ஆழி சூழ் நித்திலமே 11 (ஆ)

IMG-20200530-WA0010

நடப்பதை எல்லாம் பார்த்த பாக்கியலஷ்மிக்கு பதட்டத்தில் மயக்கமே வரும்போல இருந்தது.

நிகிலேஷூம் உடன்வந்த பக்கத்து வீட்டுக்காரரும் அந்த காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட, அந்த முதிய கான்ஸ்டபிள் யோசிக்காமல் வெற்றிக்கு அழைத்திருந்தார்.

அன்றே அவரிடம் நாதனின் குண லட்சணங்களைப் பற்றி தெரிந்திருந்ததால் எச்சரித்திருந்தான் வெற்றி. “அண்ணே! நமக்கு வேண்டிய பொண்ணுதான்ண்ணே. நாதனால ஏதும் பிரச்சனை வந்துராம பார்த்துக்கோங்க” என்றிருந்தான்.

அந்தக் காவலர் அழைத்த நேரம் ஐஸ் ஃபேக்டரி கணக்குகளைப் பார்த்து முடித்துவிட்டு வெற்றியும் மகேந்திரனும் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அலைபேசி இசைக்கவும் வண்டியை ஓரம்கட்டி நிறுத்தியவன் எடுத்துப் பேசினான்.

“சொல்லுங்கண்ணே! என்ன இந்த நேரத்துல.”

“யப்பா வெற்றி, அன்னைக்கு உன் நண்பன் மேல கேஸ் குடுத்துச்சே ஒரு பொண்ணு. அது பெரிய பிரச்சனையில இருக்குப்பா. நாதன்கிட்ட மாட்டிக்கிட்டு இருக்கு. நீ கொஞ்சம் உடனே ஸ்டேஷனுக்கு வர்றியா?”

பெரும் பதட்டமாகிப் போனது வெற்றிக்கு. உடனடியாக வருகிறேன் என்று அவரிடம் கூறியவன், பாரிக்கும் அழைத்து காவல் நிலையத்துக்கு வரச் சொல்லிவிட்டு தானும் மகேந்திரனோடு உடனடியாக அங்கே போய்ச் சேர்ந்தான்.

வெற்றியும் பாரியும் ஒரே நேத்தில் உள்ளே நுழைய, அவர்களைப் பார்த்த நிகிலேஷ்க்கு ஆசுவாசமாக இருந்தது. வேகமாக ஓடிவந்து வெற்றியின் கரங்களைப் பற்றிக் கொண்டவன்,

“வெற்றிண்ணா, என்னென்னவோ சொல்றாங்க. பயமாயிருக்குண்ணா. கேஸ் பத்தி பேசனும்னு வரச் சொன்னாங்க. அக்கா உள்ள இருக்கா.”

பதட்டமும் பயமும் போட்டி போட திக்கித்திணறிப் பேசியவனைப் பார்த்த பாரிக்கு, நித்திலா தனியாக நாதனிடம் உள்ளே மாட்டிக் கொண்டிருக்கிறாள் என்ற செய்தியே கொதிப்பை ஏற்படுத்தியது.

ஆவேசமாகச் சென்று பாரி உதைத்த ஒரு உதையில் அந்த அறைக்கதவு திறந்துகொள்ள, உள்ளே கண்ட காட்சி அனைவரையும் ஸ்தம்பிக்க வைத்தது. நித்திலாவின் கரங்களை வளைத்துப் பிடித்திருந்த நாதனிடம் அழுகையோடு விடுபடப் போராடிக் கொண்டிருந்தாள் நித்திலா.

கதவைத் திறந்த சத்தத்தில் தளர்ந்த நாதனிடமிருந்து கரங்களை உருவிக் கொண்டவள் ஓடிச் சென்று பாக்கியலஷ்மியைக் கட்டிக்கொண்டு கதற, பாரி உதைத்த உதையில் நாதன் சுருண்டு போய் சுவரோரம் விழுந்திருந்தான்.

பாரியும் வெற்றியும் சேர்ந்து நாதனைப் புரட்டி எடுக்க, மகேந்திரன்தான் வந்து தடுக்கும்படி ஆகிற்று.

“டேய், விடுங்கடா…! செத்துகித்துப் போயிடப் போறான். அப்புறம் அதுவேறப் பெரியத் தலைவலி.”

கீழே விழுந்து கிடந்த நாதனை கான்ஸ்டபிள்கள் வந்து தூக்க மூக்கு வாயெல்லாம் கிழிந்து ரத்தம் கொட்டியது அவனுக்கு.

“டேய், என் ஸ்டேஷன்லயே வச்சி என்னைய அடிச்சிட்டீங்கல்ல. உங்களைச் சும்மா விடமாட்டேன்டா.
பாரி, எம்மேல கை வச்சிட்டல்ல. உன்னையக் கொல்லாம விடமாட்டேன்டா.” அடிவாங்கியும் அடங்காமல் நாதன் குதிக்க,

“ஏன்டா நீ எம்புள்ளைங்க மேல கை வைக்கிற வரைக்கும் நான் பார்த்துக்கினு சும்மா இருப்பேன்னு நினைச்சியா? இந்த ஊருல நீ உசுரோட இருக்க முடியாது தெரிஞ்சிக்க.” மகேந்திரனும் வெகுவாக கொதித்தார்.

 

“ஐயா, அவனால ஒன்னியும் புடுங்க முடியாது. ஏதோ எம்மேல கேஸ்ன்னு வந்ததால தூக்கி உள்ள வச்சிக்கினான். இல்லனா என்னடா பண்ணியிருக்க முடியும் உன்னால?
தோபாரு நாதன், நீ எவ்வளவோ குடைச்சல் குடுத்துக்கற எங்களுக்கு. ஒருநாளும் உன்னிய நான் நேரடியா பகைச்சிக்கிட்டது இல்ல.
ஆனா, இன்னோரு தபா அந்த பொண்ணு மேல உன் நிழல் பட்டாக்கூட உன்னைய ரெண்டா வகுந்துடுவேன் ஜாக்கிரதை.”

பாரியின் கண்களில் தெரிந்த ரௌத்திரத்தில் ஒரு நொடி அரண்டு போன நாதன், சற்று சுதாரித்து,

 

“அவ அப்பன் சாவுக்கே நீதான் காரணம். உம்மேல என்கிட்ட கம்ப்ளைன்ட் குடுத்தவளே அவதான். நீயென்னவோ அவளுக்காகத் துள்ளுற? அவ மேல உனக்கென்னடா கரிசனம்? அவளுக்காகத்தான் அவங்கப்பனை அடிக்கப் போனியோ?”

பயத்தில் உடல் நடுங்க, நடந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் அழுகையோடு தன்தாயின் அணைப்பில் சாய்ந்திருந்த நித்திலா விலுக்கென நிமிர்ந்து பாரியைப் பார்த்தாள்.
‘யாரிவன்? எனக்காக எங்கப்பாவை அடித்தானா? எதற்காக?’ கேள்விகள் விழிகளில் தொக்கி நிற்க பாரியையே பார்த்திருந்தாள்.

நிகிலேஷ்க்கும் அதிர்ச்சியான அதிர்ச்சி. ‘இவரா? இவரா என் அப்பாவ அடிச்சாரு? இவருக்கும் எங்கப்பாவுக்கும் என்ன சம்பந்தம்? இந்த இன்ஸ்பெக்டர் என்ன சொல்றான்?’ எதுவுமே புரியவில்லை அவனுக்கு.

நித்திலாவோ அவனை இப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறாள். இவ்வளவு நேரமும் தன்னைக் காப்பாற்ற வந்தவன் என்றிருந்த உணர்வு கரைந்து போய் இவன் தன் தந்தையைக் கொன்றவன் என்ற உணர்வே எஞ்சியிருந்தது.

நித்திலாவின் பார்வையை உணர்ந்து திரும்பிய பாரியின் விழிகள் அவளிடம் மன்னிப்பை யாசித்தன. குற்றம்சாட்டும் அந்த கலங்கிய விழிகளை எதிர்க்கொள்ளவே முடியவில்லை அவனால். கண்களை இறுக மூடிக் குனிந்து கொண்டான்.

“நாதன் தேவையில்லாம பேசாத. எந்த பொண்ணுக்கு இப்படி ஒரு நிலைமைன்னாலும் நாங்க வந்திருப்போம்.
பாரிக்கு அவங்கப்பாவோட பிரச்சனைன்னா அது வேற. அதையும் இதையும் சம்பந்தப்படுத்தாத.
உன்னப்பத்தி எல்லாம் தெரியும் எங்களுக்கு. இனி உன்னால இந்தப் பொண்ணுக்கு எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது. மீறி எதனா பண்ண, உயிரோட இருந்துக்க மாட்ட.” வெற்றி எச்சரித்தான்.

நடந்த அவ்வளவையும் பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்த பாக்கியலஷ்மிக்கு, என்ன செய்வது என்றே புரியவில்லை. ஆனால், பரசுராமன் இல்லாத இவ்வுலகில் தாங்கள் இனி நிம்மதியாக வாழ்வது கடினம் என்பது மட்டும் நன்கு புரிந்தது.

அதிலும் பெண்பிள்ளைகளுக்கு பிரச்சனைகள் எந்தெந்த வடிவில் எல்லாம் வருகிறது என்று அயர்ந்து போனார்.

நித்திலாவை முதலில் இங்கிருந்து அழைத்துச் சென்று தன் சிறகுக்குள் பொத்தி வைத்துக் கொள்ளவேண்டும் என்று தோன்றியது.

“நித்திம்மா, அம்மா சொல்றதைக் கேப்பல்லடா. அப்பா இனி திரும்பி வரமாட்டாரு. அவர் சாவுக்கு நியாயம் கிடைக்கறதவிட, எனக்கு நீயும் தம்பியும்தான் இப்ப முக்கியம். இந்தப் பிரச்சனைங்க எதுவுமே நமக்கு வேணாம்டா. முதல்ல அந்த கேஸை வாபஸ் வாங்க எழுதிக்குடுடா.”
கண்ணீரோடு மெல்லிய குரலில் நித்திலாவிடம் கேட்டார் பாக்கியலஷ்மி.

இவ்வளவு களேபரங்களையும் பார்த்து அதிர்ந்து போய் நின்றிருந்த நித்திலாவின் பக்கத்து வீட்டு அங்கிளும் அதையே ஆமோதித்தார்.

நித்திலாவின் அருகே வந்த மகேந்திரனும், “அம்மாடி, பாரி என் பையன் மாதிரி. உங்கப்பாவோட அவனுக்கு என்ன பிரச்சன? எதுக்குப் போய் சண்டை போட்டான்? எதுவுமே இதுவரைக்கும் எனக்குத் தெரியாது.

அவனை அரெஸ்ட் பண்ணப்பகூட உன்கிட்ட வந்து நாங்க கேஸை வாபஸ் வாங்கச் சொல்லி கேக்கனும்னு நினைச்சோம். ஆனா, செஞ்ச தப்புக்கு நான் தண்டனை அனுபவிச்சிக்கிறேன் அந்த பொண்ணுகிட்ட யாரும் எதுவும் கேக்காதீங்கன்னுட்டான்.

ஆனா இப்ப கேக்கறேன்ம்மா. இது முழுக்க முழுக்க உன்னோட நல்லதுக்காக கேக்கறேன். கேஸை வாபஸ் வாங்க எழுதிக்குடுத்திடும்மா. இந்த நாதன் பிரச்சனையெல்லாம் உனக்கு வேணாம்.”

சரியென்று தலையசைத்தவள் மௌனமாக கான்ஸ்டபிள் நீட்டிய பேப்பரில் கேஸை வாபஸ் வாங்குவதாக எழுதி கையெழுத்து போட்டுக் கொடுத்துவிட்டு வெளியேறினாள்.

மனம் வெகுவாய் ரணப்பட்டிருந்தது அவளுக்கு. அவளுடனே பாக்கியலஷ்மியும் நிகிலேஷூம் வெளியே வந்தனர்.

கடைசியாக ஒருமுறை நாதனை எச்சரித்துவிட்டு வெளியே வந்தனர் வெற்றியும் பாரியும். தளர்ந்த நடையோடு போகும் அவளையே மிகுந்த மனவருத்ததோடு பார்த்துக் கொண்டிருந்தான் பாரி.

காரின் அருகே சென்று ஏறப்போனவள், ஒரு நொடி நின்று பாரியைத் திரும்பிப் பார்த்தாள். குற்றவுணர்ச்சி, வருத்தம், வேதனை, ஏக்கம் அனைத்தையும் கலவையாய் விழிகளில் பிரதிபலித்தவனைப் பார்த்தவளுக்கு உள்ளே அவ்வளவு கோபம் கனன்று கொண்டிருந்தது.

“அம்மா, ஒரு நிமிஷம். இதோ வந்துடறேன்.” என்றபடி பாரியை நோக்கி நடந்தாள். அவனிடம் கேட்கவேண்டிய கேள்வி ஒன்று அவளிடமிருந்தது.

வேகமாய் அவனருகே சென்றவள் ஆவேசத்தோடு அவன் சட்டையைப் பிடித்து இழுத்து… அழுகையும் கோபமும் போட்டிபோட,

 

“யார்ரா நீ? யாரு நீ? உனக்கும் எங்களுக்கும் என்னடா சம்பந்தம்? உன்னை முன்னப் பின்ன பார்த்ததுகூட இல்லையேடா நாங்க. எதுக்கு எங்கப்பாவ அடிச்ச? எதுக்குடா அவரக் கொன்ன?
ஒரே நாள்ல எங்க குடும்பத்தோட மொத்த சந்தோஷத்தையும் குழிதோண்டி பொதைச்சிட்டியே. இன்னைக்கு நாங்க இந்த நிலைமையில இங்க நிக்கறோம்னா அதுக்கு முழு காரணமும் நீதான்.
சொல்லு… எதுக்கு எங்கப்பாவ அடிச்ச? எதுக்குடா அவர்கிட்ட சண்டைக்கு போன?”

 

நித்திலா வெறிபிடித்தவளைப் போல பாரியை உலுக்க, பதறிப் போய் பாக்கியலஷ்மியும் நிகிலேஷூம் ஓடி வந்தனர். வெற்றியும் வேகமாய் அருகே வந்து,

“சிஸ்டர் ப்ளீஸ்… ஒரு நிமிஷம் நான் சொல்றதைக் கேளுங்க…” என்க, அவனைப் பார்த்த பாரி,

“வெற்றி, கம்முன்னு இருடா” அடக்கினான்.

 

நித்திலாவைப் பிடித்து இழுத்தனர் பாக்கியலஷ்மியும் நிகிலேஷூம், “நித்திம்மா என்னடா செய்யற? நமக்கு இதெல்லாம் எதுவுமே வேணாம் வாம்மா. மேல மேல பிரச்சனைய வளர்க்காதடா?”

“அம்மா, இல்லம்மா எனக்குத் தெரிஞ்சாகனும். கேஸை வாபஸ் வாங்கிட்டேன். இனி இவனை எதுவுமே நம்மால பண்ண முடியாது. அட்லீஸ்ட் என்ன நடந்துச்சின்னாவது தெரியனும்மா.”

“என்ன பண்றக்கா நீ? நமக்கு எதுவுமே தெரிய வேணாம். வாக்கா வீட்டுக்குப் போயிடலாம்.”

நிகிலேஷ்க்கும் பாரியின் மீது அளவிலா கோபம் இருந்தாலும், தற்போது அவனும் வெற்றியும் வந்திருக்கவில்லையென்றால் என்ன நடந்திருக்கும் என்பதை யோசிக்ககூட முடியவில்லை. எந்த பிரச்சினையும் இல்லாமல் வீட்டுக்குச் சென்றுவிட்டால் போதுமென்றிருந்தது அவனுக்கு.

“நிக்கி, நம்ம அப்பா எந்த வம்புக்குமே போக மாட்டாங்கல்லடா. எங்கயாவது அடிதடின்னாகூட அந்த பக்கமே போகாம ஒதுங்கி வந்துடுவாங்கதான. அவர்கிட்ட இவன் எதுக்கு சண்டைக்கு போனான்? கேட்டுச் சொல்லுடா. கேட்டுச் சொல்லு.”

அடுக்கடுக்காய் நடந்த சம்பவங்களின் தாக்கத்தில் தன்னிலை இழந்தவளைப் போல பேசிக்கொண்டே போனாள் நித்திலா. கண்களில் கண்ணீர் பிரவாகமாய் வழிய, மீண்டும் பாரியின்புறம் திரும்பியவள்,

“எங்கப்பா உன்கிட்ட பணம் வாங்கினதா அந்த இன்ஸ்பெக்டர்கிட்ட பொய் சொல்லிருக்க. நிச்சயமா எங்கப்பா வாங்கியிருக்க மாட்டாங்க. அதுக்கான அவசியமும் அவருக்கில்ல. அவர் உன்கிட்ட பணம் வாங்கினாரா? உண்மையைச் சொல்லு.”

இல்லையென மெல்லத் தலையாட்டினான் பாரி.

அவளின் சோகம் அவன் நெஞ்சை முற்றிலும் அறுத்தது. அவளின் பேச்சுக்களும் கண்ணீரும் உள்ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் மரிக்கச் செய்தது அவனை. சில்லு சில்லாய் உள்ளுக்குள் உடைந்து கொண்டிருந்தான்.

“அப்ப, வேற எதுக்கு? அந்த இன்ஸ்பெக்டர் சொன்ன மாதிரி எனக்காகவா? எனக்காகவா எங்கப்பாவ அடிச்ச? எனக்கும் உனக்கும் என்னடா சம்பந்தம்? ச்சீ… என்ன மனுஷன்டா நீ. உனக்கும் அந்த இன்ஸ்பெக்டருக்கும் என்னடா வித்தியாசம்? எங்களை இந்த நிலைமையில நிக்க வச்சிட்டல்ல. நீ நல்லாருப்பியா…?”

நிற்காமல் பேசிக்கொண்டிருந்தவளை அடக்க முடியாமல் பிடித்துத் தரதரவென இழுத்து வந்திருந்தனர் பாக்கியலஷ்மியும் நிகிலேஷூம். திமிறியவளை காருக்குள் திணித்து காரைக் கிளப்பியிருந்தனர்.

புயலடித்து ஓய்ந்தது போலிருந்தது அந்த இடமே.

அனைவரின் முகமும் வேதனையைப் பிரதிபலிக்க, புழுதியைக் கிளப்பியபடி செல்லும் காரைப் பார்த்தவாறு நடுரோடென்றும் பாராமல் தரையில் தொய்ந்து போய் அமர்ந்தான் பாரி.

கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே – உன்
கைரேகை ஒன்று மட்டும் நினைவுச்சின்னமே…

கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே – இங்கு
சிதறிப்போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே…

 

—ஆழி சூழும்.