9
“Hell is empty, and all devils are here” – William Shakespeare
நாம் வேடிக்கை பார்க்கிறோம். ஆம் வேடிக்கைதான் பார்க்கிறோம். சுற்றிச் சூழ்ந்திருக்கும் நன்மை தீமைகளை மட்டுமன்றி நம் நமது வாழ்வையே பல சமயங்களில் வேடிக்கை தான் பார்க்கிறோம். அடியாழத்தில் நீ அழிகிறாய் என்று கெஞ்சலாய் பிச்சையெடுக்கும் குரலுக்குப் பதிலின்றி போகையில் வேடிக்கைதான் பார்க்கிறோம். இதுவும் ஒருவித வீடியோ கேம்தான். இந்த லெவலை தாண்டினால் இது சரியாகிவிடும். இந்த லெவலை தாண்டினால் இது கிடைத்துவிடுமெனக் கடைசி வரை கண்ணுக்குத் தெரியாத ஒன்றைப் பிடித்துக்கொண்டு இப்பவாவது இப்பவாவதுவென வாழ்க்கையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம். கடைசிவரை புரிவது தானில்லை. விளையாட்டு என்றுமே கோப்பையை பற்றியதல்லவென.
உலகம் புதிது அவளுக்கு. ஆம்! இந்த வெளியுலகம் புதிது மிளிராவிற்கு. அத்தனை வருடப் படிப்பையும் வாழ்க்கையையும் வீட்டிற்குள்ளேயே கழித்துவிட்டவளுக்கு இந்த பள்ளி வாழ்க்கையே பெரிய மாற்றம். பொதுவாய் அவளது பொழுதனைத்தும் அவள் வீட்டு லைப்பரரியிலேயே கழிந்துவிடும். அதை இந்த வகுப்பறையோடு ஒப்பிட இயலாது. இந்த வகுப்பறை இருக்கும் தளம் மொத்தத்தையும் சேர்த்தால் அவளது லைப்ரரி அளவு வருமா? சந்தேகம்தான். ஆனால் அத்தனை பெரிய நூலகத்தில் நள்ளிரவைக் கடந்தாலும் யாருமற்ற தனிமையில் அயராமல் அளவளாவிக்கொண்டிருந்த அதே மிளிராவிற்கு இந்த சிறிய வகுப்பறையில் நிரம்பி வழியும் மாணவர்கள் இடையே இருப்பதுதான் பெரும் பிரயத்தனமாய் அமைந்தது. அவள் அந்த அடர்ந்த அமைதியில் உணராத தனித்த உணர்வை இந்த மாணவ கூட்ட சலசலப்பில் உணர்ந்தாள். அத்தனை வருடங்களுக்குப் பிறகு முதன்முதலாய் வெளியுலகிற்கு வருபவளுக்கு அதற்கேற்ற ஆர்வமும் ஈர்ப்பும் இல்லாவிடினும் ஏதோ ஒரு மூலையில் சிறு எதிர்பார்ப்பு ஒட்டிக்கொண்டுதான் கிடந்ததுபோலும். இது இப்படிதான் இருக்கும் என. அதுவும் இல்லையென்கையில் பெரிதாய் ஒன்றும் மூழ்கிவிடவில்லைதான். ஆனால் அவளால் அங்கு ஒட்ட இயவில்லை. அதுவும் ஒரு பெரிய விபத்திற்குப் பிறகு முதன் முதலாய் தன் கூட்டுக்குள் இருந்து வெளி வந்திருக்கிறாள்.
இதோ.. இங்கு அவள் எதிரே நின்றுகொண்டு எதையோ கேட்டு அவளை எங்கோ தள்ளிக்கொண்டிருக்கிறானே, இவன்கூட ஏதோ டிஸ்ரப்ட் ஆன வீடியோ போல இரண்டிரண்டாய் தெரிகிறான். அந்த வகுப்பறையே மெல்ல ஆடுவதுபோல் இருக்கிறது. ஆனால் மிளிரா ஒரு வார்த்தை பேசாது அப்படியே அமைதியாய் ஒரு வெற்றுப் பார்வையுடன் நின்றிருக்கிறாள். முதலில் எதையோ கேட்டான். பிறகு சண்டை பிடிக்க முயன்றான். திட்டினான். தோளைப் பிடித்துத் தள்ளினான். இதோ.. இப்பொழுது அடிக்க ஓங்குகிறது அவனது கரம். அனைத்தும் கவனத்தில் பதிந்தாலும் சுண்டுவிரலை நகர்த்தாது நின்றிருந்தாள் மிளிரா. வகுப்பறை இன்னும் ஆடிக்கொண்டே இருந்தது. எதிரிலிருப்பவனும் பஃபராகிக்கொண்டே இருந்தான். இதோ.. இப்பொழுது அடி விழப்போகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கையிலேயே சட்டென அவன் மீதொரு டஸ்டர் வந்து விழுந்தது. இன்னொருவன்! வகுப்பறையின் ஆட்டம் மெல்ல மெல்லத் தேய்ந்தது. வந்தவன் மற்றவனிடம் பேசி அவனை அனுப்பிவைத்துவிட்டு இவளருகில் வந்தான்.
அழகாய் வளர்ந்து அம்சமாய் வளைந்து நின்ற இமைப்பீலிகள். அதன் கீழே தேன் நிறத்தில் ஆர்கலியாய் அமிழ்த்திவிடும் விழிகள். இவனது சிரிப்பு கட்டாயமாய் கண்களை எட்டிடும் என்பதைச் சொல்வதுபோல வடிவான இதழ் வளைவுகள். மென்மையாய் இவள் தோள் பற்றியிருந்தவன் எதையோ கேட்டுவிட்டு ஒரு கை குட்டையை எடுத்து அதைவிட மென்மையாய் அவள் முகத்தைத் தீண்டினான். அவனது கை குட்டை கூட இத்தனை மென்மையா? அத்தனை ம்ருதுவானதொரு தொடுகை. செயல். உணர்வு. இவளுக்குப் பின்னால் இருக்கும் சன்னல் படரும் சூரிய ஒளி அவன் வெள்ளை நிற சட்டையில் விழுந்து தெறித்த விதம். அது அவன் முகத்தில் பிரதிபலித்தது. இறங்கி வந்த தேவதைபோல ஒருவன். அவன் விழிகளையே வெறித்திருந்தவளுக்கு அதனுள்ளேயே மெல்ல மெல்ல அந்த மாயச்சுழலுக்குள் அமிழும் உணர்வு. முதன்முதலாய் எதையோ உணரத் தொடர்கையிலேயே சட்டெனத் தெளிந்தவளாய் அங்கிருந்து ஓடிவிட்டாள். இன்றும் அக்காட்சிகள் அனைத்தும் ஏதோ பனி புகைச் சூழ சரம் சரமாய் வந்துபோகும்.
எவனிடம் இருந்து ஓடினாளோ இப்பொழுது அவளே அவனிடம் போய் நிற்கப் போகிறாள் உதவியென. எப்படிப்பட்ட விதி இது!
ஒரு ‘ப்ச்’ உடன் அலமாரியில் இருந்து அந்த வெள்ளை நிற தொள தொள காட்டன் சட்டையும் அதற்கு அதே துணியில் மங்கிய பீஜ் நிறத்திலான கணுக்கால் வரை இருக்கும் தொள தொள ட்ரௌஸரையும் எடுத்தவள் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்கவும் சட்டென மெத்தையில் அமர்ந்துகொண்டாள். பார்வையை உயர்த்தாது. வந்திருப்பது யாரென்று பார்வையை உயர்த்தாமலேயே அவளால் உணர்ந்துகொள்ள முடிந்தது.
உள்ளே வந்த அம்மா நேராய் இவள் அருகில் வந்து அமர்ந்துகொண்டாள்.
“என்னடா ஆச்சு? என்ன ப்ரச்சனை? ஏன் அப்படி ஓடி வந்துட்ட? உடம்புக்கு ஏதாவது பண்ணுதாம்மா?” என்று கேட்டுக்கொண்டே போனவளுக்குக் குனிந்த தலையுடன் மிளிரா மெத்தை விரிப்பையே வெறித்துக்கொண்டிருப்பதே பட, “மிரா இங்க பாரு!” என்றார் சற்று அழுத்தமாய். அந்த அழுத்தத்தின் தாக்கத்தில் இவள் விழிப் பார்வை உயர்ந்தது. அது ஒரு நொடி வாசலை எட்டிட அதை உணர்ந்தவர் போல,
“வினி கிளம்பியாச்சு” என்று முதலில் சற்று ஒரு மாதிரி குரலில் காட்டமாய் சொன்னாலும் அடுத்த கணமே என்ன தோன்றியதோ குரல் குழைந்துவிட்டது.
“வினிக்கும் உன்ன நினைச்சு கவலைடா. என்னடாமா ஆச்சு? என்ன பண்ணுது?” என்று மறுபடியும் அதே கேள்விக்கு வந்து நிற்க மிளிராவின் விழிகளில் வெப்ப நீர்த் தேக்கம்.
விழிகள் இரண்டும் நீரில் மறையத் தொடங்க லேசான இதழ் கோணலுடன் ஏறிட்டவள் விசும்ப தொடங்கி விடுபவள் போலொரு தோற்றம்.
“தெரியலையே! எனக்கு எதுவும் தெரியலையே! எது நெஜம் எது பொய்.. என்ன சுத்தி என்ன நடக்குது.. ம்ஹும்.. ஒன்னுமே தெரியலையே எனக்கு! நான் என்ன பண்ணுவேன்? எனக்கு எதுவுமே புரியமாட்டேங்குதே! யார பார்த்தாலும் பயமா இருக்கே.. நான் யார்ட்ட சொல்ல? எதுவுமே புரியாம ஏதோ மந்திரத்துக்குள்ள மாட்டிக்கிட்ட மாதிரி இருக்கே.. மூச்சு முட்டிக்கிட்டு.. கழுத்த யாரோ நெரிக்கறாப்ள..” என்று கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் வழிய நாசியும் கன்னங்களும் சிவந்துவிடப் பேசிக்கொண்டிருந்தவளையே பார்த்திருந்தவர் அவளை அப்படியே அணைத்துக்கொண்டார். மெல்ல அவள் முதுகையும் தலையையும் வருடிக்கொடுக்க அவள் அழுகை சற்று மட்டுப்பட்டது. அணைப்பில் இருந்து விடுவித்தவர் அவள் கைகள் இரண்டையும் தனதுக்குள் பொதிந்து கொண்டு பரிவாய் அவள் முகம் பார்த்தார்.
“டேப்ளட் எடுத்துக்கலியாடா மிரா?”
இவர் எதைச் சொல்கிறார்? என்ன மருந்து? இவள் ஏன் எந்த மாத்திரையையோ போட்டுக்கொள்ளனும்? மாத்திரை எடுக்குமளவு என்ன வந்துவிட்டது? ஆயிரம் எண்ணங்கள் அலைபாய,
“என்ன டாப்ளட்?” என்று புரியவில்லை என்றொரு பாவத்தோடு கேட்க எதிரில் இருப்பவர் பெருமூச்சொன்றை வெளியிட்டாரோ? சரியாய் தெரியவில்லை. எழுந்து சென்றவர் அவளது மேசை ட்ராயரில் எதையோ தேடி எடுத்துக்கொண்டு வந்தார். அது ஒரு குட்டி சிகப்பு நிற பெட்டி. இது எப்படி இங்கு வந்தது? இதை நேற்று இங்கு பார்த்தாளா? இல்லையே!
அதை திறந்தவர் அதில் கடந்த சில நாட்களுக்கான மாத்திரைகள் எடுக்கப்படாமல் அதன் இடத்தில் அப்படியே இருப்பதைப் பார்த்துவிட்டு அவளையும் ஒரு பார்வை பார்த்தார். அதில் இருந்தது என்ன அயர்ச்சியா? என்னவோ.
“மிராமா.. மறக்காம மாத்திரை போடனும்டா” என்று பரிவாய் அலுத்துக்கொண்டவர் அதில் ஒன்றை எடுத்து இவள் கையில் திணித்தார்.
இது என்ன மாத்திரை என அந்த பெட்டியை எட்டிப்பார்த்தவளுக்கு நன்றாய் விளங்கியது அதெல்லாம் ஏதோ ஒரு சைக்யாட்ரிஸ்ட் பரிந்துரைத்தவை என. ஆனால் இவளுக்கு எதற்கு இதெல்லாம்? இவர் சொல்வதைப் பார்த்தால் என்னவோ தினமும் போட்டுக்கொண்டிருந்ததை இவள் பாதியில் நிறுத்தியது போலல்லவா இருக்கிறது.
“என்ன டேப்ளட் இது?” என்றாள் கையிலிருந்த மாத்திரையிலேயே கவனத்தைப் பதித்து.
இம்முறை வெளிப்படையாகவே ஆழ மூச்சிழுத்தவர்,
“இது நீ தினமும் போட்டுக்கற மாத்திரைடா..” என்கவும்
“ஓ..” என்றதோடு சரி அதற்குப் பின் அதைப் பற்றி அவரிடம் கேட்கவில்லை.
சில கணங்கள் மௌனத்தில் கழித்தாள். பிறகு,
“நான் எங்கயாது வெளில போய்ட்டு வரவா?” எனவும் எதிரில் இருந்தவர் தவித்துப்போனார்.
“என்னடா இதுக்கெல்லாம் பெர்மிஷன் கேக்கற?”
“ப்ச்.. தெரியலை எதுவும்” என்று முழங்கையைத் தொடையில் ஊன்றி தலையை பிடித்துக்கொண்டவள்.
“நான் லைப்ரரிக்கு போயிட்டு வரேன்” என்று எழுந்துகொள்ள அவள் கையைப்பற்றி அமர வைத்தவர். ஒரு டம்பளரில் தண்ணீரை ஊற்றிக் கொடுத்து, “டேப்ளட் எடுத்துட்டு எதாயிருந்தாலும் மிராமா” என்றவர் சொன்னது மட்டுமின்றி அவள் அந்த மாத்திரையை விழுங்கும்வரை இருந்து பார்த்துவிட்டே வெளியேறினார். அவர் சென்றதை உறுதி செய்துகொண்ட பின் நாவிற்கடியில் இருந்த மாத்திரையை எடுத்து தன் உடை பாக்கெட்டுக்குள் பத்திரப்படுத்திக்கொண்டாள் மிளிரா.
அடுத்த ஐந்து நிமிடத்தில் அவளது கார் லைப்ரரியை நோக்கிப் பறந்துகொண்டிருந்தது.
நூலகத்தின் எதிர்புறத்தில் வண்டியை நிறுத்தியவளின் பார்வை கண்ணாடி வழியாய் அவளுக்குப் பின்னால் எதையோ கூர்மையாய் கவனித்துக்கொண்டிருந்தது. அதோ! அவள் நினைத்தது போலவே ஒரு கார் அவளை பின்தொடர்ந்து வந்து, கடந்து அதே நூலகத்தைத் தாண்டி சென்றுகொண்டிருந்தது. அது எங்கே போகிறதென்றும் அவள் அறிவாள். அன்று போல் அதே பின்பக்கமாய் தான் இருக்க வேண்டும். அதைக் கண்டும் காணாததுபோல வெளியேறியவள் துளி வேகமின்றி வெகு சாதாரணமாய் நடையை எட்டிப்போட்டாள் நூலகத்திற்குள்.
உள்ளே நுழைந்தவளின் பார்வை யார் கவனத்தையும் ஈர்க்காத வண்ணம் சுழன்றது அவிரனுக்காய். மெல்லப் படியேறியவள் அன்று அவனைக் கண்ட இடத்திற்கு வர அங்கு அவன் இருப்பதற்கான தடயமே இருக்கவில்லை என்றதும் உள்ளுக்குள் ஏதோ பெரிதாய் கழன்று விழுந்த உணர்வு அவளுக்கு. எந்த நம்பிக்கையில் வந்தாள் இவள்? இன்றும் அவன் வந்து அதே போல் நின்றுகொண்டிருப்பான் என்றா? அவனுக்கென்றொரு வாழ்க்கை இருக்குமே! அதையெல்லாம் எப்படி யோசியாமல் போனாள்? இல்லை.. இன்னும் உள்ளுணர்வு அடித்துச் சொல்கிறது. அவன் வருவான் என. ஒரு புறம் ஒட்டிக்கொண்டு கிடக்கும் நம்பிக்கையும் மறுபுறம் பிய்த்தெடுக்கும் அச்சமுமாய் கைக்குக் கிடைத்த ஒரு புத்தகத்தை எடுத்தவள் அப்படியே தரையில் அமர்ந்துவிட்டாள் ஷெல்ஃபில் முதுகைச் சாய்த்து. நேரம் செல்ல செல்ல ஒட்டிக்கொண்டு கிடந்த துளி நம்பிக்கையும் கரையத்தொடங்கியிருந்தது. தொண்டையை அடைத்துக்கொண்டு வரக் கடைசி கயிற்றையும் கைவிட்டவளாய் எழ நினைத்தவளைக் கலைத்தது அக் குரல்.
காலையிலேயே முதல் ஆளாய் வந்துவிட்ட அவிரனுக்கு முதல் ஒரு மணி நேரம் ஒருவித பரபரப்பு உடலெங்கும் பரவிக்கிடந்தது. அவள் எப்பொழுது வேண்டுமானாலும் வந்துவிடுவாள் என்ற உணர்வோ என்னவோ. அடுத்த ஒரு மணி நேரமும் அவளுக்கு அப்படியென்ன பிரச்சினை இருக்கக் கூடும் என்ற அவதானிப்பில் கழிந்தது. நேரம் செல்ல செல்ல அவள் வருவாள் என்ற நம்பிக்கையும் தேயத் தொடங்கியிருந்தது. என்ன செய்துகொண்டிருக்கிறான் இவன்? வீயன் இதைக் கேட்டால் சிரித்து விடுவான். இப்படியொரு முட்டாள்தனமான ஆர்வமா என. ஆனால் உள்ளூர அவளுக்கு தன் உதவி தேவை என்று திடமாய் ஒரு எண்ணம் உறுத்திக்கொண்டே இருக்கையில் அவிரனால் அதை நிராகரித்துவிட்டு மற்ற வேலைகளில் முழு மனதாய் ஈடுபட இயலவில்லை. பல மணி நேரங்கள் கடந்தும் அவள் வரவில்லை என்றதும் கிளம்பத்தான் நினைத்தான். அதற்கு முன் ஒரேயொரு முறை மொத்த லைப்ரரியையும் கடைசியாய் சுற்றி பார்த்துவிடலாம் என்று நகர்ந்தான். ஆனால் அவன் முடிவெடுத்த சில நொடிகளிலேயே உள்ளே நுழைந்தாள் மிளிரா. நூலகம் முழுக்க சுற்றி வந்தவன் கடைசியாய் ஒரு முறை அவளை நேற்று சந்தித்த இடத்திற்கு வரத் தன்னையறியாமலே ஒரு நிம்மதி ரேகை அவனுக்குள், அவளை கண்டதில். நேற்று அவன் நின்றிருந்த பகுதிக்கு சென்றவன் அவளைப்போலவே அவளுக்கு முதுகு காட்டியபடி நேர் பின்னால் சாய்ந்தமர்ந்துக்கொண்டான் கையில் ஒரு புத்தகத்துடன்.
அவிரன்,”நீ வரமாட்டனு நினைச்சேன்”
மிளிரா,”நீ வந்துட்ட”
அவிரன்,”ம்ம்.. வந்துட்டேன்” என்றவனின் இதழ்களில் சிறு புன்னகை அரும்பியது.
மிளிரா, “உன்கிட்ட கொஞ்சம் பேசனும் அவிரன்”
அவள் குரலில் என்ன அது? கெஞ்சலா? இல்லை வேகமா?
சிறு துண்டு காகிதத்தை ரேக்குக்கடி வழியாய் அவள் புறம் தள்ளினான். அதைத் தள்ளிவிட்டவன் எழுந்து சென்றுவிடப் பிரித்துப் படித்த மிளிரா அதில் “ஃபாலோ மீ” என்று எழுதப்பட்டிருக்க சில நிமிடங்கள் இடைவேளை விட்டு அவனைப் பின்தொடர்ந்தாள். அவன் சென்றது அதே தளத்தின் மூலையில் இருந்த கதவை நோக்கி. அங்கு எவரும் செல்வதற்கு அனுமதி கிடையாது. அவிரன் திறந்து வைத்திருந்த கதவு வழியாய் நுழைந்தவள் மறுகணமே கதவை இறுக்கி தாழிட்டாள்.
பழைய நீலம் கலந்த சுண்ணாம்பால் வெள்ளையடிக்கப்பட்டிருந்த மென்னீல சுவரில் தாராளமாய் பட்டு படர்ந்திருந்த சூரிய ஒளியும் பெரிய அகலமான கல் படிக்கட்டுகளின் குளிர்ச்சியுமாய் இருந்தது அவ்விடம். அது மேலிருக்கும் மணி கூண்டிற்குச் செல்லும் படிக்கட்டுகள். இப்பொழுது பயன்பாட்டில் இல்லாமல் போனாலும் நன்றாகப் பராமரித்து வருகின்றனர் போலும். சற்றே குறுகலான இடம்தான்.
அவள் உள்ளே நுழைந்ததும் அவிரன் கேட்ட முதல் கேள்வி, “ஆர் யூ ஆல்ரைட் மிளிரா?” தான்.
“நோ! அம் நாட்” என்றவள் மறுபடியும் ஒரு முறை சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டாள்.
அதை கவனித்தவனோ, “பரவால்ல மிளிரா.. இங்க யாரும் இல்லை. வரவும் மாட்டாங்க, ரெஸ்ட்ரிக்டட் ஏரியா இது” எனவும்.
“ம்ம்” என்று தலையசைத்தாள் ஒப்புதலாய்.
“சாரி அவிரன். நேத்து அப்படி ஓடினதுக்கு”
“தட்ஸ் ஓகே மிளிரா! ஆனா என்னாச்சு? ஏன் அப்படி ஓடின? எதாவது பிரச்சினையா?” அவனது பார்வை கரிசனையாய் அவள் மீது படர்ந்தது.
‘ஆம்’ என்பதாய் மேலும் கீழுமாய் தலையசைத்தவள், “என்ன சுத்தி எல்லாமே தப்பாருக்கு அவிரன்.. என்ன நடக்குதுனே புரியல.. நீ நம்புவியானுகூட தெரியல.. பட் அட் திஸ் பாய்ண்ட் அம் டெஸ்ப்ரேட்! எனக்கு ஹெல்ப் நிச்சயம் வேணும்..” என்று படபடத்துக்கொண்டே போக ம்ருதுவாய் அவள் தோள் பற்றியவன் அவள் உயரத்திற்குக் குனிந்து அவள் முகம் நோக்கினான்.
“இங்க பாரு மிளிரா. அம் ரைட் ஹியர்! நீ என்ன சொன்னாலும் நான் கேட்க ரெடி. ஸோ கொஞ்சம் நிதானமா என்னாச்சுனு சொல்லு. எதாயிருந்தாலும் சேர்ந்தே பார்த்துக்கலாம்.. ம்ம்?” என்று ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டவனைக் கண்டவள் மெல்லத் தலையசைத்தாள்.
அன்று காலை நடந்ததில் இருந்து இன்று இங்கு வருவதற்கு முன்புவரை நடந்த அத்தனையும் ஒன்றுவிடாமல் சொல்லியவள் தெம்பு தோய்ந்தவளாய் தொப்பென சாய்ந்து அமர்ந்துவிட்டாள்.
கேட்டுக்கொண்டிருந்தவன் புருவ மத்தியில் சிறு முடிச்சுடன் அவளிலேயே பார்வையைப் பதித்து அவளருகில் அமர்ந்துகொண்டான்.
சுவரில் சாய்த்திருந்த தலையை மெல்ல அவன் புறம் திருப்பியவள், “என்ன.. நம்பறா மாதிரி இல்லையா?” என்றாள் விரக்தி விரவிய குரலில்.
அத்தனை நேரம் அவளையே பார்த்திருந்த அவிரன் “ப்ச்” என்று தலையசைத்துவிட்டு, “உன் அப்பாம்மாக்கு என்னாச்சு?” என்றான்.
பிறகு அவள் முகத்தில் என்ன கண்டானோ உடனே, “ஸாரி.. கஷ்டமா இருந்தா சொல்ல வேணாம்” எனவும் உடனே மறுப்பாய் தலையசைத்தவள் எங்கோ பார்வையைப் பதித்தவளாய்.
“சின்ன வயசுல ஒரு மேஜர் ஆக்ஸிடென்ட்.. நாங்க மூனு பேரும் போன கார்.. அப்பா.. நானும் அம்மாவும் தான் சர்வைவ் பண்ணோம்.. அதுக்கடுத்து தான் அந்த ஸ்கூல்ல சேர்ந்தேன்.. அப்பான்னா அம்மாக்கு உயிரு.. அவங்களால அத தாங்கிக்க முடியல.. அவங்களும் ஃப்யூ மந்த்ஸ்ல.. அதான் டிஸ்கண்டின்யூ பண்ணேன்..”
தரையில் கிடந்த அவள் புறங்கையைக் கதகதப்பாய் பிடித்துக்கொண்டான்.
திரும்பி அவன் முகத்தைப் பார்த்தாள். நம்பவே முடியாத ஒன்றை அவன் நம்ப முயற்சி செய்வதுபோல் சிறு சலனம் புருவ மத்தியில்.
“இட்ஸ் ஓகே அவிரன். உன்னால நம்ப முடியலன்னா எனக்கு புரிஞ்சிக்க முடியுது.. கொஞ்ச நாள் முன்னாடி என்கிட்ட யாராவது இப்படி வந்து சொல்லிருந்தாலும் யோசிச்சிருப்பேன்..”
“இல்ல மிளிரா.. நான் உன்ன நம்பறேன்! ஆனா இதெல்லாம் ஏன் எதுக்குனுதான் புரியல..”
அவள் எழுந்துகொள்ள அவனும் எழுந்துகொண்டு அவளைக் கேள்வியாய் நோக்கினான்.
அவன் புறம் திரும்பியவள் அவன் நெஞ்சில் சுட்டு விரலைப் பதித்து அவன் விழி நோக்கினாள், “இங்க இன்னும் சந்தேகம் இருக்கு அவிரன். என்னால புரிஞ்சிக்க முடியுது நீ எனக்காக ட்ரை பண்றனு.. தாங்கஸ்..” என்றவள் பாக்கெட்டினுள் இருந்து சிறு பொட்டலத்தை எடுத்து அவன் கரத்தில் வைத்தாள். சிறு தாளில் மாத்திரையை பொதிந்து வைத்திருந்தாள் அவள்.
“இது இப்போ போட்டுக்கோனு குடுத்தாங்க.. இதுல என்னவோ இருக்கு.. எனக்கு எப்படி நிரூபிக்கனு தெரியல.. ஆனா உன்னால முழு மனசா நம்ப முடிஞ்சா நாளைக்கு..” இன்னொரு தாளை அவன் கையில் திணித்தவள் “இங்க வா” என்றுவிட்டு வெளியெறிவிட்டாள்.
எங்கோ,
அந்தனுக்கு வயது பத்திருக்கலாம். ஆம்! பத்துக்குள்தான் இருக்க வேண்டும். அந்தன் அவனது ஐந்து வயது தங்கையைவிட ஐந்தாறு வயது தான் மூத்தவனாய் இருப்பான். அந்தன். எவரேனும் தன் பிள்ளைக்கு இப்படியொரு பெயரைச் சூட்டுவரா? அவள் சூட்டினாள். மனதளவில் அவன் எல்லாவற்றிற்குமான முடிவு என்று நம்பவும் செய்தாள். அவளது உலகம் வேறு போதைகளால் ஆனது. முப்பொழுதும் மற்றொரு உலகினில் சஞ்சரிப்பவளை நிதர்சனத்துக்குள் பிடித்துவைப்பது அந்தனும் அவன் தங்கை விதுவும் தான். அவளுக்கு இவ்வுலகம் பிடிப்பதில்லை. அதனால் பிடித்து வைப்பவர்களையும்! அப்படிப்பட்ட தருணங்களில் அவளது தண்டனைகள் தாங்கிக்கொள்ள முடியாதளவு துன்பத்தைத் தருபவையாய் இருக்கும். அந்தன் அமைதியானவன். அடியோ மிதியோ துன்புறுத்தலோ எதுவாயினும் பற்களைக் கடித்துத் துளி கண்ணீர் சிந்தாது கடந்திடுவான். ஒரு மரத்த பாவத்துடன், ஏதோ எதுவுமே அவனை பாதிக்கவில்லை என்பதைப் போல. குருதி கொட்டினாலும் துடைத்தெறியத் தோன்றாதவனாய். ஆனால் விது அப்படியல்ல. அவள் அம்மா அடிக்கும்பொழுது அழுதும் அடுத்த அரை மணி நேரத்தில் மற்றதில் கவனம் சிதறி மறுபடியும் சிரித்துக்கொண்டும் அங்குமிங்கும் ஓடிக்கொண்டும் இருக்கும் துடிப்பான குழந்தை. அந்த துடிப்பை காண்கையிலெல்லாம் அடக்கிவிடும் வெறி எழுந்துவிடும்போல அம்மாவுக்கு. நொடிப்பொழுதில் விது வீறிடுமளவு ஏதேனும் நடந்துவிடும். அவர்களது சற்று தனித்து நிற்கும் வீடு. ஒருவேளை அக்கம் பக்கத்தில் எவரேனும் இருந்திருந்தால் அவர்களுக்கு அந்த நரகத்திலிருந்து விடுதலை கிட்டியிருக்குமோ? என்னவோ. அவ்வப்பொழுது இவர்களை வைத்துக் கதவடைத்துச் சென்று நாட்கள் கழித்து வந்ததும் உண்டு. அப்படிப்பட்ட சமயங்களில் வீடு சற்று அமைதியாய் இருக்கும் விதுவின் அழுகைகளும் அலறல்களும் இன்றி. ஆனால் அச்சத்தங்களும் மொத்தமாய் நிற்கும் நாளும் வந்தது. விது நீச்சல் குளத்தில் மூழ்கினாள். காவலர்கள் வந்தனர். விசாரணைகள் பல நடந்தன. அந்தனிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் அத்தனை முறையும் அவனது பதில் ஒன்றாய் தான் இருந்தது. அது அன்றும் என்றும்போல விதுவின் சேட்டையில் எரிச்சலுற்ற அம்மா அவளை நீச்சல் குளத்திற்கு இழுத்துச் சென்று தள்ளிவிட்டாள். தள்ளிவிட்டுக் கதவடைத்து வீட்டிற்குள் சென்றுவிட்டாள். சில நிமிடங்கள் கடந்து வந்தவள் விது பேச்சு மூச்சின்றி கிடப்பதைப் பார்த்துவிட்டு தலையில் அடித்துக்கொண்டாள். பிறகு என்னைப் பார்த்தவள் வெளியே சொன்னால் எனக்கும் இதே நடக்கும் என்றாள். ஊர் முழுதும் தீயாய் பரவிய செய்தி. கோர்ட்டில் அந்தனிடம் மறுமுறை கேட்கையில் அந்தனின் பாவமும் பதிலும் அத்தனை பேரையும் கதிகலங்கச் செய்தது. அந்தனை இருவர் வெளியே அழைத்துச் செல்லவும் அத்தனை நேரம் வெளியே உக்கார வைக்கப்பட்டிருந்த அவளைக் காவலர்கள் உள்ளே அழைத்து வந்தனர். அவளது பார்வை அந்தனையே வெறித்திருந்தது. அவளை கடந்த அந்தனின் இதழ்களில் அவளைப்போலவே ஓரங்களில் மட்டும் வளையும் அச்சிரிப்பு வந்துபோனது.
அச்சிரிப்பையும் எவரும் அறியப்போவதில்லை. அன்று விது கால் இடறி நீரில் விழுந்து தத்தளித்ததை அதே கரையில் அமர்ந்து அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்த அந்தனையும் யாரும் அறியப்போவதில்லை.