ஆழி சூழ் நித்திலமே 22

             ஆழி 21

 

 

என்றோ சொர்க்கத்தில் இறைவனால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை வெகு சந்தோஷமாக வீட்டில் நிச்சயித்துக் கொண்டிருந்தனர்.

முகம் கொள்ளா மகிழ்ச்சியோடு ஆயா அமர்ந்திருக்க, அவரருகே அமர்ந்திருந்த கயலோ அவசர அவசரமாய் செய்யப்பட்ட மிதமான ஒப்பனையிலும் அழகாய் மிளிர்ந்தாள்.

எந்தவித முன்னறிவிப்புமின்றி வெற்றியும் மீனாவும் வீட்டுக்கு வந்தபோது எப்போதும் போல உபசரித்த கயலும் ஆயாவும்,

“உங்க வீட்டுப் பொண்ணை எங்க வெற்றிக்கு கேட்டு வந்திருக்கோம்” என்ற ரதிமீனாவின் வார்த்தைகளில் அயர்ந்து போனார்கள்.

பாரிக்கோ தலைகால் புரியாத மகிழ்ச்சி. கயலுக்கு மாப்பிள்ளையாய் வெற்றி வந்தால் நன்றாயிருக்கும் என்ற எண்ணம் உள்ளூர இருந்தபோதும் தானாய் எப்படி கேட்பது என்று தயங்கியவன், இப்போது அவர்களாய் பெண் கேட்டு வந்தது மகிழ்ச்சியில் தத்தளிக்க வைத்திருந்தது அவனை.

“இன்னா சொல்றீங்க மதினி? மெய்யாலுமா?” சந்தோஷத்தில் திக்குமுக்காடியவனை செல்லமாய் தட்டிய மீனா,

“ஏன்டா இந்த விஷயத்துல பொய்யா சொல்லுவேன் நானு. எங்க வீட்டு புள்ளைக்குப் பொண்ணு தர உனக்கு சம்மதமா இல்லையா? அதைச்சொல்லு முதல்ல.”

“இன்னா மதினி இப்புடி  கேட்டுபுட்டீங்க? காத்துக்கினுக்கீறேன் மதினி. வெற்றியாட்டம் மாப்ள எங்க தேடிக்கினாலும் கெடைக்குமா எனக்கு?” வெகுவாய் மகிழ்ந்து போனான்.

ஆயாவால் இப்போதுவரை நம்பமுடியவில்லை மீனாவின் வார்த்தைகளை. தன்பேத்தியின் நல்வாழ்வு கண்முன்னே விரிய மனநிறைவோடு அமர்ந்திருந்தார்.

ரதிமீனா வெற்றியோடு வரும்போதே மகேந்திரனுக்கும் ஞானவேலுவுக்கும் சுருக்கமாய் விஷயத்தைக்கூறி வரச் சொல்லியிருக்க அவர்களும் சற்று நேரத்திலேயே வந்திருந்தனர்.

கயலை பெண் பார்க்க வந்த விபரம் நொடியில் குப்பத்தினுள் பரவிவிட, ராணியும் ஜீவாவும் உடனடியாக வந்துவிட்டனர்.

கயலுக்கு நல்லதொரு வாழ்க்கை அமையப் போவதில் அவ்வளவு மகிழ்ச்சி அவர்களுக்கு. பெண்பார்க்க வந்தவர்களுக்குக் கொடுக்க பலகாரங்கள் செய்யத் துவங்கிவிட, நித்திலா அவர்களுக்கு உதவிக் கொண்டிருந்தாள்.

நித்திலாவுக்குமே மிகுந்த மனநிறைவாய் இருந்தது. வெற்றியைப் பொருத்தவரை மிகவும் நல்லவன். கயலுக்கு ஏற்ற வரன் அமையப்போகிறது என்ற எண்ணமே மிகுந்த மகிழ்வாய் உணர வைத்துக் கொண்டிருந்தது அவளை.

அன்றே நாளும் நல்ல நாளாய் இருக்க, வீட்டோடு நிச்சயம் செய்து விட முடிவு செய்திருந்தனர்.

மாப்பிள்ளை சார்பாய் ஞானவேலுவும் ரதிமீனாவும் பெண் சார்பாய் பாரியும் நித்திலாவும் வெற்றிலை பாக்கு மாற்றிக் கொண்டு வெகு எளிமையாய் நிச்சயம் செய்து முடித்திருந்தனர்.

 வந்திருந்தவர்களுக்கு வீட்டில் சமைத்திருந்த விருந்தைப் பறிமாறிய பிறகு திருமணநாளை முடிவு செய்ய பேசிக் கொண்டிருந்தனர்.

வெற்றி ஒன்றும் அந்நியமில்லை கயலுக்கு. சிறு வயதிலிருந்தே ஒன்றாய் வளர்ந்தவர்கள்தான். பாரியைப் போன்றே அவள்மீது மிகுந்த பாசத்தைக் காட்டுபவனும் கூட.

ஆனால் திடுதிப்பென்று இப்படி பெண் கேட்டு வந்தது கயலைத் திக்குமுக்காடச் செய்திருந்தது. மாப்பிள்ளை பார்க்கச் சொல்லி முழுதாய் ஒரு நாள் முடியவில்லை, அதற்குள்ளாகவா என்று அயர்ந்து போயிருந்தாள்.

ஆயாவுக்குதான் தலைகால் புரியவில்லை. முகம் முழுக்க சந்தோஷம் மின்ன ஆயா வந்து அவளிடம் சம்மதத்தைக் கேட்டபோது மறுக்க எந்த காரணமுமே இல்லை அவளிடம்.

இதோ பேசி முடித்து வெற்றிலை மாற்றி நிச்சயமும் முடிந்த நிலையில் வெற்றியின் உரிமையான பார்வையும் புன்னகையும் புதுவிதமாய் தெரிய, மௌனமாய் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள்.

வாழ்வின் நிதர்சனம் புரிந்தவள் கயல். தன்னுடைய நல்வாழ்வு மட்டுமே தன் மாமனுக்கும் ஆயாவுக்கும் மகிழ்ச்சியைத் தரும் என்று நன்கு உணர்ந்திருந்ததால் புது வாழ்க்கையை ஏற்றுக் கொள்ள அவள் தயாராகவே இருந்தாள்.

இருந்தாலும் உள்ளுக்குள் முரண்டிய ஏதோ ஒன்று மாப்பிள்ளை வெற்றி என்றதும் லேசாய் மிக லேசாய் மட்டுப்பட்டிருந்தது. துயரமோ மகிழ்ச்சியோ எந்த ஒரு உணர்வும் இன்றி வெற்றுக் கலனாய் இருந்தது மனது.

“இந்த மாசம் முழுசா நாளு நல்லாதான் இருக்கு. இந்த மாசத்துல வர்ற அடுத்த முகூர்த்ததுல கண்ணாலத்தை வச்சிக்கலாமா? பத்து நாள்லயே நல்ல முகூர்த்த நாளு வருது. வழக்கமா பண்றது போல நம்ப வேம்புலியம்மன் கோவில்ல கண்ணாலத்தை முடிச்சிக்கினு குப்பத்துல எல்லாருக்கும் விருந்து ஏற்பாடு பண்ணிருவோம். என்ன சரிதான? நீ என்ன சொல்ற பாரி?”

கையில் இருந்த காலண்டரில் பார்வையை ஓட்டியபடி மகேந்திரன் வினவ, அனைவரும் ஒப்புக் கொண்ட போதும் மென்மையாய் மறுத்திருந்தான் பாரி.

“ஐயா, இம்மா அவசரமா இன்னாத்துக்குங்க? நெதானமா அடுத்த மாசத்துல வர்ற போல வேற நாளு பார்க்கலாமே?”

பத்தே நாளில் முகூர்த்தம் எனவும் உள்ளுக்குள் தேவதைகள் வெள்ளை உடையில் லலலலா பாடி ஓட வெகு சந்தோஷமாய் வாயெல்லாம் பல்லாக தலையைத் தலையை ஆட்டிய வெற்றி பாரியின் வார்த்தைகளில் வெகு கடுப்பாகி, “ஏன்டா?” என்றபடி அவனை முறைக்க, வெற்றியின் முகத்தையே பார்த்திருந்த ரதிமீனாவோ பீறிட்ட சிரிப்பை முயன்று அடக்கினாள்.

“எதுக்குடா வேற நாளு. அப்பா சொல்ற நாளே நல்லாதான இருக்கு.” வார்த்தைகளை வெற்றி கடித்துத் துப்ப,

“இல்ல வெற்றி. கயலு கண்ணாலம் இந்த குப்பத்துல இருக்க அல்லாரும் மூக்கு மேல வெரல வைக்கிற மாறி திருவிழா கணக்கா நடத்தனும்னு ஆசை வச்சிருக்கேன்டா.

இப்ப மாப்பிள்ளையும் நீயின்னு ஆனப்புறம்… என் நண்பன் கண்ணாலம், சும்மா வுட்ருவனா? கலக்கலா நடத்த வேணாம்?

பத்து நாளைக்குள்ள ஏற்பாடல்லாம் ஜரூரா ஆவுமா? அதான் கொஞ்சம் தள்ளி வைக்கலாமுன்னு கேட்டேன்.”

“நீ ஒரு ஆணியும் புடுங்க வேணாம். சிம்பிளா கல்யாணம் பண்ணி விருந்து வேணும்னா கிராண்டா வச்சிக்கலாம். பத்து நாளு இருக்கு. அதெல்லாம் நாம சேர்ந்து செஞ்சா எல்லா வேலையும் முடிச்சிடலாம்.” வெற்றி கடுகடுக்க,

“டேய் நீ ஏன்டா இப்படி பறக்கற? நம்ப வீட்டுக்கும் இது கடைசி கல்யாணம். நல்லா கிராண்டா நடத்தனும்னுதான் எனக்கும் ஆசை. பாரி சொல்றது சரிதான். நீங்க அடுத்த மாசம் இல்லனா அதுக்கு அடுத்த மாசத்துல நாளு பாருங்கப்பா.” என்று ஞானவேலு சொல்ல மகேந்திரனும் அதை ஆமோதித்தார். நொந்தே போனான் வெற்றி.

 மெல்ல வெற்றியின் புறம் குனிந்த ரதிமீனா,

“என்னடா சுத்தி இம்புட்டு துரோகிகளை கூடவே வச்சிருக்க? பேசாம பொண்ண இன்னைக்கே தூக்கிட்டு வந்துடேன். இவுங்க பொறுமையா எப்ப வேணா கல்யாணத்தேதிய முடிவு பண்ணட்டும்.”

நறநறவென பல்லைக் கடித்தவன், “தூத்துக்குடிக்காரி நீ பொண்ணத் தூக்கறதுலயே குறியா இரு. அதெல்லாம் என் பொண்டாட்டி முறையாதான் நம்ப வீட்டுக்கு வருவா.

நீ மரியாதையா உம்புருஷனையும் மாமனாரையும் சரிகட்டி எவ்வளவு சீக்கிரம் முகூர்த்தம் வைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வைக்க சொல்ற.

இந்தப் பரதேசிய நானு கவனிச்சிக்கிறேன்.”

என்றபடி பாரியை பாசமாய் பார்த்தவன், “பாரி உன்கிட்ட கொஞ்சம் பேசனும் வெளிய வர்றியா?” என்றழைக்க,

மும்முரமாக காலண்டரில்  மகேந்திரன் ஞானவேலுவோடு சேர்ந்து திருமண நாளைத் தேடிக் கொண்டிருந்தவன்,

“இருடா முகூர்த்த தேதிய முடிவு பண்ணிக்கினு வர்றேன்.”

“அதை அவங்க பேசி முடிவு பண்ணுவாங்க. நீ வா உனக்கு நானு முடிவு கட்றேன்.” என்று நறநறத்தவன் பாரியின் கையைப் பிடித்து இழுத்தபடி கடலை நோக்கி நடந்தான்.

“இன்னாடா விஷயம்? முக்கியமா பேசிக்கினுகிறப்ப இழுத்தாந்துட்ட.”

“கொய்யால, நானே எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கயலை எங்க வீட்டுக்கு கூட்டிக்கினு போகனும்னு நெனைச்சிருந்தா, ஆளாளுக்கு இஷ்டத்துக்கு கல்யாணத்தை தள்ளி வைக்கிறீங்க.”

கையை வளைத்து முறுக்கி முதுகில் வைத்து பாரியைக் குனிய வைத்துக் கும்மியவன், “மரியாதையா அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம் வச்சிக்கலாம்னு போய் சொல்லு அங்க.” என்று மிரட்ட,

“டேய், வுட்றா! ஏன் வெற்றி அம்மா அவசரமாடா கண்ணாலத்துக்கு.” என்று சிரித்தவனை மேலும் குமுறியவன்,

“இல்லயா பின்ன? ஏன்டா எல்லாரும் குடும்பஸ்தனா ஆகறப்ப நான் ஆக வேணாமாடா?”

“கயலு மேல இம்மா ஆசைய வச்சிக்கினு ஏன்டா இத்தினி நாளு சொல்லல? நீகாண்டி ஒத்த வார்த்தை சொல்லியிருந்தா எப்பவோ உங்க கண்ணாலத்த ஜமாய்ச்சிருப்பேன் வெற்றி.”

அவ்வளவு ஆதங்கம் பாரியின் குரலில்.

“நான் ஏன் சொல்லலன்னு உனக்குத் தெரியாதா?” உரைத்த வெற்றி மௌனமாய் கடலைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

எத்தனையோ நாட்கள் கயலுக்காய் வரிந்துகட்டி தன்னோடு சண்டையிட்ட வெற்றி நினைவுக்கு வந்தான். அப்போதுகூட புரிந்து கொள்ள முடியாதவனாய் தான் இருந்தோமே என்று தன்னையே நொந்து கொண்டான் பாரி.

வெற்றியின் நேசமும் பெருந்தன்மையும் நன்றாய் புரிந்தது. தன் நன்பனை பின்னிருந்தே அணைத்துக் கொண்டவன்.

“மெய்யாலுமே சொல்றேன் உன்னைய மாறி ஒரு மாப்ள கெடைக்க  கயலு ரொம்ப குடுத்து வச்சிருக்கு.”

வெகுவாய் கண்கள் பனித்திருந்தது பாரிக்கு.

“போடாங், கயலு என் தேவதைடா. நான்தான் குடுத்து வச்சிருக்கனும் அவ எனக்கு கிடைக்க. போயி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முகூர்த்தம் வைக்க சொல்லு போ.”

“மனசெல்லாம் நெறைஞ்சு அம்மாம் சந்தோஷமாக்கீறேன் வெற்றி. உன் கண்ணாலத்தை திருவிழா கணக்கா நடத்துறேன் பாரு.”

 நண்பனை ஆரத்தழுவிக் கொண்டவன் வீட்டுக்கு வந்து அனைவரோடும் கலந்து பேசி அடுத்த மாதத்தில் வரும் முதல் முகூர்த்தத்தை முடிவு செய்தான்.

இடையே இருபது நாட்களே இருக்க திருமண வேலைகளை பிரித்துக் கொண்டவர்கள் ஜரூராய் திருமண வேலைகளைத் துவங்கினர்.

 

மறுநாள் காலையில் வாசலில் அமர்ந்து தனது புல்லட்டை பளபளப்பாகத் துடைத்துக் கொண்டிருந்தான் பாரி. நித்திலா கல்லூரி செல்ல கிளம்பிக் கொண்டிருந்தாள்.

தனது வண்டியில் வந்து பாரி வீட்டின் வாசலில் இறங்கினான் நிகிலேஷ்.

“வா மாப்ள. மாமா வண்டியக் கண்டுக்கினியா? டக்கராக்கீதா?”

“ம்க்கும், என்னவோ எங்க அக்காவ ஏத்திக்கிட்டு ஜோடியா போகப் போற மாதிரி பளபளப்பா வண்டியத் தொடைச்சிக்கிட்டு இருக்கீங்க? எங்க பின்னாடியே பாடிகார்டு போல வர்றதுக்கு இவ்வளவு பில்டப்பு” கடுப்பாக தலையிலடித்துக் கொண்டான் நிகிலேஷ்.

நித்திலா கல்லூரி செல்லக் கிளம்பிய முதல் நாளே நிகிலேஷை வரச்சொல்லி அவனோடு வழக்கம்போல கல்லூரி செல்லத் துவங்கியிருந்தாள்.

தன்னோடு வருவாள் என்று ஆவலாய் நினைத்திருந்த பாரிக்கு பெரிய பல்ப்பும் கொடுத்திருந்தாள். வேறு வழியின்றி அவனும் வழக்கம்போல அவர்களுக்கு பாதுகாப்புக்காய் பின்தொடர்ந்து கொண்டிருந்தான்.

“எங்க பாரியண்ணன் நைன்டீஸ் கிட்ஸ்டா. அடிச்சிபுடிச்சி அவுருக்கு கல்யாணம் ஆனதே பெரிய விஷயம். இதுல அண்ணிகூட ஷோக்கா பேசி பழகுறதெல்லாம் இப்போதைக்கு நடக்கற மாதிரி எனக்குத் தெரியல.” அலுத்துக் கொண்டான் அங்கு கல்லூரி செல்ல தயாராகி வந்த சவரிமுத்து.

“இன்னாங்கடா ரெண்டு பேரும் என்னிய கலாய்க்கிறீங்க?”

“பின்ன என்ன மாமா? அக்காகிட்ட தைரியமா நானே காலேஜ்ல கொண்டுபோய் விடறேன்னு சொல்லலாம்ல. இப்படியே ஒதுங்கி ஒதுங்கி நின்னீங்கன்னா என்ன பண்ண முடியும். அவ திட்டுனாலும் பரவாயில்லன்னு பேசி பழகுங்க மாமா.”

“உங்க அக்கா திட்றது என்ன ரெண்டு அடி அடிச்சாகூட வாங்கிக்குவேன். ஆனா அது கண்ண கசக்குச்சின்னா பார்க்க முடியல மாப்ள. இப்பதான் அதுவே கொஞ்சம் கொஞ்சமா எங்க வூட்டு ஆளுங்களோட நல்லா பேசி பழகினுக்குது. நான் எதனா பேசப்போக திரும்ப மூஞ்ச சுருக்கினு ஒதுங்கி நின்னா இன்னாப்பண்றது?”

“ம்க்கூம்… டேய் நிக்கி இவுரு சரிப்பட மாட்டாருடா. நாமளே எதனா செஞ்சாதான் உண்டு.” என்றபடி நிகிலேஷின் வண்டியில் ஏறி அமர்ந்த சவரி,

“நீ வண்டிய எடு. இன்னைக்கு எப்படியாச்சும் பேசி சரிகட்டி அண்ணிய பாரியண்ணன் காலேஜூக்கு இட்டுனு போவட்டும்.”

நிகிலேஷ்க்கும் அது சரியென்று பட, வண்டியை நகர்த்தினான்.

“டேய், இப்புடி கோர்த்து வுட்டுட்டு போவாதீங்கடா. அது கண்ணாலயே எரிச்சுப்புடும்டா என்னிய.”

“எவ்வளவு சேதாரம் ஆனாலும் பரவாயில்லை. இன்னைக்கு எங்க அக்காவ நீங்கதான் கூட்டிட்டு போகனும்.” என்றபடி நிகிலேஷூம் சவரியும் கிளம்பிச் சென்றுவிட செய்வதறியாது விழித்து நின்றான் பாரி.

கல்லூரி செல்ல கிளம்பி வெளியே வந்த நித்திலா தம்பியைக் காணாது திகைத்தவள், பாரியை ஒரு பார்வை பார்த்தபடி தம்பிக்கு அழைத்தாள்.

“காலேஜ்க்கு டைம் ஆச்சு. இன்னும் வரலயா நீ?”

“நித்திக்கா இன்னைக்கு முக்கியமான பிராஜெக்ட் வொர்க் இருக்கு. அதான் நானும் சவரியும் காலையில சீக்கிரமே காலேஜ்க்கு வந்துட்டோம். நீ மாமாகூட போ.” பேசியவன் நித்திலா பதில் பேசும் முன் அலைபேசியை வைத்துவிட,

“இவனை” பல்லைக் கடித்தவள், பேசாமல் கல்லூரிக்கு லீவ் போட்டு விடலாமா என்று யோசித்தாள்.

அவளுக்குமே அன்று முக்கிய வகுப்புகள் இருப்பதால் என்ன செய்வது என்று யோசித்தபடி நிற்க, வெளியே வந்த கயலோ,

“இன்னாக்கா இன்னுமா நீ கெளம்பல? தம்பி வரல? நேரமாச்சே!”

“ம்ம்… நிக்கி இன்னைக்கு சீக்கிரம் காலேஜ்க்கு போயிட்டானாம்.”

“ஓ…” நொடியில் சூழலைப் புரிந்து கொண்ட‌ கயல், “அதுக்கு இன்னா இப்போ? அதான் மாமாக்கிதே. கொண்டுபோய் வுடுன்னா வுடப்போவுது.”

“மாமா அக்காவ கூட்டினு போயி காலேஜூல வுடு மாமா”

தன்னைமீறி முகத்தில் பிரகாசம் கூட வேகமாய் தலையாட்டியபடி பாரி வண்டியில் ஏறி அமர, நித்திலாவுக்குதான் இவனோடு செல்வதா என்று கடுப்பாய் இருந்தது. ஆயினும் வேறுவழியின்றி ஏறி அமர்ந்தாள்.

கயலும் சந்தோஷமாய் வழியனுப்பி வைக்க, கல்லூரியை நோக்கிப் பயணம் துவங்கியது. முதன்முதலில் தன்பின்னே மனதுக்கினியவள் நெருக்கமாக அமர்ந்திருக்க உள்ளத்தின் உற்சாகம் வண்டியின் வேகத்தில் பிரதிபலித்தது.

சென்னை டிராஃபிக்கில் வண்டி செல்லும் வேகத்தில் வண்டியில் சரியான பிடிமானம் இன்றி தவித்தவள் மிகுந்த கடுப்போடு,

“வண்டியில தேவையில்லாத எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கெல்லாம் எதையெதையோ வாங்கி மாட்டி வச்சிருக்க, ஆனா பின்னாடி உட்கார்ந்து புடிச்சிக்க எதுவுமே இல்ல. வழுக்குது. நீ வேகமா ஓட்றது எனக்கு கீழ விழுந்துடுவேனோன்னு பயமா இருக்கு.”

சற்று வண்டியின் வேகத்தை மட்டுப்படுத்தியவன், அவள் முகத்தைப் பார்க்கும்படி முன்புற கண்ணாடியை சரிசெய்து கொண்டு,

“ஏங்க பசங்கலாம் உக்கார்ந்து வர்றபோல உக்கார்ந்து என்னிய புடிச்சிக்கினா வழுக்காதுங்க.” ஆசையும் கள்ளச்சிரிப்புமாய் கூற,

அவனைக் கடுப்போடு முறைத்தவள், “அப்படியெல்லாம் என்னால உட்கார முடியாது. நீ வண்டிய நிறுத்து. நான் ஆட்டோ புடிச்சி போயிக்கிறேன்.”

“இல்லல்ல வேணாம் வேணாம். நீங்க இப்புடியே உக்கார்ந்து என்னிய புடிச்சிக்கோங்க. நானு கொஞ்சம் மெதுவா ஓட்றேன்.”

வேறுவழியின்றி எரிச்சலாக அவனை முறைத்தவள், தோள்மீது கைவைத்து பிடித்துக் கொள்ள இறக்கை இன்றி பறந்து கொண்டிருந்தான் பாரி.

ஒருவழியாய் பயணம் முடிந்து கல்லூரியும் வர, இறங்கிக் கொண்டவளிடம், “சாயங்காலம் கரெக்டா காலேஜூ முடியிற நேரத்துக்கு வந்துடறேங்க.” என்க,

“அதெல்லாம் ஒன்னும் வேணாம். எப்பவும்போல நிக்கி வருவான். அவன்கூட நான் வந்துடுவேன்.” என்றவள் தோழிகளோடு இணைந்து கல்லூரிக்குள் சென்றுவிட, மைத்துனனுக்கு உடனே அலைபேசியில் அழைத்தான் பாரி.

விட்டால் நிகிலேஷ்க்கு சிலை வைத்து கோவில் கட்டும் அளவுக்கு பரவசத்தோடு இருந்தவன்,

“மாப்ள, நீ இன்னா பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்குத் தெரியாது. ஆனா உங்க அக்காவ இட்டுக்கினு போவ நீ இனி வரக்கூடாது. இத்த மட்டும் மாமாவுக்காண்டி செஞ்சினா எனக்கு பொறக்குற பொண்ணு உனக்குத்தான் மாப்ள.”

“பார்றா… பிளான் சக்சஸ்ஸா. குரல்லயே உற்சாகம் வழியுதே மாமா. ஆனா உங்களுக்கு குசும்புதான? போனாபோவுதே சிங்கிளா இருக்கற மாமா மிங்கிளாக எதையாச்சும் பண்ணலாம்னு நான் பண்ணா, நீங்க எனக்கு வயசாகற வரைக்கும் என்னைய சிங்கிளாவே வச்சிருக்க ஐடியா பண்றீங்களா?

உங்களுக்கு எப்ப பொண்ணு பொறந்து வளர்ந்து அதை நான் கட்றது?”

“ஹா…ஹா… ஒரு குஷியில சொல்லிட்டேன் மாப்ள. நீ காண்டாவாத. உனக்கு புடிச்ச மாறி பொண்ணாப் பார்த்து முடிச்சிடலாம். நீ படிப்ப முதல்ல முடி.”

“லஞ்சமெல்லாம் பலமாதான் இருக்கு. எங்க அக்கா சந்தோஷமா இருந்தாலே எனக்குப் போதும் மாமா.

 அவளுக்காக என்ன வேணும்னாலும் செய்வேன்.

நீங்களும் அவகூட சகஜமா பேசி பழகுங்க மாமா. ஒதுங்கியே இருந்தீங்கன்னா இப்படியே இருக்க வேண்டியதுதான்.”

“…”

“அவ கோபம் கொஞ்சம் குறைஞ்சாலே போதும் சகஜமாகிடுவா. நான் அவளுக்கு ஃபோன் பண்ணி எதாவது சொல்லி சமாளிச்சிக்கிறேன். சாயந்திரம் அவளை மறக்காம பிக்கப் பண்ணிக்கோங்க.”

“மறக்கறதா? பாய விரிச்சி இங்கயே படுத்து கிடந்தாச்சும் உஷாரா கூட்டினு போயிருவேன் மாப்ள.”

பாரியின் பதிலில் வாய்விட்டு சிரித்த நிகிலேஷ், தனது தமக்கைக்கு அலைபேசியில் அழைத்து மாலையிலும் தன்னால் வரமுடியாது என தெரிவிக்க, தம்பியிடம் கடுப்பாகி திட்டியவள் வேறுவழியின்றி மாலையும் பாரியுடன் வந்து இறங்கினாள்.

இதுவே அடுத்தடுத்த நாட்களிலும் தொடர இதுதன் தம்பி மற்றும் பாரியின் திட்டம்தான் என்பதைப் புரிந்து கொண்டவள் இருவரின் மீதும் வெகு கடுப்போடு சுற்றிக் கொண்டிருந்தாள்.

இப்படியே ஓரிரு நாட்கள் கழிய, மாலையில் கல்லூரி முடிந்து பாரியோடு வந்து கொண்டிருக்கும்போது திடீரென இவர்களை வழிமறித்தபடி வந்து நின்றது இன்ஸ்பெக்டர் நாதனின் வாகனம்.

அது சற்று ஆளரவமற்ற சாலை. திடீரென ஓவர்டேக் செய்து முன்னிருத்தப்பட்ட ஜீப்பை பாரியோ நித்திலாவோ சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை..

எதிர்பாராது குறுக்கே வந்த வாகனத்தினால் சற்று தடுமாறிய வண்டியை சுதாரித்து பாரி நிறுத்த, நித்திலாவும் பதட்டத்தோடு இறங்கி நின்றாள்.

தனது ஜீப்பிலிருந்து இறங்கிய நாதன் இருவரையும் சற்று வன்மத்தோடு நோக்கியபடி,

“அடா அடா அடா… என்ன ஜோடி? என்ன ஜோடி? நீங்க ரெண்டு பேரும் ஜோடியா போறதைப் பார்த்து எப்படி இருக்கு தெரியுமா எனக்கு?”

“…”

“அந்த கான்ஸ்டபிள் கூட சொன்னான் நீங்க ரெண்டு பேரும் முன்னாடியே காதலிச்சீங்கன்னு. அப்ப அதை நம்பல ஆனா இப்ப நம்பறேன்.”

“…?”

“இல்லனா பெத்த அப்பனோட சாவுக்கு காரணமானவன் கூடவே ஜோடி போட்டு போவாளா இவ?  

“அவ இவன்னு மரியாதை இல்லாத பேசினாக்கா பல்லு எகிறிடும். இன்னா நாதன் வாங்குனதுலாம் மறந்து போச்சா?

பிரச்சினை வேணாம்னுதான் ஒதுங்கி போயினுக்கிறேன். ரொம்ப ஒரசுன… உசுரோட இருந்துக்க மாட்ட பார்த்துக்க.”

“அந்த மகேந்திரன் உனக்குப் பின்னாடி இருக்கற தைரியம்தான என்கிட்டவே இப்படி பேசச் சொல்லுது. உன் திமிர கூடிய சீக்கிரம் அடக்குறேன்டா.”

எரித்துவிடும் கோபத்தோடு நாதனைப் பாரி முறைத்துக் கொண்டிருக்க, பாரியிடம் பேசியபடியிருந்த நாதனின் விழிகளோ நித்திலாவின் மீதே படிந்திருந்தது.

அவன் பார்வையே உடலைக் கூசச் செய்ய, அன்னிச்சையாக பாரியின் பின்னே ஒடுங்கி தன்னை மறைத்துக் கொண்டவள் அவனை ஒட்டி நின்று அவனது சட்டையையும் பின்புறமாய் பற்றிக் கொண்டாள்.

அவளது கரங்களின் நடுக்கமே அவளது பயத்தின் அளவைப் பறைசாற்ற, “போலாமே” என்று மெல்லிய குரலில் பேசியவளை மறைத்தவாறு முழு உயரத்துக்கும் நிமிர்ந்து நின்றான்.

“இப்ப உனக்கு இன்னாப் பிரச்சன? இன்னாத்துக்கு வழிய மறிச்சு வம்பு பண்ணினுக்கிற?

நானு உன் வழிக்கே வர்றதில்ல நாதன். ஒதுங்கிதான் போயினுக்கிறன். சும்மா சும்மா கொடைச்சல் குடுத்துக்கினா ஆளு அட்ரஸ் இல்லாமப்பூடுவ தெர்தா?”

“யாரு? நீ என் வழிக்கு வர்றதில்ல. என் கண்ணுல விழுந்து முழுசா தப்பிச்சுப் போனவ இவதான். அதுக்கு நீதான் காரணம். உன்னையும் இவளையும் லேசுல விட்ருவேனா நான்.”

“இன்னாடாப் புடுங்க முடியும்? உன்னால ஆனதைப் பாருடா. இந்த வெத்து  பில்டாப்பெல்லாம் வேற யார் கையிலயாவது வச்சிக்கோ என்னாண்ட வேணாம். ஒத்து அப்பால.

நீங்க ஏறுங்கங்க.” என்றவாறு வண்டியைக் கிளப்ப பாரி முனைய.

“வெத்து பில்டப்பா? உன் கண்ணு முன்னாடியே இவளைத் தூக்கிக் காட்றேன். அப்ப நான் யாருன்னு தெரியும்டா.”

நாதனின் கண்களில் தெரிந்த வன்மம் நித்திலாவை விதிர்விதிர்க்கச் செய்ய, அவனது வார்த்தைகளை அலட்சியமாய் ஒதுக்கிய பாரியோ வண்டியை நகர்த்தினான்.

 

தொடரும்.