ஆழி சூழ் நித்திலமே 25

24

 

 

 

 

 

 

பேயறைந்தவன் போல முகமும், அடுத்து என்ன செய்வது என்று தெரியாது அலைபாய்ந்த மனதும் பாரியை வெகு சோர்வாகக் காட்டியது.

மழை வேறு தூவானமாய் தூவிக் கொண்டிருந்தது. அந்த குளிர்ந்த சூழல்கூட உறைக்காது உடலெங்கும் மழைநீரோடு சேர்ந்து வேர்த்து வழிய, தோளில் முகத்தை அழுந்தத் துடைத்தவன், எதிரே வண்டியில் வந்து இறங்கிய நிகிலேஷிடம் ஓடினான்.

“இன்னாச்சு மாப்ள?”

“தெரியல மாமா. அக்கா அவ ஃபிரெண்ட்ஸ்ங்க யார் வீட்டுக்கும் போகலயாம்.” அவனுமே விட்டால் அழுது விடுபவன் போல இருக்க,

 “ச்சே, வுட்டுட்டேனே மாப்ள. எங்க போனாங்கன்னே தெரியலயே. ஃபோனப் போட்டாலும் எடுக்கல. இன்னாப் பண்றதுனே புரியலடா.” தன்னைமீறி கசிந்த கண்களைத் துடைத்துக் கொண்டான் பாரி.

இவர்கள் நின்றிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்த வெற்றியும் நித்திலாவை எங்கு தேடியும் காணவில்லை என்ற தகவலை டென்ஷனாய் உரைக்க, கையறு நிலையாய் தவித்த மனதோடு தலையில் கைவைத்தபடி சாலையினோரம் இருந்த கல்லில் அமர்ந்தான் பாரி.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக நாயாய் அலைகிறான் நித்திலாவைத் தேடி. வழக்கமாக கல்லூரி விடும் நேரத்துக்கு அவளை அழைக்க அவன் சென்றிருக்க, திடீரென்று விரிவுரையாளர் ஒருவர் காலமாகியிருக்கவும் அவளுக்கு இரண்டு மணி நேரங்கள் முன்னமே கல்லூரி விட்டிருந்தனர்.

இவன் கல்லூரிக்குச் சென்றபோது வெறிச்சோடிக் கிடந்த கல்லூரியே வரவேற்றது. இரண்டு மணி நேரத்திற்கு முன்பே மாணவ மாணவியர் வெளியேறியதைத் தெரிந்து கொண்டு, கல்லூரி முழுவதும் அவளைத் தேடியவன், அவளது அலைபேசிக்கும் அழைத்துப் பார்த்தான்.

நாட் ரீச்சபிள் என்ற ரெக்கார்டட் வாய்ஸ்ஸே மீண்டும் மீண்டும் கேட்கவும் என்ன செய்வது என்று புரியாமல் கல்லூரிக்கும் வீட்டுக்குமாய் மூன்று முறை அலைந்துவிட்டான்.

யாரிடமும் எந்த விபரமும் சொல்லாமல் அவள் எங்கும் சென்றிருக்க வாய்ப்பில்லை. அவளுக்கு என்னானதோ ஏதானதோ என்று தவிக்கும் மனதுக்கும் பதிலளிக்க முடியாமல் ஓய்ந்து போனான் பாரி.

வீட்டிலும் கயல், ஆயா முதற்கொண்டு நித்திலாவின் அம்மா, நிகிலேஷ் வரை அனைவருமே வெகுவாய் பயந்து போய் இருக்க, மகேந்திரனும் ரதிமீனாவும் கூட குப்பத்துக்குப் பதறிப் போய் வந்திருந்தனர்.

பாரி, வெற்றி, ஞானம், தேவா, தாமஸ், சவரி, நிகிலேஷ் என அனைவரும் ஆளுக்கொரு புறமாய் நித்திலாவைத் தேடி அலைய அனைவருக்கும் தோல்விதான். நித்திலா எங்கு சென்றாள் என்றே புரியவில்லை.

“பாரி, அந்த நாதன் எங்கருக்கான்? அவன் வூட்டாண்ட பார்த்தியா?” வெற்றி வினவ,

“ம்ப்ச், அவன் செமத்தியா குடிச்சிக்கினு மட்டையாகி அவன் வூட்லதான் கெடக்கிறான் வெற்றி. அவன் வூட்டாண்டதான் தேவாவும் தாமஸூம் நிக்கிறாங்க. அவன் எங்கனா வெளிய போனா ஃபாலோ பண்ண சொல்லிக்கிறேன்.”

“ஒருவேளை ஆள வச்சு நித்திலாவ தூக்கியிருப்பானா?”

“இல்ல வெற்றி. அப்புடி எதனா இருந்தா இன்னேரம் எனக்கு ஃபோன போட்டு காண்டேத்திருப்பான். அதுமில்லாம அவன் மதியானத்துலருந்து மட்டையாகி கெடக்கிறான். நானு நல்லா விசாரிச்சிட்டேன்.”

“அப்ப ஸ்ரீதர் சார்கிட்ட சொல்லிடுவோமா? எங்க தேடியும் காணோமேடா. போலீஸ்ல சொல்லிடறது பெட்டர்.”

என்ன செய்வதென்றே புரியவில்லை பாரிக்கு. தலையை அழுந்தக் கோதிக் கொண்டான்.

“அக்கா, எதுவுமே சொல்லலயா மாமா? அவ இப்படிலாம் சொல்லாம எங்கயுமே போகவே மாட்டா. என்னாச்சு மாமா? எதாவது சண்டையா உங்களுக்குள்ள?” வினவிய நிகிலேஷை பரிதாபப் பார்வை பார்த்தான் பாரி.

என்னவென்று சொல்லுவான். ஏதோ சற்று சகஜமாக அவனிடம் பேசிக் கொண்டிருந்தவளிடம் காதலைச் சொல்கிறேன் பேர்வழி என்று சொந்த செலவில் ஆப்பு வைத்துக் கொண்டதை சொல்வானா?

அன்றிலிருந்து தொட்டதெற்கெல்லாம் சண்டையிட்டு அவனிடம் முறைத்துக் கொண்டு அவள் திரிந்த கதையை சொல்வானா?

இன்று காலையில் கூட வலியப் போய் பேசி அவளிடம் செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்டதைச் சொல்வானா? பாரியின் நிலை பரிதாபகரமாக இருந்தது.

தன் வாழ்க்கை இதுதான், இனி இந்த வாழ்க்கையை சிறிது சிறிதாகவேனும் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் என்று மனதை ஒருவாறு சமாதானம் செய்து வைத்திருந்த நித்திலாவிடம் சென்று தன் காதல் கதையை விலாவாரியாகப் பாரி கூற, வெகுவாய் கோபம் கிளர்ந்திருந்தது அவளுக்குள்.

‘எப்படி எப்படி? ரெண்டு வருஷமா சொல்லாமலேயே லவ் பண்ணுவானாம்.  எங்கப்பான்னு தெரிஞ்சே போய் அவர்கிட்ட சண்டை போடுவானாம். அப்புறம் எனக்கு  பிரச்சனை வந்ததும் அவனே வந்து காப்பாத்துவானாம்.

எனக்கு கல்யாண ஏற்பாடு பண்றாங்கனு தெரிஞ்சும் எங்கிருந்தாலும் வாழ்கனு ஒதுங்கி  நிப்பானாம். அந்த கல்யாணத்துல பிரச்சனை வரவும் இவனே வந்து தாலியக் கட்டுவானாம்.

இப்பவந்து ரெண்டு வருஷமா உன்னை லவ் பண்றேன் நீயில்லாம நானில்லனு டையலாக் விடுவானாம். உடனே நாங்க ஈனு பல்லைக் காட்டிட்டு இவன் பின்னாடி போகனுமா?’ நறநறவென்று கோபத்தில் பல்லைக் கடித்தவள் அவனை பார்த்த பார்வையில் அரண்டு போனான் பாரி.

அதன்பிறகு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பாரியை வறுத்து எடுத்தாள் நித்திலா. பெண்ணின் நியாயமான ஆழ்மன கோபங்கள் சூறாவளியாய் சுழன்றடிக்க, சிக்கிச் சேதாரமாகிக் கொண்டிருந்தான் பாரி.  

அன்று காலையிலேயே விடிந்தும் விடியாத வேளையில் குப்பத்து வாலிபன் ஒருவன் தான் காதலித்த வேற்று இனப்பெண்ணைத் திருமணம் செய்து கூட்டி வந்துவிட, அவனது தாய் வைத்த ஒப்பாரியில் அவர்கள் வீட்டில் குப்பமே பஞ்சாயத்துக்காக கூடியிருந்தது.

அந்த வாலிபன் அவனது தாயை சமாதானம் செய்து கொண்டிருக்க, அந்த பெண்ணோ அழுது கொண்டிருந்தாள். விஷயம் தெரிந்து பாரி அங்கு வர, வேடிக்கை பார்ப்பதற்காக நித்திலாவும் கயலும் உடன் வந்தனர்.

“இன்னாடா, இன்னா பண்ணிக்கினு வந்திருக்க? வூட்ல உன் ஆத்தா கைல ஒத்த வார்த்த சொல்லனும்னு தோனலயா உனக்கு? அந்த புள்ளயோட ஆத்தா அப்பனுக்காவது தெரியுமா நீ கண்ணாலம் பண்ணிக்கினு வந்தது?”

தெரியாது என்று மெதுவாக தலையசைத்தான் அவன்.

“இன்னாடா பண்ணி வச்சிக்கிற? பெத்தவங்களுக்குத் தெரியாம கண்ணாலம் பண்ணிக்கினு வந்துக்கிற. இதுலாம் தப்புடா.”

பாரி பேசிக்கொண்டிருக்க அவனது பின் நின்றிருந்த நித்திலா மெல்லிய குரலில், “ஏன் கயல்? இதையே உங்க மாமா பண்ணா தப்பில்லயோ? அவருக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்குன்னா தக்காளி சட்னியா?”

அவள் பேசியது காதில் விழுந்ததும் பரிதாபமாக அவளைத் திரும்பி பார்த்தவன், “ஏங்க, நம்ப விஷயம் வேறங்க.” என்றான் பாவமாய்.

“என்ன வேற? எல்லாம் ஒன்னுதான். இன்னும் கேட்டா உன்னைவிட அந்த பையன் பரவாயில்ல. ரெண்டு பேரும் லவ் பண்ணிருக்காங்க. அந்த பொண்ணும் சம்மதிச்சு ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிருக்காங்க. இதுல பஞ்சாயத்து பண்ண உனக்கு தகுதியே இல்ல.” பல்லைக் கடித்துக் கொண்டு மெல்லிய குரலில் நித்திலா கடித்து வைக்க,

“இந்தா பாரி, உன் பொண்டாட்டியாண்ட அப்பாலிக்கா கொஞ்சிக்கலாம். இந்த பஞ்சாயத்த முடிச்சிவுடு. கமலாக்கா அழுதுனு கெடக்குது பாரு.” தேவாவின் தாய் ராணி நொடித்துக் கொள்ள, மண்டையை எதில் கொண்டு மோதிக் கொள்வது என்றே தெரியவில்லை பாரிக்கு.

அதற்குள் பெண்ணின் பெற்றவர்கள் பெண்ணைத் தேடிக் கொண்டு வந்து சேர, திருமண கோலத்தில் பெண்ணைக் கண்டதும் வெகுண்டெழுந்து பெண்ணையும் பையனையும் தாக்க முற்பட்டனர். அவர்களை அடக்கி அமர வைத்து பெண்ணையும் பையனையும் காப்பாற்றுவதற்குள் ஒருவழியாகிப் போனான் பாரி.

எவ்வளவு பஞ்சாயத்து பேசியும் தங்கள் பேச்சை மீறி வந்த பெண் தங்களுக்கு தேவையில்லை என்று பெண்ணைப் பெற்றவர்கள் கோபத்தோடு வாய்க்கு வந்த வார்த்தைகளால் திட்டி, உறவே இனி இல்லை என்று உதறிவிட்டு செல்லவும் கதறி அழுத அந்த பெண்ணைப் பார்க்கவே பாவமாக இருந்தது.

“ரெண்டு வாரமா இந்த புள்ளய வூட்ல அடச்சு வச்சிக்கினு அடிச்சி கட்டாயப்படுத்தி வேற கண்ணாலம் பண்ண பாத்தாங்கண்ணா அவுங்க வூட்ல. அதான் இன்னாப் பண்றதுன்னே எனக்குப் புரியல. வூட்டவுட்டு வந்துரு புள்ளனுட்டேன்.

வூட்ட வுட்டு தப்பிச்சி, என்னைய கட்டிக்கோனு அந்த புள்ள என்னய நம்பி வந்துடுச்சு. அத்த வுட்ற முடியுமா? அதான் கண்ணாலம் கட்டி கூட்டியாந்துட்டேன் பாரிண்ணா.”

பரிதாபமாக அந்த பையன் உரைக்கவும் அவனையும் கடிந்து கொள்ள முடியவில்லை. ஒருவழியாக அந்த பையனின் தாயை சமாதானம் செய்து அவர்களை வீட்டில் அனுமதிக்கச் செய்து பஞ்சாயத்தை முடிப்பதற்குள் விழி பிதுங்கியது பாரிக்கு.

ஒவ்வொன்றுக்கும் நித்திலா அடிக்கும் கமெண்ட்களுக்கு பதில் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் நொந்து போனான் பாரி.

“ஏங்க நீங்க ஆயிரம் சொன்னாலும் வூட்டுக்கு தெரியாம அவன் கட்டிக்கினு வந்தது தப்புதான்ங்க. நம்ப விஷயம் வேற. நம்ப சூழ்நிலை அப்படி. ஆனா இவன்காண்டி முன்னாடியே ஒத்த வார்த்த சொல்லிருந்தா, நல்லபடியா ரெண்டு வூட்லயும் பேசி கண்ணாலத்த முடிச்சிருக்கலாம்.” வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் ஆதங்கமாக பாரி பேச,

“நீ சொன்னியா?” ஒற்றை கேள்வியில் அவன் வாயடைத்திருந்தாள் நித்திலா.

 “அவனாவது பரவாயில்லை லவ் பண்ற பொண்ணுகிட்டயாவது தைரியமா லவ்வ சொன்னான். நீ அதுகூட சொல்லல.

 அவன் லவ் பண்ற பொண்ணுக்கு வேற கல்யாணம் பண்ண போறாங்கன்னதும் தைரியமா வீட்ட எதிர்த்துக்கிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டான். உன்ன மாதிரி லவ் பண்ற பொண்ணுக்கு கல்யாணம் நடக்கப்போற கோவில் வாசல்ல காவலுக்கு உட்காரல.

ஒருவேளை அன்னைக்கு என் அத்தை பையனோட கல்யாணம் நடந்து என் வாழ்க்கை நாசமா போயிருந்தா என்ன பண்ணிருப்ப?”

பேச்சற்றுப் போனான் பாரி. உண்மையில் அன்று சவரி மட்டும் வந்து கோவிலுக்குள் நடப்பதை கூறியிருக்காவிட்டால் எதுவுமே தெரியாமல் கோவில் வாசலில் நின்று கொண்டு இருந்திருப்பான் பாரி. நினைக்கவே மிகவும் கஷ்டமாக இருந்தது அவனுக்கு.

எவ்வளவு உண்மையாய் நித்திலாவை நேசிக்கிறான் என்பது அவனுக்கு தெரியும். ஆனால் உளமாற நேசிக்கும் பெண்ணுக்காக தான் எதையுமே செய்யவில்லையோ என்று மனம் உழன்றது.

சந்தர்ப்பமும் சூழ்நிலையுமே நித்திலாவை அவன் கரங்களில் கொண்டு வந்து சேர்த்தது. ஒருவேளை அந்த சந்தர்ப்பம் அமையாது போயிருந்தால், நித்திலா வேறு ஒருவனுக்கு சொந்தமாகியிருந்தால்…  நினைவே கசந்தது பாரிக்கு.

நித்திலாவின் தார்மீக கோபம் நியாயமான ஒன்றாக தோன்றியது.

நிகிலேஷ், “அக்காவுக்கு உங்கமேல எதனா கோபமா மாமா?” என்று கேட்கவும் காலையில் நடந்ததை நினைத்துப் பார்த்தவன், “எம்மேல அவுங்களுக்கு இருக்கற கோபமே வேற. அது என்னைய வுட்டுட்டு போற கோபமில்ல…  என்னைய ஏன்டா வுட்டுட்டங்கற கோபம்.”

முணுமுணுத்தவனுக்குக் கண்கள் பனித்தது. ‘இனி உங்கள வுட்றவே மாட்டேங்க. எங்க போனீங்க? என்னாண்ட வந்துடுங்க. நீங்க இல்லனா ஒரு நொடி கூட என்னியால வாழ முடியாது.’ மனம் அரற்றியது.

நேரமாக ஆக பதற்றம் கூடியது அனைவருக்கும். எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்துவிட்டு அடுத்து என்ன செய்வது என்று புரியாமல், போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்து கிளம்ப எத்தனிக்கையில் ஆட்டோவில் வந்து இறங்கினாள் நித்திலா.

கேஷூவலாக ஆட்டோவில் வந்து இறங்கி, ஆட்டோவுக்கான கட்டணத்தைக் கொடுத்துவிட்டு நிமிர்கையில்தான் கவனித்தாள், மொத்த குப்பமும் அவள் வீட்டு வாசலில் நிற்பதை.

அதுமட்டுமின்றி மகேந்திரன் ரதிமீனாவில் துவங்கி அவளது அம்மா தம்பி வரை குடும்பத்தினர் மொத்தமும் அங்கிருந்தனர்.

ஆச்சர்யத்தை முகத்தில் படற விட்டவளாய், மகேந்திரன் ரதிமீனாவை வரவேற்றவள், “என்னம்மா? என்ன எல்லாரும் இங்க கூடியிருக்கீங்க?” என்றாள்.

“நீ எங்க போயிட்டு வர்ற நித்தி? இவ்வளவு நேரமா உன்னைக் காணோம்னு நாங்க தவிச்சு போய் இருக்கோம். ஒரு ஃபோனாவது பண்ணிருக்கலாம்ல? உனக்கு ஃபோனை போட்டாலும் எடுக்கல? நாங்க என்னன்னு நினைக்கிறது?” படபடத்தார் லஷ்மி.

“ம்மா… நான் என்ன சின்னக் குழந்தையா தொலைஞ்சு போறதுக்கு? கயலுக்கு ஏதாவது கிஃப்ட் வாங்கலாம்னு நினைச்சிருந்தேன்.

நாளைக்கு ரிசப்ஷன்ல. அதான் நாளைக்குப் போடறதுக்கு டிரெஸ் டிசைன் பண்ணி வாங்கலாம்னு போனேன். காலேஜ்க்கு எதிர்ல இருந்த பொட்டீக்லதான் இருந்தேன்.

டைம் அதிகம் இல்லல்லம்மா. அதனால கூடவே உட்கார்ந்து அவங்க வொர்க் முடிச்சு தந்ததும் கையோட வாங்கிட்டு வரேன்.”

“ஏங்க என்னாண்ட ஒத்த வார்த்த சொல்லிருக்கலாம்ல. தவிச்சு போயிட்டேங்க உங்கள காணோம்னு.” பாரி தவிப்பாய் பேச, அவனைத் தீப்பார்வை பார்த்தவள்,

“இப்ப எதுக்கு இவ்வளவு சீன் க்ரியேட் பண்ணி வச்சிருக்க? காலேஜ் சீக்கிரம் விட்டுட்டாங்க. அதனால காலேஜ் ஆப்போசிட்ல இருந்த கடைக்குதான் போயிருந்தேன்.

கொஞ்சம் கவனிச்சு நிதானமா தேடிருந்தாலே நான் இருக்கற இடம் தெரிஞ்சிருக்கும். அதான, உனக்கு நிதானம் என்னைக்கு இருந்திருக்கு?

 ஃபோன் சார்ஜ் இல்லாம ஆஃப் ஆகிடுச்சி. அதனாலதான் யாருக்கும் ஃபோன் பண்ண முடியல.

அதுவுமில்லாம இன்னும் இருட்டக்கூட ஆரம்பிக்கல. இந்த பகல் நேரத்தில நான் தொலைஞ்சு போயிட்டேனு தேடிருக்க பார்த்தியா? உன் பாசத்துல அப்படியே புல்லரிச்சு போச்சு எனக்கு.

காலேஜ் வாசல்லயே கொஞ்ச நேரம் நின்னுருந்தா கூட என்னை பார்த்திருக்கலாம். அதைவிட்டுட்டு எல்லாரையும் கூட்டி வச்சு என்னைக் காணோம்னு சீன் போட்டுட்டு இருக்கியா?” வார்த்தைகளில் காய்ந்த மிளகாயின் காரம். முகம் கசங்கிப் போனான் பாரி.

நித்திலா பத்திரமாக வந்து சேர்ந்ததை பார்த்ததுமே குப்பத்து மக்கள் கலைந்து சென்றிருக்க, குடும்பத்தினர் மட்டுமே அங்கே எஞ்சியிருந்தனர். மெல்லியக் குரலில் பேசியிருந்தாலும் அங்கே நின்றிருந்த அனைவருக்குமே அவளது வார்த்தைகள் கேட்டன.

அனைவருக்குமே நித்திலாவின் பேச்சு வருத்தத்தைக் கொடுத்தது. மகேந்திரன் குடும்பத்தினர் சங்கடமாய் முகம் சுருக்க, லஷ்மிக்கும் நிகிலேஷ்க்கும் அய்யோ என்றிருந்தது. கயலுக்கோ கோபமும் வருத்தமும்.

 “என்னக்கா இப்படி பேசற? உன்னைக் காணோம்னு மாமா ரொம்ப பயந்துடுச்சிக்கா. உன்னைச் சுத்தி என்ன நடக்குதுனு உனக்குத் தெரியாதா? உன்கூட நெதமும் பாதுகாப்பா மாமா ஏன் வருதுன்னு உனக்குத் தெரியாதா?

உன்னை திடீர்னு காணோம்னா அது என்ன யோசிக்கும் எவ்ளோ பயந்து போவும்னு உனக்கு புரியலயா? அது ரொம்ப பாவம்க்கா. உன்னையக் காணோம்னு ரொம்ப நேரம் தேடி அலைஞ்சிட்டுதான் இங்க வந்து சொல்லுச்சி. அது சீனெல்லாம் போடலக்கா. நீ இப்படி பேசறது எனக்கு ரொம்ப கஷ்டமாக்கிது.”

கயல் வருந்தி பேசவும் நித்திலாவுக்கும் தான் பேசியது அதிகப்படி என்று புரிந்தது.

லஷ்மியும், “என்ன நித்திம்மா இப்படிலாம் பேசற, உன்னைக் காணோம்னா நாங்கலாம் பதற மாட்டோமா? இதுவரைக்கும் இப்படி சொல்லாம நீ எங்கயுமே போனதில்ல. நாங்க வேற எப்படி யோசிப்போம் சொல்லு.

நமக்கு இருக்கற பிரச்சனையெல்லாம் யோசிச்சுப் பார்த்தா பயம்தான வரும் நித்திம்மா. இதுல அந்த தம்பிய வேற எடுத்தெறிஞ்சு பேசற. நீ பண்றது ரொம்ப தப்பு நித்தி.” சற்று கடுமையாகவே உரைக்க கண் கலங்கியவள், பொதுவாக அனைவரிடமும் மன்னிப்பைக் கோரிவிட்டு வீட்டுக்குள் சென்றாள்.

“அட, காலேஜ்வுட்டு சோர்ந்து போயி வந்த புள்ள, வாசல்ல நிக்கவச்சு எல்லாரும் கேக்கவும் கொஞ்சம் சுள்ளுனு பேசிடுச்சி. நீ போய் அதுக்கு எதனா சாப்ட குடு ஆத்தா.” என்று கயலை வீட்டுக்குள் அனுப்பிய மகேந்திரன்,

“நாளைக்கு இன்னேரம் எல்லாரும் மண்டபத்துல இருக்கனும். தலைக்கு மேல வேல கெடக்குது. கெளம்புவோமா?” என்று அனைவரையும் கிளப்பிவிட்டு,

“லஷ்மிம்மா, நீங்க எதையும் நெனைச்சு மருகாதீங்க. நாளானா எல்லாமே சரியாப் போவும். மருமவப் புள்ள தங்கமான புள்ள. எல்லாரையும் அனுசரிச்சு போற புள்ள. இன்னைக்கு என்னமோ சட்டுனு பேசிடுச்சி. அதும் புருஷனதான பேசுச்சி. அவன பேச அதுக்கு உரிமையில்லயா என்ன? எல்லாமே சரியா போகும்.”  லஷ்மியிடம் பேசிவிட்டு இறுதி வார்த்தைகளை பாரியைப் பார்த்து கூறிவிட்டு அகன்றார் மகேந்திரன்.

லஷ்மியும் நிகிலேஷூம் விடைபெற்று கிளம்ப வெளியிலேயே கயிற்று கட்டிலில் அமர்ந்தான் பாரி.

நித்திலா கடிந்து பேசியதில் அவனுக்கு எந்த வருத்தமுமில்லை. ஆனால் தன் தவிப்பை தன் அன்பை நடிப்பென்று சொல்லிவிட்டதைதான் தாங்கவே முடியவில்லை அவனால். எதைச் செய்து அன்பை நிரூபிக்கவென்றும் புரியவில்லை.

இப்படியேதான் வாழ்வு நகருமா? இந்தப் பெண் தன்னைப் புரிந்து கொள்ளவே மாட்டாளோ? ஆயாசமாய் அடிவானைப் பார்த்தவனின் பார்வையில் பட்ட அஸ்தமனம் இன்னும் சோர்வைக் கொடுத்தது. என் வாழ்வு எப்போது விடியும்? கேள்விக்கு விடையறியாது கடலையே வெறித்திருந்தான்.

வீட்டினுள் சென்ற கயல் தட்டில் உணவை நிரப்பிக் கொண்டு கட்டிலில் சுருண்டு படுத்திருந்த நித்திலாவை எழுப்பினாள்.

“அக்கா, வெறும் வயித்தோட படுத்துட்ட. இத்த துன்னுட்டு படுக்கா.” கயலின் பரிவான குரல் மேலும் குற்றவுணர்ச்சியைத் தூண்ட, மெல்ல எழுந்து அமர்ந்தவள், “சாரி கயல்.” என்றாள்.

“இன்னாக்கா பெரிய வார்த்தைலாம் பேசற?”

“இல்ல கயல், சட்டுனு நான் கோபப்பட்டு பேசினது தப்புதான்.”

“அய்யே…  நீ கோவமா பேசுனது தப்புனு யாரு சொன்னா? மாமாவாண்ட கோவிச்சிக்கினு பேச உன்னத் தவிர யாருக்கு உரிமை இருக்கு? ஆனா அது தவிச்சு நிக்கறத பார்த்து நடிக்குதுனு சொன்ன பாத்தியா, அதான் கொஞ்சம் கஷ்டமாருந்துச்சி.” உணவு தட்டை நித்திலாவின் கரங்களில் வைத்தவள்,

“என்ன பண்றது எப்படி பண்றதுனு தெரியாம மாமா எவ்ளவோ தப்பு பண்ணிருக்குதான். நானு இல்லனு சொல்லல. ஆனா மனசறிஞ்சு யாருக்கும் கெடுதல் பண்ணதில்லக்கா.

யோசிக்காம பட்டுபட்டுனு எதையாவது செஞ்சு வைக்குமேகண்டி நடிக்கலாம் அதுக்குத் தெரியாதுக்கா.” பேசியவளின் பார்வையில் அவனைப் புரிந்து கொள்ளேன் என்ற தவிப்பே எஞ்சியிருந்தது.

“சரி சரி உன் மாமா நல்லவர்தான் ஒத்துக்கறேன். உனக்காக டிரெஸ் வாங்கிட்டு வந்தேனே அதைப்பத்தி எதாவது கேட்டியா நீ?”

 நித்திலா சூழ்நிலையை மாற்ற பேச்சை மாற்றவும் புன்னகைத்த கயலும், “நீதான் காட்டவே இல்லயே.” என்க, நித்திலாவும் தான் வாங்கி வந்திருந்த உடையை கயலுக்கும் ஆயாவுக்கும் காட்ட சூழல் அங்கு சற்று சகஜமானது.

இரவு அறைக்குள் நித்திலாவின் படுக்கையைத் தட்டி விரித்துக் கொண்டிருந்தான் பாரி. உள்ளே வந்த நித்திலாவுக்கு அவனைப் பார்த்து சற்று குற்றவுணர்வாய் இருந்தது.

ஒரு ஃபோன் செய்து சொல்லியிருந்தால் இந்த பதற்றத்தை தவிர்த்திருக்கலாம். ஃபோன் ஆஃப் ஆனது ஒரு புறம் என்றால், இன்னும் நேரமாகவில்லையே பாரி வந்தாலும் தனக்காக வெயிட் செய்வான் என்ற நினைவில் ஆடை வடிவமைப்பவரோடு மும்முரமாக கயலுக்கான உடையை தேர்வு செய்வதில் மூழ்கிப் போனாள்.

உடையை வாங்கிக் கொண்டு வெளியே வந்து பாரியைக் காணவில்லை என்றதும் ஆட்டோ பிடித்து வீட்டுக்கு வந்துவிட்டாள். இப்படி அவளைக் காணாமல் தேடியிருப்பான் என்று யோசிக்கவே இல்லை அவள்.

தன்னைக் காணாது தேடித் தவித்தவனைப் பார்த்து சீன் போடுகிறாயா என்று கேட்டது தவறு என்பது புரிய, “ஏதோ கோபத்துல பேசிட்டேன் சாரி.” என்க அவளை நிமிர்ந்து பார்த்தான் பாரி.

“ஐய, சாரிலாம் சொல்லாதீங்க. நீங்க எம்மாம் திட்னாலும் தாங்கிப்பேங்க. ஆனா உங்கமேல வச்ச பாசம் நடிப்புனு சொன்னீங்க பாருங்க. அதான் கஷ்டமா இருந்துச்சி.

மெய்யாலுமே உங்கமேல உசுரே வச்சிருக்கேங்க. அத நீங்க நம்பனும்னா நானு இன்னா பண்ணனும்னு சொல்லுங்க. உசுர வுட்றுனு சொன்னாக்கூட உடனே வுட்ருவேன்.”

ஆதங்கத்தோடு படபடப்பாய் பேசியவனை முறைத்தவள், “உனக்கு அறிவே கிடையாதா? நீ எதையுமே ஒழுங்கா யோசிக்கவே மாட்டியா? உயிர விட்டுட்டா என்னை எப்படி பார்த்துப்ப? உன்னை நம்பி இருக்கவங்கள எப்படி பார்த்துப்ப? எனக்கு செம்ம கோபம் வருது. இன்னும் வாங்கிக் கட்டிக்கிறதுக்கு முன்னாடி மரியாதையா போய்த் தூங்கு.” என்றபடி கட்டிலில் படுத்தவள் கண்களை மூடிக் கொண்டாள்.

‘இப்ப நாம என்ன சொன்னோம். எதுக்கு இந்த புள்ள திட்டுது?’ பேந்தப் பேந்த விழித்தபடி நின்றான் பாரி.

 

___தொடரும்.