ஆழி சூழ் நித்திலமே 18(ஆ)

1596006291531

 

 

மகேந்திரன் பேசியதில் உமாவுக்கும் அருணாச்சலத்துக்கும் சற்று நிம்மதியாய் இருந்தது மனது. தங்கள் வீட்டுப் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டியவன் யாரோ எவனோ என்ற கலக்கம் உள்ளூர இருந்தது.

ஒரு நல்லவன் கைகளில்தான் அவள் வாழ்க்கை சென்றுள்ளது என்பதில் நிம்மதியடைந்தனர்.

“என்ன லஷ்மி யோசிக்கிற. பையன் மோசமானவனா இருந்தா யோசிக்கலாம். நல்ல பையனாதான் தெரியறான். குலம் கோத்திரமெல்லாம் பாக்கற நிலையில நாம இப்ப இல்ல.

மறுதாலி கட்றதும் நம்ம வழக்கமேயில்ல. எந்தங்கச்சி வேற ஊருக்குள்ள போய் என்னென்ன புரளியெல்லாம் கிளப்பி விடுவாளோ? நம்ம பொண்ணு வாழ்க்கையப் பார்க்கனுமில்ல நாம?”

உமா சற்று பிற்போக்கு எண்ணமுடைய பெண்மணி. தாலி கட்டியவனுடன் வாழ்வதுதான் சரியென்று பேச, அருணாச்சலம் இடைமறித்தான்.

“அம்மா, வசந்தா சித்தியெல்லாம் எதாவது பேசினா நானே இனி சும்மாயிருக்க மாட்டேன். அத்தைய கண்டதும் பேசி நீங்க குழப்பாதீங்க.

அத்தை, உங்க மனசுக்கு சரின்னு படறதை செய்ங்க. என்னைப் பொருத்தவரை அந்தப் பையன் நல்லவனாதான் தெரியறான். அவன் மேல முழுசா நம்பிக்கை இருந்தா மட்டும் அவனோட நித்திலாவ அனுப்புங்க.

தாலியக் கட்டிட்டானேன்னு விருப்பமில்லாம அவனோட அனுப்பத் தேவையில்லை. அவங்க சொல்ற மாதிரி எழுதி வாங்கிக்கிட்டு நம்ப ஊரோட போயிடலாம்.

நித்திம்மா நீ என்னடா சொல்ற? உன்னோட முடிவு என்ன?”

அருணாச்சலம் கேட்கவும் பதில் சொல்லத் தெரியாமல் குழம்பிய பார்வையை அவன்மீது செலுத்தினாள் நித்திலா.

தனக்கு என்ன நடந்தது? தற்போது என்ன நடக்கிறது? எதையும் உணரும் மனநிலை இல்லை அவளுக்கு.
எது சரி? எது தவறு? எதையும் யோசிக்கவும் முடியவில்லை.

எதிலிருந்தோ தப்பித்த ஆசுவாசம் இருக்கும் அதே உள்ளத்தில், சொல்ல முடியாத அளவுக்கு உறுத்தலும் இருந்தது.

பெருவெள்ளத்தில் சிக்கிய துரும்புபோல இலக்கில்லாமல் உள்ளம் பரிதவித்துக் கொண்டிருந்தது. எதையும் முடிவெடுக்கும் நிலையில் தான் இல்லை என்பதை நன்றாய் உணர்ந்து கொண்டவள் கம்மிய குரலில்,

“எனக்கு இதுவரைக்கும் எது நல்லது எது கெட்டதுன்னு எங்கம்மாதான் முடிவு பண்ணியிருக்காங்க. இப்பவும் அவங்க என்ன சொல்றாங்களோ, அதுக்கு நான் கட்டுப்படுவேன் அத்தான்.”

 

நித்திலாவின் பதிலில் மேலும் பாக்கியலஷ்மி பரிதவித்துப் போனார்.

‘இப்பேர்ப்பட்ட பொண்ணுக்கு எப்படிப்பட்ட கெடுதலை செய்யவிருந்தேன். என் கணவர்தான் தெய்வம் போல உடனிருந்து என் மகளைக் காப்பாற்றினார்’ ஆசுவாசப்பட்டுக் கொண்டது மனது.

அருணாச்சலம் கூறியது போல ஊருக்குச் செல்வதைப் பற்றி நினைத்தாலே மனம் கசந்து போனது. உறவினர்களின் சுயரூபம் புரிந்து போனதில் இனி சொந்தபந்தங்களே தேவையில்லை என்ற முடிவுக்கும் வந்திருந்தார்.

பாரியை கடந்த சில நாட்களாகதான் அவருக்குத் தெரியும். கணவரை இழந்ததற்கு அவனுடைய முன்கோபமும் அவசரபுத்தியும் ஒரு காரணம் என்பதில் மனம்நிறைய ஆதங்கமிருந்தாலும், நாதனிடமிருந்து தங்களைக் காக்க அவன் பாடுபட்டதும் நினைவுக்கு வந்தது.

அதுமட்டுமில்லாமல் தெய்வ சந்நிதானத்தில் நிகழ்ந்த திருமணத்தை முறிக்கும் எண்ணமெல்லாம் சுத்தமாயில்லை அவருக்கு.

தற்போது மகேந்திரன் பாரியைப்பற்றி கூறிய விபரங்களும் மனதுக்கு ஆறுதலைத் தர, உறுதியான முடிவினை எடுத்தார்.

“நித்திம்மா அம்மா உனக்கு எப்பேர்ப்பட்ட கஷ்டத்தைக் குடுக்கயிருந்தேன். அம்மாமேல வருத்தமாடா?” தழுதழுக்க வினவியவரை அணைத்துக் கொண்டவள்,

“அப்படில்லாம் இல்லம்மா, எனக்கு எப்பவுமே நீங்க நல்லதைதான் நினைப்பீங்க. அந்த நம்பிக்கை எனக்கிருக்கும்மா. வசந்தா அத்தை உங்களை ஏமாத்தினதுக்கு நீங்க என்னம்மா பண்ணுவீங்க?”

கண்ணீரோடு நித்திலாவைக் கட்டிக்கொண்டவர், “உன்னோட மனசுக்கு உனக்கு ஒரு குறையும் வராதுடா. கடவுள்மேல பாரத்தைப் போட்டு நடந்ததை ஏத்துப்போம். இந்த கல்யாணம் நடந்ததுல எங்களுக்கு சம்மதம்னு அவங்ககிட்ட சொல்லிடவாடா?”
கண்கள் கலங்கி வழிய சம்மதமென்று தலையை ஆட்டிக் கொண்டாள்.

நிகிலேஷிடமும் பாக்கியலஷ்மி கேட்க, அவனும், “எனக்குத் தெரிஞ்சவரை அவர் ரொம்பவே நல்லவர்ம்மா. நம்ப அப்பாகிட்ட சண்டைக்குப் போனதைத் தவிர மீதி எல்லா நேரமும் அவர் நமக்கு நல்லதுதான் செஞ்சிருக்கார். எனக்கு சம்மதம்மா.”

ஒருமனதாக அனைவருக்குமே சம்மதம் என்றதும் மகேந்திரனை அழைத்துக் கூறினர்.

நித்திலாவை அருகே அழைத்த மகேந்திரன்,

“அம்மாடி, நீ நல்லா படிச்ச புள்ள… உங்களுக்குள்ள படிப்பு, பழக்கவழக்கம், வளர்ந்த சூழ்நிலை, இனம், இவ்வளவு ஏன்? பேசற பாஷைல கூட பொருத்தமில்ல. பாரியோட வாழ வந்தா நீ நிறைய அனுசரிச்சுப் போகனும். உனக்கு நிஜமா சம்மதமாம்மா?” வினவ…

மெல்லத் தலையசைத்து சம்மதம் என்றவளை எல்லையில்லாக் காதலோடு நோக்கிய பாரி அதுவரை அடக்கி வைத்திருந்த மூச்சை விட்டான்.

முன்பு எப்படியோ…? தற்போது தாலிகட்டி மனைவியாக்கியவளை விட்டுவிடுவது வெகு கடினம் என்பது புரிந்தது.

ஆனால், நித்திலா எந்த முடிவெடுத்தாலும் தான் கட்டுப்பட்டிருப்போம்தான் என்றாலும் தற்போது வெகு ஆசுவாசமாய் உணர்ந்தது மனது.

பாரியை நோக்கி மெல்ல சரிந்த வெற்றி, “பெருமூச்செல்லாம் பலம்ம்மா இருக்கு? நிம்மதியா இருக்கியாக்கும்… இனிதான்டி மாப்ள வானவேடிக்கையெல்லாம் உனக்கிருக்கு.”

வெற்றியைக் கலவரமாய் நோக்கிய பாரி, “ஏன்டா இப்புடி? நானே அந்தப்புள்ள சரின்னு சொன்னுச்சேன்னு நிம்மதியாக்கீறேன். அத்து பொறுக்கலயாடா உனக்கு. எதுனாலும் சமாளிச்சிக்கலாம்னு நீதான வாக்குக் குடுத்திருக்க… கூடவே இருந்து என்னையக் காப்பாத்தி வுட்ருடா.”

“இதுவரைக்கும் நாம முரட்டு சிங்கிள்டா பாரி. அதனால ஒன்னாவே சுத்தினோம். இப்ப நீ குடும்பஸ்தனாகிட்ட… இனி புருஷன் பொண்டாட்டி பிரச்சனையெல்லாம் எவ்வளவு சேதாரமானாலும் நீயேதான்டா சமாளிக்கனும்.”

நக்கலடித்தவனை பாரி முறைத்துக் கொண்டிருக்க, பாரியை அருகே அழைத்தார் மகேந்திரன்.

“டேய், பாரி இங்க வா.” அருகே வந்தவனின் கரத்தைப் பிடித்து நித்திலாவின் கரத்தை அவன் கைகளில் வைத்தவர்,

“மருமகப்புள்ள தங்கமான புள்ளடா. உன்னை நம்பி உன் வீட்டுக்கு வாழ வருது. அதுக்கு எந்தவொரு கஷ்டமும் வராம பார்த்துக்கனும் பாரி. ரெண்டு பேரும் சந்தோஷமா நூறாயுசு வாழனும்.” வாழ்த்தியவர் ஐயரிடம் திரும்பி,

“சாமி, அம்மனுக்கு பூஜை ஒன்னு போட்ருங்க. எல்லாரும் மனநிறைவோட பூஜைய பார்த்துட்டு கிளம்புறோம்.” என்க

“அதுக்கென்ன பேஷாப் போட்ரலாம்.”

என்றவாறு ஐயர் பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்யச் சென்றதும், அனைவரும் சந்நிதானத்துக்குள் சென்றனர். பூஜையை நிறைவாக முடித்துவிட்டு மணமக்களை பிரகாரம் சுற்றச் சொல்லவும், அமைதியாக சுற்றினர் இருவரும்.

உலக சந்தோஷத்தை மொத்த குத்தகைக்கு எடுத்தவனாய் பாரி… முற்றிலும் வெறுமையான மனநிலையில் நித்திலா…

தன்னருகே அமைதியான, அதேசமயம் இறுகிய முகத்தோடு பிரகாரம் சுற்றும் நித்திலாவைப் பார்த்தவன், மெல்ல தன் கரத்தை நீட்டி அவளது வலது கையை பற்றிக்கொள்ள முனைய, திரும்பி அவள் முறைத்த முறைப்பில் கை தன்னால் பின்னால் சென்றது.

‘ஆத்தாடி! இன்னும் நம்ம மேல இருக்கற காண்டு கொறையலயா?’ கலவரமாய் அரண்டவனை, ‘நீ பண்ணி வச்சினுக்கிற வேலைக்கு அந்தப்புள்ள மொறைச்சதோட வுட்டுச்சேன்னு சந்தோஷப்படு நைனா?’ அவன் மனசாட்சியே எள்ளி நகையாடியது…

நித்திலாவை அழைத்துக்கொண்டு பாரி முதலில் அவனது வீட்டுக்குச் செல்லட்டும் என்றும், மாலையில் தாங்கள் வந்து பார்ப்பதாகவும் நித்திலாவின் வீட்டில் கூறவும் மகேந்திரனும் அதையே கூறினார்.

“ஆமா, நீ போய் முதல்ல ஆயாவ சமாதானப்படுத்து. நாங்களும் ஞானம், மீனா, புள்ளைங்க எல்லாரையும் கூட்டிக்கிட்டு சாயங்காலம் வரோம்டா.” என்றுகூறி கிளம்ப அவரோடு வெற்றியும் கிளம்பினான்.

வெற்றியின் சட்டையைப் பின்புறமாய் பிடித்து இழுத்தவன், மெல்லிய குரலில், “டேய் நீ எங்கடா ஜரூரா கெளம்புற? ஆயாவ சமாளிக்கக் கூட வாடா. இந்தப் புள்ள வேற செம காண்டுலக்கீது. கண்ணாலயே எரிக்குதுடா.”

“பின்ன… நீ செஞ்சு வச்சிருக்க வேலைக்கு எரிக்காம, குளுக்குளுன்னு கொஞ்சுமா? எதுக்கும் நீ நைட்டு ஹெல்மெட் போட்டுக்கிட்டுத் தூங்கு.”

கலவரமாக, “இன்னாத்துக்குடா?”

“கல்லைத் தூக்கி உன் தலையில போட்ருச்சின்னா…? உசிரோட இருப்பியா? இருந்தீன்னா நாளைக்குப் பேசறேன்… டாடா பைபை பாரி.”

“டேய் துரோகி…” பாரி பல்லைக் கடித்துக் கொண்டிருக்கும்போதே வெற்றி மகேந்திரனோடு கிளம்பிவிட, அவன் பாரிக்காக வரச்சொல்லியிருந்த கார் வந்து நின்றது.

உண்மையில் பாரியை மணக்கோலத்தில் கண்டு, மனம் வருந்தி கண்ணீர் சிந்தும் கயலை தன்னால் பார்க்க முடியும் என்று தோன்றவில்லை வெற்றிக்கு. ஆகவே மகேந்திரனோடு கிளம்பிவிட்டான்.

கயலுக்கான அவகாசத்தைக் கொடுத்து, அவள் மனம் சற்று தேறவும், பாரியிடம் கயலைத் திருமணம் செய்து கொள்வது குறித்துப் பேசவேண்டும் என்று எண்ணிக்கொண்டான் வெற்றி.

தேவா மற்றும் சவரி உடன் வர பாரியும் நித்திலாவும் காரில் ஏறி பாரியின் வீட்டை நோக்கிச் சென்றனர்.

வெகுநாள் கனவு நனவாய் போன பூரிப்பு, மனம் கவர்ந்தவளோடு உரிமையான முதல் பயண சந்தோஷம், இறுகிப் போயிருக்கும் அவள் மனநிலையைப் பற்றிய கவலை, தங்களைப் பார்த்ததும் ஒப்பாரி வைத்து அழப்போகும் ஆயாவை எப்படிச் சமாளிப்பது என்ற ஆயாசம்… எல்லாம் கலந்த கலவையான மனநிலையில் இருந்தான் பாரி.

வீட்டின் முன் கார் நின்றது. அந்த காலைவேளையில் இட்லி வியாபாரம் ஜரூராக நடைபெற்றுக் கொண்டிருக்க, தங்கள் வீட்டுக்கு காரில் வருவது யார் என்று பார்த்திருந்தனர் ஆயாவும் கயலும்.

தேவாவும் சவரியும் முதலில் இறங்க, ‘இவனுங்க என்ன கார்ல வரானுங்க?’ என்று வியந்து, அடுத்து இறங்கிய பாரியைப் பார்த்து என்னவென்று புரியாமல் ஆயாவும் கயலும் திகைத்து விழிக்கும்போதே பின்னோடு இறங்கினாள் நித்திலா.

அவளது மணக்கோலமும் மார்பில் தவழும் தாலியும் சூழலைப் புரிய வைத்துவிட, இருவருமே அதிர்ந்து போயினர். கயல் இன்பமாக…! ஆயாவோ கயல் வாழ்க்கையை நினைத்து வேதனையாக…!

பெருங்குரலெடுத்து ஆயா அழுகையோடு ஒப்பாரியை ஆரம்பிக்க, எப்படி நடந்தது இந்த அதிசயம் என்று அவர்களையே ஸ்தம்பித்துப் பார்த்திருந்தாள் கயல்.

“அய்யோ! அய்யோ! நானு இனி இன்னாப் பண்ணுவேன். எம்பேத்திய எப்புடி கரைசேர்ப்பேன். மலைபோல நம்பிக்கினு இருந்தேனே இவன. என் நம்பிக்கையில மண்ண வாரி போட்டுக்கினானே.

அடியே கயலு! உம்மாமனப் பாருடி… அவனையே கண்ணாலம் கட்டிக்கனும்னு அம்புட்டு ஆசையோட இருந்தியே… இப்படி எவளையோ கட்டிக்கினு வந்துட்டானே உம்மாமன். எப்புடிதான் மனசு வந்துச்சோ அவனுக்கு.” ஆயா விடாமல் அழுக, நொடியில் குப்பத்து மக்கள் அனைவரும் அங்கே கூடிவிட்டனர்.

ஓரளவு அனைவருமே கயலுக்கு பாரிதான் என்ற எண்ணத்தில் இருக்க, பாரி வேறு திருமணம் செய்து வந்தது பெரும் அதிர்ச்சிதான் அவர்களுக்கு. தங்களுக்குள் குசுகுசுவென்று பேசியபடி நித்திலாவையேப் பார்த்திருந்தனர்.

செய்தியறிந்து ஓடிவந்த தேவாவின் தாய் ராணியோ,

“இன்னாடி இத்து அநியாயமாக்கீது… இம்மாநாளா ஒருத்தி காத்துக்கினு கெடக்க, வேற ஒருத்திய கட்டி இட்டுக்கினு வந்துக்கினானே இந்த பாரி.”
பெருங்குரலில் அரற்றியவாறு ஆயாவுடன் ஒப்பாரியில் அமர்ந்துவிட,

‘இன்னும் என்னென்ன குழப்பமெல்லாம் நீ பண்ணி வச்சிருக்க?’ என்னும் விதமாய் பாரியை நித்திலா பார்த்த பார்வையில் அனல் பறந்தது.

 

—ஆழி சூழும்.