ஆழி சூழ் நித்திலமே 20 (2)

IMG-20200530-WA0010-8f7deee2

நாதன் கடும் கொந்தளிப்பில் இருந்தான். என்ன நினைத்தும் மனம் ஆற மறுத்தது. தகவல் சொன்ன கான்ஸ்டபிளை கடுப்போடு முறைத்தவன்,

“எப்புடிய்யா? எப்புடி அவனைப் போய் கல்யாணம் பண்ணுச்சி அந்த பொண்ணு? அவன் மேல புகாரெல்லாம் குடுத்துச்சேய்யா?”

“அதுங்க ரெண்டுத்துக்கும் முன்னவே பழக்கம் இருந்திருக்கும் போல சார். இந்த பாரிப் பயலுக்குப் பொண்ணு தரமாட்டேன்னு அவங்கப்பா சொல்லியிருக்கலாம். அதனாலதான் எதோ பிரச்சினை வந்து அந்த பொண்ணோட அப்பனைப் போயி அவன் மிரட்டினு வந்துக்கறான் போல.

தன்னோட அப்பா சாவுக்கு காரணமாகிட்டானேன்னு காண்டுலதான் அவன் மேல புகார் குடுத்திருக்குது அந்தப்பொண்ணு…

அன்னிக்கு ஸ்டேஷன்ல கூட பார்த்தீங்கல்ல, அந்தப் பொண்ணுக்கு ஒரு பிரச்சனைங்கவும் உங்களை எப்புடி பொரட்டி பொரட்டி எடுத்தான் அவன்? கிழிச்சி நாரா தொங்கவிட்டான்ல.”

நாதன் கடுப்பாகி கான்ஸ்டபிளை முறைக்க…

“நடந்ததை சொன்னேன் சார்…” கான்ஸ்டபிள் பம்மவும், மேலே சொல்லு என்பது போல நாதன் கையாட்ட,

“அந்தப் பொண்ணுக்கு அவங்க வீட்ல யாருக்கும் தெரியாம காதும் காதும் வச்ச மாதிரி, வேற மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ண முடிவு பண்ணிக்குறாங்க போல சார். மாப்பிள்ளை சொந்த அத்தை மவனாம்.

அவன் எல்லாத்துக்கும் மேல அகராதி புடிச்சவனா இருந்திருப்பான் போல. ஏற்கனவே கல்யாணம் ஆனவனாம், டைவர்ஸ் கூட பண்ணாம ரெண்டாம் கல்யாணம் பண்ண வந்துக்கறான்.

அது இந்த பாரிப்பயலுக்குத் தெரிஞ்சதும் கோயிலுக்குப் போயி சண்டையப் போட்டு மாப்பிள்ளைய அடிச்சுத் துரத்திட்டு, அந்தப் பொண்ணக் கல்யாணம் பண்ணிருக்கான்.

அப்புறமா அவுங்க வீட்டோட பேசி சமாதானமாகவும், அவனோட புள்ளய அனுப்பவும் ஒத்துக்கிட்டாங்க போல அந்தப் பொண்ணு வீட்ல.

இந்த தகவலெல்லாம் கோயில் பூசாரிதான் சொன்னாரு.”

இதுவரையில் பணத்தாலோ, பதவியைக் கொண்டு பயமுறுத்தியோ, உடல் பலத்தாலோ எத்தனையோ பெண்களை வீழ்த்தியிருக்கிறான். கைநழுவிப் போனது இவள்தான்… எண்ண எண்ண கடுப்பாய் வந்தது நாதனுக்கு.

மூன்று நாட்களாக தமிழக அமைச்சர் ஒருவருக்கு தனிப்பட்ட முறையில் பந்தோபஸ்துக்காக டெல்லி சென்றிருந்தான் நாதன். “உன்னைத் தவிர வேறு யாரிடமும் பொறுப்பைத் தர விரும்பவில்லை” என்று மேலதிகாரியே அழைத்து சொல்லும் போது தட்ட முடியவில்லை அவனால்.

 திரும்பி வருவதற்குள் அவள் திருமணமே முடிந்திருக்கிறது. பாரிக்கும் அவளுக்கும் காதல் என்பதை நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

பாரிக்குத் தன்மீது இருந்த கடுப்பில்தான் அந்தப் பெண்ணைக் காப்பதற்காக அவள் பின்னால் சுற்றுகிறான், எவ்வளவு நாட்கள் இவனால் அடைகாக்க முடியும் என்று அலட்சியமாய் எண்ணியிருக்க, அது அப்படியில்லையோ என்று இப்போது தோன்றியது.

 ‘எங்கே போய்விடப் போகிறாள் என்று நித்திலா விஷயத்தில் அலட்சியமாக இருந்தது தவறோ?’ நினைக்க நினைக்க எரிச்சலானவன்,

“யோவ், த்ரீ நாட் டூ… அந்தப் பாரிப்பயல சும்மா விடக்கூடாதுய்யா. என் ரூட்ல கிராஸ் பண்ணா என்ன ஆவும்னு காட்டியே ஆகனும்.”

“அதுசரி…, சார், இனி நீங்க அவன் ரூட்ல கிராஸ் பண்ணாம இருங்க சார். காட்டுப் பயலுக, சத்தமே வராம கடலுக்குள்ள கல்லக்கட்டி இறக்கிப்புடுவானுங்க.”

“யோவ்…”

“உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன் சார். மெரினா கலவரத்துல வாங்குனது மறந்து போச்சா? ஊமக்காயமா வாங்கி ஆசுபத்திரில கிடந்தது நெனைவில்லயா? அவன்தான்னு தெளிவா தெரிஞ்சும் என்னா பண்ண முடிஞ்சுது நம்மால?

ஏதோ அந்த பொண்ணு கம்ப்ளைன்ட்னு ஒன்னு குடுத்ததால உள்ள தூக்கி வச்சீங்க. இல்லைனா அவன் மேல கையாச்சும் வைக்க முடியுமா?”

“…”

“நம்ப எம்எல்ஏ உங்களுக்கு எந்த அளவுக்கு சப்போர்ட் பண்ணுவாரோ அதே அளவுக்கு மகேந்திரனையும் விட்டு குடுக்க மாட்டாரு. ஏன்னா அவுங்க ஆளுங்க ஓட்டு வேணும்.

அந்த மகேந்திரன் இருக்கவரை பாரிய எதுவுமே உங்களால பண்ண முடியாது.”

“…”

“அந்தப் பொண்ண கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியே நிழல் மாதிரி கூடவே இருந்து எந்த பிரச்சனையும் வராம பார்த்துக்கிட்டான். இப்ப பொண்டாட்டியாவும் ஆகிடுச்சி, இனி விட்ருவானா? உங்க பார்வை தப்பா அந்த பொண்ணு மேல விழுந்தாலும் தொலைச்சுக்கட்டிருவான். பார்த்து ஜாக்கிரதையா இருந்துக்கோங்க.”

சொல்ல வேண்டியதை சொல்லியாகிவிட்டது, இனி நாதன் பாடு என்று எண்ணியபடி கான்ஸ்டபிள் நகர, நாதனின் கண்களில் வெகு தீவிரம்…

வெண்ணையாய் மினுமினுத்த நித்திலாவின் முகம் நினைவுக்கு வர,

‘அவளை அப்படி ஈசியா விட்ற முடியுமா? பார்த்துடறேன் நானா அவனான்னு?’ உள்ளுக்குள் கருவிக் கொண்டவன், அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்திக்கத் துவங்கினான்.

*****

 

இரவெல்லாம் உறக்கம் வராமல் உழன்று கொண்டிருந்த நித்திலா விடியலின் துவக்கத்தில்தான் கண்ணயர்ந்திருக்க, எழும்போது நல்ல வெளிச்சம் அறைக்குள் வந்திருந்தது.

அறைக்கு வெளியே தொடர்ந்து கேட்ட கூச்சலில்தான் உறக்கம் கலைந்து எழுந்திருந்தாள். எழுந்ததும் முதலில் ஒன்றும் புரியாமல் கண்ணைக் கசக்கிவிட்டுக் கொண்டவளுக்கு, இருக்கும் அறையும் சூழலும் நிதர்சனத்தை புரிய வைக்க, ஏதோ சண்டை நடக்கிறதோ என்று தயக்கத்தோடும் பயத்தோடும் பார்த்தவாறு வெளியே வந்தாள்.

 நேற்று முன்னிரவு வரை இணைபிரியாமல் பாரியோடு சுற்றிக் கொண்டிருந்த தேவாவை அடிக்கப் பாய்ந்து கொண்டிருந்தான் பாரி. கயலும் ஆயாவும் அவனைத் தடுக்க, செல்வி அழுது கொண்டிருந்தாள்.

சற்று பயத்தோடு சுற்றிப் பார்த்த நித்திலா, இவர்களின் சண்டையில் அரண்டு நிற்க…

ராணியோ, “இந்தா பாரி… நான்தான் செல்விக்கு கண்ணாலத்தைப் பண்ணிப்புடலாம், மாப்ள பாருன்னு சொன்னேன். இப்ப அவனாண்ட இன்னாத்துக்கு மல்லுக்கட்ற?” என்க… கடுப்போடு அவள்புறம் திரும்பியவன்,

“படிக்கிற புள்ளைக்கு இப்ப இன்னாத்துக்கு அவசரமா கண்ணாலம் பண்ண சொன்ன நீயு?”

“அக்காங்… அவ படிச்சி கிழிச்ச லட்சணம் நமக்குத் தெரியாதா? இந்த கிறுக்கியால எம்மாம் கஷ்டம்? அநியாயமா ஒரு உசுரே பூடுச்சி. நீ எம்மாம் கஷ்டப்பட்ட? இந்தா நிக்குதே உம்பொண்டாட்டி இது எம்மாம் கஷ்டப்பட்டுச்சி.

இன்னியும் இவ படிச்சி எத்தையும் சாதிக்கப் போறதில்ல. பேசாம கண்ணாலத்தைப் பண்ணி அனுப்பி வுட்றலாம் பாரி.”

“யம்மா, எனக்கு கண்ணாலம் வேணா யம்மா. நெசமா இனிமேட்டுக்கு அப்புடிலாம் பண்ணமாட்டேன்.

என்னைய ஸ்கோல்லுல சேர்த்து வுடும்மா. நானு ஒயுங்கா படிக்கிறேன்.” செல்வி ஒருபுறம் அழுது தேம்ப, ராணியும் தேவாவும் அவளுக்கு திருமணம் செய்துவிடும் முடிவில் உறுதியாய் இருந்தனர்.

எவ்வளவு நேரம் வாக்குவாதம் நடந்தும் ராணி அடமாய் நிற்க,

“சும்மா அந்தப் புள்ளைய மட்டுமே குத்தம் சொல்லாத அத்த. அந்தப் புள்ள சொன்னாலும் எனக்கு எங்க போனுச்சு புத்தி. நானுல்ல தீர விசாரிச்சிருக்கனும்.

ஆத்திரத்துல அறிவில்லாத போயி சண்டை வலிச்சது நானுதான. அதாங்காட்டி என்னென்னவோ நடக்கக்கூடாததெல்லாம் நடந்து போச்சு.

இன்னிக்கு அந்த வாத்தியாரு உசுரோட இருந்தாலும் அந்த புள்ள செஞ்ச தப்ப மன்னிச்சி  அது நல்லா படிக்க என்னா செய்யனுமோ அதைதான் செஞ்சிருப்பாரு.”

ராணியிடம் பேசியவன் திரும்பி நித்திலாவைப் பார்த்து, “சரிதானங்க நான் சொல்றது” என்க,

‘இந்தப் பஞ்சாயத்துக்கு ஜட்ஜு நானா?’ கடுப்போடு அவனை முறைத்தவள் அறைக்குள் செல்ல எத்தனிக்க,

“ஏங்க நீங்க சொன்னா இவுங்கலாம் கேப்பாங்கங்க.” தயக்கத்தோடு வந்த அவன் குரலில் நிதானித்தாள்.

 ராணியையும் தேவாவையும் பார்த்தவள்,

“தப்பெல்லாம் உங்க மேல வச்சிக்கிட்டு தண்டனை மட்டும் அந்த பொண்ணுக்கா?

நாம செய்யற செயல்கள் மட்டுமில்ல பேசற பேச்சு கூட அது சரியா தப்பா, இதனால என்னென்ன பின்விளைவுகள் வரும்னு யோசிக்கத் தெரியாத அளவுக்கு பிள்ளைய வளர்த்தது உங்க தப்பு.

கஷ்ட நஷ்டம் தெரியாம, வெளி உலகம் தெரியாம, அவ ஆசைப்பட்டு கேட்டதெல்லாம் தேவையா தேவையில்லையான்னு கூட யோசிக்காம வாங்கிக் குடுத்து வளர்த்த நீங்கதான் அவ செஞ்ச தப்புக்கு முதல் பொறுப்பு.” காட்டமாய் அவர்களை குற்றம் சாட்டியவள், பாரியின் புறம் திரும்பி…

“அப்புறம் இதோ நிக்கிறாரே இவரு, தன் வீட்டு பொண்ணு என்ன சொன்னாலும் நம்பிடறது. அது உண்மையா பொய்யா அதெல்லாம் யோசிக்கறதே இல்ல.

என்ன நடந்ததுன்னு எதிராளிக்கிட்டயும் ஒரு வார்த்தை கேட்கனும்ங்கற பேசிக் அறிவுகூட இல்லை. எடுத்தோம் கவுத்தோம்னு போய் சண்டை போட்டாச்சு” கோபத்தோடு மூச்சு வாங்க பேசியவளுக்கு கூடவே அழுகையும் பெருக,  

“உங்களுக்கெல்லாம் என்ன நஷ்டமாகிப் போச்சு? நாங்கதான் எங்கப்பாவ இழந்துட்டு நின்னோம்.

இன்னும் என் வாழ்க்கையில நான் நெனைச்சிக்கூடப் பார்க்காத விஷயமெல்லாம் நடந்து முடிஞ்சு போச்சு.

எங்கப்பா எங்ககூட இருந்திருந்தா அந்த இன்ஸ்பெக்டரோ எங்க அத்தையோ எங்ககிட்ட அப்படி நடந்திருக்க முடியுமா? தைரியமா எதிர்த்து நின்னிருப்பேன் நான்.

எங்கப்பா சாவுக்கு காணமாகிட்டோமேங்கற குற்றவுணர்வு, என்னோட நிலைமையப் பார்த்து வந்த பரிதாபம் இதெல்லாம்தான் இவர் என்னை கல்யாணம் பண்ணிக்கக் காரணம்.

இப்பவும் பரிதாபத்துல நடந்த இந்த கல்யாணத்தை முழுமனசா என்னால ஏத்துக்க முடியுமா? இவர் மேல இருக்கற என்னோட நியாயமான கோபம் தீருமா? என் வாழ்க்கை என்ன ஆகும்னு என்னால யோசிக்கக்கூட முடியல. பயமா இருக்கு.

இப்பவே ஓடிப்போயி எங்கப்பாவோட கைகள்ல புகுந்துக்க மாட்டேனா, உனக்கு ஒன்னுமில்லடா நீ நல்லாயிருப்பன்னு அவர் ஒரு வார்த்தை சொல்லிட மாட்டாரான்னு ஏக்கமா இருக்கு.” தொண்டையடைத்து கண்கள் கலங்கி வழிய நின்றவளைப் பார்க்கவே பாவமாய் இருந்தது அவர்களுக்கு.

“தெரிஞ்சோ தெரியாமலோ இந்தப் பொண்ணு செஞ்ச எல்லா தப்புக்கும் அதனால வந்த எல்லா பின்விளைவுகளுக்கும் நீங்க எல்லாரும்தான் பொறுப்பு.

அதனால தண்டனைய அந்தப் பொண்ணுக்கு மட்டும் தராதீங்க.”

கண்களைத் துடைத்தவாறு பேசியவள் உள்ளே சென்றுவிட, அங்கே செல்வியின் விசும்பலைத் தவிர பெரும் அமைதி.

செல்வியின் அருகே சென்று அவளது தலையை வருடிய பாரி, “அழுவாத புள்ள. நாளைக்கு அண்ணே உன்னிய ஸ்கோலுல போயி சேர்த்து வுடறேன்.”

பேசியவன் நிற்காது கடலை நோக்கி நடந்துவிட்டான். நித்திலாவின் கண்ணீர் வெகுவாய் உலுக்கி இருந்தது அவனை.

‘அவளது கோபமும் சோகமும் ஆற்றாமையும் வெகு நியாயமானவை. அவை என்று  தீரும்? தன்னால் தீர்க்க முடியுமா?’ ஆயாசமாய் எண்ணிக் கொண்டான்.

அதைத் தீர்க்க முடியாவிட்டால் தான் அவளைத் திருமணம் செய்ததில் அர்த்தமே இல்லை என்றும் தோன்றியது.

ஆனால், ஓரிரு நாட்களில் மந்திரம் போட்டாற் போல நடைபெறும் விஷயமில்லை இது என்பதும் தெளிவாய் புரிந்தது.

அவள் இனி எப்போதும் எதற்கும் தன் தந்தையை நினைத்து ஏங்காதவாறு அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதை அவனது மனது ஒருபுறம் வலியுறுத்த…

பரிதாபத்தில் நடந்ததல்ல இந்த திருமணம் என்பதையும், அவள் மீதான தனது காதலையும் அவளுக்கு புரிய வை என்று  ஒருபுறம் கூப்பாடு போட்டது அவனின் காதல் மனது.

ஆகவே, அவளுக்குத் தன் காதலைப் புரிய வைக்கும் அதே நேரத்தில், அவளது தந்தையின் இடத்தையும் இட்டு நிரப்ப வேண்டும் என்று உறுதியாய் எண்ணிக்கொண்டான்.

ஒரு பெண்ணுக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் துணிவையும் நேர்மையையும் கர்வத்தையும் அவளைப் பெற்ற தந்தையால் மட்டுமே தரமுடியும்.

ஆனால் அவளது கணவன் நினைத்தால் இவை அத்தனையோடும் சேர்த்து திகட்டத் திகட்ட காதலையும் தர முடியும்.

தந்தையை இழந்த பெண்ணுக்கு அவளது தந்தையின் இடத்தை இட்டு நிரப்பும் காதல் கணவன் வாய்த்தால் அவளைவிட அதிர்ஷ்டசாலி இல்லை.

பார்க்கலாம்… நித்திலா அதிர்ஷ்டசாலியா, இல்லை மறுபடியும் ஏதேனும் குட்டையைக் குழப்பி அவளிடம் இவன் வாங்கிக் கட்டிக் கொள்ளப் போகிறானா என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம்….

 

— ஆழி சூழும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!