ஆழி சூழ் நித்திலமே 15

1596006291531

ஆழி சூழ் நித்திலமே 15

15

பரசுராமனுக்கு முப்பதாவது நாள் திதி கொடுக்க முடிவு செய்துவிட்டு, மறுநாள் முகூர்த்த நாளாயிருக்க, அன்றே கோவிலில் வைத்து திருமணத்தை முடித்துவிடலாம் என்று முடிவெடுத்தனர்.

திருமணம் பற்றிய விபரத்தை யாருக்கும் தெரிவிக்கத் தேவையில்லை. பரசுவுக்கு திதி கொடுக்க உறவினர்கள் வரும்போது தெரிந்து கொள்ளட்டும் என்று வசந்தா கூறியது பாக்கியலஷ்மிக்கு நெருடலாக இருந்து.

“அண்ணி, நாம என்ன திருட்டுக் கல்யாணமா பண்ணப் போறோம்? நான் இங்க இந்த ஊர்ல யாருக்கும் சொல்ல மாட்டேன். ஏன்னா யார்மூலமாவது அந்த போலீஸ்காரனுக்குத் தெரிஞ்சா ஏதாவது பிரச்சனை வந்துடுமோன்னு பயமாயிருக்கு.

ஆனா நம்ம சொந்தக்காரங்ககிட்ட ஏன் அண்ணி சொல்ல வேணாம்னு சொல்றீங்க? கல்யாணத்துக்கு நான் முறையா அழைக்க வேணாமா?”

பாக்கியலஷ்மியின் கேள்விக்கு ஒருநொடி அதிர்ந்து போன வசந்தா, பின் சுதாரித்து… தன் மருமகளின் வீட்டினர் பெரிய ரௌடி கும்பல்… இந்த விஷயம் தெரிய வந்தால் எதையாவது செய்து திருமணத்தை நிறுத்திவிடுவர், என்றெல்லாம் அளந்து விட்டவள்,

“இங்கபாரு லஷ்மி, நம்ப வீட்டு கல்யாணம் இது. நீ கூப்பிட்டா என்ன? நான் கூப்பிட்டா என்ன? நானே நெருங்கின சொந்தபந்தங்களுக்குச் சொல்லி, எல்லாரையும் கூட்டிட்டு வந்துடறேன். மீதி பேருக்கு ஊருக்குப் போனதும் ஒரு ரிசப்ஷனை வச்சிடலாம்.” என்று கூறவும் அமைதியானார்.

அம்மாவை எதிர்த்து எதுவுமே பேசாதே, எனக்கு இந்த திருமணத்தில் பூரண சம்மதம் என்று நிகிலேஷின் வாயை அடைத்திருந்த நித்திலா, தன் தாயிடம் தன் படிப்பு தடைபடுமா என்றுமட்டும் வேதனையோடு வினவியிருந்தாள்.

பாக்கியலஷ்மியும் வசந்தாவிடம் இது குறித்து விவாதிக்க, தயாராக அதற்கும் ஒரு பதிலை வைத்திருந்தாள் வசந்தா.

“அதுக்கென்ன லஷ்மி, கல்யாணம் முடிஞ்சதும் எம்மகன் இங்கயே உங்களோடவே இருக்கட்டும். உங்களுக்குப் பாதுகாப்பா இருப்பான்ல. நித்திலா படிப்பு முடிஞ்சதும் ஊருக்கு வந்துரட்டும். மேல படிக்கனும்னா நம்ம ஊர்ல இருந்து படிக்கட்டும்.
நீயும் அதுக்குள்ள இந்த வீட்டை வித்துட்டு நம்ம ஊரோட வந்து செட்டிலாகற வேலைய பாரு. சின்னவன் படிப்புக்கு இங்கயே ஹாஸ்டல்ல சேர்க்க முடியும்னா சேர்த்துடலாம்.”

உடனடியாக ஊருக்குள் மகன் வந்தால் பிரச்சனைகள் வரும். ஆகவே அவன் கொஞ்ச காலம் இங்கிருப்பதும் நல்லதுதான் என்றெண்ணியபடி தீர்வுகளை வசந்தா கூற, ஏற்றுக்கொள்ளும்படி இருக்கவும் தலையாட்டியிருந்தார் பாக்கியலஷ்மி.

திருமணத்துக்குத் தேவையான ஏற்பாடுகளை கவனிக்கும்படியும், தாங்கள் ஒரு வாரத்திற்கு முன்பு அனைத்து உறவினர்களையும் அழைத்துக்கொண்டு வந்து சேர்கிறோம் என்றும் கூறிவிட்டு வசந்தா ஊருக்குக் கிளம்பியிருந்தாள்.

ஸ்ரீதரிடம் பேசிவிட்டு வந்தபிறகு இரவுப்பொழுதுகளில் நித்திலாவின் வீட்டுக்கான பாதுகாப்பை பாரியும் தேவாவும் கவனமாய் பார்த்துக் கொண்டனர்.

கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு நித்திலாவின் வீட்டிலிருந்து ஒருவரும் வெளியே போகாமல் வீட்டிலேயே அடைந்து கிடந்தனர். அவசியமானவற்றுக்கு பாக்கியலஷ்மி மட்டும் வெளியே வந்து சென்று கொண்டிருந்தார்.

வீட்டின் அலைபேசி இணைப்பைத் துண்டித்து, நித்திலாவுக்கும் நிகிலேஷூக்கும் வேறு சிம் வாங்கிப்போட்டு, தெரியாத நம்பரை எடுக்கக்கூடாது என்று அறிவுரை கூறி ஆயிரம் பத்திரம்கூறி பத்து நாட்களுக்குப் பிறகே நித்திலாவையும் நிகிலேஷையும் கல்லூரிக்கு அனுப்பினார் பாக்கியலஷ்மி.

அதுவுமே நாதனின் தொந்தரவு ஏதும் அதுவரை இல்லாததாலே அவருக்கு சற்று தைரியம் வந்திருந்தது.

கல்லூரிக்குச் செல்லும் நித்திலாவுக்கு பாதுகாப்பாக செல்வது பாரியின் வேலையானது. கல்லூரியில் நிகிலேஷின் பாதுகாப்பை சவரிமுத்து உறுதி செய்ய, நித்திலாவின் பாதுகாப்பு பாரியின் பொறுப்பானது.

நித்திலா வீட்டை தேவா தன் சகாக்களுடன் மாற்றி மாற்றி பார்த்துக் கொள்வது என்று முடிவெடுத்து அதன்படி செயல்படுத்தினர்.

இடையில் வங்கிக்கு வந்த பாக்கியலஷ்மியை சந்தித்துப் பேசிய வெற்றியும் பாரியும், நாதனை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதையும், அதுவரை உங்களுக்குத் தேவையான பாதுகாப்பை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றும் கூறியிருந்தனர்.

மீண்டும் மீண்டும் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டிருந்த பாரியிடம், “விடுப்பா, ஏதோ இப்படிலாம் நடக்கனும்னு இருந்திருக்கு. நீ காரணமாகிப் போயிட்ட.

தெரிஞ்சே எவ்வளவோ பாவங்களை செய்யற நாதனை மாதிரி பாவிகள்லாம் தைரியமா திரியறப்ப, தெரியாம செஞ்ச ஒரு தப்புக்கு நீ இவ்வளவு வருந்தி குறுகத் தேவையில்ல.” என்று சமாதானப்படுத்திய பாக்கியலஷ்மி,

“எம்பொண்ணுக்கு என் நாத்தனார் பையனையே பேசி முடிச்சிருக்கேன். இன்னும் இரண்டு வாரத்துல கல்யாணம். அது நல்லபடியா நடந்து முடியனும்ங்கற கவலை மட்டும்தான் இப்ப எனக்குள்ள.” கவலையோடு பேச…

“கவலைப் படாதீங்கம்மா. உங்க பொண்ணோட கல்யாணம் எந்த பிரச்சினையும் இல்லாம நல்லபடியா நடக்கும். எந்தத் தொந்தரவும் இல்லாதபடி நாங்க பார்த்துக்கறோம்.” என்று தைரியம் கூறினர் இருவரும்.

தாங்கள் கல்லூரிக்கு வண்டியில் போகும்போதும் வரும்போதும் பின் தொடரும் பாரியை ஒரிரு முறைகள் கவனித்துவிட்டு, நேரடியாக பாரியிடமே வந்து கோபத்தோடு விசாரித்தான் நிகிலேஷ்.

“நானும் தொடர்ந்து பாக்கறேன். ரெண்டுமூனு நாளா எங்களை ஃபாலோ பண்றீங்க. எதுக்கு எங்க பின்னாடியே வர்றீங்க?”

அவனிடமும், இன்ஸ்பெக்டர் பற்றிய தகவல்களைக் கூறிவிட்டு, நித்திலாவின் திருமணம்வரை உங்களுக்குப் பாதுகாப்புக்காக கூட வருகிறேன் என்றும் எடுத்துக் கூறியிருந்தான் பாரி. மேலும் நிகிலேஷின் தந்தையிடம் சென்று சண்டையிட்டதற்காக மனதார மன்னிப்பும் கேட்டிருந்தான்.

ஆயிரம்தான் பாரி மன்னிப்பு கேட்டாலும் தன் தந்தையை இழந்தது இழந்ததுதானே என்ற கோபம் உள்ளூர இருந்த போதும், பாரியை எதிர்த்தும் கோபமாகவும் எதுவும் பேச முடியவில்லை நிகிலேஷால். மனதார மன்னிப்பு வேண்டி நிற்பவனிடம் எதுவும் பேசாமல் நகர்ந்திருந்தான் நிகிலேஷ்.

வீட்டையும் குப்பத்தில் இருக்கும் நபர்களுடன் இணைந்து பாரி பாதுகாக்கும் விஷயம் சவரியின் மூலம் தெரிந்ததில், நாதனின் தொல்லை அதன்பிறகு இல்லாததற்கான காரணம் புரிந்தது நிகிலேஷ்க்கு.

அதை அப்படியே வந்து வீட்டிலும் பகிர்ந்து கொண்டிருந்தான்.

பாக்கியலஷ்மியும், வங்கியில் சந்தித்து பாரியும் வெற்றியும் பேசியதைக் கூற, தங்களுடைய பாதுகாப்பிற்காக அவர்கள் மெனக்கெடுவது நன்கு புரிந்தபோதும் ஏற்றுக் கொள்ள மறுத்தது நித்திலாவுக்கு.

‘மொத்தமாய் கோட்டையைச் சரித்து தரைமட்டமாக்கிவிட்டு, இப்போது வருந்தி ஒவ்வொரு செங்கல்லாய் எடுத்து வைக்கிறானா இவன்’ கடுப்போடு நினைத்துக் கொண்டாள் நித்திலா.

என் அப்பா மட்டும் இருந்திருந்தால் எங்களுக்கு இந்த பாதுகாப்புக்கான அவசியம் ஏது? நிம்மதியாய் வாழ்ந்து கொண்டிருந்தவர்களை, அலைக்கழித்துவிட்டு இப்போது பாதுகாப்பு கொடுக்கிறேன் மன்னிப்பு கேட்கிறேன் என்றால் செய்தது இல்லையென்றாகிவிடுமா? ஏகப்பட்ட கோபம் அவளுக்குள்.

ஆனால் பாக்கியலஷ்மியைப் பொறுத்தவரை, தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியவர்களுள் பாரி ஆபத்தானவன் இல்லை, அந்த நாதன்தான் ஆபத்தானவன். பாரி செய்தது மாபெரும் தவறு என்றாலும்கூட, தற்போதைய நிலையில் நாதனிடம் இருந்து தங்களைப் பாதுகாக்கும் அவனுடைய செயல்கள் பெரும் ஆறுதலை உள்ளத்துக்குக் கொடுத்தது நிஜம்.

அன்று காலையில் வழக்கம் போல கல்லூரிக்குக் கிளம்பிய நித்திலாவிடம், “நித்திம்மா அப்பாவோட ஸ்கூல்ல இந்த சர்டிஃபிகேட்லாம் கேட்டிருக்காங்கடா. இதைக் கொண்டுபோய் கொடுத்திட்டு அப்புறமா காலேஜ் போங்க.”

பரசுராமனுக்குச் சேர வேண்டிய அரசாங்கத் தொகையை பெறுவதற்கான அவரது இறப்புச் சான்றிதழ் வாரிசு சான்றிதழ் போன்ற சான்றிதழ்கள் அடங்கிய கோப்பைக் கொடுத்தார் பாக்கியலஷ்மி.

“அப்பா ஸ்கூலுக்குப் போயிட்டு காலேஜ் போகனும்னா லேட்டாகிடும்மா. சாயந்திரம் போய் கொடுக்கட்டா?” வினவிய நித்திலாவிடம் சரியென்றவர் வழக்கம்போல ஆயிரம் பத்திரம்கூறி கல்லூரிக்கு அனுப்பி வைத்தார்.

கல்லூரிக்குச் செல்ல பயணிக்கையில் சமீபத்தைய வழக்கமாய் நித்திலாவின் விழிகள் சுழல, பார்வையில் பட்ட பாரியைப் பார்த்து எரிச்சலோடு முகத்தைத் திருப்பியவளின் நெஞ்சுக்குள் தன்னையறியாமல் ஒரு நிம்மதி வந்தமர்ந்ததும் நிஜம்.

நிகிலேஷுடன் வளவளத்தவாறு சென்று கல்லூரியில் இறங்கிக் கொண்டவள், சாயந்திரம் தந்தையின் பள்ளிக்கூடத்திற்கு செல்ல வேண்டும், ஆகவே விரைவாக வரும்படி நிகிலேஷிடம் கூறிவிட்டு கல்லூரிக்குள் சென்றாள்.

வழக்கம் போல கல்லூரி நிகழ்வுகள் இருக்க, மதிய இடைவேளையின் ஆரம்பத்தில் பாக்கியலஷ்மியிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது.

“சொல்லுங்கம்மா, என்னம்மா இந்த நேரம் ஃபோன் பண்ணியிருக்கீங்க?”

“அப்பா ஸ்கூல்ல இருந்து பேசினாங்கடா. அந்த சர்டிபிகேட் எல்லாம் உடனே வேணுமாம். எடுத்துக்கிட்டு வரச்சொல்றாங்க. நான் தம்பிக்கு ஃபோன் போட்டு வரச் சொல்றேன். அவன்கிட்ட அந்த சர்டிஃபிகேட் எல்லாம் கொடுத்திடு. அவன் கொண்டுபோய் ஸ்கூல்ல கொடுத்திடுவான்.”

“நிக்கிக்கு இன்னைக்கு ஏதோ முக்கியமான கிளாஸ் இருக்குன்னு சொன்னான்மா. இப்ப வருவானானு தெரியல. நான் வேணும்னா என் ஃபிரெண்டுகூடப் போய் குடுத்திட்டு வந்துடவா?”

“நீயா? நீ தனியாலாம் போக வேணாம்.”

“அம்மா, நான் தனியா போகல. என் ஃபிரெண்டு விஷால்கூட வண்டில போயிட்டு வந்துடுவேன். நீங்க பயப்படாதீங்க.”

பாக்கியலஷ்மியிடம் பேசி வைத்தவள் தன்னுடன் பயிலும் நண்பனை அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.

உடன் வருவதற்கு லஞ்சம் கேட்டு தன்னோடு வழக்கடித்தபடி வந்த நண்பனோடு உற்சாகமாகப் பேசியபடி தொடர்ந்த பயணம், தந்தையின் பள்ளிக்குச் சென்று அவர்கள் கேட்ட சர்டிபிகேட்டைக் கொடுத்துவிட்டுத் திரும்பும் போது, சாலையோரத்தில் நின்று கைநீட்டி வண்டியை மறித்த நாதனைக் கண்டதும் வடிந்து போனது.

“விஷால் வண்டியை நிறுத்தாம போ.” பதட்டமாய் வந்தன வார்த்தைகள்.

“ஏய், போலீஸ் நிறுத்தறாங்க நித்தி. நிக்காம போனோம்னா நாம ஏதோ தப்பு பண்றோம்னு பிரச்சனையாகும். நீ ஏன் பயப்படற? நான் பேசிக்கிறேன்.” என்றவாறு வண்டியை நிறுத்தியிருந்தான் விஷால்.

அவனுக்கு நித்திலாவின் பிரச்சனைகள் எதுவும் பெரிதாய் தெரியாது. குறிப்பாக நாதனுடனான பிரச்சனைகள். போலீஸ், வண்டியை நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்வது வழக்கமான ஒன்றுதானே என்ற எண்ணத்தோடு நிறுத்தியிருந்தான்.

சற்று தொலைவு தள்ளி போக்குவரத்து காவலர்கள் வேறு சிலரும் நின்றிருந்தனர். வரும் வண்டிகளை நிறுத்தி சோதனையும் செய்து கொண்டிருந்தனர்.

நாதனுக்குத் துறை ரீதியான அலுவல்களை ஸ்ரீதரன் அதிகப்படுத்தியிருந்தார். மேலும் மேலும் கொடுக்கப்பட்ட பணிச்சுமை நாதனை நித்திலாவின் பக்கம் அவ்வளவாக திரும்பவிடாமல் செய்திருந்தது.

எங்கே போய்விடப் போகிறாள் இவள் என்ற அலட்சியமும் இருந்ததால், தனது உயரதிகாரிகள் சொல்லும் வேலைகளைச் செய்து கொண்டிருந்தான்.

தனது துறை அதிகாரியே நேரில் அழைத்து தன் திறமையின் மீது நம்பிக்கை வைத்து இந்த வேலைகளைத் தருவதாகவும், ஓய்வு ஒழிச்சல் பாராமல் இதை முடித்துக் கொடுக்கும் பட்சத்தில் பதவி உயர்வு தானாய் வரும் என்றும் கூறியிருக்க, சற்று மெனக்கெடலுடனே பணிகளைச் செய்து கொண்டிருந்தான் நாதன்.

அவனுக்கு வரும் பணத்துக்கு இந்த பதவி உயர்வோ சம்பாத்தியமோ பெரிதில்லைதான். ஆனால் இந்த வேலையால் கிடைக்கும் ஆதாயமும் மரியாதையும் மிகப் பெரிது. இந்த வேலையை வைத்தே அவன் செய்யும் சட்ட விரோத செயல்களில் இருந்து தப்பித்துக் கொண்டிருப்பது.

ஆகவே நித்திலாவின் நினைவுகளை பின்னிருத்தி வேலையில் கவனத்தைச் செலுத்தியிருந்தான். தற்போதும் தன் வேலை சம்பந்தமாகவே சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த நாதனின் பார்வையில் எதிர்பாராத விதமாக விழுந்திருந்தாள் நித்திலா.

காவல் உடுப்பில் இருந்த நாதனைப் பார்த்து மரியாதையாக விஷ் செய்த விஷாலை பார்வையால் அளந்த நாதன், நித்திலாவைப் பார்த்தவாறு,

“யாரிவன்? பாய் ஃபிரெண்டா?”

“அது உனக்குத் தேவையில்லாத விஷயம்.” வெடுக்கென்று கூறியவள், “விஷால் வண்டியெடு போகலாம்” என்றாள்.

அவளுக்கு நாதனைப் பார்க்கவே அவ்வளவு எரிச்சலாய் இருந்தது. இந்த பட்டப்பகலில் இவனால் தன்னை என்ன செய்துவிட முடியும் என்ற தைரியமும் இருந்தது. ஆகவே விஷாலிடம் வண்டியைக் கிளப்பச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

விஷாலுக்கோ ஒரு போலீஸ் அதிகாரியிடம் நித்திலா இப்படி ஒருமையிலும் எடுத்தெரிந்தாற் போலவும் பேசுவதும் ஆச்சர்யமாய் இருக்க,

“ஹேய், நித்தி என்னய்யா? அவர் ஆபீசர். பார்த்துப் பேசு.” என்று கிசுகிசுக்க, “ஆபீசராம் ஆபீசர்… பொறுக்கி.” நித்திலாவும் முனுமுனுக்க… விஷாலுக்குக் கேட்டதைவிட தெளிவாகவே நாதனுக்குக் கேட்டது அவள் பேசியது.

“ஹா… ஹா… பொறுக்கியா? நான் இன்னும் பொறுக்கித்தனத்தை உன்கிட்ட காட்ட ஆரம்பிக்கவே இல்லையே. காட்டினாத் தாங்குவியா நீ.

திடீர்னு வொர்க் டென்ஷன்ல சிக்கிக்கிட்டேன். மாத்தி மாத்தி வேலையிருந்ததால உன் விஷயத்துல கவனம் செலுத்த முடியல. அதுக்காக உன்னை அப்படியே விட்டுட்டேன்னு நினைச்சியா?

ஃபோன் நம்பரெல்லாம் குடும்பத்தோட மாத்திட்டீங்க போல. அந்தப் பரதேசி வேற நைட்டும் பகலும் காவலுக்கு நிக்கிறான். எவ்வளவு நாளைக்கு? பத்து நாள் நிப்பானா? ஒரு மாசம்? ஆறு மாசம்? எத்தனை நாள் நின்னாலும் அவனால ஒன்னும் பண்ண முடியாது.

இந்த நாதன் நினைச்சா உன்னைத் தூக்க எனக்கு அரை நொடியாகாது. தடியால அடிச்சுக் கனிய வைக்கிறதை விட தானா கனிஞ்ச கனிக்கு ருசி அதிகம்… அதுக்காகத்தான் உன்னை விட்டு வச்சிருக்கேன்.

நீயா உன் மனசை மாத்திக்கிட்டா ராணி மாதிரி இருக்கலாம். இல்லன்னா குடும்பத்துல இருக்கற எல்லாரையும் இழந்துட்டு அநாதையா வேற வழியே இல்லாம என்கிட்ட வரவேண்டியிருக்கும்.”

நாதன் பேசப் பேச ஆத்திரமும் அழுகையும் போட்டிபோட தவிப்போடு நின்றிருந்த நித்திலாவைத் தன்பின்னே மறைத்தபடி முன்னுக்கு வந்திருந்தான் விஷால்.

நாதனின் பேச்சுக்கள் அவனுக்கும் எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது.

“ஹலோ, யார் சார் நீங்க? என்ன பேசறீங்க? பப்ளிக்ல லேடீஸ்ட்ட பேசற மாதிரியா பேசறீங்க? என்ன சார் வேணும் உங்களுக்கு? எங்களை எதுக்கு நிப்பாட்டினீங்க?” நாதனிடம் சரமாறியாக கேள்விகள் கேட்டவன் நித்திலாவிடமும் திரும்பி, “யார் நித்தி இவர்?” என்றான்.

“ஹேய், என்னத் திமிரா? போலீஸ்காரன்கிட்டயே குரலை உசத்தி கேள்வி கேக்கற? நான் யாரா இருந்தா உனக்கென்னடா? அவளை இங்க விட்டுட்டு நீ கிளம்பு. அவளை நான் கூட்டிட்டு போய் அவ வீட்ல விட்டுக்கறேன்.” என்றவாறு விஷாலைத் தள்ள,

“ஹலோ, போலீஸ் ஆபீசர்ங்கறதாலதான் உன்கிட்ட இவ்வளவு மரியாதையா பேசிக்கிட்டு இருக்கேன். இல்லைன்னா நடக்கறதே வேற. பப்ளிக் பிளேஸ்ல பொறுக்கி மாதிரி பிகேவ் பண்ற.” நாதனிடம் எகிறிய விஷால், “நீ ஏறு நித்தி” என்றவாறு வண்டியை எடுக்க முனைய,

அவன் சட்டையை இழுத்து ஒரு அறை விட்டிருந்தான் நாதன்.

“என்னடாப் பண்ணுவ நீ. ஒரு போலீஸ்காரன்கிட்ட இவ்வளவு திமிராப் பேசிட்டுப் போயிடுவியா நீ.”

விஷாலை அடிக்கவும் சப்தநாடியும் ஒடுங்க பயந்து போனவள், வேகமாய் வந்து அவனைப் பிடித்து இழுக்க முயற்சித்தாள்.

“வா விஷால். வந்துடு போயிடலாம்.” இதழ்கள் முனுமுனுக்க, கண்களோ தன்னை மீறி அலைபாய்ந்தது பாரியைத் தேடி… எப்பொழுதும் பின் தொடர்பவனைத் தானாய் தேடியது கண்கள்.

“ஏய், ஸ்டூடண்ட்ஸ் மேல கை வைக்கிற நீ. உன்னை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவோம் ஜாக்கிரதை” விடாமல் திமிறியபடி விஷால் பேச,

“ஸ்டூடன்ட்னா பயந்துடுவோமா? உன்னையும் இவளையும் பிராத்தல் கேஸ்ல அரெஸ்ட் பண்ணி ஒருநாள் முழுக்க லாக்கப்ல வச்சு நான் யார்னு காட்டறேன்.” என்றவாறு விஷாலை பிடித்து இழுத்தபடி நாதன் போலீஸ் ஜீப்பை நோக்கி நடக்க,

“உனக்குப் பிரச்சனை என்னோடதான… ப்ளீஸ் விஷாலை விட்டுடு.” என்று அழுதபடி நித்திலா பின்னே சென்றாள்.

சரியாக அந்த நேரம் சாலையோரத்தில் நிறுத்தப் பட்டிருந்த நாதனின் இருசக்கர வாகனத்தின் மீது வேகமாய் மற்றொரு இருசக்கர வாகனம் வந்து மோத… மோதிய வேகத்தில் நாதனின் வண்டி எகிறிப் போய் சாலைத் தடுப்பில் மோதி நொறுங்கியது.

பெரும் சப்தத்தோடு நிகழ்ந்த இந்த நிகழ்வில் அனைவரின் கவனமும் அங்கே செல்ல, விஷால் நித்திலா நாதன் மூவரின் பார்வையும் அங்கே சென்றது.

தன் வாகனத்தை அடித்துத் தூக்கியவனின் மீது கொலைவெறியோடு, பார்வையைப் பதித்த நாதன், அங்கே ஹெல்மெட்டைக் கழட்டியவாறு நின்றிருந்த பாரியைப் பார்த்து பெரும் கோபத்தோடு, விஷாலை விட்டுவிட்டு பாரியினருகே சென்றான்.

இதற்குள் அந்தப் போக்குவரத்து காவலர்களும் அருகே வந்திருக்க, “டேய், என் வண்டி மேல எதுக்குடா மோதுன?” என்றவாறு அடிக்கக் கையோங்கிய நாதனின் கைகளைத் தடுத்துப் பிடித்திருந்தான் பாரி.

“சார், வண்டில பிரேக் புட்டுக்கிச்சி. பேலன்ஸ் இல்லாம வந்து மோதிக்கினேன். வேணும்னா கேஸ் போட்டு ஃபைனு வாங்கிக்கோ. வண்டிய வேணும்னாலும் புடுங்கி வச்சிக்கோ. மேல கை வைக்கிற வேலை வேணாம்.” பாரி பேசிக் கொண்டிருக்க பின்னோடு வெற்றியும் அங்கே வந்து சேர்ந்திருந்தான்.

“ஏன்டா, வேணும்னே வந்து மோதிட்டு கதையா விடற?“ நாதன் எகிற,

“இங்க பாருங்க இன்ஸ்பெக்டர், வண்டியில பிரேக் ஒயர் கட் ஆகியிருக்கு. பேலன்ஸ் இல்லாம வந்து மோதியிருக்கு வண்டி. அதுவுமில்லாம ஆளுங்க யார் மேலயும் மோதல. யாருக்கும் எந்த சேதமும் இல்ல. வண்டிதான் நொருங்கிப் போச்சு. ஃபைன் எவ்வளவு போடனுமோ போடுங்க. நாங்க கோர்ட்ல கட்டிக்கிறோம்.”

வெற்றி நாதனிடம் பேசிக்கொண்டிருக்க, நித்திலாவைப் பார்த்த பாரி இடத்தை விட்டுப் போகுமாறு சமிக்ஞை செய்தான். மெல்ல தலையசைத்துக் கொண்டவள்,

“வா விஷால் போயிடலாம்.”

“என்ன நடக்குது நித்தி இங்க?” விஷால் அதிர்ந்து போய் கேட்க…

“நம்ப காலேஜ்ல போய் எல்லாம் சொல்றேன். இப்ப கிளம்பலாம் வா.” என்றவாறு விஷாலைக் கிளப்பியவள், அவன் வண்டியில் ஏறி அமர்ந்தாள்.

காவலர்களிடம் வாதாடிக் கொண்டிருந்த பாரியின் மீதான அவளது பார்வை அவன் புள்ளியாய் தேயும் வரை நிலைத்திருந்தது.

 

நள்ளிரவு… உறக்கம் வர மறுத்தது நித்திலாவுக்கு. மதியம் நிகழ்ந்த நிகழ்வுகளை அசைபோட்டபடி தன் அறையில் படுத்திருந்தாள்.

பாக்கியலஷ்மியிடம் மதியம் நடந்ததைக் கூறவில்லை. வெகுவாக  பயந்து போவார் என்பதால் மறைத்திருந்தாள்.

நிகிலேஷிடம் மட்டும் கூறியிருந்தாள். நிகிலேஷும் நடந்ததைக் கூறவும் வெகுவாய் பயந்து போயிருந்தான். இனி தனியே எங்கேயும் போகாதே என்று எச்சரித்திருந்தான்.

நாதனைப் பார்த்த போதுகூட பயமில்லாமல் தைரியமாய் நின்று பேசிய நித்திலாவுக்கு, அவன் விஷாலை அடித்து இழுத்துச் செல்லவும் இருந்த தைரியம் சுத்தமாய் வடிந்து போயிற்று.

அப்படியே ஸ்டேஷன் சென்றாலும் விஷாலின் தந்தைக்கு ஃபோன் செய்து வரச்சொல்லி, அந்தப் பிரச்சனையை எப்படியாவது சமாளித்திருக்கலாம்தான். ஆனால் அந்த நாதன் கிறுக்கன். ஏடாகூடமாய் ஏதேனும் வழக்கை எங்கள் இருவரின் மீதும் போட்டால் எவ்வளவு அசிங்கமாய் போயிருக்கும் என்பதிலேயே அவள் மனம் உழன்று கொண்டிருந்தது.

கல்லூரி வந்ததும் என்ன பிரச்சனை என்று துளைத்து எடுத்த நண்பனிடம் ஆதியோடு அந்தமாய் நிகழ்ந்தவை அனைத்தையும் கூறியிருந்தாள். அவளது தந்தையின் மரணம் மட்டுமே நண்பர்களுக்குத் தெரியும்.

அதன்பின் அடுக்கடுக்காய் அவள் சந்தித்த பிரச்சனைகள் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது அவர்களை. அதிலும் அவளுக்கு அவசர அவசரமாக செய்யப் போகும் திருமணம் பெரிதும் அதிர வைத்தது அவர்களை.

“நித்தி, என்னப்பா இது? இவ்வளவு நடந்திருக்கு? எதுவுமே தெரியாம இருந்திருக்கோமே!” வெகுவாய் வருந்திய விஷால்,

“இரண்டாந்தாரமா கட்டிக்க உனக்கென்ன தலையெழுத்தா? அம்மாகிட்ட பேசு நித்தி. கல்யாணம் வேணாம்னு சொல்லு.”

“இல்ல விஷால், இந்தக் கல்யாணம்தான் எங்களைக் காப்பாத்தும்னு அம்மா உறுதியா நம்புறாங்க. கல்யாணம் பேசினப்புறம்தான் கொஞ்சம் தெளிவா இருக்காங்க.

இன்னைக்கு நடந்ததைக்கூட நான் அவங்ககிட்ட சொல்லமாட்டேன். ரொம்ப பயந்துடுவாங்க.

அப்பா போனதுக்கப்புறம் அம்மா மனசளவுல ரொம்ப வீக்கா இருக்காங்க விஷால். இந்த நாதனை நினைச்சு பயத்துல இருக்காங்க. அதனாலதான் வேற எதைப்பத்தியும் யோசிக்காம இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டிருக்காங்க.

என்னோட எதிர்காலத்தைப்பத்தி கல்யாணத்தைப்பத்தி ஏகப்பட்ட கனவுகள் அவங்களுக்கு இருந்தது. அது எதையுமே நிறைவேத்த முடியலையேன்னு ஏற்கனவே மருகிக்கிட்டு இருக்கறவங்களுக்கு இன்னமும் கஷ்டத்தைக் கொடுக்க விரும்பல. என் விதி எப்படியோ அதுவே நடக்கட்டும்.” பெரிதும் சோர்விருந்தது அவள் குரலில்.

“உங்க அத்தைப் பையன் நல்லவரா? பேசியிருக்கியா? எப்படி நித்தி ஒத்துக்கிட்ட?” மனதே ஆறவில்லை அவனுக்கு.
விரக்தியாய் சிரித்தவள்,

“யாருக்குத் தெரியும்? எப்பவோ சின்ன வயசுல பார்த்தது. அதைத்தவிர அவங்களைப் பத்திலாம் எதுவுமே தெரியாது.

ஆனா எங்க அத்தை பேசறது எல்லாமே நடிப்பா தெரியுது விஷால். எங்க சூழ்நிலைய சாதகமா பயன்படுத்திக்கிறாங்கன்னு நல்லாவே புரியுது. ஆனா எதையும் பேச முடியல.

இந்தக் கல்யாணம் எங்களைக் காப்பாத்தும்னு அம்மா ரொம்ப நம்புறாங்க. அவங்க நம்பிக்கை பொய்யாப் போச்சுன்னா ரொம்ப உடைஞ்சிருவாங்க. அது மட்டும்தான் என் பயமே.”

கண்கள் கலங்க பேசியவளை சமாதானப் படுத்தியவன், உன் மனசுக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும் என்று ஆறுதல் கூறியிருந்தான்.

தற்போது அதை நினைத்ததும் விரக்தியில் இதழ்கள் வளைந்தன. “நல்லதா? எனக்கா?” மெல்ல முனுமுனுத்துக் கொண்டாள்.

திருமண நாள் நெருங்க நெருங்க தன்னை மீறி உள்ளத்தில் கணம் கூடிப்போயிருக்கிறது.

வாணலிக்குத் தப்பி அடுப்பில் விழுந்த பல்லி போலத்தான் தன்நிலையும் இருக்குமோ என்ற அச்சம் அவள் நெஞ்சையடைத்தது. ஆனால் இதைத் தவிர்த்து வேறு வழியும் புலப்படாததில் செய்வதறியாமல் நிற்கும் நிலைதான் அவளுக்கு.
நாதன் தன்னை அவ்வளவு எளிதில் விடப் போவதில்லை என்பது இன்றைய நிகழ்வில் தெளிவாகியிருக்க, கையறு நிலையில் தன்னை நிறுத்திய விதியைதான் நொந்து கொள்ள முடிந்தது.

தன்னைப்போல தந்தையின் நினைவுகள் வந்து நெஞ்சையடைத்தது. “அப்பா, நீங்க இருந்திருந்தா இப்படிலாம் நடக்குமா?” கண்ணீரோடு புலம்பியவளுக்கு, இவ்வளவுக்கும் காரணமான பாரியை நினைத்ததும் கோபம் பொங்கியது.

அதேநேரம் அந்த இக்கட்டான சூழலில் தன்னைமீறி கண்களும் உள்ளமும் அவனைத்தான் தேடியது என்பதையும் உணர்ந்திருந்தாள். அந்தச் சூழலில் அவன் உடனிருந்தால் தன்னைப் பாதுகாப்பான் என்று உள்ளம் திடமாக நம்பியதையும் உணர்ந்திருந்தாள்.

அன்று போலீஸ் ஸ்டேஷன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தவனின் முகத்தில் இருந்த தவிப்பும், பதட்டமும் நன்கு நினைவிருக்கிறது அவளுக்கு.
அவளைப் பார்த்ததும் அந்தத் தவிப்பும் பதட்டமும் ஆசுவாசமாய் மாற, நாதனின் பிடியில் சிக்கியிருந்த அவளது கரங்களைப் பார்த்ததும் ஆக்ரோஷமாக மாறியது.

அதே ஆக்ரோஷத்தோடு நாதனை புரட்டியெடுத்தவனையும் அவளால் மறக்க முடியவில்லை.

தன் தந்தையின் இறப்புக்கு காரணம் அவன்தான் என்று தெரியும்வரை தன்னை மீட்க வந்த மீட்பனாகவே அவனை நினைத்திருந்தாள்.

இன்றும் அதுபோல எப்படியும் அவன் வந்துவிடுவான் என்றே அவள் உள்ளம் தேடியது. அவனை அங்கே கண்டதும் உள்ளத்தில் அவ்வளவு நிம்மதி அவ்வளவு ஆசுவாசம்.

தன்னைப் போகச் சொல்லி அவன் சைகை செய்தபோது மறுப்பின்றி கிளம்பிவிட்டாலும், அந்தக் காவலர்கள் அவனை ஏதும் செய்துவிடுவரோ என்ற தவிப்போடு அவனையே திரும்பித் திரும்பிப் பார்த்து வந்ததை இப்போது சற்று வியப்பாக எண்ணிக் கொண்டாள்.

அவன்மீது அவ்வளவு கோபமிருந்தாலும், அவனுடைய நலனையும் எண்ணும் தன்னுடைய உள்ளம் தன் பெற்றோரின் வளர்ப்பில் வந்தது என்பதை எண்ணிக் கொண்டவள், தூக்கம் வராததில் எழுந்து பால்கனி ஊஞ்சலுக்கு வந்து அமர்ந்தாள்.

கடல்காற்று சிலுசிலுவென்று வீச, மெல்லிய நிலா வெளிச்சம் எங்கும் வியாபித்திருந்தது.

தங்கள் வீட்டின் எதிர்ப்புறமிருந்த காலிமனையில் நின்றிருந்த வண்டியும் அதன்மீது சாய்ந்து நின்றிருந்த உருவமும் கவனத்தை ஈர்க்க, கூர்ந்து கவனித்தவளுக்கு அது பாரிதான் என்பது புரிந்தது.

வரிவடிவமாய் தெரிந்த அவனுருவம், அன்றொருநாள் இருளில் தான் தனிமையில் நடந்து வந்தபோது துணைக்காக நின்றிருந்தவனை நினைவுபடுத்த,

“யாரென்றே தெரியாத அன்றும், இதேபோல என் பாதுகாப்புக்காய் நின்றிருந்தவன்தானே இவன்!” மெல்ல முனுமுனுத்தவள் அவனையே பார்த்திருந்தாள்.

காவலுக்காய் நின்றிருந்த பாரியின் உள்ளுணர்வுகள் எதையோ உணர்த்த தலையை நிமிர்த்தி நித்திலாவின் வீட்டு பால்கனியைப் பார்த்தவனின் பார்வையில் விழுந்தாள் பெண்.
வரிவடிவமாய் அமர்ந்திருந்தவளின் உடல்மொழி அவளும் தன்னைப் பார்ப்பதையே உணர்த்த, கண்கொட்டாமல் பார்த்திருந்தான் பாரி.

 

சிலரது அன்பு வார்த்தைகளால் உணர்த்தப்படலாம்…

சிலரது அன்பு செய்கைகளால் உணர்த்தப்படலாம்…

சிலரது அன்பு உணர்வுகளால் உணர்த்தப்படலாம்…

ஆனால், சிலரது அன்பு புரிவதில்லை…

அதை காலம் மட்டுமே உணர்த்தும்.

—ஆழி சூழும்

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!