரவிக்கிடந்தது. “சஃபயர்” என்று தன் பின்னந்தலையில் கை வைத்து அழுத்திக்கொண்டிருந்தவன் நம்பாத பார்வை பார்த்தான். ஆதி நொடியில் சுதாரித்து அவளை நோக்கி அடுத்த எட்டு வைப்பதற்கு மறுபடியும் அவன் தலையில் இறங்கியது அதே சுத்தியல். இம்முறை அவன் கால்களின் பலம் முழுதாய் வடியத் தரையில் சரிய அவன் நெஞ்சில் முழங்காலை வைத்தமர்ந்த சஃபயர் அவன் கண்களைப் பார்த்துக்கொண்டே தாறுமாறாய் மீண்டும் மீண்டும் அந்த சுத்தியலை அவன் தலையில் இறக்கினாள்.

 

கண்ணுக்கு முன்னால் நடப்பதை நம்ப முடியாமல் உறைந்துவிட்டாள் மினர்வா. பார்வையை அவன் முகத்தில் இருந்து அகற்றாமல், வெகு அமைதியான பாவத்துடன் முகத்தில் ரத்தம் தெறிக்கத் தெறிக்க மறுபடியும் மறுபடியும் அடித்துக்கொண்டிருந்த சஃப்யரை பார்க்க முதன் முதலாய் அவளுள் பயம் எழுந்தது.

 

அவள் ஆதியைவிடப் பயங்கரமானவளாய் தெரிந்தாள். அத்தனை வருடமாய் லைப்ரரியில் ஏதோ ஒரு மூலையில் புத்தகத்தை வைத்துக்கொண்டு அமைதியாய் அமர்ந்திருக்கும் அவளது சஃபயரா இது? சஃபயர் சற்று வித்தியாசமான குழந்தை. ஒரு கண் தேன் நிறத்திலும் மற்றது நீல நிறத்திலுமாய் இருக்கப் பார்வைக்கும் கூட அவள் வித்தியாசமாய்தான் பட்டாள் மினர்வாவிற்கு.

 

 மூனு கண்ணன், மூக்கரையான், ஒத்த காதன் போன்ற பூச்சாண்டி கதைகள் கேட்கும் பிள்ளைகளுக்கு சஃபயரின் இருவேறு நிறங்களிலான கண்கள் பயத்தையே கொடுத்தன. அவர்களுக்கு அவளும் பூச்சாண்டியாகவே தெரிந்தாள். ஆதியும் அவளை வெளியில் பள்ளியில் சேர்க்கவில்லை. அவனது குடும்பத்தை அவன் அவனுடனே வைத்துக்கொண்டான். சஃபயரின் பால்யம் முழுதும் அவள் வீட்டு நூலகத்திலும் அவள் அறை சன்னலிலுமே கழிந்தன. சஃபயரிடம் எப்பொழுதுமே ஒருவித அசாத்திய அமைதியைக் கண்டிருக்கிறாள் மினர்வா. முதன் முதலில் அவள் சன்னலில் அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு பதறியவள் அவள் முகத்தில் விழுந்தால்தான் என்ன என்பதுபோலொரு அமைதியைக் கண்டு அதிர்ந்து போனாள் அதற்கு பிறகே அவளறையின் சன்னல் மூடப்பட்டது. ஒரு முறை காலிடறி நீருக்குள் விழுந்த பொழுதும்கூட எந்தவித எதிர்ப்புமின்றி அமைதியாய் அமிழ்ந்தவள் பிறகு மெல்ல மேலேறி வந்தாள்.

 

ஆனால் அதிலெல்லாம் பெரிதாய் தெரிந்திராத ஒன்று இன்று அதே அமைதியுடன் அவள் ஒரு கொலையையே செய்யவும் தான் இவளுக்குக் குலை நடுங்கிப்போனது.

 

சில நிமிடங்களுக்குப் பிறகு அவன் நெஞ்சில் இருந்து எழுந்த சஃபயர் சுத்தியலை மினர்வாவின் காலருகில் தூக்கிப் போட்டுவிட்டு எதுவுமே நடவாததுபோல திரும்பி நடந்து அவளறைக்கு சென்றுவிட்டாள்.

 

மினர்வா அதிர்ச்சியில் அப்படியே சமைந்துவிட்டாள்.

 

ஆதி என்றொருவன் இறந்துவிட்டான் என்பதை மறைப்பது ஒன்றும் அத்தனை சுலபமாக இருக்கவில்லை. ஆனால் அதே சமயம் அதொன்றும் முடியவே முடியாத காரியமாகவும் இல்லை அவர்களுக்கு. அன்று அத்தீவை விட்டு வெளியேறிய மினர்வாவும் சஃபயரும் அதற்குப் பின் அதைப் பற்றிப் பேசவில்லை.

 

இன்று,

 

வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்த அவிரனுக்கு புதிர்கள் அனைத்தும் அதன் அதன் இடத்தில் சென்று விழுந்தது. கண்களுக்கு முன் எல்லாம் இருந்தும் அவன் கருத்தில் எதையும் எடுத்துக்கொள்ளாதது புரிந்தது. இரண்டு நாட்கள் திடீரென அவள் காணாமல் சென்றதற்கான காரணம் இப்பொழுது புரிந்தது. பொய்! பொய்! அத்தனையும் பொய்! வருடக்கணக்கில் ஒரு பொய்யை நிஜமாக்கியிருக்கிறாள்! எல்லாம் எதற்காக.. உதடு துடித்தது அவிரனுக்கு. எல்லாம் அவனால்தானே! அவன் மட்டும் சற்று சிந்தித்திருந்தால்.. இன்று அவனது வீயன் அவனுடன் வீடு சென்றிருப்பான். அய்யோ! வீ.. எப்படி வாழ வேண்டியவன் அவன்! வாழ்க்கை முழுதும் தன்னை போலவே துன்பங்களை அனுபவித்த இன்னொரு ஜீவன்! தன்னை மட்டுமே உறவென நேசித்த ஜீவன்! அப்படிப்பட்டவனின் கடைசி வார்த்தைகூட.. இல்லை! அவிரனின் தாடை இறுகியது. படியேறினான்.

 

அவன் அறையினுள் நுழைந்தபொழுது மிளிரா விழித்திருந்தாள். படுக்கை அருகில் இருந்த பழைய க்ராமஃபோனில் எதையோ திருகிக்கொண்டிருந்தாள். அவள் முகம் முழுதும் பரிபூரணமாய் ஓர் மகிழ்வு. கண்கள் கரித்துக்கொண்டு வந்தது அவிரனுக்கு. முஷ்டியை இறுக்கிக் கொண்டான்.

 

அவன் வந்த அரவம் கேட்டவள் தலையைத் திருப்பினாள்,”எங்க போன அவி?” என்று.

 

 

“இங்கதான் மிரு.. தூக்கம் வரல நடந்துட்டு வரேன்” என்றவன்

 

 

அவள்,”என்னையும் கூப்பிட்டிருக்கலாம்ல” எனவும்

 

இரண்டே எட்டில் அவள் அருகில் சென்றவன் அவளை அப்படியே பின்னிருந்து அணைத்து அவள் கூந்தலில் முகம் புதைத்தவனாய்,”நீ தூங்கிட்டிருந்த மிரு..” என்றவனின் கை அவளது கையில் ஊர்ந்து அவள் விரல் வைத்திருந்த எதிலோ அமுத்த மெல்லிய இசையொன்று அவ்வறையை நிறைக்கத் தொடங்கியது.

 

அவளிடம் இருந்து விலகி இரண்டெட்டு  பின்னால் சென்றவனை அவள் குழப்பமாய் பார்க்க அவனோ பழைய பாணியில் பாதி குனிந்து ஒரு கரத்தை அவள் புறம் நீட்டவும், துளிர்த்த முறுவலைப் படரவிட்டவள் அவன் கரம் பற்றிக்கொண்டாள். அவ்வறையிலேயே சுற்றிச் சுற்றி ஆடியபடி இசையோடு இழைந்தனர்.

 

ஆனால் இம்முறை அவள் இடையில் படிந்திருந்த அவிரனின் கரங்களில் சற்று அழுத்தம் அதிகமாய் இருந்தது. அவளை தன்னோடு சேர்த்தணைத்தபடி சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தவன் அந்த மேசையின் அருகில் வந்தபொழுது அதில் இருந்த கொண்டை ஊசியை தன் சட்டை ஸ்லீவிற்குள் மறைத்துக்கொண்டான். மெல்ல நகர்ந்தவர்கள் ஒரு கட்டத்தில் அறையிலிருந்து வெளியேறி வராண்டாவில் இருந்தனர். தன்னையே விழியெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்த மிளிராவையே பார்த்திருந்த அவிரன் சட்டென அவளைச் சுவரோடு சேர்த்து அணைத்தபடி நின்றவன் அவளது கழுத்தில் அந்த கொண்டை ஊசியை வைத்து அழுத்திக்கொண்டிருந்தான்.

 

அதில் அதிர்ந்து விழித்த மிளிரா அவன் பார்வையிலிருந்த குழப்பத்தையும் கோபத்தையும் கண்டதும் அவளது அதிர்ச்சி விலகி அமைதி நிறைந்தது முகத்தில்.

 

அதே சிரிப்பு மாறாது,”என்ன சொல்ற அவி?” என்றவள் கேட்கக் கையில் இருந்த ஊசியை இன்னும் அழுத்தியவன்,”போதும் மிளிரா. நீ யாருனு சொல்லு” எனக் கூர் முனை அழுந்தியதில் கோடாய் அவள் உடைக்கேற்ற நிறத்தில் ரத்தம் உருண்டோடியது அவளது கழுத்தில்.

 

அவன் கண்களையே கூர்மையாய் பார்த்து நின்றவள்,”ஏன் அவி.. அந்தன் அவிரனாகும் போது சஃபயர் மிளிரா ஆகக்கூடாதா?” எனவும் பட்டென அவன் பிடி விலகியது.

 

“எ.. என்ன சொல்ற நீ?” என்றவனின் குரல் தடுமாறியது. விழிகள் அலைபாய்ந்தன.

 

“எனக்கு உன்ன பத்தி எல்லாம் தெரியும் அவி..” எனவும்

 

எதையெல்லாம் மறக்க வேண்டும் என்று நினைத்தானோ அது அத்தனையும் பேரலை அடித்துக்கொண்டு வரும் குப்பைகளாய் கரையொதுங்கின.

 

அவன் கண்ணுக்கு முன் இறந்த தங்கை விது. தினமும் கொடுமை செய்த தத்து அப்பா.. என அத்தனையும்.

 

அதை ஒதுக்க முயற்சி செய்தவனாய் தலையை உலுக்கிக்கொண்டவனை பார்த்தவளோ,

 

“வீ ஆர் அலைக் அவிரா” என்றபடி அவனருகே வர அவள் கையை பிடித்துத் தட்டிவிட்டான் அவிரன்.

 

“நோ வீ ஆர் நாட்!” என்றவனின் பார்வை அவள் கைகளிலேயே நிலைத்து நிற்க அதன் அர்த்தம் உணர்ந்தவளோ,

 

“ஏன் அவிரா.. உன் கைகள்ல ரத்தமே இல்லையா” என்று ஒரு மாதிரிக் குரலில் கேட்கவும் மின்னலென வந்து போனது டெரஸில் இருந்து இவனை பார்த்துக்கொண்டே கீழே விழுந்த அப்பாவும் நீரில் தத்தளித்த விதுவும்.

 

“இல்ல! இல்ல!” என்றவன் தலையை மறுப்பாய் உலுக்கத் தொடங்க இரண்டெட்டில் அவனை அடைந்தவள் அவன் தோள்களைப் பற்றினாள்.

 

“ஹே! ஹே.. இட்ஸ் ஓகே அவிரா.. உன் அப்பா உன்ன தினம் தினம் கொடுமை படுத்தினாரு.. ஹி டிஸவ்ர்ட் இட்.. உன் தங்கை இறந்தப்போ நீ குழந்தை அவிரா.. உன் தப்பில்லை அது” என்றவன் முகத்தைப் பார்க்க முயன்று கொண்டிருந்தாள் அவள்.

 

அதில் சட்டெனத் தலையாட்டலை நிறுத்திய அவிரன் அவள் முகத்தை ஏறிட்டான்.

 

“ஏன் மிளிரா? ஏன் இப்படி?” அவனுக்கு இதை நம்ப வேண்டாம்! இது எதையுமே நம்ப வேண்டாம்! இன்று காலையில் எப்படி எதுவுமே தெரியாமல் சந்தோஷமாய் விழித்தானோ அப்படியே இதில் இருந்து விழித்துவிட்டாள் எப்படி இருக்கும்? ஆனால்.. வீ.. அய்யோ! இது ஏன் இப்படி ஆக வேண்டும்! அவனது இத்தனை வருட கால வாழ்க்கையில் ஒரே ஒரு நாள் இன்பத்தைக் கொடுத்துவிட்டு அதற்கு ஈடாய் மறு நாளே மொத்தத்தையும் பிடுங்கிக்கொள்வதா! மிளிரா! பாவி! பாவி! அவனால் அவளை முழு மனதாய் வெறுக்கக் கூட இயலவில்லையே! அவன் என்ன செய்வான்!

 

“நீ என்ன காப்பாத்தனும்னு நினைச்ச அவிரா.. அதான் உன்ன காப்பாத்த வச்சேன்” என்றவள் அவனது பார்வையில்,

 

“ப்ளீஸ் அவிரா.. அப்படி பார்க்காதே! நான் சொன்ன காரணம் பொய்யா இருக்கலாம் ஆனா வந்த காரணம் உண்மை! எனக்கு நீ வேணும் அவிரா! நீ மட்டும் தான் வேணும்! என்னால நீ இல்லாம.. உன்ன பார்க்காம ஒரு நாள் கூட.. ம்ஹ்ம்..” என்றவள் தலை மறுப்பாய் அசையக் கலங்கி இருந்த கண்களை இம்முறை அவள் திருப்பிக்கொள்ளவில்லை. கண்ணீரோடு அகன்ற லென்ஸை எடுத்தவன் அவளையே அமைதியாகப் பார்த்தான்.

 

“வீ என்ன பண்ணான் மிளிரா? அவனப் போய்!” என்றவன் ஆற்றாமையில் அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீர் கரையுடைக்க மிளிரா அவனையே அதிர்ந்து பார்த்திருந்தாள். அவன் யாரைப் பற்றிப் பேசுகிறான்? அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

 

“யா..யார சொல்ற அவி? எந்..எந்த வீ?”என்றவளின் குரல் நடுங்கியது.

 

அவள் அஞ்சியது போலவே,”உன் வீட்டு  பின்னாடி ரூம்ல கட்டிப் போட்டிருக்கியே அந்த வீ.. எனக்குனு இருந்த ஒரே ஒரு உறவையும் எப்படி உன்னால அழிக்க முடிஞ்சது மிளிரா? அவன் எப்ப-” என்று அவிரன் பேசிக்கொண்டே சென்ற மற்ற எதுவும் அவள் காதில் விழவில்லை. அவள் உலகமே தாறுமாறாய் திரும்பியது. அத்தனை வருடங்களாக அவிரனையே பார்த்துக்கொண்டிருந்த மிளிராவுக்கு நொடியில் புரிந்தது ஆனால் அதை எப்படி அவனுக்குப் புரிய வைப்பதென்றுதான் புரியவில்லை. கண்களை அழுந்த துடைத்துக்கொண்டவள் அவன் தோள்களை இறுகப்பற்றி அவன் முகம் பார்க்க முயன்றாள்.

 

 

“அவி.. அவி.. ப்ளீஸ்! நான் சொல்றத கேளு.. அப்படி ஒருந்தன் இல்லவே இல்ல அவி..” மிளிராவிற்கு தொண்டை அடைத்தது. இத்தனை நாள் அவிரன் தனியாய் சாப்பிட்டு தனியாய் வெளியில் சென்று தனியாய் டீவி பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பதை அவள் கண் வழியாய் பார்த்தாளே ஒழிய அவிரனின் கண் வழியாய் தெரிந்த ஒருவனை அவள் அறிந்திருக்கவே இல்லையே! இதை எப்படிச் சரி செய்வாள்?

 

நிஜத்திற்கும் நிழலுக்கும் இடையில் சிக்கிக்கொண்டிருக்கும் அவளது அவிரனை எப்படி மீட்டெடுப்பாள் அவள்?

 

தூரத்தில் அம்மா நின்றிருந்தாள். இவளையேதான் பார்த்திருந்தாள். அவளால் அம்மாவைக் காப்பாற்ற இயலவில்லை. ஆனால் அவிரனை நிச்சயம் காப்பாற்றிடுவாள். ஆம்! என்னதான் ஆதியிடம் இருந்து உடலளவில் விடுதலை கிடைத்திருந்தாலும் அச்சம்பவம் மினர்வாவை மனதளவில் வெகுவாய் பாதித்துவிட்டது. அதற்கு பிறகான ஒரு இரவைக்கூட அவள் நிம்மதியாய் கழித்திருக்கவில்லை. தினம் தினம் எல்லாவற்றையும் பார்த்துப் பயந்தவள் ஒரு நாள் சன்னல் வழியே மாடியில் இருந்து குதித்தே விட்டாள். உடலளவில் அன்னை காத்துவிட்ட மிளிராவால் மனதளவில் துடித்தவளைக் காக்க இயலவில்லை. அதிலும் அவள் இவளைக் கண்டே பயப்படுகையில் மிளிராவால் ஒன்றுமே செய்ய முடியாமல் நின்றாள்.

 

முதன் முறையாய் மிளிராவின் கண்கள் வலியில் கண்ணீரை சொரிந்தன. இல்லை. அவள் அவிரனை விடமாட்டாள்! அவனை அவள் உள்ளங்கைகளுக்குள் வைத்து பாதுகாக்க போகிறாள்! ஒரு முடிவெடுத்தவளாய் அவன் கையை வலிக்குமளவு இறுகப் பற்றியவள் மறுபடியும் மறுபடியும் சொன்னாள்.

 

“அவி! ப்ளீஸ்! என்ன நம்பு அவி! அப்படி ஒருத்தன் நிஜமாவே இல்ல அவி” என்றவளின் கண்ணீர் அவள் உடையை நனைத்தது.

 

கண்களில் கண்ணீர் வழிய அவளையே சிறு ஏளன முறுவலுடன் பார்த்திருந்த அவிரனோ,”எப்படி மிளிரா மறுகரைல இருக்கற  உன் போலி அப்பாம்மா மாதிரியா?” என்றான் விரக்தியாக.

 

விக்கித்து நின்றாள். இவனுக்கு எப்படி புரிய வைப்பது? அவள் தவித்துக்கொண்டிருக்கையிலேயே அவிரன் இரண்டெட்டு பின்னால் எடுத்து வைத்தான். அவள் முகம் பார்த்துக்கொண்டே. அதில் அவளுக்கான காதலும் அதைக் காக்க முடியாத தவிப்பும் நிறைந்து நிற்கக் கலங்கிய கண்களுடன் அவளைப் பார்த்தவன்,”வீயன நீ கொன்னுருக்க கூடாது மிளிரா” என்றவன் என்ன செய்யப் போகிறான் என்பதை உணர்ந்தவள் இரண்டே எட்டில் அவனருகில் வருவதற்கும் அவன் பின்பக்கமாய் அந்த மாடியில் இருந்து சரிவதற்கும் சரியாய் இருந்தது.

 

“நோ!” மிளிராவின் அலறல் அத்தீவையே அதிரச் செய்தது. அவளையே பார்த்துக்கொண்டே விழுந்துகிடந்த அவிரனை கண்டவள் கடகடவென படிகளில் இறங்கி ஓடினாள்.

 

அவனருகில் மண்டியிட்டமர்ந்தவள்,”எழுந்திரு அவி! ப்ளீஸ்!! என்ன விட்டு போகாத அவி! தயவுசெஞ்சு அவி! எழுந்திரு அவி…” என்று அவன் நெஞ்சில் கை வைத்து அசைத்தாள்.

 

அவன் கையை எடுத்து தன் கழுத்தில் வைத்தவள்,”இங்க பாரு! இங்க பாரு! உனக்கு வேணும்னா என்ன கழுத்தை நெரிச்சு கொல்ல கூட செய் அவி.. உன் வீயன கொன்னதுக்காக.. என்ன விட்டு போகாத அவி..” என்ற கதறல்களை அவ்வீடு அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்தது.

 

அவன் வலியில் பிறந்த வீயன் அவிரனை அவனுடனே அழைத்துச் சென்றுவிட்டான். அவனில் ஓர் பங்காய் இருந்தவனுக்காக மொத்தத்தையும் தூக்கி ஏறிந்துவிட்டான் அவிரன்.

 

ஒரு கட்டத்தில் அவன் கை வளைவுக்குள் படுத்த மிளிரா மேற்கூரையையே வெறிக்கத் தொடங்கினாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் வற்றாமல் வழிந்துகொண்டே இருந்தது. நொடிகள் நிமிடங்களாகின, நிமிடங்கள் நேரங்களாகின.. எத்தனை மணி நேரம் அப்படியே கிடந்தாளோ! மறுநாள் காலை மௌனமாய் எழுந்தவள் மெல்லப் படியேறினாள். அவளது விழி நீர் வற்றிவிட்டது. முதல் தளத்தை அடைந்தவள் பின்னால் திரும்பி நின்றபடி இரு கைகளையும் நீட்டி அப்படியே பின்பக்கமாய் சரிந்தாள்.

 

தளத்தை தோட்ட அவள் பிடரி சிவப்பு நிற கண்ணீரை சுரக்க தொடங்க, அவள் விழியோரங்களில் கோடாய் வழிந்தது கண்ணீர் நதி.

 

 

எங்கோ,

 

அந்த பள்ளி மைதானமே கதிரவனின் கைகளில் பொன்னிறத்தில் ஜொலித்துக்கொண்டிருந்தது. மாணவர்கள் யாருமற்ற மைதானத்தின் நடுவில் பள்ளி சீருடையில் அமர்ந்திருந்தாள் பதிமூன்று வயது மிளிரா. அவளது பார்வை காம்பௌண்ட் சுவருக்கு அப்பால், தொலை தூரத்தில்  தெரிந்த மலையையே ஆசையாய் பார்த்துக்கொண்டிருந்தன. வெயிலில் அமர்ந்திருந்தவளின் வெள்ளை நிற யூனிஃபார்ம் சட்டை மங்கலாய் ஒளிற அவளை யாரோ அழைத்தனர். அக்குரலுக்கு கண்கள் மேல் கையை வைத்துக்கொண்டு திரும்பிப் பார்த்தவளின் இதழ்களில் விரிகிறது பெரிய புன்முறுவல் ஒன்று.

 

 

அதற்குக் காரணமானவனோ,”மிரு!” என்று கத்திக்கொண்டே ஓடி வந்து  பின்னிருந்து அவள் கழுத்தைக் கட்டிக்கொண்டு அமர்ந்தான்.

 

“க்ளாஸுக்கு வராம இங்க என்ன பண்ற நீ?” என்ற சீண்டலாய் ஒரு அதட்டலுடன்.

 

அதற்கு எதிரில் இருந்த மலையைச் சுட்டிக்காட்டியவள்,”அதோ.. அது நல்லாருக்குல.. அதான் பார்த்துட்டிருக்கேன்” எனவும் அவள் சுட்டிக்காட்டிய திசையைப் பார்த்தவன் பிறகு உடையில் இருந்த மண்ணை தட்டிக்கொண்டு எழுந்தான். அவள் கேள்வியாய் நோக்கவும் அவள் புறம் தன் கரத்தை நீட்டியவன், “வா அங்க போலாம்” எனவும் ஆச்சர்யத்தில் விழிகள் விரியப் பார்த்த மிளிரா,”நிஜமாவா?” எனவும் “ப்ச்.. அப்பறம் போ நான் வரமாட்டேன்” என்றான் போலி அலட்டலுடன்.

 

அதற்குச் சிரித்தவள் அவன் கரம் பற்றி எழுந்துகொண்டாள்.

 

“எப்படி போக?” – மிளிரா

 

“இதோ இப்படி!” என்றவன் அவள் கையை பிடித்துக்கொண்டு ஓட பொங்கி வழிந்த சிரிப்புடன் ஓடினாள் மிளிரா.