ஆழி சூழ் நித்திலமே 20 (1)
ஆழி சூழ் நித்திலமே 20 (1)
மகேந்திரன் வீடு… அந்த விஸ்தாரமான ஹாலின் நடுவே ஞானவேலின் மகன் பரத் பிளாஸ்டிக் பந்தை வீச, அதனை ஒரு சிறிய பிளாஸ்டிக் கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொண்டிருந்தான் வெற்றி.
இவர்கள் அடித்த பந்துகளை தத்தித் தத்தி நடந்து எடுத்துக் கொடுத்துக்கொண்டிருந்தாள் ஞானவேலின் மகள் பார்கவி.
சமையலுக்கு வெட்டவேண்டிய காய்கறிகளும் கத்தியும் எடுத்துக்கொண்டு வந்து டைனிங்டேபிளில் அமர்ந்தாள் ரதிமீனா.
“டேய், பால் டீவி மேல பட்டுச்சி மூனு பேரையும் தொலைச்சிக்கட்டிடுவேன்.”
மிரட்டியவளை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல், விளையாட்டு தொடர்ந்தபடி இருந்தது.
“வெற்றி, உனக்கு இன்னைக்கு வேலையில்லையா? நண்டுசிண்டுகளோட விளையாடிக்கிட்டு இருக்க.”
“ம்ப்ச், இல்ல மதினி. கம்பெனியில எந்த வேலையுமில்ல.”
“ஏன்டா, நேத்து அத்தனை தடவை பாரி ஃபோன் பண்ணி விருந்துக்குக் கூப்பிட்டானே, எனக்கு வேலையிருக்கு வரலன்னு கம்பெனியிலயே பழியா கிடந்த. இன்னைக்கு எந்த வேலையும் இல்லங்குற.”
“நேத்து இருந்துச்சி. இன்னைக்கு இல்ல. அதுக்கு என்னாங்கற இப்ப?” கடுப்போடு மொழிந்தவன்,
“விருந்துக்கு ரொம்ப அவசரமா? யாரைப்பத்தியும் கவலையில்ல அவனுக்கு. கயல நெனைச்சுப் பார்த்தானா, இல்ல கட்டிக்கிட்டு வந்த புள்ள மனசைப் பத்தி யோசிச்சானா? விருந்து கொண்டாடுற மாதிரியா அந்த ரெண்டு புள்ளைங்களும் இருந்திருக்கும்?” தனக்குள் முணுமுணுப்பாய் பாரியை கடித்துக்கொண்டான்.
“என்னடா முணுமுணுங்கற? யார் மேல கோவம் உனக்கு? பாரி மேலயா!? ஒட்டுப்புல்லாட்டம் ஒட்டிக்கிட்டே இருப்பீங்க. என்னடா பிரச்சனை உங்களுக்குள்ள?” அதிசய பாவத்தோடு மீனா கேட்க, சலிப்போடு அவள்முன் வந்தமர்ந்தான் வெற்றி.
“ம்ப்ச், பிரச்சனையெல்லாம் ஒன்னுமில்ல. நீயே சொல்லு மதினி. கயலு ஆயாலாம் எவ்வளவு கஷ்டத்துல இருந்திருப்பாங்க, நேத்து திடுதிப்புனு இவன் கல்யாணம் முடிச்சி வந்தத பார்த்து, சந்தோஷமா பட்ருப்பாங்க?
அந்த நித்திலா புள்ளயும்தான் சந்தோஷமா கட்டிக்கினு வந்துச்சா இவன? அப்புடி இன்னா அவசரம் அவனுக்கு உடனே விருந்து விழான்னு கொண்டாட? அறிவுகெட்டவன்…!
கொஞ்சம் எல்லார் மனசும் சமாதானமாகறவரை பொறுத்து விருந்து விசேஷம்னு வச்சிருக்கலாம்ல. உடனே நேத்தே வைக்கனும்னு என்னா அவசியம்?”
படபடவெனப் பொறிந்தவனை விநோதமாகப் பார்த்த ரதிமீனா,
“விருந்தை ஏற்பாடு பண்ணது பாரியில்ல.”
“பாரியில்லயா… பின்ன யாரு?”
“கயலுதான்”
“என்னா சொல்ற மதினி? நெஜமாவா!” அவ்வளவு வியப்பு அவன் குரலில்.
“நான் ஏன்டா பொய் சொல்லப்போறேன்? பாரி கல்யாணத்துல ஆயாவுக்கு கொஞ்சம் வருத்தம்தான் இல்லேங்கல.
பேரனுக்கு பேத்திய கட்டிவச்சி, அதுங்க சந்தோஷமா வாழறதைப் பார்க்கனும்னு ஆசையோட இருந்த கிழவிக்கு நேத்து திடீர்னு பாரி வேற புள்ளய கட்டிக்கினு வந்தது அதிர்ச்சிதான்.
ஆனா பத்து வயசுல இருந்தே அவன வளர்த்துக்குது ஆயா, அவன் வாழ்க்கை நல்லாயிருக்கனும்னு அதுக்கு நெனைப்பிருக்காதா, தன் மனச தேத்திக்கினு நேத்து விருந்துல சந்தோஷமா ஓடியாடி அம்புட்டையும் செஞ்சுது.
நம்ப கயலு வெள்ள மனசுக்காரிடா. யதார்த்தமான புள்ள. மனசுல நெனைச்ச ஆசை நிறைவேறலன்னு துவண்டு அழுது பொலம்புற புள்ளயோ சண்டை போடற புள்ளயோ இல்ல அது.
அப்படி அது அழுதிருந்தாலோ சண்டை போட்டிருந்தாலோ பாரிக்கும் நித்திலாவுக்கும் எம்புட்டு சங்கடம். அவுங்க வாழ்நாள் முழுக்க உறுத்துமே கயலோட வேதனை.
ஆனா நம்ப கயலு அம்புட்டு வேதனையையும் மனசுக்குள்ள அடக்கிக்கினு பாரி கல்யாணத்தை ஊரறிய விருந்து வச்சேயாவனும்னு அடம்புடிச்சி ஏற்பாடு பண்ணியிருக்கு.
பாரிகூட புலம்பிக்கினு இருந்தான், பத்துநாள் போவட்டும் விருந்து வைக்கலாம்னு நான் சொல்றத கயலு கேக்கவே மாட்டேங்குது மதினின்னு.
ஊரே கயல ஆச்சரியமாதான் பார்க்குது. அது நல்ல மனசுக்கு அதுக்கு நல்ல வாழ்க்கை அமையும் பாரேன்.”
ரதிமீனா பேசிக்கொண்டே போக, வெற்றிக்குள் என்னவென்று சொல்ல முடியாத பல உணர்வுகள்.
தன் சோகத்தை அழுதுகூட ஆற்றிக்கொள்ளாமல் மனதுக்குள் மருகுகிறாளா என்னவள் என்ற ஆதங்கம், தனக்கானவள் வேறொருத்தனுக்காக கண்ணீர் சிந்தவில்லை என்ற ஆசுவாசம், அவளது அத்தனை வருத்தத்தையும் போக்கி தனக்குள் அடக்கிக்கொள்ளும் துடிப்பு… என கலவையான மனநிலையில் இருந்தான் வெற்றி.
“அந்த புள்ள நித்திலாவுக்கும் நடந்த கல்யாணம் அதிர்ச்சிதான வெற்றி? இதுதான் தனக்கான வாழ்க்கையின்னு அது மனசுல அழுத்தமா பதியனும்னா நேத்து ஊரைக்கூட்டி கல்யாணத்தை முறையா அறிவிச்சதுதான் சரி. நித்திலா வீட்டு ஆளுங்களுக்கும் அதுல அவ்வளவு திருப்தி.
அதுமட்டுமில்ல, நடந்த கல்யாணத்தைப்பத்தி ஊருக்குள்ள ஒருபய எதனா தப்பா பேச முடியுமா இனி. எல்லார் வாயவும் தடபுடலா விருந்து வச்சு அடைச்சாச்சுல்ல.
இல்லேன்னா இன்னேரம் பாரி கல்யாணம்தான் எல்லார் வாய்க்கும் அவலாகியிருக்கும்.”
“ம்ம்… நீ சொல்றதும் ஒருவகையில சரிதான். நித்திலா ரொம்ப நல்ல பொண்ணு மதினி. அவமேல பாரி வச்சிருந்த உண்மையான நேசம்தான் இத்தனை பிரச்சனைகளுக்கு இடையிலயும் அவள அவன்கிட்ட கொண்டுவந்து சேர்த்திருக்கு.
என்ன? அவன்மேல ஏகப்பட்ட கோவத்துல இருக்கு அந்தப்பொண்ணு. அது மனசு மாறனும். இவனப் புரிஞ்சிக்கனும்.”
“ம்ம்… நம்ப வீட்ல வச்சு நான்வேற அந்த பொண்ணு வேற இல்லன்னு சொன்னானே இந்தப்பய, அப்பவே தெரியும் அவனுக்கு அந்தப்புள்ள மேல எம்புட்டு பிரியம்னு.
ஆனா, அந்தப் பொண்ணு கோவமா இருக்கறதுலயும் நியாயமிருக்குல்ல வெற்றி. உன் நண்பன் பண்ணி வச்சிருக்க வேலைக்கு நிஜமா நானாயிருந்தா தாலியக் கழட்டி மூஞ்சில வுட்டெறிஞ்சுட்டு, அவனை நார்நாரா உரிச்சி தொங்க விட்ருப்பேன்.
அந்தப்புள்ள அவங்க அம்மாவோட ஒத்த வார்த்தைக்கு மதிப்பு குடுத்து, இந்த வாழ்க்கைய ஏத்துக்கிச்சி. நேத்து அந்தப்புள்ளகிட்ட பேசினேன். பாரிமேல மலையளவு அதுக்கு கோவமிருக்குதான், ஆனா வெறுப்பு இல்லடா.
இவனோட மனச புரிஞ்சிக்கிட்டா எல்லாமே சரியாகிடும்.”
“எல்லாமே சரியாகிடும் மதினி.” மெல்லத் தலையசைத்து ஆமோதித்துக் கொண்டான். மேற்கொண்டு எதையும் பேசத் தோன்றாமல் அமைதியாய் கேரட்டை எடுத்துக் கடித்துக் கொண்டிருந்தவனைப் பார்த்தவள்,
“உண்மையான காதல் எப்பவும் தோற்காது இல்லையா வெற்றி.” ஆழ்ந்து ஒலித்தது மீனாவின் குரல்.
இல்லையென மறுப்பாக தலையசைத்துக் கொண்டவன் அமைதியாய் இருந்தான்.
“ஏன்டா?”
மீனாவுக்குள் சில சந்தேகங்கள் உண்டு. ஆனால் தன் அமுக்குனி கொழுந்தனின் வாயைப் பிடுங்கி வார்த்தைகளை வாங்குவது வெகுசிரமம். அவனது செயல்களை வைத்தே கயல் மீது இவனுக்கு ஈடுபாடு உண்டோ என்ற சந்தேகம் லேசாய் அவளுக்குண்டு.
வெற்றியை மனதில் நினைத்து அவள் கேட்க, அவனுக்குள் மொத்தமும் கயலின் நினைவுகள்.
‘உண்மையான நேசம் கைசேருமென்றால், கயலின் தூய நேசம் உண்மையில்லையா? அவளது வாழ்க்கை பாரியோடு இணைய வேண்டும் என்றுதானே உளமாற நானும் விரும்பினேன்.
இன்னார்க்கு இன்னார் என்று இறைவன் போடும் பிணைப்புகள்தான் நிஜம். உண்மையான நேசங்களும் சில நேரங்களில் கைகூடுவதில்லை.’ பெருமூச்சொன்றை விடுவித்துக் கொண்டான்.
தன் காதல் கைகூடப்போகும் சந்தோஷம் நெஞ்சு நிறைய இருக்கிறதுதான், நிலைக்கொள்ளாமல் மனம் மகிழ்ச்சியில் தத்தளிக்கிறதுதான், ஆனாலும் அதை முழுதாய் அனுபவிக்க முடியாமல் ஒரு பாரம் கயலை நினைத்து…
‘எப்படியும் கயலின் மனதை தன்னை நோக்கி மாற்றிவிட முடியும்தான், அது முடியாவிட்டால் தானென்ன காதலன்…? ஆனால், அவளின் அடிமனதில் தங்கிவிட்ட வடுவை மறக்கடிக்கத் தன்னால் முடியுமா?
உலகத்து சந்தோஷத்தை முழுக்க அவள் காலடியில் கொட்டி நிறைவான வாழ்க்கையை தன்னால் வாழ வைக்க முடியும். ஆனால் அவள் மனதில் முகிழ்த்த முதல் காதல் தந்த வலியை என்னால் மறக்கடிக்க முடியுமா?’ ஆயாசமாகத் தன்னைத்தானே கேட்டுக்கொண்டவன் அமைதியாய் இருக்க…
‘வாயத் தொறந்து எதையாவது சொல்றானா பாரு. ஊமக்கோட்டான்…’ மனதுக்குள் வெற்றியை வைத ரதிமீனா,
“வெற்றி, எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசைடா. நேத்து நித்திலாப் புள்ளய பார்த்ததும் அந்த ஆசை அதிகமாகிடுச்சி.”
“என்னா ஆசை?”
“அந்த நித்திலாப் புள்ள எம்பூட்டு கலருல்ல? நம்ம ஆளுங்கள்ல அப்படி புள்ளைங்களே கெடைக்கறது கஷ்டம். வலை போட்டுத் தேடியாச்சும் நம்ம வூட்டுக்கும் அப்படி ஒரு புள்ளைய கூட்டியாரனும்டா”
“அதுக்கென்ன மதினி தாராளமா கூட்டியாரலாம்.”
“டேய்… நிஜமாவா சொல்ற? பொண்ணு பார்க்கவாடா? நல்லா வெள்ளையா பொண்ணு வேணும்னு தரகர்கிட்ட சொல்லி வைப்போமா?”
“ம்ம்… பாரு மதினி. வெள்ளக்காரப் பொண்ணுகூட ஓகேதான்.”
“வெள்ளக்காரப் பொண்ணா…? பாஷையெல்லாம் புரியாதேடா?”
“அது பிரச்சினை இல்ல மதினி. ஹார்பர்ல நம்ப கம்பெனிக்கு வர்ற வெள்ளக்காரப் புள்ளைங்க கூடல்லாம் ஞானம் ரொம்ப ஆசையா பேசுவாப்ல… நீ மட்டும் வெள்ளக்காரப் பொண்ண பார்த்தியோ… உடனே ஓகே சொல்லிடுவாப்ல.”
மிகுந்த கடுப்போடு கத்தியை அவன்புறம் நீட்டியவள், “அப்படியே குத்திப்புடுவேன். உனக்கு கல்யாணத்துக்குப் பொண்ணு பார்க்கக் கேட்டா, நீ எனக்கு சக்காளத்தி பார்க்கச் சொல்றியா?”
“ரைட்டு, அது சரிவரலன்னா பேசாம உன் மாமனாருக்குப் பாரு… எங்கம்மா போனதுல இருந்து தனியாவே இருக்காரு மனுஷன். வெள்ளையா வீட்டுக்குப் பொண்ணு கூட்டியாரனும்னா இதுதான் வழி.”
“ஏன்… தொர கல்யாணமே பண்ணிக்காம சந்நியாசம் வாங்கப் போறீயா?”
“அப்படின்னு யாரு சொன்னா? நீ அழகா கலரா பொண்ணு பார்க்கனும்னா அவங்களுக்குத்தான் பார்க்கனும். எனக்குன்னு வரப்போற பொண்ணு உன் கண்ணுக்கு எப்படியிருந்தாலும் என் கண்ணுக்கு எப்பவுமே தேவதைதான்.” கண்கள் மிதக்கப் பேசியவனை அதிசயமாகப் பார்த்த ரதிமீனா…
“டேய்… கண்ணுல ஆச மிதக்குதேடா… இவ்ளோ நாளா அமுக்கினியாட்டம் இருந்தியே… என்கிட்டகூட சொல்லவேயில்ல? யாருடா அது உம்மனச கொள்ளையடிச்சவ? அம்புட்டு அழகாடா அந்தபுள்ள?”
ஆர்வம் தெறிக்கக் கேட்டவளை வசீகரமான சிரிப்போடு பார்த்தவன்…
“முக அழகோட அக அழகுதான முக்கியம் மதினி. அவ மனசு அவ்வளவு அழகு.” முகம் விகசிக்கப் பேசியவன்,
“துலாத்தட்டில் உன்னை வைத்து நிகர் செய்ய பொன்னை வைத்தால் துலாபாரம் தோற்காதோ பேரழகே…” பாடியபடி மாடியேற…
“பார்றா… அடேய் வெற்றி பாட்டெல்லாம் பாடற? யார்றா அந்தப் பொண்ணு? எனக்கு இப்பவே பார்க்கனும் போல இருக்கு.” அதிசயித்துப் போனாள் மீனா.
“பார்க்கலாம் பார்க்கலாம்… கூடிய சீக்கிரமே…” வெற்றியின் முகத்திலும் அவ்வளவு சிரிப்பு… வெட்கச் சிரிப்பு.
“நிழல் போல விடாமல் உன்னைத் தொடர்வேனடி… புகை போல படாமல் பட்டு நகர்வேனடி… வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி…”
*****