ஆழி சூழ் நித்திலமே 12 (அ)
ஆழி சூழ் நித்திலமே 12 (அ)
12
மழை வரும் போல மேகமெல்லாம் கூடி சூழ்நிலையை இறுக்கமாக்கியிருந்தது. பகலில் உள்ளிழுத்த வெப்பத்தை முழுக்க திரும்ப கடல் வெளியிட்டதில், அந்த நள்ளிரவிலும் கடற்கரை முழுவதுமே வெப்பச்சலனம்.
கடல் அவனுக்கு அன்னை மடி போல. அவனின் சுக துக்கங்கள் பலவற்றை பார்த்திருக்கிறது. அவனின் பல ரகசியங்களுக்கு பாதுகாவலாகவும் இருந்திருக்கிறது. அவன் கண்ணீரை தனக்குள் கரைத்திருக்கிறது. நினைவு தெரிந்த நாள் முதலே அவனைத் தாங்கியும் இருக்கிறது.
இன்றும் அவன் துயரை துடைத்துவிட மாட்டோமா என்ற ஆவலோடு அலைகள் வந்து வந்து தோல்வியைத் தழுவித் திரும்பச் செல்ல, சிறிதும் பெரிதுமாய் வந்து உடல் நனைத்த அலைகளின் நடுவே அசைவின்றி மணலில் படுத்துக் கிடந்தான் பாரி.
அலைகளின் பேரிரைச்சலைத் தாண்டி, உள்ளம் இரைந்து கொண்டிருந்தது.
எட்டுத் திக்கும் ஆக்ரோஷமாய் பற்றியெரியும் தீக்கு நடுவில் நிற்கும் உணர்வு. உள்ளம் திகுதிகுத்தது. உடல் முழுக்க இரத்தவிளாராய் அடித்துக்கொள்ளும் சாட்டைக்காரனைப் போல மனம் தன்னைத்தானே குத்திக்குதறிக் கொண்டிருந்தது. ஓவென்று அலறிக் கொண்டு திக்குதிசை தெரியாமல் ஓடவேண்டும் போலொரு அழுத்தம்.
எதையுமே தாங்க முடியவில்லை அவனால்…
‘ரெண்டும் கெட்டான் பெண்ணின் பேச்சைக் கேட்டுக்கொண்டு ஒரு உயிரை அநியாயமாய் போக்கிவிட்டாயே! உன் அவசர புத்தியால் உன் மனம் முழுக்க நிறைந்திருந்த பெண்ணின் அழுகைக்கு காரணமாகிவிட்டாயே!’ காரி உமிழ்ந்த மனசாட்சிக்கு பதில் இல்லை அவனிடம்.
பிரச்சனைகளே பார்க்காதவனல்ல பாரி. தாய் தந்தையை இழந்து, தன் காலில் ஊனி நின்ற காலம்தொட்டு அவன் சந்தித்த பிரச்சனைகள் ஏராளம்.
சிறியவனென்று ஏய்க்க நினைத்தவர்களையும், விபரம் புரியாத வயதில் அடக்கி ஒடுக்க நினைத்தவர்களையும் அநாயாசமாக சமாளித்தவன் அவன். காலம் அவனுக்கு பயிற்றுவித்த அனுபவ பாடங்கள் அநேகம்.
ஆனால், இதுவரை நடந்த எத்தனையோ பிரச்சனைகளிலும், அடிதடி பஞ்சாயத்து என்று எவ்வளவோ பார்த்திருந்தாலும் ‘உன்னால் நான் கெட்டேன்’ என்று ஒருவருமே இவனைப் பார்த்து கைகாட்டும்படி இருந்ததில்லை.
இவன் செயல்கள் பிறருக்கு உதவியாக இருந்திருக்கிறதே தவிர யாருடைய வாழ்க்கையையும் அழித்ததில்லை.
இன்றோ! இவனால் ஒரு குடும்பமே நிர்கதியாய்… அது கொடுத்த மன அழுத்தம் தாளமுடியாத அளவு வதைத்தது அவனை. அது யார் குடும்பமாய் இருந்தாலும் இந்த வேதனை குறைந்திருக்காது என்றாலும் நித்திலாவாய் போனது கூடுதல் அழுத்தமாய் போனது.
அவளின் அழுகையும், வார்த்தைகளும் மீண்டும் மீண்டும் முகத்தில் அறைய கண்களைத் திறக்கவே பயந்து படுத்துக்கிடந்தான்.
உண்மையில் அவள் மீதான தன்னுடைய நேசத்தைக்கூட, அவளது நல்வாழ்க்கைக்குத் தானொரு பிரச்சனையாய் வந்துவிடக்கூடாது என்பதாலேயே அதை வெளிப்படுத்தக்கூட எண்ணாதவன் அவன்.
அவள் வாழ்க்கை நன்றாயிருக்க வேண்டும் என்று உளமாற எண்ணுபவனும்கூட. ஆனால் இன்றோ…! தன்னாலேதான் அவளுக்குத் தாங்க இயலாத துயரங்களும் பிரச்சனைகளும் வந்தது சுத்தமாய் முடக்கிப்போட்டது அவனை.
பொடிப்பொடியாய் உதிர்ந்து ரோட்டில் அமர்ந்துவிட்டவனை, வெற்றிதான் தாங்கியிருந்தான். பாரியின் மனவுளைச்சலைப் புரிந்து கொண்டவன், மகேந்திரனை அனுப்பிவிட்டு பாரியைத் தானே கொண்டுவந்து வீட்டில் விட்டுவிட்டுதான் சென்றான்.
போகும் போது மேலோட்டமாய் நடந்ததை கயலிடமும் சொல்லிவிட்டுதான் சென்றான். நித்திலாவைப் பற்றிதான் கயலுக்குத் தெரியாதே ஒழிய, தன்னால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்காய் மாமன் மருகுகிறான் என்ற அளவுக்கு புரிந்தது.
உணவை மறுத்துவிட்டு படுத்தவன் நள்ளிரவில் எழுந்து வெளியே வர, தூங்காமல் விழித்திருந்தவள்,
“மாமா, எங்க போற?”
“ம்ப்ச், மனசே சரியில்ல கயலு. கடலாண்ட செத்த நேரம் உலாத்திக்கினு வரேன்.”
முகமும் குரலும் வெகுவாய் சோர்ந்திருக்க, பேசிச் செல்லும் மாமனையே கவலையாய் பார்த்தவாறு வாசலில் அமர்ந்துவிட்டாள் கயல்.
பாரியின் மனதை எந்த வகையில் அமைதிப்படுத்தவென்றே அவளுக்குப் புரியவில்லை. சோகமாய் வாசலில் அமர்ந்திருந்தவளை எதற்கோ வீட்டிலிருந்து வெளியே வந்த தேவா பார்த்துவிட, அவளருகே வந்தான்.
“கயலு, என்னா புள்ள இந்நேரத்துக்கு இங்கன குந்திக்கினு இருக்க?”
“ஒன்னியுமில்லண்ணா. மாமா கடலாண்ட போறேன்னு போனுச்சி. அதான் காணுமேன்னு பாத்துக்கினுக்கிறேன்.” பாரி போன திசையைக் காட்டினாள்.
“இந்நேரத்துக்கா? ஏன் என்னாச்சி புள்ள?”
இரவில் நடந்ததை சுருக்கமாக தனக்குத் தெரிந்த அளவில் கூறினாள். “மாமாவுக்கு மனசே சரியில்ல தேவாண்ணா. அதாலதான் அந்த வாத்தியார் குடும்பம் கஸ்டப்படுதுன்னு ஒழப்பிக்கினுக்கிது.”
‘மீண்டும் பிரச்சனையா?’ மனம் வருந்தியது தேவாவுக்கு. அனைத்துக்கும் மூல காரணம் தன் தங்கைதான் என்பதில் மிகுந்த குற்றவுணர்ச்சியாகவும் இருந்தது.
“நீ உள்ளாற போ கயலு. நான் போயி பாரியண்ணன இட்டாறேன்.” சொல்லியவன் பாரி சென்ற திசையில் நடந்தான்.
அலைகளுக்கு நடவே படுத்துக்கிடந்த பாரியைப் பார்க்கையிலேயே மனதைப் பிசைந்தது. இப்படி ஒரு ஓய்ந்த தோற்றத்தில் பாரியை பார்த்ததே இல்லை. மெல்ல அவனருகே சென்று அமர்ந்தவன்,
“பாரிண்ணா, ஃபீல் ஆவதண்ணா. அதான் எந்தப் பிரச்சினையும் இல்லாம அந்த பொண்ண காபந்து பண்ணியாச்சில்ல. இனியும் ஒன்னியும் ஆவாம பார்த்துக்கலாம். நீ இப்புடி இருக்கறது ரொம்ப கஷ்டமாக்குதுண்ணா.”
“ம்ப்ச்… என்னாலதானடா எல்லா பிரச்சனையும்.” கரகரப்பாய் ஒலித்தது குரல்.
“நீ இன்னண்ணா பண்ணுவ? எல்லாம் அந்த கிறுக்கி செஞ்சு வச்ச வேலை.” செல்வியை நினைத்துப் பல்லைக் கடித்தான்.
“ம்ப்ச், அந்த புள்ள சொன்னுச்சின்னா எனக்கு எங்கடா போச்சு புத்தி? ஒருதபா ரெண்டு பேராண்டையும் நடந்தது இன்னான்னு கேட்ருக்கனுமில்ல நானு. கொஞ்சம்கூட யோசிக்காமப் போய் வாத்தியார் மேல கை வச்சது தப்புதான.”
“வுடு பாரிண்ணா வேணும்னா பண்ண? இதுலாம் நடக்கனும்னு இருந்துக்குது. நீ இன்னா பண்ணுவ?”
பாரியின் மனம் சமனப்பட மறுக்கிறது என்பது தேவாவுக்குப் புரிந்துதான் இருந்தது.
“நடந்ததையே நினைச்சிக்கினு இருக்காம வாண்ணா. தூங்கி எழுந்தீன்னா சரியாய்டுவ. வா வந்து கொஞ்ச நேரம் தூங்கு.”
“ம்ப்ச், எனக்குத் தூக்கம் வரல. நீ கெளம்பு தேவா. நான் அப்பாலிக்கா வரேன்.”
தூக்கம் வரவில்லை என்று சொல்பவனை பாவமாய் பார்த்தான் தேவா. அவர்கள் உழைக்கும் உழைப்புக்கு படுத்தவுடன் தூங்குவது அவர்களின் வரம். கட்டாந்தரையோ கல்மேடோ, வெயிலோ நிழலோ கிடைக்கும் இடத்தில் கிடைக்கும் நேரத்தில் படுத்ததும் உறக்கம் தழுவிக்கொள்ளும்.
எவ்வளவு மனவேதனை இருந்தால் உறக்கம் வரவில்லையென்பான், மனதில் எண்ணியவன், ஒரு முடிவுடன் எழுந்து சென்று படகின் மறைவில் எப்போதும் ஒளித்து வைக்கும் இடத்திலிருந்து மதுப்புட்டிகளை எடுத்து வந்தான்.
“பாரிண்ணா, ஏந்திரி. இத்தக் கொஞ்சம் போடு. மனசு லேசாகும். நடந்ததைக் கொஞ்சம் மறப்ப நீ. தூக்கமும் வரும். நல்லா தூங்கி எந்திரிச்சி அடுத்து என்னா செய்யனும்னு யோசி. உங்கூடவே எப்பவும் நான் இருப்பேன். எதுனாலும் நாம பாத்துக்கலாண்ணா.”
தேவாவின் கைகளில் இருந்த மதுப்புட்டிகளை பார்த்தான் பாரி. அவனுக்குமே மனதை இறுக்கும் இந்த சித்ரவதையிலிருந்து சற்று விடுப்பட்டால் தேவலை என்றிருக்க, மறுக்காமல் வாங்கி அருந்தினான். அந்த போதை மயக்கம் அப்போதைக்குத் தேவையாய் இருந்தது அவனுக்கு.
முதல் முறையாதலால் போதை குப்பென்று தலைக்கேறத் தடுமாறியவனை கைத்தாங்கலாய் பிடித்து வீட்டுக்கு அழைத்து வந்திருந்தான் தேவா.
வாசலில் அமர்ந்திருந்த கயல் தள்ளாடி நடந்து வரும் பாரியைப் பார்த்து அதிர்ந்தவள், அருகில் வந்தவனின் மீது வந்த வாடையில் முகம் சுளித்தாள்.
“தேவாண்ணா, இதுக்குதான் நீ போனியா? மாமாவுக்கு இப்புடி ஊத்திவுட்டு கூட்டாந்திருக்க?”
“வுடு கயலு, ஒரு நாளுதான. மொதல்ல பாரியண்ணன் தூங்கட்டும். நாளைக்கு எல்லாம் சரியாப்பூடும்.”
தடுமாறியவனைத் தாங்கிப் பிடித்து படுக்கையில் படுக்க வைத்து தேவா கிளம்பிவிட, கடுப்போடு பாரியையும் தேவாவையும் சேர்த்தே திட்டியபடி ஆயாவின் உதவியோடு ஈரமான பாரியின் உடைகளை மாற்றி, தலையையும் துவட்டி விட்டாள்.
பாரியையும் தேவாவையும் திட்டித் தீர்த்துவிட்டு ஆயா படுத்துவிட,
“அதுக்குதான் அறிவில்ல, எதையாவது ஊத்திக் குடுக்குதுன்னா நீயுமா வாங்கிக் குடிப்ப?”
“மன்னிச்சிடு கயலு… மன்னிச்சிடு ஆயா… நான் செய்யறது பூராமே தப்புதான். நானே தப்புதான். நான் இருக்கறதே தப்புதான்.”
போதையில் உளறியவனைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்டவள், தண்ணீர் ஊற்றி வைத்திருந்த சாதத்தைப் பிழிந்து போட்டு மோர் ஊற்றிப் பிசைந்து எடுத்து வந்தாள்.
“வெறும் வவுத்துல இப்புடி குடிச்சிட்டு வந்துக்கிறியே மாமா. வாயைத் திற.”
போதையில் கண்கள் சொருகிக் கிடந்தவனுக்கு ஊட்ட ஆரம்பித்தாள்.
“கயலு, என் ஆத்தா. நீ நல்லாயிருக்கனும் கயலு. எனக்கு உன்னைய ரொம்ப புடிக்கும் தெரியுமா?”
“ம்ம், எல்லாம் எனக்குத் தெரியும். நீ வாய மூடிட்டுத் துன்னு.”
“இல்ல, உனக்கு ஒன்னியும் தெரியாது. நீ தேவதை. அந்த சாமி மாதிரி. எனக்கு மட்டுமில்ல உன்னைய எல்லாருக்கும் புடிக்கும். ஆனா நான் அப்படியில்லத் தெரியுமா? நா ஒரு பொறம்போக்கு, பன்னாட, ரௌடி. யாருக்குமே என்னைய புடிக்காது.”
“ம்ப்ச். இன்னாத்துக்கு மாமா லூசாட்டம் உளறிக்கினுக் கிடக்குற? கம்முன்னு துன்னுட்டு படு. எல்லாருக்கும் உன்னையப் புடிக்கும்.”
“இல்ல… இல்ல… யாருக்குமே என்னையப் புடிக்காது. நான் பண்ணி வச்சிருக்க வேலைக்கு என்னைய யாருக்குமே புடிக்காது. அந்தப் புள்ளைக்குச் சுத்தமா புடிக்காது.”
“…”
“வேணுக்குனு செய்யலையே. நெசமா இப்புடியாவும்னு நானு நெனைக்கலயே… அதுங்கிட்ட நா எப்புடிச் சொல்லுவேன்?”
போதையில் உளறிக்கொண்டே போனவனைக் குழப்பமாய் பார்த்தாள் கயல்.
“யாருகிட்ட இன்னா சொல்லனும்? யாருக்கு மாமா உன்னைய புடிக்காது?”
“அவளுக்குத்தான்… அவதான்… அவ நைனா சாவுக்கு காரணமாயிட்டேனே… எஞ்சட்டைய புடிச்சி இஸ்த்துக்கினு கேள்வியா கேட்டா. எப்புடி அழுதா தெரியுமா…? இங்க… இங்க… ரொம்ப நோவுது கயலு.”
நெஞ்சை நீவிக்கொண்டு கண்களைச் சொருகியபடி உளறுபவனையே யோசனையோடு பார்த்திருந்தாள். ஏதோ புரிவது போல இருந்தது.
மேலும் மேலும் உளறியவனைக் குறுக்கிடாமல் கவனித்தாள்.
எத்தனை நாள் அழுத்தங்களோ அவ்வளவும் போதையில் உளறலாய் வெளிவர, அவனது வார்த்தைகளின் கனத்தை ஜீரணிக்க முடியாமல் கண்ணீரோடு அமர்ந்திருந்தாள் கயல். வெகுநேரம் உளறிவிட்டு பாரி தூங்கிவிட, கயலுக்கு அவ்விரவு தூங்கா இரவாய் போனது.
எதைப்பற்றியும் கவலைப்படாமல் விடியலும் வர, குடைச்சலாய் குடைந்த தலையை அழுந்தப் பற்றியவாறு எழுந்தமர்ந்தான் பாரி.
என்ன நடந்தது என்று பிடிபடவே சில நிமிடங்கள் ஆனது. வரிசையாய் நேற்றைய நிகழ்வுகள் நினைவுக்கு வர, இறுதியாய் தேவா கொடுத்த மதுவை அருந்தியது வரை நினைவுக்கு வந்தது.
என்ன யோசித்தும் அதற்குப்பின் நடந்தது நினைவுக்கு வர மறுத்ததில், தேவா அழைத்து வந்து படுக்க வைத்துச் சென்றிருப்பான் என்றெண்ணிக் கொண்டான்.
“பாரிண்ணா, உன்னோட வண்டி வெற்றிண்ணாகிட்ட இருக்காம். உனக்கு ஃபோன் போட்டுச்சாம். நீ எடுக்கலயாம். உன்னைய கூட்டியாறச் சொல்லுச்சி. கிளம்பு போலாம்.”
குளித்துக் கிளம்பி வந்திருந்தான் தேவா, கடுத்தத் தலையைப் பற்றியவாறு பாரி தேவாவை முறைக்க,
“ப்ரெஷ்ஷா இருக்க போல… நல்ல தூக்கமோ?”
“அடிங்கொய்யால, என்னக் கருமத்தடா நைட்டுக் குடுத்த? தலையத் தூக்கவே முடியல நோவுது.”
“மொத மொத குடிச்சல்ல, அதான் அப்புடிக்கிது. அத்த வுடு, நைட்டு நல்லாத் தூங்குனியா இல்லையா?”
“எனக்கு எதுவுமே நெனைவுல இல்ல. தூங்குனன்னுதான் நெனைக்கிறேன்.” எழுந்தவன் சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டுவர, அவனிடம் எலுமிச்சை சாறை நீட்டினாள் கயல்.
சோர்ந்திருந்த அவள் முகத்தைக் கண்டவன், “கயலு குடிச்சிக்கினு வந்தேன்னு கோவமாக்கிறியா? இந்த நாதாரிதான் ஊத்தி குடுத்துப் புட்டான்.”
“தோடா… தூக்கம் வரலன்னு புலம்புனியேன்னு குடுத்தேன். நேத்தே காது ரெண்டும் தீஞ்சி போறாப்ல ஆயாவும் கயலும் கழுவி ஊத்தியாச்சி, நீ இன்னிக்கும் கோர்த்து வுடாத. ஜரூரா கிளம்பி வாண்ணா, நா வூட்டான்ட வெயிட் பண்ணுறேன்.” தேவா வெளியேறிவிட,
“என்ன கஷ்டம்னாலும் இனிமேட்டுக்கு குடிக்க மாட்டேன்னு எனக்குச் சத்தியம் பண்ணு மாமா.” அவன்முன் கை நீட்டியிருந்தவளின் கண்கள் கலங்கியிருந்தது
“ம்ப்ச், அதுலாம் குடிக்க மாட்டேன் கயலு. இதுக்குப் போயி அழுதியா நீ?”
“சத்தியம் பண்ணு மாமா. குடிச்சி குடிச்சி நீ உடம்பக் கெடுத்துக்கறதலாம் என்னால தாங்க முடியாது மாமா.” நீட்டிய அவளது கையில் சத்தியம் செய்தவன்,
“நேத்து நடந்தது நெனைச்சி நெனைச்சி ரொம்பக் கஸ்டமாப் போச்சி கயலு. என்னாலதான அவங்களுக்கு இவ்வளவு பிரச்சனன்னு ஒரே கொடைச்சலு நெஞ்சுக்குள்ள. தாங்கவே முடியல. அதான் எல்லாத்தையும் மறக்கனுமேன்னு குடிச்சேனேக்காட்டி, இனிலாம் எப்பயும் குடிக்க மாட்டேன் கயலு.”
“நடந்தது எதையுமே நீயோ நானோ, ஏன் அந்த கடவுளே வந்தாலும் மாத்த முடியாது மாமா. அத நினைச்சி வெசனப்படறத விட, அவங்களுக்கு இனிமேட்டுக்கு எந்த பிரச்சினையும் வராம பார்த்துக்கோ மாமா.”
“நீ சொல்றது சரிதான் கயலு. ஏன்னு தெரில மனசு இன்னைக்கு பாரமில்லாம லேசாக்கிது. இனி எதுனாலும் நான் பாத்துக்கறேன்.”
“அந்த இன்ஸ்பெக்டரு ரொம்ப மோசமானவன்னு சொல்லிக்கிற நீ. இனியும் அந்தப் பொண்ணுக்கு எந்தப் பிரச்சினையும் வராதுல்ல.”
“தெரில கயலு. அவன் அடிபட்ட பாம்பாட்டமிருப்பான். என்ன பண்ணுவான்னு தெரில. அதப்பத்தி பேசத்தான் வெற்றி வரச் சொல்லிருப்பான். எதுனாலும் என்னை மீறிதான் இனி அவுங்கள நெருங்க முடியும். நான் பார்த்துக்கறேன் கயலு.”
“ம்ம்… சரி நீ குளிச்சிக் கிளம்பி வா. நான் சாப்புட எடுத்து வைக்கிறேன்.”
என்றவாறு கயல் உள்ளே சென்றுவிட, தானும் கிளம்பியவன் தேவாவோடு இணைந்து வெற்றியைப் பார்க்கச் சென்றான்.