ஆழி சூழ் நித்திலமே 23(1)

மழை வரும் போல சூழலில் இறுக்கம். கடல்காற்று கூட வெம்மையாய் தழுவிச் சென்றது. கட்டிலில் படுத்திருந்த நித்திலாவுக்குப் பொட்டு உறக்கமில்லை.

சோபையாய் ஒளிர்ந்த விடிவிளக்கையே பார்த்தபடி படுத்திருந்தாள். மனம் முழுக்க அன்றைய நிகழ்வையே நினைத்திருந்தது.

படிக்காத பாமர மக்கள்தான், ஆனாலும் அவர்களது பிணைப்பும் புரிதலும் பாசமும் வியப்பூட்டியது.

அவ்வளவு பிரச்சனை…  அதுவும் அதற்கு முழுக்க முழுக்க அவள்தான் காரணம். அவளை வைத்துதான் பிரச்சனை. ஆனாலும் ஒருவர்கூட வாய் வார்த்தைக்குக் கூட தன்னை குறை சொல்லாதது வெகுவாய் பாதித்திருந்தது அவளை.

எண்ணூர் துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மீனவர்கள் போராட்டத்திற்கு அனைத்து சங்கங்களும் அழைப்பை விடுத்திருக்க, கடலோர மீனவ குப்பங்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்களது குப்பத்திலிருந்தும் மீனவர்கள் சென்றிருந்தனர்.

இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடும் மீனவர்களை கைது செய்து மாலைக்குள் விடுவிப்பது என்பது பொதுவானதுதான்.

ஆனால் நாதனோ உள்நோக்கத்தோடு சில மீனவர்கள் மீது மட்டும் போராட்டத்தில் கலகம் விளைவித்ததாக கூறி வழக்கு போட்டு கைது செய்திருந்தான். அதிலும் குறிப்பாக பாரியின் நலம் விரும்பிகளாக பார்த்து திட்டம் போட்டு கைது செய்திருந்தான்.

தாமஸ், டேவிட், மணி, தேவா மற்றும் சில மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருக்க, மாலையானதும் மற்ற மீனவர்களை விடுவித்தவர்கள் இவர்கள் நால்வர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

திருமண வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருப்பதால் பாரியும் வெற்றியும் கலந்து கொள்ளவில்லை. சங்கத்தின் சார்பில் தேவாவை அனுப்பியிருந்தான். அனைத்து குப்பத்து மக்களும் இணைந்து அறவழியில் நடத்திய போராட்டத்தில் வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியோடு இவர்களை மட்டும் கைது செய்திருந்தான் நாதன்.

அதுமட்டுமில்லாமல் ஸ்டேஷனில் வைத்து நால்வருக்கும் அடியும் விழுந்திருந்தது. “மாத்தி மாத்தி அவளுக்கு பாதுகாப்பு குடுத்தா என்கிட்ட இருந்து தப்பிச்சிடுவாளா? இதோ உங்களை உரிக்கிற உரில பாரி கதறிட்டு வருவான் பாரு இங்க. அவனையும் கேஸை போட்டு உள்ள தள்றேன்.”

வெளிப்படையாகவே நால்வரையும் மிரட்டி அடி வெளுத்திருந்தான். நித்திலாவின் நிழலைக்கூட நெருங்க முடியாதது அவ்வளவு கடுப்பாக்கியிருந்தது அவனை.

விஷயம் கேள்விப்பட்டதும் வெகுவாக கொந்தளித்து நாதனை வெட்டுவேன் குத்துவேன் என குதித்த பாரியை மகேந்திரன்தான் அடக்கியிருந்தார்.

“அடுத்த வாரம் வூட்ல கல்யாணத்தை வச்சிக்கினு இப்ப போய் அவனாண்ட சண்ட வலிச்சிக்கினு வரப்போறியா? அவன் அதுக்கோசரந்தான் நம்ம ஆளுங்களைத் தூக்கி உள்ள வச்சினுக்கிறானு கூட உனக்குப் புரியலயா?”

“நம்ப ஆளுங்கய்யா… எம்மேல இருக்கற காண்டுல அவங்களை அவன் இன்னா வேணா பண்ணுவான். அவுங்கள வுட்ற முடியுமாய்யா?” குமுறினான் பாரி.

“நம்ம குப்பத்து ஆளுங்கள நான் வுட்ருவனா? எம்மேல நம்பிக்கை இல்லையா உனக்கு? கம்முனு இரு பாரி. நம்ம பசங்களை நான் வெளிய கொண்டாறேன்.”

“ஐயா, உங்க மேல எனக்கு நெறைய நம்பிக்கை இருக்குங்க. ஆனா அந்த நாதாரிய எங்கையால வகுந்து போட்டாதான் என் கோவம் தீரும். நேரா மோத துப்பில்லாம பொட்டப்பய கணக்கா போலீசு உடுப்புல ஒளிஞ்சிக்கினு உதார் வுட்டுனுக்கிறான். 

அவனெல்லாம் போலீசா இருக்கவே லாயக்கில்லாதவன் ஐயா.”

“பொறுமையா இரு பாரி. நமக்கும் ஒரு காலம் வரும். அப்ப அவனோட தடமே இல்லாம செய்வோம். இப்ப நமக்கு காரியம்தான் முக்கியம்.”

கோபத்தைக் கட்டுப்படுத்த இயலாமல் பல்லைக் கடித்த பாரி, “ஆனா ஐயா, இதுக்கெல்லாம் அவன் பதில் சொல்லியே ஆவனும். அவன் முடிவு எங்கையாலதான்.”

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நித்திலாவுக்கு மிகுந்த மனவுளைச்சலாய் இருந்தது. அதிலும் தனக்காகத்தான் இந்த நிகழ்வு என்பது தெரிந்ததும் மிகுந்த குற்றவுணர்ச்சியாய் இருந்தது.

 பாரியை சமாதானப்படுத்திய மகேந்திரன், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் எம்எல்ஏ வைத் தொடர்பு கொண்டு அடுத்த இரண்டு மணி நேரத்தில் நால்வரையும் விடுவிக்கச் செய்திருந்தார்.

நால்வரும் குப்பத்துக்கு வந்து சேரும்வரை குப்பத்து மக்கள் அனைவரும் அங்கே கூடியிருந்தனர். வெகுவாய் அடிவாங்கி முகம் கைகால் வீங்க வந்திறங்கிய நால்வரையும் பார்த்ததும் குப்பத்து மக்கள் அனைவருக்குமே கோபம் கொந்தளித்தது.

அதிலும் அவர்களது வீட்டுப் பெண்களின் அழுகை நித்திலாவுக்குத் தாங்க முடியாத வருத்தத்தைக் கொடுத்தது.

எளிய மக்களை அதிகாரத்தின் பின் ஒளிந்து கொண்டு வதைக்கும் நாதன் போன்றவர்களை எண்ணி உள்ளம் கொதித்தது. கோபப்படுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும் அவளால்? வலியில் துடித்து அமர்ந்திருந்த தேவாவைப் பார்த்தவளுக்கு கண்கள் கலங்கியது.

பார்த்து பழகி சில நாட்களே ஆகியிருந்தாலும் வஞ்சமில்லா பிரியத்தைக் காட்டுபவர்களின் வேதனை அவளைத் தாக்கியது. அதுவும் அந்த வேதனை தன்னை முன்னிட்டுதான் என்பது மேலும் வருத்தியது அவளை.

அந்த நேரத்தில் பாரியின் ரௌத்திரம் நியாயமாய் பட்டதை வியப்பாய் எண்ணிக் கொண்டாள். இவர்களோடு சில நாட்கள் மட்டுமே பழகியிருந்த தனக்கே அவ்வளவு கோபம் வரும்போது, நகமும் சதையுமாய் பழகும் அவர்களுக்கு ஒன்றென்றால் அவனுக்கு எவ்வளவு கோபமிருக்கும்?

‘தம் மனமா அவனது கோபத்துக்கு வக்காலத்து வாங்குகிறது?’ எண்ணியபடி புரண்டு படுத்தாள்.

 

அன்றொரு நாள் வெளிப்படையாக பாரியின் முன்னேயே நித்திலாவைத் தூக்கிக் காட்டுவேன் என்று நாதன் சவால் விட்டது நித்திலாவை வெகுவாக பயமுறுத்தியிருந்தது.

இதெல்லாம் புதிது அவளுக்கு. தனக்கு திருமணம் ஆனதால் நாதனின் பிரச்சனை முடிந்துவிடும் என்று எண்ணியிருந்தாள். ஆனால் நாதன் அவ்வளவு ஈசியாக தன்னை விடமாட்டான் என்பது புரிந்ததும் வெகுவாய் பயந்து போனாள்.

சிறு வயதிலிருந்தே பொத்திப் பொத்தி பாதுகாப்பாக வளர்க்கப்பட்டவளுக்கு அவனது வெற்று மிரட்டல் கூட மிகுந்த பாதிப்பைத் தந்திருந்தது.

மறுநாள் கல்லூரிக்குக்கூட செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கொண்டாள். இரண்டு மூன்று நாட்களாக அவள் கல்லூரிக்குச் செல்லாததை பார்த்ததும் அவளிடம் வந்தான் பாரி.

“இன்னா ஆச்சுங்க? ரெண்டு நாளா காலேசு லீவுன்னீங்க. இன்னிக்குமா காலேசு லீவு?”

“காலேஜெல்லாம் இருக்கு. நான்தான் போகல.” மெல்லிய குரலில் பதிலளித்தாள்.

“ஏன்? இன்னாச்சு? மேலுக்கு எதனா நோவுதா?” அவள் முகமும் குரலும் காட்டிய சோர்வு படு பதற்றமாக்கியது அவனை.

“வாங்க, டாக்டராண்ட போயிக்கினு வந்துடலாம்.” அழைக்க,

“இல்ல, எனக்கு ஒன்னுமில்ல. நல்லாதான் இருக்கேன்.” மறுத்தவளை கேள்வியாய் பார்த்திருந்தான்.

“ஏங்க்கா? ரெண்டு நாளா சோர்ந்து சோர்ந்து கெடக்குற. இன்னா பிரச்சனைனு சொன்னாதான எங்களுக்கு தெரியும்.” கயலும் வினவினாள்.

“எனக்கு பயமா இருக்கு.” மெல்லிய குரலில் கூறியவளை குழப்பமாக பார்த்தனர் கயலும் பாரியும்.

“பயமா? இன்னாத்துக்குங்க?” உண்மையில் புரியவில்லை அவனுக்கு.

“எல்லாம் அந்த போலீஸ்காரனை நினைச்சுதான். அன்னைக்கு உன் முன்னாடிதான சொன்னான். என்னைத் தூக்கிக் காட்றேன்னு. எதுக்கு அவனுக்கு நாமே வழி செய்து தரனும். நான் வீட்டவிட்டு எங்கயுமே போகலனா பிரச்சினை இல்லல்ல.

இங்கன்னா நீ இருக்க. கயலு ஆயா இருக்காங்க. சுத்தி இந்த ஜனங்க… இவ்வளவு பேர் இருக்கும்போது நானும் நிம்மதியா இருப்பேன். ஆனா காலேஜ்ல அப்படி இல்லயே.”

மெல்லியதாய் சிரித்துக் கொண்டான் பாரி. “ஏங்க காலேசுல அம்மாம் புள்ளைங்கக்கீது. வாத்தியாருங்க இருப்பாங்க. அப்பறம் இன்னா பயம்?”

திருதிருவென விழித்தாள் நித்திலா. உண்மையில் பாரியோடு இருக்கும்போது இருக்கும் தைரியம் அவனை விட்டு சிறிது விலகினாலும் தனக்கு இருப்பதில்லை என்பதை உணர்ந்திருந்தாள். அதை அவனிடம் வெளிப்படையாக கூற முடியவில்லை அவளால்.

வீட்டில் அவள் இருந்தால் எங்குமே நகர்வதில்லை அவன். அவனது கண்பார்வை, தூரத்தில் இருந்தாலும் அவள்மீது மட்டுமே படிந்திருக்கும். நித்திலா அதை நன்கு உணர்ந்திருந்தாள். அது அவளுக்கு உள்ளூர தைரியத்தைத் தருவது நிஜம்.

ஆனால் கல்லூரி வாசலில் விட்டுவிட்டு பாரி நகர்ந்ததும் ஏதோ தன்னைச் சுற்றி இருந்த பாதுகாப்பு வளையம் விலகியதைப் போன்ற உணர்வு இருக்கும் அவளுக்கு. அந்த உணர்வே நாதன் மிரட்டியதும் அதிகரித்திருந்தது. வீட்டில் அவன் கண் பார்வையிலேயே இருந்து கொள்வோம் என்றும் எண்ண வைத்திருந்தது.

“ஏங்க பெருச்சாளிக்குப் பயந்துக்கினு எவனாச்சும் வூட்ட வுட்டுப்புட்டு ஓடுவானா? அந்த நாதாரி நாதன்லாம் குரைக்கிற நாய்ங்க. அவனுக்குப் பயந்து படிப்ப வுடுவாங்களா யாராச்சும்? கெளம்புங்க காலேசுக்கு.”

பாரியின் வார்த்தைகளில் பயம் விலகாத தயக்கத்தோடு அவனை ஏறிட்டாள்.

“உங்க நெழலுகூட உங்கள வுட்டுத் தள்ளிப் போனாலும் போவும். ஆனா நான் உங்களவுட்டு நவுர மாட்டேன். பயப்படாம வாங்க.”

“மாமாதான் அவ்வளவு சொல்லுதுல்ல, மெர்சலாவாம போக்கா காலேஜ்க்கு.” கயலும் கூறவும் எழுந்து கல்லூரிக்கு கிளம்பினாள்.

கல்லூரிக்கு சென்று அவளை விட்டவன் மாலைவரை அங்கேயே காத்திருந்து அவளை அழைத்து வந்தான். கல்லூரி வாசலிலேயே அவன் நின்றிருந்தது தெரிந்தது அவளுக்கு.

“வீட்டுக்கே போகலயா நீ? இங்கயே நின்னுட்டு இருந்த போல. வேலை எதுவும் இல்லயா உனக்கு?” அவனோடு வண்டியில் வரும் வழியில் நித்திலா மெதுவாய் கேட்க, “உங்களவிட வேற எதுவும் எனக்கு முக்கியமில்லங்க. காத்தால அம்மாம் பயம் பயந்தீங்களே உங்களத் தனியாவுட்டு போவ முடியுமா?”

பேசியவனைப் பார்த்தவள் பதிலின்றி சாலையில் பார்வையைப் பதித்தாள். வண்டி எப்போதும் செல்லும் பாதையைத் தவிர்த்து வேறு வழியில் சென்றது.

“என்ன இந்த பக்கம் போற? வீட்டுக்குப் போகலயா?”

“ஒரு முக்கியமான வேலை இருக்குங்க. அத்த முடிச்சிக்கினு வூட்டுக்குப் போகலாம்.” அவன் பதிலில் மௌனமானவள் சாலையில் கவனமானாள்.

வண்டி ஒரு கட்டிடத்தின் முன் நின்றது. வண்டியை நிறுத்தி இருவரும் இறங்கினர். கராத்தே மற்றும் சிலம்பம் ட்ரைனிங் சென்டர் என்ற போர்டைக் கண்டு அவனைக் குழப்பமாகப் பார்த்தாள்.

“வாங்க உள்ளாற போவோம்.”

“இங்க எதுக்கு வந்திருக்கோம்?”

“உங்களை இங்க சேர்த்து வுடறதுக்குதான் வந்திருக்கோம். சாயங்காலம் சீக்கிரம் காலேசு முடிஞ்சிடுது. வூட்டுக்குப் போறதுக்கு முன்னாடி தெனைக்கும் இங்க வந்து சண்டை கத்துக்கோங்க.”

“இப்ப நான் சண்டை கத்துக்கிட்டு என்ன பண்ண போறேன்? யார் கூட சண்டை போடப் போறேன். அதெல்லாம் எதுவும் வேணாம். நீ வண்டிய எடு வீட்டுக்கு போகலாம்.”

“அய்ய, சண்டை வலிச்சிக்கினு யாரையும் அடிக்கலாம் வேணாங்க. இதைக் கத்துக்கினீங்கனா மனசுல தெகிரியம் தன்னால வரும். யாரக் கண்டுக்கினும் மெர்சலாவ மாட்டீங்க.

உங்களுக்கு ஒன்னு தெரியுமா? உங்க தலையில குத்திக்கிறீங்களே ஹேர்பின்னு அது ஒன்னு போதும். ஒரு ஆளையே சாய்ச்சுப்புடலாம். ஆனா அதை செய்ய தெகிரியம் வேணும்.

கையில கத்தியே இருந்தாலும் நெஞ்சுல தில்லு இல்லனா நம்மள நாமக் காப்பாத்திக்க முடியாது. இங்க சண்ட கத்துக்கினீங்கனா அந்த தில்லு வரும் உங்களுக்கு.”

அவன் கூறுவதின் உண்மை புரியதான் செய்தது அவளுக்கு. ஆனாலும் பதில் சொல்லாமல் நின்றிருந்தாள். ‘ஏன் அவன் பாதுகாக்க மாட்டானாமா என்னை?’ உள்ளுக்குள் கேள்வி ஓடிக்கொண்டிருந்தது. அவள் விழிகளிலே அதைப் படித்தவன்,

“நான் என்னிக்குமே உங்களோட நெழலா கூடவே இருப்பேங்க. ஆனா இந்த உலகத்தை நீங்க தைரியமா பார்க்க வேணாமா? உங்க படிப்பு இதோட நிக்க கூடாது. இன்னும் நெறைய நெறைய படிக்கனும். பெரிய பெரிய வேலைக்குப் போவனும்.

அப்பலாம் இந்த நாதனை மாதிரி ஆயிரம் நாதாரிங்க குறுக்க வருவானுங்க. அவனுங்களுக்காக நீங்க முடங்கி போவலாமா? அவனுங்களைத் தாண்டிப் போக தெகிரியம் வேணாம். அது இங்க உங்களுக்கு கிடைக்கும்.”

அவன் வார்த்தைகளில் இருந்த நிதர்சனமும் கரிசனமும் அவளை கட்டுப்பட வைத்தது. படிக்க வேண்டும் நல்ல வேலைக்குப் போக வேண்டும் என்பதெல்லாம் அவளது கனவல்லவா?

பரசுராமனும் அடிக்கடி அவளுக்குச் சொல்வது இதைதான், “பெண்கள் சுயமரியாதையோட தன் சொந்த கால்ல நிக்கனும் நிலாம்மா. அதுக்கு படிப்புதான் அவங்களுக்கு முக்கியம். நீயும் நல்லா படிச்சு பெரிய பெரிய சாதனையெல்லாம் பண்ணனும்” கனவோடு கூடிய அவரது வார்த்தைகள் அவளது காதுகளில் ஒலித்தது.

அவர் வேறு ரகம். அவளைப் பொத்திப் பொத்தி பாதுகாத்துக் கொள்வார். எந்தவொரு தீமையும் அவளது காதுகளுக்குக் கூட வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்.

இவன் அவள் எல்லாவற்றையும் தைரியமாக எதிர்கொண்டு கடந்து வரவேண்டும் என்கிறான். அவன் கூறுவதும் சரியென்று பட சம்மதமாய் தலையசைத்தவள், தற்காப்பு கலை வகுப்பில் சேர்ந்து தினமும் கற்றுக்கொள்கிறாள்.

இப்போதும் நாதனை எதிர்க்க முடியுமா என்றால் தெரியாது…  ஆனால் கட்டாயம் அவனைக் கண்டு பயந்து நடுங்க மாட்டோம் என்ற நம்பிக்கை சில நாட்களிலேயே அவளுக்கு வந்திருந்தது.

ஆனால் இன்றைய பிரச்சனை வேறுவிதம். பாரியைச் சுற்றி இருப்பவர்களை வதைத்து பாரியை மடக்க நினைக்கிறான் அந்த நாதன். இந்த நிகழ்வுகள் அவளை முன்னிறுத்தி அவளுக்காக நிகழ்வது வேதனையளித்தது.

உறக்கம் வராமல் புரண்டவள், எழுந்து ஜன்னலோரம் வந்து நின்றாள். கடல் காற்று சற்று வேகமாக கேசம் கலைத்தது. விரல்களால் ஒதுக்கியவள் வீட்டின் வெளியே பார்வையை ஓட்ட, கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த பாரி தென்பட்டான்.

தன்னிடம் அவன் காட்டும் கண்ணியமும் சரி கவனிப்பும் சரி அலாதியானது. அவன் பார்க்கும் பார்வைகள்கூட உறுத்தலாய் தோன்றியதில்லை. அந்தவகையில் அவனை விட்டுக்கொடுக்க மறுத்தது மனது.

அதேபோல சுற்றியுள்ள மனிதர்கள் அவ்வளவு பேரின் மீதும் அன்பு காட்டுபவன், தோள் கொடுப்பவன், நட்பைத் தருபவன் என அவனது முகங்கள் அவ்வளவுமே நல்லவிதமாகதான் அவளுள் பதிந்திருக்கிறது. அதையுமே அவளால் மறுக்கவும் இயலவில்லை.

ஆனால் எல்லோர் மீதும் அளவிலா அன்பைக் காட்டுபவன் அவசரப்பட்டுக் கோபத்தினால் அறிவின்றி செய்த ஒரு செயல் தொடர் சங்கிலி போல எத்தனை பிரச்சனைகளை கொண்டு வந்தது. கொண்டு வருகிறது. இவையெல்லாம் என்று ஓயும்…? ஆயாசமாக வந்தது அவளுக்கு.

மீண்டும் கட்டிலில் வந்து படுத்தவள் வெகுநேரம் கழித்து உறங்கிப் போனாள்.