ஆழி சூழ் நித்திலமே 17

1596006291531

ஆழி சூழ் நித்திலமே 17

17

பாக்கியலஷ்மியை மருத்துவமனையில் இருந்து அழைத்து வருவதற்கு முன்பாகவே வீட்டுக்கு வந்த நித்திலா, தன் தாயின் உடல்நிலையைப் பற்றி அனைவரிடமும் தெரிவித்து, அவர்களிடம் எதையும் பேச வேண்டாம் இந்தத் திருமணம் கட்டாயம் நடக்கும் என்று கூற, வசந்தாவும் ராஜசேகரும் சற்று அமைதியாகினர்.

வீட்டுக்கு வந்ததும் உறவினர்களோடு இன்முகமாய் பேசி வரவேற்ற பாக்கியலஷ்மியைக் கண்டதும், ஏதோ அவள்மீது பாசமிருப்பவள் போலப் பேசி உருகிய வசந்தாவைக் கண்டதும் வெறுப்பாய் இருந்தது அனைவருக்கும்.

பாக்கியலஷ்மியின் மனநிலைக்காய் அமைதி காத்தனர். வசந்தாவும் பாக்கியலஷ்மியை யாரும் நெருங்கி எதுவும் பேசிடா வண்ணம் பார்த்துக் கொண்டாள்.

அதன்பிறகு ஆளுக்கொரு வேலையாய் பார்க்க அமைதியான முறையில் பரசுராமனுக்குப் படையல் போட்டு சாமி கும்பிட்டனர்.

கணவரின் நினைவில் சற்று மனச்சோர்வு அடைந்த பாக்கியலஷ்மியைப் பேசி திசைதிருப்பி, உணவு உண்ண வைத்து மாத்திரையும் கொடுத்து உறங்க வைத்தாள் நித்திலா.

யார்யாரையோ தொடர்பு கொண்டு ஒருவழியாய் மதியத்துக்கு மேல் ராஜசேகரின் மாமனார் வீட்டுத் தொலைபேசி எண் கிடைக்க, அதற்குத் தொடர்பு கொண்டபோது யாரும் எடுக்காததில் நொந்து போனார்கள் அருணாச்சலமும் நிகிலேஷூம்.

பிறகு மீண்டும் முயற்சி செய்து ராஜசேகரின் மச்சினனின் அலைபேசி எண்ணைப் பெற்ற அருணாச்சலம், அவர்களுக்கு அழைத்து வசந்தாவின் அராஜகங்களைக் கூற,
கொந்தளித்துப் போனவர்கள், தாங்கள் கன்னியாகுமரி அருகில் உள்ள குலதெய்வம் கோவிலுக்குக் குடும்பத்தோடு வந்திருப்பதாகவும், உடனடியாக வண்டி பிடித்துக் கிளம்பி வருகிறோம் என்றுகூறி அலைபேசி இணைப்பைத் துண்டித்தனர்.

திருமணத்திற்காக அதிகாலை முகூர்த்தத்தை முடிவு செய்து, ஏற்கனவே ஏற்பாடுகள் செய்திருக்க, அதற்குள் ராஜசேகரின் மாமனார் குடும்பத்தினர் வந்துவிட வேண்டுமே என்ற வேண்டுதலே அனைவருக்கும்.

அதிகாலை முகூர்த்தம் என்பதால், வாங்க வேண்டிய மாலை பூ போன்றவைகளை முன்தினமே வாங்கி வந்துவிடுமாறு நிகிலேஷிடம் கூறிய பாக்கியலஷ்மி, மறுநாள் உணவுக்கும் ஹோட்டலில் ஏற்பாடு செய்யும்படி கூறினார்.

நடக்காத திருமணத்துக்கு இதெல்லாம் தேவையா எனக் கடுப்பாக நினைத்தாலும், பாக்கியலஷ்மி சொல்வதால் தட்டாமல் செய்வதாய் சொல்லியவன் வெளியேறினான்.

மறுநாள் என்ன நடக்குமோ ஏதாகுமோ என்ற கவலை வெகுவாய் வாட்டியது நிகிலேஷை. வண்டியை எடுத்ததும் வழக்கமாய் உடன்வரும் நண்பன் சவரியை அழைத்துக்கொண்டவன், பாக்கியலஷ்மி கூறிய வேலைகள் அனைத்தையும் செய்து முடித்தான்.

எப்போதுமில்லாத அளவு முகஇறுக்கத்தோடு இருந்த நிகிலேஷைப் பார்த்த சவரி,

“இன்னாடா ஆச்சி? இன்னாத்துக்கு இப்டிக்கிற? நாளைக்கு அக்காவுக்கு கண்ணாலம். சந்தோஷமா இல்லாம மூஞ்சியத் தூக்கி வச்சிக்கினுக்கிற. அப்பா நெனவாக்குதா?”

“கல்யாணமா?” வெறுப்போடு பல்லைக் கடித்தவன்,

“எங்கப்பா இருந்திருந்தா இந்தக் கூத்தெல்லாம் நடக்குமா? என்னாகுமோ ஏதாகுமோன்னு படபடப்பாவே இருக்கு சவரி.”

நிகிலேஷின் பேச்சுகள் ஒன்றுமே புரியவில்லை சவரிக்கு.

“இன்னடா சொல்ற? இன்னாதான் ஆச்சு?”
அக்கறையோடு விசாரித்த நண்பனிடம் நடந்தவை அனைத்தையும் கூற, வெகுவாய் அதிர்ந்து போனான் சவரி.

“ஏன் நிக்கி நாங்கலாம் உன் கூடவேக்கீறமே, எங்களாண்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்ல. மாப்பிள்ளைன்னு இட்டாந்துக்கற டோமரத் தூக்கிப் போட்டு மெரிச்சிருப்பாங்க எங்காளுங்க.”

“ம்ப்ச், எதுவுமே செய்ய முடியல சவரி. அம்மாவுக்காக அமைதியாயிருக்க வேண்டியிருக்கு. கையக் கட்டிப் போட்ட மாதிரி இருக்கோம்.

நாளைக்கு காலையில முகூர்த்த நேரத்துக்குள்ள அவங்க வந்துட்டாங்கன்னா போதும். கல்யாணம் தானா நின்னுடும். இல்லைன்னா என்ன நடக்கும்னே தெரியல.”
வெகுவாய் சவரியிடம் புலம்பியிருந்தவன், வீடு வந்து சேர்ந்திருந்தான்.

பாக்கியலஷ்மி மற்றும் வசந்தா குடும்பத்தினரைத் தவிர மற்றவர்களுக்கு ஒருவித பதட்டத்தோடே அன்றைய இரவு கழிந்தது.

மறுநாள் முகூர்த்த நேரம் நெருங்கும்வரையில் வசந்தாவின் மருமகள் குடும்பத்தினர் வராததில், என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தபடி அனைவரும் கிளம்பி கோவிலுக்கு வந்து சேர்ந்தனர்.

அருணாச்சலமும் நிகிலேஷூம் மாற்றி மாற்றி அவர்களுக்கு அழைத்துக் கொண்டிருக்க, அருகில் வந்துவிட்டோம் சற்று நேரம் சமாளியுங்கள் வந்துவிடுவோம் என்ற பதிலே தொடர்ந்து கிடைத்தது.

நிகிலேஷ்க்கு நம்பிக்கையே அற்றுவிட்டது. கடைசிமுறையாக நித்திலாவிடமும் கெஞ்சிப் பார்த்துவிட்டான். தாயிடம் எதையும் தெரிவிக்க ஒத்துக்கொள்ளாதவள் ஒருவித இறுகிய நிலையிலேயே இருந்தாள்.

அது சற்று சிறிய சிவன் கோவில்தான். ஐயர் திருமணத்திற்காக முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்.

அம்மன் சந்நிதானத்தில் மகளின் நல்வாழ்வுக்காய் பிரார்த்தித்தபடி பாக்கியலஷ்மி அமர்ந்திருக்க, அவரை நெருங்கி யாரும் எதுவும் பேசிடா வண்ணம் கழுகாய் பார்வையைப் பதித்தபடி வசந்தா நின்றிருந்தாள்.

உடனிருந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சவரிக்கு மனதே ஆறவில்லை. கண்முன்னே நடக்கப்போகும் அநியாயத்தை தடுத்து நிறுத்த முடியாதோ என்று தவித்தவன், நடப்பது எதையுமே அறியாமல் நித்திலா குடும்பத்தின் பாதுகாப்புக்காய் மட்டும் கோவிலின் வெளியே நின்றிருந்த பாரி மற்றும் தேவாவிடம் வந்து தாங்கமுடியாது அனைத்தையும் புலம்ப, வெகுவாய் அதிர்ந்து போனார்கள் இருவரும்.

“இன்னாடா சொல்ற? இப்பவந்து சொல்லினுக்கற? முன்னாடியே சொல்றதுக்கென்னாடா?” தேவா எகிற, பாரி அதிர்ச்சியில் ஸ்தம்பித்துப் போயிருந்தான்.

“எனக்கே நேத்திக்கு ராவுலதான் தெரியும் தேவாண்ணா. அந்தக்கா அம்மாம் புடிவாதமாக்கீது. கண்ணாலத்தை எப்புடி நிறுத்தறதுன்னு புரியாம குழம்பிக்கினுக்கிறாங்க இவுங்க எல்லாரும்.”

மனம் படபடத்துப் போனது பாரிக்கு. நித்திலாவின் திருமணத்தை நேரில் பார்க்கும் அளவுக்குத் துணிவு இல்லாவிட்டாலும், அவளின் நல்வாழ்வுக்காய் பிரார்த்தனைகளோடு கோவிலின் வெளியே நின்றிருந்தவனுக்கு இது பெரும் அதிர்ச்சி.

சொந்தத்துக்குள் மாப்பிள்ளை என்றதும் மாப்பிள்ளையைப் பற்றி பெரிதாய் விசாரிக்கக்கூட இல்லை அவர்கள். இரண்டாம்தாரம் அதிலும் கேடுகெட்டவனுக்குப் பெண்ணைத் தரப்போகிறார்கள் என்றதும் சொல்லமுடியாத கோபம் பொங்கியது.

இப்போதே உள்ளே நுழைந்து அனைவரையும் பந்தாடிவிட்டு நித்திலாவை இழுத்து வரும் வேகம். பாக்கியலஷ்மியின் உடல்நிலைக்காய் சற்று நிதானித்தவன், உடனடியாக வெற்றிக்கு ஃபோன் போட்டு விபரத்தைச் சொல்ல, வெகுவாக அதிர்ந்து போனான் வெற்றி.

“என்னடா அந்தப் பொண்ணு பைத்தியக்காரத்தனம் பண்ணிக்கினு இருக்கு? கல்யாணத்தை நிறுத்திக்கினா அம்மாவுக்கு எதனா ஆயிடும்னு சொல்லுதே, இந்தக் கல்யாணம் மட்டும் நடந்துச்சின்னா பொண்ணோட வாழ்க்கை தன்னால நாஸ்தியாயிடுச்சின்னு அந்தம்மா உசுர வுட்றாது?”

“எனக்கு இன்னாப் பண்றதுன்னே ஒன்னியும் புரியல வெற்றி. நா மட்டும் இப்ப உள்ள போனேன்னு வெய்யி அல்லாரையும் தூக்கிப் போட்டு மெரிச்சிக்கினு அந்தப் பொண்ண இஸ்த்துக்கினு வந்துருவேன். அம்மாம் வெறியிலக்குறேன். அப்பாலிக்கா அல்லாமே ஏடாகூடமாப் பூடும்.”

“ம்ப்ச், இன்னடா இது கடைசியில இப்படியாகிடுச்சி…? இன்னாப் பண்றதுன்னு யோசிக்கக்கூட முடியல என்னால. அவசரப்படாத கொஞ்சம் கம்முனு இரு பாரி. நான் இன்னும் அஞ்சு நிமிஷத்துல அங்க வந்துடுவேன். அந்தப் பொண்ணுகிட்ட பேசிப்பார்ப்போம் பதட்டப்படாம இருடா.”

அலைபேசியை வைத்தவன் அடுத்த ஐந்து நிமிடத்துக்குள் கோவிலில் இருந்தான்.

நிகிலேஷை அழைத்துப் பேசி நித்திலாவை வெளியே அழைத்து வரச்செய்தனர்.

வெற்றியை ஓரளவுக்கு நித்திலாவுக்குத் தெரியுமென்பதால் நிகிலேஷ் வந்து கூறவும் என்னிடம் என்ன பேசப் போகிறார்கள் என்ற எண்ணத்தோடு வந்தாள் நித்திலா. பட்டுடுத்தி எளிமையான அலங்காரத்தில் இருந்தவளின் முகம் வெகுவாய் இறுகிக் கிடந்தது.

வெற்றியையும் பாரியையும் பார்த்தவள், வெற்றிடம்,

“சொல்லுங்கண்ணா, என்கிட்ட என்ன பேசனும்” என்க.

“என்னம்மா இது அர்த்தமில்லாத பிடிவாதம் புடிக்கிற? பக்குவமா உங்கம்மாகிட்ட பேசலாம்மா. நாங்க பேசறோம். உங்க அத்தை எந்தப் பிரச்சினையும் செய்யாம நாங்க பார்த்துக்கறோம்.”

ஆதங்கமாய் வெற்றி பேச, மெல்லிய அதேநேரம் உறுதியான குரலில்,

“அது சரிவராதுண்ணா. பேசறதா இருந்தா நாங்களே பேசியிருக்க மாட்டோமா? அவங்க மனநிலையை அமைதியா வச்சிக்கறது மட்டும்தான் எனக்கு இப்ப முக்கியமாப்படுது. மத்த எதையும் நான் யோசிக்கல. இதனால எந்தக் கஷ்டம் வந்தாலும் நான் தாங்கிப்பேன்.”

“நீ இன்னைக்கு உங்கம்மா கஷ்டப்படக்கூடாதுன்னு நெனைக்கிற. ஆனா, நாளைக்கு உன் வாழ்க்கை இப்படி வீணாப்போச்சேன்னு தெரிஞ்சா நிம்மதியா இருப்பாங்களா அவங்க?”

கண்கள் கலங்க நின்றிருந்தவளிடம் பதிலே இல்லை அதற்கு. மௌனமாய் கண்களைத் துடைத்துக் கொண்டவள்,

“ஒரு பொண்ணு ஒன்னு தன்னோட அப்பா பாதுகாப்புல இருக்கனும் இல்லையா புருஷன் பாதுகாப்புல இருக்கனும்னு திடமா நம்புறாங்க எங்கம்மா. என் கழுத்துல தாலி ஏறிட்டா என்னை எல்லா பிரச்சனையில இருந்தும் காப்பாத்திடலாம்னு உறுதியா நம்புறாங்க.

அந்த நம்பிக்கைதான் எதைப்பத்தியுமே யோசிக்காம இப்படி ஒரு கல்யாணத்தை ஏற்பாடு பண்ற அளவுக்கு அவங்க கண்ணை மறைச்சிருக்கு.

அந்த நம்பிக்கைதான் இப்பவரை அவங்க உயிரை பிடிச்சு வச்சிருக்கு. இப்ப எனக்கு எங்கம்மா மனநிலைதான் முக்கியம். வேற எதைப்பத்தியுமே நான் யோசிக்கல.”

“தெரிஞ்சே கண்ணுக்கு முன்னால உங்க வாழ்க்கை வீணாப் போவறதுக்கு எப்புடிங்க என்னியால வுடமுடியும்?” கலக்கமாய் கேட்ட பாரியை முறைத்துப் பார்த்தாள்.

“நீ பேசாத! இவ்வளவுக்கும் நீதான் காரணம். உன்னோட அவசர புத்தியால நாங்க எங்கப்பாவ இழந்து படக்கூடாத கஷ்டமெல்லாம் பட்டு இப்ப இந்த நிலைமைக்கு வந்து நிக்கிறோம்.

எங்கப்பா இருந்திருந்தா இப்படிலாம் நடக்குமா? என் வாழ்க்கை இப்படியாக விட்ருப்பாரா? என் வாழ்க்கை வீணாப் போகறதுக்கு மட்டுமில்ல என்னோட சந்தோஷம் நிம்மதி எல்லாமே போனதுக்கும் நீதான் நீ மட்டும்தான் காரணம்.

உன்னை என்னால எந்த ஜென்மத்துக்கும் மன்னிக்கவே முடியாது.” கண்ணீர் பெருகி வழிய வெடித்தவள்,

வெற்றியிடம் திரும்பி,
“ப்ளீஸ்ண்ணா எந்தப் பிரச்சினையும் பண்ண வேண்டாம். எங்கம்மாவுக்கு எதாவது ஆச்சுன்னா என்னாலத் தாங்க முடியாது. நடக்கறது நடக்கட்டும்.”

கசங்கிய முகத்தோடு பேசியவள், “முகூர்த்தத்துக்கு நாழியாறது பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ” என்ற ஐயரின் குரலில் கோவிலுக்குள் சென்றாள்.

நித்திலாவின் வார்த்தைகளில் சுக்கல் சுக்கலாய் நொறுங்கி நின்றான் பாரி. எந்தப் பெண்ணின் நல்வாழ்வுக்காய் தன் காதலைக்கூட விட்டுத்தரத் தயாராய் இருந்தானோ, இன்று அவளே அவளின் வாழ்க்கை அழிய தான்தான் காரணம் என்கிறாள்.

தன்னைமீறி கண்கள் கலங்கியது. இயலாமையோடு வெற்றியைப் பார்த்தவனின் விழிகளில் இப்பொழுது நான் என்ன செய்வது என்ற கேள்வி தொக்கி நின்றது .

நண்பனின் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை வெற்றிக்கு. பாரியின் நிலையில் தன்னை ஒருநிமிடம் வைத்துப் பார்த்தவன் தலையை உலுக்கிக் கொண்டான்.

‘கயலுக்கு இப்படி ஒருநிலை என்றால் தன்னால் தாங்க முடியுமா? இப்படி நண்பனின் வார்த்தைக்காய் கட்டுப்பட்டுத் தான் நிற்போமா?’

நினைத்தவனின் மனதுக்குள் பாரியின் நட்பை நினைத்துப் பெருமிதமாய் இருந்த அதேநேரத்தில், பாரியையும் நித்திலாவையும் இணைத்து வைக்கும் உறுதியும் தோன்றியது.

“பாரி, எத்தனையோ தடவ இந்தப் பொண்ணு விஷயத்துல என்னை மீறிப் போகமாட்டேன், எம்பேச்சை மீறிப் போகமாட்டேன்னு நீ சொல்லிருக்க. நான் சொல்ல வச்சிருக்கேன்.

உனக்கும்சரி அந்தப் பொண்ணுக்கும்சரி நான் இதுவரை நல்லதுதான்டா நினைச்சிருக்கேன். அதனாலதான் அந்தப் பொண்ணுகிட்டயிருந்து இதுவரை உன்னை விலகியிருக்கச் சொல்லியிருக்கேன்.”

பேசியபடியே கோவில் கொடிமரத்தில் கட்டப்பட்டிருந்த திருமாங்கல்யம் ஒன்றினை எடுத்தவன் பாரியிடம் நீட்டியபடி,

“ஆனா, இப்ப நானே சொல்றேன். போய் அந்தப் பொண்ணு கழுத்துல இதைக் கட்டி கூட்டிட்டு வா.

இன்னைக்கு விட்டுட்டன்னா என்னைக்குமே அந்தப் பொண்ணோட வாழ்க்கைய உன்னால காப்பாத்த முடியாது.

இதனால எந்தப் பிரச்சனை வந்தாலும் நாம சமாளிச்சிக்கலாம். போடா போய் அந்தப் பொண்ணு கழுத்துல தாலியக் கட்டு.” 

அவன் கரங்களில்      வெற்றி திருமாங்கல்யத்தை வைக்க, அதைப் பார்த்்த  பாரி ஒரு முடிவோடு கோவிலுக்குள் நுழைந்தான்.

பாரி திருமணம் நடக்கும் சந்நிதிக்குள் செல்லும் நேரம் சரியாக அம்மனுக்கு மேள துந்துபிகள் முழங்க தீபஆராதனை காட்டப்பட்டுக் கொண்டிருந்தது.

அதிகாலை வேளையில் கோவிலில் கூட்டமில்லாமல் இருக்க, நித்திலாவின் குடும்பத்தினர் மட்டுமே அங்கிருந்தனர்.

அதிலும் நிகிலேஷும் அருணாச்சலமும் சற்று ஒதுங்கி நின்று இன்னமும் அலைபேசியில் வசந்தாவின் மருமகள் குடும்பத்துக்கு முயன்று கொண்டிருக்க, உமா கவலையோடு அவர்கள் அருகே நின்றிருந்தாள்.

மற்ற அனைவரும் பார்வையை சந்நிதானத்தினுள் பதித்திருக்க, நித்திலாவின் அருகே போய் நின்றவன் அவளைத் தன்புறம் திருப்பி,

“தெரிஞ்சோ தெரியாமலோ இதுவரைக்கும் உங்க கஷ்டத்துக்குலாம் நான்தாங்க காரணம். ஆனா, இனிமேட்டுக்கு என் உசுரு இருக்கறவரை எந்தக் கஷ்டமும் இல்லாம உங்களைப் பார்த்துக்குவேன்.” அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் பேசியவன் திருமாங்கல்யத்தைப் பூட்டியிருந்தான்.

கடவுளைச் சேவிக்கக் கூப்பிய கரங்கள் கூப்பியபடி இருக்க, பாரியின் செயலைத் துளிகூட நம்ப முடியாதவளாய் நித்திலா அதிர்ந்து நிற்க, தீப ஆராதனை தட்டோடு வெளியே வந்த ஐயரும் அதிர்ந்து நின்றார்.

அவரது கையில் இருந்த தட்டிலிருந்து குங்குமத்தை எடுத்தவன், அதிர்ந்து இமைக்க மறந்த அவளது விழிகளோடு தன் விழிகளைக் கலந்தவாறு அவளது நெற்றியில் அழுத்தமாய் பொட்டு வைத்தான்.

“இந்த நிமிஷத்துல இருந்து உங்கள பத்ரமா பார்த்துக்கறது எம்பொறுப்புங்க. உங்க அப்பாவாட்டம் இல்லேன்னாலும் உங்களை சந்தோஷமா நிம்மதியா வச்சிக்க வேண்டியதும் எம்பொறுப்பு.”

மேளச்சத்தம் நின்றிருக்க, அவன் குரல் கோவில் சுவற்றில் பட்டு எதிரொலித்தது.

 

ஜீவன் ரெண்டும் சேர்ந்தது தேவன் வகுத்த சாசனம்…
காதல் எந்த நாளிலும் கவிதை போல சாஸ்வதம்…
என்று வந்த நேசமோ பூர்வ ஜென்ம யோகம்…
இன்னும் ஏழு ஜென்மமும் வளரும் இந்த யாகம் …
—-ஆழி சூழும்.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!