ஆழியின் ஆதவன்

அத்தியாயம் 10

 

ஆழி மனது ஒரு நிலையில் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தது. தன் நெஞ்சின் மீது தலை வைத்து, அவளின் இதயத்துடிப்பின் இசை தாலாட்டாக ஒலிக்க, ஆழியின் கழுத்தை கட்டிக்கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் குழந்தை வெண்ணிலா.

 

தன்மீது மலர் கொத்தாகக் கிடந்த குழந்தையின் தலையை மெதுவாக வருடிய ஆழி, “ஏம் பாப்பா என்னை அப்படிக் கூப்ட, அதுவும் நான் உன்ன விட்டு போறேன்னு சொல்லும் போது, என் கால்ல சங்கிலியல கட்ற மாதிரி அந்த வார்த்தையைச் சொல்றீயே பாப்பா நீ… உனக்கு அம்மாவ இருக்கத் தகுதி எனக்கு இல்ல பாப்பா. உங்கம்மா ஆஷா இருந்த இடத்தில் என் நிழல் விழும் தகுதி கூட எனக்கில்ல, அப்படிப் பட்ட என்னைப் போய் நீ…” என்று உறங்கும் குழந்தையிடம் அவள் உள்ளக் குமுறலை இறக்கி வைக்க, தூக்கத்தில், ஆழியின் கழுத்தை உரசியபடி தலையைத் திருப்பிய நிலா தூக்கத்திலேயே மீண்டும் “ம்மா” என்றழைக்க ஆழி உடைத்தே விட்டாள்.

 

காலையில் டைனிங் டேபிள் மீது குழந்தையை உட்கார வைத்து உணவை ஊட்டிக் கொண்டிருந்த ஆழி மனதில்,காலையில் சைத்ரா ஃபோன் செய்து ப்ளான் என்ன ஆழி, எப்ப கொடைக்கானல் கெளம்பனும்னு சீக்கிரம் சொல்லு ஆழி என்று‌ கேட்டது தான் ஓடிக்கொண்டிருந்தது. ‘எப்படி நிலாவை விட்டு கொடைக்கானல் போறது’ என்று அவள் யோசித்தபடி இருக்க, அந்த நேரம் அங்கு வந்தார் வெண்மதி.

 

“என்னம்மா ஆழி, பாப்பா ஒழுங்க சாப்பிடுறாள? என்று கேட்டபடி அங்கிருந்த சேரில் அமர்ந்த வெண்மதிக்கு, “ம்ம்ம் ஒழுங்க சாப்பிடுறாமா, இப்ப எல்லாம் சேட்டை பண்ணாம சமத்தா இருக்கா” என்ற ஆழி மெதுவாக, “மதிம்மா நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்று தயங்கி தயங்கி பேச,

 

“ம்ம்ம் சொல்லு ஆழி. என்ன சொல்லணும், என்கிட்ட என்ன தயக்கம் உனக்கு”

 

“அது வந்தும்மா… நான் வேலை விஷயமா நேத்து வெளிய போயிருந்தேன் இல்ல, அந்த ப்ராஜக்ட் எனக்குக் கெடச்சிடுச்சுமா” என்றதும் மதியின் முகம் லேசாகச் சுணங்கி விட்டது. அதைக் கவனித்த ஆழி, “என்னம்மா நான் எனக்கு ப்ராஜக்ட் கெடச்சிருக்குனு சொல்றேன், நீங்க அமைதியா இருக்கீங்க. உங்களுக்கு இது சந்தோஷமா இல்லயா?” என்று‌ கேட்ட ஆழியைக் கண்களில் ஏக்கம் தேக்கிப் பார்த்தார் வெண்மதி.

 

‘எப்படிம்மா எனக்குச் சந்தோஷம் வரும். நீ இந்த வீட்டை, எம் பேத்தி, எம் புள்ளைய வீட்டு ஒரேயடியா போறதுக்கு முதல் அடிய எடுத்து வச்சிருக்கேன்னு தெரிஞ்சு, இதை நினைச்சு நான் எப்படிச் சந்தோஷப்பட முடியும்’ என்று மனதில் புலம்பிய மதியின் குரல் ஆழிக்கு கேட்டது போல, அவள் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

 

ஆழியின் கையை மெதுவாக அழுத்திய மதி, “நீ ஆதவ் பத்தி ஒருமுறை யோச்சி பாரு ஆழி. அவனுக்காக இல்லாட்டியும் குழந்தைக்காகவாது உன் முடிவை நீ மாத்திக்ககூடாத…” என்று தன் ஆதங்கத்தைக் கொட்டும் அந்தத் தாய்க்கு என்ன பதில் சொல்வது என்று தவித்திருந்தாள் ஆழி.

 

‘உங்களுக்கு நான் என்ன சொல்லி என்னைப் புரிய வைக்குறதுனு எனக்குத் தெரியலம்மா… ஆனா, இந்த ஜென்மத்தில் அந்தப் பாக்கியம் எனக்கு இல்ல, எப்ப வேணும்னாலும் என் உயிர் போகும்னு தெரிஞ்சே, ஒரு இருண்ட பாதையில், போகாத ஊருக்கு வழி தேடிட்டு இருக்க என்கிட்ட போய் நீங்க, உங்க பேத்தி எதிர்காலத்தை ஒப்படைக்க நினைக்றீங்க… இதுக்கு என்னால நோ மட்டும் தான் பதில சொல்லமுடியும். அதுக்கான காரணத்தைக் கூட என்னால உங்ககிட்ட சொல்லமுடியாதும்மா’ என்று உள்ளுக்குள் புலம்பிய ஆழி,

 

“ப்ளீஸ்மா… நான் ஏற்கனவே சொல்லிட்டேன் இது நடக்காதுனு. மறுபடியும் அதைப் பத்தி பேசி என்னை மனசை கஷ்ட படுத்தாதிங்க ப்ளீஸ்” என்று கையெழுத்துப் கும்பிட்டவள்,

 

“நான் சொல்ல வந்ததைச் சொல்லிடுறேன். எனக்குக் கிடச்சிருக்க ப்ராஜக்ட்காக நான் ஒரு நாலஞ்சு நாள் கொடைக்கானல் போய்த் தங்கவேண்டி இருக்கு, அதான் பாப்பாவை என் கூடக் கூட்டிட்டு…” என்று தயங்கியவள், “என்னை நம்பி பாப்பாவ என்கூட அனுப்பி வைப்பீர்களா?” என்று தயங்கித் தயங்கி கேட்டாள்.

 

“என்ன கேள்வி இது ஆழி… நிலா விஷயத்தில் உன்னை நம்பாம நான் வேறை யாரை நம்பப் போறேன் சொல்லு. அவ உன்னோட இருந்தால் ஒரு தூசு, துரும்பு கூட அவ மேல படாம நீ உன் கண்ணுல வச்சு பாத்துக்குவேன்னு எனக்குத் தெரியும். ஆனா, இதுக்கு அந்த அரைவேக்காடு ஆதவ் ஒத்துக்கணுமேம்மா, இதைக் கேட்ட அவன் என்ன சொல்லுவான்னு… சொல்றதில்ல… எப்படி வெறிநாய் மாதிரி கத்துவான்னு உனக்கே நல்லா தெரியும் தானா” என்றவரை தவிப்பாகப் பார்த்தாள் ஆழினி.

 

“ப்ளீஸ்ம்மா. வெறும் நாலஞ்சு நாள் தான்‍, பாப்பா நான் பத்திரமா பாத்துக்குவேன். கொஞ்சம் உங்க பையன்கிட்ட சொல்லுங்களேன்.” என்று அவள் கெஞ்சும் நேரம், “என்ன என்கிட்ட சொல்லணும் ஆழி? சொல்ல வேண்டியதை நீயே நேரடியா என்கிட்ட சொல்லேன். எதுக்கு அம்மா வாய வாடகைக்கு வாங்குற” என்றபடியே ஆதவ் ஆழி அருகில் வர, ஆழி ஒரு நிமிடம் யோசித்தவள்,

 

“நான் என்னோட வேலை விஷயமா ஒரு ஐஞ்சு நாள் வெளியூர் போகவேண்டி இருக்கு,” என்று நிறுத்தியவள், “அதான் நிலாவ‌ என்னோட அழைச்சிட்டு போக உங்ககிட்ட பர்மிஷன் கேக்க சொன்னேன்.” என்றவள் மெதுவாக, “நான் பாப்பாவை கூட்டிட்டு போகவா” என்று சொல்லி முடிக்கும் முன் “நோவே” என்று கத்தினான் ஆதவ்.

 

“என்ன நெச்சிட்டு இருக்க நீ? அதெல்லாம் என் பொண்ணை உன்னோட அனுப்ப முடியாது” என்று கத்த, ஆழி வெண்மதியை பார்த்து, ‘மா நீங்க கொஞ்சம் சொல்லுங்க’ என்று கண்களால் கெஞ்ச, மதி கண்களை மூடித் திறந்து, “இரு இரு நான் பாத்துக்கிறேன்” என்றவர்,

 

“டேய் ஆதவ், அவ குழந்தைய நல்லா பாத்துக்குவாடா, நம்பி அனுப்பு, அவ இல்லாட்டி பாப்பா இங்க அழுதுட்டு இருக்கும். அதுக்கு அவகூடக் கூட்டிட்டு போகட்டும், வேணும்னா நீயும் ஒரு நாலு நாள் லீவ் போட்டுட்டு அவங்க கூடப் போய்டு வா, ரெண்டு பேருக்கும் பாதுகாப்ப இருக்கும்” என்று அசல்ட்டாக ஒரு பெரிய குண்டைத் தூக்கிப்போட, ஆழிக்குப் பதறிவிட்டது.

 

‘ஏதே… இவரு என் கூட வா! கெட்டுது குடி… அய்யோ என்ன இந்த மதிம்மா இப்படிச் சேம் சைட் கோல் போடுறாங்க’ என்று உள்ளுக்குள் புலம்பினாள் ஆழி‌.

 

“ஹலோ மம்மி… என்னை என்ன இவளுக்குப் பாடிகார்ட்னு நெனச்சிங்கள… இவ கூட நான் போக… அதெல்லாம் என்னால முடியாது. நானும் போகமாட்டேன் ‌ இவளும் போகக்கூடாது”

 

“ஹலோ நீங்க வர்லனு சொல்லுங்க… அது உங்க உரிமை. ஆனா, என்னைப் போகக்கூடாதுனு சொல்ல நீங்க யாரு?” என்று கேட்க வந்து சற்று பொறுத்து, “என்னை ஏன் போகக்கூடாதுனு சொல்றீங்க?” என்று கேட்க,

 

அவள் வார்த்தை மாற்றத்தை உணர்ந்த ஆதவ் ஒரு சின்னச் சிரிப்போடு அவளைப் பார்த்து, “ஆமா, நீ போகக்கூடாது. நான் அம்மா, பாப்பாவை கூட்டிட்டு ஒரு நாலஞ்சு நாள் டிரிப் மாதிரி போக ப்ளான் பண்ணி இருக்கேன். சோ நீ எங்கயும் போகல, எங்க கூடத் தான் வர்ர, எல்லா ஏற்பாடும் முடிச்சச்சு. நாளைக்குக் கெளம்புறோம்” என்று முடிவாகச் சொன்னவனைப் புரியாமல் பார்த்தாள் ஆழி‌.

 

“ஹலோ ஹலோ ஸ்டாப் ஸ்டாப்… என்னங்க? என்ன தான் நெனச்சிட்டு இருக்கீங்க நீங்க? எனக்குப் புரியல… என்னை ஒரு வார்த்தை கூடக் கேக்காம, நீங்கள முடிவு செஞ்சு, வா போகலாம்னு சொன்னா என்ன அர்த்தம்? நான் என்ன உங்க ஷர்ட்ல கட்டி இருக்க டைய, கழுத்துல தொங்கிட்டு நீங்க போற இடமெல்லாம் உங்க கூடவே வர்ரதுக்கு” என்று ஆழி கத்த, ஆதவ் அவளை நக்கலாகப் பார்த்து,

 

“ம்ம்ம்ம் அப்படிதான் வச்சிகேயேன். அதுனால என்ன லாஸ், என்ன அர்த்தம்னு கேட்ட இல்ல… நான் சொன்ன நீ கேக்கணும்னு அர்த்தம், வேற என்ன” என்றவனைத் தீயாக முறைத்தாள் ஆழி.

 

ஆதவ் ஆழியிடம் உரிமையெடுத்து பேசுவது மதி அம்மாக்கு உள்ளுக்குள் சந்தோஷமாக இருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “டேய் ஆதவ் என்னடா இது விளையாட்டு?” என்று அதட்ட, ஆதவ் அவரைப் பார்த்து கண்ணடித்து, “விளையாட்டே இனிமே தான் ஆரம்பிக்கப் போகுதுமா, ஜஸ்ட் வெய்ட் ஆன்ட் வாட்ச்” என்றவன் ஆழியிடம் திரும்பி, “போய் உனக்கும் நிலாவுக்குத் தேவையான டிரஸ் எல்லாம் எடுத்து வை, ம்ம்ம் அப்புறம், கொடைக்கானல்ல குளிர் அதிகம், சோ அதுக்குத் தகுந்த மாதிரி டிரஸ் எடுத்து வச்சிடு, நம்ம‌ முகில்கு அங்க ஒரு வீடு இருக்கு, நம்ம அங்க தான் தங்கப்போறோம். அவனும் நம்ம கூட வரான்.” என்றவன் ஆழியை ஆழமான (ஆழம்) பார்வை பார்த்துவிட்டு செல்ல, ஆழி போகும் அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, அவள் பார்வையின் வீச்சை உணர்ந்த ஆதவ் இதழோரமாகச் சிரித்தபடியே சென்றான்‌.

 

“நீ நெனச்சது நடந்துடுச்சு, உன்னோட வரமாட்டானு சொன்னவன். நீ போகணும்னு சொன்ன இடத்துக்கு, இப்ப அவனே கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டான். இப்ப உனக்குச் சந்தோஷம் தான!? உன்னோட வேலையும் ஒரு பக்கம் நடக்கும், நிலாவும் உன்னோடயே இருப்பா… போதுமா. போ… போய்த் தேவையானதை எல்லாம் இப்பவே எடுத்து வச்சிடு, அப்பதான் கெளம்பும் போது டென்ஷன் இல்லாம இருக்கும்” என்ற வெண்மதிக்கு எங்குத் தெரியும், அவர் மகன் அவள் தலையில் டென்ஷனை, முட்டை முட்டையாக இறக்கிவிட்டுச் செல்கிறான் என்று…

 

ஆழி சைத்து, மீராவுக்கு ஃபோன் செய்து விஷயத்தைச் சொல்ல, “என்ன ஆழி இது? கூடக் குழந்தைய கூட்டி வருவேன்னு பாத்தா, இப்படி ஒரு குரங்கை தோள்ல போட்டுட்டு வர்ர, என்னடி நீ… ம்ம்ம்… சரி விடு, பாத்துக்கலாம் நீ வேணதும், நீ தங்குற அட்ரஸ் மெசேஜ் பண்ணிடு, நாங்க ரெண்டு பேரும் இப்பவே கெளம்புறோம். நீ அங்க வந்ததும் ஸ்பாட் பிக்ஸ் பண்ணிக்கலாம்.” என்று சைத்ரா ஃபோனை வைக்க, மீரா அவளைப் பார்க்க, சைத்து அவள் பார்வையின் அர்த்தம் புரிந்தவள், “எல்லாம் அந்தத் தெய்வத்துக்குத் தான் வெளிச்சம்.”

 

அன்றைய தினமே மீராவும் சைத்ராவும் கொடைக்கானல் கிளம்பி சென்றுவிட, அடுத்த நாள் காலை, முகில் காரில் ஆதவ், ஆழி, நிலா, வெண்மதி மூவரும் கிளம்ப, அவர்கள் காரை தொடந்து வால் பிடித்துக்கொண்டு சென்றான் விஷ்ணு.

 

முகில் வீட்டின் முன் கார் நிக்க, காரில் இருந்து இறங்கியவர்களின் உடலை கொடைக்கானலின் குளிர் லேசாக உதற வைக்க, ஆதவ் கைகளைப் பரபரவெனத் தேய்த்துக்கொள்ள, ஆழி கொடைக்கானலின் எல்லையை நெருங்கும் முன்பே, குழந்தையை அழுத்தமான வூலென் ஷலில் சுற்றி இருந்தவள், இப்போதும் நிலாவை குளிர் தாக்காது, தன் நெஞ்சோடு சேர்த்தனைத்துக் கொண்டு நிற்க, அவளைப் பார்த்து முகிலுக்கு ஆதவ் மீது கோவம் கோவமாக வந்தது.

 

“நிலாவை எப்படிக் கவன்சிக்குது இந்தப் பொண்ணு, இந்தப் புள்ளைய போய்க் கொல்லப் பாக்குறேனே இந்தக் காட்டெருமை, இவனுக்கு எல்லாம் நல்ல சோறே கிடைக்காது.” என்று வாய்க்குள் முனங்க,

 

“டேய் நீ மைண்ட் வாய்ஸ்னு நெனச்சுக் கொஞ்சம் சத்தமா பேசிட்டு இருக்க, நீ சொன்னது எனக்கு நல்லாவே கேக்குது.” என்று சிரித்த ஆதவ்வை முறைத்த முகில்,

 

“கேட்ட கேட்கட்டும். எனக்கு என்ன பயமா? உன்னால என்னை என்ன செய்யமுடியும். வேணும்னா இதுக்காக ஆழிய கொல்லும் போது என்னையும் சேத்து போட்ரு” என்று முகத்தைத் திருப்பிக்கொண்டான்‌.

 

“டேய் ஏன்டா? அன்னைக்கு என்னோட சண்டை போட்டுப் போனது. அதுக்கு அப்புறம் நீ என்னோட பேசாவே இல்ல, இப்ப நீ திட்டிட்டாது என்கிட்ட பேசின சந்தோஷத்தில் தான்டா, நான் சும்மா உன்னைக் கிண்டல் பண்ணேன். அதுக்குப் போய் நீ இப்படிப் பேசிட்டு இருக்க, இட்ஸ் நாட் குட் முகில்” என ஆதவ் வருந்த,

 

“ஒஒஒ நான் பண்றது சரியில்ல, அப்ப சார் செய்றது எல்லாம் கரெக்ட் அப்படித் தான” என்று சீறிய முகில் மதி, ஆழி, குழந்தையை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு உள்ளே செல்ல, ஆதவ் இழுத்து மூச்சு விட்டு, “இவனுக்கு எப்படிப் புரிய வைக்கிறது” என்று யோசித்தபடியே உள்ளே சென்றான்.

 

அங்கு வந்த கையோடு ஆழி அவள் இருக்கும் இடத்தின் லொகேஷனை சைத்ரா, மீராவுக்கு அனுப்ப, அடுத்த ஒரு மணிநேரம் இருவரும் முகில் வீட்டுக்கு அருகில் இருந்த காட்டேஜ்கு வந்து தங்கி விட்டனர்.

 

விஷ்ணுவும் அவனுக்கு ஆதவ் மற்றும் முகிலை தெரியும் என்ற விவரம் ஆழிக்குத் தெரியக்கூடாது தென்று, முகில் வீட்டுக்கு அருகிலேயே வேறு இடத்தில் தங்கிக்கொண்டான்.