ஆலாபனை-8

ஆலாபனை-8

8

“Forever i shall be a stranger to myself” – Albert Camus

நம்முடையது எதுவும் நம்முடையதல்ல என்பதை உணருகையில் வருமே நெஞ்சை இறுக்கிப் பிழியும் அந்த வலியின் பெயர் என்னவாக இருக்கும்? அதற்கு பல மடங்கொன்றை உள் நாக்கில் விழுங்கிவிட்டு கடக்கையில் உணர்வென்று ஒன்றே இருப்பதாய் படவில்லை. ஊதக்காத்துக்கு நடுவில் ஏதோ ஒரு பாலைவனத்தில் சுரத்தின்றி கால்களை எட்டிப்போட்டுக்கொண்டிருக்கும் எனக்கு மலர் வாசமும் மரண வாசமும் ஒன்றுதான். முந்தையதன் பரவசமும் இல்லை. மற்றதன் உலுக்கலும் இல்லை. ஏன் எதுவுமே இல்லை! ஏதுமற்ற ஓர் அசாத்திய மௌன நிலை. அம்மௌனத்தை கலைத்துக்கொண்டு எழுந்தது ஒரு அகோர ஓலம். ஊதக்காற்றே உறைந்து போனது ஒரு கணம். திரும்பி பார்த்தேன், அங்கு நான்.

இந்த விஷயத்தை வீயனிடம் சொல்ல வேண்டுமென அவிரனுக்கு துளியளவும் தோன்றவில்லை. ஏன், அவிரனுக்கென்று அவன் வாழ்வில் இருக்கும் ஒரே ஜீவன் வீயன் மட்டுமே! வீயனுக்கும் அதேதான் என்பது இருவருமே நன்றுணர்ந்த உண்மை. அப்படியிருந்தும் ஏனோ அவிரன் அவனை யாரோ பின் தொடர்வதை மட்டும் முதலில் இருந்தே மறைத்துவிட்டான். இல்லை சொல்லாமல் விட்டுவிட்டான். ஏனோ அவனுக்கு இதை வீயனிடம் பகிரவேண்டும் என்ற எண்ணமே எழுந்ததில்லை. அதிலும் நேற்றைய தியேட்டர் சம்பவத்திற்குப் பிறகு அவனே ஒருவித குழப்ப நிலையில் இருக்க ஒருவித தெளிவின்மை மனதெங்கும் மங்கலாய். இதில் இந்த கார்காரனும் இன்று சேர்ந்துகொண்டதுதான் மிச்சம்!

என்ன வாழ்க்கை இது? அவன் அப்படி என்ன செய்துவிட்டான்? ஏன் இப்படி ஒன்று மாற்றி ஒன்றெனத் துரத்தித் துரத்தி அடிக்கத் துடிக்கிறது? அவன் விரும்புவதெல்லாம் ஒரு சராசரி வாழ்வைத்தானே? அதற்குமா பஞ்சம்? அவனை ஏன் எவரோ பின் தொடர வேண்டும்? அதே சமயம் இன்னொரு புறம் அவனைச் சுற்றி ஏன் இத்தனை சம்பவங்களும் காயங்களும்? அவிரன் ஒன்றும் முட்டாளில்லை! அவன் நன்கறிவான் அவன் ஒன்றும் பாவமற்றவனல்ல என்று. அவனும் ஒரு சராசரி மனித பிறவியே! அப்படி அவன் அறிந்தோ அறியாமலோ செய்த ஏதோ ஒன்று பின் தொடருகிறதோ? ஆனால் வருடங்களாய் பின் தொடருமளவுக்கா அவன் எதையும் செய்திருப்பான்? அப்படிப்பட்டவனா இவன்?
சற்று நிதானித்தான். அவனைச் சுற்றிப் பல வினாக்கள் விழுந்துக்கிடந்தன. எட்டி நின்று சுற்றி இருக்கும் சங்கிலியாய் ஒரு மாயவலை நடுவில் அவன். இன்னும் வலை அவனை ஒன்றும் இறுக்கி விடவில்லைதான். ஆனால் இது அனைத்தையும் தாண்டி, அவனைச் சுற்றிச் சூழ்ந்து நிற்கு அத்தனை வினாக்களையும் மீறி மேலெழும்பி நின்ற ஒரே வினா, மிளிரா!

அவளுக்கு என்னவாயிற்று? அவளிடம் ஏன் அப்படியொரு பதட்டம்? அதுவும் அன்று அவள் இருந்த கோலம். மிளிராவுடன் சொற்ப காலத்தையே ஒரே வகுப்பறையினுள் கழித்திருந்தாலும் மிளிரா என்பவள் அவிரனின் மன இடுக்குக்குள் ஒளிந்து கிடக்கும் மலர்வாசத்தைப் போல. அவளை எப்படி மறப்பான்? அன்றே அப்படியென்கையில் இன்று அவளை அப்படியொரு பதறிய நிலையில் கண்ட பிறகு அந்த காட்சியை மறக்கத்தான் இயலுமா அவனால்?

இல்லை! இது சரிப்பட்டு வராது! ஒரு முடிவுக்கு வந்தவனாய் தலையை உலுக்கிக்கொண்டான் அவிரன்.

வீட்டினுள் நுழைந்ததும் வீ அடுக்களை நோக்கி நடந்தவாறே இடக்கையை மட்டும் உயர்த்தி இரு விரல்களால் சல்யூட் வைப்பது போல் பாவனை செய்துவிட்டு, “மார்னிங் மெனூ, பான்கேக் அன்ட் ஸ்மூத்தி” என்று திரும்பி பாராமல் சொல்லிவிட்டு நகரச்

சட்டென துளிர்த்துவிட்ட கடைவாய் சிரிப்பை அங்கேயே தங்கவிட்ட அவிரனோ சலித்துக்கொண்டான்,”உன் டர்ன்னா பான்கேக், வாஃபில்ஸ்னு செய் அதே என் டர்ன்னா பிரியாணி, கூட்டாஞ்சோறுனு மெனூவ அடுக்கு!”

வீயன்,”அதுக்கென்ன பேப் செய்ய? நானே எனக்கு தெரிஞ்ச பத்து இருபது டிஷ்ஷ வச்சு ஓட்டிட்டு இருக்கேன். ஆனா உன் கைமணம் இருக்கே! ஹப்பா! அதுக்கு அந்த கோவாவையே எழுதி வைக்கலாம்” என்று எதிர்புற சுவரைப் பார்த்து கண்களை மூடி ஏதோ கனவுலகில் மிதப்பதுபோல் சொன்னவனை நோக்கிப் பறந்து வந்தது அந்த கரண்டி. நொடிப்பொழுதில் கண்களைத் திறந்தவன் அதை அப்படியே இடக்கையால் கேட்ச் பிடித்து அந்த பான்கேக்கை திருப்பிப் போட்டான்.

வீயன்,”பாடம் எடுக்கற ப்ரஃபஸரா பேப் நீ? வயலன்ஸ கைல எடுக்கற..” என்று கண்களில் போலி ஆச்சரியத்தை அதீதமாய் கூட்டி அவன் சலித்துக்கொள்ள
இரண்டே எட்டில் நெருங்கி அவனைக் கழுத்தோடு சேர்த்து வலக்கைக்குள் லாக் செய்த அவிரன் நெரிப்பதுபோல் இறுக்கிப் பிடித்து தலையில் குட்டினான்.

“உன்ன பக்கத்துல வச்சிருக்கற வரை பீஸ் வில் நெவர் பீ என் ஆப்ஷன்டா விக்ஸ டப்பா!” என்றான் நடுவில் வீயனது, “ஹே வாத்தி! விடு பான்கேக் தீயிது!” என்று அலறவிட்டபடி.

“இன்னொரு வாட்டி வாத்தின வீட்டுக்குள்ள பான்கேக் மாவ பேன் பண்ணிருவேன் வீ!” என்று மிரட்டியவாறே விட்டவன் லேசாய் தீய்ந்திருந்த அந்த பான்கேக்கை பார்த்துவிட்டு,”சிரப் விட்டா தீஞ்சது அவ்ளோவா தெரியாது.. இதை ஷேர் பண்ணிக்கலாம்” என்றுவிட்டு குளியலறை நோக்கி நகர்ந்தான்.

கால்மணி நேரங்கழித்து ட்ராக் பேண்ட்டும் டீஷர்ட்டுமாய் ஈரத்தலையைக் காற்றில் உலர்த்தியபடி வந்த அவிரனையே வீயின் ஒற்றை புருவ தூக்கலுடனான பார்வை பின் தொடர அதை கவனியாதவனாய் அவன் எதிரில் வந்து அமர்ந்து பான்கேக்கில் கவனமானான்.

வீயின்,”இன்னைக்கு காலேஜ் போல?” இல் தொக்கி நின்ற ஆச்சரியத்தின் அளவு அபரிமிதமாய் இருந்தது.

ஒரு கணம் பொறுத்தவன் பிறகு இல்லை என்பதாய் தலையசைத்துவிட்டு, “இன்னைக்கு லைப்ரரி போறேன்” என்றான் மெல்ல. அதை சொல்லும்பொழுது அவிரனுக்கே சிறு தயக்கம் தான். அவிரனது பதிலில் வீயனுக்கோ ஆச்சரியம் அகன்று சந்தேகம் துளிர்க்கத் தொடங்கியது. அவிரன் ஒன்றும் அப்படி அடிக்கடி விடுப்பெடுக்கும் ரகமில்லையே! உடம்புக்கு முடியாத நாட்களிலேயே ஓடுகிறவன்! இன்று லைப்ரரிக்கு போகிறேன் என்று வேலைக்கு விடுப்பு என்கிறான். அதுவும் நேற்று போய் வந்த அதே லைப்ரரிக்கு! வீ ஒன்றும் முட்டாளில்லை. அவனுக்கு எதுவோ நெருடியது. ஆனால் அவிரனிடம் அவன் ஒரு வார்த்தை கேட்பதாயில்லை. சொல்ல வேண்டுமென்றால் அவி இப்பொழுதே சொல்லியிருப்பானே! அவனே சொல்லவில்லை என்றால் துருவாமல் விடுவது தான் சரி. அவனே என்றாவது சொல்லுவான் என்று விட்டுவிட்டவன் காலி தட்டுடன் எழுந்துகொண்டு அவிரனை கடக்கையில் அவன் தோளில் லேசாய் தட்டி, “ஹேவ் எ குட் டே பேப்!” என்றுவிட்டு நகன்றுவிட்டான்.
அவிரனுக்கே அவன் செய்ய இருப்பது சற்று ஆச்சர்யமாய்தான் இருந்தது. கூடவே சற்று அபத்தமாயும். அவன் மறுபடியும் அதே லைப்ரரிக்கு செல்வதாக முடிவெடுத்துவிட்டான். எந்த நம்பிக்கையில் இப்படி கிளம்புகிறான் என்று அவனுக்கே தெரியவில்லை! நேற்று பார்த்தவளை அதுவும் அப்படி பாதியிலேயே ஓடியவளை இன்றும் பார்க்கக் கூடிய சாத்தியக்கூறுகளை பற்றியெல்லாம் அவன் ஆராயத் தயாரில்லை! ஏதோ ஒரு உந்துதல்! தோன்றியது கிளம்பிவிட்டான். அவளது அந்த ஒற்றை பதட்ட பார்வை அவனுள் அத்தளை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடுமா? ஏற்படுத்தியிருக்கிறதே! இல்லையெனில்.. இதோ.. இங்கு வந்தேவிட்டானே!

அந்த க்ரான் பெர்ரி ஜூஸ், அந்த அம்மா, வினி எனப் பார்வை படபடக்க அதை இறுக்கிப் பிடித்து ஒரே நேர்கோட்டில் அத்தனையும் வைத்துப் பார்த்த மிளிராவிற்கு ஒன்று மட்டும் நன்றாய் விளங்கியது. அது, அவளது இப்போதைய தேவையெல்லாம் தெளிவு மட்டுமே! எக்காரணம் கொண்டும் இவர்கள் எதிர்பார்ப்பது போல் தான் தன் மனதை விட்டுவிடக்கூடாது! என்ற எண்ணம் திண்ணமாக சட்டென எழுந்துகொண்டவள் ஒரு “ஸாரி”ஐ உதிர்த்துவிட்டு தனது அறை நோக்கி ஓடிவிட்டாள்.

உள்ளே நுழைந்தவள் நொடிப்பொழுதில் கதவடைத்து தாழிட்டாள். ஓடிச்சென்று சன்னல் கதவுகளையும் இறுக மூடி பிறகு திரைச்சீலைகளை இழுத்துவிட்டாள். அறையே இருளானது. ஆனால் மனதினுள் சிறு திடம் பிறந்தது. அறையினுள் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவளின் மனதினுள் பல கேள்விகளும் பதில்களும் அலைமோதிக்கொண்டன. முதலில் அம்மா அப்பாவெனச் சொல்லிக்கொண்டு இங்கிருப்பவர் யார்? அவர்கள் அப்படி நாடகம் ஆடுவதற்கான காரணம் என்ன? அடுத்து இறந்துபோன வினி எப்படி உயிருடன் வந்தாள்? அதுவும் கொன்றவர்களுடனே குலாவுவதற்கான காரணம் என்ன? அப்படியென்றால் இந்த நாடகத்தில் அவளது பங்கென்ன? அப்போ வினிக்கூட தன் புறம் இல்லையென்றால் தனக்கென யார் இருக்கிறார்கள்.. என்று தளரத்தொடங்திய மனதை இழுத்துப் பிடித்தாள். மனம் பட்டியலிடத் தொடங்கியது.

முதலில் சவி, ஆனால் அவள் நடந்துகொள்வதும் இவர்களுடன் பழகுவதையும் பார்த்தாள் அவள் தான் இவளுக்கு முதல் ஆபத்தாய் வந்து முடிவாள்! அடுத்து டாக்டர் ஜெயன், அவர் அன்று கட்டிவிட்ட ஆக்ஸிடென்ட் கதைக்கு பின்னான காரணம் இன்னும் தெளிவாய் விளங்கவில்லை என்றாலும் அவர் தன் புறமில்லை என்பது ஐயமறப் புரிந்துபோனது. இப்பொழுது வினி.. கடைசியில் இவளுமா? ச்சே! ஏன் இப்படி? ப்ச்.. இனி மீதம் இருப்பது அந்த அம்மாவும் அப்பாவும் மட்டும்தான். கேள்விகள் கேள்விகள் என அவளைச் சுற்றி அத்தனையும் கேள்விகள்! ஆனால்..
அத்தனை கேள்விகளுக்கும் நடுவில்
சட்டென மின்னியது நேற்று சந்தித்த அவிரனின் நினைவு! அவிரன்! அவனை இவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லையே! வினியைப்போலவோ டாக்டர் ஜெயனைப் போலவோ அவிரனுக்கும் இவளுக்கும் எந்தவித தொடர்பும் இருக்கவில்லையே! அப்படி ஒருத்தன் அவளுக்குத் தெரியும் என்பதுகூட அவளுக்கு மட்டும்தானே தெரியும். ஆனால் இம்முறையும் அதே முட்டாள்தனத்தைச் செய்யக்கூடாது! அவிரன் என்பவன் இவர்களுக்கு தெரியாதவரைத்தான் இருவருக்கும் நல்லது. ஆனால் அவன் தனக்கு உதவுவானா? அன்றொரு நாள் வகுப்பறையில் அவள் முகத்தை மிருதுவாய் தொட்ட அவன் பார்வையும் அந்த தேன் நிற விழிகளும் நினைவிலாட ஏனோ அதற்கு மேல் சிந்தியாமல் ஒரு முடிவுக்கு வந்தவளாய் உடை மாற்றச் சென்றாள் மிளிரா.

எங்கோ,

மறு முறை விழிப்பு தட்டிய பொழுது அந்த படுக்கையறையில் அடர்ந்த அமைதி. மினர்வா மெல்ல எழுந்தமர்ந்தாள். படுக்கையறையில் தான் மட்டுமே இருப்பது உறைத்தது. சட்டெனத் திரும்பி இடப்பக்கத்து வெற்றிடத்தைப் பார்த்தவளிடம் சிறு பரபரப்பு. ஆதி அங்கு இல்லை. ஏன் இருந்ததற்கான தடயம் கூட இருக்கவில்லை. அவ்விடம் அத்தனை நேர்த்தி. மெல்லெழும்பியது ஒரு ஆசுவாச மூச்சு. அதைக் கணித்தாற் போல அடுத்த கணமே எழுந்த சத்தம் அதை ஒரு நொடி அதிரச் செய்தது. கூர்ந்து கவனித்தாள். கீழ்த் தளத்தில் இருந்துதான் வருகிறது அந்த சத்தம். அல்ல! இசை. எரிக் சடீயின் நோசியன்ஸை யாரோ வாசித்துக்கொண்டிருக்கிறார்கள். யாரோ என்ன யாரோ! ஆதியாகத்தான் இருக்க வேண்டும். மெல்ல இறங்கி அடுத்த தளத்தை நோக்கி நடந்தாள் மினர்வா. புத்தி வேண்டாமென பதறியது. மனமோ பதட்டத்திலேயே நடந்துவிட்டது.

இவள் படியிறங்கும்பொழுதே பார்த்துவிட்டாள். அவ்வறையின் நடுவே அம்சமாய் அமர்ந்திருந்த பியானோவில் ஆதி தான் கண்களை மூடி எதிலோ ஆழ்ந்தவன் போலொரு பாவனையுடன் வாசித்துக்கொண்டிருந்தான். சில அடிகள் தள்ளி, படிக்கட்டு அருகிலேயே நின்றுவிட்டவளின் பாதங்களில் மெல்லிய குளிர் பரவல், அவனது பாவனையைக் கண்டு. அங்கேயே நின்றுவிட்டாள். அவளது பார்வை மட்டும் நம்பமாட்டாமல் அவனையே வெறித்திருந்தது. நிஜமாகவே இவன் கொலையும் செய்வானா? இதோ! இங்கே ஆழ்ந்து அனுபவித்து எதையோ சாதித்துவிட்டுக் கொண்டாடுபவனின் பாவனையில் அமர்ந்திருக்கும் இவனேதான் அத்தனை கொடூரங்களையும் அவளுக்குக் காட்டிக்கொண்டிருக்கிறானா? அந்த நடிகன்.. என்ன செய்தான் அவனை? அதையும் செய்யக்கூடியவன்தானா இவன்?
எண்ணங்களில் உழன்று கிடந்தவள் இசை அறுந்ததைக் கவனித்திருக்கவில்லை. அதைத் தொடர்ந்து பரிவும் பதட்டமுமாய் வந்த ஆதியின், “ஹே! மினா.. வா வா! இங்க வா.. ஏன் அங்கேயே நின்னுட்ட?” என்று கண்களில் ஆசையும் அன்புமாய் மின்னச் சட்டென எழுந்து இவளருகில் வந்து இவள் கைப்பற்றினான். அதில் அவள் லேசாய் அதிர்வதைக் கூட உணராதவனைப்போல. அவளையும் அரவணைத்தாற்போல அழைத்துச் சென்றவன் மினர்வாவை தன்னருகில் அமர வைத்துக்கொண்டான் சிறு பிள்ளையின் குதூகலத்துடன். அவள் கரங்களை மிருதுவாய் பற்றி வாசிக்க உயர்த்தியவன் கண்ணில் அது பட்டுவிட்டது! அது, ஆள்காட்டி விரலில் இருந்த சிறு வெட்டுக்காயம். முன்தினம் கேரட் சீவியவள் கையையும் சேர்த்துச் சீவிக்கொண்டாள். அதைக் கண்டவனின் பாவம் நொடியில் பிறழ்ந்தது.

“அச்சோ! ரத்தம்! என்னாச்சு மினா? கைல எப்படியாச்சு?” என்று இவள் புஜத்தை அழுத்தமாய் பிடித்து அதற்கு நேரெதிராய் அழுதுவிடுபவன் போலொரு பாவனையில் படபடப்பவனைப் பார்த்தவளுக்கு நாவெழவில்லை. விழுங்கிக்கொண்டவள், “கேரட் சீவறப்போ.. தெரியாம..” கையிலிருந்த காயத்தைவிட அவன் அழுத்திக்கொண்டிருப்பதுதான் அதிகமாய் வலித்தது.

அவ்வளவுதான்.

“சௌதா! சௌதா!” என்றவனின் உயர்ந்த குரலில் உள்ளிருந்து வந்தாள் சௌதா, அவர்கள் வீட்டின் சமையலையும் மற்ற சில வேலைகளையும் மேற்பார்வையிடுபவள். சௌதாவிடம் ஆதிக்கான பயமோ பதட்டமோ எதுவுமில்லை. ஒரு வித மௌனமே அப்பியிருந்தது. ஆதி மற்றவர் முன் அவனது கோர பக்கத்தைக் காட்டியதில்லை. இருந்தும் அவ்வீட்டில் இருக்கும் ஒரு சில வேலையாட்களும் அவ்வளவாய் அங்கு ஒட்டிக்கொள்வதில்லை. வந்தோமா போனோமா என்றிருப்பர். மினர்வாவாய் சென்று பேசினால்கூட ஆம் இல்லை என்ற பதில் இருக்குமே தவிர அதைத் தாண்டி ஒரு வார்த்தை இராது. ஒரு கட்டத்தில் அவளுமே கைவிட்டுவிட்டாள் அம்முயற்சியையும்.

“எத்தன தடவ சொல்லிருக்கேன்? மினாவ கிட்ச்சன் பக்கம் விடக்கூடாதுனு! கைய சீவிருக்கா! கவனமா இருக்க மாட்டீங்களா யாரும்?” என்றவனின் குரலில் இருந்த பரிதவிப்பை அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்த மினர்வாவிற்கு அழுவதா சிரிப்பதாவென்று தான் புரியவில்லை. அத்தனை பேருக்கும் ஆதி ஒரு ஆகச்சிறந்த கணவன். மனைவியென்றால் உயிரை விடும் மனிதன். ஆனால் அவன் உயிரையே எடுப்பவன் என்பது அவள் மட்டும்தானே அறிவாள். ஏன் அதே வீட்டில் பல மணி நேரங்களைச் செலவிடும் வேலையாட்களுக்குக் கூட தெரிவதில்லையே!

சௌதா,”சாரி சர்”

“இனிமே இப்படி நடக்காம பாத்துக்கங்க!” என்றுவிட்டு இவள் கையை பிடித்துக்கொண்டு ஆராய்ந்தவனையே பார்த்திருந்தாள் மினர்வா.

அவள் இருப்பது கண்ணாடிக்கூண்டில். அவள் இருப்பதை அனைவரும் பார்க்கிறார்கள், ஆனால் அவள் சிறைப்பட்டிருப்பதை யாருமே கவனிக்கவில்லை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!