ஆழி சூழ் நித்திலமே 24(1)

 

கயல் திருமணத்திற்கு நான்கே நாட்களே இருக்க, என்னென்ன தேவையென்று லிஸ்ட் போட்டு வைத்து அதன்படி அனைத்தையும் சரிபார்த்துக் கொண்டிருந்தாள் ரதிமீனா.

“வெற்றி மாலை ஜடையாரம் பூ இதெல்லாம் ஆர்டர் குடுத்துட்டல்ல?”

“அட்வான்ஸ் குடுத்து ஆர்டரும் குடுத்தாச்சு. நீ சொன்ன டிசைன்தான் ஆர்டர் குடுத்திருக்கேன்.”

“உன் டிரெஸ்ஸெல்லாம் தச்சு வந்துடுச்சா?”

“நேத்தே வாங்கி வச்சிட்டேன் மதினி. நீதான பெட்டியில அடுக்கி வச்ச?”

“ஆமால்ல, மறந்துட்டேன்டா. வேற எதெல்லாம் விட்டுப்போச்சு? கொஞ்சம் நினைவுபடுத்துடா வெற்றி.” கையில் இருந்த லிஸ்ட்டைப் பார்த்தவாறு படபடப்பாக பேசியவளை இழுத்துவந்து அமர வைத்தவன்,

“எதுக்கு இவ்வளவு டென்ஷன்? இந்தா இதைக் குடி.” என்றபடி அவளது கையில் டீ கப்பை கொடுத்தான். தானும் ஒன்றை எடுத்துக் கொண்டவன் அவளெதிரே அமர்ந்து கொண்டான்.

ஊரிலிருந்து சில உறவினர்கள் வந்திருக்க, வீட்டுக்கு கல்யாணக்களை வந்திருந்தது. அனைவரையும் நன்றாக கவனித்து திருமணத்தையும் நல்லபடியாக முடிக்க வேண்டுமே என்ற படபடப்பு ரதிமீனாவுக்கு.

“யாரும் ஒரு குறையும் சொல்லிடக்கூடாது வெற்றி. கல்யாணம் நல்லபடியா முடியனும்.”

“அதெல்லாம் நல்லபடியா முடியும் மதினி. நீ டென்ஷனை ஏத்திக்காத.”

“கல்யாணம்னா சும்மாவாடா? டென்ஷன் இருக்கத்தான செய்யும். உனக்கு ஒரு நல்லது நடக்கனும்னுதான இவ்ளோ நாளு ஆசைப்பட்டேன். அது நிறைவேறப்போவுதே… அந்த சந்தோஷமும் சேர்ந்து படபடப்பாக்குது வெற்றி. உன்னை கயலு கையில புடிச்சு குடுத்திட்டா நான் நிம்மதியா இருப்பேன்.”

“பார்றா…? உல்டாவா டையலாக் அடிக்கிறத? ஏன் மதினி இதெல்லாம் பொண்ணுங்களை கல்யாணம் பண்ணி தர்றப்பதான பேசுவாங்க?”

“போடா, நான் என் மனசுல உள்ளத சொன்னேன். நீ என்னென்ன அழும்பெல்லாம் பண்ணனு எனக்குதான தெரியும். உனக்கு கல்யாணம் முடியனும்னு எத்தனை கோயில்ல வேண்டுதல் வச்சிருக்கேன் தெரியுமா?”

சிரித்துக் கொண்டான் வெற்றி. கயல் சம்மதித்திராவிட்டால் தனக்கு திருமணம் என்ற ஒன்று இல்லை என்றுதானே அவனும் நினைத்திருந்தான்.

“என்னவோ போ, அந்த புள்ள உன்னைப் புரிஞ்சிக்கிட்டு நல்லபடியா குடும்பம் பண்ணாலே போதும் எனக்கு.” புலம்பிய ரதிமீனா வேலைகளை கவனிக்க நகர்ந்துவிட, வெற்றிக்கோ சிரிப்புதான் வந்தது.

நிச்சயம் முடிந்தபிறகு கயலோடு ஃபோனில் பேசு, வெளியே எங்காவது அழைத்துக் கொண்டு போ என்று அவனை நச்சரித்துக் கொண்டிருந்தாள் ரதிமீனா.

எல்லோரையும் போல இயல்பான மகிழ்ச்சியான மணவாழ்க்கை வெற்றிக்கு கிடைக்க வேண்டும். ஆசையாசையாக மனதில் நினைத்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ளப் போகிறவனுக்கு அனைத்து சந்தோஷங்களும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் ரதிமீனாவுக்கு.

ஆனால் வெற்றிக்கோ கயலின் மனகாயங்கள் ஆற போதுமான காலங்கள் கொடுத்து அவளோடு மனமொத்த இல்லற வாழ்வு வாழ எண்ணம். எதையும் அவளுக்குள் திணிக்க அவனுக்கு விருப்பமே இல்லை. அவன் காதல் உட்பட…

கயலின் மனம் தன்னை நோக்கித் திரும்பும் தருணத்தில் தனது காதலைப் பொழிந்து அவளை ஆள வேண்டும் என்பதே அவனது எண்ணம். எனவேதான் ரதிமீனாவின் நச்சரிப்புகளுக்கு காதுகொடுக்காதவன் போலவே இருந்து கொண்டான்.

எந்த வகையிலும் கயலை நோகடித்துவிடக்கூடாது என்பதில் தெளிவாய் இருந்தான் வெற்றி. இதோ திருமண நாளும் நெருங்கிவிட, கயல் உரிமையோடு தன் வீட்டுக்கு வரப்போவதே அவனுக்கு பெரிய அளவில் மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தது.

கயலுக்கென்று சில மாற்றங்களை தனது அறையில் செய்யச் சொல்லியிருக்க அதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதனைப் பார்வையிட மாடியேறினான் வெற்றி.

 

 

அன்று மதியமே கல்லூரி முடிந்திருந்தது நித்திலாவுக்கு. அவளை அழைக்க வந்திருந்த  பாரி நேராக காசிமேடு மீன்பிடி முகத்துவாரத்திற்கு அழைத்து வந்திருந்தான். கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் அளவுக்கு கருங்கல் பாதை கடலின் நடுவே அமைந்திருக்க, இருபுறங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளைப் பார்த்தவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.

வெகுநாட்களாக கடலுக்குள் படகில் செல்ல வேண்டும் என்ற அவளது ஆசையை நிகிலேஷ் மூலமாக தெரிந்து கொண்ட பாரி, அவளுக்கு கல்லூரி மதியம் வரைதான் என்றதும் இங்கே அழைத்து வந்திருந்தான். வண்டியை பார்க் செய்துவிட்டு நிறுத்தப்பட்டிருந்த படகுகளை நோக்கி நடந்தனர்.

“போட்ல போகப்போறோமா?” கேள்வியே அவ்வளவு குதூகலமாக வந்தது அவளிடம் இருந்து.

“ஆமாங்க, உங்களுக்கு ரொம்ப புடிக்குமாமே, நிகிலேஷ் சொன்னான்.” பாரியின் குரலிலும் உற்சாகம் நிரம்பி வழிந்தது.

சிறிய அளவிலான ஃபைபர் படகில் அனைத்தும் சரியாக இருக்கிறதா என சோதித்துக் கொண்டிருந்தான் தேவா. அவர்களுடைய படகு அல்ல அது. சிறிய அளவிலான இயந்திர படகு.

“இன்னாடா? எல்லாம் ஓகேவா?”

“ஓகேண்ணா. அல்லாமே செக் பண்ணியாச்சு.” என்றபடி தேவா இறங்கிக் கொள்ள நித்திலா படகில் ஏற கை கொடுத்தான் பாரி. லைஃப் ஜாக்கெட் கொடுத்து அவளை அணியச் சொன்னவன் படகை இயக்கவாரம்பித்தான்.

மெதுவாக நகரத் துவங்கியது படகு. நீலவர்ண கம்பளம் விரித்தது போல கடல்.  ஆழ்கடலில் எவ்வளவு அமைதியோ அவ்வளவுக்கவ்வளவு ஓரங்களில் துள்ளிக் கொண்டிருந்தாள்.

அவளின் ஆர்ப்பரிப்பின் அலையில் படகு அலைபாய்ந்தது. அது பயணியர் படகு அல்ல. மீன்பிடி படகு. ஆகவே பிடிமானத்திற்கென்று எதுவுமே இல்லாமல், மீன் வலைகளை இழுக்க ஏதுவாக படகின் ஓரம் உயரம் குறைந்தும் இருந்தது.

படகின் தள்ளாட்டத்தில் இதயமே வாய்க்கு வந்துவிடும் போல பயத்தில் துடிக்க ஆரம்பிக்க, தன்னாலே நகர்ந்து படகை இயக்கிக் கொண்டிருப்பவனை கெட்டியாக பிடித்துக் கொண்டு அமர்ந்து கொண்டாள் நித்திலா.

“இன்னாச்சுங்க?” அவளின் முகமும் கைநடுக்கமுமே அவளின் பயத்தை பறைசாற்ற, “பயப்படாதீங்க. படகு கடலோரத்துல இப்படிதான் ஆடும். ஆனா கவுந்துடாது.” தைரியம் கூறினான்.

“பயமெல்லாம் ஒன்னுமில்ல, இந்த போட்ல உட்கார்ந்து பிடிச்சுக்க எந்த வசதியுமே இல்லையே. அதான்…” இழுத்தவளைப் பார்த்து மெலிதாய் நகைத்தவன், “இது மீன்பிடிக்கிற போட்டுங்க. அதான் இப்படி இருக்கு” என்றான்.

நீரைக் கிழித்துக்கொண்டு செல்லும் படகின் வேகமும், ஆடை கலைக்கும் காற்றின் வேகமும் பயணத்தை ரசிக்கச் செய்தது.

 தூரத்தே ஆழியில் இணையத்துடிக்கும் மேகத்தைத் தொட்டுவிடும் வேகம் படகில் இருக்க, இயற்கையின் வர்ணஜாலத்தை ரசித்தவளுக்குத் தெவிட்டவே இல்லை. ஆங்காங்கே கடல் பறவைகள் வேறு, கண்கொள்ளாக் காட்சியாய் இருக்க… பரவசத்தில் பார்வையைத் திருப்பவே இல்லை அவள்.

கிட்டத்தட்ட அரை மணிநேர பயணத்திற்குப் பிறகு படகு வேகம் குறைந்தது. “பசிக்கலயா உங்களுக்கு? காலேசுலேர்ந்து நேரா வந்துட்டோம், சாப்பிடறீங்களா?” பாரி வினவ,

“இங்கயா? போட்ல உட்கார்ந்தா? இங்க எப்படி சாப்பிட முடியும்?”

“இதோ இருங்க, இன்னும் ஒரு பத்து நிமிஷம்…” என்றபடி படகை செலுத்தியவன் வந்திருந்தது பழவேற்காடு முகத்துவாரப் பகுதிக்கு.  சிறிய அளவிலான மணல்திட்டு. ஒருபுறம் ஆற்றுநீர் ஓடிவந்து கடலோடு கலக்க, மறுபுறமோ அலைகள் கொஞ்சி விளையாடும் கடல். காணக்காண தெவிட்டவில்லை அதன் அழகு. படகை நிறுத்தியதும் அவள் இறங்க உதவி செய்தான் பாரி.

வெள்ளை வெளேர் என தூய மணல் பரப்பு. மதிய நேரமாக இருந்தாலும் காற்றில் இருந்த குளுமை சூழலை குளிர்வித்திருந்தது. படகை நிறுத்தி அவளை இறக்கிவிட்டதும் துள்ளிக்குதித்து மணலில் ஓடியவள், அதிசயித்துப் போனாள்.

“இங்க பாரேன். அந்தபக்கம் ஆறு கடலோட கலக்குது. இந்தபக்கம் ஃபுல்லா கடல். செம சூப்பர். இங்க நான் இதுவரை வந்ததே இல்லை.” குழந்தையின் குதூகலம் அவளது குரலில்.

“இது தடைசெய்யப்பட்ட பகுதிங்க. சுற்றுலா பயணிங்க வர அனுமதி இல்ல. இந்த மணல்திட்டு கொஞ்சம் தண்ணி ஜாஸ்தியா வந்தா காணாமப்பூடும். இப்ப தண்ணி இருக்காதுனு தெரிஞ்சுதான் உங்களை இட்டாந்தேன். இதே டிசம்பர் மாசத்துல இருந்து மார்ச் மாசம்வரை நிறைய பறவைங்களை பார்க்கலாம் இங்க. இது பறவைகள் சரணாலயம்ங்க.”

“ம்ம்… ஆமா, நாம வர்ற வழியிலகூட நிறைய பேர்ட்ஸ் பார்த்தோமே.”

“ஆமா, ஆனா இப்ப சீசன் இல்ல.  இங்க மீனு, இறால் ஜாஸ்தி கெடைக்கும். அதனால வருஷம்பூரா பறவைங்க இருக்கும். சீசன்ல இன்னும் நெறைய இருக்கும்.”

“சீசன் அப்பவும் இந்த இடத்துக்கு கூட்டிட்டு வர்றியா? நாம அடிக்கடி இங்க வருவோம். எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இந்த இடம்.” அவ்வளவு அழகையும் அள்ளி கண்களில் நிரப்பிக் கொள்பவள் போல சுற்றிச் சுற்றிப் பார்த்தபடி குதூகலமாக கூறினாள்.

அவளது குதூகலம் கண்டவனுக்கும் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அழைத்து வருகிறேன் என்பது போல தலையசைத்தவன், எடுத்து வந்திருந்த போர்வையை மணலில் விரித்து, அதில் உணவு எடுத்து வந்திருந்த கூடையை வைத்தான்.

அதற்குள் ஆறு கடலில் கலக்கும் பகுதியில் நீருக்குள் இறங்கியிருந்தாள் நித்திலா. ஆழம் இல்லாவிட்டாலும் கூட நீரின் வேகம் மிகமிக அதிகம் அங்கே. கடல் காதலனைத் தேடி ஓடும் காதலியின் தவிப்பு நீரின் வேகத்தில். தானாகத் தடுமாறி விழ வைத்தது அவளை. பதறிப் பயந்து ஆற்று நீரோடு உருண்டவளை, ஓடிவந்து தூக்கியிருந்தான் பாரி.

“பாத்துங்க…”

அதற்கே பயந்து போயிருந்தாள். “ஆழமே இல்லையேனுதான் கீழ இறங்கினேன். ஆனா அப்படியே சர்ருனு இழுக்குது உள்ள.” முழுக்க நனைந்து பயத்தில் வெடவெடத்தாள்.

“இது கொஞ்சம் ஆபத்தான இடம்தாங்க. பறவைங்களைப் பார்க்க ஆசப்படுவீங்களேனுதான் கூட்டியாந்தேன். தண்ணில இறங்கனும்னா என்னைய புடிச்சிட்டு இறங்குங்க…  ரொம்ப தூரமா போவாதீங்க. இந்த மண்ணுமேடே ஆறு கொண்டாந்து குமிச்சு வைக்கிறதுதான. பொதபொதனு மண்ணுல பொதகுழி இருக்கும் சொழலு இருக்கும் இங்க. பழகுனவங்களுக்குத் தெரியும் எங்க எப்படியிருக்கும்னு. நீங்க பயந்துடுவீங்க.”

அழகு என்றாலே ஆபத்தும் சேர்ந்ததுதானே. இயற்கையின் அழகை பாதுகாப்பாகதானே ரசிக்க வேண்டும். ஆகவே அதன்பிறகு தண்ணீரில் இறங்காமல் காலை மட்டும் தண்ணீருக்குள் நீட்டியபடி மணலில் அமர்ந்து கொண்டாள்.

கொண்டு வந்திருந்த உணவைத் தட்டில் வைத்து பாரி நீட்டவும் வாங்கிக் கொண்டவளுக்கு, அந்த சூழலில் அமர்ந்து உண்பது தேவாமிர்தமாக இருந்தது. அவனுக்கோ அவளருகே இருப்பது ஒன்றே  சொர்க்கமாய் இருந்தது.

வீசிய காற்றில் அவளது உடையும் சற்று காய்ந்திருக்க, பார்க்கும் ஒவ்வொரு பறவையையும் புகைப்படம் எடுத்தாள். அவற்றைப் பற்றிய தகவல்களை அவனிடம் கூற, அவனும் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டான்.

இணக்கமான அந்த சூழல் இருவரையுமே நன்கு இயல்பாக்கியிருந்தது. அவனோடு வெகு இயல்பாக பேசிக் கொண்டிருந்த பெண் அவ்வளவு வசீகரித்தாள் அவனை. அந்த தருணத்தில் தன் மனதில் உள்ள அனைத்தையும் கொட்டிக் கவிழ்த்துவிட நினைத்தவன், மெதுவாக அவளது கரங்களைப் பற்றிக் கொண்டான்.