ஆழி சூழ் நித்திலமே 24(2)

அவ்வளவு நேரம் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த பெண் அவனது ஸ்பரிசத்தில் அமைதியானாள். திரும்பி அவனைப் பார்த்தவள், அவனது பார்வையைக் கண்டு மௌனமாகத் திரும்பி கடலை வெறிக்கத் துவங்கினாள்.

ஆண்மையின் பார்வை எப்போதும் பெண்மைக்குப் புரியும். அதிலும் ஆசையும் நேசமும் கலந்த கணவனின் பார்வை அவளுக்கு நன்கு புரிந்தது.

அவனது கரங்களில் இருந்து தனது கரத்தை விலக்கவும் இல்லை, அவ்வளவு நேரம் அவளிடம் இருந்த இயல்பும் இல்லை. உடல்மொழி சற்று இறுக்கமாக அமைதியாக அமர்ந்திருந்தாள்.

“ஏங்க, உங்களாண்ட நெறைய பேசனுங்க. எப்புடி பேசறது எம்மனசுல இருக்கறத எப்புடி சொல்றதுனுதா புரியல எனக்கு.” மெல்லத் துவங்கி சற்று இடைவெளி விட்டவன்,

 “எனக்கு உங்கள ரொம்ப புடிக்கும்ங்க. இப்பனுயில்ல எப்ப நம்ம ஏரியாவுக்கு நீங்க குடிவந்தீங்களோ, என்னிக்கு மொதமொத உங்களப் பாத்தனோ அன்னிலருந்தே எம்மனசு பூரா நீங்கதான்.”

என்ன சொல்கிறான் இவன் என்பது போல அவனை பார்த்தாள். கணவனாய் தன்னிடம் உரிமையெடுத்துக்கொள்ள நினைக்கிறானோ என்று நினைத்திருக்க, அவனது பார்வையும் வார்த்தைகளும் வேறுகதை சொன்னது.

“உங்களுக்கு நெனப்பிருக்கானு தெரில. நம்ம வூட்டு வாசலாண்ட வச்சுதான் உங்கள மொதமொத பாத்தேன். உங்க தம்பியோட சேர்ந்து வண்டியோட்டி பழகினுருந்தீங்க. பார்த்ததுமே மனசுக்குள்ள பூந்துக்கினீங்க. அன்னிலருந்து ரெண்டு வருஷமா எம்மனசுல உங்கள மட்டுந்தாங்க நெனைச்சினுக்கிறேன்.”

அவனது வார்த்தையைக் கேட்டவளுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. இது முற்றிலும் புதிய செய்தி அவளுக்கு. விழிகள் விரிய அவனைப் பார்த்திருந்தாள்.

“எம்மனசுல இருக்கற ஆசயெல்லாம் சேர்த்து எனக்கு வார்த்தையா சொல்லத் தெரியலங்க. எத்தினியோ நாளு உங்களாண்ட வந்து பேசனும் எம்மனசுல இருக்கறத பூரா சொல்லனும்னு தோனும். ஆனா அத்தச் சொல்லற தெகிரியம் வந்ததேல்ல.

என்னியலாம் மதிச்சுப் பேசுவீங்களானு ஒரு பயம். அட பேசறத வுடுங்க, உங்க எதுக்கவே வந்து நின்னாலும் என்னையெல்லாம் திரும்பியாச்சும் பாப்பீங்களானுகூட தெரியாது. மெய்யாலுமே என் ஆசய உங்களாண்ட வந்து சொல்லனும்னுகூட நெனைச்சதில்லங்க.” தயக்கமும் தவிப்புமாய் பேசுபவனையே கண்கொட்டாது பார்த்திருந்தாள்.

“ஆனா உங்க மொகத்தைப் பார்க்காத நாளு எனக்கு நல்லதா விடிஞ்சதே இல்லங்க. மாடியில உங்க வூட்டு ஊஞ்சல்ல உட்கார்ந்து கடலப் பார்த்துக்கினு இருப்பீங்களே, அது இன்னுமும் எங்கண்ணுக்குள்ளயும் நெஞ்சுக்குள்ளயும் நெறைஞ்சிருக்குதுங்க. தெனம் ஒருவாட்டியாச்சும் உங்கள பாத்துடனும் எனக்கு.

உங்கள தூரத்துல இருந்து மட்டுந்தான் பாக்க முடியும், பக்கத்துல பாக்கற யோக்யத கூட எனக்கில்லனுதா நெனைச்சி தள்ளியிருந்தேன். நீங்க எனக்குக் கெடைப்பீங்கனு நானு நெனைச்சதேயில்ல. ஆனா இன்னிக்கு என்கைக்குள்ள உங்க கை. மெய்யாலுமே அம்மாம் சந்தோஷமாக்குது.”

 அவளது கையை இரு கரங்களாலும் பொத்திக் கொண்டான். அவன் மனதின் காதலை இரு கரங்களின் அழுத்ததில் உணர்ந்தவளுக்கு உடல் சிலிர்த்தது.

“உங்களுக்கு எம்மேல நெறைய கோவமிருக்கு. அது எனக்கு நல்லாத் தெரியும். என்விதி உங்க பார்வையில நா நல்லவனா படல. ஆனா மெய்யாலுமே நானு வேணும்னு எதையும் பண்ணலங்க.

உங்கப்பாவாண்ட கோவமா பேசினேன்தான். ஆனா அவரு செத்துப்போவாருனு நெனைச்சே பாக்கலங்க. நா எதையோ பண்ணப்போவ என்னென்னவோ நடந்து போச்சு. என்னைய மன்னிச்சிருங்க.” அவளது தந்தையைப் பற்றி பேசும்போது அவனது பிடி இறுகியது. அவளுடைய முகத்தில் தென்பட்ட வருத்தம் அவனையும் வருந்த வைத்தது. செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்கும் த்வனியில் பேசியவன்,

“அப்பகூட உங்களுக்கு என்னியால எந்த கஷ்டமும் இனியும் இருக்கக்கூடாதுனு நெனைச்சு வூட்டக்கூட காலி பண்ணிட்டு வேற ஏரியாவுக்குப் போவலாம்னு முடிவு பண்ணிட்டேங்க.

நல்லபடியா கல்யாணமாயி நீங்க சந்தோஷமா இருக்கனும்னு மனசார நெனைச்சுதான் ஒதுங்கி நின்னேன். ஆனா… உங்க கல்யாணத்துலயும் பிரச்சனைனு தெரிஞ்சதும் தள்ளி நிக்க முடியலங்க.

எதையும் காதுகுடுத்து கேக்கற நெலையில அன்னிக்கு நீங்க இல்ல. உங்கம்மாவோட உசுரும் உங்க வாழ்க்கையும்தான் மொதல்ல முக்கியம்னு தோனுச்சி. அதுக்கு மேல வேற எந்த பிரச்சனையும் உங்களுக்கு வரக்கூடாதுனுதான் உங்கள கட்டிக்கனும்னு முடிவு பண்ணேன்.

அந்த நேரத்தில உங்க வாழ்க்கைய காப்பாத்தணும்னு நெனைச்சுதான் உங்க கழுத்துல தாலியக் கட்டுனேன். ஆனா மனசு முழுக்க உங்கமேல ஆசயில்லனா அப்படி ஒரு முடிவெடுத்திருக்க மாட்டேன்.

நீங்க எம்மாம் கோவப்பட்டாலும், என்னய வெறுத்தே ஒதுக்குனாலும், எப்பாடுபட்டாச்சும் எம்மனச உங்களுக்கு புரிய வச்சிடலாம்னு தோனுச்சிங்க. அந்தக் கடவுளே நம்மள சேர்த்து வச்சதாதான் நான் நெனைக்கிறேன்.

இன்னிக்கு உங்கம்மா தம்பியெல்லாம்  என்னய சொந்தமா ஏத்துக்கினு நல்லா பழகுறாங்க. நீங்களும் அப்படிதானு நெனைக்கிறேன். இல்லனா இப்படிலாம் என்னாண்ட சகஜமா பேசிக்கினு இருக்கமாட்டிங்கல்ல.” தன் கரங்களுக்குள் பொதிந்திருந்த அவளது கரங்களைப் பார்த்துக் கொண்டான்.

“உங்களுக்கு எம்மேல இருந்த கோவமெல்லாம் போயிடுச்சா? என்னைய ஏத்துக்கிட்டீங்கதான?” எதிர்பார்ப்பும் தவிப்புமாய் தன் காதலைச் சொல்லி கைபற்றியிருந்தவனைப் பார்த்தவளின் விழிகள் நீர்சுரந்து கலங்கியிருந்தது.

இதழ்பிரித்து மெல்ல சிரித்தவள், அவனது கரங்களிலிருந்து தனது கரத்தை மெல்ல விலக்கிக் கொண்டாள்.

“என் முன்னால வந்ததில்ல, என்கிட்ட பேசினதில்ல, பார்வையிலகூட என்னைத் தொந்தரவு பண்ணதில்ல, ஆனா ரெண்டு வருஷமா என்னை லவ் பண்ற.” முனுமுனுத்தவள் உள்ளுக்குள் விரக்தியாய் நகைத்துக் கொண்டாள்.

இன்னதென்று புரியாத முகபாவத்தோடு அவனை ஏறிட்டவள், “உன்கிட்ட ஒன்னே ஒன்னு கேக்கறேன். எங்கப்பாகிட்ட போய் சண்டை போடறப்ப, அவர் என்னோட அப்பாங்கறது உனக்குத் தெரியும்தான?”

கலக்கத்தோடு ஆமென்று தலையசைத்தான்.

“ஒரு நிமிஷம் யோசிச்சிருக்கலாம்ல. நாம லவ் பண்ற பொண்ணோட அப்பா, அப்படியொரு தப்பை பண்ணியிருப்பாரானு. ஒரு நிமிஷம்… ஒரேயொரு நிமிஷம் நீ யோசிச்சிருந்தாகூட, அதுக்கப்புறம் நடந்த எந்த பிரச்சனையும் நடந்திருக்காது.”

“நம்ம கல்யாணமும் கண்டிப்பா நடந்திருக்காதுங்க…” தயக்கமாக பாரி கூற,

“இப்ப இதுக்காக என்னை சந்தோஷப்பட சொல்றியா?” சீற்றம் வந்திருந்தது அவள் குரலில்.

“இ… இல்ல நான் அப்படி சொல்லல. நடந்த எதையுமே என்னியால மாத்த முடியலனாலும், இனிமே உங்களை நல்லா பாத்துப்பேங்க. உங்கமேல உசிரையே வச்சிருக்கேங்க. நீங்க இல்லனா நானும் ஒன்னுமேயில்ல…” தயக்கமும் கலக்கமுமாய் வந்தன வார்த்தைகள்.

அவனை தீர்க்கமாய் பார்த்தவள், “பாரி, உனக்கொரு விஷயம் தெரியுமா? நம்ம நாட்ல பாதி பொண்ணுங்க பிடிக்குதோ பிடிக்கலயோ கல்யாணம்னு ஒன்னு நடந்திட்டா அதை மதிச்சு வாழதான் செய்யறாங்க. குடும்பம் நடத்தறாங்க. புள்ளகுட்டி பெத்துக்கறாங்க. நானும் அப்படிதான்.

யாருக்காக இல்லனாலும் எங்கம்மாவுக்காகவாது  நம்ம பந்தத்தைவிட்டுப் போகனும்னோ உன்னைப் பிரிஞ்சு போகனும்னோ நினைக்கக்கூட மாட்டேன்.

ஆனா உன்னோட சகஜமா வாழனும்னா என் மனசு கொஞ்சமாவது ஆறனும். எனக்கு கொஞ்சநாள் அவகாசம் வேணும். என்னால என்னைக்கும் உன்னை மன்னிக்கவோ நடந்ததை மறக்கவோ முடியாது. என்னோட இழப்பு அப்படி. உன்னால எங்கப்பாவ இழந்திருக்கேன் நான்.

நடந்தது நடந்ததுதான். எதையுமே மாத்த முடியாது. அது எனக்கும் நல்லா புரியுது. நீ உன்னைச் சுத்தி இருக்கற எல்லாருக்கும் நல்லவன்தான். அதையும் நான் இல்லனு சொல்லவே இல்ல.

ஆனா என் வாழ்க்கையிலயும் நீ நல்லவனா வந்திருக்கலாம். நல்லவனா அறிமுகம் ஆகியிருக்கலாம். நல்லவனா பழகியிருக்கலாம்…” அவ்வளவு ஆற்றாமையும் ஆதங்கமும் அவள் குரலில் வழிந்தது. மனம் வலிக்கப் பார்த்திருந்தான் பாரி.

“ஒருவேளை நீ என்கிட்ட உன் காதலை முன்னமே சொல்லியிருந்தா எதையுமே நான் இழந்திருக்க மாட்டேன்ல. எல்லாமே நல்லவிதமா நடந்திருக்கும்.” மெலிதாய் தனக்குள் முனுமுனுத்தவளைத் தவிப்போடு பாரி பார்த்திருக்க,

 “ம்ச்… இனி எதுவுமே மாறாது.” பெருமூச்சொன்றை வெளியிட்டவள், “நாம சராசரி வாழ்க்கை வாழ ஆரம்பிக்க எனக்கு கொஞ்சநாளாகும் பாரி. ஆனா, அதுல காதல் இருக்குமானு எனக்குத் தெரியல.” பிசிரற்ற குரலில் கூறினாள்.

 “கல்யாணம் பண்ற எல்லாரும் காதலோடவா வாழறாங்க? நம்ம வாழ்க்கையும் அப்படிதான் இருக்கும்.” என்றவள் எழுந்து அவனைவிட்டுத் தள்ளிச்சென்று அலையில் கால் நனைத்து நின்றாள்.

கடல் அலைபோல உன் கால்தொட்டு உரசி…

கடல் உள்ள போறவன் நானில்லடி,

கடல் மண்ணப்போல உன் காலோட ஒட்டி

கரைதாண்டும் வரை நானும் இருப்பேனடி…

 

அவளையே ஏக்கமாய் பார்த்திருந்த பாரியின் உள்ளம் ஊமையாய் கதறியது.

தொடரும்