ஆழி சூழ் நித்திலமே 16

1596006291531

16

ஊழிக்காற்றில் கரைசேர முடியாமல் தத்தளிக்கும் படகைப் போல, நிலையற்று தவித்தது பாரியின் மனது. நித்திலாவின் திருமணநாள் தெரிந்ததிலிருந்தே இந்த நிலைதான். யாரிடமும் சொல்லி புலம்பக்கூட முடியாத அவஸ்தை.

இரும்பு குண்டை விழுங்கியவன் போலவே அழுத்தத்தோடு அலைந்து கொண்டிருந்தான்.

நித்திலாவின் பாதுகாப்பிற்காய் அவள் பின்னே செல்வதில் கடலுக்கும் போக முடியவில்லை. சரிவர உண்ணாமல் உறங்காமல், முகமும் பஞ்சடைத்துப் போக, சவரம் கூட செய்யாத முகம் அவன் சோகத்தை அப்பட்டமாய் காட்டிக் கொண்டிருந்தது.

ஒவ்வொரு வேளையும் உணவைக்கூட கயல் அத்தனை முறை ஆள் அனுப்பிக் கூப்பிட்டுவிட்டால் தட்டமுடியாமல் வந்து உண்டுவிட்டுப் போவான்.

நித்திலாவின் நல்வாழ்வுக்காக தான் தள்ளி நிற்பதுதான் சரியென்று எளிதாக சொல்லிவிட்டாலும், அவளது திருமணநாள் நெருங்க நெருங்க சொல்லமுடியாத வேதனை நெஞ்சையடைத்தது.

அன்றும் தேவாவை அனுப்பி பாரியை காலை உணவு உண்ண அழைத்துவரச் செய்த கயல், அவனது தோற்றத்தைப் பார்த்து வெகுவாக கடிந்து கொண்டாள்.

“இன்னா மாமா இது? நோவுல நொந்து போனவனாட்டமிருக்க… ஒழுங்கா மூஞ்சிய சவரம் செய்யி மாமா? கப்பல் கவுந்தா கணக்கா மூஞ்சிய வச்சினுக்கிற நீ.”

அதட்டி குளிக்க அனுப்பியவள், முகச்சவரம் செய்து குளித்து வந்தவனுக்கு காலை உணவை பரிமாறியபடி மெல்ல பேச ஆரம்பித்தாள். ஆயா இட்லி வியாபாரத்தில் கவனமாயிருக்க, இவர்கள் வீட்டினுள் அமர்ந்திருந்தனர்.

பாரியின் வேதனை நன்றாய் புரிந்தது கயலுக்கு. காதலைச் சொல்லவும் முடியாமல் மறக்கவும் முடியாமல் உள்ளுக்குள் வைத்துப் புழுங்கும் அவனை இரக்கத்தோடு பார்த்தவள்,

“ஏன் மாமா? மனசுல போட்டு இப்புடி மருகின்னு கிடக்கறதுக்கு, ஆவறது ஆவட்டும்னு அந்த பொண்ணு கையில உம் மனச புட்டு புட்டு வெச்சிடேன் மாமா.”

பட்டென்று நிமிர்ந்து, உனக்கெப்படித் தெரியும் என்ற கேள்வியோடு அவளைப் பார்க்க,

“அன்னிக்கு சரக்கடிச்சிக்கினு வந்து ராவெல்லாம் புலம்புனியே அப்பவே தெரியும்.”

சற்று சங்கடமாய் குனிந்து கொண்டான்.

“ஆசப்பட்ட வாழ்க்க அல்லாருக்குமே கெடைக்காது கயலு.”

மனம் வலித்தது கயலுக்கு. அது நிஜம்தானே! தன்னைமீறி லேசாய் கண்கள் கலங்க,

“அது நெசந்தான் எனக்கும் தெரியும். ஆனா, ஆசப்பட்டது வேணுமின்னா கொஞ்சமாது முயற்சி செஞ்சிப் பார்க்கலாமில்ல.”

லேசாய் சிரித்துக் கொண்டவன், “கன்டிசனா ஆவறதில்லன்னு தெரிஞ்சாப்புறமும் இன்னா முயற்சி செய்யச் சொல்ற? அந்தப் பொண்ணையும் கன்பீஸ் பண்ணி வுடனுமா? அத்தாச்சும் நிம்மதியா கண்ணாலம் கட்டிக்கினுப் போவட்டும் கயலு.”

“அந்தப் பொண்ணப் பத்தியே யோசிக்கிறியே, ஒன்னியப் பத்தி யோசிக்கவே மாட்டியா மாமா?”

“ம்ப்ச், என்னியப்பத்தி யோசிக்க இன்னாக்குது?”

தொண்டையடைத்தது கயலுக்கு. இப்படி விரக்தியாய் பேசுபவனிடம் என்ன பேச, அவள் மனதிலும் ஆயிரம் ஆசைகள் இருந்ததுதான், ஆனால் என்றைக்குப் பாரியின் உள்ளம் தெரிந்ததோ அன்றே தன் ஆசைகளுக்கு அணை போட்டுக் கொண்டாள்.

சிறுவயதிலிருந்து பாரியைப் பார்த்து வரும் கயலுக்குத் தெரியாததா பாரியின் வைராக்கியம்? நினைத்தது நினைத்த பிடியில் நிற்கும் வைராக்கியம். அவன் மனம் அந்தப் பெண்ணோடு நின்றுவிடும் என்பது அவளுக்கு உறுதியாகத் தெரியும்.

வெள்ளைக் காகிதமாய் தன் மாமனின் மனது, இயல்பாய் திருமணம் முடிந்ததும் தன் காதலைக் கொட்டி அவன் மனதில் நிறைந்துவிடலாம் என்றவள் எண்ணியிருக்க,

வேறொருத்தி ஏற்கனவே அதில் வண்ணக் கோலங்ளை வரைந்திருப்பது அதிர்ச்சிதான் கயலுக்கு. ஆனால் தன் மாமனின் ஆசை என்று வரும்போது தன் ஆசை தன்னாலே பின்னால் சென்றது.

தற்போது அவள் மனம் முழுக்கத் தன் மாமனின் எதிர்காலம் பற்றிய கவலை மட்டும்தான்.

“உனுக்குன்னு ஒரு வாழ்க்கக்கீது, அத்தப்பத்தி யோசிக்கலயா நீ? இப்புடியே இருந்துக்குவியா மாமா?” அவ்வளவு ஆற்றாமையும் அழுகையும் அவளது குரலில்.

“தம்மாத்தூண்டு புள்ளையில இருந்து உன்னையப் பார்த்துக்கினுக்கிறேன். இன்னும் பச்சப்புள்ள கணக்காக்கிறியேன்னு நிறைய தபா நெனைக்க வச்சிக்கினுக்கிற நீ.

அப்பாலிக்கா எத்தினியோ தபா என் அம்மாவையே உன்னாண்ட பாக்கவும் வச்சினுக்கிற.”

மென்மையாய் புன்னகைத்து அவளது தலையைப் பிடித்து லேசாய் ஆட்டியவன்,

“எனக்கு இன்னா கவல கயலு? ஆயாக்குது நீக்கீற. இன்னும் கொஞ்ச நாளு போவோ சொல்லோ, டக்கரான மாப்புள்ளையா பார்த்து இந்தக் குப்பமே அசந்து போறாமாறி, ஷோக்கா உனக்கொரு கண்ணாலம் பண்ணிப்புடுவேன். உன் புள்ளைங்க புருஷன்னு நீ சந்தோஷமாக்கறதை பார்க்கனும்.

இத்தக்காண்டி வேற எத்தப்பத்தியுமே நானு யோசிக்கல கயலு. நீயும் கண்டமேனிக்கு யோசிச்சி மருகிக்கினு கெடக்காத.”
பேசி முடித்தவன் வெளியேறிவிட,

அவன் மனதை மாற்றுவது கடினம் என்பதை உணர்ந்தவளாய் போகும் அவனையே மனபாரத்தோடு பார்த்திருந்தாள் கயல்.

******

பாக்கியலஷ்மியின் மனதும் அமைதியற்றுத் தவித்தது. கடந்த சிலநாட்களாக கனவில் தோன்றும் கணவரின் முகம் மகளின் பெயரையேச் சொல்லிச் சொல்லிப் புலம்ப, நித்திரையே தூரப் போயிருந்தது அவருக்கு.

தான் செய்வது சரிதானா? திருமணநாள் நெருங்க நெருங்க தன்மனம் இப்படி அமைதியற்றுத் தவிப்பது எதனால்? எதுவுமே புரியவில்லை அவருக்கு.

ஏதோ விரும்பத் தகாமல் நடக்கப் போகிறதோ என்று பயந்தவர் நித்திலாவைக் கல்லூரிக்குக்கூடப் போகவேண்டாம் என்றுகூறி தன்னோடு வைத்துக் கொண்டார்.

சரிவர உண்ணாமல் உறங்காமல், சோர்ந்து சுருண்டு போகும் மகளைப் பார்த்து பெற்ற வயிறு தவித்தது.

‘கல்யாணப் பெண் போலவா இருக்கிறாள்? எப்படியெல்லாம் இவள் திருமணத்தை நடத்த ஆசைப்பட்டோம்’ வேதனையோடு எண்ணிக் கொண்டவருக்கு வேறு வழியும் புலப்படவில்லை.

அன்று பாரி வந்து வேண்டுமென்றே வண்டியை மோதி பிரச்சனையை திசைதிருப்ப, தன்னிடமிருந்து நழுவிச் சென்ற நித்திலாவின்மீதும் பாரியின்மீதும் கடுங்கோபத்தில் இருந்த நாதன், நித்திலா வீட்டினரை மிரட்டும் நோக்கத்தோடு அடியாட்கள் சிலரை நித்திலா வீட்டுக்கு அனுப்பியிருந்தான்.
அவர்களை தன் குப்பத்து ஆட்களோடு சேர்ந்து ஓட ஓட விரட்டியிருந்தான் பாரி. இருப்பினும் அது இன்னும் பயத்தை கூட்டியிருந்தது பாக்கியலஷ்மிக்கு.

இப்படி எவ்வளவு நாட்களுக்கு பாதுகாப்பு தரமுடியும் இவர்களால்? என்ற பயமும் எழுந்ததில் தான் எடுத்த முடிவு சரிதான் என்று உறுதியாக எண்ணிக் கொண்டார்.

மகளின் திருமணம் ஒன்றுதான் தங்களை இந்த இக்கட்டிலிருந்து காக்கும் என்று அவரது உள்ளம் உறுதியாய் நம்பியது.

அதையே நித்திலாவிடமும் நிகிலேஷிடமும் அடிக்கடி சொல்லிச் சொல்லி ஆறுதல் பட்டுக்கொண்டார்.

பிள்ளைகளுக்கும் அவரது மனநிலையே முக்கியமாய் பட அவரை ஆமோதித்துப் பேசியே ஆறுதல் கூறினர்.

ராஜசேகருக்குத் தேவையான உடைகளைத் தானே வாங்கி வந்துவிடுவதாக வசந்தா கூறியிருந்ததால் நித்திலாவுக்கு மட்டும் ஒரு பட்டுச்சேலை வாங்கி வந்திருந்தார் பாக்கியலஷ்மி. புதிதாக எதுவும் வாங்காவிட்டாலும் வீட்டில் இருந்த நகைகளைத் தயாராக எடுத்து வைத்திருந்தார்.

கோவிலில் திருமணத்துக்காக முன்பதிவு செய்து வைத்தவர், மாலை மேளம் போன்றவற்றுக்கும் முன்பணம் கொடுத்து வைத்தார். உணவை ஹோட்டலில் நெருக்கத்தில் சொல்லிக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்தார்.

சொந்தபந்தங்களை அழைத்துக்கொண்டு வசந்தாவும் பரசுராமனின் திதி கொடுக்கும் நாளுக்கு முன்தினம் வருவதாகக் கூறிவிட, திருமணத்துக்கு நான்கைந்து நாட்களே இருந்தபோதும் கல்யாணக்களை ஏதுமின்றி வெறுமையாய் இருந்தது வீடு.

நாட்கள் நெருங்க நெருங்க என்னவென்று புரியாத அழுத்தம் நெஞ்சையடைத்தது பாக்கியலஷ்மிக்கு.

திருமணத்துக்கு இடையில் இன்னும் இருதினங்களே இருக்க, அன்று காலையிலேயே படபடப்பாய் உணர்ந்தவருக்கு இரத்த அழுத்தம் எக்குதப்பாய் எகிறிவிட மயங்கி விழுந்திருந்தார். பதறிப்போன நித்திலாவும் நிகிலேஷூம் அவரை அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.

நிலையில்லாத இரத்த அழுத்தம் இருந்ததால் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக வைக்கும்படி ஆகிற்று.

தாயின் மனம் எதைஎதையோ எண்ணி பதறித் தவிப்பதை உணர்ந்து கொண்டவள்,

“அம்மா, கண்டதையும் யோசிக்காதீங்க. கல்யாணம் நல்லபடியா நடக்கும். உங்க உடம்புதான் முதல்ல முக்கியம். நீங்க நல்லபடியா கூட இருந்து நடத்தி வைக்க வேணாமா?
நமக்கு எது நல்லதோ அதை நம்ப அப்பா கூடவே இருந்து நடத்திக் குடுப்பாங்கம்மா.

தைரியமா இருங்க. நீங்களாவது எங்களுக்குத் துணையா எப்பவும் வேணும்மா. ப்ளீஸ் மனசை அமைதியா வச்சிக்கோங்க.”
கண்ணீருடனான நித்திலாவின் பேச்சு சற்று ஆற்றுப்படுத்தியது அவரை.

பரசுராமன் உடனிருந்து அனைத்தையும் நலமாய் நடத்தித் தருவார் என்று திடமாக நம்பியவர், மானசீகமாய் கணவருக்கு வேண்டுகோளையும் வைத்தார்.

‘நம்ம பாப்பு வாழ்க்கை நல்லாயிருக்கனும். நான் செய்யறது சரியா தப்பான்னுகூட எனக்குத் தெரியல. ஏனோ மனசு கிடந்து அடிச்சுக்குது. அவளுக்கு நல்லதை நீங்கதான் கூட இருந்து நடத்திக் குடுக்கனும்.’ மனதோடு பேசிக் கொண்டவர் சற்றுத் தெம்பாய் உணர்ந்தார்.

நிகிலேஷ் அவர்களுக்கு உணவு வாங்க கேன்டீன் சென்றிருக்க, பாக்கியலஷ்மிக்குத் தேவையான மருந்தை வாங்க மருத்துவமனையோடு இணைந்திருந்த மருந்தகத்துக்கு வந்தாள் நித்திலா.

அங்கே மருத்துவமனை வளாகத்தில் அவர்களுக்குத் துணையாய் நின்றிருந்த பாரி, அவளைக் கண்டதும் தயக்கத்தோடு அருகே வந்தான்.

“அ… அம்மாவுக்கு இப்ப எப்படி இருக்குதுங்க?”

பாக்கியலஷ்மி மயங்கி விழவும், மனதளவில் வெகுவாய் அரண்டு போயிருந்தாள் நித்திலா. அம்மாவுக்கு ஒன்றென்றால் தங்களின் நிலை என்ன என்ற பயம் வந்திருந்தது.

ஆறுதலுக்குக்கூட யாரும் அருகில் இல்லாமல் தனித்திருக்க, தாயும் மருத்துவமனையில் இருக்க, ஒருமாதிரி வெறுமையை மனதால் உணர்ந்து மனவுளைச்சலில் இருந்த நித்திலாவுக்கு, அவனது கேள்வி சற்று ஆறுதலாய் இருந்தது.

நன்றாக இருக்கிறார்கள் என்னும் விதமாய் தலையசைத்துக் கொண்டாள்.

“கவலைப்படாதீங்க. அம்மாவுக்கு ஒன்னியுமாவாது. சீக்கிரம் சரியாகிடும்.”

ஏனோ அவ்வார்த்தைகள் மனபலம் தருவதாய் இருக்க, கண்கள் கலங்கத் தலையை லேசாய் அசைத்து ஆமோதித்தவள்,

அடுத்ததாய் தயங்கிய குரலில், “ந… நடந்ததுக்கெல்லாம் எ…என்னை மன்னிச்சிடுங்க.” என்ற பாரியை பதிலற்ற வெற்றுப் பார்வை பார்த்தவாறு மருந்துகளை வாங்கிக்கொண்டு நகர்ந்தாள்.

இரண்டு நாட்களுக்கு பாக்கியலஷ்மி மருத்துவமனையிலேயே இருக்க வேண்டியிருக்க, அவரது உடல்நிலை சற்று தேறியதும் பரசுராமனின் திதியன்று காலையில் அவரை டிஸ்சார்ஜ் செய்வதாய் டாக்டர் கூறியிருந்தார்.

மறுநாள் திருமணம் என்ற நிலையில் பரசுராமனின் முப்பதாம்நாள் திதியன்று அதிகாலையில் உறவினர்கள் சிலரோடு வந்து இறங்கினர் வசந்தாவும் அவளது குடும்பமும்.

பரசுராமனின் உடன்பிறப்புகளும் வசந்தாவுக்கு ஆதரவான சில நெருங்கிய சொந்தங்களும் மட்டுமே வந்திருந்தனர். அவர்களுக்குமே நித்திலாவின் வீட்டுக்கு வந்தபிறகுதான் திருமண செய்தியையே தெரிவித்தாள் வசந்தா.
பெரும் சண்டையும் குழப்பமுமாய் இருந்தது வீடு.

பாக்கியலஷ்மியுடன் இரவு தங்கியிருந்துவிட்டு காலையில்தான் வீட்டுக்கு வந்திருந்தனர் நித்திலாவும் நிகிலேஷூம். ஊரிலிருந்து வருபவர்களுக்கு காலை உணவு ஏற்பாடு செய்யவேண்டுமே என்பதற்காய் வந்திருந்தனர்.

நடப்பவற்றை அதிர்ச்சியோடு பார்த்திருந்தனர் இருவரும்.

இரண்டாவது அத்தை வழக்கம்போல பட்டும்படாமல் பேச, முதல் அத்தை உமாதான் நித்திலாவுக்கு ஆதரவாய் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள்.

அவரது மகன் அருணாச்சலமும் தனது சித்தியிடம் நியாயம் கேட்டுக் கொண்டிருந்தான்.

“இது உங்களுக்கே நியாயமா இருக்கா சித்தி? பரசு மாமா இருந்தவரை நமக்கு எவ்வளவு செய்திருப்பார். அந்த நன்றி கொஞ்சமாவது நமக்கு வேணாமா? நீங்க பண்றது தப்புன்னு உங்களுக்குப் புரியுதா இல்லையா?”

“இதுல என்ன தப்பு கண்டுட்ட நீ. இந்த குடும்பத்துக்கு நான் நல்லதுதான் பண்றேன்.” என்றவாறு நாதனின் பிரச்சனைகளைக் கூறினாள் வசந்தா. “எம்மவனுக்கு கட்டி வச்சா இந்த குடும்பத்துக்கு ஆதரவா இருப்பான்ல.”

“ஐயோ சித்தி! ராஜசேகருக்கு முறைப்படி இன்னும் விவாகரத்தே ஆகல. இப்ப நீங்க பண்ணப்போற கல்யாணம் சட்டப்படி செல்லாது. அதுவாது தெரியுமா உங்களுக்கு? அப்படி அவசர அவசரமா இந்த கல்யாணத்தை நடத்த தேவையென்ன? அத்தைக்கு குணமானதும் இவங்களை நாம ஊருக்கு கூட்டிட்டுப் போயிடலாம். நம்மைமீறி எவன் வருவான்னு பார்க்கலாம்.”

“அதெல்லாம் முடியாது. எனக்கு பரசுவும் வாக்கு குடுத்தான். பாக்கியலஷ்மியும் பொண்ணைத் தரேன்னு வாக்கு குடுத்திருக்கா. இந்தக் கல்யாணம் நடந்தே தீரும். விருப்பம் இருக்கறவங்க இங்க இருங்க இல்லாதவங்க ஊரைப்பார்த்துப் போய்ச்சேருங்க.” வசந்தா எகிற,

“பரசு எங்க வாக்கு குடுத்தான்? அன்னைக்கே உன்கிட்ட பொண்ணு தரமாட்டேன்னு தெளிவா சொன்னான்ல.” பெரிய அத்தை உமாவும் எரிச்சலோடு பேசினாள்.

அவரையே அதிர்ந்து பார்த்திருந்தாள் நித்திலா.
வசந்தா கூறிய அனைத்துமே முழுப்பொய் எனத் தெரியவந்ததில், அடுத்து என்ன செய்வது என்பதுகூடத் தெரியாமல் அதிர்ச்சியோடு அமர்ந்திருந்தனர் இருவரும்.

அதோடு ராஜசேகரின் குணலட்சணங்களைப் பற்றியும் அருணாச்சலம் புட்டு புட்டு வைக்க, அவனுக்கும் ராஜசேகருக்கும் பெரும் சண்டையானது. இருவரின் பெற்றோரும் அவர்களைப் பிரித்துவிடப் போராட,

இது எதிலுமே பட்டுக்கொள்ளாமல் ஒதுங்கி நின்ற இரண்டாவது அத்தையையும் அவர்களது குடும்பத்தையும் விசித்திரமாய் பார்த்துக் கொண்டனர் நித்திலாவும் நிகிலேஷூம்.

உறவினர்களின் உண்மையான முகங்கள் பெரும் அதிர்ச்சியையும் அருவெறுப்பையுமேக் கொடுத்தது.

அதைவிட இவ்வளவையும் பாக்கியலஷ்மி தாங்குவாரா என்பதே பெரும் கவலையாய் போனது நித்திலாவுக்கு.
வாக்குவாதங்களும் கூச்சலும் குழப்பமுமாய் இருக்க,

“எல்லாரும் கொஞ்சம் சும்மாயிருங்க.” பெரும் குரலெடுத்துக் கத்தினான் நிகிலேஷ். வீடு சற்று அமைதியானது. வசந்தாவைப் பார்த்தவன்,

“இந்தக் கல்யாணம் நடக்காது. எங்க அக்காவ உங்க பையனுக்குக் கட்டித்தர முடியாது. நீங்க ஊருக்குக் கிளம்புங்க.” என்க…

“சின்னப்பய நீ யார்றா இதைச் சொல்றதுக்கு? உங்க அம்மாவச் சொல்லச்சொல்லு. அப்படியே அவ வந்து சொன்னாலும் நான் ஒத்துக்க மாட்டேன். ஊரைக்கூட்டி நியாயம் கேப்பேன்.

இங்க போலீஸ் ஸ்டேஷன்ல இன்ஸ்பெக்டர்கிட்ட போய் பொண்ணு தரேன்னு பொய்சொல்லி வரவச்சு எங்களை ஏமாத்துறாங்கன்னு புகார் குடுப்பேன். அவன்தான உங்களுக்குத் தொல்லை குடுக்கறவன். அவன்கிட்டவே நியாயம் கேப்போம்.”
ஒருவித குரூரத்தோடு வசந்தா கூற, செய்வதறியாது திகைத்து நின்றனர் இருவரும்.

எரிச்சலோடு தன் சித்தியை முறைத்த அருணாச்சலம், முதலில் பாக்கியலஷ்மியிடம் நடப்பது அனைத்தையும் கூறி திருமணத்தை நிறுத்துவோம், மற்றதைப் பிறகு பார்க்கலாம் என்று நிகிலேஷிடம் கூற,

உமா அருணாச்சலம், நித்திலா, நிகிலேஷ் நால்வரும் மருத்துவமனைக்கு வந்தனர்.

அவர்கள் வந்தநேரம் மருந்தின் உதவியோடு பாக்கியலஷ்மி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அவரோடு இருந்த செவிலி மருத்துவர் வந்து பார்க்கச் சொன்னதாகக் கூறவும்,

அவரைப் பார்க்கச் சென்றனர் நித்திலாவும் நிகிலேஷூம்.
என்ன சொல்லப் போகிறாரோ என்ற படபடப்போடு உள்ளே நுழைந்தவர்களை அமரச் சொன்ன மருத்துவர்,

“இப்ப மருந்துகளோட உதவியால பேஷண்ட்டுக்கு பிளட் பிரஷர் ஓரளவுக்கு கட்டுக்குள்ள வந்திருக்கும்மா. ஆனா அவங்க மைண்ட் அமைதியாயில்ல. அதனாலதான் இரத்த அழுத்தம் நிலையில்லாம மாறி மாறி இருக்குது.

இதேமாதிரி மறுபடி மறுபடி வந்தா, மூளைக்குப் போற இரத்தக் குழாய்கள் அழுத்தம் தாங்காம வெடிச்சு உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கு.
மருந்துகளை வேளை தவறாம கொடுங்க.

முக்கியமா அவங்க மனசை அமைதியா வச்சிக்கனும். அது உங்க கையிலதான் இருக்கு. பீஸ்ஃபுல்லான சரவுண்டிங் கொடுங்க. உங்க அப்பாவோட இழப்பைப் பத்தி ரொம்ப பேசாதீங்க.

சந்தோஷமான நிகழ்வுகளை மட்டும் அவங்களுக்குத் தெரியப்படுத்துங்க. துக்க நிகழ்வுகள், அவங்களுக்கு கஷ்டத்தைத் தரக்கூடிய செய்திகளைத் தவிர்த்திடுங்க.
இன்னும் கொஞ்ச நேரத்துல டிஸ்சார்ஜ் பண்ணிடுவோம். நீங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலாம்.”

டாக்டர் பேசப் பேச ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர் நித்திலாவும் நிகிலேஷூம். திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று பாக்கியலஷ்மியிடம் எப்படிச் சொல்ல முடியும். வீட்டில் நடக்கும் சண்டைகள் அவரது மனதை பாதிக்காதா?

மருத்துவரின் அறையைவிட்டு வெளியே வந்த நித்திலா தலையைத் தாங்கிப் பிடித்தபடி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து விட, என்னவென்று வினவிய உமாவுக்கும் அருணாச்சலத்துக்கும் நிலைமையை விளக்கினான் நிகிலேஷ்.

“இப்ப என்ன பண்றது நித்திலா? பொறுமையா அத்தைக்கிட்ட எடுத்துச் சொல்லுவோம்மா?”

மறுப்பாகத் தலையை அசைத்தவள், “இப்ப கொஞ்ச நாளா அவங்களுக்கு மனசு கஷ்டம் ரொம்ப அதிகம் அத்தான். இப்ப இதையும் சொன்னோம்னா அவ்ளோதான்.

வசந்தா அத்தையோட பேச்செல்லாம் எங்கம்மாவால தாங்கமுடியாது. அவங்க அத்தைய ரொம்ப நம்புறாங்க. எங்க பிரச்சனைய சரிபண்ண அப்பாவே அத்தை ரூபத்துல வந்ததா என்கிட்டவே சொல்லியிருக்காங்க…

இப்ப அதெல்லாம் பொய், இந்தக் கல்யாணம் நடக்காதுன்னு சொன்னா, அந்த அதிர்ச்சியில எங்கம்மாவும் எங்களுக்கு இல்லாமப் போயிடுவாங்க. அதை என்னால நிச்சயமாத் தாங்க முடியாது.
நடக்கறது நடக்கட்டும் அம்மாகிட்ட எதையுமே சொல்ல வேணாம்.”

“அக்கா, உனக்கென்ன பைத்தியமா? இது இதோட முடிஞ்சு போற விஷயமா? நாளைக்கு உன் வாழ்க்கை நாசமாப் போனா அம்மா ரொம்ப சந்தோஷப் படுவாங்களா? தன்னாலதான் இப்படி ஆகிடுச்சின்னு உயிரை விட்டுட மாட்டாங்களா?
பக்குவமா அம்மாகிட்ட சொல்லி கல்யாணத்தை நிறுத்திடலாம்க்கா.”

“எப்படி நிக்கி, வசந்தா அத்தை பேசினத கேட்டல்ல. ஊரைக்கூட்டி சண்டை போடுவேன்னு சொல்றாங்க. அதை அம்மா தாங்குவாங்களா? அந்த நாதன்கிட்ட புகார் குடுப்பேன்னு சொல்றாங்க. அதுக்கப்புறம் அவன் நம்மள விட்டு வைப்பானா?”

“அம்மாடி, அதெல்லாம் யார் வந்தாலும் பார்த்துக்கலாம்மா.”

“நிதர்சனத்தைப் பேசனும் அத்தான். உங்களால எத்தனை நாள் எங்ககூட இருக்க முடியும். எல்லாத்தையும் அப்படியே விட்டுட்டு எங்களால ஊரைவிட்டு ஓட முடியுமா?” பொங்கிய அழுகையைத் துடைத்துக் கொண்டவள்,

“மத்ததெல்லாம் விடுங்க, அம்மாக்கிட்ட எதையாவது சொல்லி, அவங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா அந்த குற்றவுணர்ச்சிய என்னால தாங்க முடியாது. அதனால எதுவுமே அவங்ககிட்ட சொல்லாதீங்க.

தானா வசந்தா அத்தையோட குணம் அம்மாவுக்குத் தெரிய வரனும். அவங்களே கல்யாணத்தை நிறுத்தனும். அதுக்கு எதாவது செய்யனும்.”

“…”

“அவங்க மருமகளுக்கு விவாகரத்து ஆகலன்னு சொன்னீங்கல்ல, இப்படி வேற கல்யாணம் நடத்த முயற்சிக்கிறாங்கன்னு சொல்லி அவங்களை வரவைக்க முடியுமா அத்தான்?

அப்படி அவங்க வந்தா இவங்க வண்டவாளம்லாம் அம்மாவுக்குத் தெரியும்ல. அம்மா அதிர்ச்சியானாலும் நாம எல்லாரும் அவங்களை சமாதானப்படுத்தலாம்.” நிகிலேஷ் கூற அது ஓரளவுக்கு சரிவரும் என்று தோன்றியது அனைவருக்கும்.

“அதுவும் சரிதான். ராஜசேகரோட மச்சினனுங்க ரெண்டுபேரும் ஏற்கனவே நடந்த பிரச்சனையிலயே உங்க அத்தை மேல வெறியோட இருந்தானுங்க. நாங்கலாம் பஞ்சாயத்துல பேசிதான் அவனுங்களை அடக்கி வச்சிருக்கோம். பொண்ணு வாழ்க்கைக்காக சரின்னு தழைஞ்சு போனானுங்க.
ஆனா இப்ப, அவனுங்கதான் உங்க அத்தைக்கு சரிவருவானுங்க.

பட்டுக்கோட்டைக் காரனுங்க வந்து வாயிலயே மிதிச்சாதான் என் தங்கச்சி அடங்குவா. அருணு நீ அவனுங்க நம்பர் வச்சிருக்கியா? இருந்தா ஃபோனைப் போட்டு விஷயத்தைச் சொல்லி அந்தப் பொண்ணையும் கூட்டிட்டு வரச்சொல்லு.” உமாவும் கூற,

“அவங்க நம்பர்லாம் என்கிட்ட இல்லம்மா. யார் மூலமாவது நம்பர் வாங்கி அவங்களைப் பிடிக்கிறேன்.”

என்றபடி அருணாச்சலம் ராஜசேகரின் மனைவி குடும்பத்தினரின் அலைபேசி எண்ணைப் பெறுவதற்கான முயற்சிகளில் இறங்க, பாக்கியலஷ்மியை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

 

—-ஆழி சூழும்… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!