ஆழி சூழ் நித்திலமே 12 (ஆ)

IMG-20200530-WA0010

ஆழி சூழ் நித்திலமே 12 (ஆ)

நித்திலாவின் வீட்டில், இரவு முழுவதும் புலம்பியவளை ஆசுவாசப்படுத்தி உறங்க வைத்த பாக்கியலஷ்மி, முன்தினம் நடந்த நிகழ்வுகளின் தாக்கத்தில் பல முக்கிய முடிவுகளை எடுத்திருந்தார்.

மறுநாள் நித்திலாவையும் நிகிலேஷையும் அருகமர்த்திக் கொண்டவர்,

“நித்தி, நாம இந்த வீட்ட காலி பண்ணிட்டு நம்ம ஊரோட போயிடலாம்னு யோசிச்சிருக்கேன்.” பதறிப் போயினர் இருவருமே.

“அம்மா எதுக்கும்மா? நாம என்ன தப்பு பண்ணோம்? நாம ஏன் போகனும்? எனக்கும் நிக்கிக்கும் படிப்பு இருக்கேம்மா.” நித்திலா வெகுவாய் படபடத்தாள்.

“நாம எந்த தப்புமே பண்ணலதான். ஆனா துஷ்டனக் கண்டா தூர விலகுன்னு சொல்லுவாங்கல்ல. நமக்கு எந்தப் பிரச்சினையும் வேணாம்டா. இந்த ஊரும் வேணாம். நீயும் தம்பியும்தான் எனக்கு முக்கியம். உங்க வாழ்க்கையப் பத்தி மட்டும் யோசிச்சிதான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன்.”

“அப்ப எங்க படிப்பு?” நிகிலேஷின் கண்களில் வெகுவாய் கலக்கமிருந்தது.

“நிக்கி, உன்னைப் பத்திகூட பிரச்சனை இல்ல. உன்னை உங்க காலேஜ் ஹாஸ்டல்ல சேர்த்திடலாம். இல்லன்னா தஞ்சாவூர் காலேஜ்க்கு மாத்த முடிஞ்சா மாத்திடலாம்.”

“…”

“இன்னும் நாலஞ்சு மாசத்துல அக்கா படிப்பு முடிஞ்சிரும்தான. அதுவரைக்கும் வேணும்னா இங்க இருக்கலாம். அப்புறமா இந்த வீட்டை வாடகைக்கு விட்டுட்டு நாம நம்ம ஊருக்குப் போயிடலாம்.

அதுக்கப்புறம் நித்திக்கு ஒரு நல்ல இடத்துல கல்யாணம் பண்ணிட்டா, அம்மாவுக்கு மனசு நிம்மதியாகிடும்டா.”

“அம்மா…” விழிகளில் வெகுவாய் மறுப்பிருந்தது நித்திலாவுக்கு. படிக்கும் துறையில் ஆராய்ச்சி படிப்புவரை படிக்கத் திட்டமிட்டிருந்தாள். சிறிது காலமாவது வேலைக்குப் போக வேண்டும் என்றெல்லாம் கனவிருந்தது அவளுக்கு.

“அப்பாவோட ஆசையும் இதுதான்டா. உனக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தித் தரனும்னு சொல்லிக்கிட்டே இருப்பாரு. மறுத்து எதுவும் பேசாதடா. சரின்னு சொல்லும்மா.”

தாயின் கண்களில் தெரிந்த பரிதவிப்பும் தந்தையின் ஆசை என்ற சொல்லும் மறுப்பை வெளியிட மனதின்றி தலையாட்ட வைத்தது அவளை. மௌனமாய் தாயைக் கட்டிக் கொண்டாள்.

“நித்தி, அம்மா உன்னோட நல்லதுக்குதான் சொல்றேங்கறது புரியுது இல்லையா? இதே நாம நம்ம ஊர்ல இருந்திருந்தா, நேத்து அந்த போலீஸ்காரன் அப்படி பண்ணியிருக்க முடியுமா? நம்ம சொந்தங்கள் எல்லாரும் உடனே வந்திருக்க மாட்டாங்களா?”

பாக்கியலஷ்மி பேசப் பேச நேற்று அந்த இக்கட்டான சூழ்நிலையில் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த பாரிதான் உள்ளுக்குள் தோன்றினான். கூடவே தந்தையின் இறப்பும்.

பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்ட வந்துவிட்டான் மனம் கசப்பாய் எண்ணிக் கொண்டது.

அத்துமீறிக் கைகளைப் பற்றியிருந்த நாதனிடம் விடுபடப் போராடிய போது, யாராவது ஆபத்பாந்தவனாய் வந்து விடுவித்துவிட மாட்டார்களா என்று மனம் கதற, கதவை உடைத்துக் கொண்டு வந்தவன் உண்மையில் தேவதூதனாய் தெரிந்தான்.

அதிலும் அவனும் வெற்றியும் சேர்ந்து அந்த இன்ஸ்பெக்டரை அடித்துப் புரட்டும் போது அவ்வளவு ஆறுதலாய் இருந்தது.
ஆனால், நடந்த அத்தனை பிரச்சனைகளுக்குமே அவன்தான் மூலகாரணம் என்று தெரிந்தபோது வெறுத்துப் போனது மனது. நிம்மதியாய் இருந்த எங்களை இப்படி ஒரு இக்கட்டில் நிறுத்திவிட்டு காப்பாற்றுவது போல வந்துவிட்டான்.

யார்கண்டது… அந்த சூழலில் கேட்டால் கேஸை வாபஸ் வாங்கிவிடுவேன் என்பதற்காகக் கூட காப்பாற்றுவது போல வந்திருக்கலாம், ஏளனமாய் எண்ணிக்கொண்டாள்.

எது எப்படியோ, சாமனியர்களுக்கு சட்டம்கூட உதவுவதில்லை. அதிலும் ஆதரவற்ற பெண் என்றால் எந்த எல்லைக்கும் போகத் தயாராய் இருக்கின்றனர் இந்த நாதன் போன்றவர்கள். தந்தையின் இறப்புக்கும் நியாயம் கிடைக்கவில்லையே என்று மனம் ஊமையாய் அழுதது.

இப்பொழுதும் எந்தப் பிரச்சினையும் வேண்டாம் என்று ஒதுங்கிப் போக நினைக்கும் தாயின் மனநிலையும் நன்கு புரிந்தது. எனக்கோ தம்பிக்கோ இனி சிறிய பிரச்சனை என்றாலும் தாய் உடைந்துவிடுவாள் என்பது புரிய, அவருடைய வார்த்தைகளை மறுக்கத் தோன்றவில்லை.

தன்மடியில் கண்ணீர் வடித்தபடி மௌனமாய் படுத்திருந்த மகளின் தலையைத் தடவிக் கொடுத்த பாக்கியலஷ்மி,

“நித்தி, அப்பாவுக்கு பதினாறு கும்பிட்டதும் அத்தைங்ககிட்ட சொல்லி வைப்போமா, உனக்கு மாப்பிள்ளை பார்க்க?”

“ம்ம்… சரிம்மா. உங்களுக்கு எது சரின்னு படுதோ அதை செய்ங்க.”

மெலிதாய் உரைத்த மகளின் மனநிலையும் புரியத்தான் செய்தது பாக்கியலஷ்மிக்கு.

பரசுராமன் இருந்தவரை எந்தக் கவலையும் இல்லாமல் இருந்தவருக்கு, சில நாட்களாக நிகழும் நிகழ்வுகள் அவரது தைரியத்தை சுத்தமாய் ஒடுக்கியிருந்தது.

“அம்மா உன் நல்லதுக்காகதான் சொல்றேன்டா. யாரையும் நம்மால எதிர்க்க முடியாது.

இனியும் எதாவது பிரச்சனை வந்தா நம்மால என்ன செய்ய முடியும் சொல்லு? அப்பா இருந்தாலும் இப்படிதான் முடிவெடுப்பாங்க. உனக்குப் புரியுதாடா?” கண்களில் கலக்கத்தோடு கேட்டவரைப் பார்த்து மெலிதாய் புன்னகைத்துக் கொண்டவள்,

“நிஜமா இனி எந்த பிரச்சனையும் நமக்குவராதும்மா. அதான் கேஸை வாபஸ் வாங்கியாச்சே. இனி பயமில்ல. நீங்க என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம். நீங்க அத்தைகிட்ட பேசுங்க.”

“இதுபோதும் ராஜாத்தி. நான் இந்த வாரத்துலயே பெரிய அத்தைக்கிட்ட பேசிடறேன்.”

கவலைகள் மண்டிய தாயின் முகத்தில் தெரிந்த லேசான மலர்ச்சிக்காய் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்றியது நித்திலாவுக்கு.

 

வெற்றியின் வீட்டுக்குதான் வந்திருந்தனர் பாரியும் தேவாவும்,

முன்தினம் வந்து வெற்றி நடந்ததைச் சொன்னதிலிருந்து மனதே ஆறவில்லை ரதிமீனாவுக்கு. எவ்வளவு திண்ணக்கம் இருந்தால் இரவு நேரத்தில் ஸ்டேஷனுக்கே ஒரு பெண்ணை வரச் செய்து அத்துமீறியிருப்பான் அந்த நாதன்.

அவனைத் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லும் வேகம் வந்தது. குடலை உருவி மாலையாய் போட்டுக் கொள்ளும் அளவுக்கு கொலைவெறி கிளம்பியது அவளுக்கு.

இரவெல்லாம் விடாமல் ஞானவேலுவிடம் புலம்பியிருந்தவள், காலையில் பாரியைப் பார்த்ததும்,

“ஏன்டா, தடித்தடியா ரெண்டு பேரு இருந்தும் நேத்து அந்த பொறம்போக்க உசுரோட விட்டுட்டு வந்திருக்கீங்க? கொடல உருவி மாலையா போட்ருக்க வேணாம்?”

கடுப்பான ஞானவேலு, “அட எவடி இவ… நல்ல நாள்லயே அவன் தில்ல நாயகம். நீ இன்னும் ஏத்தி வேற வுடு. அடிக்கறதோ கொல்றதோ பெருசில்ல மீனா. அதுக்கப்புறம் வர்ற பிரச்சனைங்கதான் பெருசு.
ஏற்கனவே தெரியாம பண்ணதுக்கே இன்னும் என்னென்ன பிரச்சனையெல்லாம் வருமோன்னு இருக்கு. இதுல இவ வேற.”

“அதுக்காக அவனை அப்புடியே வுட்ருவீங்களா?”

“அவன அப்படியே வுட்ருவோம்னு யாரு சொன்னது? அந்த நாதன்லாம் போலீஸ் டிபார்ட்மெண்ட்டுக்கே கேவலம். அவனை ஒழிச்சுக்கட்றது தப்பேயில்ல. நேத்துல இருந்து அவன் விஷயமாதான் மாத்தி மாத்தி ஃபோன்ல அப்பா பேசிக்கிட்டு இருக்காங்க. ஒன்னு அவன் இந்த ஊரைவிட்டு போகனும், இல்லையா உலகத்தை விட்டே போகனும்.

மேற்கொண்டு எந்த பிரச்சினையும் பண்ணலன்னா ஊரைவிட்டு மட்டும் போவான். இல்லையா அவன் முடிவு நம்ப கையிலதான். ஆனா நிதானமாதான் செய்யனும்.”

“எனக்கென்னவோ அவன் இதோட விடுவான்னு தோனல. கண்டிப்பா பிரச்சனை பண்ணுவான்.” வெற்றி கூற பாரியும் ஆமோதித்தான்.

அப்பொழுது மகேந்திரனும் வந்தமர, அவரது முகம் வெகுவாய் யோசனையைக் காட்டியது.

“எம்எல்ஏ என்ன சொன்னாருங்கப்பா.” ஞானவேலு வினவ,

“நாம நினைச்ச அளவுக்கு இல்லடா ஞானம், இந்த இன்ஸ்பெக்டர் நாதன் கொஞ்சமில்ல ரொம்பவே டேஞ்சரானவன்போலடா.

ஏற்கனவே நம்ப எம்எல்ஏ ஆதரவெல்லாம் அவனுக்கு இருக்குன்னு எனக்குத் தெரியும்.
ஆனா அதைத்தான்டி இன்னும் நிறைய அரசியல்வாதிங்க பெரிய மனுஷங்க போர்வையில இருக்கற ஃபிராடுங்க பண்ற இல்லீகல் விஷயமெல்லாம் இவன்தான் கச்சிதமா முடிச்சித் தரான் போல.

அவனை மாத்தறதுக்குக் கூட யோசிக்கிறானுங்க. இவன் நம்பிக்கையான ஆளு, அடுத்து வர்றவன் எப்படியிருப்பானோன்னு கேக்கறான் அந்த எம் எல்ஏ.”

“இல்லீகல்ன்னா?”

“தமிழ்நாடு முழுக்க நடக்கற கடத்தல்ல முக்கால்வாசி கடல்வழியாதான் நடக்குது. ராமேஸ்வரம் அதைச் சுத்தின இடமெல்லாம் முதலிடத்துலன்னா சென்னை அதைச் சுத்தின இடமெல்லாம் இரண்டாவது இடத்துல இருக்கு.

இதுல புரள்ற பணமெல்லாம் கணக்குல எடுக்க முடியாத அளவுக்கு இருக்கு. தங்கம் போதைப் பொருள்ல ஆரம்பிச்சு உடல் உறுப்புகள், குழந்தைகள், பொண்ணுங்க வரை சகலமும் கடத்திட்டுதான் இருக்கானுங்க. நாதன் மாதிரியான அதிகாரிகளை கைக்குள்ள போட்டுக்கிட்டு ஜரூரா நடக்குது இந்த வேலையெல்லாம்.

எம்எல்ஏ நமக்கு ரொம்ப வேண்டியவன், அவனே சொல்றான். நாதன் மேல கை வச்சா தேன்கூட்டுல கை வச்ச மாதிரி. நீங்க எதுவும் தலையிடாதீங்க. பொண்ணுங்க விஷயத்துல அவன் ஒருமாதிரிதான். உங்க சொந்தக்காரப் பொண்ணாயிருந்தா நான் வேணும்னா நாதன்கிட்ட பேசிப் பாக்கறேன். இல்லைன்னா பேசாம ஒதுங்கிடுங்க மகேந்திரன்ங்கறான்.”

“…”

“இந்த விஷயத்துல நாம இறங்கறது பெரிய ரிஸ்க் நமக்கு. நாதனோட முடியறதில்ல இந்த விஷயம். அவனுக்குப் பின்ன யாருலாம் இருக்காங்கன்னே நமக்குத் தெரியாது. சும்மாலாம் அவன்மேல கை வச்சிடவும் முடியாது. நமக்கும் பிரச்சனைகள் வரும் சமாளிக்கனும். அந்தப் பொண்ணுக்காக நாம இவ்வளவு ரிஸ்க் எடுக்கனுமா? அதான் யோசிக்கிறேன்.”

ஓரளவு அந்த இன்ஸ்பெக்டர் நாதனைப் பற்றித் தெரியும் என்றாலும் இந்தத் தகவல்கள் எல்லாமே புதிது அவர்களுக்கு.

ஏதோ உள்ளூர் செல்வாக்கு மட்டும் அவனுக்கு உண்டு என்றெண்ணியிருக்க, அவனது பின்புலம் அதைத் தாண்டியிருப்பதில், அவனை அவ்வளவு ஈசியாக இடமாற்றம் செய்யவோ தூக்கவோ முடியாது என்பதும் புரிந்தது அவர்களுக்கு.

அவனை எதிர்க்க இவர்கள் நினைத்தால் இவர்களை எதிர்க்க அழிக்க நிறைய பேர் வருவர் என்றும் புரிந்தது. அந்தளவுக்கு நிறைய பெரிய மனிதர்களின் சட்டவிரோத செயல்களுக்கு ஆதரவாய் இருந்தான் நாதன்.

எந்தப் பிரச்சனையாய் இருந்தாலும் வந்து பார் என்று தைரியமாய் நிற்கும் மகேந்திரனின் யோசனை படிந்த முகமே சூழ்நிலையின் தீவிரத்தை உணர்த்தியது அனைவருக்கும்.

“ஐயா, சந்தோஷமா நிம்மதியா இருந்த அந்த குடும்பத்துல இவ்வளவு பிரச்சனைகள் வந்ததுக்கு காரணமே நான்தான். இதை சரிபண்ற பொறுப்பு எனக்கிருக்கு. அவங்களுக்கு இனியும் எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது. எனக்கு ஏதாவது ஒன்னுன்னா வு ட்ருவீங்களா?”

“அதெப்படிடா விடுவோம்? ஏன்டா…? நீயும் அந்தப் பொண்ணும் ஒன்னாடா?”

“நான் வேற அந்தப் பொண்ணு வேற இல்லங்க ஐயா.”

பாரியின் குரல் தெளிவாய் ஒலித்தது.

மகேந்திரன், ஞானவேலு, ரதிமீனா மூவரும் பாரியையே கேள்வியாகப் பார்த்திருந்தனர்.

பாரியும் அந்தப் பெண்ணும் ஒன்றா? என்ன சொல்கிறான் இவன்? ஏதோ செய்த தவறுக்காக வருந்திப் பேசுகிறான் என்று எண்ணியிருக்க அப்படியில்லையோ என்றும் தோன்றியது அவர்களுக்கு.


வெற்றியும் வெகு கூர்மையாக பாரியையேப் பார்த்திருந்தான்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், கையில் செல்வியைப் பிடித்துக் கொண்டு நித்திலாவின் வீட்டு அழைப்பு மணியை அழுத்திக் கொண்டிருந்தாள் கயல்.

—-ஆழி சூழும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!