ஆழி சூழ் நித்திலமே 23(2)

காலை வழக்கம் போல விடிய, வெளியே தேவாவின் குரல் கேட்டதும் எழுந்து வந்தாள். இட்லி கடையருகே முக்காலியில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தான் தேவா. முன்தினம் வாங்கிய அடியின் மிச்சங்கள் அவன் முகத்தில் இருந்தது.

உடலின் காயங்களை அவன் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை, ஆயாவோடு வம்பு வளர்த்துக் கொண்டிருந்தான்.

“இன்னா கெயவி…  வரவர இட்லி சைசு கோலிகுண்டாட்டம் ஆயிடுச்சி. ஒரு வாய்க்கு நாலு தள்றேன் வயிறு நெறயல. ஆனா துட்ட மட்டும் ஏத்திக்கினே போற நீ…”

“ரெண்டு ஈடு இட்லிய முழுங்கிக்கினு பேச்ச பாரு. நீயும் உந்தங்கச்சியும் என்னிக்குடா துட்டு குடுத்து இட்லி துன்னுருக்கீங்க? ரொம்ப பேசுன இட்லி கொப்பரையில உன்னைய தள்ளி அவிச்சிருவேன்.” பேச்சு அவனுக்கு சரியாக பேசினாலும் அவரது கவனம் முழுக்க வியாபாரத்தில் இருந்தது.

“நீ செஞ்சாலும் செய்வ கெயவி. நான் தள்ளியே உக்காந்துக்கிறேன். இன்னும் நாலு இட்லி வையேன்.”

ஆயா அடுப்பில் கவனமாய் இருக்க, இட்லி பாத்திரத்தை எடுத்து அவனது தட்டில் இட்லிகளை வைத்தாள் நித்திலா.

“இன்னா அண்ணி, நைட்டு தூக்கம் பத்தலயா? கண்ணெல்லாம் செவந்து சோர்ந்துக்றீங்க.” அவளை விசாரித்தவனை ஆதூரமாகப் பார்த்தவள்,

“உங்களுக்கு இப்ப எப்படி இருக்கு? ரொம்ப வலிக்குதா?” விசாரித்தாள். இரவே அவர்கள் நால்வரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வைத்தியம் செய்து அழைத்து வந்திருந்தான் பாரி.

“அதெல்லாம் நைட்டு குத்துன ஊசியிலயே சரியா போச்சு. பாத்தீங்கள்ள எம்மாம் ஃபிரெஷ்ஷாக்கிறேன்.” அவனது வாய் கூறினாலும் கண்களும் முகமும் வலியை பிரதிபலித்தது. இட்லியை விண்டு எடுக்கக்கூட சிரமப்பட்டான், கையில் பட்டிருந்த காயத்தால்.

அதைப் பார்த்ததும் முனுக்கென கண்ணில் நீர் சூழ்ந்தது. “என்னாலதான… எனக்காகதான உங்களுக்கு இவ்வளவு கஷ்டம்? எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு. சாரி தேவா?”

அவளது வார்த்தைகளில் பதறி எழுந்தவன், “இன்னா அண்ணி, என்னாண்ட போய் சாரி கேட்டுனுக்கிறீங்க? இதெல்லாம் ஒரு மேட்டரா? உங்களுக்காண்டியும் பாரியண்ணனுக்காண்டியும் என்ன வேணாலும் பண்ணுவேன். இன்னும் எம்மாம் அடிச்சாலும் தாங்குவேன்.

அந்த நாதனெல்லாம் ஒரு ஆளா? அந்த போலீசு உடுப்பில்லாம அவன இங்க வரச்சொல்லுங்க பார்ப்போம். செதைச்சு வுட்ருவோம். பதவி இருக்குனு ஆடறான். அவன் ஆட்டமும் ஒருநாள் காணாப்போவும். நீங்க வெசனப்படாதீங்க அண்ணி.”

“நீங்க என்ன சொன்னாலும் என் மனசு ஆறவேயில்ல. ரொம்ப கஷ்டமா இருக்கு. எனக்காகதான இவ்வளவு அடி வாங்கியிருக்கீங்க? என்னாலதான இவ்வளவு பிரச்சனையும்?”

மெலிதாய் புன்னகைத்தவன் அமர்ந்து கொண்டான். நித்திலாவுக்கும் ஒரு முக்காலியை இழுத்துப் போட்டு அமரச் சொன்னவன், “அப்படிப் பார்த்தா எல்லா பிரச்சனைக்கும் எந்தங்கச்சிதான மொத காரணம். அவள இன்னாப் பண்றது சொல்லுங்க?

நாங்க நேத்து வாங்கன அடி வேணா இந்த பிரச்சனைக்காண்டி இருக்கலாம். ஆனா எம்மாங் காலமா எங்க ஆளுங்க போலீசாண்ட அடி வாங்கிக்கினுதான் இருக்காங்க.

கேசு கெடைக்கலனா பொய் கேசு போட, எவனோ பண்ண தப்புக்கு எங்களை இழுத்துக்கினு போவானுங்க. எதிர்த்துப் பேசினா அடிச்சே சாவடிச்சிருவானுங்க. எம்மாம் பார்த்திருக்கோம் அண்ணி.

நாலு காசு சம்பாதிக்க நாயா அலைஞ்சாலும் இவனுவளுக்கு நோவாம துட்டு அழனும். குடுக்கலனா அடுத்து படகு ஓட்ட போவ முடியாது.

ஆனா இப்ப கொஞ்ச வருஷமா பாரியண்ணன் தலையெடுத்தப்புறம்தான் நாங்க நிம்மதியா இருக்கோம். அது சங்கத்து பொறுப்புக்கு வந்ததுக்கு அப்பால நம்ப குப்பத்து பய ஒருத்தன் மேல கூட அவனுங்க கைய வைக்க முடியாது. தலைவரும் எங்களுக்குன்னா இன்னா வேணாலும் செய்வாரு.

பாரியண்ணன் மட்டும் சும்மாவா… வேற எங்க வேலைக்கு போனாலும் பாரியண்ணனாண்ட இருந்தா போல வராது. தோ இப்பலாம் கடலுக்கே போவல… வேலையே இல்ல. ஆனாலும் தெனம் செலவுக்கு துட்டு குடுத்திடும் கணக்கே பாக்காது.

பாரியண்ணனுக்காண்டி உசுரக்கூடத் தரலாம் அண்ணி. என் கூடப் பொறந்த பொறப்பு மாதிரி அது.” தேவாவின் வார்த்தைகளில் அவனது பாசமும் விசுவாசமும் வெளிப்பட நெகிழ்ச்சியாய் இருந்தது நித்திலாவுக்கு.

எளிய மக்களாக இருந்தாலும் அவர்களது பாசமும் பிணைப்பும் பிரமிப்பூட்டியது.

கயலின் திருமணத்திற்கு எண்ணி ஆறே நாட்களே நடுவில் இருக்க, அன்று மாலையில் கல்லூரியும் கராத்தே கிளாசும் முடித்துவிட்டு வழக்கம் போல பாரியோடு வந்தாள்.

கயலின் திருமணத்திற்கு ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்கிறான் பாரி. அதில் தானாகவே முன்வந்து இணைந்து கொண்டாள் நித்திலா. உடைகள் நகைகள் எடுப்பதில் துவங்கி மண்டபம் விருந்து வகைகள் என ஒவ்வொன்றையும் அவளது அபிப்பிராயம் கேட்டுதான் செய்தான் பாரி. அதில் சற்று இயல்பாக அவனோடு பேச ஆரம்பித்திருந்தாள் நித்திலா.

வீட்டுக்குச் செல்லும் பாதையைவிட்டு வண்டி வேறு பாதையில் சென்றது.

“இந்தப்பக்கம் எங்க போற? வீட்டுக்குப் போகலயா? கயலும் ஆயாவும் வெயிட் பண்ணுவாங்க. ஏற்கனவே நேரமாச்சு. கயலுக்கு சீர் சாமானெல்லாம் வாங்க கடைக்குப் போகனும்னு காலைலயே சொன்னியே. சீக்கிரம் வீட்டுக்கு போகலாம்.”

“இதோ வெரசா போயிடலாங்க. ஒரு சின்ன மேட்டர்தான். முடிச்சிக்கினு வூட்டுக்குப் போயிடலாம்.” பதில் கூறியவன் வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தினான்.

புத்தம்புதிதாக கட்டப்பட்டிருந்த அப்பார்ட்மெண்ட் ஒன்றின் முன் நின்றது வண்டி. அவர்களைக் கண்டதும் அங்கே நின்றிருந்த ஒருவர் வந்து, “வாங்க, நீங்க வருவீங்கனு வெற்றி சார் சொன்னாரு.” என்றபடி சாவியை நீட்ட, அதை வாங்கிக் கொண்டு அவளையும் அழைத்துக் கொண்டு மாடி ஏறினான்.

முதல் மாடியில் இருந்த வீட்டின் கதவைத் திறந்தவன் அவளை உள்ளே அழைக்க, “யார் வீடு இது? இங்க எதுக்கு வந்திருக்கோம்?” என்றபடி நுழைந்தாள்.

“உள்ள வாங்க… இந்த வீடு புடிச்சிருக்கானு பார்த்து சொல்லுங்க.”

உள்ளே வந்து வீட்டைச் சுற்றிப் பார்த்தாள். இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட கச்சிதமான வீடு அது.

“ம்ம்… வீடு நல்லாதான் இருக்கு. ஆனா இப்ப எதுக்கு இந்த வீட்ட காட்ற? வாங்க போறியா? அங்க நம்ம வீடே நல்லாதான இருக்கு. கடல் பக்கத்துல… நம்மை சுத்தி நல்ல மனுஷங்க…  எங்கம்மாவும் தம்பியும் பக்கத்துலயே இருக்காங்க…”

அவள் வாயிலிருந்து இயல்பாக வந்த நம்ம வீடு என்ற வார்த்தை உல்லாசத்தைக் கொடுக்க, புன்னகை முகமாக, “நாம நம்ப வூட்லதாங்க இருக்கப் போறோம். இது கயலுக்காக நான் வாங்கப்போற வூடு.” கயலுக்கு என்று சொல்லவும் தானாக அவள் முகம் மலர்ந்தது.

“கொஞ்ச நாளுக்கு முன்ன குப்பத்துலயே இருக்க வேணாம்னு நெனைச்சு வேற வூடு பாருடானு வெற்றியாண்ட சொல்லி வச்சிருந்தேன். அப்ப அவன் பார்த்த வூடுதான் இது. அப்பாலிக்கா என்னென்னமோ ஆயிப்போச்சி.

அதான் இப்ப நம்ம வூட்டு புள்ளைக்கு நம்ப செய்ற சீரா இந்த வூட்ட குடுக்கலாம்னு நெனைக்கிறேன். நீங்க இன்னா சொல்றீங்க?”

ஆர்வமாக வீட்டைச் சுற்றிப் பார்த்தவள், “சூப்பர்… எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. கயலையும் கூட்டிட்டு வந்திருக்கலாமே, அவளுக்குத் தரப்போற வீட்டை அவளும் பார்த்திருப்பால்ல?”

“சரியா போச்சு போங்க. அதுக்குத் தெரிஞ்சா அதும் பேர்ல வாங்கவே விடாது. என் பேர்லதான் எழுதனும்னு அடம் புடிக்கும். வெற்றிக்குக்கூட இன்னும் தெரியாது. நாளைக்கு பத்திரம் பதியறப்பதான் சொல்லனும்.”

அவன் கூறவும் அதுவும் சரிதான் என்று எண்ணிக்கெண்டாள் நித்திலா. வீட்டை பூட்டி சாவியை அங்கிருந்த மேனேஜரிடம் கொடுத்துவிட்டு கிளம்பினர்.

வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த பாரியைப் பார்த்தவள், “பரவாயில்லை, வீட்டு பொண்ணுக்கு சொத்து வாங்கி தரனும்னு நினைக்கிற… நல்ல விஷயம்தான். ஆனா இன்னைக்கு காலையில எங்கம்மா வந்து நமக்கு பணம் தந்தப்ப வாங்க மாட்டேனு சொல்லிட்டியே ஏன்?

சீரெல்லாம் நீ மட்டும்தான் செய்யனுமா? ஏன் எங்க அம்மா செய்யக்கூடாதா? நீ ரொம்ப நல்லவன்னு காட்டிக்கறதுக்காக வேணாம்னு சொன்னியாக்கும்?” கேட்டிருந்தாள்.

அன்று காலையில் நித்திலா கல்லூரிக்கு கிளம்பும் முன்பே பாக்கியலஷ்மி அவர்களது வீட்டுக்கு வந்திருந்தார். அவரை வரவேற்று உபசரித்து அனைவரும் பேசிக் கொண்டிருக்கும்போது, சில கட்டு ரூபாய் நோட்டுகள் பழம் பூ தட்டில் வைத்து பாரியிடம் கொடுத்தார் பாக்கியலஷ்மி.

திகைப்பாய் நோக்கியவன், “இன்னாதுங்க இது?” என்க,

“இல்லைங்க தம்பி. நித்தி அப்பாவோட ஸ்கூல்ல இருந்து செட்டில்மென்ட் பணம் வந்துச்சு. அதான் நிகிலேஷ்க்கும் நித்திலாவுக்கும் பாதி பாதியா பிரிச்சு குடுத்துடலாம்னு…

இப்ப கொடுத்தா உங்களுக்கும் உதவும்ல. ஏதோ புதுசா தொழில் ஆரம்பிக்க லோன் போடப் போறீங்கனு வெற்றி தம்பி சொல்லுச்சு. இதை உபயோகப்படுத்திக்கோங்க தம்பி.” என்றவாறு நீட்டியவரைப் பார்த்தவன்,

“மொதல்ல எடுத்து உள்ள வைங்க அத்த… பணமெல்லாம் உங்களாண்ட நானு கேட்டனா? மனசார எங்கள உங்க சொந்தமா ஏத்துக்கினீங்களே அதுவே போதும்னு நெனைச்சினுக்கிறேன். காசெல்லாம் குடுத்து தள்ளி வைக்காதீங்க.”

“அய்யோ, அப்படிலாம் இல்லைங்க தம்பி, பொண்ண கல்யாணம் பண்ணி குடுக்கறப்ப இதெல்லாம் செய்யறது முறைதான். நீங்க தப்பா நினைக்காதீங்க.”

“இதெல்லாம் குடுப்பீங்கனு நெனைச்சி உங்க பொண்ண கட்டிக்கலங்க. இப்பவே சரிக்கு சரியா பிரிக்கனும்னு இன்னாக்கீது? நீங்க துட்ட உங்க பேர்ல பேங்க்ல போட்டு வைங்க. இல்லாங்காட்டி எதனா எடம் வாங்கி போடுங்க. இனிமேட்டுக்கு இப்புடி துட்டுலாம் குடுக்காதீங்க.” என்று பாக்கியலஷ்மியிடம் கூறியவன், நித்திலாவைப் பார்த்து, “உங்கம்மாவுக்கு நீங்க எடுத்து சொல்லுங்க. நீங்க சொன்னா கேப்பாங்க.” என்றபடி வெளியேறியிருந்தான்.

உண்மையில் காலையில் அவன் பணத்தை வாங்காதது சற்று நல்ல அபிப்ராயத்தை அவன் மீது கொண்டுவந்திருந்தது. ஒருவேளை அவன் பணத்தை வாங்கியிருந்தால் இவனும் சராசரிதான் என்று எண்ணியிருப்பாளாயிருக்கும்.

இப்போது கயலுக்கு வீடு வாங்கப் போவதை அவன் சொல்லவும், அப்ப எனக்கு என் அம்மா தருவதை மட்டும் எப்படி இவன் வேண்டாமென்றான்? எங்களிடம் நல்ல பேர் வாங்க வேண்டுமென்று நினைக்கிறானோ என்று எண்ணியவள், அதைதான் இப்போது அவனிடம் கேட்டிருந்தாள். வண்டியை ஓரம்கட்டி நிறுத்தியவன், அவள்புறம் திரும்பி,

“ஏங்க சீரெல்லாம் வேணாமுன்னு நானு எப்ப சொன்னேன்?” புன்சிரிப்போடு கேட்டவனை ‘ஙே’ என பார்த்திருந்தாள்.

“காலையில நீதான வேணாம்னு சொன்ன எங்கம்மாகிட்ட?”

“இப்ப வேணாம்னுதான் சொன்னேன். நிகிலேஷூ என்னென்வோ பெரிய பெரிய படிப்பெல்லாம் வெளிநாடு போய் படிக்கனும்னு என்னாண்ட சொல்லிக்கினு இருந்தான். அவஞ்சொன்ன படிப்பெல்லாம் எனக்கு புரியலனாலும் அதுக்கெல்லாம் நெறய துட்டு வேணும்னு மட்டும் நல்லா புரிஞ்சுது.

அவனுக்காண்டி எம்மாம் செலவுனாலும் நான் பண்ணுவேன்தான். ஆனா உங்கம்மா என்னாண்ட துட்டு வாங்குவாங்களா? நீங்களே சொல்லுங்க.”

இல்லையென மெலிதாய் தலையசைத்தாள். “ம்ம்… அப்பறம்? இதே இந்த துட்டு அவங்க பேர்லயே இருந்தா புள்ள படிக்க எடுத்துப்பாங்கல்ல? எனக்கு சீரெல்லாம் என் மச்சான் படிச்சு பெரியாளாகி நெறைக்க செய்வான். எம்புள்ளைங்களுக்கு என்னென்ன செய்யனும்னு லிஸ்ட் போட்டு அவனாண்ட வாங்கிட மாட்டேன் நானு.”

என்றபடி கண்சிமிட்டியவனைக் கண்டு அவளுக்கும் புன்னகை அரும்பியது.

“அதுசரி, ரொம்ப பேசாத… வண்டிய எடு. நேரமாச்சு ஆயாவும் கயலும் நமக்காக வெயிட் பண்ணுவாங்க.”

புன்னகையைத் தனக்குள் மென்றபடி கூறியவளைப் பார்த்தவனுக்கும் புன்னகை அரும்ப, உல்லாசமாய் வண்டியை நகர்த்தினான்.

***